Wednesday, March 09, 2005

புலம் - 9

நதியும் வழியும்

இப்போதெல்லாம், வலைப்பதிவிலே எந்தவொரு விடயத்தைப் பற்றி எழுதும்போதும், சரியான பதத்திலே சமையலை இறக்கவேண்டுமேயென்ற அவதானத்துடன் எழுதவேண்டியிருக்கின்றது. கொஞ்சம் கூர்மைப்படுத்தினால், தனிப்பட்ட தாக்குதலென்று தீய்ந்துபோய்விடுகின்றது; கொஞ்சம் மழுங்கச்சொன்னால், கிசுகிசுவென்று அவியாக்கறியாகின்றது. மழித்தலும் நீட்டலுமில்லாமல் புத்தர் சொன்ன மத்தியபாதையிலே நடை போடுவதென்பது மிகவும் கடினமாகின்றது. இந்தப்பதிவு, இந்தப்பாதை குறித்ததல்ல; ஆனாலும், எழுகிற ஆள், விடயம், நடை குறித்து தவறுதலான புரிதல் மிகவும் இலகுவாகிப் போய்விடுமென்பதாலே, இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே இந்த வசப்படா நடுநடையைப் பற்றிச் சொல்லிவிடுவது கொஞ்சம் காலிலே தண்ணீரை ஊற்றிக்கொண்டே தீமிதிக்க இறங்கும் பாதுகாப்பு உணர்வைத் தருகின்றது. அவ்வளவே.

பெண்கள்_நாள் குறித்து எத்தனை பதிவுகள் குறிக்கப்பட்டிருக்கின்றன என்று நான் கணக்கெடுக்கவில்லை. ஆனால், ஆண்கள், பெண்கள் இரு சாராராலும் சேர்த்து, நிறையப் பதிவுகள் - ஆழமாக, ஆழப்போலியாக, மேலோட்டமாக, பகிடியாக, போகிற போக்கிலே. ஆண்டுக்கொரு முறை வரும் சடங்கென்ற போக்கிலே, வாழ்த்தும் கவிதையும் கட்டுரையும் சொன்ன பதிவுகளே பல என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படியான பெண்கள்_நாள் என்பது, பெண்களுக்கு ஆண்டுக்கொரு முறை வரும், போகும் என்றில்லாது, எதையாவது பெண்களைக் குறித்து திரும்பிப்பார்க்க, திருத்திக்கொள்ள, வரையறுக்க, பால் பேதமின்றி ஆண்-பெண் இரு பகுதியினருக்கும் மேலோட்டமான வாழ்த்து, படைப்புக்கு அப்பாலும் உதவுமென்பதாலே, இருப்பது அவசியமென்றே தோன்றுகின்றது. (இதிலே வாழ்த்திக்கொள்ள என்ன இருக்கின்றதென்பது எனக்கு இன்னும் தெரியவில்லை; தெளிவாக இருக்கின்ற யாராவது சொன்னால், நன்றி உண்டு. கடந்த பாதையிலே, ஆண்டிலே இந்தளவு சாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்காக இந்த வாழ்த்து என்றால், ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால், வாழ்த்து சொல்கின்றவர்கள் அந்தச்சாதனைக்காக எந்தளவு உழைத்திருக்கின்றார்கள் என்பதையும் பார்க்க எத்தனிப்பேன்.)


இந்த ஆண்டு தமிழ் வலைப்பதிவுகளிலே பகிடியாக, மேலோட்டமாக வந்த பெண்கள்_நாள் குறித்த பதிவுகளை, இந்தப்பதிவின் நோக்குக் குறித்து விலக்கிவிட்டுப் பார்க்கிறேன்; மீதிப்பதிவுகளிலே பேசப்பட்டிருக்கின்றவற்றிலே என்னாலே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றவற்றினை, இப்படியாக வகைப்படுத்துவேன்:

1. பெண்களின் நிலை எந்தளவுக்கு காலவோட்டத்திலே மாறியிருக்கின்றது / முன்னேறியிருக்கின்றது என்பது குறித்துப் பேசுகின்ற பதிவுகள்;

2. பெண்களின் நிலை எப்படியாக மாற வேண்டுமென்று திட்டமிடுகின்ற அல்லது எதிர்வுகூறும் பதிவுகள்;

3. இன்னும் ஆண் எதிர்ப்பு என்பதையும் அவனுக்கெதிரான அறைகூவல்களையுமே கட்டமிட்டுக் கெக்கட்டமிடும் பதிவுகள்; மற்றும்,

4. பெண்கள் குறித்த ஆண்களின் உளநிலை, களநிலை மாற்றங்களினை (புரிந்து கொள்ளக்கூடியதும் அவசியமானதுமான முன்னெச்சரிக்கையோடு) வரவேற்கும் பதிவுகள்.


இந்தப்பதிவுகளிலே ஒத்துப்போகக்கூடியனவாக பல கருத்துகள் இருந்தன. அவற்றினை இங்கே நான் சுட்டப்போவதில்லை; இடத்தினையும் நேரத்தினையும் குறித்து, அவற்றின்மேலே எந்தக்கருத்தும் பதியாமல் விடுவதன் மூலம், அவற்றோடு எனக்கு, எனது ("ஆண்")சிந்தைக்கு உடன்பாடே என்று கூறிவிடுகின்றேன். ஆனால், துருத்திக்கொண்டும் தேடியுங் காணமுடியாமலும் இருக்கின்ற ஐந்து விடயங்களை இங்கே பதிவு செய்யலாமென்று நினைக்கின்றேன்.

1. ஆண் உலகின் விரிவும் ஆழமும் குறித்த பார்வை: ஆண்கள் (அல்லது அவர்களிட்ட சட்டம், நெறிக்கோவைப் பிரகாரம் ஒழுகும் உலகு) மட்டுமே பெண்களைக் கூண்டுக்கிளிகளாக வைத்திருக்கின்றதென்று கூறுவதும் அறிவியல்மூலம் பெண்களுக்கு முழுக்க முழுக்க ஆண்களிலிருந்து விடிவும் வந்துவிடும் என்பதுமான மூன்றாவது வகைப் பதிவுகளின் கூற்று, இன்றைய நிலையிலே அளவுக்குமீறிய மிகைப்படுத்துதலாக இருக்கின்றதென்பேன். Stepford Wives போன்று கூண்டுக்கிளித்தனமும் ஆணுலகுக்கான வெறும் தொழில்புரி இயந்திரமயமாக்கமுமான பெண்களின் விடுதலைக்கான உலகத்தினை இனியும் கவிதைகளிலே சித்தரித்துக்கொண்டிருப்பது குறைந்தபட்ச அபத்தமென்றால், "பெண்கள் தற்பாலுறவாளர்களாக மாறிவிடுவார்கள், ஜாக்கிரதை" என்பது மாதிரியான வாதம் அபத்தத்தின் உச்சம். பெண்களின் வளர்ச்சிக்கான தடைக்கற்களிலே எத்தனை ஆண்கற்கள், எத்தனை பெண்கற்கள் என்ற எண்ணிக்கை விகிதத்தினைக் குறித்து எவருமே சொல் பதிந்திருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண வீட்டு மாமியார்-மருமகள் சண்டையை விட்டுவிடலாம்; அது, இரு தனிப்பட்ட ஆட்களுக்கிடையேயான நீ-நான் ஆளுமைமோதல்; ஆனால், கவர்ச்சி நடிகைகளாக, பெருநிறுவனங்களிலே பெண்களை வெறும் அழகுப்பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்துகையிலே அந்த படாபட்டோபம், பணம், பதவிக்காக, தாம் பெண்கள் என்பதை முன்னிறுத்திப் பயன்பெறும் பெண்களைப் பற்றிப் பேசும் போது, ஆண்களை மட்டுமே அவர்கள் வனைந்து, வளைத்தெடுத்த சட்ட, நெறிக்கோப்புகளூடாக மட்டுமே திட்டித்தீர்ப்பதாலே ஆவதென்ன? அப்படியாக, பெண்களினை இன்னும் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் வகையிலே செயற்படும் பெண்களைப் பற்றி எந்தப்பெண்பதிவுமே மூச்சு விட்டதாகத் தெரியவில்லை.

2. ஆண்களின் மீதான எதிர்த்திக்கு-பேதங்காட்டுகை: தொழிலளவிலே ஆண்களின் அதிகாரமே மிகுந்த அளவிலே பல துறைகளிலே இருக்கின்றன என்பதினையும் தனிப்பட்ட சமூக வாழ்க்கையிலே தந்தைவழிச்சமூகநிலையுமே மேலோங்கி இருக்கின்றதென்பதையும் மறுக்க -சுற்றி நிகழ்வனவற்றைப் பார்க்கையிலே-, எந்த வகை நியாயமும் இல்லை. அந்த வகையிலே பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது இன்னும் நெடுங்காலத்துக்கு, நிலைமை சீராகும்வரையிலும் அவசியம்; ஒரே தொழிலுக்கு, ஆண்-பெண் இருபாலாருக்குமிடையே, இலங்கையின் தேயிலைத்தோட்டத்தொழிலாளர் முதற்கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் பெருநிறுவன நிர்வாகிகள் வரையிலே ஊதியபேதம் இருக்கின்றது; பெண்களுக்குக் குறைவாக; ஆண்களுக்கு மேலாக. அந்த வகையான பாகுபாட்டுக்குற்றங்கள் சீர் செய்யப்படவேண்டும். ஆனால், இந்த வகையான பால்சார் ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தும் பெண்கள் அதிகாரத்தினை தமக்குக் கீழாகத் தொழில் புரியும் ஆண்களுக்கெதிராக எந்த விதத்திலே ஆண்களென்ற ஒரே காரணத்தினாலே துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை நான் அறிவேன்; அனுபவித்திருக்கின்றேன். ஆண்களுக்கு மாறிக்கொண்டதற்காக (அல்லது சரியாகச் சொன்னால், மாறும் ஆண்களுக்காக) "ஓ" போடும் பெண்கள் மகிழ்ச்சியைத் தருகின்ற வேளையிலே, இப்படியாக நிகழும் சத்தமில்லாத எதிர்த்திக்குப் பேதங்காட்டலைப் பற்றி எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றார்களென்று பதிவிலே தெரியவில்லை. நான் இதை, பொதுவாக பெண்களிலே குற்றமேதும் காணவேண்டுமென்று கூறவில்லை; ஆனால், இன்னொரு பெண் என்பதற்காக நாலாம் மட்டத்திலிருந்த ஷியா உல் ஹக்கினை சுல்பிகார் அலி பூட்டோ சுற்றி மேலாக முதன்மைப் பதவிக்குக் கொண்டு வந்ததுபோல, ஒரு பெண்மேலதிகாரி செய்வாரானால் என்ன சொல்வது? பெண்களுக்கு எதிராக நடக்கும் ஆண்களின் அதிகார அடக்குமுறைக்கு முன்னே இப்படியான ஓரிரு சந்தர்ப்பம் ஒதுக்கித் தள்ளிவிடப்படக்கூடியது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், அதிகாரமென்பதற்கு ஆண் பெண் எவர் கையிலே வந்தாலும் ஒரே நிறம், அதே குணமென்று மட்டுமேதான் சலித்துக்கொள்ளத்தோன்றுகின்றது. இது குறித்து எந்தப் பெண்பதிவாளருக்கும் கண்ட, கேட்ட அனுபவம் இல்லையோ, அல்லது அறிந்திருந்தும் சுட்ட விரும்பவில்லையோ என்றே நேற்றைய பெண்கள்_நாள் பதிவுகள் உணர்த்தின.

3. மிகவும் கவனமான பதிவு அல்லது மிக நல்ல ஆண்கள் சிலர்: பெரும்பாலான பெண்கள்_நாள் பதிவுகள் இன்றைக்கும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் பதிவாளரின் தினந்தினம் பழகும் ஆண் உறவினர்கள், சக ஆண் தொழிலாளர்கள் குறித்த எந்த விதமான எதிர்மறையான கருத்தினையும் நேரடியாகச் சுட்டிச்சொல்லவில்லை; ஒன்று, இறந்தவர்கள் அல்லது நிச்சயமாக இப்பதிவுகளைப் பாராதவர்கள் என்ற வகையிலே இருக்கக்கூடியவர்கள் பற்றிய பதிவுகளாக இருந்தன; அல்லது, தாமும் அறியாத, அத்தனை துன்பங்களும் ஒருங்கே புக, உருவாகிய முகமில்லாத படர்க்கைப்பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்ததாகவே இருக்கின்றன. இப்படியான பதிவுகள், வாசிப்பவர்களை இரண்டு முடிவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. ஒன்று, நெருங்கிய ஆண் உறவினர்கள், சக ஆண்தொழிலாளர்கள் தாம் ஆண் என்பதை முன்னிலைப்படுத்திக்கொண்டு, இந்தப்பெண்பதிவாளர்களைப் பெண் என்ற நிலையிலே நிறுத்தி அணுகுவதில்லை என்ற விதத்திலே ஆண்மேலாதிக்கம் சில ஆண்களிடமாவது ஒழிந்து போயிருக்கின்றது; அல்லது இப்பதிவாளர்கள், தமது ஆண் உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேச மறுக்கின்றனர் என்ற விதத்திலே தாங்கள் பிழை என்று கருதும் ஆண்சட்டங்களுக்குப் பலத்தினை மறைமுகமாகக் கொடுத்துக் கொள்கின்றனர். இது வேண்டாத மயிர் பிளக்கின்ற வாதமாகத் தோன்றலாம்; ஆனால், என்ன சொல்ல வருகின்றேனென்றால், பெண்களின் அவநிலை குறித்து எழுத்திலே குறிக்கும் பெண்களிலே பலருங்கூட, வெளிப்படையாக நிலைமையை நடைமுறையிலே எதிர்ப்பதற்குப் பதிலாக, எழுத்திலே ஆற்றாமையைக் கக்கிவிட்டுப்போய்விடுகின்றனர் என்பதைத்தான் குறிக்க விரும்புகின்றேன்.

4. எல்லாப்பெண்களுக்குமான பதிவு: இணையமும் வசதியும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை; வாய்க்கும் எல்லோருமே எந்த வகையிலோ மீதியான சமுதாயத்திலும்விட, வசதிப்பட்டவர்களாகவும் கருத்துச்சுதந்திரம் உள்ளவர்களாகவும் இணையசமுதாயத்திலே அடுத்த கணிநுனியிருந்து பதிகின்றவருக்கு பால், சாதி, மதம், நாடு, வயது பேதம் கண்டு அஞ்ச வேண்டிய தேவையின்றி, முகம் தெரியாமற் பதியும் வசதியும் தளையற்ற சுதந்திரமும் கொண்டிருப்பவர்கள்; இப்படியான நிலையிலே, இந்தப் பெண்கள்_நாள் பதிவுகள், தமக்கென்றொரு முகமும் அதைக்கூற வசதியுமில்லாத எல்லாத்தட்டுப் பெண்களையும் பற்றிப் பேசியிருக்கவேண்டும். ஓரளவுக்கு தம்மைத் தம்மிலே நிறுத்தி வாழும் வசதியும் பிடித்ததைப் பேசும் சுதந்திரமும் கொண்ட பெண்கள், கூண்டுக்கிளியையும் ஆண்விந்தெடுத்துச் செயற்கைக் கரு சேர்ப்போமென்ற அறைகூவலையும் தாத்தா காலத்திலிருந்து பேரன் காலம் வரை எவ்வளவு மாறியிருக்கின்றதென்று பேசுவதையும் மட்டுமே பெண்கள்_நாள் வேண்டி நிற்கின்றதென்று எண்ணிவிட்டார்களா என்ற உணர்வு பதிவுகளால் எழுந்தது. முகமில்லாத படர்க்கைப்பெண்ணைத் தவிர, முகம் தெரிய பேச்சுச்சுதந்திரமும் இணைய வசதியும் வாய்க்காத ஒரு பெண்ணிற்குக் குரல் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. ஜெயலலிதாவும் ஹிலரி க்ளின்டனும் பெண்களின் வெற்றியைத் தீர்மானித்துவிடலாமா? (குறைந்த பட்சம் கென்யாவின் வங்காரி மத்தாய் குறித்தாவது ஒரு பதிவு இருந்திருக்கக்கூடாதா? அவரும் இப்போது பிரபல்யமென்றபோதுங்கூட, அவரின் பெரும் பெண்பயிர்ச்செய்கை குறித்தாவது)

5. அகிலமயமாதலும் வலைபிணைதலும்: இனிவரும் காலத்திலே தனித்துப் பிரித்து இதுதான் காரணமென்றும் இதுதான் விளைவு என்றும் கூற முடியாத வகையிலே, உலகின் சிக்கல்களும் செயற்பாடுகளும் பின்னிப்பிணைந்து வருகின்றன. இனி வரும் காலத்திலே இவர்தான் இத்துறையிலே பேரறிவியலாளர் என்று ஐன்ஸ்டைனையோ நியூட்டனையோ இழுத்தெடுத்துக் காட்டமுடியாதவண்ணம், அறிவியலிலே பல துறைகள் ஒன்றோடு ஒன்று உருகிக்கலந்து வருகின்றன; உலகப்பிரச்சனைகளும் அந்த விதத்திலே கரைப்பானெது கரையமெது என்று புரியாத வண்ணம் கரைந்து போயிருக்கின்றன. முன்னைப்போல, இடது-வலது, ஆண்டான்-அடிமை என்று இரட்டைநிலை மிக எளிமையாகச் சூத்திரம் போட்டு எதிலுமே தீர்வு காணமுடியவில்லை. பெண்கள் குறித்தும் இதே நிலைதான்; பெண்களின் விடுதலை என்பது ஆண்களை எதிர்ப்பதிலே இல்லை; அதிகம் வேண்டாம்; 60 களிலேயே சென்று பார்த்தால், கறுப்பினப்பெண்ணுக்கு யார் அதிகம் சேதாரம் விளைவிக்கமுடியும்? வெள்ளைப்பெண்ணா? கறுப்புஆணா? அல்லது பஞ்சமர் சாதிக்குள்ளே வகுக்கப்பட்ட பெண்ணுக்கு யாரினாலே அடக்குமுறை அதிகம்? மேற்சாதிப்பெண்ணினாலா? தன்சாதி ஆணினாலா? சரி அதைத்தான் விடலாம்; பெண் தன் சுதந்திரத்தினைத் தானே வைத்துக் கொள்வதென்பது, தனியே Vagina Monologues இலே தரித்திருக்கின்றதென்று நினைக்கவில்லை; பொருளாதாரம், சுற்றாடல், அரசியல், எழுத்து எல்லாமே கலந்த போராட்டமாகவே இருக்கின்றது; இந்த நிலையிலே, இடத்துக்கேற்றவாறு பிரச்சனைக்கேற்றவாறு, தன்னைப் போல, பாதிக்கப்பட்டவர்களை, சிறுபான்மையினரைச் சேர்த்தவண்ணமே ஒரு பெண் தன் போராட்டத்தைத் தொடரலாமேயொழிய, கூடப்போராடுகின்றவளும் பெண்ணா என்பதைக் கொண்டு அல்ல; பங்களாதேசத்திலே கிராமியன் வங்கியின் பயன்பெறும் பெண்களுக்கும் கென்யாவிலே மரம் நாட்டிப்போராடும் பெண்களுக்கும் தென்னமெரிக்காவிலே காணாமற்போன பிள்ளைகளுக்காகப் போராடும் பெண்களுக்குமிடையே போராட்டக்குறிக்கோளிலே, பாதையிலே, தேவையிலே பல வேறுபாடுகளிருக்கின்றன; அதேபோலவே, அவர்களோடு கூடிப்போராடும் ஆட்களிலுங்கூட; இந்தத் தாங்குங்கூட்டத்திலே ஆண்களும் இருக்கலாம்; அடக்குமுறையாளர்களிலே பெண்களும் இருக்கலாம் (பெண்களை வைத்து விபசாரத்தினை நடத்துகின்றவர்களிலே பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதென்பது குறிப்பிடப்படவேண்டியதாகும்). பெண்ணின் தற்பொருளாதாரம், சூழல், அரசியல் இவற்றினை முன்னிறுத்திய எத்தனை பதிவுகள் வந்திருக்கின்றன என்று தேடினேன். கிடைக்கவில்லை. இந்த நிலையிலே "ஆண்கள் ஜாக்கிரதை" என்று தடித்த எழுத்துகளிலே எழுதுவதுமட்டும் என்ன தீர்வினைத் தரப்போகிறது? ( இஃது ஆண்களிடம் முன்ஜாக்கிரதையாக இருக்கவேண்டாமென்று சொல்வதாகாது என்று தமிழ் ஒழுங்காக வாசிக்கத் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பது என் நம்பிக்கை.)


முதல் மூன்று பதிவுகளிலே தோன்றா விடயங்களையுமிட்டு நான் பெரிதும் அலட்டிக்கொள்ளமாட்டேன்; அவை தனிப்பட்ட பதிவாளருக்கான தீர்மானத்துக்குரியவை. ஆனால், கடைசி இரண்டு "தோன்றா விடயங்"களும் திறந்த பேச்சு/எழுத்து வசதிகொள் பெண்பதிவாளர்களுக்கான பிரதிநிதித்துவத்தினையும் தார்மீகக்கடமையையும் எதிர்காலச்செயற்பாடுகளுக்கான விரிதலுக்குரிய புரிந்துகொள்ளலையும் வேண்டி நிற்பன என்று நினைக்கிறேன். இவற்றிலே எதையும் நான் பெண்களின் "நாம் பெண்கள்; நமது விடுதலை" போராட்டக்கூர்மையை மழுங்கடிக்கும் வண்ணம் வலைச்சாமபேததண்டதான ஆண்(கு)யுக்திகளாகப் பயன்படுத்தச் சொல்லவில்லை; அப்படியாக நான் சொன்னாலுங்கூட, அவற்றினை இனங்கண்டு எம் தோல்மேற்சாயத்தினை ஒரு சீறுநீர்த்தாரையடிப்பிலே கலைத்துக்கரைத்துக்கழுவும் வல்லமை இல்லாதவர்களல்ல இப்படியான மேற்கூறிய பதிவுகளைக் குறித்த பெண்கள் என்பதை நான் அறிவேன். இஃது எனக்குத் தோன்றியது; இதுதான் சரியென்றோ இப்படித்தான் நடந்திருக்கவேண்டுமென்றோ வாதாட எனக்கு எந்த உரிமையுமில்லை. பெண்கள் எதைப்பற்றிப் பேசவேண்டும் பேசக்கூடாதென்று முடிவெடுக்கும் உரிமை ஒரு பெண்குழுமப்பட்டதுகூட இல்லை; தனித்தனியான ஒவ்வொரு பெண்ணுமுடையதாகக்கூட இருக்கலாம்; அதனால், இப்பதிவின் நோக்கு வெறுமனே என்னுடைய பார்வையிலே பட்டதைச் சொல்வதுமட்டுமே. மத்தியபாதையிலே பயணிக்க முயற்சித்திருக்கிறேன். மொத்துவதானாலும் மொத்துங்கள்; பார்வையிலோ பாதையிலோ தவறிருப்பின், சு(ட்)டத் திருத்திக்கொள்வேன்.

அண்மையிலே ஒரு நண்பர் கேட்டார், "ஏன் எப்போதுமே நீங்கள் ஒரு cynic ஆகவே இருக்கின்றீர்கள்?" மூன்று கிழமைகளாகச் சொல்ல ஒரு பதிலைத் தேடுகிறேன். தெரியவில்லை :-( cynism இல்லாவிடின் செத்துப்போய்விடுவேன் என்பதாலோ? :-)

'05 மார்ச் 09, 15:40 கிநிநே.

6 comments:

Thangamani said...

//இடத்துக்கேற்றவாறு பிரச்சனைக்கேற்றவாறு, தன்னைப் போல, பாதிக்கப்பட்டவர்களை, சிறுபான்மையினரைச் சேர்த்தவண்ணமே ஒரு பெண் தன் போராட்டத்தைத் தொடரலாமேயொழிய, கூடப்போராடுகின்றவளும் பெண்ணா என்பதைக் கொண்டு அல்ல//

மெத்த சரி. பெண்ணிய கருத்துக்களாக முன்வைக்கப்படுவதும் கூட பெண்கள் தாம் கண்டுணர்ந்ததா அல்லது ஆண்களிடமிருந்து தட்டிப்பறித்ததா என்பதும் இங்கு முக்கியம். ஏனெனில் அடக்குமுறையில் இருந்து விடுதலை என்பது மட்டும் விடுதலை அல்ல. அது விடுதலையின் ஒரு படிக்கட்டு. பின்னும் தனது சுயத்துக்கு உண்மையாய் இருப்பதே விடுதலை என்று நினைக்கிறேன். அப்படி இருப்பதற்கெதிரானா கருத்துருவாக்கங்களை யார் உருவாக்கினாலும், காப்பாற்றினாலும் அவர்கள் விடுதலைகெதிரானவர்களே; இதைக் கட்டுடைப்பதும், கடந்துசெல்ல முனைவதும் விடுதலையை விரும்புகிற ஒவ்வொருவரின் கடமையுமாகும். இதில் பால்பேதங்கள் இருக்கமுடியாது.
நன்றி!

Jayaprakash Sampath said...

