Tuesday, March 15, 2005

புனைவு - 21

கழியும் பழையது
நான் என்பது இன்மை ஆகும்

"எனது பார்வை முற்றிலும் தெளிவாக இல்லாதவரை.....
நான்கு மேதகு உண்மைகளைப் பொறுத்தமட்டில்,
மெய்யான விழிப்பினை நான் உணர்ந்து
கொண்டேன் என்று சொல்லமாட்டேன்." -கௌதமபுத்தர்.


I

பதினாறு அகவைச் சித்தார்த்தனின் ஓரப்பார்வைகள் யசோதராவின் விழித்திசையை விரிகோண வளைப்புகளில் வழிமடக்கி விரட்டின. இரு சிறு பொய்கைகளிற் துருதுருத்துச் சுற்றிச் சுழன்றோடின கரு மச்சங்கள் இரண்டு. சாக்கிய சுத்தோதனன் இதைச் சாக்கிட்டு மேலும் கோப்பை மதுவை ஊற்றி விழுங்கினான். மட்டற்ற மகிழ்ச்சி; வில் வளைத்து மலரம்படிக்கும் மாரனே இறுதியில் வென்றேன் என்று மெல்லச் சிரித்தான் என்று மட்டற்ற மகிழ்ச்சி.அந்தக்கிழட்டுக் குறிசொல்பவனின் எச்சரிக்கை காத்தது. இனி கௌதம சித்தார்த்தன் எட்டுத்திசைகளும் கட்டியடக்கித் தன் காலடிக்குள் வைத்திருக்கப் பட்டம் கட்டவேண்டியதுதான் பாக்கி என்றான் சுத்தோதனன் மனக்கட்டியக்காரன்.

சித்தார்த்தன் கண்களிலோ, அவன் நாற்பதாயிரம் ஆடற்பெண்களினையும் தன் பாதம் படும் திசைக்குத் தூசு தட்ட வைத்திருக்கும் அழகு யசோதரா மட்டுமே. அவனது உலகத்தில், யானைகள் மதம் கொண்டு போரிடவில்லை; வெள்ளி ஆபரணம் அணிந்து அழகு பார்க்கப்பட்டன. யுத்தபேரிகைகள் சப்தித்து, மரண மேளங்கள் முழங்கி அறியப்படவில்லை; யாழ்களின் நாதத்தில் மேல்மாடத்துப்பார்வைகளில் மலைச்சாரல்களில் தண்மதி மட்டும் மோனத்தில் மோகமாய், மோகனமாய்ப் புன்னகித்தான். இறந்த குழவியை எழுப்பித் தரக்கேட்டு எந்த ஏழை ஏழைப்பெண்ணும் இறைஞ்சி நிற்கவில்லை. மேனிக்கும் ஆடைக்கும் பேதம் புரிபட்டாவண்ணம் குழப்பம் தரும் பட்டுப்பாவையர் மட்டும் அவன் குரல் கேட்டமாத்திரத்தில் நர்த்தகித்து நின்றார்கள். குட்டநோயில் எவரும் அங்கங்கள் அழுகித் தொங்க, துண்டாக, தோல் தளர்ந்து கண்முன்னே கிடக்கவில்லை. இளமனம் விம்மிப்புடைக்க, மலர்ந்த, மதர்த்த அங்கத்து மங்கையர் மட்டும் அன்னமாய், மயிலாய், கிளியாய், குயிலாய் அங்குமிங்கும் அசைந்திருந்தார்கள் ...... இப்போது இவையெல்லாமே அர்த்தமேயற்ற சின்னச் சந்தோஷங்கள் என்று ஆவியாய்ப் போம் வண்ணம்... மனமெங்கும் சுற்றி,,, யசோதரா ... சித்தார்த்தன் மனப்பொய்கையில் காதலும் காமமும் கலந்தொரு பொன்மீனாய்ப் பிரகாசித்து, மகிழ்ச்சியிலே மேலெழுந்து மீண்டும் மீண்டும் துள்ளித் துள்ளி விழுந்தது இன்ப எண்ணச்சுழியுள் .. . . . . .


"நானே பாக்கியசாலி; எனக்காய் உலகத்தே எத்துணை இன்பம் படைந்து வைத்தாய், மலரன்பு மாரா. . . . ."

##########

குஞ்சுத்தங்கமீனுக்கு மகிழ்ச்சி; மகிழ்ச்சியென்றால், கண்ணாடித்தொட்டி மேலாயும் கரைபுரண்டோடி, அதை அதற்குள் விட்டவனின் வீடெல்லாம் நிரப்பும் தடுப்பற்ற ஊழிப்பெருவெள்ளம். தனக்கென அழகுத் தொட்டிவீடு தந்தவன் கைகளை முத்தமிடவும் தோன்றியது, சுட்டி மீனுக்கு. அதற்கென ஒரு வீடு; சுத்தமாய் நீர்; சுற்றியோடச் சுழன்றோடும் தாவரங்கள். விளையாட வண்ணங்கள் வடிவங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் வேறுபடா இன்னும் பல மச்சத்தோழர்கள். ஒழிந்து கொள்ள பொம்மைச் சுழியோடி, குட்டிக்கற்கள், கவிழ்ந்த சிப்பி. "எத்தனை கோடி இன்பம் வைத்தனை நீ, என்னை இத்தகு நீர்ப்பிறப்பென்று படைத்தவனே! இத்தகு நீர்ப்பரப்பினை நீந்தக் கொடுத்தவனே!! " காற்றை எடுத்துக் கொண்டு அடிச்சிப்பிக்குள் விட்ட குமிழ்கள், பெரிதாகி மேலே வந்து மீண்டும் காற்றில் உடைந்து போனது காணவில்லை, சின்னத்தங்கமீன். தன் குதூகலத்தின் பிடியில் மேலும் காற்றைக் குடித்து குமிழை விட்டுக் கொண்டிருந்தது.

##########

மயானத்துச் சுவரிற் துள்ளியிருந்தவன், இடிந்த நூற்றாண்டுக்காலச்சமாதி வெடிப்பிருந்தெல்லாம் மகிழ்ச்சி பாளம் பாளமாக வழிந்தோடக் கண்டான். கரித்துண்டொன்றெடுத்து அத்தனை மயானமதில், மரம், சின்னம் எல்லாம், "என்னவள் பெயர் இது; அவளை நான் என் இன்னுயிர் மேலாய் இந்தளவு நேசிக்கிறேன்" என்று விடலைத்திரைப்படநாயகர்கள்போல எழுத ஆவல். கூனோ, குருடோ, செவிடோ, அழகோ, அதுவுமில்லையோ ஒருத்தி தன்னைக் காதலிக்கிறாள் என்ற எண்ணமே எத்துணை மாற்றங்களை உன்னதங்களை ஒருவனுள் ஆக்குகின்றது. தினசரிச்சவரம், உடைகளிற் தேர்ந்தெடுப்பு, பின்காற்சட்டைப்பையுள் சிறு கண்ணாடியும் சீப்பும், சந்திக்கொருமுறை வண்டி நிறுத்தித் தலைவாருகை, 'பார் என் ஒவ்வொரு அசைவிலும் அலட்சியம் நிறைந்த காளைமாட்டுத்தனம்' என்பது போலக் காட்டிக் கொள்வதில் மிக அவதானம். . . . . . .. எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்க்கையில் முன்னேற ஒரு துடிப்பும் ஒழுங்கும் அர்த்தப்படுதலும் அதனால் நெஞ்ச நிறைவடைதலும். இப்போதெல்லாம் மறுபிறப்புக்கள் மனிதனுக்கு உண்டு என்று பட்டது அடிக்கடி நெஞ்சுக்குள், அவள் நினைவு முகிழ்க்கும்போதெல்லாம். சொல்லப்போனால், இந்த வாழ்க்கை எப்போதும் அற்றுப்போகலாம் என்ற வகையிலும் அவளைப் பிரிவது என்பதை ஒத்துக்கொள்ளமுடியாததால், தொடர்ந்தும் பிறப்புக்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதை நம்புவது காதலுக்குச் சிரஞ்சீவித்தனத்தைத் தந்து, தோன்றும் பயம் நிறை பிரிவுத்துயரை நீக்கியது. இன்னும்மேலாக, ஆயிரமாயிரம்வருடங்களுக்கு முற்பட்ட பிறப்பொன்றில், ஏதோ காரணங்களால், தான் விட்டுப் பிரிந்தவளோ, அல்லது தன்னை விட்டு அகன்றவளோ மீண்டும் கைக்கெட்டியிருக்கிறாள் இனியேனும் விட்டுப்பிரியாதே எந்தப்பிறப்புக்கும் ஏது காரணம் கொண்டும் என்பதுபோற் சித்தப்பிரமை.

>>>>>>>>><<<<<<<<<<<<<
"ஒரு கனவைப் போல.
எனக்கு மகிழ்ச்சி தருகின்ற எதுவும்
ஒரு ஞாபகப்படிவாய் உருமாறும்;
கடந்தவை மீள வரா" - சாந்திதேவர்


II

பள்ளியறை வாயிற் கதவினின்று திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான் சித்தார்த்தன். நிலவொளியிற் சப்ரமஞ்சத்தில் மார்புத்துகில் கலையத் தூங்கிக் கிடந்தாள் யசோதரா. பதின்மூன்று வருடத்து இன்பத்துய்ப்பு; மண வாழ்க்கை ஆரம்பத்திற்கு இன்று சற்றே உடற்கட்டுக் குலைந்து போயிருந்தாலும் சித்தார்த்தன் தேவைகட்காய் மட்டுமே இன்னும் தன் இளமையைக் குலையாமற் காக்கப் போராடிக் கிடந்தாள் அந்நங்கை என்று அறியாதான் அல்ல சாக்கிய இளவரசன். அவனுக்கான அவள் சேவையிலும் காதலிலுங்கூடச் சிறுமருவுக்கும் களங்கம் இல்லை. ஆயினும், விரல் அழுகித் தொங்க, வீதி கடக்க முனைந்தும் முடியாக் குட்டரோகிக்காய்த் தேர்ச்சக்கரங்கள் சுற்றமறுத்ததே. . . . . பல்லக்கின் மூடுதிரைக்கூடாக மூப்புக் கைநீட்டி உண்டிக்குப் பொருள் யாசித்ததே . . . . யாக்கை நிலையாதென உயிரற்ற தெருப்பிணம் சொல்லாமற் சொல்லிப் போனதே . . . .

..இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இயற்கையுடன் நீ தாக்குப்பிடிப்பாய் என் இளவழகி யசோதரா? மூப்பு உன்னையும் குருதி வழியவழியப் பற்றித் தின்னும்; என்னையும் அதுபோலவே. . . இறுதியில் முன்னோ பின்னோ மாரன் சக்தி இற்றுப்போய் ஒரு காலம் காலன் கைப் பற்றிப்போவான் உன்னை, என்னை. என் இடத்தே அமர்வான் இராகுலன்; உன் பஞ்சணையிற் துயில்வாள் இன்னொரு இளநங்கை இராகுலனுக்காய்த் தன் எழில் வற்றிப் போகாமல் காலத்துடன் தோற்பேன் என்றறிந்தும் சமர் நிகழ்த்தி. . . . வீதியிற் கண்ட விதிச்சக்கரமோ, மேலும் தன் ஒழுக்கிலேயே மெதுவாய்க் கறங்கும்..

...மீண்டும் திரும்பாமல் ஒரு திருடனைப் போல் கதவை மூடிச் சென்று தேர்ச்சாரதியிடம் கபாடக்கதவு திறந்து காடு நோக்கித் தேரை ஓட்ட ஏவல் படைத்தான். நாட்டெல்லையிற் தேர்ச்சாரதி அங்கி தான் புனைந்து, செயலளவில் சித்தார்த்தன் உலகுக்குச் செத்து அடவிக்குட் துறவியாய் அறியாத ஒன்றைத் தேடி அலையத் தொடங்கினான்.

##########

தங்கமீன் பருத்திருந்தது. ஆயினும், தன்னைத் தவிர வேறொரு மீனும் தனியே நீரைச் சுற்றி தெரியாத எதையோ தேடி ஓடுவது போலவோ அல்லது அறியாத ஏதோ துரத்த ஓடுவது போலவோ அதற்குப் படவில்லை. நட்புக்காய் மிகுதி மச்சங்கள் இப்போதும் தன்னுடன் தாவரம் சுற்றினாலும் கற்களுள்ளே ஒளிந்திருந்து விளையாடினாலும் எல்லாமே ஒரு வெளி ஒப்புக்கு என்று பட்டது. அவற்றின் கவனம் தத்தமது துணைகளிலும் முட்டைகளிலும் குஞ்சுகளின் உணவுக்காய் ஒன்றோடொன்று போரிடுவதற்காகவுமே என்று தென்பட்டது. தங்கமீன்களுக்கு மட்டுமே தனிமை அதிகமாக இருக்குமென்பதாய் ஒரு சுட்டிக்காட்டும் உணர்வு. மிகுதி வெள்ளி, பூச்சுவண்ண மீன்களிலே பொறாமை விரிந்தது. தங்கமீனுக்கு நீருள் வெறுமை பூத்தது; நீர் தனிமைத்துயர் கலந்து கரைந்து நிரம்பற்கரைசலாய் மூச்சைத் திணறப் பண்ணியது.

நேரத்துக்கு உணவும் நீந்த நீரும் மட்டுமே வாழ்க்கையில்லை என்று பட்டது. அடிக்கடி நீர் மேலோரம் எழுந்து வந்து வெளித்துள்ளி வெறுமையகற்ற ஏதும் வழி காணமுயன்றது. உணவு தந்தவன் மீண்டும் நீருள்ளே தூக்கி விட்டான், இன்னும் திணறு... நான் இரசித்திருப்பேன் என்பதுபோல. தாவரத்தினைச் சுற்றிச் சுற்றியே இருத்தல் அலுத்துப்போய், மற்றைய குடும்பங்கள் மகிழ்ச்சியையும் கெடுக்காவண்ணம் தொட்டி அடிப்பகுதிப் பொய்யசைவு பொம்மைச் சுழியோடியோடு தனித்து விளையாடக் கற்றுக்கொண்டது. அதன் உலகம் வெளிச்சுருங்கி, உள் விரிந்தது.

##########

.லையுணவு, கார்ச்சாரத்தியம், கணினிவேலை, மதியவுணவு, கணினிவேலை, கார்ச்சாரத்தியம், நளபாகம், இரவுணவு, தொலைக்காட்சி, தொலைபேசி, தூக்கம், கா. .

. . >>>>>>>>>>>> கடந்த நான்காண்டு சுழல்வே கார்ச்சக்கரம்போல. . . . . நிமிடநேரங்கள் வாழ்ந்திருக்கும் நோய்க்கிருமிகள், நாட்காலம் உயிர்தரிக்கும் நுளம்புகள் - இவை வாழ்க்கைகள் எத்துணை மேற்பட்டவை என்றுபட்டது நெஞ்சுக்கு. வாழ்தலுக்காய்த் தொழிலா, தொழில்புரிதட்காய் வாழ்க்கையா? தொழிலைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கிருந்தாலும் தின்னத்-தூங்க தேவைப்பட்டததுதானே. ஆனால், முன்னர் மறுத்தவர்கள் அந்நாட்டிலே இந்நாட்டுத்தூதரகத்தினர் என்றால், இன்றைக்குச் பெற்றோர் சொந்தக்கடமைகள் சுற்றிப்போட அவள். கடமைகள் . . .. . எவர்க்குத்தான் இல்லை? இதுதான் உனக்காக என் கடமைகளிற் பிறழ்ந்ததுபோல, நீயும் பிறழக் கற்றிருக்க மறுப்பதென்ன என்று எதிர்ப்பார்க்கும் நீதியற்ற ஏமாற்ற மனப்பாங்கோ??? புரியவில்லை. வலுப்படுத்தி அழைத்தால், வராது போகாள். ஆனால், வந்தும் கடமை பிறழ்ந்ததற்காய் தன்னுள் வருத்துண்டு, அதனால், தன்னவனுள்ளும் குண்டூசி விதை முளைக்கக் கற்பித்துக் கிடந்தால் . . . . ஒரு வீடு . . . நூல்களிற் சொல்லப்பட்ட நரகங்களில் இரண்டு. யாருடையதோ வேடிக்கை மீன்பிடித்தல்களுக்குத் தூண்டிற் புழுவாய்த் தாம் நெளியச் சபிக்கப்பட்ட இரு மானுடர்கள். பொம்மைக்கணினிப்பொய்யைத் துரத்திச் சாரளத்தினைத் திறந்து தெருவுக்கு அடுத்த கரை மயானத்தைப் பார்த்திருக்கத் தொடங்கினான் . . .. இந்நாட்டு மயானங்கள் மிகு நேர்த்தி . . . . உணர்வுகள் குமிழியிட்டுப் பொங்கிவர சமாதிகளில் வெடிப்புகள் சிதறல்கள் இருப்பதில்லை. . .. இறுகிப் பாறைக் கற்களாகவே அற்றவர் உலகம் . . . சாகாத சவங்கள் சிலதின் மனங்கள் போல...

>>>>>>>><<<<<<<<<<
"பிறவாத வெறுமையானது, இருப்பினதும்
இருப்பின்மையினதும் அதீதங்களைக் கடந்ததாகும்.
ஆதலினால், அது, தானே மையமாகவும்
மையப்பாதையாகவும் இருக்கின்றது. வெறுமையானது,
நடுநிலைமனிதன், நகரும் தடமாகும்" - ஷொங்கப்பா


III

"நகர எல்லைப்புறத்தே வந்திருக்கிறான் சித்தார்த்தன்" - தொனி அகட்டிச் சொன்னவன் அவனைப் பெற்றவன், சுத்தோதனன்; "அல்ல, இளவரசி; இவர் வேறொருவர், புத்தநிலை பெற்ற மகான் என்று முகத்தில் ஒட்டிக்கிடக்கிறது", சொன்னாள், குரல் தணித்தொரு சேடிப்பெண். யசோதராவின் குழப்பமனம், "எவராயினும் என்ன? என் இளவரசராகவும் இருக்கக்கூடும்; இல்லாவிட்டாலும் மகானையாவது கண்டு வருவேன்" என்று இராகுலனையும் நகர் எல்லைக்கு இழுத்துக் கொண்டோட வைத்திருந்தது.


a.
தன் முன்னே தலை தாழ்த்தி நிற்கின்ற பெண்ணை நோக்கி யாக்கை நிலையாமை பாற்றி எடுத்துச் சொன்னான் புத்தன். மீதிப்பேர்கள் காலத்தின் கோரப்பல் கடிபட்டு கடவாயிற் குருதி வடிந்தோடும் இந்த விசித்திரத்தைக் கண்டிருந்தனர்.

முடிவில் யசோதரா, "பிட்சாபாத்திரம் ஏந்திப் பிக்குணியாய்ப் போக விழைவு, ஐயனே" என்றாள். இராகுலனும், "தந்தை வழி, தாய்வழி என்பதுவே எந்தன் வழியும்" என்று சொன்னான். புத்தன் அதற்குச் சொல்வான், "தந்தை வழி தாய்வழி அல்ல; இது எவரிலும் சார்ந்தெழாத உனக்கான உந்தன் சொந்தத் தனி வழி."

O~O~O~O~O

b.
யசோதராவின் கண்களிற் போதிசத்துவன் தெரியவில்லை, வெளிக்கு இளைத்திருந்து சீவர ஆடையில் பிட்சாபாத்திரம் ஏந்தி அவள் சித்தார்த்தனே கண்ணிற்பட்டான். "சித்தார்த்த, என் இளவரச, என்ன குறை என்னிற் கண்டு இந்நிலைக்கு சென்றிருப்பாய்? என்னிடம் சொல்லாமலே நடுவிரவில் விலகிப் போக . . . உன்னை நம்பித் தொடர்ந்து வந்து உனக்கென மட்டும் வாழ்ந்தவளை, வாழ்பவளை, நிர்க்கதியாய் இடைவிட்டு உந்தன் உய்வைத் தேடித் தனியே கானகம் போய் நீ கண்டு கொண்டதுதான் உண்மையென்று ஊர் சொன்னாலும், அது எந்தவகையில் நேர்மைத்தனம் நிறைந்த சொல்; நீயே சொல் . . " - அவள் வெளிப்படையாயக் கேட்டுத் தன் சித்தார்த்தனை அவமதிக்க விரும்பவில்லை. சீதையுடன் இராமன் வாழ்ந்த காலம் இலக்குமணனுடன் ஊர்மிளை வாழ்ந்த காலத்திலும் மேல். ஆனால், உறங்காவிலிக்காய்த் தான் உறங்கிக் கிடந்த பெருமையெல்லாம்கூட அவனுக்கே போகவிட்டிருப்பதில் பெருமை கண்டாள். யசோதரா தன் சித்தார்த்தனை, மற்றோர்முன், அவன் புத்திரன் முன் தன் வருடகாலத்து வினாக்களினால், களங்கப்படுத்த விரும்பாள்; அவன் புத்தனானதில் பெரும் பூரிப்படைந்தாள். "சித்தார்த்த, காமத்தீயடங்கிப் காலம் பல; ஆயினும், உன் மேலெனக்குக் காதற்தீ அணையாது." - தங்கமீன், அவள் நெஞ்சுப்பொய்கைக்குட் இறுதி முறையாய் எகிறித் துள்ளியது- "தினம் உன்னைக் காணும் திருப்திக்காய் என்னையும் இணைத்துக் கொள்வேன் உன் சங்கத்தில்" - இதையும் வெளிச் சொல்லாள், சமநிலை பிறழ்ந்த உலகுக்காய்த் தண்டிக்கப்பட்ட பாவை. சித்தார்த்தன் உணர்ந்திருக்கக்கூடும். பிற்காலத்தில், குத்தனின் வீட்டு நஞ்சேறு காளான் உண்டு மரித்தபோதாவதெனிலும், அவனுக்குப் பட்டிருக்கக்கூடும், யசோதரா தன்னை விடத் தெளிவு பெற்ற போதிசத்துவ அவதாரம் என்பது ஏட்டில் எவராலும் எழுத விழையப்படா வரலாறு என்பதை. வெளிப்பார்வைக்கு மாலையில் முத்துக்கள் முன்னதுபோலவே கோர்க்கப்பட்டு இருந்தன; ஆனால், உள்ளே சேர்த்திருந்த இழை மட்டும் வேறார், புதிதாய்... . . .


##########

இத்துணை காலம் தனியே கிடந்ததேயென்று தொட்டிக்குள் தங்கமீனுக்குத் துணையாக ஒரு பெண் பொன்மீன் தேடிக் கொணர்ந்துவிட்டனன் அதன் வளர்ப்பாளன்.

a.
துள்ளிக் குதித்தோடிய பெண்மீனைக் கண்ட மாத்திரத்தே, உள்விரிந்த உலகம் சுருங்கி வெளியே குளிர்நீருள்ளும் நெருப்பேறியது தங்கமீனுக்கு. அதற்கெனவும் ஓர் தனி உலகம் விரிந்தது. நாளை அவ்வுலகில் நண்ப மச்சங்களுக்காய்ப் போக்கமுடியாது பொழுதுகள் பொறுப்புக்கள் நிறைந்து வழியலாம்; ஆயினும் என்ன?? சுமைகளும் இரண்டு வகைப்படலாம் . . .. இன்பச்சுமை, துன்பச்சுமை. வட்டத்துள் கறுப்புவளைபாதியுள் வெளுப்புச் சிறுவட்டம், வெளுப்புவளைபாதியுள் கறுப்புச் சிறுவட்டம் என்று யிங்-யாங் கற்காமலே புரிந்து கொண்டது மீன். கற்றும் செயற்படுத்தாததிலும் கற்காமலே செயற்பட்டிருத்தல் சிறப்பு.

O~O~O~O~O

b.
துள்ளிக்குதித்தோடிய பெண்மீன், தன்னைக் கண்டமாத்திரத்தே கீழிருந்த தங்கமீன் மேலோடி வராத காரணத்தைத் தான் சுழியோடிக் கீழ்ச்சென்று கண்டு கொண்டது. தங்கமீன் மல்லாக்காய் மிதக்க அதிககாலம் இல்லை என்பது போல பக்கவாட்டிற் சரிந்து அசைந்திருந்தது.

தனியாகவே இருந்திருக்கலாம்; நம்பி வந்த துணையும் இறந்திருக்கக்காணல் மிகக் கொடுந்துயர். இனி, பெண்மீன் தனியே பொம்மைச் சுழியோடியைத் தான் சுற்றி வரலாம். ஆனால், அதற்குக் கூடவே சுமையாய், தன்னைக் காலம் தாழ்த்தி இங்கு அனுப்பிய கொடுமைக்கு எவரில் ஆத்திரம் கொள்வது என்று புரியாத ஓர் இலக்கற்ற குருட்டுவேதனை அதன் இறப்பு வரைக்கும் வாலுடனேயே மாயக் குஞ்சம் கட்டித் தொடர்ந்திருக்கக்கூடும்.

அதன் வளர்ப்பாளனின் விருந்தாளி வெளிப்பார்வையாளனுக்கு, தங்கமீன் நீர்த்தொட்டிக்குள் அன்றைக்குப் போல இன்றைக்கும் மாறுதலின்றி நீந்திக் கொண்டுதான் இருந்தது. வளர்ப்போனுக்குத் தெரியும், முன்னைக்கு நிலை இன்றைக்கு வேறென்று; ஆனால், பொம்மைக்குத் தனியே காவல் நிற்கச் சபிக்கப்பட்ட மீனுக்கு மட்டும் புரியக்கூடும், அதன் துயர்களும் கோபங்களும், அதற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் போலவே, அதிகமென்றாலும் அவைபோற் திட்டமிடப்பட்டவை அல்லவென்று.


##########

சுங்கப்பரிசோதனை முடிந்து பைகளை வண்டியிற் தள்ளிக் கொண்டு வந்தவளைக் கண்ட மாத்திரத்தில்,

a.
மனது எட்டு வருடங்களுக்கு முன்னே மயானச்சுவரிற் குதித்ததுபோலவே துள்ளியது. இடைவந்த காலத்துயர்களும் கோபங்களும் வேதனைகளும் கணப்பொழுதில் அற்றுக் கலைந்தன விமானநிலைய மேகக்கூட்டங்களுடன். வற்புறுத்திப் பற்றித்தெடுத்த பைகளைத் தான் சுமந்து, ஊர்தியில் வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கைக்கு மறுபக்கத்துக் கதவைத் திறந்து இருக்கசொன்னான்.

