Tuesday, March 08, 2005

கணம் - 459

தரவு

உயிர்மெய்யென்று ஏதுமில்லை,
இனி எல்லாமே வெறுந்தரவு:
எனது, உனது, அடுத்திருந்து
அவதானிக்கும் அவனது.

எதிர்காலத் தெங்கும் எல்லாமே
ஏனென்றில்லாமற் செல்லுபடியாகும்
என்றானதால், எதிர்த்தாற் போல் வரும்
எதையுங் கண் இடுங்கக் கவனங்கொள்:

என் நெடுமூக்குக்குக் கீழான சளியை,
உன் முன்னுதட்டுக்கு மேலான மறுவை,
அவன் முடிதன் நுனிக்கறுப்பை, வேர்வெளுப்பை,
காலூரும் கறுப்பெறும்பை, இவ்வூரில்லாச் சிவப்பெறும்பை.

சுட்டு விரலிடுக்குச் சொட்டு அழுக்கைக்கூட,
வட்டப்பெருவிரல்நகம் சுண்டிக் கழிக்கமுன்.
- தரித்து ஒரு கணம் -
உனக்குள் எண்ணிக்கொள்;
கறளோடு தொலைந்து போகிறதா,
தரவுத்துகளேதும் காற்றில்?

காத்திருந்து பார்;
தரவு கிறுக்கும் தள ஒழுக்கில்
ஓயா துருளும் ஒரு தட்டாகும்
நாம் வாழுலகம்.

விரைந்தான் வெல்வான்.

'05 மார்ச் 08 02:09 கிநிநே..

10 comments:

KARTHIKRAMAS said...

கவிதை வழக்கம் போல் நன்றாக உள்ளது.
பொருளிலேதான் சின்ன சந்தேகம். இதற்கும் என் சமீபத்திய
சுரா விமர்சனத்துக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே? ;-)

கறுப்பி said...

“ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ எழுதுது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியலே உலகத்திலே”

-/பெயரிலி. said...

/சுரா விமர்சனத்துக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே? /

போச்சுடா! ;-) இல்லையே! இது நேற்றைக்கு ஒஸ்கார் வைல்ட் எழுதியதின் பின்னாலே வெறும் தரவுத்தளமாக மட்டும் மூளை பயன்படுகின்றதோ என்ற உணர்வு தோன்றக் கிறுக்கியது.

KARTHIKRAMAS said...

மன்னிக்கவும் பெயரிலி. எல்லாம் உங்கள் பொடி போட்டு மயக்கும் எழுத்துதான்
காரணம் :P. பதிவின் நேர சந்தர்ப்பமும் அவ்வாறு நினைக்கவைத்துவிட்டது.
ரொம்ப கஷ்டப்பட்டுதான் இணைத்துப்பார்த்தேன். கொஞ்சம் ஓவ்ர்தானோ? :))
அதற்காக லிங்க் எல்லாம் கொடுக்க வேண்டுமா; சொன்னால் போதாதா? :))

KARTHIKRAMAS said...

இண்டிபெண்டன்ட் (சுயாதீனம்)படங்கள் விருது வழங்கும் விழாவை நானும் பார்த்தேன்.
சுயாதீனப்படங்கள் விழாவிலே கலந்து கொண்ட பெரும்பாலானோர் ஆஸ்காரிலும் பார்க்கமுடிந்தது.
ஆஸ்கார் பார்க்கிறோமே என்றெல்லாம் நீங்கள் வருத்தப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பார்க்காவிட்டால் பிரச்சினை என்ன என்று புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும்தானே.

ஆஸ்காரைப்பொறுத்தவரை எரிச்சலைக்கிளப்பியது, முழுதுமாய் நுகர்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
உதாரணமாய், ஆடைகள் பற்றிய வர்ணனை. திரைக்கலைக்கு இந்த விழாவைப்பொறுத்தவரையில்
இது தேவையில்லாத ஒன்று என்று விமரிசிக்க முடியும். அதை அளவுக்கு அதிகமாய், 3 4 மணினேரங்கள்
ஒளிபரப்புவது. இதை உயரத்தாங்கிப்பிடித்து பொது மக்களை சினிமாவிலிருந்து பிரிப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

வெகுஜன தளத்தை [ஆலியன் Vஸ் ப்ரேடேட்டர், ஒயிட் சிக்ஸ் சிறந்த படங்கள் என்று சொன்னவற்றை]ஆஸ்கார் விழாவிலே காட்டியது முக்கியமானதாகவே நினைக்கிறேன்.அது பற்றி யாரும் எதையும் செய்யப்போவதில்லை என்றாலுங்கூட.

க்ரிஸ் உராக் கின் சில விமர்சனங்கள் ஒ கே என்றுதான் நினைத்தேன்.
ஆனால் பலர் அபசகுணம் என்று கூட னினைத்திருக்க வாய்ப்புண்டு[ உதாரணமாய் ஜுட் லா பற்றிய விமர்சனம் போன்றது.அதற்கு ஷான் பென்(?) பதில் சொன்னது.]

புஷின் சர்வாதிகாரத்தை விமரிசத்தது[இத்தனை இல்லியன் செலவு, பணவீக்கம்,பின்னர் போர் என்றாபின்னும் மீண்டும் பதவிக்கு வருதல்] எதோ இந்த அளவுக்காவது சுதந்திரம் உள்ளதே என்றுதான் தோன்றுகிறது. தமிழ் நாட்டிலே இது கூட முடியாது என்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதை சரியாக உள்வாங்கிக்கொண்டேனா என்ற சந்தேகமும் இருந்தது.

அந்தப்பதிவு தமிழ் மணத்திலே தலை காட்டவில்லை , அதனாலே இங்கு இது.

KARTHIKRAMAS said...

இப்போது உங்கள் ஓஸ்கர்ட் வைல்டை முழுதும் வாசித்தப்பின் இது.

//இம்மகிழ்ச்சியின் நிழலிலே குற்றவுணர்வொன்று மிதித்து, //
இந்த மகிழ்ச்சி மிகவும் போலித்தனமானது. குறிப்பாக அமரிக்க வெகுஜனதளத்திலேயே
ஆஸ்காருக்கு மகிழ்பவர்கள் சொற்பம். அல்லது மகிழாதவர்கள் நிறைய.
இங்கு வேற்று அடையாளத்துடன் வாழும் நாம் மகிழ்ந்து கொள்ளுதல், ரசிப்பு என்பதைத் தாண்டும்போது
போலியைத்தவிர வேறு இருக்கமுடியாது.

// ஒஸ்கார் பெற்ற படங்களுஞ் சரி, அதன் இறுதித்தேர்வுக்கு வந்த படங்களுங் சரி, ஒஸ்காருக்கு முன்னும் பின்னுமான இரு மாத காலத்திலே, மிகவும் விளம்பரப்படுத்திக்கொண்டு, விற்பனையைச் செய்து தள்ளிவிடுகின்றன.//
அசரவைக்கிறது உங்கள் பார்வை;நோட்டம். :))

மில்லியன் டாலர் பேபி மேல் எனக்கும் ஒரு இரண்டாதர படத்துக்கு, கதைக்கு கொடுக்கப்பட்டது போல் தோன்றியது.
தவறாகவும் இருக்கலாம். அளவுக்கதிகமான/தேவைஇல்லாத சமூகப்பிரக்ஞை எனக்குள் செய்ல்படுவதாலேயும் இருக்கலாம்.

// க்ரிஸ்டியன் டியோரிடம் ஒப்படைக்கவேண்டும்.//
என்னையும் மிகவும் கவர்ந்த, அப்பட்டமான , போலியில்லாத, யதார்த்த பதில். நமது நடிகைகளும்,ரசிகர்களும்
ஞாபகம் வந்து குமட்டுகிறது.

//மெய்யாகவே ஏன் ஒஸ்கார் பார்க்கின்றேன் என்று எனக்குத் தெளிவில்லை. ஆக, யோசிக்கும்போதெல்லாம், எனக்குத் தோன்றுவது, உலகத்திலே பலரோடு ஒரே விடயத்தினைச் சேர்ந்து பார்க்கின்றேன் என்ற மூலஸ்தானத்திலே பூசை நடக்கும்போது, சேர்ந்து நின்று தீபவொளி காணும் மகிழ்ச்சி கண்ட சிறு வயதுக்கணத்துக்குரிய காரணமே;//

இதற்கு மட்டும் சொல்ல ஒன்றுண்டு.
தீபாவளியையோ பொங்கலை, முற்று புறகணித்து அந்த நாளை கழித்தால் வரும், ஆனந்த்பரவசமும், சமரசமின்மையும் உண்மையிலேயே சூப்பர்.
குற்றமாகவோ தற்பெருமையாகவோ சொல்லவில்லை. முழுமுதற் காரணத்தை கூறு போட்டு , காட்சி மதியா சிந்தையுடன் விசிறி எறியும்போது ஒரு போதை உண்டு நிச்சயம். :))

icarus prakash said...

டியர் சார், இந்தப் பதிவில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் மிகப் பெரிதாக, படிக்க இயலாவண்ணம் இருக்கின்றன. பின்னூட்டங்களில், யாரும் இதனை குறிப்பிடவில்லை என்பதால், மற்றவர்களுக்கு, இந்தப் பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், எனக்கு பிற வலைப்பதிவுகளை வாசிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை. ஸ்க்ரோல் பாரை இடப்பக்கம், வலப்பக்கம் நகர்த்தியபடி படித்ததிலும், தமிழ்மணத்தின் முதல் இரு வரிகளில் இருந்தும், இது ஒரு கவிதை என்று புரிந்தது. ஆகவே பிரச்சனை இல்லை. அடுத்த முறையாவது, எல்லாரீஸ்வரி பாட்டு, ஜெய்சங்கர் படம் என்று எதையாவது எழுதினால், சின்ன எழுத்துக்களில் போடவும். நன்றி.

-/பெயரிலி. said...

/இந்தப் பதிவில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் மிகப் பெரிதாக, படிக்க இயலாவண்ணம் இருக்கின்றன. பின்னூட்டங்களில், யாரும் இதனை குறிப்பிடவில்லை என்பதால், மற்றவர்களுக்கு, இந்தப் பிரச்சனை இல்லை என்றே நினைக்கிறேன். /

??
எனக்கு அப்படியேதும் தோன்றவில்லையே. எல்லோருக்கும் இதே சிக்கல் இருக்கின்றதா?

ஆனால், பதிவின் வார்ப்பிலே சில சித்துக்களை நேற்றைக்கும் இன்றைக்கும் செய்ய முயன்றேன்; அதன் விளைவாக, முன்பார்வையிலே எனக்கும் மிகப்பெரிய எழுத்துகள் தெரிந்தது உண்மையே. ஆனால், பதிவின் இறுதியிலே அப்படியேதும் தோன்றவில்லை.

KARTHIKRAMAS said...

இல்லையே, எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.
இன்று அடிக்கடி வந்து போனெனே. காலையில் கூட சரியாகத்தான் இருந்தது..

வசந்தன்(Vasanthan) said...

எனக்கும் சரியாகவே இருக்கிறது