Thursday, March 03, 2005

துத்தம் - 3

நானும் என்னை ஒட்டிக்கொண்ட சில திரைப்படப்பாடல்களும் -1

[கட்டில்லா உளறல் ஆரம்பம்]
இன்றைக்கு பாஸ்டன் பாலாஜியின் பதிவிலே அவர் கூறிய இரவும் பகலும் படத்தின் "இரவு வரும்" பாட்டிற்கான இணைப்பினை musicindiaonline இலே பெற முடிந்தபோது, அசோகன் அதே படத்திலே பாடின "இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்" பாடலும் மேலுக்கு வந்தது. படங்களிலே பொதுவாக எம்ஜிஆரிடம் அடிவாங்கவென்றே தோன்றியதுபோன்றவர்களான மனோகர், நம்பியார், அசோகன் ஆகிய மூன்று பேரின் நடிப்புத் தொடர்பான உருச்சிறுத்துப்போன ஏனைய பக்கங்கள் புரட்டிப் பேசப்படாமலே இருக்கின்றன. மனோகரின் விடாப்பிடியான புராணநாடகமுயற்சிகள்; கதாநாயகனாக திரைப்பட உலகத்திலே ("திகம்பரசாமியார்"?) அறிமுகமான நம்பியாரின் எம்ஜிஆர் காலத்துக்குப் பின்னான பாக்கியராஜின் "தூறல் நின்னு போச்சு" படத்தின் "என் சோகக்கதையைக் கேளு தாய்க்குலமே" நகைச்சுவைப்பாத்திரம்.

அசோகனின் செய்கையிலே மறக்கமுடியாதது, அடிக்கடி அவர் மூடித்திறந்து செய்யும் கண்சிமிட்டல் என்றால், அவர் கெட்டவனாகத் தோன்றி குத்தி, வெட்டிச்சாய்க்காத படங்களிலே அவர் பாத்திரங்களோடு சம்பந்தப்பட்டு வந்த பாடல்களும் பொதுவாக எனக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன; இருக்கின்றன. (அவர் நல்ல வீரனாகத் தோன்றி, பிரகாஷ்ராஜ் மனைவி சாந்தியின் தந்தை ஆனந்தனும் சச்சுவும் கதாநாயகன் - நாயகியாக நடித்த வீரத்திருமகன் பாடல்கள் பிடித்திருந்தன. பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடல்கள் தனியே பேசப்படவேண்டுமென்பதாலே அவற்றினை இங்கே விட்டுவிடுகிறேன்). 'இரவும் பகலும்' படத்திலே அசோகனே பாடிய இந்த, "இறந்தவனைச் சுமந்தவனும்" [ http://www.musicindiaonline.com/p/x/KqIg1P3sogGfHDfOBitZ/ ] பிடித்துப்போனது, அதிலே சொல்லப்படும் கருத்துக்காக அல்ல, ஆனால், அவருடைய அந்த மாறுபட்ட குரலுக்காக. அவருக்காக, ஜெமினி நடித்த "பாதகாணிக்கை" படத்திலே ரி. எம். சௌந்தரராஜன் பாடின "வீடு வரை உறவு வீதி வரை மனைவி" [ http://www.musicindiaonline.com/p/x/3J7g1ARnyFGfHDfOBitZ/ ] இன்னோர் அருமையான பாடல்; இது போன்ற பாடல்கள் தத்துவத்தின் உச்சி, கோபுரம் என்றெண்ணிய காலம் கடந்தே இருபதாண்டுகள் போய்விட்டாலுங்கூட, அப்படியான பாடல்களிடம் பிடிபட்டுக்கொள்கின்ற தன்மை -ஏனென்று புரிந்துகொள்ளமுடியாதபோதுங்கூட, - இன்னும் விட்டுப்போகவில்லை; சிலவேளை ஆரம்பத்திலே கேட்கப்பட்ட காலத்தின் நல்ஞாபகத்தினைத் துகட்படுத்திக்கொண்டு அவை இருப்பதாலிருக்கலாம். அப்படியே இருந்துவிட்டும் போகட்டும்; காரணமல்ல இப்போது எனக்கு முக்கியம்; அவை பிடித்திருக்கின்றன என்பதே. இன்னொரு பாடல், எனக்குப் பிடித்த தமிழ்த்திரைப்பாடல்களிலே இரண்டாம் இடத்திலே இருக்கின்றதென்று எண்ணிக்கொள்ளும் (உணர்ந்துகொள்ளும் என்றும் சொல்லலாமோ?) வேதாவின் இசையமைப்பிலே [இவரும் தேவா மாதிரி உருவிக்கொள்கின்றவர்தானாமே?] வந்த வல்லவனுக்கு வல்லவன் படத்திலே அசோகனுக்காக சௌந்தரராஜன் பாடும் பாடலான, "ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" [ http://www.musicindiaonline.com/p/x/aV2gScWBdgGfHDfOBitZ/ ].

இந்தப்பாடல் மட்டுமல்ல, மொடேர்ன் தியேர்ட்டர்ஸின் ஜெயசங்கர் நடித்த "வல்லவம்" தோன்றும் ஜோன் வெய்ன், க்ளீன் ஈஸ்ற்வுட் வெஸ்ரேன் வகைத்தழுவற்படங்களிலும் உள்ள பாடல்களிலே சிலவும் மிகவும் பிடித்தவை ( "மனம் என்னும் மேடை மேலே" [ http://www.musicindiaonline.com/p/x/7A2gI7NE.-GfHDfOBitZ/ ], "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/IJIgDfKb2FGfHDfOBitZ/ ], "பளிங்கினால் ஒரு மாளிகை" [ http://www.musicindiaonline.com/p/x/OV2gHNvHN-GfHDfOBitZ/ ], "இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/ZV2gUOocfwGfHDfOBitZ/ ], "ஆசையா கோபமா" [ http://www.musicindiaonline.com/p/x/3qIghAajIwGfHDfOBitZ/ ] ). இவற்றிலே, ஓரிரு பாடல்களின் உள்ளர்த்தங்கள் ஒரு காலத்திலே ஓஹோ என்பதுவாகத் தோன்றி, இன்றைக்கு மிகவும் பிற்போக்காகத் தோன்றுகின்றவை; உதாரணமாக, "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்?" என்பது, அதிலே பெண்ணினை காத்திருக்கும் அவளின் காதலன் தாமதமாக வருவது குறித்துச் சந்தேகப்படுவதுபோலவும், அவள் தன் தாமதத்துக்கான காரணத்தினை "கவித்துவமாக" விளக்குவதாகவும் புரிந்து இரசித்ததுண்டு. வண்டு அவள் முகத்தினைப் பூவாகவும் கூந்தலை முகிலாவும் எண்ணிக்கொண்டதான பாடல்; இப்படியான "கவித்துவப்" பாடல்கள் சில முன்னர் அந்தக்காரணங்களுக்காகவே பிடித்திருந்தன (பார்த்தால் பசி தீரும் படத்திலே, சரோஜாதேவி-சிவாஜி இடையேயான, "கொடியசைந்ததும் காற்றுவந்ததா?" [ http://www.musicindiaonline.com/p/x/tq7g6V4N9FGfHDfOBitZ/ ] பாடல், நீலமலர்கள் படத்திலே கமலஹாஸன் - ஸ்ரீதேவிக்கு இடையேயான "இது இரவா? பகலா? பாடல்). ஆனால், இப்போதைய நிலையிலே இவற்றுக்காக காரணங்கள் பிடிப்பதில்லை; ஆனால், பாடல்கள் இன்னும் பிடித்திருக்கின்றன. "பளிங்கினால் ஒரு மாளிகை" பிடித்ததுக்கான காரணம், கருத்து அல்ல; அந்தக் கிறங்கடிக்கும் எல். ஆர். ஈஸ்வரியின் குரல்.

பொதுவாக எனக்குத் தமிழிலே பாடும் பெண்பாடகர்களின் குரல்களிலே வித்தியாசம் தெரிவதில்லை. (தொண்ணூறுகளின் பின்னாலே, வந்த பாடல்களிலே ஆண்களின் குரல்களிலேயும் வித்தியாசம் பிடிபடவில்லை; இந்த நூற்றாண்டுத்தமிழ்த்பாடல்களிலே பாடலே தமிழா வேறு மொழியா என்று புரிந்து கொள்ள முன்னாலே பாடல் முடிந்துவிடுகின்றது. படப்பெயர்களுக்குத் தமிழைப் புகுத்த நின்றாடும் ராமதாஸ், திருமாவளவன் போன்றோர், தமிழ்ப்பாடல்கள் புரியும்வண்ணம் பாடப்படவேண்டுமென்பதை முதற்றேவையாகப் பிடித்துக்கொண்டால் எவ்வளவு நல்லது! :-() ஆனால், எல். ஆர். ஈஸ்வரியின் குரலை மட்டும் இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவேன் (அவரின் பெயரை மறந்தாலுங்கூட :-))

ஈஸ்வரியும் ரி. எம். சௌந்தரராஜனும் சேர்ந்து பாடிய சில பாடல்கள், வழக்கமாக ஜோதிலக்ஷ்மி, ஜி. சகுந்தலா (சி. ஐ. டி. சகுந்தலா??), ஆலம் ஆகியோருக்கு "க்ளப்-காபரே (உ)டான்ஸ¤" பாடல்களுக்கு அவர் பாடும் துள்ளும் பாடல்களிலே இருந்து மிகவும் விலகி, என்னை வேறு மாதிரியாக அள்ளிக்கொண்டிருக்கின்றன. 'ஆலயமணி' படத்திலே "கல்லெல்லாம் மாணிக்கக்கல்லாகுமா?" [ http://www.musicindiaonline.com/p/x/h4OgMp7hT-GfHDfOBitZ/ ] , 'யார் நீ'யிலே "பார்வை ஒன்றே போதுமே?" [ http://www.musicindiaonline.com/p/x/prxgktVjngGfHDfOBitZ/ ], 'பச்சை விளக்கு' இலே, "பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/OrfgQ4NJ6wGfHDfOBitZ/ ], "வானம்பாடி" இல் "ஏட்டில் எழுதி வைத்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/kVCgymama-GfHDfOBitZ/ ], 'சிந்து நதியின் மிசை நிலவினிலே' [ http://www.musicindiaonline.com/p/x/TUxg5c33N-GfHDfOBitZ/ ] கடைசியாக இந்தப்பதிவினை இன்றைக்கு எழுதும் வண்ணம் எனக்கு திரி வைத்து எண்ணெயும் நெருப்புமிட்ட, சூலமங்கலம் ராஜலக்ஷ்மியின் இசையிலே தரிசனம் படத்திலே வரும், "இது மாலை நேரத்து மயக்கம்" [ http://www.musicindiaonline.com/p/x/8UQgDCC.YwGfHDfOBitZ/ ].

மாலை நேரத்து மயக்கத்தினை நான் கிட்டத்தட்ட ஒரு பதினைந்து ஆண்டுக்காலமாக கேட்க அலைந்திருக்கின்றேன். தமிழ்த்திரைப்படப்பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு எதுவென்று கேட்டால், இதுதான்; இதுவேதான்; ஆண்டு மறந்து போனாலுங்கூட, இதை முதல்முதலிலே கேட்ட இடம், நேரம் அனைத்தும் அப்படியே நினைவிலே நிற்கின்றது. போன கிழமை, பாஸ்டன் பாலாஜியின் பதிவிலேகூட, ரோசா வசந்த் தன்னிடம் இருப்பதாகச் சொன்னார். இன்று ஓர் எதேச்சைத்தேடலிலே கிடைத்திருக்கின்றது.
[/கட்டுண்டது இப்போதைக்கு இங்கு முற்று]

'05 மார்ச் 03, 19:51 கிநிநே.

29 comments:

Thangamani said...

ரொம்ப நல்ல பதிவு. இதற்காக நான் கட்சிமாரி (ஈழநாதனிடமிருந்து) உங்கள் கட்சிக்கு வருகிறேன்.
அசோகனைப்பற்றி படிக்க ஆரம்பித்தவுடனே மனம் பரபரத்தது, எங்கே அதை விட்டுவிடுவீர்களோ என்னமோ என்று, நல்லவேளை அது உங்களுக்கும் பிடித்திருந்தது குறித்து மகிழ்ந்தேன். "ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" எனக்கு மிகவும் பிடித்த பாடல். மீண்டும் கேட்டேன். நன்றி!

மீனாக்ஸ் | Meenaks said...

ஓராயிரம் பார்வையிலே பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. உங்கள் ரசனையை வியந்தேன்.

மு. சுந்தரமூர்த்தி said...

கல்லூரி னாட்களில் ஊர் உறங்கியபின் புதன் கிழமை இரவு 10-11 மணிக்கு டிரான்சிஸ்டர் ரேடியோவில் சென்னை வானொலியின் னேயர் விருப்பம் கேட்டுக்கொண்டே படிப்பது போல இப்போது உங்கள் பதிவைத் திறந்துவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தவறாமல் "கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ" என்று பி. சுசீலா உருகிக்கொண்டிருப்பார். அடையாளம்பட்டு ஆறுமுகம் வாரம் னாலைந்து பாடல்களாவது கேட்டு எழுதியிருப்பார்.

தொடுப்புகளுக்கு னன்றி.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

here! here!
எதற்காக இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு எழுதுகிறீர்கள்! எல். ஆர். ஈஸ்வரியின் கிளப் பாடல்கள் இல்லாவிட்டால் தமிழ் திரை இசையின் ஒரு முக்கிய பரிமாணமே அற்றுப் போய்விடும். சில நல்ல தொகுப்புகள் இப்போது கிடைக்கின்றன. போனவாரம் கூட இரண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் ஜெய்சங்கர் டிஷும் டிஷும் படம் பார்த்தேன். fun. அத்தோடு முடிவெட்டும் பாட்டில்கூட (எது என்று கண்டுபிடியுங்கள்) சரியான rock and roll போட்டதற்கு எம் எஸ்வி+ ராமமூர்த்தி+ ஹென்றி டேனியல்+ கோவர்த்தனம் கூட்டணிக்கு என்றும் கடன்பட்டுள்ள
அருள்

-/பெயரிலி. said...

ஐயோ ஐயோ முன்னெச்சரிக்கை இல்லை; அவற்றிலே ஒலிக்கும் ஈஸ்வரியின் குரலின் துள்ளல் வேறு; "கல்லெல்லாம் மாணிக்கல்லாகுமா?" குரலிலே இழையும் சோகம் வேறு. அந்த வித்தியாசத்தைத்தான் சொன்னேன்.

-/பெயரிலி. said...

/அத்தோடு முடிவெட்டும் பாட்டில்கூட (எது என்று கண்டுபிடியுங்கள்) சரியான rock and roll/

சந்திரபாபு பாட்டு ஏதுமா?
1-2-3 Rock Rock Rock Rock and Roll?

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" மிகவும் அருமையான பாட்டு. மனம் என்னும் மேடை மீது ஹிந்தி மெட்டு எதையோ தழுவியது என்று நினைக்கிறேன்.

டிசே தமிழன் said...

பெயரிலி, மாலைநேரத்து மயக்கத்தை நானும் கேட்டேன். நன்றாகவிருந்தது. பதினைந்து வருடங்களாய் நீங்கள் தேடியதற்கு worthஆன பாடல். If i get a partner who atleast won't ask what the hell is Maalai Neraththu Mayakkam, then I can listen this song with her oneday. May god and my fellow bloggers wish my dream come true :-).

Thangamani said...

டிசே இது நீங்கள் பதிவர்களிடம் வைக்கும் இரண்டாவது கனவு நிறைவேற்றக் கோரிக்கை. நடக்கட்டும்.

வசந்தன்(Vasanthan) said...

உங்களுக்கு எஸ். ஜானகியின் குரலைக்கூடவா அடையாளங்காண கடினமாயிருக்கிறது?

-/பெயரிலி. said...

/உங்களுக்கு எஸ். ஜானகியின் குரலைக்கூடவா அடையாளங்காண கடினமாயிருக்கிறது?/

ஓம்; யமுனாராணியைத் தவிர, எல். ஆர். ஈஸ்வரிதான் அடையாளம் காணமுடிந்த ஒரு குரல்.

டிஜே, வாழ்த்திவிட்டாற் போயிற்று.

சுந்தரமூர்த்தி, நீங்கள் சொல்வதுபோலவே, திங்கள் இரவு 10:00-11:00 இற்கு இந்நியவானொலியிலே வரும் பழைய பாடல்களைக் காத்திருந்து விளைக்கை அணைத்துவிட்டுக் கேட்டிருந்த காலமும் உண்டு.

dondu(#4800161) said...

" 'பச்சை விளக்கு' இலே, "பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால்"
இப்பாடல் "பணம் படைத்தவன்"-ல்" வந்தது. கே.ஆர்.விஜயா மற்றும் எம்.ஜி.ஆர் நடித்தப் படம். 1965-ல் வந்தது. அதே படத்தில் வந்த மற்ற அருமையானப் பாடல்கள் "மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க", "கண் போன போக்கிலே கால் போகலாமா", "அந்த மாப்பிள்ள காதலிச்சான், கையப் பிடிச்சான்" ஆகியவையாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

-/பெயரிலி. said...

டோண்டு, நன்றி.
/கண் போன போக்கிலே கால் போகலாமா/
இந்தப்பாடல் கேட்டுக்கேட்டே முழுப்பாடமாக ஒரு காலத்திலிருந்தது.

ROSAVASANTH said...

//"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" மிகவும் அருமையான பாட்டு. மனம் என்னும் மேடை மீது ஹிந்தி மெட்டு எதையோ தழுவியது என்று நினைக்கிறேன்.//

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்" உம் ஹிந்தியிலிருந்து சுட்டதுதான். "ஸௌபாரி ஜனம்.." என்று தொடங்கும் முஹம்மது ரஃபி பாடிய அற்புத பாடல். தமிழில் வேறு விதத்தில் டிஎம்எஸ் குரலிலும் நன்றாய் இருக்கும். ம்யூஸிக் இந்தியாவில் தேடி சொல்கிறேன்.

ROSAVASANTH said...

Saubaar janam..

ROSAVASANTH said...

தேடி பார்த்தேன். மியூஸிக்கிண்டியாவில் இருப்பதாக தெரியவில்லை. ஆச்சரையம்தான்!

ROSAVASANTH said...

//( "மனம் என்னும் மேடை மேலே" [ http://www.musicindiaonline.com/p/x/7A2gI7NE.-GfHDfOBitZ/ ], "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" [ http://www.musicindiaonline.com/p/x/IJIgDfKb2FGfHDfOBitZ/ ], "பளிங்கினால் ஒரு மாளிகை" [ http://www.musicindiaonline.com/p/x/OV2gHNvHN-GfHDfOBitZ/ ], "இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்" [ http://www.musicindiaonline.com/p/x/ZV2gUOocfwGfHDfOBitZ/ ], "ஆசையா கோபமா" [ http://www.musicindiaonline.com/p/x/3qIghAajIwGfHDfOBitZ/ ] ). //

ரொம்ப ஸாரி, இதில் எல்லாமே சுட்டது என்று நினைக்கிறேன். பளிங்கினால் ஒரு மாளிகை ஹிந்தியிலிருக்கிறதா என்று சந்தேகம். மற்றபடி அனைத்தும் ஹிந்தியில் உள்ளன, அதுதான் (ஒருவேளை மேற்கிலிருந்து சுட்டாலும், முதலில் வந்த) ஒரிஜினல் என்று நினைக்கிறேன்.

-/பெயரிலி. said...

வசந்த், இதுக்கெல்லாம் ஸாரி தேவையில்லை; அதுதான் வேதா தேவா மாதிரி புடுங்கிப்போடுகின்றவர் என்று சொல்லியிருக்கின்றேனே ;-)

KARTHIKRAMAS said...

அம்மே எனக்கு அழுகாச்சி வருது...
10 வருடம் மூத்த அக்கா ஞாபகம்தான் காரணம்.
அவுகதான் இந்த பாட்டெல்லாம் பாடிக்கிட்டே என்னை துக்கு வச்சுகிட்டே
சோறு ஊட்டுவாங்க[ நடுவால முதுகுலையும் நாலு விழும்]

"அந்த இனியமகள் எனது தாய்க்கு மருமவளாவாள்" ன்னு ஒரு வரி வருமே, தெரியுமா பெருசுங்களே? ;-)

KARTHIKRAMAS said...

ஆனாலும், அந்த சின்ன வயசிலே , என்னையும் "இருவர் உள்ளம்" கூட்டிப்போய் பாக்க வச்ச டார்ச்சரும் ஞாபகம் வருது!
அது என்ன அது "பறவைகள் பலவிதம்"

என்னமோ போங்க, இதெல்லாம் பிஞ்சு வயசிலேயே கேட்டு கெட்டுபோகனும்னு விதி!!!

கறுப்பி said...

எல்லாரும் உங்கட உங்கட காலத்துப் பாடல்களைப் பற்றிக் கதைக்கிறீங்கள். என்ர காலத்துப் பாடல்களை கண்டு கொள்ள மாட்டம் எண்டுறீங்கள். “இப்படிப் போடு போடு போடு”

சுந்தரவடிவேல் said...

ஓராயிரம் பார்வையிலேன்னதும் ஒருத்தன் துள்ளுவான்னு நெனச்சேன். மொத ஆளா வந்து துள்ளிருக்கான். நீங்க ஏந்தான் எல்லாருக்கும் இப்படி நெனப்பக் கெளப்புறீங்கன்னு தெரியல!

டிசே தமிழன் said...

// என்ர காலத்துப் பாடல்களை கண்டு கொள்ள மாட்டம் எண்டுறீங்கள். “இப்படிப் போடு போடு போடு”//
அடடா கறுப்பி, பெயரிலியின் மேலேயுள்ள பதிவையும், கீழே போடப்பட்ட பின்னூட்டஙகளையும் கன்னத்தில் கையை (sad moodல் இருக்கிறன் என்று சிம்பாலிக்காய் எனக்கு நானே காட்டத்தான்) வைத்தபடி, எங்கடை காலத்துப்பாடலகளை ஒருவரும் எழுதமாட்டீனமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். நீங்களும் கூட வந்துவிட்டதால், பெயரிலியிடம் புதுப்பாடல்களைப் பற்றி எழுதச்சொல்லிக்கேட்கலாம்.

நானும், அப்படிப் போடு போடு விலிருந்து பிறகு மச்சான் பேரு மதுரவிற்குப் போய், லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியேயில் வந்து நிற்கிறன்.
.....
தங்கமணி, பெயரிலி வாழ்த்துக்களுக்கு நன்றி.

KARTHIKRAMAS said...

எல் ஆர் ஈஸ்வரியின் கச்சேரியை 3 முறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. "தொம்ம தொம்ம தக்க" என்ற கணபதி பாடல் முதற்றொடக்கப்பாடல் [அனேகமா எல்லா கச்சேரிகளிலும் என்று கேள்வி]

விரலிலே சொடக்கிக்கொண்டே, லேசாக மேடையிலேயே நடனமாடியபடி,
மிகவும் இசையோடு கலந்து பாடுவார்.

"இலந்த பழம் ம்ம்ம் செக்க செவந்த பயம் " தான் விசில்களை வாறிக் குவிக்கும்.

-/பெயரிலி. said...

/"அந்த இனியமகள் எனது தாய்க்கு மருமவளாவாள்" ன்னு ஒரு வரி வருமே, தெரியுமா பெருசுங்களே? /

"கண்ணெதிரே தோன்றினாள்;
கனிமுகத்தைக் காட்டினாள்"

இருவர் உள்ளம்; இதிலே, எல். ஆர். ஈஸ்வரியும் (வெங்கட்டின்) ஏ. எல் ராகவனும் பின்னணிக்குரல் கொடுத்த பாடல் இருக்கிறதே; "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை." எம். ஆர். ராதா நடிப்பார். ("ஆசையோடு பேசி நாளாச்சி; ஆபத்து அங்கேதான் உருவாச்சி")

இதேபடத்தில் இன்னொரு பாடல், ரி. எம். சௌந்தரராஜன், சுசீலா உடையது; "நதியெங்கே போகிறது? கடலைத்தேடி; நாளெங்கே போகிறது? இரவைத்தேடி" இ·து இந்தியராணுவம் இலங்கையிலிருந்தபோது, வேறுவிதமாகப் பாடப்பட்டது. "புலியெங்கே போகிறது? டெலோவைத் தேடி; டெலோவெங்கே போகிறது? ஐபிகேப் காம்பை நாடி"

/ஓராயிரம் பார்வையிலேன்னதும் ஒருத்தன் துள்ளுவான்னு நெனச்சேன். மொத ஆளா வந்து துள்ளிருக்கான். நீங்க ஏந்தான் எல்லாருக்கும் இப்படி நெனப்பக் கெளப்புறீங்கன்னு தெரியல!/

வாழ்க; போகிறபோக்கிலே, ஓராயிரம் பார்வையாளர் மன்றமே தொடங்கலாமென்று சொல்கின்றீர்கள்? அது பாட்டு; மிச்சதெல்லாம் பட்டது.

/"அப்படிப் போடு போடு"/
அதுவும் துள்ளுதுதான்; ஆனால், "சொட்டுது சொட்டுது சொட்டுது பாரு அங்கே" இற்குக் கிட்டே வருமா?

"மாலை நேரத்து மயக்க"த்துக்கும் "வளர்ந்த கதை மறந்துவிட்டால் ஏனடா"வுக்கும் [ http://www.musicindiaonline.com/p/x/V4CgG67m5FGfHDfOBitZ/ ]இடையிலே ஓர் ஒற்றுமை உண்டு இரண்டும் இறுதியிலே முழுதாக முடிந்து நான் கேட்டதில்லை; ஒரு தேய்வுத்தன்மையிலே பாடல் மங்கி மறைந்து போகும். இ·து அப்படித்தானா பதிவு செய்யப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா?

KARTHIKRAMAS said...

ததுவப்பாடல்கள் என்றதும் னினைவுக்கு வருவது சந்திரபாபு. என் எஸ் கே,
புத்தி பெற்ற மனிதனெல்லாம்.. போன்ற சில பாடல்கள்[பம்பரக் கண்ணாலே காதல்.. ].
ஞானஒளி, ஆடுகள் மந்தயைவிட்டு பிரந்தன.
ஏதாவது சரக்கிருந்தா எழுதுங்களேன்.

எதுவுமே சரியா ஞாபகத்து வரலே. நான் வேறே அப்ப சின்னப்பையன்.

என் எஸ் கே என்று போனால், தேனே உன்னை உன்னைத் தேடி தேடி, பட்டந்தான் போகலாமடி, போன்றவை பார்த்தவுடன் சிரிப்பை வரவழப்பவை.

KARTHIKRAMAS said...

//"வளர்ந்த கதை மறந்துவிட்டால் ஏனடா//
இந்தியாவிலே ஒளியும் ஒலியும் பார்த்ததிலே, இது தேய்ந்து முடிவதாய்தான் ஞாபகம்.

//மாலை நேரத்து மயக்க// பற்றி தெரியவில்லை.

-/பெயரிலி. said...

/மற்றபடி அனைத்தும் ஹிந்தியில் உள்ளன, அதுதான் (ஒருவேளை மேற்கிலிருந்து சுட்டாலும், முதலில் வந்த) ஒரிஜினல் என்று நினைக்கிறேன். /
http://www.anothersubcontinent.com/forums/index.php?showtopic=1463

/Saubaar janam/
http://www.mohdrafi.com/database/index.php?load=track&TRACK=Sau+Baar+Janam+Lenge
yet the audio link is not working :-(

-/பெயரிலி. said...

/Saubaar janam/
http://www.raaga.com/getclip.asp?id=999999011286

ROSAVASANTH said...

//வசந்த், இதுக்கெல்லாம் ஸாரி தேவையில்லை; அதுதான் வேதா தேவா மாதிரி புடுங்கிப்போடுகின்றவர் என்று சொல்லியிருக்கின்றேனே ;-)//

தேவா மாதிரி என்று சொல்வதை ஒப்புகொள்ள முடியவில்லை. வேதா மாதிரி தேவா என்பதும் கூட சரியல்ல என்று நினைக்கிறேன். வேதா அப்படியே சுட்டு ஜெராக்ஸ் காப்பி எடுப்பவர். அண்ணன் தேவா அதில் மசாலாக்கள் சேர்த்து தமிழ் ரசனைக்கு ஏற்ப தருபவர். உதாரணமாய் ஒரு ஆதாரம்.

'buffoalo Soldiers' என்ற பாப் மார்லேயின் பாடலை 'அகிலா.. அகிலாவாக' மாற்றியிருப்பார். வேதா போல ஜெராக்ஸ் காப்பி அல்ல. இதை முக்கியமாய் சொல்ல ஒரு காரணம் உண்டு. ஹிந்தியில் பிறகு இந்த பாட்டு சுடப்பட்டது. அந்த அனுமாலிக்கோ யாரோ, நேரடியா பாப் மார்லேயை சுட்டு போட்டிருக்கலாம். ஆனால் அண்ணன் தேவாவின் மெட்டையே ஜெராக்ஸ் எடுத்திருப்பார்கள். அண்ணன் தேவாவின் முக்கியத்துவதை இது விளக்கும். இது வேதா மாதிரியோ, அல்லது வேதா இது மாதிரியோ இல்லை என்று எண் எண்ணம்.