வண்டி நகர ஒன்னொரு உலகம் முளைத்தெழுந்தது. காதல் என்பது வயதில் இல்லை; வயப்படுகிறவர்களில் என்று ஒற்றைப்பொறி இரட்டை மூளைகளில் ஒற்றைக்கணத்திற்குப் பட்டுத் தெறித்தது, முகங்களின் புன்னகைபோல.

தொய்ந்த இழை முறுக்கேறிப் பலம் பெற்றது.

O~O~O~O~O

b.
இரசாயனமாற்றம் எட்டு வருடங்களுக்கு முன்னைப்போலவே ஏற்படவேண்டும், ஏற்படும் என்று அவனும் எண்ணியிருக்கவில்லை; அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும், அவளைப் பார்க்க இவனுக்கும் இவனைப் பார்க்க அவளுக்கும் பரிதாபமாக இருந்தது. சில பைகளைக் கைகளில் வாங்கிக் கொண்டான். ஊர்தியில் அவற்றை வைத்துவிட்டு, பின்புறக்கதவைத் திறந்து அமரச் சொல்லி வாகனத்தை அவன் ஓட்ட, பௌதீக அளவில் நெருங்கிய நிலையிலும், இரண்டு உலகங்கள் இடைவெட்டாமலே தனித்து நகர்ந்தன.

காதல் மாறவில்லை; ஆனால், இனி வெளியே உணர்வு பீறிடமுடியா சமாதிக்கல்லாய் உருமாறிப் போயிருந்தது காலச்சாட்டையின் சொடுக்குதலால் விறைத்துப்போய். இருவரும் ஒட்ட எதிர்பார்த்தும்கூட, தொய்ந்த இழை, கடைசித் தொட்டிருத்தலும் ஏனோ அற, முற்றிலுமாய் உயிரற்றுத் தொங்கியது.


>>>>>>>><<<<<<<<<<
"எந்த நிபந்தனைகளும் நிரந்திரமானவையல்ல;
எந்த நிபந்தனைகளும் நம்பகரமானவையல்ல;
தான் என்பது இன்மை ஆகும்" - கௌதமபுத்தர்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

'99, பெப்ரவரி 4, வியாழன் 17:48 மநிநே.

2 comments:

Thangamani said...

நல்ல புனைவு ரமணி!
யசோதராவும் துறவு பூண்டாளா என்ன? நான் இராகுலன் மட்டும்தானென நினைத்தேன்.

-/பெயரிலி. said...

தங்கமணி.
யசோதரா புத்தரின் சங்கத்திலே இரண்டாவது பிக்குணி எனக் கருதப்படுகிறாள் என்று வாசித்தேன்.

|| The Princess Yasodhara was anxious to renounce the world from the time she knew about the Great Renunciation of the Prince. To avoid any flight from the palace, King Suddhodana took steps to intensify security measures. The Princess, while grieving the loss of her husband and a father to their son, gradually became reconciled to His departure. Hearing that her husband had become an ascetic and to honor his austerities, she determined to live the simple life of a celibate renunciate within the palace walls. When the Buddha had greeted all His relatives and friends at His homecoming, He learned that Yasodhara refused to come into His presence. Knowing of her great sorrow, He requested His two chief disciples to accompany Him to her apartments. He told the monks to permit her grief to run its course during the time of reunion. She awaited Him, dressed in a yellow robe, with shorn hair. Her abundance of affection overflowed and she held Him by the feet and wept bitterly. Regaining her composure, the Buddha spoke gently to her, expressing His deep esteem and appreciation of her as His ever-faithful wife, her unfailing devotion to Him, and her great assistance in helping Him win Enlightenment. Buddha established an order of female ascetics. After the death of King Suddhodana, when the Buddha's foster-mother Maha Pajapati Gotami became a Bhikkhuni, Yasodhara also entered the Order and later attained Arahantship (Enlightenment). It may be mentioned that Princess Yasodhara was of the same age as the Buddha. She predeceased the Buddha. Maha Pajapati and Yasodhara were the first and second of the Buddhist Nuns. ||