நல்ல பதிவு. எனினும் பெண்கள்_நாள் வலைப்பதிவாளர்-ஆராய்ச்சி குறித்து ஏதும் எதிர் கருத்தோ ஆமோதிப்போ என்னிடம் இல்லை. " // இனிவரும் காலத்திலே தனித்துப் பிரித்து இதுதான் காரணமென்றும் இதுதான் விளைவு என்றும் கூற முடியாத வகையிலே, உலகின் சிக்கல்களும் செயற்பாடுகளும் பின்னிப்பிணைந்து வருகின்றன. இனி வரும் காலத்திலே இவர்தான் இத்துறையிலே பேரறிவியலாளர் என்று ஐன்ஸ்டைனையோ நியூட்டனையோ இழுத்தெடுத்துக் காட்டமுடியாதவண்ணம், அறிவியலிலே பல துறைகள் ஒன்றோடு ஒன்று உருகிக்கலந்து வருகின்றன// " என்ற ஆப்சர்வேஷன் சுவாரசியமாக இருந்தது.


// மூன்று கிழமைகளாகச் சொல்ல ஒரு பதிலைத் தேடுகிறேன். தெரியவில்லை :-( cynism இல்லாவிடின் செத்துப்போய்விடுவேன் என்பதாலோ? :-)//

கிடைக்குமே? ...கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது நான் வேண்டுமானால் தேடிப்பார்க்கிறேன்.

SnackDragon said...

//கொஞ்சம் கூர்மைப்படுத்தினால், தனிப்பட்ட தாக்குதலென்று தீய்ந்துபோய்விடுகின்றது; // இதனாலேயே இதை அதுக்காக எழுதுனீங்களான்னு கேக்கவேண்டியிருக்கு. கேக்கவும்முடியாம முழுங்கவும் முடியாம. :-) இந்தப்பதிவை இன்னொருமுறை வாசித்து விரிவாகப் பின்னால்.

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

சற்று ஆறுதலாக விளக்கமாகப் பதிலெழுத வேண்டிய பதிவு.
நேரங் கூடி வந்தால் முயற்சிக்கிறேன்.
Wangary Maathaai பற்றி எழுதவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
அவர் பற்றி ஏற்கெனவே எனது பதிவில் இட்டுள்ளேன். ஏற்கெனவே பதிவுகளில் வந்த ஆக்கம்தான் அது. பெண்கள் தினம் என்பதற்காக மீண்டும் அதை இங்கு கொண்டு வரவில்லை.
Wangary Maathaai

-/பெயரிலி. said...

தங்கமணி, தெளிவாக விரித்துக்கூறியிருக்கின்றீர்கள்; நன்றி.

பிரகாஷ்,
// இனிவரும் காலத்திலே தனித்துப் பிரித்து இதுதான் காரணமென்றும் இதுதான் விளைவு என்றும் கூற முடியாத வகையிலே, உலகின் சிக்கல்களும் செயற்பாடுகளும் பின்னிப்பிணைந்து வருகின்றன. இனி வரும் காலத்திலே இவர்தான் இத்துறையிலே பேரறிவியலாளர் என்று ஐன்ஸ்டைனையோ நியூட்டனையோ இழுத்தெடுத்துக் காட்டமுடியாதவண்ணம், அறிவியலிலே பல துறைகள் ஒன்றோடு ஒன்று உருகிக்கலந்து வருகின்றன//

"என்று ஒரு ஐன்ஸ்டைனையோ ஒரு நியூட்டனையோ இழுத்தெடுத்துக் காட்டமுடியாதவண்ணம்," என்றிருந்திருக்கவேண்டும்.

/கிடைக்குமே? ...கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது நான் வேண்டுமானால் தேடிப்பார்க்கிறேன்./

"தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கப்பெறும்" ;-)

கார்த்திக்கு,
/கேக்கவும்முடியாம முழுங்கவும் முடியாம./
ஆஹா! அற்புதமான நீலகண்டன் நிலை; இதைத்தான் வைரமுத்துவின் உருவமில்லாத பந்து பொறுத்துக்கொண்ட தொண்டை என்பேன். வாய் திறந்து பேசமாட்டீர் என்றால், ஆஹா! ;-)


சந்திரவதனா, உங்கள் வங்காரி மத்தாய் பற்றிய உள்ளிகையை நீங்கள் போட்டபொழுதே வாசித்திருந்தேன். நான் சொல்லவந்தது, பெண்கள்_நாள் என்று சிறப்புநாள் குறித்துப் பேசியபொழுது எவருமே இப்படியானவர்களைப் பற்றிப் பேசவில்லையே என்ற கருத்தில்மட்டுமே.