Monday, March 07, 2005

சலனம் - 3

ஒஸ்கார் வைல்ட்

ஒவ்வொரு ஆண்டும் ஒஸ்கார் விருதினைத் தொலைக்காட்சியிலே நிகழ்நேரத்திலே (realtime = live + 5 min ;-)) பார்ப்பது, என்னைப் பொறுத்தமட்டிலே, விடலைப்பருவத்திலே நீலப்படங்களைப் பார்க்கையிலே அல்லது தற்போது, அமெரிக்காவிலே இருந்து கொண்டே அமெரிக்க வெளிவிவகாரக்கொள்கையை விமர்சிக்கையிலே இருக்கும் உளநிலையிற்றான் நிகழ்கின்றது; கட்டிலாவிதத்திலே கிளர்ச்சியூட்டுகின்றது - அதே நேரத்திலே, இம்மகிழ்ச்சியின் நிழலிலே குற்றவுணர்வொன்று மிதித்து, ஆளை உற்று நோக்கிக்கொண்டு தொடர்வதாகப் பிடரியிலே உறுத்துகின்றது.

ஒஸ்கார் விருது வழங்கு நிகழ்ச்சி, திரைப்படக்கலையின் திறமைக்காகவோ அல்லது திரைப்பட நுட்பத்தின் பரிமாணத்தை, பரிணாமத்தை மெச்சவோ அல்ல, ஆனால், ஹொலிவுட், தன்முதுகிலே தானே தட்டிக்கொள்ளும் பெருமைத்தனத்தினையும் ஆடம்பரத்தின் வீச்சை, ஒரு தேர்ந்த நெறியாள்கையின்கீழே நிகழ்நேரத்திலே ஓர் ஒன்றுகூடலின்மூலம் உலகம் பூராக நடித்துக்காட்டும் திறனைச் சுட்டவுமே நிகழ்கின்றதென்பதை உணர்ந்திருக்கின்றேன்; எல்லாவற்றுக்குமேலாக, தன் உற்பத்திகளுக்கு மிகச் சிறந்த அளவிலே அகிலம் பரந்து, வேறு விளம்பரதாரர் நெற்றி நாமத்திலே விளம்பரம் செய்யவும் பயன்படுத்திக்கொள்கின்றது. ஒஸ்கார் பெற்ற படங்களுஞ் சரி, அதன் இறுதித்தேர்வுக்கு வந்த படங்களுங் சரி, ஒஸ்காருக்கு முன்னும் பின்னுமான இரு மாத காலத்திலே, மிகவும் விளம்பரப்படுத்திக்கொண்டு, விற்பனையைச் செய்து தள்ளிவிடுகின்றன. உதாரணமாக, இத்தனை காலமுமில்லாத அளவிலே இப்போது, 'மில்லியன் டொலர் பேபி' ஒஸ்கார் விருதுகளைத் துணைக்கழைத்துக்கொண்டு, தொலைக்காட்சியிலே விளம்பரமாகின்றது. மேலாக, ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் தொலைக்காட்சியிலே வராத வண்டி, வளையல் விளம்பரங்களுக்கு அப்பாலும், ஒவ்வொரு கணத்தினையும் ஒவ்வொரு நடிக நடிகையின் உடலையும் ஏதோ ஓர் உற்பத்தி நிறுவனம் மணிநேரங்களுக்குக் குத்தகைக்கு வாங்கியிருப்பது தெளிவு; அந்த செங்கம்பளப்பூனைநடை இடையிலே நடிகநடிகைகளின் உடை கடை விரிக்கப்படுகின்றது; அடுத்த நாள், சுப்பர் போலின் மறுநாள் தொலைக்காட்சி விளம்பரங்களிலே சிறந்தது-அல்லாதது வகை பிரித்து வரிசைப்படுத்துவதுபோல, ஒஸ்காரின் மறுநாள், விருதுகள் யாருக்கு என்பதற்கீடாக, நடிகைகளின் உடை-குடை ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. இதுவரை நாள், இது நடிகைகளின் ஆரம்பரத்தினைச் சுட்டுகின்றதே என்று வெறுப்பேறியிருந்தேன். இந்த முறை, க்ரிஸ்டீன் இடன்ஸ்ட் கண்ணைத் திறந்தார்; அவரின் உடையைச் சிலாகித்து ஒஸ்காரின் பின்னால், அந்த உடை பற்றி விசாரித்த தொலைக்காட்சிப்பேட்டியாளருக்கு, அவர் சொன்னார்; "இந்த உடை என்னாவாகுமென்று எனக்குத் தெரியாது; ஒஸ்கார் முடிய நான் இதை க்ரிஸ்டியன் டியோரிடம் ஒப்படைக்கவேண்டும்."

