Thursday, March 10, 2005

கரைவு - 3

ஜே. ஜே. சில குறிப்புகள்


‘ஜேஜே சில குறிப்புகள்’ குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், எழுதியதை இங்கே இட்டிருக்கின்றேன். இடைப்பட்ட காலத்திலும்,
புத்தக வாசத்திலே இப்போது வாசித்ததன் பின்னாலும், புதிய பரிமாணங்களும் பார்வையும் கிடைத்திருக்கின்றனவாதலால், கீழ்காணும் குறிப்பில் இருப்பதிலிருந்து இன்றைக்கு என் கருத்திலே கொஞ்சம் மாறுதல் உண்டு. ஆனாலும், இயன்றவரை, முதல் வாசனையிலே புரிந்ததை இடுதல் நல்லதெனப்பட்டதால், இட்டிருக்கிறேன். (முன்னைக் கொடுந்தமிழ் நடையைப் பொறுத்தருள்க அல்லது பொருட்படுத்தாது விடுக :-))2001 மே, 11
வெளிவந்து ஏழு வருடங்களின் பின்னர் கேள்வியுற்று, கைக்கிட்டாது, இருபது வருடங்களின் பின்னர் தற்செயலாகக் கிடைக்க வாசித்த குறிப்புக்கள். இந்தக்காலதாமதத்தினால் குறிப்புகளை எழுத்தாளரின் எழுத்தூடான நேரடிச்சாட்சியாக உணரமுன்னர் திறனாய்வு, விமர்சகத்தரகர்களின் பார்வைப்பூச்சுக்கூடாய்ப் பார்க்கவேண்டி ஏற்பட்ட (அவ)நிர்ப்பந்தம் (இன்னும் வாசிக்காது விலத்திக்கொண்ட சில குறிப்புகளின் பின்னான ஃபிரான்ஸ்வா க்ரோவின் உரை தவிர) அவ்வப்போது ஏற்பட்டதனைத் தவிர்க்கமுடியவில்லை. அதே நேரத்திலே இதே காலவிடைவெளி இந்நூல் மேலான விமர்சனங்களுக்குக் கதாசிரியரின் தன் விளக்கங்களையும் வாசிக்க வழிவகை செய்தது. இத்தனைக்குப்பின்னரும் ஆசிரியர் 99ம் ஆண்டு குமுதம் இதழிலே “‘ஜே:ஜே: சில குறிப்புகள் ’ மீதான முழுமையான விமர்சனம் இதுவரை வரவில்லை” என்பதாகக் குறிப்பிடுகின்றார். எந்தவொரு ஆசிரியரினதும் கருத்துக்களும் குறியீடுகளும் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் முழுக்க முழுக்க சக எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் வாசகர்களாலும் அவர் அமைத்த வியூகத்தின் மர்மஸ்தானங்களைப் பிளந்துமட்டுமே புரிந்து உள்வாங்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. அப்படி நிகழாத அதேநேரத்திலே தனது முடிச்சுகள் தான் எதிர்பார்த்த கோணத்திலோ வேறேதோ மாற்றுச்செயலாலோ முற்றாக அவிழ்க்கப்படும்வரை ஆசிரியன் தன் படைப்பு முழுக்க வெற்றியடைந்ததாகக் கருதிக்கொள்கின்றதில்லை. இங்கே அப்படி நிரப்பப்படாத வெளியின் ஓரிரு துவாரத்தை - கதைக்குறிப்பானவனையோ குறிப்பிட்டவரையோ சாராத வாசகர் களமும் பேசப்படு காலமும் அமைந்துபோய், ‘குழுக்கருந்துவாரங்கள்’ உள்ளிழுத்துக்கொள்ளாத விமர்சனத்தினைச் சாக்கிட்டு, மறுவாசிப்பு~உடற்பகுப்பாய்வு செய்துகொள்ளாத ஒரு வாசகனுக்குச் சொல்ல என்ன மிஞ்சியிருக்கக்கூடுமா என்ற தயக்கத்தோடு- எழுந்தவாக்கிலே நிரப்ப எண்ணுகிறேன். அதனால் சொல்லப்பட்டவை மீண்டு இந்தச்சிறுகுறிப்புகளுள்ளே சொல்லப்பட்டால் குறை தவிர்க்கவேண்டுமென விழைவு.

புதினத்துக்கு இலக்கணம் வலிந்து அதன்படி ‘தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல்’ வகுத்து தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்த பத்து பொறுக்கும் பெரும்பாலான ‘சாதாரண வாசகர்’வரைக்கும் பலரும் தமது முன் பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால் தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன் ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும்விட வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலுங்கூட எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.

இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால் கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் - இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின் மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் ‘விரிவும் ஆழமும் தேடி’யிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- “யாரோ இவர் யாரோ? இவரோ? அவரோ?” என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலுங்கூட கதை விரியுமிடத்திலே ‘அந்தத்’ தனியாளை ‘இந்தப்’ பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால் தானானது உள்ளே மாறாமற் போகின்றது.

குழந்தைக்கு வித்திட்டுப் பெற்றுக்கொள்ளும் செயல் தவிர்ந்த வேறெதிலுமே கற்பனையும் உண்மையும் கலக்காத படைப்பு இருக்கமுடியாது; இதற்கு ஒரு தோட்டக்காரனோ ஒரு கதைசொல்லியோ வேறெந்த வகைப்படைப்பாளியோ விதிவிலக்காகிவிடமுடியாது. ஜேஜேயும் பாலுவும் இரண்டான பேர்வழிகள் என்று கொள்கின்றது என்பதிலும் இடையினிலே ஊடாடி தன்கரைகளிலே வேறான ஒன்றின் இரண்டு பகுதிகளாகப்படுகின்றன..... (முற்றாகி நிறைவேறாத) இலட்சியமும் அதன்மீதான ஈர்ப்புச் சுவறாதபோதும் அதனுள் முழுதாக மூழ்கிச்செத்துப்போகாமல் தன் வாழ்தலை நிச்சயப்படுத்துக்கொள்ளும் நடைமுறையும். ஜேஜேயின் இறப்பு என்பது ‘பாலு’வின் ‘புதிய பார்வையும் பாதையும்’ பிறப்பதற்கான அசைபோடும் அஞ்ஞாதவாசத்தின் பிறப்பான குறியீடாகக் கண்டுகொள்ளத்தான் இங்கே இந்த வாசகனுக்கு முடிந்திருக்கின்றது. தேடலுடனான பிடிவாதத்தையும் அதன்பின்னான சோர்வு தந்த இடைவெளியிலே முன்னைய இருப்பு எதற்காக எண்ணியதற்கு மாற்றான முனைகளிலே வந்து நின்றதென்கின்றதை ஆய்தலையும் நீரும் நெய்யுமாகப் பிரித்தடுக்கும் முயற்சியே ஜேஜேயின் குறிப்புகளும் பாலுவின் கருத்துக்களும் என்ற எண்ணம் வாசித்துமுடிக்கும்போது தோன்றுகின்றது. மனித இருப்பின் தேவையினை இலக்கியத்தின் அவசியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கேள்விகள் எழுதல் தவிர்க்கமுடியாதாயினும் தான் சூழ்ந்த உலகம் (குறிப்பாகப் படைப்புலகம்) சம்பந்தமாக ஜேஜேயின் வினாக்கள் ஜேஜேயின் காலத்துக்கு முன்னாலும் சமகாலத்திலும் வருங்காலத்திலும் இருந்தன; இருக்கின்றன; இருக்கும் என்கின்றதை அறியாதானாக இத்தனை வாசிப்புக்கும் அனுபவங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்ட ஜேஜே இருந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. அவ்வப்பொழுதுக்குத் தகுந்த தீர்வுகளைக் கிஞ்சித்தேனும் ஏற்றுக் கொள்ளாமல் அந்தவினாக்களை அவிழ்த்தல் மட்டுமே தன் வாழ்வுக்கான விதி என்று அவன் வாழ்ந்திருக்கின்றான் என்று (ஜேஜே பற்றி எனக்குப் பிடிபடுகின்றது சரி என்று கொண்டால்) சொல்லப்பட்ட அவனது அகண்ட வாசிப்பினதும் ஆழத்தேடலுக்கும் பலன் என்னவென்கிற கேள்விவும் அவநம்பிக்கையுமே வாசகன் மீது கவிகின்றதாகப் படுகின்றது. பாலுவினை உன்னதத்தினை நோக்கி வியப்போடு பார்க்கும் அதே நேரத்திலே நடைமுறையிலும் தன் இருப்பினைக் காத்துக்கொள்ளும் ஆளாக்கிவிடும் ஆசிரியர் ஜேஜேயினை அதீத இலட்சியத்துக்கு ஆக்கிவிடுகின்றார். மேன்மைக்குணங்களின் வரையறுப்புகள், நோக்குகள் முற்றிலும் வேறாயினும் இலட்சியத்தன்மை என்பதைப் பார்க்கும்போது ஜேஜேயும் இலக்கு என்றது நாம் முட்டிப்பார்க்க இழுத்துக்கொள்ளும் கற்பனை உச்சத்துக்கோடு என்கிறதை மறுத்து நா. பார்த்தசாரதியின் கதாநாயகர்களின் பண்புகளோடு போட்டிக்கு உரசிப்பார்க்கும் ஒரு மனிதனாகவே தெரிகின்றான். ஜேஜேயின் அகம்பாவமும் அச்சமும் தோல்வியும்கூட “பிச்சை பெற்றாலும் கொடுப்பவன் பிடிக்க நான் எடுத்துக்கொள்கின்றேன்” என்ற வகையான நாயகனின் இலட்சியத்தினை அலங்கரிக்கும் பண்புகளாகின்றதோ என்று படுகின்றது.

இஃது ஒரு மையம் சார்ந்தொழுகாத படைப்பா இல்லையா என்கின்றதும் ஜே.ஜே.யின் (தெரிவிக்கப்பட்டதும் வாசகனாகப் புரிந்துகொண்டமைந்ததுமான) கருத்துத்தளம் மீதான விவாதங்களும் படைப்பினை வருங்காலத்துக்காக வகைபிரிக்கும் நோக்கிலும் அவரவர் தத்துவநோக்கு நிலையிலே நின்று வாதாடப்படவேண்டியதாகவும் பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலே வாசகனுக்கு கதை நகர்கின்றபோதிலே காலித்து கழன்றுகொள்ளாத சுவராசியமும் கதை எழுப்பும் உணர்வும் திறனாய்வாளரின் திமிறத்திமிற அழுத்தியூட்டலில்லாத தன்னறிதலும் திருப்தியும் முக்கியமாகின்றன. அந்தளவிலே - தம்மளவிலே சிறப்புற்றாலும் காலமும் சூழலும் பிறழ்ந்த சில நகைச்சுவையிழைகளையும் சில நீண்ட குறிப்புகளையும் தவிர்த்து - ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ பேச வந்த பொருளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. மையம் சார்ந்தொழுகாத படைப்பா என்கின்ற கேள்வியின் தேவை எனக்குத் தேவையில்லாதபோதும் நாட்குறிப்பு என்பதுதான் மையம் என்று பருமப்பொருள் சார்ந்து ஏற்றுக்கொள்ளலாமோ என்று எண்ணுகின்றேன். இன்னொரு வாசகருக்கு அவரின் அனுபவத்தினைப் பொறுத்து அவர் கதையிலே வேறொரு குறியீடு மையமாகலாம்.

கலை இலக்கியம் சார்ந்து எழும் இதுவகையான கேள்விகளுக்கு ஜேஜேயோ வேறெவரோ பதிலேதும் கண்டு புதர் விலக்கிப் புதிர் அவிழ்க்கமுடியாது; எனக்கென்றால் ஏனோ ஜேஜேயின் வினாக்கள் மட்டுமல்ல தமிழ்ப்படைப்புலகமும் அப்படியேதான் பொம்மைகளும் பொம்மலாட்டக்காரர்களும் மாறினாலும் கூத்தேதோ மாறாமல் உலவும் என்று தோன்கின்றது. சில கேள்விகள் தொடர்ந்துகொண்டேதாம் இருக்கும். சூழலுக்கும் காலத்துக்குமேற்ப மனிதன் தனது வாழ்காலத்தைக் கருத்திலே வைத்துக்கொண்டு காய்களைச் சிறிதாக தனக்குப் பட்ட முன் திசையிலே நகர்த்திக்கொண்டு போகவேண்டும். ஆனால் கேள்விகளையும் குழப்பங்களையும் திணிவேற்றாமல் சுவராசியமாக வாசகர்கள்முன்னே பின்னிப்போட்டு உள்வாங்க வைத்ததன் காரணமாக ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ தமிழ்ப்படைப்புகளிலே ஒரு சிறப்பிடத்திலே இனி வருகின்றவற்றுக்கு ஓர் ஒப்புநோக்கியாக்கமாக இருக்கும் என்பது மறுக்கப்படமுடியாததாகும்.


ஜே. ஜே. சில குறிப்புகள்.
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்.


படங்கள்: நன்றி => சென்னை ஒன்லைன்


No comments: