Friday, July 08, 2005

அரைகுறை - 5



வியாழன் காலை எழுந்து இணையத்தினைப் பார்த்தபோது, பிபிஸி தளத்திலே இலண்டனில் குண்டுவெடிப்பு என்றிருந்தார்கள். ஜி-8 நாடுகளின் கூட்டம் தொடர்பாக எதிர்ப்புக்காட்டும் அழிவுவாதிகளின் மொலடோவ் கொக்டேயில் வகையான சின்னதாகவிருக்குமென்று மற்ற வழமையான தளங்களைப் பார்த்தேன். எல்லாவிடத்திலும் இலண்டன் குண்டுவெடிப்பு. திரும்பி பிபிஸி வந்து பார்த்தால், 9/11 நியூயோர்க் வகையான வெடிப்பென்ற விபரம் விரிவாகத் தெரிந்தது. தொலைக்காட்சியைப் போட்டால், எல்லா அலைவரிசைகளிலும் மாறாமல், ஒரே படங்களையே காட்டிக்கொண்டிருந்தார்கள். நண்பரொருவரின் தொலைபேசி வந்தது; பேசிவிட்டு, வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டே பெரிமேஸனைப் பார்த்துவிட்டு, முதல்நாளிரவு ஜி-8 பற்றிக் கைகிறுக்கினதைப் போட்டேன். பின்னால், தொடர்வண்டிக்கு வந்து வேலைக்குச் செல்கை. வண்டியிலே சனம் குறைவாகவே இருந்தது; ஆனால், அஃது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை; வேலைநேரத்திலும் வலைப்பதிவுகளைப் பார்த்தேன்; இலண்டன் குண்டுவெடிப்புகள் குறைத்து நிறையப்பதிவுகள்; வாசிப்பு. வீடு திரும்பும்போது, சனம் வழக்கம்போல, நிறைந்தே வண்டி. பாதிநேரம் ஏதோ புத்தகத்தை வாசித்துக்கொண்டும் மீதி நேரம் தூங்கிக்கொண்டும் வீடுவந்தேன். வீடுவந்து தொலைக்காட்சிகளிலே மாறிமாறி CSI, Without a Trace ஆகியன பார்த்து, Charlie Rose, News Hour, BBC ஆகியவற்றினைப் பார்த்துக்கொண்டு மகனோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வலைப்பூக்களைப் பார்த்த பின்னால், நித்திரையாகிவிட்டேன். காலை எழுந்து, வலைப்பூ, பெரிமேஸன், கொஞ்சம் வேலைத்தர எழுத்துவேலை, வேலைக்குப் பயணம். பயணத்திலே வழக்கமான அளவுக்குச் சனம். பாதி வழியிலேதான் உறைத்தது......

........."இந்தக்குண்டுவெடிப்பு எந்தவிதமான பாதிப்பினையும் என்னுள்ளே எழுப்பவில்லை." "ஐயோ இத்தனை அப்பாவி மனிதர்கள் இறந்து விட்டார்களே" என்றோ "இவர்களின் அரசு செய்தவற்றுக்கு இப்படித்தான் நடக்கும்; நடக்கவேண்டும்" என்றோ கவலையாகவோ மகிழ்வாகவோ எந்த உணர்வும் எனக்கு ஏற்படவில்லை; ஆக, மிஞ்சிப்போய் எழுந்தது, "எத்தனை பேர் இறந்திருக்கின்றார்கள்?" "ஆகா, ஆக முப்பத்திமூன்று; இப்போது நாற்பத்தொன்பது. சரி." - ஒரு கிரிக்கட் விளையாட்டிலே மொத்த ஓட்டத்தொகை கேட்கும் விடுப்புணர்வுமட்டுமே எனக்குள். குறைந்த பட்சம், நேற்றோ இன்றோ தொடர்வண்டியிலே பயணம்போகையிலே, "இதற்குள்ளே குண்டிருந்து வெடித்துவிட்டால்?" என்ற அச்சங்கூட தொலைக்காட்சியிலே, மெட்ரோ பத்திரிகையிலே பொஸ்ரன் உள்ளான தினசரிப்பயணங்கள் குறித்துக் காட்டவும் கேள்விகேட்கவும் செய்யும்போது எழவில்லை. வழக்கம்போல, ஏறி, இருந்து, இறங்குகிறேன்....

....இந்தக்குண்டு வெடிப்புகள் எனக்கு ஏதாவது பயத்தினைத் தந்திருக்கின்றனவென்றால், அது என்னைக்குறித்த பயத்தினைத்தான். உலகிலே நிகழும் எந்த வெடிப்பும் இறப்பும் - குறிப்பாக, தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமாகாத & தம்மை விரும்பும் தம்மால் விரும்பப்படும் தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமில்லாத மனிதர்களைக் கொண்ட மனிதர்களின் இறப்பும்- என்னிலே எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்கும் என் மரத்த மனநிலை என்னைப் பயப்படுத்துகின்றது; அந்தளவிலே எனக்கு நானே பயப்படுகின்றேன்.

இந்நிலை ஏன் ஏற்பட்டதென்று சரியாகத் தெரியவில்லை; யோசித்துப்பார்க்கும்போது, குறைந்தது எண்ணும் விரல்களுக்கடங்காத காரணங்கள் தெரிகின்றன. இப்படியான செய்திகளைக் கேட்டுக்கேட்டு பத்தோடு இது பதினொன்றென அலுத்துவிட்டதாகவிருக்கலாம்; கொல்லப்பட்டவர்களினை நேரடியாகத் தெரியாததாகவிருக்கலாம்; இறப்பின் கோரத்தினை "அட இவ்வளவுதானா இந்நிகழ்விலே இரத்தமும் நிணமும் இறந்தார் எண்ணிக்கையும்" என்று ஒப்பீட்டளவிலே பார்க்கும்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவிருக்கலாம்; இவர்களின் அரசின் முற்பகற்செயற்பாடுகளுக்கான பிற்பகல்விளைவுகள்தானே என்ற உணர்வாகவிருக்கலாம்; "அங்கே கணக்குக் காட்டப்படாமலே செத்ததுக்கு இங்கே செத்த இந்தத்தொகை ஒரு பொருட்டா?" என்ற குரூரத்தன்மைக்குப் பழக்கப்பட்டுப்போய்விட்டதாகவிருக்கலாம். "கொன்றவனுக்கும் இதை நியாயப்படுத்துமளவுக்கு எதேனும் இழப்பு (எந்தளவுக்கு) இருந்திருக்கோ?" என்று இப்போதெல்லாம் இப்படியான நிகழ்வுகளைக் காணும்போது எழுகிற கேள்வி தந்த மரத்தன்மையாகவிருக்கலாம்; "இப்படியாக முன்னர் எத்தனை; இன்னும் இனியும் எத்தனையோ?" என்பதை எண்ணி இஃது என் கைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்ட விடயமென்று பெற்றுக்கொண்ட/என்னை நானே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுடலைஞானத்தன்மையாகவிருக்கலாம்; இப்படியானவை ஆக நிகழ்வுகளே, ஆனால், இவை விளைவிக்கும் அரசியல்மாற்றங்களும் இவை பற்றிய அரசியல்வாதிகளின் அரசுகளின் திரிப்புகளும் நுழைவுகளுமே வருந்தவும் மகிழவும் கருத்துக்கானவை என்றதுமாதிரியான வேறொரு ஏரணம்சார்தளத்திலே நின்று காணப் பழக்கப்பட்டுவிட்டிருக்கலாம். அல்லது, மீளமீள Grounddog Day இலே பில் முரே போய்க்கொண்டிருந்ததுபோன்ற, Star Trek இலே ஒரு மாறாக்காலத்துளிக்குள்ளே தொக்கிப்போனதுபோன்ற, ஒரே தினமே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதான கனவுநிலையென உள்ளே உணர்ந்து கொள்ளும் நிலையாகவுங்கூடும். எதுவென்று நிச்சயமாகத் தெரியவில்லை. அதனால், இக்குண்டுவெடிப்பினைக் குறித்து எதையுமே எழுத - எழுதப்பட்டவற்றிலே, சரி, பிழையென பின்னூட்டம் இடக்கூட- விழைவும் வரவில்லை.

எனக்குக் கேடேதும் விளைவிக்காத இன்னொரு மனிதன் - தனக்கென குடும்பம், கனவுகள், நடப்புகள் கொண்டிருக்கும் இன்னொரு மனிதன் - அநாவசியமாக அறியாக்காரணத்துக்காக, தான் அறியாதவர்களால், அவனைத்தானென்று குறி வைத்துக் கொல்ல வராது தம் கருத்தை, தம் அவலத்தினை உணர்த்துக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டவர்களாலே கொல்லப்படும்போது, அதற்காக இறந்தவனுக்காக வருந்தவோ கொன்றவனுக்காக மகிழ்ச்சியடையவோ முடியாமல், உள்ளே விறைத்துப்போய், இன்று மற்றுமொரு நாளேயென்பதுவாக நான் நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையை ஞானியர் போற்றலாம்; வேட்கையுறலாம்; ஆனால், மனிதனென வாழ விழைகின்றவன் என்ற அளவிலே, நான் எண்ணி அச்சமுறுகிறேன். சற்றுச்சற்றாக விடமேற்றி உடல் பழக்கி விடமாகவே ஆகிப்போன நீலகேசி-நாகநந்தி ஞாபகம் வந்துபோனார்; நானும் அப்படியாக ஆகிவிட்டேனா? தெரியவில்லை. இருக்கலாம். அஃது என்னைக் குறித்து என்னைப் பயமுறுத்துகின்றது
'05 ஜூலை, 08 வெள். 16:18 கிநிநே.

19 comments:

பரி (Pari) said...

உலகிலே நிகழும் எந்த வெடிப்பும் இறப்பும் - குறிப்பாக, தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமாகாத & தம்மை விரும்பும் தம்மால் விரும்பப்படும் தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமில்லாத மனிதர்களைக் கொண்ட மனிதர்களின் இறப்பும்- என்னிலே எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்கும் என் மரத்த மனநிலை என்னைப் பயப்படுத்துகின்றது;
>>>>>>
கோனார் நோட்ஸ் ப்ளீஸ் :)

பயங்கொள்ளலாகாது பாப்பா :P

-/பெயரிலி. said...

/கோனார் நோட்ஸ் ப்ளீஸ் :)/
தந்தா அந்தக்கோனார் நோட்ஸுக்கே கோனார் நோட்ஸ் கேப்பீங்க. ;-)
எப்பிடியும் நம் தமிழ் மாறப்போறதில்லை. ஒண்ணு நீங்க நம்ம உஜ்ஜாலாவுக்கு மாறிக்கணும். இல்லே, சொந்தமா இதுக்குன்னே கோனார் நோட்ஸ் வாங்கிக்கிட்டா வசதிப்படும்.

SnackDragon said...

Understood.
Will write more detailly later.

வசந்தன்(Vasanthan) said...

என்னைப் பொறுத்தவரை, நீங்கள் தமிழை மாற்றத் தேவையில்லை.

ROSAVASANTH said...

பெயரிலி மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நான் (கடந்த முறைகள் போல) இது குறித்த செய்திகளையும், கட்டுரைகளையும் படிப்பதில் கூட எனக்கு ஆர்வம் வரவில்லை. மேலும் இது(இந்த ஆர்வக்குறைவும்) எதிர்பார்க்காதது அல்ல.

Thangamani said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பெயரிலி!

Shankar said...

இன்று காலையிலே ஏறக்குறைய இதே தொனியிலே இந்நிகழ்வுகுறித்த சிந்தனையோட்டமெழுந்தபோதிலும் ஒரு சில நொடிகளிலே வேறொரு வேலையிலே ஆழ்ந்துவிட்டேன். பயமென்று கூறமுடியாவிட்டாலும் உள்ளே ஏதோ குறுகுறுவென்கிறது உண்மை. (இவரு மாதிரி எழுத முயற்சி கூட பண்ண முடியலை. என்ன நடையோ! :)))

வலைஞன் said...

எனக்கும் இதே மனநிலை தான். லண்டன் குண்டு வெடிப்பு தொடர்பான தலைப்புகள் எந்த ஆர்வத்தையும் வாசிப்பதற்காகக் கூட ஏற்படுத்த வில்லை. கும்பகோணத்தில் பிஞ்சுகள் கருகியதை விடவா? பார்த்துப் பழகியதும் எதுவுமே பொருட்டில்லாமல் போகிறதோ?

பத்மா அர்விந்த் said...

நீங்கள் நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று சொல்லக்கூடிய தகுதி கூட எனக்கிருப்பதாக தோன்றவில்லை. தினம் தினம் கோடிக்கணக்கான மக்கல் வறுமையால், வன்முறையால் உலகெங்கும் இறந்து கொண்டிருக்கு 33 பேர் இறந்துபோனதும் அனுதாபமும் கவலையும் ஏன்? கோடிக்கணக்கான குழந்தைகள் சப்தமின்றி கொல்லபட்டதை எத்தனை பேர் நினைக்கிறார்கள்? அவர்களும் அப்பாவிகள் தானே. எனக்கு புரிகிறது. தினம் கொஞ்சமாக கொன்றால் வன்முறை பற்றி கவலைகொள்ள தேவையில்லை. ஆனால் அதே வன்முறை திடீரென குண்டு வெடிப்பின் மூலமாக நடந்தால் அறிக்கை விட வேண்டும்.

இலங்கையில் , காஷ்மீரில் இறப்போர், ஹைட்டியில்ம் எத்தியோப்பியாவிலும் இறந்தால் கவலை கொள்ள வேண்டாம். ஆனால் ஒரு குண்டுவெடிப்பு அதுவும் அல்கொய்தா சம்பந்த பட்டால் மட்டும் வருந்தவும் அறிக்கை விடவும் வேண்டும் என்பது நடைமுறை
நேற்று நாள் முழுக்க எனக்கும் உங்களின் மனம் உறைந்துபோனதோ என்ற கவலை இருந்தது.

இளங்கோ-டிசே said...

பெயரிலி நீங்கள் கூறிய நிலையைத்தான்(ட்சுனாமியின்போதும்) நானும் உணர்ந்திருக்கின்றேன். நீங்கள் கூறுவதுபோல, எல்லா உணர்வுகளும் மரத்து மரத்துப் போக, மனிதன் என்ற நிலையில் இதுதான் எனக்கும் மிக அச்சமுறுத்துகின்றது.
//எனக்குள். குறைந்த பட்சம், நேற்றோ இன்றோ தொடர்வண்டியிலே பயணம்போகையிலே, "இதற்குள்ளே குண்டிருந்து வெடித்துவிட்டால்?" என்ற அச்சங்கூட தொலைக்காட்சியிலே, மெட்ரோ பத்திரிகையிலே பொஸ்ரன் உள்ளான தினசரிப்பயணங்கள் குறித்துக் காட்டவும் கேள்விகேட்கவும் செய்யும்போது எழவில்லை. வழக்கம்போல, ஏறி, இருந்து, இறங்குகிறேன்....//
உண்மைதான் இங்கேயும் அதுதான். பிபிஸியில் கூட ரொரண்ரோ போன்ற சனநெருக்கடியுள்ள பாதாள இரயில் நிலையங்கள் முக்கிய இலக்காக இருக்கும் என்ற செய்தியை வாசித்து; சில இடங்களில் அநாமயதேயமாக இருந்த பைகளை சோதிக்க குண்டுகள் அகற்றும் அவரசப்பிரிவு அழைக்கப்பட்டது என்பதை அறிந்தும், அதுகுறித்து பிரக்ஞையோ/அச்சமோ இல்லாது 'ஏறி,இருந்து, இறங்குமளவுக்கு' மரத்துப்போய்விட்டாயிற்று :-(.

பத்மா அர்விந்த் said...

உங்களைப்போல எனக்கும் மனம் உறைந்து போனதோ என்று இருந்திருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

பெயரிலி, ஆழ்ந்து எழுதியிருக்கிறீர்கள். நானும் சில சமயம் இப்படி யோசித்ததுண்டு. இம்முறை பெரிதாக இந்த இழப்பைப் பற்றிய செய்திகளைக் கூடப் படிக்கவில்லை.

>>மனிதனென வாழ விழைகின்றவன் என்ற அளவிலே>>
ஒரு வகையில் மனிதனென வாழ்வதற்கு இந்த மரத்துப் போதலும் அவசியம் என்று தோன்றுகிறது. நமது கட்டில் இல்லாத ஒரு அழிவினைப் பற்றி எண்ணி எண்ணி மாய்ந்து போயிருந்தால், அப்புறம் நிம்மதி ஏது?

சிலசமயம் ஈராக்கிலே செத்துப் போகிற ஒஹையோவின் 17 வயதுப் பாலகன்கள் அப்படிப்போக வேண்டும் என்று என்ன தலையெழுத்து என்று இங்கே அழும் தாய்மார்களுக்காக ஒரு நிமிடம் வருந்துவண்டு. அவர்களின் மரணம் நேரடியாய் அங்கிருக்கும் போராளிகளால் ஏற்பட்டதென்றாலும், அதற்கு முழுக் காரணம் வாஷிங்டனில் உட்கார்ந்து கொண்டு வசதியாய் இருக்கிற அரசியல்வாதிகள் தானே? ஆனால் அதுவும் பின்னர் ஒரு செய்தி என்ற அளவிலே மற்றதைப் போன்றே மரத்துப் போய்விடுகிறது. இருந்து யோசித்தால் இது மனிதத்தைத் தொலைப்பதாக இருக்கிறதே என்று நீங்கள் வருந்துவது போல் தோன்றினாலும், அவசரமாய் அந்த வருத்தத்தை விட்டுவிட முயல்கிறேன்.

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.

SnackDragon said...

மிகுந்த/ஆழ்ந்த யோசனைக்குபிறகு,
இந்த கூர்ப்புமந்தத்தை கண்டிக்கத்தான் தோன்றுகிறது.
தினசரி வாழ்விலே, எவையோ சிலதுக்கு சிரிக்கத்தான் செய்கிறோம். குதூகலிக்கத்தான் செய்கிறோம். உண்டுறங்க தன்னலம் அனைத்தையும் செய்துமுடித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் அருகில் உள்ளவனுக்கு ஆபத்து என்றால் மட்டும் கழன்றுவிடும் மனநிலையைத் 'தேர்கிறோம்'. இது எனக்குத்தவறாகத்தான் படுகிறது.

மரத்துப்பொகிறது என்று தெரிந்துவிட்டால் அடிக்கடி உணர்வுகளை கூர்மைபடுத்திக்கொள்ளும் செயல் ஒன்றைத் தெரிந்து அதை செய்துகொண்டிருத்தலே இதற்கு சரியான மாற்று என்று சொல்வேன்.

/அதற்காக இறந்தவனுக்காக வருந்தவோ கொன்றவனுக்காக மகிழ்ச்சியடையவோ முடியாமல், உள்ளே விறைத்துப்போய், இன்று மற்றுமொரு நாளேயென்பதுவாக நான் நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையை ஞானியர் போற்றலாம்; வேட்கையுறலாம்;/

இல்லை. இப்படிப்பட்டவரை ஞானியர் என்று ஏற்றுக்கொள்வது மிக்ப்பெரும் தவறு.
இதை தனிப்பட்ட அளவில் தேர்ந்துள்ளேன்.

--
இந்த மரத்துப்போதல் புலம் பெயர்சூழலில் அடையாளாங்கள் சார்ந்து , விலக்கப்பட்ட வாழ்நிலையொன்றால்தான் அதிகம் உள்ளது / அல்லது உள்ளவாறு உணரப்படுகிறது என்று நினைக்கிறேன்.


இந்தப்பதிவின் நேர்மைக்கு மிக்க நன்றி.

-/பெயரிலி. said...

செர்ரீ,
நீண்ண்ண்ண்ண்ண்ட விளக்கத்துக்கு நன்றி ;-)

தெருத்தொண்டன் said...

உங்கள் பதிவை அன்றே படித்தேன் பெயரிலி. ஆனால் பின்னூட்டமிடும் நேர்மை எனக்கு அன்று இல்லை. உங்கள் உணர்வுகள் என்னைச் சுட்டன.

சரி என்பதைச் சார்ந்து இருப்பதும் தவறு என்று தோன்றுவதைக் கண்டித்தலும் மனித இயல்பு. சுயநலமும் குறுகிய வட்டமுமாக மனிதர்கள் மாறும் சூழ்நிலையில் இயல்பான உணர்வுகள் கூட மரத்துப் போய் விடுகின்றன.

நாளெல்லாம் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் துணை நின்று விட்டு இது போன்றதோர் நிகழ்வின்போது சகமனிதர்கள் காட்டும் போலி மனித நேயம் (அல்லது அவர்களது உண்மையான மனித நேயம் வெளிப்பட பயங்கரவாதச் செயல்கள் நடைபெற வேண்டும் போலும்) நமக்குள் ஏற்படுத்தும் எரிச்சலும் விரக்தியும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

பொருளாதாரத் தடைகளும் ஆக்கிரமிப்புப் போரும் வினை என்றால் வருகிற எதிர்வினைதானே என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நிழல் யுத்தங்கள் பார்த்துப் பார்த்து இதுவும் ஒரு காட்சியாக மட்டுமே மனதில் பதியலாம்.

கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி தாக்கிய நாளில் மாலை பெரும்பாலான சென்னை சபாக்களும் திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன.(சக மனிதர்களின் இழப்பையும் சோகத்தையும் மறப்பதற்காக அவர்கள் போயிருக்கக் கூடும்).

ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் புரட்சி காரணமாக சாலைகளில் போர் நடக்கும்போது கூட மக்களில் ஒரு பகுதியினர் நாடக அரங்கு வாசலில் அடுத்த காட்சிக்காகக் காத்து நின்றார்களாம்.

ஏன் உங்கள் உணர்வு சகஜம்தான் என்ற ரீதியில் போகிறேன்..தப்பு..இவர்கள் அனைவரும் உ(எ)ங்களைப் போல் கூர்ப்பு மந்தம் குறித்து கவலைப்படவில்லை. ஆனால் நீங்கள் கவலைப் படுகிறீர்கள்.. பதிவு செய்கிறீர்கள்.. பதிவின் மூலம் எங்களையும் சிந்திக்கச் செய்தீர்கள்..எங்களையும் பயம் கொள்ளச் செய்தீர்கள்..எந்த உணர்வும் இல்லாமல் வெறும் சுயநலமிகளாய் இருப்பதைக் காட்டிலும் நாம் இருக்கும் நிலை அறிந்து பயம் கொள்தல் உன்னதமானது(வேறு என்ன சொல்ல? நமது பெருமையை நாம் தான் சொல்லிக் கொள்ள வேண்டும்).

நான் – என் குடும்பம் – விரிவான குடும்பம் மற்றும் நண்பர்கள் – எனது ஊர் – எனது வட்டாரம் – எனது தேசம் – எனது நாடு—உலகம் - என்ற வரிசையில் லண்டன் கடைசி இடத்தில் இருப்பதால் கூட இருக்கலாம்.

யாரங்கே..பெயரிலி எழுதித் தணித்துக் கொண்டார்.. பகிர்ந்து கொள்ளாத எனக்கு பயம் அதிகரிக்கிறது.. சீக்கிரம் ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்..
(பெயரிலி, உங்கள் அழைப்பை ஏற்று உங்கள் பதிவுக்கு வந்ததால் எனது கதியைப் பார்த்தீர்களா?)
http://theruththondan.blogspot.com

-/பெயரிலி. said...

நன்றி நன்றி.
என்னையும் அதே சைக்கியார் இஸ்டிடம் அழைத்துச்செல்லுங்களேன். (இரண்டுபேர் போனால், fees piece ஆகுமல்லவா?)

Anonymous said...

//எனக்குக் கேடேதும் விளைவிக்காத இன்னொரு மனிதன் - தனக்கென குடும்பம், கனவுகள், நடப்புகள் கொண்டிருக்கும் இன்னொரு மனிதன் - அநாவசியமாக அறியாக்காரணத்துக்காக, தான் அறியாதவர்களால், அவனைத்தானென்று குறி வைத்துக் கொல்ல வராது தம் கருத்தை, தம் அவலத்தினை உணர்த்துக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டவர்களாலே கொல்லப்படும்போது//.

பெயரிலி இவ்வளவு சிந்தித்திருக்கும் நீங்கள் வருத்தப் படவில்லையென பொய்யுரைப்பதே என்னை வருத்தப் படுத்துகிறது!!!.

-/பெயரிலி. said...

/பெயரிலி இவ்வளவு சிந்தித்திருக்கும் நீங்கள் வருத்தப் படவில்லையென பொய்யுரைப்பதே என்னை வருத்தப் படுத்துகிறது!!!./
"நான் "சிந்தித்திருப்பது" தர்க்கரீதியாக எண்ணத்திலே வருவதை; நீங்கள் சொல்வது உணர்வளவிலே வருத்தம் வருவதை" என்று தோன்றுகின்றது.