Monday, February 28, 2005

பின்னம் - 3

அத்தாவசியமான ஆராய்ச்சி - 2

நாட்டிலே அறிவை வளர்ப்பதற்கு என்னாலான பங்கு.
ஒப்பீட்டியல் (ஆரம்பப்பா(ப)டங்கள்)

கறுப்பி, அத்தியாவசியமான ஆராய்ச்சியைப் பெண்களிலும் செய்யவேண்டுமென்று மிகவும் ஆவலாக விரும்பியதால், உடனடிக்கு ஒரு சோடி.

Virginia Madsen - Bitty Schram


படங்கள் இணையத்திலே பெற்றுச் உருச்சிறிதாக்கப்பட்டவை


Sunday, February 27, 2005

புனைவு - 20

கழியும் பழையது
இன்றிரவுவரை எழுத எண்ணாத எழுத்துக்குப்பை

குடையாத ஓடமாய் தண்டுகள் வலித்தது எறும்பு. பாதி உடம்பு அமிழ்ந்து மீதி விளிம்பால் வெளியே தெரிய, ஒரு திசையில் என்று இல்லாமல், ஒரு பாதி கோளநீர்த்துளியில் தன் வயிற்றை மையமாக்கிச் சுழன்றது. அதன் சுழற்சிக்கு, அதற்கு குறித்த திசையில் வெளிப்படுதற்குத் தேவையான ஒருங்கிய சிந்தனை இல்லாதது காரணமா, இல்லை, தன் வெப்பநிலையை இழந்து கொண்டிருக்கும் தேனீர்க் கோப்பையிலிருந்து சூடாகிக் கொட்டிய நீரின் மேற்பரப்பிழுவிசையா காரணம் என்று தேவையில்லாமல் எண்ணிக் கொண்டிருக்க மூளைக்கு ஓய்வாக இருந்தது. உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்ததா இல்லையா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், வழக்கத்தில் யாரும் திட்டவட்டமாய் எனது முடிவு இதுவாக அல்லது அதுவாக இருப்பதற்கு என்னென்ன ஆதார காரணங்கள் என்று கேட்காத விடயங்களில் எனக்கு ஒரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் பிறப்பது உண்டென்று அறிவேன்.

எறும்பு நிலைக்குத்துப்பார்வையிற் பார்க்கும்போது, இப்போதுதான் அரிச்சுவடி படிக்கத் தொடங்கிய சின்னக்குழந்தை மயிர் சிரைந்து பிசிறிய தூரிகையினால், ஒரு வட்டத்துக்குள் போட்ட சிவப்பு எட்டு ஒன்று; அதன் அசைவிற்குப் புதிதாக என்ன உவமை சொல்லலாம் என்று யோசிக்க, தலைக்குள் காலையிலிருந்து அமுக்கியிருந்த வேலைப்பளுவும் மேலதிகாரியிடம் வாங்கிய ஏச்சும் கொஞ்சம் தங்கள் கையைக்காலை நீட்டித் தமது உடல் சரித்துக் குட்டித்தூக்க வயப்பட்டிருக்க வேண்டும்... ஓர் இலேசான உணர்வு... முதல் மிடறு தேநீரினை உறுஞ்சமுன்னர், இந்த உவமேய நிர்வாணத்துக்கு, எல்லோருக்கும் புரிகிறதோ இல்லையோ, புதிதென்று தெரிகின்ற மாதிரிக்கு ஓர் உவமைச்சட்டை மாட்ட வேண்டும் என்று பட்டது; சீனியும் பாலும் தேயிலையும் என் நாக்கின் சுவைநரம்புகளின் அன்றைய திமிர்த்தனத்துக்கேற்ற விகிதத்தில் சுடுநீரோடு கலத்தலுக்கும் என் மேலதிகாரியின் மனக்கோலங்களுக்கும் ஏதேனும் வளைகோட்டாலேனும் வளைத்துப் போடக்கூடிய கணிதத்தொடர்பு இருக்குமா என்று இன்றும் யோசித்தால், எறும்பு மறந்து போகும்... அர்ச்சுனனுக்குக் கிளி மட்டுமே படும், கிளை மறைந்து கிடக்கும். சுவையற்ற தேநீரின் முதல் மிடறு, அடுத்தடுத்த மிடறுகளைவிட எரிச்சல் மிக்கவை என அறிவேன். உடலிலோ உள்ளத்திலோ எரிச்சல்களும் நமைச்சல்களும் தோன்றக்கூடிய உவமைகளின் உவமேயங்களுக்கான பொருத்தல்களில் இடைவெளிகளை அதிகரிக்கக்கூடியவை. கிட்டத்தட்ட, எட்டு வயதுப் பையனுக்கு வாங்கிய முழங்காலுக்குக் கீழே தொங்கும், அல்லது, தொடை பிரிந்து விதை, குறி தள்ளிக்காட்டும் அரைக்காற்சட்டைபோல. எறும்பின் அசைவு, குழந்தையின் எழுத்தைக் கற்றுக்குட்டி வலைப்புலமமைப்பாளன் ஒருவன், நேரப்பரிமாணத்தே இடை-வெளி விட்டு, கார்ட்டீஸியன் அச்சிலே திசை சுற்றி உயிரோட்டம் பண்ணி ..... சலிப்புத் தட்டத்தொடங்கியது சிந்தனை. நினைவோட்டங்களுக்கு இருட்டு முடுக்குகளும் வாயிலற்ற போக்குக் காட்டும் குகைச்சுவர்ப்பாறைகளும் உண்டு.

இந்த எறும்பு தேநீரைச் சுவைக்குமா? "ஆவீன, அகமுடையாள்..." என்றதுபோல் விவேகசிந்தாமணிப்பாடலில் வருகின்றவன், ஒரு சொட்டும் துளித் தேன், புலியோ முதலையோ தன்னைத் தின்னமுன், வாயில் விட்டுச் சுவைக்கவே விழைவான் என்பது கதை மட்டும்தானா... அடிக்கடி "ஆவீன.." என்ற பாடலினை உதாரணத்துக்கு நான் எண்ணிக்கொள்வதாகப்பட்டது. இதுவரை தெரிந்ததோடு மட்டும் சுருங்கிப் போனேனா நான்? எறும்பு நீரின் வெப்பத்தாலும் தத்தளிக்கலாம் என்று பட்டது. தீக்கோழி நெருப்புத்துண்டுகளைத் தின்னும் என்று சின்ன வயதில் யாரோ சொல்லியிருந்தார்கள். இன்றைக்கும் என் பிள்ளை "அ·து உண்மையா? தீக்கோழி தின்னுமா?" என்று கேட்டால், பதில் சொல்ல நிச்சயம் நான் தத்தளிப்பேன். இதுவரை அ·து இயற்கையில் உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ளாமல் எறும்பு தத்தளிப்பதை வேடிக்கை பார்த்தபடி பொழுதைப் போக்குகின்றேன் என்று ஒரு வெட்கம் சூழ, நான் நெஞ்ச மையப்பகுதி பற்றி அளவிற் சுருங்கி எறும்பிலும் கொஞ்சமே பெரிதாகத் தெரிவதை அறிந்து கொண்டேன். இந்தநிலையில் என் மேலதிகாரியோ அல்லது சக ஊழியரோ..... முக்கியமாக என் மனைவியோ, குழந்தையோ.... அதை விடவும் இந்த எறும்போ கண்டு விடக்கூடாதே என்று பதை பதைத்து மேசையைப் பிடிக்க முயன்றேன். கை எட்டவில்லை; தேநீர் இன்னும் கொஞ்சம் கையிலிருந்து தளும்பி மேசையிலும் சற்று நேரம்முன் எடுத்திருந்த அடிக்குறிப்புகளிலும் சிதறியது. சமநிலைக்காய்த் தடுமாறினேன். கால்கள் நிலத்தே நிலை படவில்லை.

எறும்பு என்னைக் கண்டிருக்கமுடியாது; நான் ஊரில் ஒருமுறை தீர்த்தக்கேணியில் மூழ்கிப் போயிருக்கின்றேன். எறும்பிற்குத் தெரியாது அந்தக் கணங்களின் என் துன்பமும் உயிர் வாழ வேண்டும் என்ற போராடும் மனப்பாங்கும். சீனி பால் கலந்த தேநீரின் அடர்த்தியிலும்விட, தனி நன்னீர்க்கேணிநீரின் அடர்த்தி குறைவு. அடர்த்தி குறைந்தவற்றில் மூழ்காமற் தப்புதலே கடினம். அதைப் பலமுறை பல வடிவங்களில் உணர்ந்திருக்கின்றேன்.

துளித்தண்ணீருக்குச் சலவித்தை பண்ண இயலற்ற சிற்றெறும்புக்குக் கேணிநீர் பற்றித் தெரிந்திருக்கமுடியாது; "தீக்கோழி நெருப்புத்துண்டு தின்னுமா?" என்று தெரிந்திருக்காதது ஒன்றும் பெரிய அறிவீனம் இல்லை என்று எறும்புக்குப் புரிய வைக்கமுடியாது என்பதை எண்ணிய போது வந்த நமுட்டுச்சிரிப்பை எறும்பு காணாதவண்ணம் மற்றப்புறம் திரும்பிச் சிரித்து வைத்தேன். எறும்பு எத்துணை அறிவிலியாய் இருப்பினும், அதை அதற்கு முன்னுக்கே முகத்திலடித்தாற்போலச் சொல்லுவதுபோல சிரித்து வைப்பது ஒரு நல்ல, மென்மையான மனிதன் தான் என்று எண்ணிக்கொண்டு இருப்பவனுக்கு அழகற்றது என்று இன்றைக்கும் நினைப்பவன் நான். புரிந்தும் புரியா மனிதர்களிடம் பச்சாதாபம் காட்டுகையில் எறும்பிடம் காட்டுவதில் எனது மனிதநிலை பண்பிலே உயர்ந்து அதியுயர்மனிதனாவேன் கணப்போதில் என்று என் வாழ்வின் எந்தக்காலகட்டத்திற் தோன்றியது என்று தெரியாத கும்ட்டு நம்பிக்கை. ஆசியஜோதி படித்தபோதா.... மீண்டும், எறும்பு, மரக்கிளையிலும் விடக் கீழிறங்கி அடி மரமாகி, ஆண்டு வளையங்களும் கண் பட்டன.

தீர்த்தக்கேணியின் மத்தியில் நீர் சுரப்பதற்காக ஆழமான கிணறு ஒன்று கட்டாயம் இருக்கும் என்று நான் அந்த வயதில் யோசிக்காதது என் மூடத்தன்மையைக் காட்டாது என்று நான் வாதாட முடியும் என்று கருதுகின்றேன். இந்த நேரத்தில் நான் வெளிப்படையாக என் மூழ்கிப் போனதையும் அலறி அடித்துக் கைகளை அபயம் கேட்டு எம்பி எம்பி மூன்றாம் முறை எம்பியபோதே யாரோ ஒரு நண்பன் என்னைக் காப்பாற்றியதையும் நீச்சல் தெரியாமல் குதித்த அறிவின்மையையும் ஒத்துக் கொள்ளும் என் மனப்பாங்கு எனக்கு என்னைப் பற்றிய ஓர் உன்னத பெருமிதத்தைத் தர, என்னால் உயர்ந்து மேசையைப்ம் நிலத்தையும் தாராளமாக-முன்னைக்கு விட மேலாகவும்- தொடமுடிந்தது. நெஞ்சுக்கும் காற்குதிக்குமிடையே இடைவெளி மீளப்பெருத்ததை உணர்ந்தேன். இடம்போதாமை அறியப்பட்டு அறிவிக்கப்பட்டது என் மனத்துமூலைகட்குள். அம்மா, "நீச்சல் தெரியாமற் குதித்தது அறிவின்மையில்லை, அவசரத்தனம்" என்று சொன்னாலும், அ·து அறிவின்மைதான் என்று நான் ஒத்துக்கொள்கின்றேன். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு..... மீள மீளப்பயன்படுத்திய உவமா.... ஆனால், தண்ணீரிலிருந்து தரையிற் தூக்கிப் போட்ட என்னிடம், ஒரு நண்பன், தான் நான் முதல்முறை கிணற்றுள் மூழ்கும்போது, இயலுமானவரை கால்கைகளை அடிக்காமல் இருக்க முயற்சிக்கச் சொல்லிக் கத்தியதாகவும் அவன் சொன்னபடி நான் செய்திருந்தால், இரண்டாம்முறை மூழ்க முன்னரே தானோ வேறு யாருமோ வந்து தலைமயிரினைப் பற்றி இழுத்தெடுத்திருக்க வசதி கூடியிருக்கும் என்றும் சொன்னான். அவன் சொன்னதை நான் மறுத்து ஏதும் பேசவில்லை; என்னைக் காப்பாற்ற முயன்றவர்களில் அவனும் ஒருவன்; ஆனால், உண்மையில், நான் மூழ்கும்போது அவன் கத்தியது கேட்கவில்லை; அம்மா அழுவார் என்பதுவோ அல்லது வேறேதோ அகவளை வயப்பட்டோ புறச்சலனத்துக்கு, புலன் செத்திருந்தேன். இழுத்துப்போட்ட படிக்கரையிலே புரைக்கேறி வெளிக் கக்கிய நீருடனேயே புறச்சூழல் புலனேறியது.

எறும்பு என் கணநேர அவமானத்தினைக் கண்டிருக்கமுடியாது என்று பட்டது; குறிப்பாக, நான் குறுகிப்போனதைக் கண்டாற்கூட, என் மனம் எழுப்பிய அவமான அலைகளின் மீடிறனையும் வீச்சத்தையும் அறிந்திருந்தாற்கூட, என் கண்களை, தன்னைக் கொண்டிருக்கும் குறுகிய உடலைத் தானே கண்ட என் கூசிய கண்களை அது கண்டிருக்கமுடியாது என்பது நிச்சயமானது. அதன் தாயெறும்பு பின்னர் அழக்கூடுமோ அல்லது அவாப்பட்டு அடிபிடிபட்டு மழைக்குச் சேர்த்துவைத்த அரிசியையோ சீனியையோ அடுத்த நூற்றாண்டு எறும்பொன்று கண்டெடுத்தாயினும் உண்டு பயன்பெறுமோ என்று யோசித்துக்கொண்டிருக்க அந்தக்கணம் அதற்குப் பயன்பட்டிருக்கக்கூடும் என்று எனக்குட் சொல்லப்பட்டது. இறப்பின் அருகில் வாழ்க்கையினை இன்னொரு முறை வாழக்கிடைப்பின், அடுத்த முறையேனும் அடுத்துக் கெடுதல் புரிவோர்க்கும்கூட கெடுதல் புரியாமற் கழித்திருக்க அவாப் பிறக்கும் என்பது வெளிக்கக்கிய கேணி நீருள்ளே நான் பிழிந்த கணஞானம். முதல்மிடறு தேநீர் இன்றையகலவை மோசம் செய்யவில்லை என்பது போலிருந்தது. அடுத்த இருமிடறுகளுக்குமிடையே எறும்பின் என்- அவமதிப்பு-காணாமை ஒரு தேர்ந்தெடுத்த காணாதிருக்கும் பாசாங்குச்செயலாக இருக்கமுடியாது என்று அழுத்த திருத்தமாக உறுதிபண்ணிக்கொண்டேன்.... சத்தியமாக, நான் நீருள் மூழ்குகையில், எவர் கத்தியதும் கேட்டிருக்கவில்லை.... சொல்லப்போனால், நான் நீரை மூக்காலும் வாயினாலும் உள்ளெடுத்துக் கொண்டிருந்ததுகூட எனக்குப் புரிந்திருக்கவில்லை. எறும்பிற்கு இப்போது தான் நீருள் ஆழ்ந்திறப்பது பற்றி ஒருவன் தன்னுள்ளே தனிச்சமர் நடத்திச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் என்று தெரிந்திருக்குமா? என் மனச்சலனமும் என் குறுகிப்போன அவமானம்போல் நிகழ்காலப்புலனிற்ற எறும்புக்குக் கேட்காது என்று உணர்ந்து அதைத் தட்டி நீருக்கு வெளியே எடுக்க மேசையிலே குவிந்திருந்த அரைக் கோளத் தேநீர் இக்ளூக் குமிழினை நோக்கித் திரும்பினேன்.
நீ
ண்

......
.........
நீர்க்கீலம்.....
.......... எறும்பு எப்போதோ எங்கேயோ போய்விட்டிருந்தது.
பின்னே கண்ட எறும்புகளில் அந்த எறும்பை நான் ஒருபோதும் கண்டிருக்கவில்லை.

'99 ஜூன் 10, வியாழன்.

Saturday, February 26, 2005

குவியம் - 3

கணம் - 458

போலச் செய்யேன்

புள்ளிகள் எனது
கோடுகள் உமது
கோலம் எமது.

அனுபவம் எனதில்
உமது அனுபவம்
எமது அறிதல்.

புதிதுயிர்க்கப் பல
புள்ளி தேடிப் போவேன்;
கொணர்ந்தபின், நீங்கள்
நீட்டலாம், நெளிக்கலாம்
கோடு.

அள்ளி வரும்வரை
புள்ளி,
அண்ணாந்து விண் பார்த்து
கூட்டி மீன் கோர்த்து
கரடி கலப்பை
கற்றிருப்பீராக.

'05 பெப்., 26 சனி 12:15 கிநிநே.

Friday, February 25, 2005

புனைவு - 19

கழியும் பழையது
சிகை சிரைப்பு

முதலிலே நானும் பில் வ்'போல்கனருமே மாலை 5:30 இற்குப் போவதாக இருந்தது. பிறகு நான் போவதாகக் கூறி வழக்கம்போலவே போகாமல் வந்து ஏதேனும் சாட்டுச் சொல்வேன் என்ற எண்ணத்திலே என் மனைவி தானும் வருவேன் என்றாள்; அதனால், மாலைநேரம் கொஞ்சம் தாமதித்து, 6:00 இற்குப் போனோம்.

சிகை சிரைப்பதொன்றும் பெரிய வேலை இல்லைத்தான்; ஆனால், என்னைத் தலைமயிர் வெட்டவைக்கின்றது என்பது என்னைச் சார்ந்தோருக்கு ஒரு பெரும் மலையை மல்லாக்கப் புரட்டும் விடயம். அவனவன் தலையிலே புல்வெளி வறண்டு கொண்டே மேலேறித் தரிசு நிலப்பரப்பு விரிகிறதென்று கவலைப்படும்காலங்களிற்கூட, நான் 'சூப்பின பனங்கொட்டை,' 'கபூலிவாலா,' 'கொலிவாக்' என்று பலவிதமான பட்டப்பெயர்களுக்கு ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும், என் சிகையின் செறிவிலே 'அவ்ரோ வெட்டு'க்கள் பற்றித் தெரியாத காலத்திலும்கூட எனக்கு ஒரு 'தலை கனத்த' பெருமை. சிலவேளைகளில், "வெட்டு வெட்டு' என்று சொல்லி அலுத்துப்போன அப்பாச்சி, நான் சனி ஞாயிறு மத்தியானங்களிலே, சாப்பாட்டுக்குப் பிறகு, 'புத்தகம் வாசிக்கின்றேன்' என்று பெயர் பண்ணிக்கொண்டு முகத்தை அந்தப் புத்தகத்தினாலே மூடிக்கொண்டு நித்திரையாகிப் போகிற நேரத்திலே, தையலியந்திரத்தினுள் இருக்கும் மாமியின் கத்திரிக்கோலோடு வந்து தாறுக்கும் மாறுக்கும் வெட்டிவிட்டுப் போய்விடுவார். எழும்பி ஒரு 'சன்னதம் ஆடிவிட்டு' என் 'ஆமிக்காரன் தொப்பியைப்' போட்டுக் கொண்டு 'செல்வி சிகை அலங்கரிக்கும் நிலைய'த்துக்குப் போனால், மோஹனதாசுக்குச் சிரிப்பு....... "என்ன தம்பி, ஆச்சி இண்டைக்கும் உன்ரை தலையிலை கீரை ஆஞ்சிருக்குப் போல"..... திரும்பப் போய், கிணற்றிலே யாராவது முதல் வாளி தண்ணீரள்ளி ஊத்தும்வரைக்கும் நின்று... பிறகு நானே அள்ளிக்குளித்து.... ஒரு ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்காற்று அநியாயச் செலவு.

ஆனால், இப்போது இந்தப்பிரச்சனை ஏதுமில்லாதபோதும், என்னைத் தலைமுடி வெட்ட வைக்க இவள் செய்கிற சித்துவேலைகள் அப்பாச்சியிலிருந்து வேறுபட்டவை.... இதைத்தான் தலைமுறை இடைவெளி என்பதோ தெரியாது. கல்யாணம் ஆகி விமானம் ஏறும் நேரத்திலும், அம்மா என் சிகைப்பற்றறுத்தல் மிகவும் கத்திரிச் சிக்கலான கைங்காரியம் என்று மருமகளிடம் சொல்லியிருந்ததாக ஒருமுறை தெரியாமல் ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்திருந்தாள். சில நோய்கள் பெண்களுக்கு வராது, ஆனால், அவர்களின் மரபணுக்களூடாக, ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் என்று பின்னே என்ன சும்மாவா மரபணு விஞ்ஞானிகள் சொன்னார்கள்? தாங்கள் மட்டும் அடியில், அடிப்பாதத்திலும் முடி தொடுகின்றதா என்று பிரம்மா விஷ்ணு போல் அளந்து கொண்டு இருக்கலாம், ஆனால், பிள்ளை புருஷன்காரன் கொஞ்சமும் வளர்க்கக்கூடாது..... தான் வேகமான ஓட்டக்காரன் என்று காட்ட கூட ஓடுகிறவனை, 'கொஞ்சம் சாவகாசமாக வெத்திலைபோட்டுக்கொண்டு நடந்துவா' என்று சொல்கிற சித்து.. பிறகு வந்த காலங்களிலே, இன்னொரு தந்திரம்... இப்போதெல்லாம், உள்ளே புல்லு விதை வைத்து மண்ணடைத்து வெளியே சாக்கினால் கரடி, குரங்கு, நாய், பூனை என்று வடிவமைக்கப்பட்ட பல பொம்மைகள் விற்கத்தொடங்கியிருக்கின்றன. நான் தலைமயிர் வெட்டுகிற அன்றைக்கு அப்படி ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு, அதற்கு ஒவ்வொருநாளும் காலையிலே தண்ணீரூற்று.... ஆக, காலையிலே கண்விழித்தால், சாளர ஓரம் என் முடிவளர் நாட்காட்டி.... தொல்லை.... மேலும், மிக அண்மையிலே "இன்றைக்கு வேலை கொஞ்சம் கூட; முடித்துப் போக முடிதிருத்தும் நிலையம் மூடிவிட்டான்" இப்படியாகச் சாட்டுகள் சொல்ல, "எனக்குக் கத்திரிக்கோலும் அந்த இலத்திரனியற்செதுக்கியும் வாங்கித்தா, நானே வெட்டிவிடுகின்றேன்" என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றாள்..... இதற்கு என் நண்பர்களின் மனைவிகள் வேறு வக்காலத்து..... வேலையில்லாத வேலிக்கு சாட்சி சொல்ல வாலில்லாத ஓணான்கள்..... நான் அவள் முகத்துக்கு நேராகவே கடுமையாகச் சொல்லிவிட்டேன், "எத்தனையோ புதுச்சாரதிகள் உழவியந்திரங்களிலே வயல் கோலிப் பார்த்திருக்கின்றேன்; இப்படிப்பட்ட விளையாட்டுகள் மட்டும் வேண்டவே வேண்டாம்."

இந்த நிலையிலேதான் என்னோடும் பில்லோடும் அவளும் வரப்போகின்றேன் என்றாள். உள்ள எரிச்சலிலே 'சரி வா' என்று இழுத்துக்கொண்டு போனேன். இங்கே நானிருக்கும் இடத்திலுள்ள பல முடிதிருத்தும் நிலையங்கள் எனக்கு ஒத்து வருகின்றதில்லை; போய்க்குந்தியவுடனேயே, 'இந்தமுறை, யூற்றா ஜாஸா, சிக்காக்கோ புல்லா' என்றோ, 'போர்ட்டிநைனேர்ஸோ செயின்ஸோ' என்று கேட்கும் சிகை அலங்கரிப்பாளர், என் அன்றைய மனநிலையை அப்படியே சிகையோடு சேர்த்துச் சிரைத்துவிடுவார். அதனால், நான் கொஞ்சம் 'நாட்டுப்புறமாக' இருக்கும் 'தெற்கத்தைய டிக்ஸி' சிகையறுப்பாரின் இடங்களுக்கே போதல் வழக்கம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தவழும் குழவி எழுத்தாளர்களுக்கு எந்த நாட்டிலும் இப்படியான பழங்காலத்துச் சிகையலங்கரிப்பு நிலையங்களிலே அவ்வவ்விடப்பண்பாட்டினை அவதானிக்கவும் கிரகித்து உள்வாங்கவும் நிரம்பவே வாய்ப்புத்தரப்படுகின்றது என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறதே அதுவாகும்.

இந்த முடிதிருத்தும் நிலையம்கூட அதிக தூரத்திலே இல்லை; வீட்டுக்கு முன்னாலிருக்கும் 'நான்கு-ஒழுங்கை' வீதியைக் கடந்து, பிறகு, 'பப்பாஜோன் ப்ட்ஸா' கடை..... நடை.... தெற்கத்தைய 'கேஜன் பர்ஹர் பப்பா-மம்மா' கடை .... நடை... (கொட்டியிருக்கும் குப்பைமீது தாவுக)....இங்கு துவிச்சக்கரவண்டி விற்றலும் பழையன வாங்குதலும் மற்றவை திருத்துதலும் செய்யப்படும் ("ஞாயிறு திறக்கப்படமாட்டாது")........ வீதியை அக்கம்பக்கம் பார்த்து, குறுக்கே கட......'கல்ஹ¥ன் பப்' (மகிழ்ச்சி மணிநேரங்கள் மாலை 4:00-8:00; 'உதை கழுதை' பியரும் மடி- நடனமாதுக்களும் உண்டு.....இன்று, 'பிக்பூப் ஹக்ஸி')......... ஒருதிசைப்பட ஒளிகசி சாளரக்கண்ணாடியூடே பார்த்தும் பாராதது போல நடை.....'ஓல் ஸ்ரேட் காப்புறுதி' முகவர், ஜிம் அப்துல்லா...... ("1981 இலே இங்கு வரமுன்னர், பாக்கிஸ்தான் பலூஸிஸ்தானிலே அகமதியா ஜிம்மினை எப்படி அழைப்பார்கள்?").... நட.....(இது உனக்குத் தேவையில்லாத கேள்வி ... முன்னாலே பார்) ......'டிக்ஸி' முடிதிருத்துநிலையம்... நுழைந்தோம்.

கடை, நடைபாதைத் தாழ்வாரத்துக்கு வலதுபுறமாக, இரண்டு பிரிவுகளாகத் தடுப்பினாலே பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது (வயதுபோன) பெண்களுக்கு.... அவர்கள் மிஞ்சிய தலைமுடிகளினை நூற்கட்டைகள் போன்ற சிறு உருளைகளினாற் சுருட்டிக்கொண்ட பிறகு, ஐம்பதாம் ஆண்டுக்கால கருப்புவெள்ள 'ஹொலிவுட்' செவ்வாய்க்கிரகத்து வனிதாமணிகள் போன்று கண்ணாடிக்கோளங்களுக்கிடையே தலையை வைத்து கதிரைகளிலே உட்கார்ந்து தலையைச் சூடாக்கிக் கொள்வதைப் பார்க்கும் எவருக்கும் மின்சாரநாற்காலியூடான மரணதண்டனையை ஒழித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசம் உடனடியாக வந்தே தீரும்......

..... "........... நான் நம்பமாட்டேன்", "தேனே, ஜூடித்தின் ஓடிப்போன மகள், பிலொக்ஸியிலேதான் இருக்கிறாளாம்"......., "இருக்கமுடியாது; அவளை ஜக்ஸனிலே கண்டதாக ரோய்ஸ் என்னிட...."

.....அடுத்ததாக, ஆடவருக்கானதுக்குள்ளே நுழைந்தோம்; என் மனைவி "உள்ளே வரவா? இல்லை, வெளியேயே தரிக்கவா?" என்று, கடைசி நேர ஹம்லட் போல அறைவாசலிலே இழுக்காத இலட்சுமணக்கோட்டுக்கு இடது காலெடுத்து பரதம் ஆடினாள். இழுத்துக்கொண்டு, உள்ளே போக,'பாபா பொயிட்,' ஒரு கிழவருக்கு வலது தாடையில் இழுத்துக் கொண்டிருந்த சவரக்கத்தி -தரித்து - யிலிருந்த முடியைத் தோளிலே தொங்கிய துணியிலே வழித்துக் கொண்டு, 'வருக, கதிரையிலே அமர்ந்திருந்து பத்திரிகை காண்க' என்று விட்டு, தாடைக்கு மீண்டும் தாவினார்; கத்தியில் நுரையைத் தடவினார்; தேய்த்தார்; இழுத்தார்.

மேசையிலே மாசிகையும் தாளிகையும் மாதமிரு பத்திரிகையும் அறுபதாம் ஆண்டிலிருந்து முந்தநாள்வரைக்குமாக தொடர்ச்சியில்லாது, இலவச ' ஒன்றெடுத்தால் இரண்டு இனாம்' போட்டிக்கட்டங்கள் கத்திரிக்கோலே படாது கை வரிசைக்குக் கிழிக்கப்பட்டு, பின்னர், நிலம் முழுவதும் மயிரிடையே இராணுவம் புகுந்து சோதனை செய்த வீட்டுப் பொருட்களாக எறிந்து கிடந்தன. 'நஸனல் எஸ்குயரர்', 'த குளோப்,' 'த ஸ்ரார்', 'ஹோம் கார்டினிங்', 'செவன்ரீன்'....... யாரோ பிரித்தானியாவிலிருந்து 'மினக்கெட்டுக்' கொண்டு வந்து, ஒரு பிரதி - 'ஸாரா பெர்குஸ்ஹன் அன்ரூவின் மார்பகம் வெனீஸ் ஓடத்திலே வெளிச்சத்திலே வெண்மையாகத் தெரிகின்றது' என்ற தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு- 'த மிரர்' கூடக் கருணையோடு போட்டிருந்தார்கள். வானொலியிலே, லூயிஸ் ஆம்ஸ்ரோங்கின் 'ஜாஸ்' குரலிலே யாரோ ஒருவர், முதலைக்கட்லட்டுக்கு தரமான உணவுக்கடை இதுதான் என்று எதையோ சொல்லிவிட்டு, காலநிலை, வீதிவிபத்து எல்லாம் வரிசைக்குச் சொன்ன பின், தாரை தப்பட்டைகூட 'ரம்பெட்'டினார்கள். நான், ஒஸ்கார் விருதாளி, கெவின் ஸ்பேசி உண்மையிலேயே ஒருபாற்புணர்ச்சியிலே நாட்டம் கொண்டு திரிகின்றார்தானா என்று வாசிக்கத்தொடங்கினேன். சதுர அடியிலே வாழ்விடமும் சமையலறையும் கொண்ட எனது அவள், 'ஹோம் ஹார்டினிங்' இனை எடுத்து, பத்து ஏக்கரிலே ஓரிகன் வீட்டு முற்றத்துக்கு ரோஜாப்பாத்தி போடுகின்றதை மிகவும் ஆர்வத்தோடு வாசிக்கின்றது எனக்கு இடப்பக்கமாக மயிர்க்குவியல் மீதெழுந்திருந்த மெத்தை பிய்ந்த 'ஊத்தை'க்கதிரையிலே தெரிந்தது. பில், கைக்கடிகாரத்து முட்களை கண்ணாலே துரத்தித்துரத்தி ஓட்டமுடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்ததையும் நான் அறிவேன்.

தாடிக்கிழவர் எழுந்தபின்னர், பில்லைப் பார்த்த பாபாவுக்கு, பதிலாக அவன் என்னைப் பார்த்தான்; நான் 'போ' என்று கண்ணைக் காட்டினேன்; எனக்கு அருகாமையிலே வீடு; அவனுக்கு பரிசாரகராக, இரவு வேலையும் எட்டுமணிக்கு ஒரு தனிக் கல்யாண விருந்திலே இருக்கின்றதாகச் சொல்லியிருந்தான். கோடைவிடுமுறைக்கு 'யெலோ ஸ்ரோன்' தேசியப்பூங்காவுக்குப் போகின்றதற்கு பணம் சேர்க்கின்றதிலே மும்முரமாயிருக்கின்றான் என்று சொன்ன ஞாபகம். ''எம்என்பிஸி' ரிவேரேவும் மனைவியும் பிரியப்போகின்றார்கள்' என்பதை மிகவும் அக்கறையோடு வாசிக்கத் தொடங்கினேன்...... பில்லும் பாபாவும் கோரினையும் புஷ்ஷையும் அக்குவாறு ஆணிவேறாக, அவர்கள் செனட்டர் அப்பாக்கள் நடத்தைகளைக்கூட, பிய்த்துப்பிய்த்துப் பேசிக்கொண்டிருந்ததும் இடைக்கிடை இந்த விவாகமுறிவு நிகழுமா இல்லையா என்ற கயிற்றிலே தொங்கும் கதையூடாக எனக்குக் கேட்டது....அரசியல், மித்திரன்-குளோப் பத்திரிகைகள், ராணி-செவன்ரீன் சஞ்சிகைகள், திரைப்படநடிகர்கள்... நடிகைகளின் மதர்த்த மார்புகள்.... அல்லி-ஆன் கேள்வி பதில்கள்....... முடிசிரைக்கும் நிலையங்கள் எங்கும் தம் அர்த்தம் பொதுவிலே மாற்றுவதில்லை.

..... 'ஹேய்! நீதான் அடுத்தது;' பில், பாபா கிழவரிடம் ஒரு பத்து டொலரைக் கொடுத்துவிட்டு, பிறகு கூடவே மற்றைய காசுப்பை உள்ளறையிலிருந்து இரண்டு ஒரு டொலர்த்தாட்களையும் எடுத்துக் கொடுத்துவிட்டு, 'நன்றி' என்று விட்டுப் போனான். இங்கே வழக்கமாக முடி வெட்டிக்கொள்ள பன்னிரண்டு டொலரானபோதும், புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் மாலையிலே நான்கு முதல் எட்டு மணிவரை பத்து டொலராகும் என்பதாக இங்கே நான் முடி வெட்டிக்கொள்ளத் தொடங்கிய காலத்திலே இதனை எனக்கு அறிமுகப்படுத்திய மாணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். மேலும், வெளி அறிவிப்புப்பலகையிலே, கீழோ மேலோ சிறிய எழுத்துக்களிலே அவ்வாறு எழுதியிருந்தது என்று நினைவு (இப்போதெல்லாம், யார் அறிவிப்புப்பலகையைப் பார்த்து நுழைவது? கண்ணாடியூடே ஒவ்வொரு கடையுள்ளும் நிகழும் செயற்பாடுகளைக் கண்டுகொள்ளக் கவனம் செல்ல, கால்கள் தம்பாட்டிலேயே கடைக்குள்ளே கொண்டு வந்து தள்ளி நிறுத்துகிறன.) கூடவே, ஓர் இருபது வீதம் வெட்டுகின்றவர் 'மகிழ்ச்சிக்காக' இரண்டு டொலர் தாட்களைத் தள்ளவும் சொன்னார். அவ்வாறே செய்து வருகின்றேன். அமெரிக்கன் ஆனபோதும் பில்லுக்குக் கூட இந்த இடத்தை ஓர் எட்டு மாத காலம் முன்பு ஆவணியிலே அறிமுகப்படுத்தியது நான்தான்.

நான் ஏறிக் கதிரையிலே அமர்ந்தேன்; பாபா, 'அதிகமா, குறைவா, இடையா?" என்று முடியினைக் குறைக்க வேண்டிய அளவினைக் கேட்டார்; 'எனக்கு கொஞ்சமாகவே குறைக்க விழைவு; ஆனால், இவள் நான் வெட்டுகிறது மாதிரி பொய் வேலை பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வருகின்றேன் அல்லது கிட்டத்தட்ட குளிர் காலத்திலே இலைகிளையெல்லாம் உதிர்த்துவிட்ட கூம்பிய நெட்டைக்காட்டுமரம் மாதிரி மொட்டையடித்துக் கொண்டு வருகின்றேன் என்கிறாள்; அதனாலேயே அவளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றேன்; அவளிடமே கேட்டுக்கொள்ளூங்கள்; முடியோடு எனக்கு முடிவெட்டலுக்குப் பின்னான அவளின் தொணதொணப்பும்கூடச் சேர்ந்து குறையட்டும்" என்று நீண்டதாக நகைச்சுவையாகப் பேசுகின்றேன் என்ற எண்ணத்தோடு சொன்னேன். பாபா திரும்பி அவளிடம் அதைப் பற்றி ஒன்றும் கேட்காமல், 'இளம்பெண்ணே, இந்த நகரத்திலே உள்ள சுவருக்கடிக்கும் வர்ணம் விற்கும் கடைகளிலே நிறச்சாயம் வாங்கப்போகும் கணவர்மார்களிடம் கடைச்சிப்பந்திகளும்கூட, இதைப்போலவே, மனைவியிடம் இருந்து இந்த வண்ணம்தான் வேண்டும் என்று உத்தரவாதக் கடிதம் வாங்கி வரச்சொல்வதுண்டு. இல்லாவிட்டால், கணவனுக்கும் தொல்லை; கடைச்சிப்பந்திக்கும் தொல்லை; காருக்கும் ..... இப்போது ஏறியிருக்கும் விலையில் அதை ஓட்டுகிற 'காஸலீனு'க்கும் தொல்லை." - காவிப்பல் தெரியச் சிரித்தார் கிழவர்..... எனக்கென்றால் பயமாகிப்போய்விட்டது.. எந்த நேரத்திலே இவள் இதற்கொரு பெண்ணிலைப்பார்வை பார்த்து பேசி வைக்கப்போகின்றாளோ என்று..... அவள் சிரித்துக்கொண்டாள்... "இடைப்படவே வெட்டிவிடுங்கள்.' சிக்கல் இனி கிழவருக்கில்லை; இரவு எனக்குத்தான் என்று வெட்டவெளிச்சமாகித் தெரிந்தது.

கிழவர் வெட்டத்தொடங்கினார்; முன்னிலைக்கண்ணாடியின் மேலே, 'அம்மப்பா/அப்பப்பா, உங்களுடன் நான் அன்போடு இருக்கின்றேன் - சமந்தா' என்று தடித்த அட்டையிலே எழுதி, அதன் கீழே, வட்டத்தலை, இரட்டைப்பின்னல், குச்சிக்கைகாலோடு ஒரு சின்னப்பிள்ளைக் 'க்ரையான்' கிறுக்கலும் ....... "என் மகளின் மகள்; மிகவும் பொல்லாதது.... மேலே ஸெர்வபோர்ட்டிலே அவள் அம்மாவோடு இருக்கின்றது; இந்த வார இறுதிக்கு என்னையும் என் மனைவியையும் பார்க்க வரும்; அதுபோகட்டும்; நீ எந்த நாடு?" என் கொப்புளிப்பு உற்சாகம் கொஞ்சம் வடிந்தது.... இ·து ஏழாவதோ எட்டாவதோ தரம் இங்கே முடிவெட்டிக்கொள்ள வருகின்றேன்... அதே கேள்வி மூன்றாவதோ நான்காவதோ தடவை இவரிடமிருந்து.... நான்கு முறை அறிமுகத்துக்கு அப்பாலும் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாத அடையாளமில்லாத மனிதனா நான்? சமாளித்துக்கொண்டு, "போனதடவையே சொல்லியிருந்தேனே.. இலங்கை." "அப்படியா? மன்னித்துக்கொள் மகனே, நான் வயோதிகனாக மிகவும் விரைவாகவே ஆகிக்கொண்டிருக்கின்றேன்.' என்னிலே எனக்கே ஒரு வெறுப்பு ஏற்பட்டது.... நான் கூடத்தான் இன்று காலை நூல்நிலையத்திலே பார்த்துச் சிரித்த சீன மாணவனை ஒளியூடுபுகவிடுகண்ணாடியூடே பார்க்கின்றவன்போல ஊடுருவி அவனுக்கப்பாலே பார்த்துக்கொண்டு சிரிக்காமல் வந்துவிட்டேன்.. என்ன நினைத்தானோ? குற்றம் அழுத்தியது...... கிறிஸ்மஸ¤க்கு வைத்த மரம் இன்னமும் ஆறு மாதங்களுக்குப் பிறகும் கழற்றப்படாமலே ஒரு மூலையிலே சாத்திக் கிடந்தது.. தூசு, 'ரெஜிபோர்·ம்' செயற்கை வெண்பனிமீது அழுக்காகப் படிந்துபோய் அறைக்கு ஒரு இருட்தன்மையைத் தந்ததுவாய் அதைப் பார்த்தபிறகு எனக்குப்பட்டது. மேசையிலே பலபல வடிவங்களிலும் அளவுகளிலும் சீப்புகளும் தண்ணீர்க்குடுவையியுள்ளேயிருந்து நீரை பூவிசிறியாக, அழுத்தத் தெறிக்க வைக்கும் ஹ¥க்காக் குழாய்களும்.....

.....கிழவர் ஏதும் பேசுவதாகத் தெரியவில்லை..... அவரின் மனதை என் பதில் புண்படுத்தியிருக்கக்கூடுமோ? ஏதாவது நான் பேசித்தான் ஆகவேண்டும்..."கோடை காலம் ஆரம்பமாகின்றதுபோலத் தெரிகின்றது... கொஞ்சம் கூடவே தலைமுடி வெட்டினாற்றான், வியர்வையின்றி தடிமன் பிடிக்காது இருக்கும்.. ஏற்கனவே சைனஸ¤டன் நான் படும்பாடு சொல்லிமாளாது..." ...பேசிவிட்டேன்... "அப்படியானால், உன் விருப்பம்போலவே, இன்னமும் குறைத்துவிடுகின்றேன்..." கிழவர் நான் சொன்னதை மிகவும் அர்த்தத்துடன் எடுத்து குரலிலே என் சைனஸ¤க்கு வருத்தம் தெரிவித்து, வெட்டும் வேகத்தை என் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு குறைத்தார். "வேண்டாம் வேண்டாம்... எப்படியும் சரியான உக்கிரமான கோடை எறிக்கமுன்னர், மீண்டுமொரு முறை உங்களிடம் தலைமுடிவெட்ட வருவேன்தானே? அப்போது அவ்வாறு மிகவும் அளவிற் குறைத்து, பயிற்சி- இராணுவவீரர் முடிவெட்டு வெட்டிக்கொள்ளலாம்" - அவசரப்பட்டு, அதே நேரத்திலே சொல்லும் சொற்கள் ஒவ்வொன்றையும் பயனுள்ளதாக அர்த்தப்படுத்தும் வண்ணம் சொன்னேன். "ஏதேனும் சிக்கல் நிகழ்ந்துவிட்டதோ?" என்று, வாசிப்பதை நிறுத்தி ஓரளவு பதட்டத்துடன் கேட்ட அவள், எங்களிருவரினதும் ஒத்தொலித்த, "இல்லை, இல்லை; நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருக்கின்றோம்" பதிலுடன் விட்டவிடத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாலும், அடிக்கடி தலையை உயர்த்தி உயர்த்தி எங்களைப் பார்த்தும் கொண்டாள்.

அவர் ஒரு வெள்ளையரானபோதும், அறை முழுவதும், ஐம்பது அறுபதாம் ஆண்டுக்காலப்பாடகர்களினது படங்கள், கறுப்பர்-வெள்ளையர் பேதமில்லாது, கண்ணாடி தவிர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் பெரிய அளவுகளிலே ஒட்டப்பட்டிருந்தன. அதனால், அவரோடு பேசுவதற்கு இசை ஓர் ஊடகமாக ஆகமுடியுமென்று எனக்குத் தோன்றியது; நான் கிழவரிடம் நாட்டுக்குப் புதியவனாதலால், எனக்கு கறுப்பின மக்களின் ஜாஸ் மற்றும் ப்ளூஸ், ஆத்மீக, நாட்டுப்புறப் பாடல்களினை எப்படி வகைபிரிக்கின்றார்கள் என்று சொல்லமுடியுமா என்று கேட்டுக்கொண்டேன். பிறகு, இடைக்கிடையே ஒரு கைக்கண்ணாடியினை எடுத்து என் தலைக்குப் பின்புறம் -அங்கும் இங்கும்- வெவ்வேறு இடங்களிலும் கோணங்களிலும் வைத்துக்கொண்டு, "இது சரியா? இவ்விடத்திலே இந்த அளவுடன் முடிவெட்டுதலை நிறுத்திக்கொண்டாற் போதுமானதா? இது உனக்குத் திருப்தியா, மகனே?" என்று கேட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, மிகுந்த நேரமெல்லாம் (ஒரு பத்துநிமிடநீளம்), கிழவர் நிறுத்தாத இசைச்சரித வாகனம். இடைக்கிடையே, கிட்டத்தட்ட குரலினாலே ஒத்தோரின் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுமுகமாக, மெல்லிய குரலிலே வெவ்வேறு பாடவும் செய்தார். அவள் தலையை நிமிர்த்தாது, விழிகளையும் புருவங்களையும் மேலுயர்த்தி, கூடவே சிறு இடையறா முறுவலையும் உதிர்த்துக் கொண்டிருந்தாள்.

இறுதியிலே, அவர் ஒரு துண்டினாலே என் புறங்கழுத்தினைத் துடைத்துக் கொண்டிருந்தபோது, "வெட்டுக்கூலி எவ்வளவு?" என்று கேட்டேன்; சாவாதானமாக, 'பன்னிரண்டு' என்றார். துணுக்கென்றிருந்தது; நெஞ்சின்மேலே போர்த்தப்பட்டு, கைகள் மேலே பரவிப் படர்ந்திருந்த (முடி உடலிலே விழுவதைத் தடுக்கும்) போர்வையின் கீழே, கைமுஷ்டிகளால், கதிரையின் இருகைப்பிடிகளிலும் ஆத்திரத்துடன், அதேநேரத்திலே அதிராமலும் ஒலியெழுப்பாமலும் தொடர்ந்து போர்வையை அவர் விலக்கும்வரையும் குத்திக்கொண்டேன். இன்று வியாழக்கிழமை மாலையாக இருக்கையிலே எப்படி பன்னிரண்டு...? கூடவே, பில், வெறுமனே ஒரு பத்து டொலர்த்தாள் கொடுத்துவிட்டு அவர் சேவைமீதுள்ள திருப்திக்காக மகிழ்ச்சியுடன் இரண்டு மேலே வைத்துப்போனதைக் கூடக் கண்டேனே..... நான் இந்த நாட்டுக்காரன் இல்லை என்பதை அறிந்து கிழவர் என்னை ஏமாற்றுகின்றாரா அல்லது என் நிறத்துக்காக எனக்கு மட்டும் இந்தக்கூலியா? .... எதுவெனத் தெரியவில்லை; சே! எவ்வளாவு என்று கேட்காமலே பத்து டொலரைக் கொடுத்துவிட்டு இரண்டு மேலே 'சந்தோஷ'த்துக்காக வைத்துவிட்டுப் போயிருக்கலாம். மேலதிகமான இரண்டு டொலர்கள் பெரிதல்ல....ஆனால், இந்த ஏமாற்றுப்படுகின்றோம் என்று அறிந்தபடியே ஏமாற்றுப்பட்டுக்கொண்டு, கையாலாகதவன் போல, 'பெரிய மனிதத்தன்மையுடன் சிறியவர்களின் கெடுதல்களை அலட்சியம் செய்து விட்டுப்போவதே என் உளப்பண்பும் செயல்வலிமையும்' என்று பொய்யாய்க் காட்டி, பன்னிரண்டு டொலரினையும் கொடுத்து மேலும் இரண்டு டொலர், 'திருப்தி உன் சேவை' என்று வைத்துவிட்டுப் போகிற ஆள் நான் என்ற பண்பும் நினைப்பும் பிறப்பிலிருந்தே எனக்கு இல்லை; அதிலும் குறிப்பாக, நான்கைந்து முறை என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபிறகும் என்னைப் பற்றிய படிமத்தை ஞாபகத்திலே ஏற்றியிருத்திக்கொள்ளாது, அதையும்கூட, "நான் கேட்டால் என்ன, நீ குறைந்தா போகப்போகின்றாய்? மீள அறிமுகப்படுத்திக்கொள்" என்ற தொனியிலே கேட்கும் ஒருவனை, அவன் வயது ஒன்றை மட்டும் காரணங்காட்டி, என்னை ஏமாற்றவிடமுடியாது; இதிலே முரண்படுவதுதான் என் நெறியும், சேரவே நீதியின் வெற்றியும் என்று எனக்குத் தெள்ளென தெளிந்தது.

பேசாமல், எழுந்து பின்காற்சட்டைப்பையிலே இருந்து, காசுப்பையினை எடுத்து எண்ணி, தனியே வெட்டுக்கூலி, பன்னிரண்டு டொலரினைக் கிழவரின் அமெரிக்க வெள்ளைக்கையிலே என் இலங்கை மண்ணிறக்கையினாலே வைத்து விட்டு, திரும்பிப் பாராமலே அவளுடன் நடந்தேன். கிழவர், பேசாமல், வாங்கி மேசை இழுப்பறைக்குள்ளே வைத்துவிட்டு, அடுத்துக் காத்திருந்தவரை அழைத்தது நான் நடக்கும்திசையிலே இருக்கும் கண்ணாடியிலே தெளிவாகத் தெரிந்தது; அவள், கூனிக் குறுகிக் கொண்டு, "அவருக்கு நீங்கள் 'டிப்ஸ்' வைக்கவில்லையே?" என்று கிசுகிசுத்தாள்... "ஏன் அவர் உன் மாமனாரா? நான் போகின்றேன்; வேண்டுமென்றால், நீ போய் பத்து டொலர் வெத்திலை பாக்குடன் தாம்பாளத்திலே வைத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வா... இது மட்டும் என் ஊராயிருந்தால், அவர் நடத்தின முறைக்கு, அவருக்கு ஒரு பக்கத்துக்கு இரண்டு என்று நாலு கன்னத்திலே வைத்திருப்பேன்.' அவளுக்கு ஏதோ நடந்துவிட்டதென்று அப்போதுதான் புரிந்திருக்கவேண்டும். மௌனமாகத் தொடர்ந்தாள்; அறைக்கு வெளியே வந்து தாழ்வார ஓடையிலே நடக்கும்போது, கிழட்டுப்பாபா நடத்தின முறைக்கும் எனது சொல்லால் திருப்பி அடித்துக் கேட்கமுடியாத கையாலாகாத்தனத்துக்கும் அவளிலே கோபம் கொள்வது முறையாகாது என்பதோடு, மேலாக, கிழவர் என்னை பயன்படுத்திக்கொண்டது போலவே அவளின் நல்ல நோக்கத்தினை வந்த வீச்சிலேயே எதிர்த்திசை திருப்பி முகத்திலே அறைந்து எனது ஆத்திரத்தை தவறான முறையிலே வடிகால் செய்கின்றேன் போலத் தோன்றியது. அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தணிந்த குரலிலே நடந்ததைச் சொன்னேன். வெளியே, வாசலுக்கு வந்தபோது, முகப்பிலே ஒட்டியிருக்கும் கட்டணம் பற்றிய அறிவிப்புத்தாளினைக் கிழித்தெடுத்துக் கொண்டுபோய் அவரிடம் காட்டி ஏன் எனக்கு மட்டும் பன்னிரண்டு டொலர் என்று கேட்போமோ என்று ஒரு கணநேரவெறி; ஆத்திரத்திலே அறிவிப்புப்பலகையை நோக்கி நான் நடக்க, அவள் பயப்படுவது தெரிந்தது. பலகையை நெருங்கியபோது, அறிவிப்புப்பலகையிலே தை மாதம் முதல் சவரஞ்செய்தல் தவிர மிகுதி அனைத்துக் கட்டணங்களும் இரண்டு டொலர்களினாலே அதிகரிக்கப்பட்டதாக ஒரு புதிய அறிவிப்பு கிடந்தது. அவள் என்னைப் பார்த்துக் கொண்டு நெற்றியிலே கைவிரல்களாற் சொறிந்து கொண்டு, "பாவம் அந்தக் கிழவர்; எங்களைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியாது " என்றாள். "வாயை மூடிக்கொண்டு கிட.... அவர் பாவமென்றால், எல்லாம் தெரிந்த திரிஞானி நீ, அப்போதே கூலி கூடினதைப் பற்றி வாயை மூடிக்கொண்டிராமல் எனக்குச் சொல்லியிருக்கலாம் தானே!" - இப்போதும் கையாலாகாத்தனத்திலே அவளிலே கத்தியபோதும் எனக்கும் எங்கோ வெகுவாக உறுத்தியது... பிறகு வீட்டு வாசலை அடையும் வரை நாமேதும் பேசவில்லை. வாசலிலே கதவைத் திறக்கத் திறப்பால் அவள் குடைந்து கொண்டிருந்தபோது, "ஆனாலும், கிழவன், பில்லுக்கு மட்டும் ஏன் பத்து டொலர் எடுத்தான்?" - என்னிடமே நானோ அல்லது அவளிடம்தானோ தெரியாது, ஆயினும்- கேட்டேன். அவள், என் ஆத்திரத்துக்குப் பயந்துபோய் கொஞ்சம் தயங்கிக் கொண்டிருந்துவிட்டோ, அல்லது திறப்பு சரியாகத் துவாரத்துள்ளே துழாவாததால் அதிலே வாசல் திறக்கும்வரை கவனத்தினைச் செலுத்திவிட்டோ, நாம் கட்டிடத்துள்ளே நுழையும்போது, "யாருக்குத் தெரியும்! பில் பன்னிரண்டு குடுத்ததை நாங்கள் இரண்டுபேரும்தான் கண்டோம்; அவரும்கூட சேவைத்திருப்திக்கான உபரித்தொகை கொடுக்காமலே போயிருக்கலாம்." அவள் சொல்கின்றது ஒரு வகையிலே நியாயமாகத்தான் பட்டாலும், பில் அப்படி திருப்தித்தொகை ஆறரைக்கு ஒரு தொழிலாளிக்குத் தான் கொடுக்காமல், எட்டரைக்கு ஒரு விருந்திலே தானே பரிசாகரனாக அதையும் எதிர்பார்த்து வேலை செய்யப்போகின்றவன் அல்ல...... அவள் இரவு முழுவதும் மட்டுமல்ல, மறுநாட்காலையிலும்கூட "இதையிட்டுப் பெரிதாகக் கவலைப்படவேண்டாம்" என்று சொல்லி பல விதங்களிலே என்னை உற்சாகப்படுத்தினாள்.

அடுத்தநாள் பில்லைக் கண்டபோது, எதேச்சையாகக் கேட்பதுபோல, "பார்த்தாயா முடிவெட்ட விலையைக் கூட்டிவிட்டார்கள்?" என்று சொன்னேன்; "இப்போதா? அ·து எப்போதோ ஆண்டுத்தொடக்கத்திலே தையிலேயே கூட்டிவிட்டார்களே!" என்றான். கொஞ்சம் திக்கென்றது... முகத்தினை வேடிக்கை செய்கின்றவன் போல வைத்துக்கொண்டு, "அப்படியானால், ஏன் அந்தக்கிழவனுக்கு கணக்காக பன்னிரண்டு டொலரினை மட்டும் எண்ணி வைத்து வயிற்றிலே அடிக்கிறாய்? ஓர் இரண்டு மேலே வைத்துக் கொடுத்தால் என்ன, குறைந்தா போவாய்? நேற்றைக்கு இரவு நீ 'டிப்ஸி'லே எவ்வளவு உழைத்தாய் என்கிறதை நினைவிலே வைத்துக் கொண்டு பதிலைச் சொல்வாய் என்று நம்புகின்றேன்" என்றேன். "ஏய்! என்னை பற்றி என்ன நினைத்தாய்? போன மாசி மாதம் முடிவெட்டப்போனபோது, கூலிகூடியது முடி வெட்டியபிறகே எனக்குத் தெரியவந்தது; கையிலே இரண்டிரண்டாக மாற்றிய காசில்லை. அதே நேரம் கிழவருக்கு உபரித்தொகையாக இரண்டு டொலர் கொடுக்காமல் வரவும் மனம் ஒப்பவில்லை, அதனாலேதான் பதினாறாக வைத்துவிட்டு, அடுத்தமுறை வருகின்றபோது, பத்தை மட்டும் வெட்டக்கூலியாகத் தருகிறேன் என்று கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்; என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாய்?" கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டே சொன்னான் என்பதும் தெரிந்தது; அரசாங்கக் கடனிலே படிக்கும் வையோமிங் கிராமவிவசாயியின் மகன்.... மேலே ஏதும் நான் சமாளிக்கப் பேசுவதுகூடடாவனின் தன்மானம் என்று கருதுவதிலே தொட்டுக் கிள்ளிச் சினத்தினைக் கூட்டும் என்று பட்டது. பேசாமல் நகர்ந்தபோது, அவசியமற்றபோதும் எனக்காகப் பாடிவிட்டு, என் பன்னிரண்டு டொலர்க்காசை மேசை இழுப்பறையிலே போட்டுக்கொண்டிருந்த பாபா கிழவரின் முகத்தின் சலனவோட்டத்தையும்கூட, திரும்பிவருகையிலே நான் ஒரு கணத்திற்கேனும், முன்னாலிருந்த கண்ணாடியில் அவதானித்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன்.

அடுத்தமுறை கோடைக்கு முடிவெட்டப்போகும்போது, 'நியூயோர்க் யாங்கி'களைப் பற்றிக் கேட்டாலும் பரவாயில்லை என்று என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு, என்னிடம் "கூடவா, குறைவா, இரண்டுக்கும் இடையா?" என்று அபிப்பிராயம் மரியாதைக்குக்கூடக் கேட்காத இன்னொரு நாகரீக முடிவெட்டு நிலையத்துக்குப் போய், பேசாமலே இருந்து அவர்கள் வெட்டியதே முடிவெட்டு என்று திரும்பி வந்தேன். அவள் அந்த முடிவெட்டு, 'என் குருவித்தலைமேலே புல்லுக்கட்டு வைத்ததுபோல', பொருந்தவில்லை என்றாள். எனக்கென்றால், 'வெட்டும் கடையோடு முடி போய் விடவேண்டும்; இரவுணவின் சுவையைக் கெடுக்கக்கூடாது' என்பதற்கேற்ப, கத்தரிக்கோலோட்டும் எல்லா முடிவெட்டும் பொருந்தமானதே என்றுமட்டும்தான் பட்டது.

ஏப்ரில் 09, '00 ஞாயிறு 19:27 மநிநே.

கணம் - 457

ஒரு நாய்க்கவிதை

நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.

வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.

ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.

கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.

'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.

Thursday, February 24, 2005

புனைவு - 18

கழியும் பழையது
அங்கேயும் இங்கேயும் இவன்களும் அவன்களும்

முதலாம் இவன் தான், அங்கு வடக்கில் போய் விழுந்திருந்தபோதும், தனது உரு மாறாதிருக்கக் கண்டான்; கூடவே இங்கே இவன் கொண்டிருந்த அகப்புறக்குறிகளும் நிலைத்தனவாய்.

இரண்டாம் இவன் தான், அங்கு தெற்கிற் போய் விழுந்திருந்தபோதும், தனது உரு மாறாதிருக்கக் கண்டான்; கூடவே இங்கே இவன் கொண்டிருந்த அகப்புறக்குறிகளும் நிலைத்தனவாய்.

இவன்களுக்கு எப்படி தாம் அங்கே வந்து வந்து விழுந்தோம் என்று தெரியாதுபோலவே, காலத்தினாலா, இடத்தினாலா, அல்லது இரண்டினாலுமேதானா தாம் நிலை பெயர்க்கப்பட்டிருக்கின்றோம் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும், தாவரங்களின் காற்றும் பறவைகளின் எச்சமும் மண்ணின் சூடும் மகளிரின் குரலும் ஆடவரின் மூக்கின்
கீழ்க் காணு/காணா மீசையும், இல்லா புலன்களுக்கு களிம்பு ஆங்காங்கே சுரண்டிய செம்பாய், கால இட நகர்வு கீற்றுக்கோடு காட்டின.

முதலாம் அவன் காலையில் ஊர்க்கிழக்கிலே தன் வீட்டில் எழுந்து தின வரும்படித்தொழில் செய்ய, வடக்குத் திசையில் ஓடும்போது, முட்களின் மத்தியில் வலியுடன் கிடந்த புறக்குறி வகையில் தன்னையொத்தும் அகக்குறி வகையில் தன்னதை ஒத்திரா முதலாம் இவனைக் கண்டான்.

இரண்டாம் அவன் காலையில் ஊர்மேற்கிலே தன் வீட்டில் எழுந்து மாத வரும்படித்தொழில் செய்ய, தெற்குத் திசையில் ஓடும்போது, முட்களின் மத்தியில் வலியுடன் கிடந்த புறக்குறி வகையில் தன்னையொத்தும் அகக்குறி வகையில் தன்னதை ஒத்திரா இரண்டாம் இவனைக் கண்டான்.

இவன்களும் அவன்களும், ஊரில் இரு கோடிகளில், புறக்குறிகளை வைத்து ஒருவரை ஒருவர், காலம் இடம் சாராது, ஆளுமையிற் தம்மிடைச் சார்ந்தோராய்க் கண்டு கொண்டனர்.

முதலாம் இவனும் முதலாம் அவனும் அந்த ஊர் மத்தி நோக்கி, தம்மிடை அகக்குறிகளை அலசிக்கொண்டு தெற்கில் நடந்தனர்.

இரண்டாம் இவனும் இரண்டாம் அவனும் அந்த ஊர் மத்தி நோக்கி, தம்மிடை அகக்குறிகளை அலசிக்கொண்டு வடக்கில் நடந்தனர்.

மத்தியை அடைந்தபோது, புறக்குறிகளிடைத் தெரிந்த நட்புத் தெறித்து, அகக்குறிகளின் புரிதலின் அடிப்படையில் வாய்ப்போர் தொடங்கியிருந்தது, முதலாம் இவனுக்கும் முதலாம்
அவனுக்குமிடையே, இரண்டாம் இவனுக்கும் இரண்டாம் அவனுக்குமிடையே - வெப்பமாக.

போரின் இடையில், புறக்குறிகள் தாமே அறுத்துகொண்டு தூரே எறிபட, அகக்குறிகளின் அடையாளத்தை முன்வைத்து, முதலாம் இவனும் இரண்டாம் இவனும் ஒன்றிப்போனார்கள்.

போரின் இடையில், புறக்குறிகள் தாமே அறுத்துகொண்டு தூரே எறிபட, அகக்குறிகளின் அடையாளத்தை முன்வைத்து, முதலாம் அவனும் இரண்டாம் அவனும் ஒன்றிப்போனார்கள்.

இவன்களுக்கும் அவன்களுக்கும் இடையில் இவன்- அவன் போர் உடலளவிலும் உக்கிரப்பட்டது.ஒவ்வொரு பகுதியாரும் தமது அகக்குறிகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு எதிராளிகளின் குறிகளை இலக்காய் வைத்துத் தாக்கிப் பொருதினார்கள்.

இறுதியில் தோல்வி வெற்றி தெரியமுன்னர், முதலாம் இவன், மீள, தான் இங்கே வடக்கில் விழுந்திருக்கக் கண்டான்; இரண்டாம் இவன், மீள, தான் இங்கே தெற்கில் விழுந்திருக்கக் கண்டான்.

காலத்திலும் இடத்திலும் திரும்பத் தாம் முன்னைய இருப்புகட்கு இறுக்கமாய்ப் பொருத்தப்பட்டிருக்க இரு இவன்களும் கண்டார்கள்; தாவரங்களின் காற்றும் பறவைகளின் எச்சமும் மண்ணின் சூடும் மகளிரின் குரலும் ஆடவரின் மூக்கின் கீழ்க் காணு/காணா மீசையும்,புலன்களுக்குத் தெளிவாய்க் கால இட ஆளுமை அர்த்தங்கள் சொல்லின.

பின்னர், இந்த ஊர் மத்தி நோக்கி தெற்காய் ஓடி வந்த முதலாம் இவன், இந்த ஊர் மத்தி நோக்கி வடக்காய் ஓடி வந்த இரண்டாம் இவனைக் கண்டான்.

அங்கே தூர விழுந்ததாய்த் தெரிந்த முதலாம் இவனின் புறக்குறிகள் மீள ஒட்டிக் கொண்டிருந்ததாய் இரண்டாம் இவனுக்குத் தெரிந்தது.

அங்கே தூர விழுந்ததாய்த் தெரிந்த இரண்டாம் இவனின் புறக்குறிகள் மீள ஒட்டிக் கொண்டிருந்ததாய் முதலாம் இவனுக்குத் தெரிந்தது.

இங்கே இவன்கள் இருவரும் ஒருவர் மற்றவரின் புறக்குறிகளை அறுத்தெறியப் பிடுங்குண்டு கொண்டிருந்தபோது, அங்கே அவன்கள் இருவரும் ஒருவர் மற்றவரின் புறக்குறிகளை
அறுத்தெறியப் பிடுங்குண்டு கொண்டிருந்தார்கள்.

அகக்குறிகள் "அடுத்த முறை காலத்தாலோ இடத்தாலோ நீங்கள் இடம்பெயர்க்கப்படும் காலம்வரை உங்கள் போருக்குள் நாம் காரணம் பேச வரமாட்டோம்" ஒளிந்து கொண்டிருந்தன.

காலத்திலும் இடத்திலும் அகமோ புறமோ, ஸ்தூலமோ சூக்குமமோ, இடையில் ஒட்டிக்கொண்ட அடையாளங்களுக்காக மட்டும், அவன்களும் இவன்களும் அவர்களுக்குள் களமமைத்து, காரணம் செதுக்கிச் சமரிட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள்.

'99 ஜூன் 17, வியாழன் 13:34 மநிநே

கணம் - 456

ஒரு புத்தகம் தாருங்கள்

தரவிரும்பினால்,
ஒரு புத்தகம் தாருங்கள்.
தூக்கத்துக்குத் தூக்கிக்கொள்வேன்;
முடிந்தால், துக்கத்திலுங்கூட.

ஒரு புத்தகம்;
எழுதினார் இன்னாரென்றிலாமல்;
எழுதியது இதைத்தான் என்று
இன்னொருத்தர் முன்னிருந்து சொல்லாமல்;
'இட்டார் இவர்; இது பற்றி
எவரெவர் புட்டுப்போட்டார்' என்ற
பெரும்புள்ளிவிபரமேதும் புதைத்திராமல்,
ஒரு சின்னப்புத்தகம்.

அட்டை கிழிந்த, பத்துப்பக்கப்
புத்தகமானாலும் பாவமில்லை;
அப்படியொரு புத்தகம்
அன்புகூரத் தாருங்கள்.

புரட்டிப்புரட்டிப் படித்து முடித்தபின்னும்,
அணைத்துக்கொண்டு தூங்குவேன் அதை;
விடியும் வெளி.

'05, பெப். 24 வியா 12:19 மநிநே.

Wednesday, February 23, 2005

புனைவு - 17

கழியும் பழையது
இருப்பும் இறப்பும்

அவர் செத்துப்போய்விட்டார் என்று யாரோ பேச்சு வாக்கில் எனக்குச் சொன்னார்கள். அன்று, அவர் செத்து இரண்டு கிழமைகள் என்றும் தெரியவந்தது. சிறுநீரகக்கோளாறா அல்லது இதயநோயா என்று நான் கேட்கவில்லை, இரண்டும் அவருக்கு இருந்தன என்பது நன்றாக எனக்குத் தெரிந்திருந்தும்கூட. ஒருவர் இறந்துபோனார் என்று தெரிந்தபின்னர், முன்னேபின்னே பேசியிருக்காத, எதேச்சையாக வீதியிற் சந்தித்த ஒருவரிடம், எதனால் இறந்தார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் எதுவும் அர்த்தமிருப்பதாக எனக்குப்படவில்லை. ஆனாலும், பேச்சைத் தொடர வேறெந்தப் பேசுபொருளும் இல்லாத நிலையில், அவரிடம் கேட்டேன். "வீதி விபத்து" என்றார். இறப்புக்கான காரணத்தைக் கேட்டதில் அர்த்தம் இருக்கிறதாக எனக்கு இப்போது பட்டது; எனது சோர்வான எதிர்பார்ப்பின் முகத்திலே பச்சைத்தண்ணீ£ர் அடித்தெழுப்பியதுபோல... விறுவிறுப்பாக ஒரு மாற்றுப்பதில் கிடைத்திருக்கின்றது; ...... இதயநோயாலோ சிறுநீரகக்கோளாற்றாலோ இறக்கக்கூடும் என்று எண்ணியெண்ணி எத்தனை பாதுகாப்பாக இருக்கின்றோம்....கடைசியில் ஒரு வீதி விபத்து.....உடல்நோயிலிருந்து எவ்வாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்வது என்று எண்ணிக்கொண்டு புறநிகழ்வுகளை எண்ணாமல் நடந்தபோது, ஏற்பட்ட விளைவாகக் கூட இருக்கலாம்.

சொன்னவரும் நானும் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தோம்.

"அதைச் செய்யவேண்டும்" என்று அவர் செய்ய விரும்பியதாக ஒரு முறை கூறிய ஒரு விடயத்தை எனக்கு இவர் ஞாபகமூட்டிச் சொன்னபோது, எனக்கு நிம்மதியாக இருந்தது. சங்கடத்துக்குரிய மௌனக்கணங்களை உடைக்கும் தெருநாயின் குரைப்பும் கூட இனிமையானது. மிகுதிப்படி, அவர், தான் செய்யவேண்டும் என்று சொன்ன விடயத்தை அவர் வாழ்ந்தது போன்ற மேலும் இரு வாழ்க்கைக்காலத்தை அவருக்கு எவராவது வழங்கியிருந்தாலும் அவர் செய்திருப்பாரா என்பது பற்றி, சொன்னவருக்கும் எனக்கும் ஐயப்பாடு, அதிமாகவே செறிந்திருந்தது. ஆனாலும், அவர் சொன்னதை ஆமோதித்து, "அவர் அதற்காவேனும் இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருக்கலாம்" என்று நான் விசனித்தேன்.

இறந்தவருக்கும் அவரின் இறப்பினைப் பற்றி எனக்குச் சொன்னவருக்கும் இடையில் பல பேதங்கள் இருந்திருந்தன, எனக்கும் அவருக்கும் எனக்கும் இவருக்கும் இடையில் இருந்ததை, இருப்பதைப் போலவே. கிட்டத்தட்ட அவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நின்றிருந்த காலங்களும் உண்டு என்பது எனக்கு தெரியும் என்றும் எனக்குச் சொன்னவருக்கும் தெரியும்; ஆனாலும், அடுத்த நிச்சலன நிமிடங்களின் பின்னால், தானும் செத்துப்போனவரும் சிறுவயதுமுதலே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது எனக்கு எவ்வளவு தெளிவாகத் தெரியும் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு அதனால், தனக்கு அவர் இறந்தது எந்தவளவு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் உணரக்கூடுமோ என்று கேட்டபோது, என்னால் கேட்டவருக்கு மறுப்பு சொல்லக்கூடவில்லை. அவருக்கு,இறந்தவரின் இறப்பு வரைக்கு நீடித்த இருவரிடையான பகைமையினால், இறப்புக்குத் தானும் ஏதேனும் விதத்திலே பாத்திரவாளிதான் என்று வருந்துவதில், ஒரு பிராயச்சித்தம் தேடும் நோக்கோ, அல்லது தான் வருந்துவதினால், இத்தனை வருத்தம் உள்ள தன்மீது உள்ள பகைமையினால், மற்றவர் இறந்திருக்க சாத்தியமில்லை என்று நிறுவும் நோக்கோ வெகுவாகத் தொக்கி நின்றது என்று என்னுள்ளே யோசித்துக் கொண்டேன்.

இறந்தவனின் நிமித்தம் தான் வருந்தும் ஒரு மனிதனை அவனின் உள்நோக்குக் கருதிக்கூட, எந்தவிதத்திலும் வருத்தப்பட்டவைக்கும் நோக்கு இன்னொரு மனிதனுக்கு இருக்கக்கூடாது என்று எனக்குப் பட்டது. அவரினதும் இறந்தவரினதும் நட்பினது நெருக்கத்தினை வெகுவாக, கற்பனையிலே, ஆனால் பொதுப்படையாகச் சிலாகித்துச் சொன்னேன். அ·து அவருக்கு மேலும் உற்சாகத்தினைத் தந்திருக்கவேண்டும் என்பதும் அடுத்துப்புறப்பட்ட அவரின் சொற்களிலும் அங்கபாவங்களிலும் தெளிந்திருந்தன. குறிப்பாக நான் அந்த ஊருக்கு வரும் முன்னால், அவர்கள் இருவரும் எத்துணை நட்பாக இருந்தார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்ட முனைந்தார்; இ·து ஒருவகையில் எனது வருகைதான் அவர்களின் நட்புக்குப் பங்கமாகி, ஆண்டுக்காலங்களின் பின்னர், மற்றவர் இறந்துபோக வைத்தது என்று சொல்லும் தொனியோ என்றுகூட நினைத்தேன். இறந்தவருக்கும் எனக்கும் இடையிற்கூட அத்துணை நெருக்கம் இருந்ததில்லை என்று சொல்லி, ஆனாலும், செத்துப்போனவரிடம் எத்துணை மதிப்பு (நெருங்காமல் தூரத்தே நிற்றல்) எனக்கு இருந்தது என்றும் சொல்லி, அவர்களிடையே பிரிவுக்கோ அதேநேரத்தில் அவரின் இறப்புக்கோ நான் எந்தவகையிலும் பாத்திரவாளியில்லை என்பதை ஒரே வாக்கியத்திற் சொல்லமுயற்சித்தேன்.

இ·து இறந்தவருக்கு நட்பாக இருந்தது என்னுடனான நெருக்கத்தைத் தனக்குக் குறைக்கும் என்று அவருக்குப் பட்டிருக்கலாமோ என்னவோ, தான்கூட பிற்காலத்தில், இறந்தவருடன் சற்று நெருக்கத்தினை குறைத்துத்தான் இருந்ததாகச் சொன்னார். இப்போது, அவரிடமிருந்து இறந்தவர் பற்றிய எந்த இழப்பு ரீதியான அனுபவம் தொனிந்தும் எந்தச் சொல்லும் பிறக்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன். இறந்தவருக்காக, இருப்பவரோடு முரண்படுவதில் ஏதும் அர்த்தமிருப்பதாக எனக்குப் படவில்லை. பிறகு, அதற்காக நான் இறந்தால் அவரும் அவர் இறந்தால் நானும் கவலைப்படுவோம் என்று தெரிந்தது. "அதுவும் தெரியும்" என்றேன்.

இறந்தவர்களைப் பற்றி அவதூறு சொல்லக்கூடாது என்றாலும், இறந்தவர் தனக்கு மிகவும் அநீதியும் துரோகமும் இழைத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார். இறந்த ஒரே மனிதரைப் பற்றி, இருப்பவர்களின் வருத்தங்கள் பலமாதிரிகளில் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்தது. அநீதி என்று அவர் கருதிய ஒவ்வொன்றைப் பற்றிச் சொன்ன பிறகும் இறந்தவரைப் பற்றி அவதூறாகத் தான் பேச விரும்பவில்லை என்பதினை நான் நன்றாக உணர்ந்து கொண்டே அவர் சொல்கின்றதைக் கேட்க வேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார். நான் செவிமடுத்துக் கேட்காமலே ஒவ்வொன்றையும் ஆமோதித்துக் கொண்டிருந்த நேரங்களில் இறந்தவர் எனக்கும் எந்தவளவிற் கெடுதலேற்படுத்த முனைந்திருக்கின்றார் என்பதை அதிகம் தெரியாத இவரிடம் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

பிறகு, என் கையிலிருந்த பையுட்குளிருந்த காய்கறிகளைப் பார்த்துவிட்டு, தானும் அந்தக் காய்கறிகளினையே மிகவும் விரும்பி உண்பதாகச் சொன்னார். அவரின், மேற்சட்டையினைப் போலவே என்னிடமும் ஒரு மேற்சட்டையிருப்பதைச் சொல்லி, ஆனால், அதன் நிறம் வேறு என்பதையும் சொன்னபோது, அவர், காற்பந்தாட்டதில் எனக்கு ஈடுபாடு உண்டா என்பதை வினாவினார். அதற்கு எனது மச்சான், ஊரிலே ஒரு சிறிய காற்பந்தாட்டக்குழுவுக்குத் தலைவன் என்று அவன் பெயரைச் சொன்னபோது, அவன் தன்னுடைய நெருங்கிய நண்பனே என்று மிகவும் குதூகலித்து என் தோளிலே உரத்துத் தட்டினார். வலி எனக்குத் தெரியவில்லை. பின்னர் ஓர் அரை மணிநேரம் மழை வரும்வரைக்கும் வீதியோரத்திலே வெயிலில் நின்று இறந்தவரைத் தவிர்த்து வேறேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தோம்.

போகும்போது, சிறிது தூரம் நடந்தவர், திரும்பி, இறந்தவர் செய்ய விரும்பிய காரியத்தைச் செய்யாமல் இறந்தது தனக்கு இன்னமும் வருத்தத்தைத் தருகின்றது, இனியும் தந்து கொண்டிருக்கும் என்றும், அவர் இருந்திருந்தால் இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் நிச்சயமாக அதைச் செய்துமுடித்திருப்பார் என்றும் திரும்பத் திரும்ப இரண்டுமுறை சொன்னார்.

இறந்தவர் எத்துணை கால அவகாசம் கிடைத்தாலும் அதனைச் செய்யக்கூடியவர் இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த எனக்கும் அவர் அதற்காக உண்மையிலேயே வருந்துகின்றார் என்றே அன்றைக்கும் அதற்குப் பின்வந்த அவரைச் சந்திக்கும் காலங்களிலும் பட்டது.

'99 ஜூன் 18

Tuesday, February 22, 2005

புனைவு - 16

கழியும் பழையது
தெளிவு

சோர்ந்துபோன உள்ளத்திற்கும் அது வேடிக்கையாக இருக்கிறதோ என்னவோ, அந்தக் காய்ந்துபோன அ·றிணைச்சருகு, இலையுதிர்(க்கும்) காலந்தப்பிக் காத்திருந்து, இந்தக்குளிர்காலம் உதிர்மாசியில், சைபீரியக் கூதற் காற்றில்லா வேளையிலே, சட்டென மாரடைப்பிற்போன உயிராய், மேட்டுநிலஞ் சாய்ந்த மொட்டைமரப்பந்தம்விட்டு, சுற்றிச்சுற்றி இந்த வெளித்தேசமாணவர்கட்டிடமதிலுக்கு இந்தப்புறமா, அந்தப்புறமா வந்து நிலந்தொடும் என்று, தனக்குத்தானே போட்டிவைப்பது, பந்தயத்தில் முதலிட்ட ஒருவன், குதிரைகள் எல்லைக்கோட்டைத் தாண்டும் போதுள்ள மனப்பதற்றத்திற்கு உள்ளான ஆர்வம்மீறி.....

..........-"நாசமாய்ப்போச்சு, அனுலாவை நான் கட்டேலாமத் தடை வரத்தான் போகுதோ? சனியன், இழவெடுத்த இந்த இலை அந்தப்பக்கம் விழும்போல இருந்ததாலதானெ, அங்காலை விழுந்தற் கஷ்டமில்லாமக் கட்டுவன் எண்டு யோசிச்சன். ஆய்... தடைதானே வரப்போகுது; இப்பமட்டும் என்ன வாழுதாம்? கட்டேலது எண்டு யோசிக்கயில்லைத்தனெ? மற்றது, உப்பிடி இங்கை இலை விழுறதுக்கும் இலங்கையில கலியாணங் கட்டுறதுக்கும் என்னத்தைச் சம்பந்தமெண்டுறன்? விசர் மூடநம்பிக்கையெல்லே உது?"-(தடையில்லை எண்று வந்திருப்பின், மன சந்தோஷப்பட்டிருக்கும் என்பது வேறு விடயம்). ஆனாலும், புலம்பிய மனம், சின்னவயதிலே பழக்கப்படுத்திப்போன விளையாட்டு இது, இப்போது, அது சோர்வுற்று தன் உறுதிதலரும் காலங்களிற் தன்னைப் பிரச்சனைச் சிந்தனைகட்குட் தளையவைக்காது தப்பவைக்க எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்கிறதோ? இதேமனம், சரிவந்திருப்பின், அடுத்த இலை விழுதற்காய், பந்தய வாக்கியத்தை வேறொரு பிரச்சனையில், தம்பியின் படிப்பில், நாட்டுப்பிரச்சனையில், தயாரித்துக்கொண்டு வேறு காத்திருக்கும்.

இப்போது, கொஞ்சக்காலமாகவே சிந்தனை வேறு, மனம் வேறு என்பதுவாய்ப்படுகிறது. நானே மூன்றாம் ஆளாக நின்று, என் மனம்-சிந்தனைகளின் போட்டிச் செயற்பாடுகளைக் கவனித்து, பரிகசித்து, பாராட்டி, அதற்கான காரணம் தேடி...., வர வர இரண்டினதும் விருப்பு வெறுப்பு வித்தியாசங்கள் தெளிவாகத் தெரிகின்றதாகி.... (இங்கு, மனம், உணர்வும் சிந்தனை, அறிவும் ஆட்டிவைக்கும் போட்டிப்பொம்மைகள் என்பதாகவும் ஓர் அபிப்பிராயம்; ஆனால், சுகுணன் மனோதத்துவத்தில், ஒருவித அறிவும் இல்லாமல் இருப்பவன் என்பதால், இதுபற்றித் தெளிவாகக் கூறமுடியதுள்ளேன்).

"ஹேய், சுகூனான்", மூவரையும் (நான் + மனம் + சிந்தனை) ஒன்றாய்ச் சிலிர்த்துக் கொண்டுதிரும்ப வைத்த Ghanian டேவிட் ஒனலூலூவின் குரல் மேற் தொடர்ந்து, "Look at the blackboard, man"...

...."...Hence, the algorithm of the Newton-Raphson iteration formula.."-'எண்களின்மீதான அலசல் & முறைகள்' கற்பிக்கும் சீன ஆசிரியர் (4Q என்பதை 'ரம்போ சில்வெஸ்ரர் ஸ்ரலொன்' அடிக்கடி (அல்லது அதுமட்டுந்தானோ?) உச்சரிக்கும் 'புணர்க உன்னை' என்பது போல் உச்சரிக்கும் ஆங்கிலம்) இன்னொரு அத்தியாயம் தொடங்கி இருக்கிறார்.

'Iteration'- அண்ணளவான திருப்திவிடை வரும்வரை மீளமீளப் பிரயோகித்தல்; இந்தக் கணிதச்சமன்பாட்டில், எழுமான நம்பிக்கையிற் பிரதியிடுந்தானாமே, தெரியாத கணியத்திற்குச் சமன்பாட்டின் விடையாகவரும்வரை மீளமீளப் போட்டு, அப்படி வரவைக்கும் தானமே, சரியான தீர்வு, அந்தச் சமன்பாட்டிற்கு என்றுகொண்டு..., இந்த நியூட்டனுக்கும் இரப்சனுக்கும் ஏன் இந்தமுறை, கணிதத்திலும் தத்துவத்திற்கு மிகப்பொருத்தமென்று தெரியாமற் போய்விட்டது? வளையியா, நேர்கோடா, இழிவுப்புள்ளி உண்டெனில் எத்தனை, உயர்வுப் புள்ளி உண்டெனில் எத்தனை, எங்கே எனத்தெரியா வாழ்க்கைச்சமன்பாட்டிற்கு, அது விரிதொடரா, ஒருங்கு தொடரா என அறியாத நிலையிலே எழுந்தமானமாகத் தெர்ந்தெடுக்கும் வாழ்வுமுறை சரியா எனத் தீர்மானிப்பது, விடையாக அந்த வாழ்வுமுறையிலேயே திருப்தியடைவதிற்றானே கிடைக்கிறது? எந்த அளவிற்கு எம் எழுமான
நம்பிக்கைப்பிரதியீடு சரியாக எடுப்போம்? கிட்டத்தட்டச் சரியாக எடுப்பினும், எந்தப்பெறுமதிக்கும் விடையும் அழுத்ததிருத்தமக அதுவாகவே வரப்போவதில்லை. வழுவுடன் கூடிய ஒரு விரிசல் இடைவெளி இருக்கத்தான் போகிறது; ஆனால், அதுவே, நாம் எமக்குப் போதும் எனக் கருதிக் கொள்ளும் சகிப்புமட்டிற்குள் அடங்கிவிட்டால்....

...-"மடைத்தனமாக அறிவுஜீவித் தத்துவஞானித்தனம் காட்டுகிறீரோ? சும்மா உங்களைப்போல ஆக்கள் இப்படிக்கதைக்கிறதைக் கௌரவமெண்டும் 'intellectual exercise' எண்டும் நினைச்சுக்கொண்டு, தனக்கும் மற்றவைக்கும் பிரயோசனமில்லாமை,...", மனம் கோபம் காட்டுகிறது.

என்ன செய்ய? எல்லா விடயங்களிலும் எனக்கு உள்ளிருந்தே இவையிரண்டும் உனக்கு முதலிடம் இல்லை எனக்கா என வாக்குவதப்பட்டு, அடிபட்டு, ஒன்றையொன்று பரஸ்பரம் இரணப்படுத்தி, இறைச்சிமுள்ளுக் குத்திக்காயப்பட்ட தன் கடைவாய்க்குருதியையும் சுவைக்கும் நாய்களென...ம்ம்ம்..வேதனை யாருக்கு? எனக்கு, சுகுணன் செல்லத்துரைக்கு, இந்த இரண்டையும் சமநிலைப்படுத்தவேண்டிய நடுவனுக்கு. மனம், மனிதன் உணர்வு நுகரவிடில் வாழ்வேது என்பதுவாக அடம் பிடிக்க, அறிவோ, உணர்வே வாழ்வாகாது, உணர்வுதன் நுகத்தடி என்னிடன்மிருக்கட்டும் என்ற நினைப்பில்....என்ன செய்ய?

நேரத்தைப்பார்க்கிறேன்; 10:30; கடிதம் வந்திருக்குமோ? இன்று யார் யாரிடமிருந்து வந்திருக்கும்? அம்மா, அனுலா, பெனடிக் அல்லது சுகுமார்? (தம்பி, பெட்டிகளைச் சும்மாய் ஒன்றின்மேலொன்றாய் அடுக்காதே); ஒன்றும் வராமலும் போகலாம்; சும்மா ஆசைப்பட்டுவிட்டு பிறகு எதுவுமே இல்லாவிட்டாற் சுருங்கிப்போய்...எதிர்பார்ப்பு குறைவாயிருந்தால் ஏமாற்றமும் குறைவாக இருக்கும். மீண்டும் அகத்தளப்போர் ஆயத்தசங்கநாதம்... மனம் பேனையை எடு என்பதாய்...

அந்தக்காகிதத்தை நான் நேசிக்கிறேன்;
நான் அறிந்தேயிருக்கிறேன்,
இந்தக்குளிரூறும் மாரியிலுமங்கு
என்வீட்டுத் தென்கிழக்குப்புளி
காய்த்துக்குலுங்குவதால் மட்டுமிங்கு
என் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடப்போவதில்லையென்று.
அக்காவின் குழந்தைக்கு ஆறாவது பல்
முளைத்தது காரணங்காட்டி
ஒன்றும் என் அகதி அந்தஸ்து,
இங்கு உயர்ந்துவிடப்போவதில்லை
என்று தெரிந்தவனாகவும் தான்.
என்றாலும்,
அகதிச் சோமாலிக் குழந்தைகளின் குச்சுக்கைகால்கள் சடைத்ததென,
உண்மைமனிதர்களின் எண்ணிக்கைத் துளிர் தாங்கி,
இலையாடை அவிழ்த்தெறிந்து நாணம் தொலைத்த மரச்சாலையூடே,
சந்திக்கடை 'பணிஸ்'*ன் வட்டம்+நிறம்+பொங்குவளம்
நினைவுக்குக் கொணரும் இம்மங்கோலிய முகங்களிடையே,
என் தனிமை ஆசுவாசப்படுத்த,
நான் நேசிக்கும் என்னை நேசிப்பவற்றின்
நினைவுகள்/நிழல்கள் தாங்கி வரும்
நீல, சிவப்பு ஓரவரையிட்ட வெள்ளுறைவசிக்கும்
அந்தக் கடல்கடந்த ஆஞ்சநேயப் பழுப்புக்காகிதத்தை
நான் நேசிக்கிறேன்,
நேசித்தே ஆகவேண்டும்,
என் காதலி,
அ·து ஒட்டிய உன் சிவப்பு உதடுகளை
நான் உள்ளன்பாய்
நேசிப்பது போலவே.

"சுகொணொன்", சூடானியர் அல் பஷீர் அரபு உச்சரிப்புடன் மணிக்கூடு தூக்கிச் சுட்டுவிரல் நீட்டிச் சிரிக்கிறார் (எல்லோருக்கும் இவன் எங்கே 10:45 வருமென்று உயிர்வாழ்பவனென்று தெரியும்; ஆனால், நண்பர்களே, யார் உங்கள் நக்கலை இங்கே பொருட்படுத்தப்போகின்றார்கள்?).

சரசரவெனப் படிக்கட்டில் இறங்கி, வளைவிற் சறுக்கியோட, முட்டுப்படாக்குறையாக, கடிதங்கள் நீட்டி ஸியாட் `வ்ப்ரா (இந்தச் சோமாலியர்கள் நைஜீரியாவுக்குத் தப்பியோடினாலென்ன, `வ்ப்ராங்`வ்போட் (Frankfort) இலிருந்து 'Lufthansa' நியூயோர்க் கடத்தினாலென்ன, அமெரிக்க இராணுவம் சுட்டாலென்ன, சீனா படிக்கவந்தாலென்ன, நடுக்கடலிற் போக்கிடமின்றித் தவித்தாலென்ன, பெயரென்னவோ Syed Farahதான்), "ஹென் லீஹாய் நீ (மிக்க அபாயம் வாய்ந்த/மோசம் நிறைந்த (மனிதனப்பா) நீ), ஒவ்வொருநாளும் கடிதங்கள்" (அந்த வார்த்தைகளூடே சில ஏக்கங்களும் ஊடோடியது அறியாமலில்லை நான்; ஆனாலும் பையனே, நீ நினைப்பது போல பாசம் ஒன்றும் இங்கெனக்குச் சந்தோஷத்தைமட்டும் எடுத்தளித்துக்கொண்டிருக்கவில்லை. உனக்குத் தெளியவைப்பது கடினமென்று நினைக்கிறேன்; நீ இந்தச் சின்ன நகரின் 'திறந்த' பொருளாதாரவிளைவு இரவு நடனவிடுதிகளில் இரண்டு மூன்று மணிவரை பிறந்து இறந்து, மீண்டு(ம்) இறப்பதுக்கென்றே பிற(ழ்)ந்து கொட்டும் ஒளிவண்ணங்கள், பொப்மாலியின் 'No woman no cry', 'றேக்கே' 'டெசி`பல்' இடி ஒலி சகிதம் 'Marlbaro'புகைவளையம் சுற்றி, 'Stainbrau' மதுக்கிண்ணம், உடல்வெப்பநிலை உயர்த்தும் சீனப்பெண் "நலமுடன் வாழ்"வதற்காய் உரசும்போது, நான் என் அறைமூலையில் ("Cremation chamber"-நேபாளி, சிரோன்மணி பஞ்சியாரின் கருத்து(ம்)) கட்டிலிற் தலைபுதைத்து, கடிதங்களிற் கண்ணீர்க்கறை வரைதலும் புகைப்படங்களின் பார்வைகளில் முக்கோணக்குன்று கடற்கரையில், வீதிகளில், மலைநாட்டுத்தலைநகர் ஏரிக்கரையில் நடப்பதும். சிலவேளை, நான் நினைப்பதற்கு எதிர்மாறாய், நீயும் அந்தச் சல்லாப விடுதிகளினுள்ளேயும் கூச்சலிடு கூட்டத்துள்ளேயும் தனிமையில் சோமாலிய வாழைத்தோட்டங்கள் உள்ளே வாழலாம்; யார் கண்டது? ஆக, சிந்தனைகள் அவரவர் சார்பானவை, தம்பி (குறிப்பாக, மற்றவர்களைக் கணிப்பிடுகையில்)).

தகனவுலை அறைக் கட்டிலிற் சப்பாத்துக்களுடன் விழுகிறேன். எதை முதலில் உடைக்க? மீளச் சமர்க்களம் என்னுள் அமையவிழை...எல்லாத் தெற்காசியர்போல எனக்கும் மண்டையைப் போடும்போது கேட்டாலும் தாயா, தங்கையா, மனைவியா, மகளா உயர்த்தியென்று கூறமுடியாது. என் காதலுணர்வு குற்றமாக இல்லாதபோதும், வீட்டார் அங்கீகரிக்காதவரை, குற்றவுணர்வு தவிர்க்கவியலாததே; தானே பார்த்துக் கல்யாணம் செய்துவைத்த மருமகள்மீதே, தன் மகனின் அன்பு பங்கிடப்படுகிறதே என்று தாய் பொறாமைப்படும் வேளையில், என் அம்மாவின் நிலை சற்று இன்னமும் கடினமானதுதான், என் காதல், அதன்மேலாய் அதுள்ளிட்ட மதம், மொழி, நாட்டுநிலைமை காரணமாக. (அந்த குற்றமனப்பாங்கை என்னிடமிருந்து அறிவு போலித்தனமாயேனும் மூடிமறைக்கும்படி, அம்மாவிற்கே முதலிடம் கொடுக்கிறேன் என்பதுபோல்) வீட்டுக்கடிதத்தை எடுக்கிறேன்.

இரண்டு கிழமைகளுக்கு முன்போட்ட கடிதம். முதற்பந்தி எப்போதும் போல வாசிக்கத் தேவையில்லை; அறிவேன்; அதே, 'அன்பின்..,நாம் நல...அதுபோல்...; உடல் நல...நன்றாகச் சாப்பி....; குளிருக்குள் வெளி......' எல்லாத்தாய்மாருக்கும் இப்படி தாம் எழுதிவிட்டால், பிள்ளைகளுக்குக் கஷ்டம் ஏதும் வராது; பிள்ளைகளும் வரிக்குவரி அந்தவரியிலேயே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அம்மாக்களே, உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, இந்தத் தக்காளிப்பாகுக்குள் நெளியும் புழுப்போன்ற பன்றியிறைச்சியுடன் பசையாய் ஒட்டும் சோற்றுடனும் அவதியுற்றபடி, புட்டுக்கும் முட்டைப்பொரியலுக்கும் மாசிச்சம்பலுக்கும் நாங்கள் நாக்கைச் சப்புக்கொட்டுவது; நீங்கள் அறிந்திருக்கப்போவதில்லை, இந்த சைபீரிய வான்+நிலம் தொட்டுவரும் கொடுங்காற்று நான்கைந்து உடுப்புகளூடே உடல் நுழைந்து மூட்டுமூட்டாய்க் குறிவைத்துக் குத்தி 'wintergeno' தடவக் கேட்கையிலே, நாம் ஊரின் கோடைவெயிலின் கடற்குளியல்களில் மீண்டு நீந்துவதை; உங்களுக்கு யோசிக்க அவசியமில்லை, இங்கு, நாசி மேட்டுச் சந்துகளில் உற்பத்தியாகி ஒருங்கற்கண்கீழ்ச்சுருக்கவளைவுகளின் தொடலிவளையிவடிவு கொண்டு, புவியியலின் சமவுயரக்கோடுகள் என்பதாய்க் கீழோடும் முகச்சுருக்கங்காட்டி, எந்திரம் உயிர்ப்பூட்டிப் புறப்படத் தயார்நிலையிருக்கும் 'bus' என மென்நடுக்கம் உடலோடச் சாய்ந்தமர்ந்திருந்து மதிய வேளைகளிற் கலாவரையைத் துரும்பு வைக்கும் கிழவிகளின் முகங்களில் நாங்கள் காணும் அம்மம்மாக்களினால், அந்நிய நண்பர்களுக்கு எம் துளி(ர்)க்கண்ணீருக்கு அபாண்டமாய்ச் சுழல்காற்றுதூற்று மணலைச் சுட்டுவிரல் காட்டுவது. ஆக, உங்கள் எண்ணங்களில் (நீங்கள் கவலைப்படக்கூடாதேயென்றெண்ணி) நாம் எழுதும் கடிதங்களின்படி, "பிள்ளை உலகப்பிரசித்திபெற்ற சீனவுணவுகளில் உடம்பை உருளையாக்குகிறான்; உடலுக்குகந்த குளிர் சீதோஷணத்தில், உருவத்தே மெருகும் பளபளப்பும் ஊட்டுகிறான்; பல தேசத்தோருடன் சேர்ந்து உலகைக் கண்டு களிக்கிறான்." ஆனால், அம்மாக்களே, நாங்கள் சைபீரியன் வாத்துக்களோ, இலங்கை அமைச்சர்களோ அல்ல,கோடையில் சைபீரியாவிற்கும் மாரியில் திசமகராமவிற்கும் புலம்பெயர்ந்தோடிக்கொண்டிருக்க... (உங்களுக்கு வ.ஐ.ச. ஜெயபாலனின், 'மக்வூ' பறவைகவிதை விளங்கப்படுத்தவும் சேரனின், 'பனங்கொட்டைகனவுகள்' பற்றிச் சொல்லவும் இம்மனநிலையில் என்னால் முடியாது); நாங்கள் சட்டையுரிக்கப் பாம்புகள் இல்லை; இடநிறம் மாறப் பச்சோந்தி வகையறாக்கள் இல்லை; மனிதர்கள்; வெறும் உணர்வுகளுடனும் அறிவுடனும் போராடும் தீப்பிழம்பு அகப் போராளிகள்; எங்களுக்கும் மனம், உணர்வு.....--

--"நிறுத்து! மனமே, இதுவல்ல உன் உணர்ச்சிப்பேச்சுக்கான தருணம்; மேலே கடிதத்தை வாசி", பெரியமனிதத்தோரணையிற் காத்திருந்த சிந்தனை அதட்டியது.

"...வேறென்ன?"; இந்த 'வேறென்ன'விற்குப்பிறகுதான் புதிதான ஏதாவது விபரங்கள் கடிதத்தே தொடரும். "..தம்பி படிக்கிறானில்லை; நெடுக ஊர்சுற்றல். ஊரிலையென்றாற் கண்டபடி ஆமிச்செக்கிங்; சொல்வழியும் கேட்கிறானில்லை; என்ன செய்யவென்றே தெரியவில்லை." -அம்மா, எந்த இடத்திலாவது மேல்நிலைப்பள்ளிக்கூடம் படிக்கும் பையன் படிப்பிலே மட்டும் கவனம் வைத்துச் சுற்றாமல் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நான் என்னவென்றால், இழந்ததற்காக ஏங்கிக் கொண்டு, அந்தக்காலம் மீண்டும் வராதா என்று.... 'Cuba' படம் பார்க்கப்போய், இறுதியில் என் இளமை ஆதர்ஸ நாயகன், 'Fidel Castro' அமெரிக்க அடக்குமுறையிருந்து விடுபட்ட 'Havana' மக்கள் 'Cuba, Cuba' எனக் ஆர்ப்பரிக்கப் பேசுகையில், அரங்கில் நண்பர்களுடன் கதிரைகளின் மேலேறிக்கொண்டு நின்று 'ஈழம், ஈழம்' என்று கத்தி, அரங்கு உரிமையாளர் வந்து கெஞ்சி இருத்திய காலத்திற்காக ஏங்குகிறேன் அம்மா; இரவு ஏழு ஐம்பத்தைந்துக்குக் கொழும்பு புறப்படும் புகையிரதத்தின் காவலாளியின் பச்சைகொடியை, காட்டிக் கொண்டிருக்கையிற் பறித்துக் கொண்டு சைக்கிளிற் பாய்ந்தோடிய காலமெண்ணிப் புழுங்குகிறேன் அம்மா. அந்த நண்பர்களில் எவருமே இன்றிங்கில்லையே! சிவம் மட்டும் உவ்விடம் விட்டு நகரேன் என்பவனாய்; மிகுதி, எத்தனை பேரை நாட்டுப்பிரச்சனைக்கு, எந்தெந்த விதங்களிற் பலிகொடுத்தேன்: பொது எதிரிக்கெதிராகப் போரிட்டு மடிந்தவராய், அப்பாவித்தனமாகக் காணாமற் போனவராய், தமக்குள் ஆயுதங்களைக் குறி பார்த்தவர்களாக, போதாக்குறைக்கு உலகெங்கும் அகதிகளாய்ப் பரந்து என்னைப் போலவே இந்தக் கணங்களிற் தத்தம் அம்மாக்கள், காதலிகள், நண்பர்கள் கடிதங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவராக... அதனால், அவனை, தம்பியை விட்டுவிடு. படிக்கச்சொல்; பாதுகாப்பாக இருக்கச்சொல்; அவை அவசியம்; ஆனால், அந்த இளமையின் உலகறியா இனிமையைக் கெடுத்து விடாதே. இக்கணத்தே, அவன் அதிகம் மீறிய கவனம், கவலை, 'குக்குர்பிட்டா' என்பதைத் தாவரவியற் சோதனைக்கு, எப்படி எழுத்துப்பிழையின்றி, ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி எழுதுவது என்பதாக மட்டுமே இருக்கவிடு. இந்தப்பூசணிக்காய் உலகச்சுமைகள் இப்போதைக்கு அவனுக்கு வேண்டவே வேண்டாம். 'தா
வு

டு
த்தவரிக்கு.'
"அம்மம்மா ஒரு மாதிரித் தனக்குத்தானே ஆள்மாறாட்டமாய்க் கதைத்துக்கொண்டிருக்கிறா; யாழ்ப்பாணத்திற் கொண்டுபோய் விடுவிடு என்று போகிறவருகிற எல்லோரிடமும் கேட்டபடி; சில நேரங்களில், இதையே யாழ்ப்பாணம் என்று நினைத்தபடி தனக்கே கதைவேறு..."- கண்களின் விளைவு எழுத்தை அழிப்பதாய்.... அம்மம்மா; என்னை அம்மாயும் அப்பாவும், நான் வாசல்வரை ஓடிஓடிக் கதறக்கதறவும் விட்டுவிட்டு 'வாத்திமார்' வேலை பார்க்கப்போக, வளர்த்துவிட்ட அம்மம்மா; என் அம்மாவை விட எனக்குக் கூடப் பரிச்சயமான அம்மம்மா; தைப்பொங்கல், எனக்கு என்றோ நம்பிக்கை செத்துப்போன வருடப்பிறப்பு, தீபாவளிகளில் இன்றும் ஒரு ரூபாய்க்காசு (ஐனாதிபதி தலையில்லாதது) மிக அதிகம் என்றெண்ணிக் கொண்டு, 'கைவியளமாய்' தன் அடுக்குப்பெட்டி திறந்து தான் செத்து, போகும் பாடையின்பின் விசிறி வரச் சேமித்துவைத்திருக்கும் ஒரு இரு சதச் 'சல்லிக்காசு'களுளிருந்து தேடியெடுத்து, "எள்ளுருண்டை வாங்கித் தின்னடா, மேனை' என்று ("இப்பவும் ஆச்சிக்கு இவன் பிடிச்சு மூத்திரம் பெய்யத்தெரியாத பெடியனெண்டு எண்ணம்"-சிவம் நக்கலடிப்பான்) தரும் அம்மம்மா; வடமராச்சித் தாக்குதலோடு அம்மா, "உனக்கு அங்கை தனியயிருந்து சரிவராதயணை, வா" என்று மனிசியின் மனம்நோகநோகக் கொண்டுவந்து ஆனையிறவுக்கு இப்பால் வைத்ததிலிருந்து, போகும் எல்லோரிடமும் "அங்கை என்னைக் கொண்டு போய்விடடா, ராசா" என்றபடி. இடையில், படகால் முல்லைத்தீவால் ஒருமுறை, ஒப்பந்தத்தில் ஒருமுறை கொண்டு போய் அவ பிறந்தமண் காட்டியபோதெல்லாம் கண், முகம் கண்ட தெளிவு...."நீ வரும்வரை (எப்போது திரும்பிப் போவேன்?) இருப்பனோ தெரியாதடா; எனக்குக் கொள்ளிவைச்சப்பிறகு எங்கையாச்சும் போறதெண்டாற் போ, குஞ்சு." -ஆனால், அம்மம்மா என்ன செய்ய, Bigbang தத்துவத்தின்படி, அகிலம் விரிந்து கொண்டல்லவா போய்க்கொண்டிருக்கிறது? வந்த நான் இங்கிருந்து கொண்டு அங்கு வாழ்பவனாக....

சிலிர்த்தபோது, "அப்பாதான் திருமுறைக்கழக நூலகத்திற் பொறுப்பாக இருக்கிறார், தனக்கும் பொழுது போகவேண்டாமோ என்று சொல்லியபடி. சமையலுக்குக் கூடமாட உதவிசெய்து தந்துவிட்டு அவர் பின்னேரம் போனால், இரவு வாசிகசாலை பூட்டி வரும்வரை நான்தான் தனியே அம்மம்மாவுடன் கொட்டுகொட்டு என்று முழித்தபடி.." - அடுத்தவரிகள் இப்படி மூளையிற் பதிந்து கொள்கிறன. அம்மா, குருவிகள் நெடுகக் குஞ்சுகளாகவே இருக்கமுடியாது. இதுதான் நியதி; பழைய உவமைதான் என்றாலும், அதைவிடத் தெளிவாக ஏதும் உன், எங்கள் இந்த நிலைமையைத் திருத்தமாகச் சொல்லமுடியாது. வாழக்கற்றுக்கொள். நீயும் அப்பாவும் இனி வாழப்போவது ஓர் இனிமையான பகுதி- சொல்லப்போனால், உன் வாழ்விலேயே இதுதான் மிக இனிமையான பகுதி. உடல் தெம்பாக இருக்கும் காலங்களில், காதல் என்பதிலும் காமம் என்பதன் உணர்வே மேலோங்கி நின்றிருக்கும்; பின், பிள்ளைகள்-நாங்கள், தொல்லைகள், உங்கள் இடைப்புகுந்து, இருவரையும் தள்ளித் தள்ளி ...., இனித்தான் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழப்போகும் உண்மையான காதல்வாழ்க்கை. என் வாழ்த்துகள். அப்பாகூட எவ்வளவு மாறிப்போ...("ஓஹோ! குடும்ப ஆலோசகர், 'போதனை' பண்ணுகிறீரோ?"-குத்திய மனத்தை, சிந்தனை துரும்பென்றும் கவனித்ததாகத் தெரியவில்லை.)....எனக்கு, அந்த ஏரிக்கரை நடை நேரத்தே வயோதிபத்தம்பதியினரைக் காணுகையிலெல்லாம் என் கையைக் கண்கள் பனிக்க இறுக்கும் அனுலா ஏனோ ஞாபகத்துக்கு வர, மிகுதி அம்மாவின் கடிதத்தை அவசரவசரமாக(ப்) மு(ப)டித்தேன் - அதிகம் ஒன்றுமில்லை ('AIDS' ஊர்வரை வந்துவிட்டது; படித்து முடித்து மேலேயெங்காவது படிக்கும் வழியைப்பார்; சுந்தரத்தாற்றை குமாரை 'ஏஜென்சி'க்காரன் ஏமாற்றித் தென்கொரியாவி...), அனுலாவின் எண்ணம் இவற்றுள் மனம் ஊடுருவாமற் கவனம் திசைதிருப்பி...

...அனுலா; கடிதத்தை எடுக்கின்றபோதே ('அந்தப்பழுப்புநிறக் காகித..') அம்மாவின் கடிதத்தில், மனம் நெகிழ்ந்ததுபோலவேதான் (இரண்டும் ஆழ்நெகிழ்ச்சிதான்; ஆனால், வித்தியாசமான உணர்வினதாய்...). சில கணங்கள், இறந்தகாலத்தில், கண்டி 'British Council', 'சாகரஜலய' படவிவாதம், ஏரிக்கரை மாலை மென் நடைகள்; இன(வி)வாதம் எழாது எழுந்த அன்பு, இன்று கார்ந்தவமணம் பண்ணாக்குறையாய்ப்போய், நான் இங்கு வர, அவள் அங்கே பல்கலைக்கழகம் போனபடி...எம்மைப் பற்றியே சதாயோசித்தபடி எல்லாக்காதலரும் தாம்மட்டுமே உணர்வதாக அறியும் அதே கிளர்ச்சிகள்; உருக்கிரும்புபோல், மென்னுணர்வுகளில், என்னுள் நெகிழ்பவளாய், கடினநேரங்களில், என்னை இறுகித் தாங்குபவளாய்,...அனுலா!

ஆனால், பெனடிக் சொல்வது இந்நேரங்களில் ஞாபகம் வந்து குழப்பும்; "சுகுணன், இந்த ஆரம்பகாலங்களில் எல்லாமே இனிமையாக, ஒருவருக்கொருவர் புதிராய் உள்ளவரை, ஒருவருக்குள் ஒருவர் நெகிழ்வதாகவேயிருக்கும்; ஆனால், காலம் எல்லா உணர்வுகளிலும் உறவுகளிலும் அவை உறைந்து மாறாமலிருக்கையிற் சலிப்பையே தரும். உனக்குப் பிடித்த உணவு என்றாற்கூட உனக்கு அதையே நெடுகச் சாப்பிடமுடியாது, பார். அதனால், எந்த உறவிலுமே, அதிகம் எதிர்பாராமல்...எதையும் இப்போதே முடிவு -இவள், இந்தவிதத்தில், இப்படித்தான்- என்று கட்டாமல், அதையும் ஒரு அனுமதி இடைவெளிக்குள் எதிர்பார்க்கப்பழக்கப்படுத்திக்கொள். கல்யாணம் மீதான எதிபார்ப்பு இப்படி இருப்பது நல்லது; மிகத் திருத்தமாகத் திட்டமிட்டுச் செய்தும் எதிர்பார்க்கும் அளவு, காலம், வகையில் அது பயன்படாமற் போவதில் வரும் நட்டத்திலும், எழுமாற்றாகத் (அவன் இச்சொல்லைப் பயன்படுத்துவது, ' பெரிதாக எதிர்பார்க்காமல், ஓரளவு திட்டமிட்டு' என்ற தொனியிலென எனக்குப்படும்) தேர்வதில், அதிகம் சிறப்பு இல்லவிடினும், அதற்காக முதலீட்டிற்குப்
பங்கமில்லை." இடது உள்ளங்கை, உயர்த்திய தலை -நெற்றி, நாடி, கழுத்து- வரை கீழிழுத்து நிறுத்தி, பின், எடுத்துப் பெருமூச்செறிகிறேன். ம்ம்.ம்..ம்., இப்போது, இந்தச்சிந்தனை என்னை இன்னும் குழப்பும். வலையுட் துடிக்கும் (மேலும் சிக்குதற்கென்றே) மீனாய்க் கரை கிடந்து வெய்யிலில்.... இப்போது என் பிரச்சனை அதுவல்ல; இருவரும் பிற்காலத்தில்லென் ஊரில் வாழ எந்தவளவிற்கு இச்சமூகம் இடம் கொடுக்கப் போகின்றது? ஒவ்வொரு சமூகப்பிரச்சனையையும் எந்தவளவிற்கு இருவரும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கையோடு உள்வாங்கப் இவர்கள் விடப்போகிறார்கள்? மற்ற நண்பர்கள் சொல்வதுபோல் இருவரும் வேற்றுநாடொன்றில் வாழ்ந்துவிட்டாற் பிரச்சனையில்லையா? ஆனால், வேர்களை அங்கே வைத்துவிட்டு, விழுதுகளை மட்டும் எப்படி வேற்றுமண்ணில் நாமூன்ற....-சிந்தனை தடித்து உணர்வுடன் யுத்தவியூகம் வகுத்தலிலிருந்து, தப்புதற்காய்,

அநேக நண்பர்கள் வந்த புதிதிற் கடிதங்கள் எழுதிக் குறைந்து, இப்போது அற்றுப்போன நிலையிலும் வரும் பெனடிக்கின் கடிதம் உடைக்கிறேன். வழமையான தத்துவப்போக்கு. இடையே, "'முழியன்' நந்தன் போனகிழமை கதைக்கையிலே, 'என்ன சமதர்மவாதி சீனாவிற் போராட்டம் நடத்தப்போயிற்றாரோ?' என்று உன்னைப் பற்றிக் கேட்டான்" - (நந்தா, சீனா ஒரு சமதர்மநாடா? நீகூட நகைச்சுவையாகப் பேசக்கற்றுக்கொண்டாய் பார்.) நந்தன் மட்டுமல்ல, அநேகர் என்னை இப்படித்தான் பார்க்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அது தவிர்க்க இயலாதுதான். அவர்களில் என் பிம்ப வடிவுப்படி நானும் என்னைத் தக்க பாதுகாப்புவலயத்துள்ளிருத்திப் பல்கலைக்கழக வளையத்துள், மொத்தச் சிவப்புப்புத்தகங்களுள் மேற்கோள் மேய்ந்தெடுத்தெறிந்து, முற்போக்காளியெனக்காட்ட வெறும்தேனீரும் அழுக்கேறிய 'denim'உம் சமதர்மமும் ஈழமும் பேசும் ஒரு 'bourgeois' புத்திஜீ(சீ)விதான் (அப்படியுந்தானோ? தான் ஓங்கச் சந்தர்ப்பம்வரும்வரை, சமதர்மம் பேசி....). என்னைப் பொறுத்தவரை, '83ல், என்னோடொத்தவர் எல்லோரும் நாடென்று போக, கோழைத்தனத்தாற் பின்தங்கியதால், இப்போதாவது அந்த நாடென்றதற்கு ஏதாவது வகையில், ஏதாவது நல்லது செய்வோமென்று எழுந்த எண்ண அரிப்பினா...இன்று 'international call' ஒன்று எடுத்து அனுலாவோடு கதைத்தால், கொஞ்சம் மனம் ஆறுதலாக-->தெளிவடையும்; ஆனாலும், அ·து ஆற்றுநீர் பிரித்து அடி தேடுவது போலத்தான்; மீண்டும், நீர்மூடும். ஆனாலும்...11:00 மணி 'சூழலியல் ஒழுங்கமைய ஆய்தல்' வகுப்புக்கும் போகாம.. என்..ன...வாழ்..படி.....இப்ப....அம்மா...நாடு...அனு....நாளை..குழ..ப்.ப...ம்.....

.....கண்விழிக்கும்போது, முன்னே, என்னையறியாமலே குணம்+கொள்கை காலத்துடன் கற்பிழக்கக்கூடாதென்று என் படுக்கையின் நேரெதிரே சுவர்மேலே ஒட்டியிருந்த செஞ்சிலுவைச்சங்கச் சுவரொட்டி, 'He got in the way of somebody's war'- தன் பாரத்தின் மேலாக மூட்டை தூக்கிக்கொண்டு, ஓடும் மக்களிடையே, முகம் தெரியாது முதுகு காட்டிச் செருப்பின்றி ஓடமுடியாது நகரும் உடைகிழிந்த முகவரியற்ற பையனின் சிறு உருவம். சிந்தனையும் மனமும் மாறி மாறிக் குழப்புகின்றன.

சிந்தனை :- தம்பி, நீ யார்? நான் உனக்கு என்ன செய்யமுடியும்? ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு எப்படியப்பா வழிகாட்டமுடியும்?

மனம் :- ஐ.நா. சபைச் சமாதானப்படையிற் சேர்ந்தாலும் ஒன்றும் அவனுக்கு நீ பண்ணிவிடமுடியாது. போரில் ஈடுபடுபவர்கள் சுட அவனோடு சேர்ந்து நீயும் ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடமட்டுமே உனக்கும் அனுமதியுண்டு; அவ்வளவே; அதைவிட்டுவிட்டு, அமெரிக்க இராணுவத்திற் சேர்ந்தாலாவது, அவனுக்கு விடிவு கிடைக்கிறதோ இல்லையோ, அவன் பேரைச் சொல்லி, ஆயுதம் தூக்கி அகிம்சைக்கும் அமைதிக்கும் உழைப்பதாக வருங்காலம் உனக்குச் சமாதன நோபல் பரிசுக்குச் சிபார்சு செய்யும்; வேறென்னத்தை உனக்குச் சொல்ல? பிறகேன், இந்தப் படத்தை ஒட்டிவைத்திருக்கின்றாய்?

சிந்தனை :- பிற்காலத்திலாவது ஏதாவது செய்யவேண்டும் என உணர்வோடு இருக்க. தனிப்பட்டமனிதனாகவாவது, நல்லதைச் செய்..

மனம் :- ஓஹோ! முழுச் சமூகக்கொள்கை மாற்ற, மக்கள் இயக்கம் அமைக்கப்பேசியவர், இப்போது கொள்கை மாற்றுவதே கொள்கையாகி, இனித் தனி நபராகிச் சேவை செய்யப்போகிறீரோ? பிறகு, என் எழுத்து ஏதாவது சாதிக்கும் என்று மட்டும் இரு கதை, ஒரு நாடகம், மூன்று கவிதை எழுதி, புலம்பெயர் சஞ்சிகையில், தேசியமுதலாளித்துவம், தரகுமுதலாளித்துவம் விவாதத்தில் உம் நாசியையும் நுழைத்து, பின், அதுவும் தேய்ந்து, BBC ஊடாக மூன்றாம்தர அரசியல்வாதிகளிடம் தொலைபேசியில் முட்டாள்த்தனமாகக் கேள்விகள் கேட்டு....

......."நிறுத்து!", கத்திய சிந்தனையின் குரலில், மனம் தரிப்பிட, "நான் வேறு என்னதான் செய்யமுடியும் என்கிறாய்? உங்கள் உந்தலில் எல்லோரும் பொது எதிரிக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். காலப்போக்கில், என்ன பண்ணவைத்தீர்கள்? அவரவர் தத்தம் சொந்த எதிபார்ப்பை மட்டும் யோசிக்கப்புறப்படவும் தக்க வைத்த சிந்தனைகளைத் தடம் புரட்டவும் யார் காரணம்? நீங்கள், மனங்கள்தானே? நீங்கள் உங்களுக்காக, தனிமனிதர்களுக்காக மாறலாம். நாங்கள், சிந்தனைகள்; விருந்தில்லாவிடினும் மருந்தாவது கொடுப்போம் என இன்றும் பொது நலன்களுக்காகப் போராடுவது, உங்களுக்கு நகைப்பதற்குரிய விடயமாக உள்ளதோ? இதுவும் கொள்கைமாற்றம் ஒன்றுமில்லை; பொதுநலக்கொள்கை நிலைத்திருக்க எடுத்திருக்கும் ஒரு யுத்த தந்திரமே. எழுதுதல் கூட என்ன பத்திரிகைகளுக்கு, சஞ்சிகைகளுக்கு அனுப்பவென்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? எனக்கு அ·தொன்றுதானே வடிகாலாகவுள்ளது. இப்போது, உள்ளிருக்கும் போராட்ட உணர்வை அந்த வடிகால் வற்றிப்போட்டுவிடுமென்று, அதையும் தள்ளிப் போட்டு....இருந்துவிட்டு எப்போதாவது இவன் உணர்வு மிகப்பொங்கையில், சமநிலை தடுமாறக்கூடாது என்றல்லவா எழுதுகிறேன்? சோர்ந்திருக்கும் மக்களிடம் செயற்கையாக போராட்டவுணர்வைத் திணித்துக்கொண்டிருக்கமுடியாது. முதலில், சோர்ந்திருப்பவரைத் தடவிக்..."

மெல்லியசிரிப்பு; மனந்தான்; "மன்னித்துக்கொள்; உன், தனிநபர்-சமூகம் உறவுப்பிணைப்பிலான கருத்தமைப்பில் எங்கோ ஏதோ தவறு உள்ளதாகப்படுகின்றது, எனக்கு. மீண்டும் நீ அதை ஆய்ந்து அலசல் நல்லது. தனிநபர் சுற்றியே சமூக..."

நல்லதோ கெட்டதோ, இந்த நாட்டுப்பிரச்சனை எங்களின் பாரம்பரியக் கருத்துச்சிறை தகர்த்து வெவ்வேறு தளங்களிற் சிந்தனை தட்டவைகிறது. ஆனாலும், இக்கணத்தே இவையிரண்டினதும் போராட்டத்தை என்னாற் தாங்கவியலாது. இல்லை, இல்லை, இல்லை. தற்போதைக்கு இவையிடமிருந்து தப்பிக்கவேண்டும்; மேசைமீதிருந்த புத்தகங்களில் ஏதோ ஒன்றைத் தூக்குகிறேன். ஜே. கிருஷ்ணமூர்த்தியின், 'Commentaries on living' - எழுந்தமானமாய்ப் பக்கம் திருப்புகிறேன்.

Love: Is it love when there is complete identification with another? And is not th....-

-தூக்கி எறிகிறேன்; இந்த மனிதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாவிடில், அனுலா மீதான என் தஞ்சமனப்பாங்கும் கெட்டுவிடும்; பிரமராஜன் கவிதைபோல எவருக்குமே புலப்படாடாது, புரியாது...; எனக்குள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. (கதிர்காமக்கந்தன்கோவிற் கப்புராளையின் வாய்க்கட்டுள் அந்த ஆள் என்ன சொல்லுமோ தெரியாது என்பதேன் இப்போது ஞாபகம் வருகிறது?)

ஆனால், மூன்று விடயங்கள் மட்டும் புரிகின்றன. ஒன்று, நான் இப்போதே இதற்கொரு குறுகியகாலத்திற்கான தீர்வாவது காணவேண்டும், குறைந்தபட்சம், இந்த இறுகிய சூழ்நிலை ஓரளவு இளகும்வரையாவது. இரண்டாவது, இந்த என்னுள்ளேயுள்ள எதிரிகளை ஒறே சீராய் வண்டியிழுக்கும் மாடுகளென ஒன்றுக்கொன்று இயைந்து போகுமாறு நண்பர்களாக்கி என்னைச் சமநிலைப்படுத்த ஒருகால அவகாசம். இறுதியானதும் முக்கியமானதும், எனக்கொரு, காற்சட்டை இரு ஓரப்பைகட்குள்ளும் கைவைத்தபடி சமநிலைச்சிந்தனை/உணர்வு தவழவிட்டு, கல்லொன்றைக் கால்தட்டதட்ட ஒரு தனி நீள் நடை.

மெதுவாக நடக்கிறேன், இந்த மிருகக்காட்சிச்சாலைவிலங்கென எனைப் பார்க்கும் இம்மனிதரிடையே.

எனக்கு(ள்) என்ன நடக்கின்றது? மீளவும் மூன்றாம் மனிதனாக எனக்கு நானே ஆகி உள்ளெட்டிப்பார்க்கிறேன். என் வயது என்னை என் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க வைக்கின்றது; என்னை நம்பியுள்ள பிணைப்புகள் என் கொள்கையின், உறுதியின் வடிவத்தைத் தமக்கேற்ற வடிவத்தே தாமறியாமலே உருக்கி வனைக்கவிளைகின்றன. என் கொள்கை, சிந்தனை என்பனவோ தம் உணர்வை, மனதை எப்போதும் புரியாத ஏதோ ஒன்று நெருடிக் கொண்டு இருக்காத வரையில், வகையில், சூழற் கஷ்டமிருப்பினும் மனக்கஷ்டத்தைக் குறைக்கவிரும்புகின்றன. பார் மனதே, சிந்தனை கூட உனக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுகின்றது. ஒத்துப்போகக்கூடாதா அதனுடன்? படிப்பு முடிய மேலே படிக்கமுடியுமானாற் படிப்போம். பிறகு, இயலுமானவரை ஊருக்குத் திரும்பி விடுவதுதான் என்னைப் பொறுத்தமட்டிற் சரி. இல்லாவிட்டால், அம்மம்மா இப்போது கவலைப்பட்டுக்கொண்டு உள்ளத்தால் அழுந்தியிருப்பதுபோல என்னாலும் அழுந்திக் கொண்டு இருக்கமுடியாது. ஆனால், என் முன் தலைமுறை (அப்பாபோல, அறுபதுகளில், சாதியமைப்புகளுக்கு எதிராய்ப் போராடி, தன் உற்றாராலேயே கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டும் தான் தனக்குச் சரியெனப் பட்டதைச் செய்தது சரியென்ற மனோதிடத்துடனிருந்துவிட்டு, இன்று எந்த வெளியுலக நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க விரும்பாது, தன்னுள்ளேமட்டும் சமூக அநீதிகளுக்குச் சாபமிட்டபடி, புதினப்பத்திரிகைகளும் புத்தகங்களும் பூந்தோட்டமும் பூனைக்குட்டிகளுமே கதியாய்) இருப்பதுபோல், போராட்டத்தளர்வு என்னில் ஏற்பட்டுவிட விட்டுவிடக்கூடாது. இன்று, காலத்தின் குழப்பத்தால் என்னிற் தளர்வு உண்மைதான். அத்துடன், என் அடுத்தசந்ததிக்கு இந்தவயதில் இருக்கப்போகும் தாக்கத்தையும் காட்டப்போகும் போராட்டகுணத்தையும் விட நான் குறைந்தளவினையே என் வெளிக்கொணர்வாக்கமுடியும். ஆனால், ஒன்று இங்கு நன்கு விளங்குகிறது. அப்பா என்னைவிடத் தளர்ந்திருக்கலாம்; ஆனால், அவர்தான் என்னை இந்த உலகப்போக்கில் இந்தப்படியிற் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். என் அடுத்த தலைமுறை என்னைவிட உயர்ச்சிப்படியில் நிற்கப்போகிறதென்றால், அ·து என்னாற்றான். நாங்கள் எல்லாவற்றையுமே ஒரு பத்து பதினைந்து வருட காலத்தில், பலூன் ஊதுவதாய்ப் பண்ணப்போய்த்தான் இப்படி வெடிப்பதாய், என்சமூகம். கூர்ப்புத்தத்துவம் படிமுறைப் பரிணாமவளர்ச்சிதான் சொல்கிறது. சில வேளை பிற்காலத்துக்குத் தேவையான எம் சில குணம்சயங்களை இன்றைய நிலை கருத்திற் கொண்டு எம்மிடமிருந்து நாமே, இன்று அதீதமெனில் அழிக்கவேண்டும்; அல்லது, ஆழ்மனத்துள் மறைவெப்பமாய்க் குளிர்காலத் தூக்கம் போடவைக்கவேண்டும். ஆனால், அதற்கு, அது நம்மைத் தொடங்கியபாதைகே இட்டுச்செல்கிறோம் என்று அர்த்தமில்லை. இந்தக்காலத்தில், அ·து தேவைக்கதிகமாக இருப்பதால் ஏற்படும் உடனடிப்பாதிப்பில், அது விலத்தி நிற்கவேண்டியதுதானெனில், வரும் தலைமுறைக்கு அதைக் கருத்தாய்ச் சொல்லிவைப்போம், ஊறப்போட்டு முளைக்கவிடும் நெல் நாற்றென. கம்பளி குளிர்காலத்துக்குத் தேவையெனில், கோடை காலத்தில் அது மலிவாய், தொகையாய்க் கிடைப்பின், அதைப் பண்டகசாலையிற் பத்திரமாய்ப் போட்டு வைத்துவிட்டு, உயிர் கொளுத்து வெயில் பாதுகாக்க, துண்டுப் பருத்திக்காவது வழியை தேடுங்கள் (பறப்பதற்காய் உறங்கிக் கிடக்கும் கூட்டுப்புழுவாய், உங்களுட் கருத்து; என் அப்பா, முட்டை; நான், கூட்டுப்புழு; என் மகன்... யார் கண்டது? சுதந்திரமாய்த் தன் மலர்வனமெங்கும் சிறகடிக்கும் சின்ன வண்ணாத்துப்பூச்சியாகலாம்; ஆவான் நிச்சயமாக). இவற்றைமட்டும் விளங்கிவைத்திருக்கிறேன். எங்கு சுத்தமான சுதந்திரக்காற்று உள்ளதோ அதுவே என் (இரவற்) தாய்நாடு என்று என்னால் வாழமுடியாது; காற்றை எங்கு சுதந்திரமாக, சுவாசிக்கச் சுத்தமுடன் வீசவைக்கவேண்டுமோ அதுவே என்தாய்நாடு. நாட்டிற்கு நான் தேவையா என்பதல்ல, இங்கென் பிரச்சனை; எனக்கு என் தேசம் தேவை என்பதுதான் என் அத்தியாவசியம்; என் காலத்தில், இறக்கை தட்டும் என் கனவுப்பறவைகள் தரையிறங்காமற்போவது பற்றி எனக்குக் கவலைப்படுவதி அர்த்தமெதுவுமில்லை; அ·து, இங்கு இன்று இறங்கமுடியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலும் விட, என்றாவது இறங்கவைப்பதற்கு நான் என்னலான வழியைச் சொந்தமாகத் தேடுவதுதான் நல்லது.

மனம், அறிவு இரண்டுமே தம்முள் -நௌங்காலத்தின்பின்- மெல்லிய காதற்பார்வை, முரண்பட்ட குற்றம் அழுத்து நாணத்துடன் பார்ப்பதாகத் தெரிகின்றது. அனுலா, கவலைப்படாதே; முக்கோணக்குன்று, நீ என்னைப் புரிந்துள்ளதுபோல், நான் உன்னை அறிந்துள்ளதுபோல், எம்முறவையும் சந்தேகமகன்று தெளிந்து ஏற்றுக்கொள்ளும் என நம்புவோம். அடுத்ததாக, நான்/நாம் யோசிக்கவேண்டியது, நாமே உயர எமக்கெனக் கட்டப்போய், இடித்துத் தள்ளிய ஈழக்கட்டிடங்களிலிருந்து என் பார்வையில் எந்தெந்தக் கற்கள் மீண்டும் பயன்படுநிலையில் உள்ளனவெனத் தேடிக்கண்டு, பொறுக்கிச் சேர்த்தெடுத்து, எந்தெந்த வழிமுறைகளில் முக்கோணக்குன்றில், குன்றாடு தென்றல் தழுவு நீலக்கடல் பார்த்த என்வீட்டின் நெடும் குளிர்கால இரவுகளில், இன்னும் ஏழோ எட்டு வருடங்களில், என் எதிர்கால வண்ணாத்துப்பூச்சிகளுக்கு, பறந்தமுறைகள், திசைகள், பறக்கும் முறைகள், திசைகள்,மீண்டு,மீண்டும் வசிப்பிடம் கட்டும் முறைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கப்போகிறோம் என்பதுந்தான். அம்மாவிற்கு, நான் மேற்படிப்பு முடிய உவ்விடமே திரும்பிவந்திருக்கப்போகிறேன் ("அம்மம்மா, உனக்கு நான்தான் கொள்ளி வைப்பேன்; அப்பா, திருமுறைக்கழகப்பொறுப்பாளர் கதிரை, உங்கள்பின், திட்டமான எண்ணங்களுடன் வந்தமரப்போகும் ஒருவனைச் சுமக்கப்போகின்றது") என்பதையும் அனுலாவிற்கு, இதுவரை என் எண்ணம் பட்ட எல்லாவற்றையும், சிவத்திற்கு, அங்கு, எங்கள் நண்பர்கள் சோர்ந்திருந்தாலும், அவர்கள் குழந்தைகளும் மற்றைய தேசக் குழந்தைகள் போலவே, பசித்தாற் சாப்பிட்டு, கிள்ளினால், அழுது, பள்ளிக்கூடம் விடவந்து (விளையாட்டு வேறாயினும்) விளையாடுகிறார்கள் என்று கேள்விப்படுவதையும், பழையமாணவர் சங்கத்தைச் சைவவித்தியாலயத்திற் புணருருத்தாரணம் பண்ணவேண்டிய அவசியத்தையும் எழுதவேண்டும். எனக்கே இ·து ஓர் அதீத கற்பனைவாதம்போல் இப்போதைக்குப்படினும், உண்மையில் அப்படியில்லை; ஆனால், கொஞ்சம் நம்பிக்கையோடு கஷ்டப்படவேண்டும் அபிப்பிராயங்களையும் (அவை வேண்டுமென்றேயெழு அநாவசியங்கள் எனப்படுகையில்) -சிலவேளை, உயிரையும்- பொருட்படுத்தாது; அவ்வளவே. என் உணர்வுகள், ஓர் ஒருங்கு தொடராகவே இனி அறிவுடன் பிணைந்து செல்லும். அத்தோடு, நியூட்டன்-இரப்ஸனின் மீள்செய்கை வீட்டுவேலையையும் செய்து முடிக்கவேண்டும். அதற்கு முன், மாலைச்சாப்பாட்டிற்கு, உடனடி நூடில்ஸ் தயாரிக்க, முதன்முதலாய், இன்று நானே முயற்சி செய்யவேண்டும். முதன்முறை கருகினாலும் கரைந்தாலும் அடுத்தடுத்த முறைகளிற் தானே சரிவரும் (காலப்போக்கில், நானே ஒரு கைதேர் சமையற்காரனாகலாம்; யாருக்குத் தெரியும்?). எனக்குப் பிடித்த சீனப்பழமொழி -பல தூர உலகச் சுற்று யாத்திரையும் முதற்காலடியிலேயே ஆரம்பிக்கின்றது; சரியாக வைத்த அவ்வடி, பாதி விடயம் சரியாக ஏற்கனவே நிறைவுற்றதைத் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது- என்று சொல்லும்.

''93 Mar 14, Sun 10:50

Monday, February 21, 2005

புனைவு - 15

கழியும் பழையது
பண்பாடு

இந்த மாநகருக்கு என் வாழ்க்கையின் முதல் வேலையை எடுத்துக்கொண்டு வந்தபோது, நான் மாணவப்பருவத்தின் பழக்கத்திலிருந்தும் கிறக்கத்திலிருந்தும் இன்னும் வெளிவராதவனாகவேதான் இருந்தேன். இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, நான் கல்யாணம் செய்துகொள்ள மூன்று வருடங்கள் இருந்தபோது. மாநகரத்தின் மத்தியிலே வேலையென்றாலும், புறநகரிலே வாழ்ந்துகொள்வதுமட்டும்தான் அமெரிக்காவிலே பாதுகாப்புக்குரியதும் கட்டுப்படியானதுமாகும் என்று ஏற்கனவே இங்கே வாழக்கற்றுக்கொண்ட சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். நானும் சூரியகுமாரும் இரண்டறை-ஒரு குடிலிலே, மாதச்சம்பளத்தின் காலிலும் சமையல்மணம் சட்டையிலும் என்று வாசம் செய்ய முடிந்தது. வாரநாட்கள் போதாமலும், மீதிநாட்கள் போகாமலும் இருக்கின்ற மிகுதுயர் வேறு அமெரிக்கப்பிரமச்சாரியத்துக்கு உண்டு. அதனால், வார இறுதிகளிலே, மாநகரத்துத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவிலே திரையிடப்படும் தமிழ்ப்படங்களைப் பார்க்கவும், சூரியகுமாருடன் கூடி மொட்டைத்தலைக்குஜராத்தி ஆலயத்துக்கும், -அதன்பின்னர்- இரவிலே மாறுவேடத்திலே இயற்கைநடனங்கள் காண நகர்வலமும் போவதுண்டு. Dr. Jekyll and Mr Hyde என்பது போன்ற இரட்டைத்தினச்சீவியம் எமதான வாரஇறுதி.

ஆரம்ப காலத்தில் மொழிப்பற்று என்பதற்கான எனது வரைவிலக்கணத்தை அத்திவாரம் போட்டு, சுவரெழுப்பி நிறுத்திவைத்திருந்ததெல்லாம், எனது ஆறாம் வகுப்புத்தமிழறிவும் அந்தக்கால்த்து அரசியற்கூட்ட ஆவேச உரைகளுமே. அதனால், ஒரு சமயத்திலே, தமிழ்ப்படம் திரையிடுவதிலும்விட இன்னும் கொஞ்சம் முன்நோக்கிக் கால் வைத்து, அமெரிக்காவுக்கு -மகனிடமோ, மருமகனிடமோ- வந்துபோகும் தமிழிலக்கியத்தின் ஏகபோகப்பிரதிநிதிகளை, பசுபிக் கடலுக்கும் அத்திலாந்திக் கடலுக்கும் இடையிலே கடக்கையிலே வலைபோட்டுப் பிடித்து, இங்கே பேரேரிப்பக்கமும் கூட்டிக்காட்டி அனுப்பினால் என்ன என்று கொஞ்சம் ஆசை எனக்குள்ளே பிடித்திருந்தது. நாங்கள் இருந்த புறநகரிலேயே, தமிழ்ப்பாட்டுகளைத் தமது காரின் உள்ளே நிதமும் கணமும்பிரியாத, ஒரு நூறு -இருபத்தைந்து வயதுதாண்டிய- மாதக்கூலிச்சீவியர்கள் இருந்ததால், இது மிகவும் இலகுவாக நிகழ்த்திக்காட்டக்கூடிய செயலென்று எண்ணிக்கொண்டேன். சிறுதுளி செவ்வக்கினிக்குஞ்சை, செலுலோசும் செத்த இற்றமரத்துப்பொந்துக்குள்ளே புசுபுசுவென்று பற்றியென்று சொல்லிச் சத்தமின்றிப் பொத்திவைக்கிற மாதிரி ஒரு சுகவேலை, இல்லையா?

தன் பதிலபிப்பிராயமாக, சூரியகுமார் வதக்/ங்கிக்கொண்டிருந்த சமையலையும் நோக்காது, "உனக்கு வேறு தொழில் இல்லையா?" என்றான். மிகுதிப்பேரிலே பலர், இத்தனைநாட்கள் கழித்து, அண்மைக்காலங்களிலே, தைப்பொங்கல் ஒன்றுகூடல்களின்போது, "அப்போது, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க்லாமே" என்று கவலை தெரிவிக்கின்றபோதும்கூட, “அதற்கான இப்போதையச் சாத்தியம் எப்படி?” என்று கேட்கின்ற ஆளில்லை நான். ஒன்றென்ன, ஓராயிரம் வார்த்தைகளே தெரிவித்திருக்கலாம்தான். என்ன செய்வது? அப்போது எனக்குத் தெரியாமற் போய்விட்டது; பதிலிறுப்பியின் பதிப்பியிலே விட்ட வரித்தொலைபேசிச் செய்திகளுக்கு என்னவென்று கேட்க நேரமில்லாமல் நாளாந்த வேலை என்று சொல்லிக்கொள்கின்றவர்களுக்கு இதற்கும் நேரம் இருந்திருக்காது என்று தவறாக எண்ணிக்கொண்டேன்.

காலம் செல்லச்செல்ல, இந்த மொழிப்பற்றிலே மண்புற்று வளர்ந்தது மட்டுமில்லை, உள்ளங்கைச்சுண்டலுக்கும் கெண்டைக்கால் மினுங்கும் பெண்டிர் முகத்துக்குமாய், குஜராத்தி பஜனுக்கு, தாளம் தட்டுவது எல்லாம் குறைந்துகொண்டுபோய், barbecue, golf என்கிற மாதிரி ஒரு பிறதேசப்பண்பாட்டுவலயம் எனக்குட் படையெடுத்து விளைந்ததோடு நிற்கவில்லை; American Football, Basketball என்பவற்றினை, பெண்-பந்து-பூனை விளம்பரங்களுக்கிடையேயும் திகட்டத் திகட்டப் பார்த்தபடி, இருக்கையின் நுனியிலே குந்தியிருந்ததுக்கும் குற்றம் சொல்லி, இறுதிப்புள்ளிக்காக எழும்பி குதிக்கும் தன்மைகூட எனக்குட் பரந்து சடைக்கத்தொடங்கிவிட்டது. இதனால், சூரியகுமாரும் நானும் பொருளாதாரக்காரணங்களை முன்னிட்டுமட்டும் ஒரு தீவு-இரு நாடு போல ஆளையாள் காலைப்பொழுதும் மாலைக்கழிவிலும் சந்திக்கவேண்டி, ஒற்றைக்கதவுக்குப்பின்னால், ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருந்தோம்.

ஆனாலும், வார இறுதித்தமிழ்ப்படங்கள் அனைவரும் அறிந்ததுபோலவே பன்முக நோக்கத்தவை; தவிர்க்கமுடியவில்லை. அழுது நடிப்போர், பாடல் படிப்போர் - இவர்களைத் தவிர மீதியெல்லாவற்றையும் எல்லாம் தசவதானியாக உள்வாங்கமுடிந்தது. ‘இந்தக்கிழமை என் வாகனத்திலே போனால், வரும் வாரம் உன் வாகனம்’ என்ற விதத்திலே இருவரும் போனதிலே மாதத்துக்கு எவ்வளவு செலவைக்குறைக்க முடிந்தது (முடிந்ததா?) என்பது இன்றைக்கு ஞாபகத்திலே இல்லை. ஆனால், ஆளுக்காள் பேசாமலே அருகருகே அமர்ந்து அன்றைய இரவு காணப்போகும் நடனங்களை எண்ணிக்கொண்டு போனது மட்டும் இன்னமும் எனக்கு நினைவிலே இருக்கின்றது [கூடவே, எங்கள் காரைக் கண்டவுடன் சிவப்புவிளக்குகளைச் சுடரவைக்கும் போக்குவரத்து சமிக்ஞைக்கம்பங்களின் அம்மாக்களின் நடத்தைகளினைப் பற்றி அபிப்பிராயம் காரின் அமர்முடுக்கிக்குக் காலாற் சொன்னதும்].

சூரியகுமார், கதாநாயகி அழும்போது கலங்கி, படம் தொடங்க முதலும் பிறகும் வரும் இளங்குமரிகளைக் கண்டபோது சிரிக்கவும் கூடியவன். நான் முழுக்க அப்படியான ஆளில்லை. கதாநாயகி அழுகின்றபோது, உலகை ஓர் அரை வட்டம் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அடித்து வந்து, F1 இலேயிருந்து H-1B க்கும், H-1B இலே இருந்து பச்சைக்கும், பச்சையிலே இருந்து முழுப்பாதுக்காப்புக்கும் கவனம் வைக்கிற என்னைப்போன்ற ஏனைய இலட்சியவாதிகள் கலங்குகிறதைப் பார்த்துச் சிரிப்பது, ஒரு திருப்தியை எனக்குட் தருவதுண்டு. படம் முடிந்தபின்னர், வந்த வதனங்களினைத் தரிசிக்கும் கணங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறது மட்டும் மற்றோரோடு எனக்கும் பொது. திரும்பவரும்போது, சூரியகுமாருக்கும் எனக்கும் பேச எத்தனையோ விடயங்கள் பொதுவாக இருக்கின்றது தெரியவரும்; எவ்வளவு புரிந்துணர்வு உள்ள நண்பர்கள் என்பதுவும்தான்; பிறகு, அன்றைக்குச் சமையல் யார் என்பதிலே அ·து அப்படியே அழுங்கி முழுதாய் இனி முளைவிடாது என்பதுபோல் மறைந்தும்போகும்.

இப்படியாய் இயல்பாகிப்போன வாழ்க்கைச்சூழலிலே, ஏதோவொரு சேவல்-கோழி கேவற்படம் முடிந்தபின்னர், காரிலேறுமுன்னர் உந்தலிலே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த என்னிடம், சூரியகுமார் சாந்தகலாவைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகம் செய்தபோது, அவசரவசரமாக புகையை இடக்காற்சப்பாதின் கீழே புதைத்தேன். “வணக்கம்” சொன்னேன். கையைக் கூப்பி பெண்களுக்கு வணக்கம் சொல்ல சொந்தநாட்டைவிட்டு நகர்ந்தபின்னரே கற்றுக்கொண்டேன். இதைப்போலவேதான், எனது பண்பாட்டின் பக்கவிளைவுகள் பலதினையும் நாட்டுக்கு வெளியேதான் நான் மிதந்துதிரியக் கண்டு, கௌவிப்பிடித்து கைக்கொண்டேன் என்பதையும் வெட்கத்தினை விட்டு ஒத்துக்கொள்ளவேண்டும். அமெரிக்கநண்பர்கள் எனது பண்பாட்டின் தொன்மையினைப் பற்றிக் கேட்டகேள்விகளுக்கு, ஒரு வரிக்கேள்விக்கு ஒன்பது நிமிடங்கள் என்ற ரீதியிலே விபரமாகப் பதில் சொல்லிவிட்டு “விபரம் தெரிந்தவனாக” வெளியே வந்து, வேறு யாரிடமிருந்தாவது அவற்றிற்கான விடையினைக் கற்றுக்கொண்ட காலமும் அநேகம்.

“கலாவுக்குத் தமிழ்பேசவராது” –சூரியகுமார்.

எனது ஒரு தென்னாசியனின் பெண்ணின் மீதான மதிப்பினை, பண்பாட்டின் ஒற்றைக்குறியீட்டூடாக, கையைப் பொத்திக்குவித்துக் காட்டமுடியாது போனது கவலைதான்.

“ஹலோ.”

கையைக் கொடுத்தேன். இறுகப் பற்றி உறுதியாக, அதே நேரத்த்திலே தன் மென்மைகீழ் வழுவாது குலுக்கினாள். நான்தான் எனது ஆளுமையைச் சரியாக வெளிப்படுத்தாது, தொய்வுடன் உள்ளங்கையிலே இரத்தோட்டத்தைக் குறைத்துவிட்டேன் என்று தோன்றியது.

ஆங்கிலத்திலே “பேச வராது; ஆனால், பிறர் பேசுவது புரியும்” என்றாள்; பிறர் பேசுவது சரி; நான்? மொத்தமாக, எனக்கே நான், என்ன சொல்கின்றேன் என்று புரிய இரண்டு நாளெடுக்கும்; ஏன் சொன்னேன் என்று புரிய இன்னும் இரண்டு நாளெடுக்கும்.

“அதிசயம்; பேசுவதா பெரியவிடயம்! அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்தும், சொந்தமொழியைப் புரிந்து கொள்கின்றீர்கள் என்பதே மிகவும் ஆச்சரியத்தினையும் ஆனந்தத்தையும் தருகின்றது. இத்தனைவருட இந்நாட்டு வாழ்க்கையிலே இப்படியான ஒரு பெண்ணைக்காண்பது இதுதான் முதற்றடவை.” அழகான பெண்ணைக்கண்டதால், உள்ளபடி உண்மை வந்ததா, இல்லை உளறிக் கொட்டினேனா என்று எனக்குப் பிடிபடவில்லை. நான் முன்னமே சொல்லவில்லையா, நான் என்ன பேசுகின்றேன் என்று எனக்கே புரியவில்லை என்று?

“நன்றி; என் அப்பா பேசுவது போலவே பேசுகின்றீர்கள்.” (வெட்கித்தும் பெருமித்தும்) சிரித்தாள். அவள் அப்பாவின் ஆங்கிலம் இத்தனை அகோரமாக இருக்கிறதை எண்ணிக் கவலைப்படமட்டுமே முடிந்தது. என்ன மனிதர் இவர்! இத்தனை நாள் இருந்தவர் கொஞ்சம் திருத்தம் முயற்சித்திருக்கலாம்.

வீட்டிலே ஒரு பண்பாடும் வெளியிலே ஒரு பண்பாடும் என்று கலந்து பொரு(ந்)த, மிதமாய் காவியங்களிற் கதைபுனையப்பட்ட அன்னப்பட்சி தண்ணீரைத் தவிர்த்து தனக்கு வேண்டியதைமட்டும் தனித்தெடுத்து உண்டதுபோல வளர்ந்துகொண்ட பெண்களின் நடை உடைபாவனைகள் எனக்குப் பிடித்த பிரமச்சாரிய காலம் அது.

அண்மையிலே உள்ள பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருப்பதாகத் தெரிந்தது. பெற்றோர் வசிப்பது கிழக்கமெரிக்காவின் கீழ்க்கரை. பனியைப் பற்றிக் குறை சொன்னாளா, உயர்த்திச்சொன்னாளா என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குப் பணியைப் போலவே, அவளுக்குப் பனி புதிதானதால் பிடித்தும் இருக்கிறது, பழகாததால் பிடியாமலும் இருக்கிறது என்று தோன்றியது. என்ன செய்வது? என்னை வைத்தே எவரையும் எடைபோட்டுப் பழகிவிட்டது.

சூரியகுமார் ஆங்கிலத்திலே, “கலா நல்ல கர்நாடக சங்கீதக்காரி; பிரபல்ய சங்கீதவிற்பனர்கள் அமெரிக்கா வரும்போது, சிலவேளை பின்னால் இருந்து தம்பூரா மீட்டும் சந்தர்ப்பங்களைக்கூடப் பெற்றவளாக்கும். பாடினால், பறக்கின்ற குயில் தோற்கும்” என்றான். எருமைத்தலையன்! பிறபறவைகளின் கூடுகளுக்குள்ளே திருட்டுத்தனமாக முட்டைபோட்டும் சோம்பேறிக் குயிலோடு இப்படிப்பட்ட இளம்பெண்ணையா எவரும் ஒப்பிடுவார்கள்? கல்யாணாமாகாமல், பருவக்கோளாற்றிலே பிள்ளையைப் பெற்றுவிட்டு, அனாதை ஆச்சிரமங்களுக்கு முன்னால், ஏணை தொட்டிலே விட்டுச்செல்லும் எவளையாவது அல்லவா ஒப்புவமை சொல்லவேண்டும்! இந்த மடையனின் மூளை!

நான் பாடக்கேட்டுவிடுவேனோ என்று பயந்தோ என்னவோ, “அப்படியெல்லாமில்லை; ஆனால், முழுமையாகச் சங்கீதம் கற்றிருக்கின்றேன் என்பது மட்டுமுண்மை; அப்பா, எங்களூர்த்தமிழ்ச்சங்க்த்தலைவர். அதனால், சிலவேளை சங்கீதவிற்பனர்களின் தம்பூராக்காரர்களுக்கு இயலாதவிடத்து, நான் தம்பூரா மீட்டுவதுண்டு.” உண்மையான பெண்; சுத்தி வளைத்து சுத்தப்பொய்யை சேற்றுச்சுவற்றுக்கு வெள்ளை வர்ணம் தீட்டுவதுபோல சிதப்பாமல், “இவ்வளவுதான் நான்; இதுக்குமேலுமில்லை ஏதும்; கீழுமில்லை ஏதும்” என்று சொல்கின்றது இன்னொருவரைக் –குறிப்பாக, சங்கீதம் முறைப்படி கற்றுக்கொள்ளாத, குரல்வளம், கலைநயம் கட்டித்தோயக் கற்றுக்கொண்டோரெல்லாம் பாக்யவான்கள் என்றெண்ணிக்கொள்ளும் பிரமச்சாரிய இளைஞர்களை- கவரக்கூடிய பண்பு.

அவளது பெற்றோரின்மீதான என் மதிப்பு அதிகரித்தது. ஒருவருடவேலைக்குள்ளே கிடைக்கும் ஓய்வுநேரத்திலேயே, ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வுக்கும் ‘Home run’ பற்றி புள்ளிவிபரம் சேர்க்கும் மனிதனாக மாறிப்போன நானெங்கே, முப்பதுவருடங்களாக, அதற்குமுன்னே இருபத்தைந்து வருடங்கள் பழகியிருந்த உலகத்தைப் பேணிவைத்திருக்கும் இந்த மனிதர்களெங்கே? தன் மொழியே பேசவராதபோதும், தம்மிசையைப் பொத்திப் போற்றிக் கற்றுக்கொடுத்த அவர்களை, அறியாதபோதும் உள்ளாரப்பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

சூரியகுமார் அவளை விடுவதாயில்லை; “நீங்கள் நல்ல கர்நாடக சங்கீதத் “துண்டுகள்” இரண்டு பாடித்தான் ஆகவேண்டும், கலா; இல்லாவிட்டால், நாங்கள் உங்களை இங்கிருந்து போகவிடமாட்டோம்” - அங்கிருந்து அவள் கொஞ்சம் தரித்துப் போவதிலே எனக்கு சம்மதந்தான்; ஆனால், என்ன இருந்தாலும், நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் அறியவந்த ஒரு பெண்ணைப் போகவிடமாட்டேன் என்று சொல்லக்கூடிய துணிவும் தொந்தரவுத்தன்மையும் உள்ள ஆளில்லை; என் சொந்த வாக்குக்கும் சேர்த்து அவன் தனது புள்ளடியை அவள் காதிலே போட்டு முகத்திலே வழிந்த மையைத் துடைத்துக் கொண்டான்.

கடவுளே இதுவென்ன கஷ்டம் என்றோ, அல்லது இதற்குத்தான் காத்திருந்தேன் என்றோ, ஒரு சிறு செருமலுடன் (இந்தக்குறித்த கணத்திலே, இவளின் இயற்கையத்த ஓரிணை ஏகாரச்செருமலுக்கு முன்னால், என்ன இன்பத்தைச் சங்கீதம் விளைவிக்கும் என்று நான் எண்ணியதேதோ உண்மைதான்), பாடத்தொடங்கினாள்.

அவளின் எத்துணை குரலினிமையானது என்பது அதற்குப்பின்னும் இன்னும் எத்தனையோ மேலதிகாரிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட ஏச்சுகளுக்கும் கீழே இன்னமும் என செவிப்பறையிலே ஒட்டியிருந்து, அவ்வப்போது கீச்சுக்கீச்சுமூட்டுவதுண்டாதலால், சொல்லிலே உணர்த்தமுடியாதது. ஆனால், அவளின் பாடலின் அர்த்தம் பாடல் மொழி காரணமாகப் புரியவில்லை.


பாடிமுடிந்தபின்னர், “மிகவும் அற்புதமான குரல்வளம்” என்றேன். பிறகு ஒர் ஐந்து நிமிடங்கள் சூரியகுமாரின் புகழாரத்துக்கு ஒதுக்கியபின்னர், “இப்போது பாடியது, சூரியகுமாருக்காக; இனி, எனக்காக இன்னொரு பாடல் பாடமுடியுமா” என்று குரலிலே வேண்டுதலும் விழைவும் தொனிக்கக் கேட்டேன். எனக்கு சிலர் மறுக்கமுடியாமல், கனிவாகக் கேள்வியைப் போடும் சித்துவித்தைக்ள் சில சமயம் கைவருவதுண்டு,

இந்தத்தடவை; அறிந்தமொழியினூடேயும் அவளின் குரல்முடிச்சு அதிர்வுகளின் மீட்டலைக் கேட்க, செவிச்சுவை திகட்டும் உச்சத்தை முட்டித்தட்டித்த்ள்ளும் என்றெண்ணிக்கொண்டது எனது அடிப்படை அளவுகோல். திரும்பவும் எனக்குக் கருத்துப்புரியாமே பாடவேண்டும் என்பதுபோல அவளின் குரல்நடவடிக்கை. கொஞ்சம் உள்ளம் சுருங்கிப்போனேன்; ஆனால், காட்டிக்கொள்ளூம் உரிமை எனக்கு இல்லை; தானம் கொடுக்கும் மாட்டிலே பல்லைப் பிடித்து, அவதானம் இல்லாத மூடன்தான் எண்ணிப்பார்ப்பான்.

ஆனால், பாடல் முடிந்ததும், பாராட்டுக்குப் பின்னால், கேட்காமல் இருக்கமுடியவில்லை. ஆனால், அவளின் உள்ளம் சிறிதும் சுரண்டுப்பட்டுக்கொள்ளாமற் கேட்கவேண்டும். “மகாகவி பாரதி அழகுவாய்ந்தது என்று பாராட்டியது இந்த மொழி,” எனது சுளுவான பேச்சுக்கு என்னையே நான் பாராட்டிக்கொண்டேன். “பாரதி?? அது ஒரு பெண்ணின் பெயரல்லவா?” இல்லை; எனது குழியைத்தான் நான் வெட்டியிருக்கிறேன்; நேரடியாகவே கேள்வியைக் கேட்டிருக்கலாம். இதற்குள் சூரியகுமார், பாரதியைப் பற்றி விபரமாக, எட்டையபுரம் தொடக்கம், யானை மிதித்தது வரை ஒரு சின்ன உரை நிகழ்த்தினான். ஆர்வமாகக் கேட்டாள்; அவனின் உற்சாகவேற்றலுடன், நான் எனது கேள்வியை நேரடியாகவே போட்டே;. “இந்தப்பாடலின் கருத்து உங்களுக்குப் புரிகின்றதா?”

அவளின் நாவுக்குப் பதிலாக முகமும் முழுத்தலையுமே பதிலைச் சொன்னது. பிறகு சொன்னாள், “இந்த இருபாடல்களும் சங்க விழாக்களிலே, பாடகர்களிடம் மிகவும் வேண்டிக் கேட்கப்படுகின்றவை.” அதனால், அவற்றினைக் கருத்தறியாதபோதும் பாடிய பெருமிதம் அவளிடம் தெரிந்தது. “தமிழ்ப்பாடல் ஒன்று பாடிக்காட்டவேண்டும்; உங்கள் தமிஉச்சரிப்பு எப்படி இருக்கின்றதென்று பார்ப்பதற்கு” என்று நகைச்சுவையாகப் பேசுகின்றேனாம் என்ற தோரணையிலே எனது அடுத்த வேண்டுகோள்.

“பாட எனக்கும் விருப்பம்தான்; ஆனால், அதற்கான முறையான பயிற்சியில்லையே? கல்கியும் அண்ணாமலைச் செட்டியாரும் செத்தே எத்தனை வருடங்கள் ஆகின்றன? என்ன பெற்றோர்... இந்தளவு அறியாதமொழியிலே பாடச்சொல்லிக்கொடுக்கும் ஆர்வத்தோடு இருக்கின்றவர்கள், இப்படியா, ஒரு தமிழ்ப்பாட்டு, குறைந்தபட்சம் ஒரு கும்மியோ கீதமோ சொல்லிக்கொடுக்கக் குருவிடம் கேட்காமல் இருப்பார்கள்?

அவளோடு வந்த சக மாணவர்கள் திரும்பிப்போவதற்காகத் தேடிக்கொண்டுவர, அவள் அதற்கிரு வாரங்கள் பின்னால் வரும் திரைப்படத்தின்போது சந்திப்பதாகச் சொல்லிப் போனாள்.

நான் காரோட்ட, சூரியகுமார் பக்கத்திலே இருந்து சள சள வென்று அவளைப்பற்றி ஆதிதொட்டு அருகிலே இருந்தன்போல, அந்நியோனியமாகப் பேசிக்கொண்டு வந்தான். எனது எரிச்சலினைக் காட்டிக்கொள்ளவில்லை; காரோட்டிகள் உளநிலையளவிலே நிதானமாக இருத்தல் அவசியம் என்று திரும்பத் திரும்ப எனக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டேன்.

“அவளது பெற்றோர்கள் எவ்வளவு அக்கறையாக எங்களது பண்பாட்டினை மறக்காமல் அவளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்; பார்த்தாயா? “ - என்றான்.

அடக்கமுடியாமல், “மொழிக்கும் பண்பாட்டுக்கும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் உள்ள நெருக்கம்போலும்; பண்பாட்டை மட்டும் எவரும் எங்கே போனாலும் தம் பிள்ளைகளுக்குப் படிப்பித்துப் பட்டம் விடவைக்க மறக்கிறதில்லை” - எரிந்துவிழுந்தேன்.

இன்னமும் அவளின் குரலிலே மிதந்துகொண்டிருந்தான் போலும். நான் சொன்னது, காதிலே ஏறாமல், “என்ன?” என்று அசிரத்தையாகக் கேட்டான்.

அவனுக்குப் பதில் சொல்லாமல், எனக்கு நானே. “பார்த்துக்கொள்; இதுதான் பொன்னகரம்!” என்று பற்றிக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, சிவப்பு விளக்குக்கும் நிறுத்தாமல், ஆள்நடமாட்டமில்லாத வீதியைக் கடந்ததையும்கூட அவன் கண்டுகொள்ளவில்லை.

’00 ஒக்டோபர், 06

Sunday, February 20, 2005

புனைவு - 14

கழியும் பழையது
இன்று

இருட்டுக்குள்ளை விறுச்சுவிறுச்செண்டு 'கிளாக்கர்' ராசமணியரும் மயில்வாகனம் மாஸ்ரரும் எங்கடை வீட்டுக்கதவடிக்கு வந்து தட்டப்போகைக்கையில, நானும் அப்பாவும் அடிவளவுக்குள்ளை தென்னங்குத்தி ஒண்டில காத்துப்படட்டுமெண்டு குந்திக்கொண்டிருந்தம். கிளாக்கருக்கு விறிச்சுநடையர் எண்டுந்தான் அயலிலை கூப்பிடுகிறவை. சாரைப்பாம்பு ஊருற மாதிரி, கொஞ்சம் நெளிப்போட வலுவேகமா நடக்கிற ஆள் கிளாக்கர். இருட்டில இருந்ததால, அவை ரெண்டு பேரும் எங்களைக் காணேல்லைப் போலப் பட்டுது. ஓடிப்போய் அவையளைக் கூப்பிடவோ எண்டு அப்பாவிட்டைக் கேட்டன். "எங்கடை வீட்டுக்குத்தானே போகினம்? அங்கை போய்க் கதைக்கட்டுமன்; பிறகென்னத்துக்கு இந்த இருட்டுக்குள்ளை கள்ளன் ஒளியிறமாதிரி அவையின்ரை காதுக்குள்ளை ரகசியம் பேசிக் குழப்ப?" எண்டு அடிச்சுச் சொல்லிப்போட்டார்.

இவையள் வரக்குமுதல், எவ்வளவு நேரம் பேசாம இருட்டில கண்ணைக் குத்திக்கொண்டு இருந்திருப்பம் எண்டு தெரியேல்ல; திடீரெண்டு பின்னங்காலிலை எலி நன்னினதுபோல இருந்துது. துள்ளிக்கொண்டு கூவெண்டு கத்திக்கொண்டு இருட்டையும் பாராம ஒழுங்கைப்புளியடி மரத்தடிக்கு ஓடினன். அப்பா ஓடேல்ல. தென்னங்குத்தியில இருந்துகொண்டே, "எலிக்குப் பயந்ததொண்டைப் பெத்து வச்சிருக்கிறன்" எண்டு பிலமாச் சிரிச்சார். அப்பா வலுத்த துணிச்சக்காரன்தான். அதாலைதான் அம்மாவுக்குப் பயம். "இந்தாள் எல்லாத்துக்கும் முன்னுக்கு நிண்டு எப்ப ஆராரிட்டை எப்பிடியெல்லாம் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகுதோ?" எண்டு பயந்து பயந்து என்னையும் தங்கைச்சியையும் பொத்திப்பொத்தி வளர்க்கிறவ. "உவள் பொம்பிளை வளப்பையெல்லே என்ரை பொடியிலையும் சோத்தோட சேத்துத்தீத்திப்போட்டாள்" எண்டு அப்பா கொஞ்சம் மப்பேறின நேரத்திலை கவலைப்படுறவர்.

இப்பவும் வீட்டுக்குள்ளை புட்டவிக்கிற அம்மாவுக்குப் பக்கத்திலை சும்மா சுத்திக்கொண்டிருந்த என்னை, "வேலைப்பிராக்காயிருக்கிற அவவுக்குக் வீணாக் கரைச்சல் குடுக்காதை" எண்டு உறுக்கிச் சொல்லிப் போட்டுத்தான் வெளியிலை கூட்டிக்கொண்டு வந்தவர். அம்மாவின்ரை முகத்தில ஆத்திரமும் ஏலாமையும் அப்பிடியே கொப்பிளிச்சுக்கொண்டிருந்தது. "உன்ரை அப்பராலதான் இப்பிடிக்கரைச்சல் எண்டால், பிறகு உன்ரை அண்ணன்காரன், இப்ப நீயருத்தன் வேறை புதுசாய் அந்தாளை உரிச்சுவச்சபடி நிண்டாடிக்கொண்டிருக்கிறாய்" எண்டு இண்டைக்குப் பின்னேரமும் எனக்கு நல்ல ஏச்சு. அண்ணை, தொண்ணூத்தியாறில, ஏஎல் எடுத்தப்பிறகு இங்கை இருக்கமாட்டான் எண்டு தலைகுத்தி நிண்டதால, அப்பா, அம்மாவின்ரை சீதனக்காணியில கொஞ்சத்தை வித்து, ஏஜன்ஸிக்குக் காசுகட்டி, முதலிலை கொஞ்சம் அவையள் ஏமாத்தி, இழுபட்டு பிறகு, ஒரு மாதிரி கனடா போயிட்டான். இப்ப, எப்பாச்சும் கோல் வரும்; பிறகு கொஞ்சம் காசும் அனுப்புறவன். இப்ப அப்பாவின்ரை வருமானம் நிண்டுபோன நேரத்தில, மூத்தபிள்ளைதான் குடும்பத்தைக் காப்பாத்துது எண்டு அம்மாவுக்கு உள்ளுக்குக் கொஞ்சம் பெருமையும் இல்லாமலில்லை எண்டு நினைக்கிறன்.

அம்மா இண்டைக்கு என்னிலையும் அப்பாவிலையும் நல்ல ஆத்திரமாய்த்தான் இருக்கிறா எண்டு நல்லாத் தெரிஞ்சுது. நான் கேட்ட கேள்வியள் ஒண்டுக்கும் பதிலில்லை. நான் அங்கை இருக்கிறன் எண்டமாதிரியே காட்டிக்கொள்ளேல்லை. நான் கடைக்குப் போன நேரத்திலை நான் திரும்பி வந்தால் அபிராமியை வேற என்னோட கதைக்கவேண்டாம் எண்டு சொல்லிப்போட்டா போல இருக்கு. அவள் வேற நான் கூப்பிடக்கூப்பிட குசினிக்கதவுக்கு முன்னாலை ஒரு எத்து எத்தி என்னைத் தள்ளிப்போட்டு, சாப்பாட்டுமேசையிலை போயிருந்துகொண்டு, ஏதோ கொப்பியிலை எழுதிக்கொண்டிருந்தாள். இவளுக்கு வர வரத் திமிர் கூடிப்போச்சு எண்டு எனக்கு நல்லா விளங்கிப்போச்சு. முந்தியெண்டால், "அண்ணை, அண்ணை" எண்டு பின்னால திரியிறதால, சிநேகிதப்பெடியங்கள், "பட்டமும் வாலும் வருகுது" எண்டு நக்கல் அடிக்கிறவன்கள். "பின்னாலை வராதயடி" எண்டாலும் கேக்கமாட்டாள்; அம்மா வேறை, "தங்கச்சியில அன்பில்லாத சென்மம்" எண்டு ஏசிப்போட்டு, அவளையும் சேத்து நான் எங்கை போனாலும் அனுப்பிப்போடுவா. இப்ப என்னெண்டால், அவளுக்கு தானெண்ட எண்ணம். உவளுக்குப் பத்து வயசில இப்பிடி எண்ணமெண்டால், பதின்மூண்டுவயசுக்காரான் எனக்கு எப்படியிருக்கும்?

இத்தனைக்கும் இண்டைக்கு அம்மா எனக்கு ஏசவேண்டி வந்ததெல்லாம் இவளாலதான். இவளுக்கு நாளைக்குப் பிறந்தநாளெண்டது எனக்கு பின்னேரம்தான் ஞாபகத்துக்கு வந்துது. அவளுக்கு, முதுகிலை தொங்கப்போடுற 'பாக்'குகளிலை நல்ல விருப்பம். முன்னமே அம்மா, அப்பா வாங்கிக்குடுத்ததோட, அண்ணை வேறை ஊருக்கு வந்து போற ஆக்களிட்டைக் கனடாவிலையிருந்து " வேற ஆற்றை கையிலையும் குடுக்கவேண்டாம்; அவள் அபிராமியின்ரை கையில மட்டும்தான் குடுத்துவிடுங்கோ" எண்டு சொல்லிக் குடுத்துவிட்டதெல்லாம் சேத்து, ஒரு ஏழு பாக் வைச்சிருக்கிறாள். நான் வேறவேறநாட்டுக்காசு சேக்கிற மாதிரி, அவளுக்குப் பாக் சேக்கிற வேலை. சிலதுகளை ஒரு முறைக்கு மேலை பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக்கொண்டு போயிருப்பாளோ எண்டுறதே கேள்விதான். அதால, இந்தமுறை அவளிட்டை இல்லாத டிசையினில நானொரு பை வாங்கிக்குடுத்தால் சந்தோசப்படுவாள் எண்டு நினைச்சன். அண்ணை எனக்குச் சைக்கிள் வாங்க அனுப்பின காசிலை கொஞ்சம் மிஞ்சியிருந்தததால, இப்பவே வாங்கினாத்தான் காலமை விடியக்கு முதலிலை அவளின்ரை தலைமாட்டிலை வைச்சால், ஆள் நித்திரையால எழும்பிப்பாக்கேக்கில வலுத்தபுழுகம் கொண்டாடுவா எண்டு நினைச்சுக்கொண்டு பான்ஸி ஸ்ரோருக்கு சைக்கிளைத் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டன்.

அம்மா, "இருட்டின நேரத்தில எங்கையடா போறாய்?" எண்டு கேட்டா. அவ சில விசயத்தில ஒரு புழுகு கொண்டோடி; தங்கச்சிக்காரிக்கு பாக் வாங்க மகன் போறான் எண்ட சந்தோஷத்தில, அவளிட்டைப் போய் இப்பவே சொல்லிப்போடுவா எண்டு எனக்குத் தெரியும். அதோட, "அவன் வந்தால், நான் சொல்லிப்போட்டன் எண்டும் சொல்லிப்போடாதை" எண்டும் சொல்லக்கூடிய ஆள். அதால, அவவிட்ட போற இடத்தைச் சொல்லுற பிளான் எனக்கு இல்லை. ஆனால், பதில் சொல்லாட்டி விடக்கூடிய ஆளில்லை அம்மா." ஒரு சினேகிதப்பொடியனிட்டை ரியூசன் கொப்பி வாங்கோணும்" எண்டு சொன்னன். எங்கட அயலுக்குள்ளை, பின்னேரங்களில, சினேகிதப்பொடியங்களிட்ட ரியூசன் கொப்பி வாங்கவெண்டு போன பொடியள் எல்லாம் இயக்கத்துக்கு ஓடிப்போறது அம்மாவுக்கு நல்லாத் தெரியிறதால, அவவின்ரை முகத்திலை, நல்ல பயமும் ஆத்திரமும். "உன்ரை அப்பா மட்டும் இந்த நேரம் வீட்டில இருக்கோணும்; காலுக்குக்கீழ நல்ல பூவசரம்தடியால விளாறியிருப்பார்" எண்டு பொருமினா. நல்லகாலம், அப்பாவும் வீட்டில இல்லை. அவவைப் பாக்கப் பாவமாத்தான் இருக்கு. ஆனாலும், அவவுக்குச் சொல்லாமல், போனாத்தான் நான் நினைக்கிறமாதிரி விசயம் நடக்கும் எண்டு எனக்கு நல்லாத்தெரியும். "சும்மா இருங்கோ; நான் இயக்கத்துக்கு ஓடுற ஆளெண்டால், எப்பவோ ஓடியிருப்பனே; பெட்டை மாதிரி வளந்திருக்கிறாய் எண்டு எல்லாரும் பகிடி பண்ணப்பண்ண நான் ஊருக்குள்ளை உலாவிக்கொண்டிருக்கிறன்; எல்லாம் உங்களாலைதான்; நீங்களோ என்னவெண்டால், இயக்கத்துக்குப் போறன் எண்டு பயப்படுறியள்" எண்டு ஆத்திரமாக் கத்திப்போட்டுச் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியிலே கடைக்கு ஓடிப்போய்ச் சேரேக்கில, கிட்டத்தட்ட பன்ஸி ஸ்ரோர்ஸ்காரர் கடையை மூடிக்கொண்டிருந்தார். அம்மா, அந்த ஆத்திரத்திலதான் தொடர்ந்தும் நான் இரவு கதைக்கக் கதைக்க என்னை ஒரு பொருட்டாயே கருதாம, தன்ரை பாட்டுக்கு நான் தன்ரை சொல் கேட்கேல எண்ட ஆற்றாமையில அழுதுகொண்டு இருக்கிறா எண்டு எனக்குத் தெரிஞ்சுது.

"தம்பி, அங்காலைப்பக்கம், பொடியள் ரெண்டு டிரக்கைக் கிளப்பிப்போட்டாங்களாம். இங்கை மார்க்கட்டுப்பக்கம் கொஞ்சம் பதட்டமாய்க் கிடக்கு. அதால, இண்டைக்குக் கொஞ்சம் வெள்ளனக் கடையைப் பூட்டப்போறன்; காலமை வந்து தேவைப்பட்டதை வாங்கிக்கொண்டு போமன்" எண்டார் முதலாளி. நாளைக்கு வாங்கலாமெண்டால், ஏன் இண்டைக்கு அம்மாவோட இவ்வளவு சண்டையைப் போட்டுக்கொண்டு ஓடிவரவேண்டும்? "நான் வாங்கப்போற பையைப் பள்ளிக்கூடத்துக்குப் போகேக்கையும் வரேக்கையும் கடைக்கண்ணாடிக்குள்ளால பாத்திருக்கிறதால, உடனையே வாங்கியிட்டுப் போயிடுவன்" எண்டு முதலாளியிற்றைச் சொல்லேக்கிள்ளை என்ரை குரலில்லை ஒரு பிடிவாதம் நிண்டிருக்கவேண்டும். அவர், அரை மனசாய் "ஒரு ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை வேலையை முடி" என்று சொன்னார். எனக்கு ஐஞ்சு நிமிசமும் தேவைப்படயில்லை. அவர் சொன்ன விலையைக் குடுத்து வாங்கி கொண்டு நான் கடைக்கு வெளியிலை வந்து லைற்போஸ்டிலை கட்டியிருந்த சைக்கிள் பூட்டைத் திறந்து கொண்டிருந்தபோது, மூண்டு பச்சை ஜீப்புகள் சந்தியில வந்து சடின் பிரேக் போட்டு நிற்க, ஆமியுடுப்பில்லை குதிச்சவை, படபடவெண்டு சுத்திநிண்டு சுடத்துடங்கினம். சனமெல்லாம் அங்கையும் இங்கையுமெண்டு கத்திக்கொண்டு ஓடுகினம். குண்டெல்லாம் என்னைத் துரத்துதேயெண்டு சைக்கிளை அப்பிடியே விட்டுவிட்டு பையை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு ஓடத் தொடங்கேக்கை, ஆரோ என்ரை பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கேட்டுது.

பழகின குரலெண்ட ஈர்ப்பில, கொஞ்சம் நிண்டு திரும்பிப்பார்த்தால், மூண்டு வருசத்துக்கு முன்னால, ஆமியோ பொடியளோ ஆரெண்டு ஆள் தெரியாமல் சுட்டுச் செத்த எங்கட பகுதி விதானை- என்ரை அப்பா.

'00, ஒக்ரோபர், 18.