ஒஸ்காருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சுயாதீனப் படங்களுக்கான விழா நிகழ்ந்தது. (சுயாதீனப்படங்கள் என்று சொன்னாலுங்கூட, எந்தவளவுக்குக் கட்டற்ற நிலை படைப்பிலே இருக்கமுடியுமென்பது கேள்வி. இது குறித்து முன்னரொரு முறை, Laura Flanders Show இலே ஒரு மணிநேர விவாதமே நடைபெற்றிருந்தது). அது குறித்தோ அல்லது பட விமர்சர்களின் விருதுகள் குறித்தோ பேரோட்ட ஊடகங்கள் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை (நான் மட்டும் வித்தியாசமில்லை என்பதையும் ஒத்துகொண்டுவிடுகின்றேன்; இந்த ஒத்துக்கொள்ளல்தான் அரிச்சந்திரனை நிழலாய்த் தொடர்ந்த சுக்கிரியன் என்பதான குற்றவுணர்வின் ஒரு கூறு ;-)). ஒஸ்கார் படங்களிலே அமெரிக்காவின் நல்ல படங்கள் எல்லாமே வருவதுமில்லையெனலாம். Side Ways (அதுகூட, பெரிதும் பிரபல்யமான நடிகர்களைக் கொண்டதல்லவெனிலும், சுயாதீனமான படமென்று சொல்லிவிடமுடியாது; Fox Searchlight வெளியீடுதான்; பேரோட்டத்திலே கலக்க முன்னாற்கூட, Miramax கூட சுயாதீனமானதென்று ஆகிவிடாது; வெயின்ஸ்ரைன் சகோதரர்கள் ஒஸ்காரை வெல்வதற்கான "ஆட்பலம்" கொண்டவர்கள்தான்). ஒஸ்கார் நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சி நடத்துநர் க்ரிஸ் உரொக், மஜீக் ஜோன்ஸன் அரங்கின் வெளியே செவ்வி கண்டவர்களிலே திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அல்பேர்ட் ப்ரூக் தவிர, மீதிப்பேரின் அபிப்பிராயங்கள் தேரப்பட்ட படங்களையே அறிந்திருக்கவில்லையென்று காட்டியது. ஆனாலும், உலகம் பூராக, தொலைக்காட்சி வசதியுள்ளவர்களிலே பலர் நேரடி ஒலிபரப்பையோ, குறைந்த பட்சம் அதன் முடிவுகளையோ தப்பவிட்டதில்லை. போதாக்குறைக்கு, இந்தியப்படங்கள் ஒஸ்காரின் வெளிநாட்டுப்படச்சிறப்புக்குக்கூடப் போகவில்லையே என்ற கவலை வேறு எங்களிலே பலருக்கு. இந்த ஆண்டு, அமிதாப் பச்சன், திடீரென ஞானோதயம் வந்து ஹொலிவுட் படங்கள் ப்லிம்பேர் விருதுக்கு வராதபோது, பாலிவுட் படங்கள் ஏன் ஒஸ்கார் விருதுக்கு ஆசைப்படவேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார். நல்ல கருத்து. இதைக் கேட்டாவது, கலைப்படங்களென்றாலே, 'இருளும் ஒளியும்; நத்தையும் நகர்வும்' என்று கிண்டல் செய்து புகழ் பெறும்கூட்டத்திலே ஒன்று இரண்டாவது, வரும் ஆண்டுக்காவது இந்தியப்படங்களுக்கு ஒஸ்கார் கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமலிருக்கட்டும்.

ஆனாலும், ஒஸ்காரினைப் பாராமல் என்னாலே இருக்கமுடியவில்லை; எதற்காகப் பார்க்கின்றேன் என்று குற்றவுணர்வு நிமிண்ட நிமிண்ட ஒவ்வோர் ஆண்டும் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்; பதில் தெளிவாகவில்லை; உள்ளூர, நான் பகிடி பண்ணும், வெறுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த ஆடம்பரத்தினை எண்ணி விழைகின்றேனா என்றால், நிச்சயமாக இல்லை என்று சொல்லமுடியும். இது நல்ல கலைஞன் நடத்தும் பொம்மலாட்டமென்று நிச்சயமாகத் தெரிந்தேயிருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் உவூடி அலன் போல, ஒஸ்கார் நடக்கும் அன்றைக்கு நியூ யோர்க் நகரிலே ஒரு உணவுவிடுதியிலே இசை வாசிப்பதுபோல (2002 தவிர; 2001 செப். 11 இனை நினைவுகூர வந்தாராம்), என்னாலே ஏன் எழுந்து வேறெங்கோ போகமுடியவில்லை; அல்லது குறைந்த பட்சம் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றவோ, அல்லது மூடி வைத்துவிட்டாவது, கூகி வா த்யாங்கோவின் குருதியின் இதழ்களை வாசிக்கமுடியவில்லை? நிச்சயமாக, க்ரிஸ் உரொக்கின் புஷ் குறித்த கிண்டலுக்காக அல்ல; அதற்கு வேண்டுமானால், எயார் அமெரிக்கா வானொலியிலே அல் ப்ராங்கைன், ஜெனீன் கார்பெலோவின் ஓயா உரைகளைக் கேட்டுவிட்டுப் போய்விடுவேன். அதற்காக அல்ல. ஆனாலொன்று; நிச்சயமாக, போன ஆண்டு மைக்கேல் மூரின் கட்டற்ற உரை உள அழுத்தத்துக்கு வடிகாலாக இருந்ததென்பது உண்மை; அப்படியான தருணத்துக்காக, 1973 இலே கோட் பாதருக்கான சிறந்த நடிகர் விருதைத் தான் எடுக்காமல், ஒரு செவ்விந்தியப்பெண்ணை அனுப்பி வைத்த மார்லன் பிராண்டோவின் தருணத்துக்காக, 1997 இலே ஜூலியாவுக்காக சிறந்த துணை நடிகை விருதைப் பெறும் போது வனேஸா இரெட்க்ரேவ் ஆற்றிய ஸியோனிய எதிர்ப்பு உரைக்காக, எட்கார் கூவரினாலே அமெரிக்கா உள்நுழைய மறுக்கப்பட்ட சார்லி சப்ளினுக்கு 1972 இலே கொடுக்கப்பட்ட ஆயுட்கால கௌரவ விருதிற்கு எழுந்து நின்று கைதட்டிய ஹொலிவுட் கூட்டத்தின் கணத்துக்காக, 1999 இலே எலியா காஸனுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலச்சேவைக்குரிய கௌரவ விருதுக்கு வெளியே நின்று எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கணத்துக்காக ஒஸ்கார் பார்க்கவிரும்புகின்றேன்; இந்த, நாடகப்படுத்தி இயக்காத தன்னாலாகு தருணங்கள் ஒஸ்கார் பார்க்கும்போது, குற்றவுணர்வு மறையும் தருணங்கள். ஆனால், இப்படியான தருணங்களுக்காக மட்டும் ஒஸ்காரினை நான் பார்ப்பதில்லை.

மெய்யாகவே ஏன் ஒஸ்கார் பார்க்கின்றேன் என்று எனக்குத் தெளிவில்லை. ஆக, யோசிக்கும்போதெல்லாம், எனக்குத் தோன்றுவது, உலகத்திலே பலரோடு ஒரே விடயத்தினைச் சேர்ந்து பார்க்கின்றேன் என்ற மூலஸ்தானத்திலே பூசை நடக்கும்போது, சேர்ந்து நின்று தீபவொளி காணும் மகிழ்ச்சி கண்ட சிறு வயதுக்கணத்துக்குரிய காரணமே; புத்தாண்டு பிறக்கும்போது, உலகம் பூராக ஒவ்வொரு நாடாகக் காட்டிக் காட்டி வாண வேடிக்கையைக் காட்டும்போது, காத்திருந்து பார்ப்பதுபோன்ற இந்தச் சந்தோஷமோ? சில வேளை அதுவாகக் கூட இருக்கலாம்; அல்லது, எந்தவொரு நிகழ்வையும் அது நடக்கும்போது, உடனேயே கண்டு கொள்கிறேன் என்ற விபரம் கொய்ந்து மூளைக்குள்ளே சொருகிக்கொள்ளும் சந்தோஷமோ? தெரியவில்லை.

எதுவோ சின்னதாக குற்ற உணர்வு துரத்தத் துரத்தத்தான் ஒஸ்கார் பார்க்கின்றேன்; ஆனாலும், பார்க்காமலிருந்தாலும், எதற்கென்று தெரியாமல், எதையோ இழந்தது போன்ற குற்றவுணர்வு. அதுக்கு, பார்க்கிற குற்றவுணர்வு எவ்வளவோ மேல் :-)

'05 மார்ச் 07, 19:11 கிநிநே.

No comments: