Monday, August 15, 2005

புலம் - 16

வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையுமுண்டோ?

"அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறை அல செய்தான் என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்!"

- கம்பநாட்டாழ்வான், வாலிவதைப்படலம்

வரலாற்றினைப் பயன்படுத்துதல் குறித்து இரு சிக்கல்களைக் காணலாம்; ஒன்று, நிகழ்வுகளை வரலாறாகத் தொகுத்தவரின் விருப்புவெறுப்புகளூடாக உள்வாங்கிப் பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம்; இரண்டாவது, அந்த வரலாற்றினைச் சுட்டி, அதன் தொடர்ச்சியாக இன்றைய நடைமுறைச்சிக்கலை விளக்கமுயல்பவர், வரலாற்றினை ஆரம்பிக்கும் காலப்புள்ளி. உதாரணத்துக்கு, இந்தியா-ஈழம் தொடர்பான சிக்கலின் எளிமைப்படுத்தப்பட்ட கூறுகளைப் பார்ப்போம். ஈழத்தமிழர் ஒருவரின் வரலாற்றுக்கூற்றின்படி, பெரும்பாலான ஈழவிடுதலை இயக்கங்களுக்கு - பாக்கிஸ்தான் ஆதரவான ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகச் செயற்படும் நோக்கோடு- ஈழவிடுதலைக்கான இந்திய அரசு/அரசியல்வாதிகளின் ஆதரவும் அவர்களின் ஆசீர்வாதத்துடனான இந்திய ஆயுத உதவியும் பயிற்சியும் எண்பதுகளின் ஆரம்பங்களிலேயும், இந்தியாவின் ஈழத்தலையீடு மீதான வெறுப்பு/எதிர்ப்பு நிலைப்பாடு, இந்திய அமைதிப்படையின் ஈழத்தமிழர்மீதான அராஜகத்தோடு எண்பதுகளின் பின்பகுதியோடும் தொடங்குகின்றன. இந்தியத்தேசியவாதியொருவருக்கு, ஈழத்தமிழர்களின் மீதான இந்தியாவின் தன்னலமற்ற கருணை எண்பத்துமூன்றோடும் ஈழத்தேசியம்மீதான இந்தியாவின் எதிர்ப்புநிலையும் ஸ்ரீலங்கா அரசுக்கு வேண்டிய ஆதரவும் இராஜீவ் கொலைக்குப் பின்னாலும் தமிழ்நாட்டிலே ஆயுதக்கலாசாரம் தமிழீழவிடுதலைப்புலிகளாலும் தொடங்குகின்றன. பெரும்பாலான ஈழத்தமிழர்களின் வரலாற்றுப்படி, ஈழத்தமிழர்களின் நலத்துக்குப் புறம்பாகச் செயற்படுவதாகக் கருதப்படும் இலங்கைத் தமிழ்க்குழுக்கள், இந்தியத்தேசியவாதிகளினதும் ஸ்ரீலங்காதேசியவாதிகளினதும் வரலாற்றுப்படி ஈழத்தமிழர்களின் முறையான, மக்களாட்சியின் பிரதிநிதிகளாக முன்வைக்கப்படுகின்றனர். இப்படியான ஒரு விழிக்காகத்தின் 'வரலாற்றுப்பார்வை' இருக்கும்போது, ஏதோவொரு நாட்டின் நலனைத் தன்னலனோடு பிணைந்திருக்கக்கண்டு அதைப் பேணும்வகையிலே உளப்பாங்கும் உணர்திறனுங்கொண்ட எந்த மனிதனுமே நடுநிலையான பார்வை தனது என்றோ, தார்மீகத்தினை நிலைநாட்டப் போராடுகின்றேனென்றோ, அடுத்தவரின் நலனுக்காகத்தான் தனது கருத்தும் செயலும் இருக்கின்றனவென்றோ குரலெழுப்பி அடித்துப் பேசமுடியாது; அவ்வாறு பேசுவாராயின், அதைப் பொய்மை என்றே கருதமுடியும். சில சமயங்களிலே என் குரலும் இந்தப் பொய்மைக்குள்ளே அடங்கியிருக்கலாமென்பதை நான் மறுக்கப்போவதில்லை.

இதே மாதிரியான ஒற்றைப்பரிமாணக்குரல்களையே கதிர்காமரின் இறப்பின் பின்னாக, அநேக சந்தர்ப்பங்களிலே வரலாறு குறித்த எடுத்துக்காட்டுகளோடும் வருங்காலம் குறித்த எதிர்வினைகளோடும் கேட்கமுடிகின்றது. இந்தக்குரல்களை எழுப்புகின்றவர்கள், பல திசைகளிலிருந்தும் வருகின்றவர்கள்; இவர்களின் தன்னலங்கள், உள்நோக்குகள் குறித்து மிக இலகுவாக வகைப்படுத்தமுடியாது. ஆனால், கொன்றவர்களெனச் சந்தேகிக்கப்படுகின்றவர்கள்-கொல்லப்பட்டவரினது நிலைப்பாடு குறித்து இங்கே தேவைக்காக, இரண்டு வகைப்படுத்திக்கொள்வோம்:

அ. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்களும் கதிர்காமரின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களும் (கதிர்காமர் குறித்து எவ்வித அபிப்பிராயமுமற்ற, ஆனால், விடுதலைப்புலிகளை கண்மூடித்தனமாக வெறுப்பவர்களும் இதனுள் அடங்குவார்கள்).

ஆ. விடுதலைப்புலிகளின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களும் கதிர்காமரின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்களும் (விடுதலைப்புலிகள் குறித்து இயக்கம் சார்ந்த கண்மூடித்தனமான ஆதரவில்லாத, ஆனால், கதிர்காமரின் நிலைப்பாடு குறித்து மிகுந்த எதிர்நிலைப்பாடு உள்ளவர்களும் இதனுள் அடங்குவார்கள்);


முதலாவது வகையினரின் முக்கியவாதங்கள்

அ. விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு போவதற்காக, அரசினையும் அரசபடையினையும் கொதிப்படையும் செய்து எதிர்வினையாற்றத் தூண்டும் வண்ணமே கதிர்காமரைக் கொலை செய்திருக்கின்றனர். இவ்விதத்திலே, நடைமுறையிலிருக்கும் சமாதான ஒப்பந்தத்தை மீறியிருக்கின்றனர்.

ஆ. கதிர்காமர் உலகநாடுகளின் மதிப்பினைப் பெற்றவரும் விடுதலைப்புலிகளை வெவ்வேறு நாடுகளிலே தடைசெய்யும்விதமாக மிகவும் திறமையாகச் செயற்பட்டவருமாவார், ஏற்கனவே புலிகள், அவரினை சந்திரிகா குமாரணதுங்காவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாகச் சொல்லப்படும் நீலன் திருச்செல்வத்தினைக் கொன்றபோது, நீலனின் இடத்தினை இலக்ஸ்மன் திறமையாக நிரப்பினார்; இப்போது, அவரின் இடத்தினை இன்னொருவர் தமிழரென்ற முகத்தோடும் கிடைப்பது அரிது.

இ. புலிகள் உரிமைகோராதபோதுங்கூட, இராஜீவ் இனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, எதனையும் மறுப்பாகத் தெரிவிக்கவில்லை; அதுபோலவே, இப்போதும் மறுப்பு தெரிவிக்காமலிருக்கின்றார்கள்.

ஈ. இக்கொலையை இவ்விதத்திலே செய்யவேண்டுமென்றால், நெடுங்காலம் திட்டமிட்டிருக்கவேண்டும்; ஆகவே, விடுதலைப்புலிகள் நெடுங்காலமாகப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பத் திட்டமிட்டிருக்கவேண்டும்.


இரண்டாவது வகையினரின் முக்கியவாதங்கள்:

அ. கதிர்காமரைக் கொன்றது விடுதலைப்புலிகளென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால், சமாதான ஒப்பந்தத்தை மீற விடுதலைப்புலிகள் அரசினைத் தூண்டத்தான் இப்படியாக விடுதலைப்புலிகள் செயற்பட்டிருக்கின்றனர் எனச் சொல்லும் எந்த அதிகாரியோ ஊடகமோ சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து இதுவரைகாலம் இதே வகையிலே அரசபடையினரின் ஆதரவோடு துணைப்படையினராலும் ஆயுதக்குழுக்களாலும் அரச நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியிலே கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் பிராந்திய மேல்மட்ட உறுப்பினர்களான டிக்கான், பாவா, கௌசல்யன் போன்றோரது கொலைகள் குறித்து எதுவுமே கடிந்து பேசியதாகவோ அக்கொலைகள் சமாதான ஒப்பந்தத்தை முறிப்பதற்காக விடுதலைப்புலிகளைத் தூண்டும் நோக்கோடு செயற்பட்டதாகவோ குறிக்கவில்லை. இன்னும், அரச நிர்வாகப்பிரதேசத்துள்ளேயே அரசியற்பிரிவு விடுதலைப்புலிகளுக்குப் பாதுகாப்பினைத் தரமறுத்திருக்கின்றனர். இப்படியானவர்கள் இப்போது, தார்மீகமும் நடுநிலைமையும் பேசுவது, புலாலுண்ணாமை குறித்து ஓநாய் உரைநிகழ்த்துவதுபோலத்தான் இருக்கின்றது.

ஆ. கதிர்காமர் தமிழ்மக்களினால் மட்டுமல்ல, சிங்கள,முஸ்லீம் மக்களின் வாக்குகளாலேகூட பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை; அவர் சந்திரிகா அம்மையாரின் விருப்பின்பேரிலே, தேசியப்பட்டியலிலே பாராளுமன்றத்துக்கும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கும் சிங்களத்தேசியவாதச் செயற்பாடுகளை மறைத்துக்காட்ட, இன்றைய அவரின் இறப்பின் பின்னாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டப்படும் "ஒரு தமிழர்" என்ற அடையாளத்தினை மிகமுக்கியமாகக் காட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அவர் தமிழ்ப்பிரதேசங்களிலே வாழ்ந்த காலத்தின் அளவோ அவருக்குத் தெரிந்திருக்கக்கூடிய தமிழ்மொழியின் அளவோ அவரைத் தமிழரென்ற அடையாளத்துக்கே உரித்தாக்காது; அதன் மிக முக்கியமான வெளிப்பாடாக, பிறப்பால், கிறீஸ்துவத்தமிழர் என்று சுட்டிக்காட்டப்பட்டவர் முழுதான பௌத்த சிங்களவர் என்ற அடையாளத்தோடு எரிக்கப்பட்டத்தைக் காட்டலாம்.

இ. அரசுசார்பாக, அல்லது விடுதலைப்புலிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எவர் கொலை செய்யப்பட்டாலுங்கூட, உடனடியாக பழியினை எதுவித ஆதாரமுமின்றி விடுதலைப்புலிகள் மீது போடுவது ஈழப்பிரச்சனையிலே ஏதோவொரு காரணத்துக்கேனும் ஈடுபாடுள்ள விடுதலைப்புலிகளுக்கு/ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களுக்கு வழக்கமாகிவிட்டது; இதுபோலத்தான், இலலித் அத்துலத்முதலி கொல்லப்பட்டபோதும், விடுதலைப்புலிகள் மீது பழி போடப்பட்டது; ஆனால், பிறகு, அது கட்சிப்பிளவின் காரணமாக நிகழ்ந்ததெனத் தெரியவந்தது. இங்கேயும், அரசுக்குள்ளும் சிங்களப்பெரும்பான்மையுள்ளேயும் கதிர்காமருக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்கள் குறித்து எதுவிதமான சந்தேகமும் எழுப்பாதது நியாயமில்லை; உதாரணத்துக்கு சமாதான ஒப்பந்தக்காலத்திலேயே வன்னியிலே விடுதலைப்புலிகளின் மேல்மட்ட அங்கத்தவர்களிலே ஒருவரான கேர்ணல். சங்கர் இதே வகையிலே கொல்லப்பட்டபோது ஊருடுவித்தாக்கும் அரசபடையினரே செய்திருந்தனர் என்பதை அண்மைக்காலத்திலே அரசபத்திரிகைகளே அரசுள்ளான முரண்பாடுகள் காரணமாக வெளியிடவேண்டி வந்தது. அந்தவகையிலான ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல், எடுத்த வாக்கிலே, விடுதலைப்புலிகளெனக் குற்றம் சாட்டுவதிலே ஈடுபடுகின்றவர்கள் ஊடகங்களின் உள்நோக்கு என்ன?

ஈ.விடுதலைப்புலிகள் இயக்கம் இப்படியாக ஒரு கொலையைச் செய்ய நெடுங்காலம் திட்டமிட்டு, அதன் மூலம் சமாதான ஒப்பந்தத்தை முறிக்கத்திட்டமிட்டிருந்ததைக் காட்டியிருக்கின்றதென்றே கொள்வோம். அப்படியானால், இதற்கு இரண்டாண்டுகள் முன்னரே, சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகு, விடுதலைப்புலிகள் சார்பாக வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைகளுக்கும் போய்வந்த கேர்ணல். கருணா பிரிந்ததோ, அல்லது, அதன் பின்னால், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அரசபடையினரினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவோடு மட்டக்கிளப்பின் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றதும் சிங்களப்பிரதேசங்களிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துள்ளே வந்து தாக்குதல் அரசபடையினரின் ஆதரவோடு செய்துபோவதும் எவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருக்கப்படவேண்டும். இந்த நேரத்திலே தார்மீக, நடுநிலையான புத்திசீவிகளும் பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் மீதிநாட்டினரும் எங்கே தங்கள் புலன்களைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள்? மேலும், விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளிலே மிகவும் எதிர்நிலை எடுத்துநின்றவர்தான் கதிர்காமர்; அவர் இறப்பினாலே, உடனடியான பதட்டமிருக்குமென்றாலுங்கூட, நீண்டகாலநோக்கிலே, சமாதானத்தீர்வுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதென்றே கூறலாம்.


இந்த விதத்திலே இரு புறங்களிலும் ஒற்றைப்பரிமாண வரலாற்றுப்பார்வைகள் வைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, கூடவே விழைவுச்சிந்தைகளும் உள்ளிட்டு வருங்காலம் இரு சாரார்களாலும் எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வகையான பார்வைகள், வெளியிடும் ஊடகங்கள், ஆட்கள், வெளிப்படும் விதங்கள் ஆகியவற்றினைப் பொறுத்து ஆத்திரத்தினையோ எரிச்சலையோ கவலையையோ சிரிப்பினையோ மகிழ்ச்சியினையோ ஏற்படுத்துகின்றன. நான் எழுதியிருப்பதும் அவ்வாறே வாசிப்பவர்களைப் பொறுத்து ஏற்படுத்துமென்பதை அறிவேன். ;-)

'05 ஓகஸ்ற், 15 திங்கள் 23:46 கிநிநே.


11 comments:

Anonymous said...

good analysis. Something to be read and saved for posterity.

Anonymous said...

மிக நல்லதொரு பதிவு பெயரிலி.

தமிழ் கிறிஸ்தவராக இருந்தும்
சிங்கள் பெளத்தமுறைப்படி அவரின் இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டது கூட
இலங்கையில் நிலவும் பெளத்த சிங்களமேலாதிக்கத்தின் வெளிப்பாடே.
இதற்கு ஜே.ஆர் கூட ஒரு உதாரணம்.
அவரும் ஒரு கிறிஸ்தவர்ஆனால் அரசியலில் உயரவேண்டி அவரும் அதே பெளத்த மதத்தினையே பின்பற்ற
வேண்டியதாயிற்று.
மிகுதி கருத்துக்களை நாளை தொடர்கிறேன்.தூக்கம்
என் கண்களை தழுவுகிறது.

rajkumar said...

நல்ல பதிவு.

ராஜ்குமார்

Anonymous said...

போரை திரும்ப ஆரம்பிக்கவே இக்கொலையை புலிகள் செய்திருப்பதாகச் சொன்னால் அதே காரணத்துக்காக அக்கொலையைச் இலங்கை இராணுவத்தலைமையும் செய்ய இடமிருப்பதாகக் கருதலாம். ஏனெனில் போரினால் எப்போதும் பயன் பெறும் சாரார் இராணுவத்தலைமையே. போரினை முன் வைத்து பாரிய கொள்வனவினை செய்து அதனால் பலனடைவதும், அதற்காக மேலும் மேலும் யுத்தத்தினை வளர்ப்பதும் இலங்கை இராணுவத்தலைகளின் வழமையானதுதான். தற்போதைய தலைமையான தயா சந்தகிரி கூட இப்படியான கொள்வனவுகளை பெருமளவில்செய்தவரும் அதனால் சந்திரிகாவுக்கும் அவருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதும் செய்தி (http://www.eelampage.com/?cn=18613). போரின்னை முன்னெடுக்க இராணுவத்துக்கும், ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கும் புலிகளுக்கு இருக்கும் தேவையைப்பொன்றே தேவைகள் இருக்கின்றன. புலிகளின் தேவைகள் ஈழப்போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாகவும், தங்களது தலைமைத்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் முகமாக இருக்கும் வேளையில் இராணுவம் மற்றும் மற்ற கடிகளின் போருக்கான தேவைகள் ஊழலும், அதிகாரத்துக்க்கான அரசியலுமாக இருக்கின்றன.

இதுதவிர இக்கொலையை / போரை முனவைத்துது நார்வே தரப்பை ஒதுக்கி இந்தியாவை உள்நுழைக்க விரும்பும் கட்சிகளும் உள்ளன. அப்படியான முகாந்திரத்துக்கான தொடக்கத்தை இந்தியப்பத்திரிக்கை ஏற்கனவே அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

எனவே கொலையினை நடத்துவதற்கு பலருக்கும் பலமான காரணங்கள் இருப்பதும், நடந்த கொலையை முடிந்தவரை தங்கள் நலனை செயல்படுத்தும் விதமாக விற்க பலரும் முயல்வதும் சற்று கூர்ந்து கவனிக்கும் யாவருக்கும் புலப்படும்.

இந்நிலையில் புலிகள்தான் கொலை செய்தனர் என்று போலிஸ் அதிகாரியே (இந்து செய்தி) கொலை நடந்த சிறிது நேரத்திலேயே அறிவித்திருப்பதே இன்னும் சந்தேகத்தை விதைக்கிறது. இதற்கு ஏதுவாக இரண்டு தமிழ் இளைஞர்களை வேவுபார்த்ததாக காவல் துறை கைது செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ரமணி, இந்தப் பதிவுக்கு நன்றி!

-பொன்னார் மேனியன்

Anonymous said...

இந்தப் பதிவுக்கு நன்றி!

-/சுடலை மாடன்/- said...

இரமணி, அருமையான அலசல்.

இதை வெகுஜன ஊடகங்களுக்கு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அனுப்பி வைக்க முயற்சி செய்யலாமே. அவர்கள் வெளியிடுகிறார்களோ இல்லையோ முயற்சி செய்யலாம். அமெரிக்க ஊடகங்களுக்குக் கூட அனுப்பி வைக்கலாம்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

நித்திலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!(பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது, மன்னிக்கவும்)
..aadhi

-/பெயரிலி. said...

நன்றி.

Anonymous said...

லக்ஷ்மன் கதிர்காமரின் இறப்புப் பற்றிய இரங்கல் செய்திகளும், அவை வலியுறுத்துபவைகளும்

Anonymous said...

கனா நாளா உங்கட பதிவ காணலை எண்டு நினைச்சன்.இண்டைக்கும் நேற்றும் ஒண்டும் பாத்தன். என்ன கமரா பறி போட்டுதோ :(
என்ன கன நாள் நான் வலை பதிவு பக்கம் வரேல்லை. வந்த பிறகு உங்கட பதிவ காணலை. கறுப்பியுடைய பதிவுகளையும் காணலை.

-/பெயரிலி. said...

கறுப்பி வேலையிலையிருந்து நிக்கிறதால, பதிவுப்பக்கம் வரமாட்டா எண்டு எழுதியிருந்தா.