Tuesday, March 15, 2005

குவியம் - 3

ஆர். எஸ். கே.


ஆர்.எஸ்.கே., நடு இரவிலே வைத்தியசாலையிலே தனிமையிலே இறந்தார். அருகிலே துணைக்கிருந்த கடைசிமகன், அவர் நோயின் தவிப்புக் குறித்துச் சொல்ல நாட்டின் அகாலவேளையிலும் வீட்டுக்கு ஓடியிருந்தான். வைத்தியசாலைப்படிகளிலே தவறி விழுந்து இறந்தாரா அல்லது அதீத குடியின் விளைவான ஈரலழற்சியினாலே இறந்தாரா என்பது இற்றைநாள்வரை அறுதியிட்டுத் தெரியவில்லை. செத்தவீட்டிலே வந்திருந்த எல்லோரும் அழுதார்களாம்; அதேநேரத்திலே, ஒரு வித நிம்மதியும் படர்ந்திருந்ததென்றார்கள். இத்தனை நாள் குடி கொடுத்திருந்த உள அழுத்தம் அப்படியானது. சுற்றுப்புறத்திலே, இனி எந்த மரியாதைக்கேடுமிராது என்றதிலே எழுந்த உணர்வு அதாக இருக்கக்கூடும். பிரேதத்துக்கு, இரண்டாவது மகன் ஊருக்கு வந்து கொள்ளி வைத்தான். வெளிநாட்டிலேயிருந்த மூத்த மகனுக்கு, இவர் இறந்து எரித்த அடுத்த நாளே தெரியவந்தது; அதுவும் நண்பர்கள் புண்ணியத்தில். பிரேதத்தை அருகிலே இருந்து பார்க்காததால், உள்ளுக்குள்ளே இறுகிய உணர்வு மட்டுமேயிருந்தது; அழுகை வரவில்லை. அடுத்தநாள் வீட்டுக்குத் தொலைபேசியபோதுதான், அழுகை தானாக வழிந்திருக்கவேண்டும்.

ஆர். எஸ். கே., பிறந்து சில நாட்களிலேயே தாயை இழந்தவர் என்று கேள்வி. தந்தை ஒரு குக்கிராமத்து விதானை. விதானைக்கு, அடுத்த கல்யாணங்களும் இன்னும் பல குழந்தைகளும். பொடியனின் அறிவினைக் கண்ட ஒரு பாதிரியார் மாகாணத்தலைநகருக்குக் கொண்டு போய் பெயர்பெற்ற தனியார் ஆங்கிலமொழிக்கல்லூரியிலே சேர்த்தார். கல்லூரிப்படிப்பு முடிந்தபின்னால், மைசூர் பல்கலைக்கழகத்திலே விஞ்ஞான இளநிலைப்பட்டப்படிப்புக்கு அனுப்பி வைத்தார். ஆர். எஸ். கே., அங்கே நாடு நன்றாகச் சுற்றினார்; தன்னுடைய சின்னப்படப்பெட்டியிலே கறுப்பு வெள்ளையிலே ஹம்பி, அஜந்தா, எல்லோரா, மஹாபலிபுரம், கஜுஹோரா எல்லாம் சுட்டுத்தள்ளினார்; பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தலைவராக இருக்கையிலே டெல்கி போய் பண்டித நேருவுடன் ஒரு படமும் எடுத்துக்கொண்டார்; ஆனால், ஆத்துமா வருத்தத்தொடங்கியது; சாராயம் மூச்சிரைப்பைச் சுகமாக்குமென்று நண்பர்கள் கூறியதாலே, பழக்கமேற்பட்டது.

ஏற்பட்ட பழக்கம், மீண்டும் தன் நாடு திரும்பி, கற்ற கல்லூரியிலேயே ஆசிரியர் ஆகி, கல்யாணம் நிகழ்ந்து, குழந்தைகள் பெற்ற பின்னும் தொடர்ந்தது; சொல்லப்போனால், அதிகரித்தது. மனைவி அவரின் இந்தப்பழக்கத்தைத் திருத்த தன்னால் ஆகுமட்டும் முப்பதாண்டுகள் விடாமல் முயற்சித்தார் என்று சொல்லலாம். குடும்பத்தைக் கொண்டோடும் பொருளாதாரத்தினைப் பொறுத்தமட்டிலே மனைவியின் பரம்பரைச்சொத்து, மனைவியின் வரும்படியினாலே ஏதும் தாழ்விருக்கவில்லை. ஆனால், குடி என்பது, ஒரு மத்தியதட்டுக்குடும்பத்திலே பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல; சமூக அந்தஸ்து குறித்ததுமாகும். பொதுச்சொத்திலே திருடுகின்றவனுக்கு இருக்கின்ற மரியாதைகூட, தானும் தன் குடியுமென்று இருக்கின்ற ஒருவனுக்கு வாய்ப்பதில்லை. குழந்தைகளுக்கும் மனைவிக்கும் ஆர். எஸ். கே. என்பவர் ஒருவரல்லர்; இருவர்; குடிக்கின்ற நேரத்திலே, அடிக்கிற ஆளில்லாதபோதும், குடி என்பது அவரோடு ஒட்டிக்கொண்டதைச் சுட்டிக்காட்டும் சமூகம் காரணமாக வெறுப்புக்குரியவர்; குடியாத வேளையிலே, தானும் புத்தகங்களும் தோட்டமும் வளர்ப்புப்பிராணிகளும் வானொலியுமென்று ஒரு தன்னுடைய உலகுக்குள்ளே அடங்கிப்போன சாதுவான மனிதர். குழந்தைகள் - குறிப்பாக மூத்தமகன், அவரிடமிருந்து வாசிப்பையும் வானொலியையும் கற்றுக்கொண்டார்கள்; குடியைத் தொட்டும் பார்ப்பதில்லை என்று உறுதிப்பட்டுக்கொண்டார்கள். மீதிப்படி அவரோடான குழந்தைகளின் உலகம் ஒட்டியும் ஒட்டாமலும் நகர்ந்த ஒன்று.

நான்கு குழந்தைகளும் வளர்ந்து, தம்மைத் தம் காலிலே நிறுத்திய பின்னும் அவராலே குடியை நிறுத்த முடியவில்லை. அவரின் இளங்காலத்தோழர்களிலே அவரின் வாசிப்பு, அறிதலிலே எட்டியும் நிற்கமுடியாதவர்களெல்லாம் வாழ்க்கையிலேயும் தொழிலேயும் ஓஹோ என்று எங்கோ போய்விட்டார்களே என்று மனைவிக்குக் கவலை நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மற்றவர்களை எவருமே குற்றம் சொல்லமுடியாது; அவரின் குடியையும் தன் வாசித்தலையும் அறிதலையும் கோவையாக எடுத்துச் சொல்லும் திறனில்லாத, கருத்து ஒருங்குதற்படமுடியாத தன்மையைத்தான் குறை சொல்லமுடிந்தது.

ஆர். எஸ். கே. பற்றி எண்ணும்போதெல்லாம், அவரது மூத்த மகனுக்குத் தோன்றுவதெல்லாம், அவனுடைய ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லும் சொற்றொடரே; "தன்னை ஒரு பெறுதிக்குரியவனாக எவன் ஒருவன் கருதிச் செயற்படாதவனோ, அவன் பிறரையும் அவனைப் பெறுதிக்குரியவனாக எண்ண எதிர்பார்க்கும் உரித்துடையவன் அல்லன்." இப்போது, அவரிடமிருந்து வாசிப்புவிடாயினை அவன் தான் அறியக் கற்றிருந்திருக்கலாம்; ஆனால், அறியாமலே, அவரின் சிந்தை ஒருங்கிச் செயற்படவியலா அவத்தன்மையையும்கூடக் கடத்தப்பெற்றிருக்கின்றானோ என்ற அச்சமுங்கூடவே எழுகிறது.

ஆர். எஸ். கே, எப்போதும்விட இப்போது எனக்கு மிகவும் அருகானவர் என்று தோன்றுகிறார். அவர் இருக்கும்போதே இந்தப்புரிதல் ஏற்பட்டிருந்தால், உள்ளூறச் சில குற்றவுணவுகளிலே அழுந்தக் கிடந்த அவர் மகிழ்ந்திருக்கக்கூடும்.

2005 மார்ச்., 15 05:05 கிநிநே.

No comments: