Thursday, March 31, 2005

படிவு - 10

பிபிஸி தமிழோசை 03/31/2005

பிபிஸி தமிழோசை
2005 மார்ச், 31
'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை'- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய மட்ட மாநாடுகளுக்கு இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) அழைக்கப்பட்டிருப்பது இரு நாட்டு அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடுகளுக்கு தற்போதே முதல் தடவையாக ஜேவிபி அழைக்கப்பட்டுள்ள போதிலும், ஜேவிபியுடன் இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் நீண்ட காலமாகவே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் நிலைமையிலே ஜேவிபியை தாம் ஒரு இடதுசாரிக் கட்சியாக கருதுவதானாலேயே அதனுடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் கூறியுள்ளார்.

ஜேவிபியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை வைத்து அவர்களை ஒரு நேச சக்தியாக தாம் பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டார்.

ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்.

ஒரு பேரினவாத அமைப்பாக தாம் ஜேவிபியை பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜேவிபி வலியுறுத்தி வருவது உங்களுக்கு தவறாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த வரதராஜன் அவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி பெற்ற தமிழ் பகுதிகள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், ஜேவிபியின் இது தொடர்பான நிலைப்பாடு இறுதியானது அல்ல என்பதே தமது கருத்து என்றும், அது தொடர்பில் ஜேவிபியை சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதில் தாம் வெற்றி பெறுவோம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தாம் பெரிய அளவில் தலையிடுவதில்லை என்றும் வரதராஜன் கூறினார்.

ஜேவிபியின் நிலைப்பாட்டை தான் நியாயப்படுத்த விரும்பாத போதிலும், அங்கு பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி எடுக்கும் நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் எதிரொலியாக அமைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி: பிபிஸி தமிழோசை

Tuesday, March 22, 2005

கணம் - 461

மூக்கைத் தோண்டாதே

பொறு கொஞ்சம்!
மூக்கைத் தோண்டாதே.

ஒத்துக்கொள்கிறேன்;
உன்னதுதான் மூக்கு.
ஒப்புக்கொள்கிறேன்;
ஊத்தைதான் உள்வந்தது.

என்றாலும் பொறு; நக
விரல் நுழைத்து வெளிக்
கழிக்காதே நாற்றச்சளி
உனதென்றாலும்
உன்னிஷ்டப்படி.

நம்நாட்டில்
உள் மூச்சு ஒடுங்கி முட்டும்
உன் மூக்கைத் தொடவும்
தோண்டவும் உண்டு விதி.

உன் ஒல்லிச்சளி
மூக்கு வைத்தியத்துக்கும்
வைத்தியம் சட்டத்துக்கும்
சட்டம் சர்வ அரசுக்கும்
அரசு தேவ ஆலயத்துக்கும்
ஆலயம் தெய்வ ஆகமத்துக்கும்
கீழ்ப்பட்ட படிநிலை ஆச்சோ, பார்,
அதனால், ஆகமம் அவதானித்துச்
சொல்லும் உன் களிச்சளிக்கு
மூக்கு, சரியா பிழையாவென்று.

ஆகமத்துக்குப் பிடித்த சளி
தொடுப்பாய் விதியுண்டு கண்டாயா?

விரையாதே; விண்ணப்பி,
விண் கைதூக்கி, உன்னைப்
பிடித்த சளி தோண்ட ஓர்
உத்தரவு தாருமென்று.

'05 மார்ச், 22; 18:04 கிநிநே.

தெறிப்பு - 14


New England Conservatory of Music Posted by Hello


புனைவு - 22

கழியும் பழையது
தெருநாய்களின் மேலொரு உரைநடையும் உடைத்துப்போட்ட உரைவீச்சும்

கடி வேட்டை நாய்களுக்கெதிரான
என் வேக ஓட்டத்தின் பின் தொடரும்,
தெரு வீதி நொண்டி நாய்களுக்கெதிரான
கால் வீச்சு உதையும் கல்வீச்சு நிகழ்வும்.

நேற்றைக்கிதுபோல,
இன்றைய நேரத்திற்கிதுபோல,
நினைவுக்கெட்டிய நாளெல்லாம் இதுபோல...

()()()()()()()()()()

எங்கள் வீட்டிலே நாய் வளர்க்க எப்போதும் அனுமதியில்லை. குதறிக்கடிக்கும் விலங்கு என்பதிலும்விட வரவேற்பறை தொட்டு சமையலறை, படுக்கையறை எல்லாம் தன் சொந்தப்பிரதேசம் என்று அதன் வர்க்கம் எண்ணிக்கொண்டு இருக்கலாமென்று எங்கள் வீட்டில் எண்ணிக் கொண்டிருந்தார்கள்; எங்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மை பொய் தெரியாது; ஏனென்றால், எங்கள் வீட்டிலே எப்போதும் நாய் வளர்க்க அனுமதியில்லை. ஆனால், நாய் வளர்க்க அனுமதியில்லை என்பது நாய் வர அனுமதியில்லை என்று பொருள்படும் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. அதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டுவாசல்வரை வர அனுமதியுண்டு. அன்றைய தான்யதானத்துக்குக் காலித்தனமான தெருநாய்கள் எல்லாம் புளியடிப்பைரவமூர்த்திக்கு நன்றியுடையவைகளாக இருக்கவேண்டும். எவராலும் கவனிக்கப்படாத தான் கவனிக்கப்படுவதற்கு வைரவமூர்த்தி எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி இரவில் அந்த நாய்களும் வரவிட்டாமற் காவலுக்குப் போயிருக்கவேண்டும். இதுதான் எவருமே கையொப்பமும் இடாமல், பேச்சளவிலும் சொல்லிக்கொள்ளாமல் நம்பிக்கை அடிப்படையில் நடைமுறையில் வைத்திருக்கும் ஒப்பந்தம். வைரவர் வந்து போகிறார் என்பது மேல்மட்டத்தின் ஐதீகம். கீழ்மட்டத்துக்குப் பயம்; இடைமட்டத்துக்கு ஐயம். ஆனால், வீட்டளவிலும் ஜனநாயகம் என்பது துரதிர்ஷ்டவசமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்கு விகிதத்தில் மட்டுமே ஏற்கப்பட்டு உறுதியாகப்படுகின்றது என்பது வெட்கத்துக்குரிய விடயம்.

அழைத்துவரப்படும் நாய் அதற்கென ஒதுக்கப்பட்ட கோப்பைக்குட் போடப்பட்டது எதுவானாலும் அத்தனையையும் அப்படியே காலி பண்ணிவிட்டே போயாகவேண்டும். இலைதழை சாப்பிட அது விரும்பாவிட்டால், விலங்கியலில் விஞ்ஞானமாணிப்பட்டம் பெற்ற வீட்டுத்தலைமட்டத்தின் அபிப்பிராயத்தின்படி, மாமிசபட்சணியின் இயற்கை என்றோ அல்லது குறைந்தபட்சம் நாயினது, எங்கோ சாப்பிட்ட நேற்றைய மீன்தலையின் சமிபாடடையாக்குணமென்றோ கருதப்படமாட்டாது. அந்த நாய்ப்போக்கு, நாயின் திமிர்த்தனத்துக்கும் அலட்சியப்போக்குக்குமே எடுத்துக்காட்டு ஆகுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு தெருநாய் அதற்கான தட்டில், அதெற்கென்று போடப்பட்ட இலைதழைச்சோற்றை பிரதோஷ, வைகுந்த ஏகாதேசி விரதகாரன் மாதிரி முழுவதுமாகக் கட்டாயமாகச் சாப்பிட்டே கவேண்டும். கொஞ்சம் விரிவுபடுத்திச் சொல்லப்போனால், தெருநாய் சாப்பிடாவிட்டால், அதை அன்றைக்கு ஏதாவதொரு சைவமுட்டையினாலான பதார்த்தத்தைக் காட்டி (நாய்களுக்கு முட்டையிலே சைவமுட்டை, அசைவமுட்டை என்ற பேதம் இல்லை என்பது என் தாழ்மையான அனுபவரீதியான கருத்து என்பதையும் இந்தநேரத்தில் நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த உரைநடையையும் உரைவீச்சையும் வாசித்து முடித்த பின், நான் இங்கே நீதியெதையும் சொல்லவில்லை என்று குறை கண்ட உணர்வோடு ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என்பதில் நான் கவலை கொண்டிருக்கின்றேன்), வீட்டுக்கு அழைத்து வந்த எனது, ஏதோவிதமான மறைமுகமான தூண்டுதலின் தூண்டற்பேறாக விலங்கியல் விஞ்ஞானமாணிக்கும் அவரின் தலையாட்டிப் பிரதி சனாதிபதிக்கும் தோன்றாத ஞாயிறுகள் எனக்குமுன்னே தோன்றிக் கழிந்ததில்லை.

கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களை அடையாளம் காண்பது, வசப்படுத்துவது என்பன கீழ்மட்டக்கலகக்காரகளின் களச்செயற்பாடுகளில் மாற்றங்களை, தடுமாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான ஒரு யுத்ததந்திரம். மேலும், கலகக்காரர்களுக்குப் பொதுவாக ஆரம்பங்களிற் தலைவர்கள் இருப்பதில்லை. அப்படி எவர்களும் உலாவியும் காணப்படுவதில்லை. ஆக, இன்னாராகத்தான் இருக்கமுடியும் என்று சந்தேகப்பட்டு யாரோ ஓரிரு பேரை அரசு கண்டுபிடித்து அறிவிப்பதே கலகக்காரர்களுக்கு ஓர் ஒழுங்கான தலைமைப்பீடத்தையும் கலகத்துக்கு ஒரு செயல்நோக்கத்தையும் கலகக்குழுவிற்கு ஓர் இயக்கவடிவமைப்பினையும் ஏற்படுத்தி, தன்னைக் குற்றங்களிலிருந்து விடுதலை பண்ணும் என்பது எல்லா அரசுகளூக்கும் தெரியும். அதன்பின், செயற்திட்டம், இயக்கவளர்ச்சி என்பன, அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தலைமைப்பீடத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாறுபடலாம். இந்தளவில் எனது விளையாட்டுக் கண்ணாடிக்குண்டுகளுக்கும் துடுப்புமட்டைக்கும் தண்ணீர்த்தொட்டித் தங்கமீன்களுக்குமான தேவைகட்கு மீளக் குறைந்த வட்டியுடன்கூடத் திருப்பிச் செலுத்தத்தேவையில்லா நிதியுதவி கிடைப்பதற்கு நான் தெரு நாய்களுக்கு நன்றியுடையவன்.

மேல்மட்டம் சாப்பிடமறுக்கும் கீழ்மட்டங்களினைச் சரிப்பண்ண வைக்கும் தந்திரத்தை நான் நாய்களுக்கும் வாய்ப்புப் பார்க்க அனுமதியுண்டு. இருப்பதைச் சாப்பிடமறுக்கும் கொடூரத்தனம் மிக்கவர்களுக்கு, சை காட்டிப் புசிக்கப்பண்ண, கொடுப்பதற்குள் அவர்களுக்குப் பிடித்தவற்றைக் கலந்து கொடுக்கமுடியும். சைவமுட்டைக் கேக் கலந்த இலைதழைச்சோற்றைக் கலப்பது காணாத நாய்கூட, மயக்கமருந்து கலந்த மதுவைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பருகிவிட்டு, "தப்புப்பண்ணிவிட்டேன் கதாநாயகி" என்று வீட்டு + வீதி மூலைகட்கு மூலை எருமை மாதிரி முட்டிக்கொண்டு பாட்டுப்பாடும் திரைப்படநாயகன் மாதிரி, தேடித்தின்னும். ஆனால், எல்லா உற்சவங்களும் நடந்து முடிந்தப்பிறகு, கலந்த குற்றத்திற்கு, கந்தன் சூரனைக் காத்திருந்து கொல்லப் பார்த்திருந்து ஆரவாரித்த பக்தர்கள்போல, கிணற்றடியில் முதல்வாளித்தண்ணீர் யாராவது அள்ளி என்னில் ஊற்றியபின், பின் நானே குளித்துவிட்டபின்னரே, வீட்டுக்குள்போக எனக்கு அருகதையுண்டு.

ஆனால், நாய்களுக்கு இத்தத்துவத்தை வாய்ப்புப்பார்ப்பது என்னும்போது, இடத்துக்கும் உயிரினத்துக்குமான திருத்தங்களினை வீட்டுக்கீழ்மட்டங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்திற் பண்ணவேண்டும். மேல்மட்டம் கலப்பதைத் தாங்கள் காணாததுபோலப் பாவனை பண்ணுவதை மேல்மட்டம் காணாதது போலப் பாவனை பண்ணவேண்டும் என்பது, கீழ்மட்டத்தின் எதிர்பார்ப்பும் அதனூடாக எப்போதும் ஒப்பந்தம் கிழியலாம் என்ற எச்சரிக்கையும். நாய்களோ, தங்களுக்காகவே இடைமட்டங்கள் (சைவ)முட்டையைக் கலக்கின்றன என்பதைத் தாங்கள் கண்டுகொண்டிருப்பதை, இடைமட்டங்களும் கண்டு கொள்ளவேண்டும் என்பதை ஒப்பந்த முதல்நிபந்தனையாக முற்போடும்.

#######################

வேட்டை நாய்கள் பற்கள் போன்றே,
கொடும் கூரானவை,
அவைதம் மூளைக் கலங்கள், நரம்புகள்;
முளைகள் எல்லாம் முன்னே முட்கள் பிசிறி,
சண்டைச்சேவல் கொண்டைகளாய் சிலும்பி...

அவற்றின் சித்தத்தில்,
மனிதர், கோழி
சதைகளும் எலும்புகளுமே
கொழித்துக்
குலுங்கிப்
பிதுங்கும்
சமையற்குறிப்புப்புத்தக
வண்ண வரைபடங்களாக.

நொண்டி நாய்களோ,
உடல் போலவே மனதாலும் நொந்துபோனவை.
நாளைப் பொழுது உணவு கிடைக்கும் வரை
நக்கிக்கொண்டிருக்கும் தம் நாட்பட்ட உடற்புண்கள்.
கல்லடி பட்டாலும் காலுதை பட்டாலும்
மெல்லத் தம்முள் வருந்திக் கொண்டு
தெரு மூலைக்குட் பதுங்கும்;
நாட்பட்ட சோறோ,
இல்லை,
ஈரப்பதம் செத்த ரொட்டியோ
மட்டும் நிலைத்து நிற்கும்
அவை சித்தத்தே.

இவற்றின் இடைப்பட்ட,
துவிச்சக்கரப் பயணி நான்.
எனது பயணத்தில்,
வேட்டைநாய்களின் காட்டினிலே,
நான் ஒரு நொண்டி நாய்.
முட ஞமலிகள் தெருக்களினிலே,
நான் ஒரு கூரான கடி விலங்கு.

()()()()()()()()()()

ஞாயிற்றுக்கிழமை தெருநாய் அழைப்பிலும்கூட எனக்கு, எதேச்சைத்தேடல் நிகழ்த்தும்படியோ, 'கண்ணில் முதற்படும் மிருகம் இன்று முதற் புசிக்கும்' என்ற அந்நாளைய கூப்பன்கடைவரிசை மனிதத்தேற்றத்தைப் பயன்படுத்தும்படியோ கட்டளையிருக்கும். இதற்கு, ஒரே ஞமலி தொடர்ந்து இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் உண்டால், விளையாட்டுப்பந்தய விக்கட் வீழ்ச்சிபோல, சரித்திர சாதனையாகி விடும் என்பதல்ல காரணம் என்பதை நான் மிக நன்கு அறிந்திருந்ததால், கடைகளிற் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தும் விற்பனைத்தத்துவத்தை எங்கள் வீட்டிற்கும் வைரவர் பயன்படுத்திவிடுவாரோ என்று மேல்மட்ட அங்கத்தவர்கள் அஞ்சுவதாக நான் சந்தேகப்பட்டேன். ஒரே பொருளை ஒன்றுக்கு மேலே வாங்கினால், பொருளுக்கான விலை கழிவோடு, குறைக்கப்பட்டுவிடலாம். அதனால், வாரத்துக்கு வாரம் வேறு வேறு நாயாகப் பார்த்துப்பிடிக்கவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டது மேல்மட்டம்.

ஒரு சமயம், வைரவர் அப்படியான வழிமுறையைக் கையாளாமல், 'பத்து எடுத்தால், பதினொன்றாவது இனாம்' என்று தரும் விலையைக் குறைக்காமல், ஆனால், பொருளைக் கூட்டும் யுத்தியைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் ஐம்பதற்கு ஐம்பது இருக்கின்றது என்று என் நிகழ்தகவியல் அறிவைப் பயன்படுத்தி ஒரு கருதுகோளை, ஒரு மேல்மட்டமும் இடைமட்டமும் இல்லாத முட்டுக்காய்ப்பருவமட்டம், வேறு ஒரு கடிதம் கொடுக்கும் போக்குவரத்துப் பண்ணும் காரணத்துக்காக, கொஞ்சம் என் மட்டத்திற்கு இறங்கி வந்த, அல்லது என்னைத் தன் மட்டத்திற்கு ஏற்றிக் கொண்ட நேரத்தில் முன்வைத்தேன். என் எடுகோளை, நிபந்தனை என்பதுபோல, எடுத்தமாத்திரத்தில் எகிறுகோள் பண்ணி, உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக நிராகரித்த முட்டுக்காய்மட்டம் தன் தேவையை இன்னும் கீழ்மட்டத்திற்கு இறங்கிப் போய்ப் பூர்த்தி செய்து கொண்டுவிட்டது. அன்று என் அதிகப்பிரசங்கித்தனத்தால், வாராவாராம் உபரியாக நிரந்திர வருமானம் தந்து கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரை எனக்கு அடுத்த போட்டிச் சில்லறை வியாபாரிக்குக் காவு கொடுத்ததாக உணர்ந்து கொண்டதால், பிறகு வந்த காலங்களில் வாழ்க்கைக்கான கொள்கைகளையும் வயிற்றுக்கான வியாபாரங்களையும் வேறுவேறாகப் பிரித்து நடத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பல நாய்கள் பிடிப்பதில் எனக்கென்ன கஷ்டம் இருக்கக்கூடும் என்று தெருநாய்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாத சாரமான பிறவிகள் அல்லது பஞ்சுமெத்தைப்பைநாய்கள் வளர்க்கும் மேற்தட்டு ஜீவன்கள் கேட்கக்கூடும்.

இப்படிப்பட்ட பிறவிகளுக்கு, இதற்கான விளக்கத்தை, "நாய்களோடு சகவாசம் பண்ணுவது என்பது, மனிதனோடு சகவாசம் பண்ணுவது போன்ற அளவுக்குக் கஷ்டம் அற்றதுதான் என்றாலும்கூட மா கொய்யா மரங்களோடு சௌகரியமான சகவாசம் பண்ணிக்கொண்டிருக்கும் இடைத்தட்டுக்களுக்கு ஒப்பீட்டளவில் மிகமிகக் கஷ்டமானதாகும்" என்று விஞ்ஞானரீதியாகச் சார்பியற்தத்துவ ஒப்பீட்டளவிற் சொல்லுவதிற் தொடங்கலாம். ஆறாவது அறிவு இல்லை என்பது மட்டுமே நாய்களை நல்லதாக மாற்றி நியாயபூர்வமாகச் சிந்திக்கவைத்துவிடாது. மரங்கள் இப்போது ஏறி ஒரு கிளையை உடைத்துவிட்டோ அல்லது பேனாக்கத்தியினால், "எடி இவளெ, உயிர் போகும் வரைக்கும் உல்ளத்தின் உல்லே நீதான்" என்று விள்ளலாய் அட்சரப்பிறழ்வோடு எழுதிக்கிழித்தாலும் அடுத்த நிமிடநேரத்தில் மறந்துபோய், உணர்ச்சி மரத்துப்போய், இன்னொரு முறை கனியிருக்கக் காயிரண்டு கவர்ந்திருக்க ஆட்சேபணை பண்ணுவதில்லை. நாய்களோ ஆடி மாதத்தில் வீதியிற் புணர்கையிற் குறி வைத்துக் கல்லெறிந்தால், ஐப்பசி மழைக்கு முதல், காலில் ஒரு கல்லுக்கு ஒரு பல் என்ற விகிதத்திற் குறி வைக்க அனுமதி கொடுத்தாலொழிய, அதன்பிறகு ஆளுக்காள் சுமுகமான நட்பு தொடரமுடியாது என்ற மாதிரிக்கு எண்ணம் வைத்துக்கொண்டு ஒரு வகையான சுயமரியாதையை எதிர்பார்க்கும் ஜந்து. "கௌரவம் என்பது கேட்டுப் பெற்றுக் கொள்வதல்ல; சுயமே தன் நடத்தையினால் மற்றவர்களுள் ஏற்படுத்திக் கொள்ளும் விடயம் என்பது ஏன் ஒரு பெட்டைநாயைத் தேடி, அதற்காக தெருச்சண்டைகளுக்கும் முன்னிற்கும் சில காலி நாய்களுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இந்த நிலையில் 'எதேச்சைத்தேடல்களும்', 'முதல்வந்தது முன் வாரம் வந்திராவிடில், அதுவே இன்று இலைகுழை புசிக்கும்' என்ற நியதியோடும் நீதியோடும் எனக்கு முரண்பாடு நாய்கள் சம்பந்தப்பட்ட அளவில் உண்டு. விதிகளும் நெறிகளும் மனிதர்களின் தினவாழ்க்கைச் சௌகரியத்துக்காகவேயொழிய, வைரவரினது திருப்திக்கோ, அவரின் வாகனங்களின் திமிருக்கோ வளைந்ததாக அமைக்கப்படக்கூடாது என்று எனக்கிருந்த ஆழமான ஆட்சேபணையை, மேல்மட்டம் தன் 'வல்லரசுக்களுக்கான அதிகார மறுப்புவாக்கு'களைப் பயன்படுத்தித் தடை செய்தது. இலாபகரமான "ஞாயிறுகளில் நாய் தேடும்" தொழிலைத் தாம் என்னிடமிருந்து கைப்பற்றிப் பெற்றுக் கொள்ள, கீழ்மட்டம், என் நாய்த்தர்க்கம் புரியாதபோதும், மேல்மட்டவாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாக பொதுச்சபையிற் கையைத் தூக்கியது. 'தக்கன பிழைக்கும்' என்பதாக அனுபவரீதியில் அறிந்திருந்த மற்றவீடுகளின் சக இடைமட்டங்களும் 'நடைமுறை வாழ்க்கையில் உண்மையைப் பேசினால் உருப்படவாய்ப்பில்லை' என்பதை உதாரணங்கள் மூலம் எனக்கு எடுத்துச் சொல்லினார்கள்.

#######################

என் சிந்தனைத்தளத்தில்,
கடி நாயோடு போராட முடியாது
கடிவாளம் போட்டிருக்கும்
அறிவு.

அவற்றால் பட்ட துயர்,
தூசு தட்டிக் கழியும்,
எட்டி இரண்டு முட நாய் உதைப்பில்,
என் உணர்வுத்திருப்திக்கு.

கடி நாய்களை உதைக்கும் காலத்தைக்
காத்திருக்கும் பொழுதுகளில்,
என் இயலாமையினால்,
முட நாய்களை உதைக்காமலும்
இருக்க்கமுடியவில்லை.
நாய்கள் என்று மட்டுமே,
வெறிநாய்க்காட்டுக்கும்
சொறிநாய்வீதிக்குமிடையே
என் உணர்வுக்குப் பாதை
தெரிகின்றது.

()()()()()()()()()()

ஆனாலும், எனக்கு ரொமியிலும் விட கொசுவை மிக மிக அதிகமாகப் பிடிக்கும். நாய்களுக்குப் பெயருண்டோ என்றோ, அதுவும் தெருநாய்களுக்கும்கூடப் பெயருண்டோ என்றோ, அதிலும்கூட, கொசு என்று தெருநாய்களுக்கோ அல்லது எந்த கொம்பன்நாய்க்கென்றாலும் கூடவோ பெயரிருக்கும் என்றோ கேட்டுவிடத்துடிக்கும் ஒரு (நாய்ச்)சமூகவியல் ஆய்வாளர் நீங்கள் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். பொறுமை அவசியம். ஒவ்வொன்றாய்ச் சொல்ல வருகின்றேன். எங்களூர்த்தெருநாய்களுக்கு எண்சோதிடம் பார்த்து 'ப' வரிசையில் நான்கெழுத்துப் பெயராய் வைத்துத்தான் ஆகவேண்டும் என்று எவரும் பிடிவாதம் பிடிப்பதில்லை; இடுகுறிப்பெயர்களும் இடுவதில்லை. அதனாற்றான், அந்தப் பெயரிலி விலங்குகள் தங்களுக்கு ஒரு பெயரைப் பெற்றுக் கொள்ளத் தம்முள் ஏதாவது ஒரு குணத்தை அதீதமாக வளர்த்துக் கொள்கின்றனவோ என்றும் எனக்குச் சந்தேகம். அதற்குப் பிறகும் அவற்றின் பெயர்கள், நேரம்சாராக் கணிய- "இன்றைக்கு வாலையாட்டினால், சடையன்; நாளைக்கு காலைப்பிடித்தால், சனியன்." இதுதான் எங்களூர்த்தெருநாய்களுக்கான மேல்மட்டசபையினால் அங்கீகரிக்கப்பட்ட பெயரீட்டுமுறை. தெருநாய்களுக்கும் பெயருண்டா என்று கேட்காமல் விட்டவர்கள் நீங்கள் என்றாலும், ரொமியிலும்விடக் கொசுவை தரிப்பவன் என்றதற்காக, நான் மொழிப்பற்று மிக்கவன் என்பதாக எண்ணிக்கொண்டு அடுத்த அனுமானத்திற் தோற்றுவிடக்கூடாது.

ரொமியிலும் கொசு மிகவும் இளைச்சலாக, ஏதோ இனம்புரியாத ஏக்கம் நிறைந்ததாக என் கண்ணிற்பட்டதுதான் காரணம் என்பதும் அல்ல. அறிந்தவர்கள் சொன்னபடி, அது ஒரு
மேற்சாதிவீட்டு நாயினதும் கீழ்ச்சாதித் தெருநாயினதும் திருட்டுத்தொடர்பிற் பிறந்தததால், வீதியிலேயே கைவிடப்பட்டுத் தன் சுயமுயற்சியினாலேயே பிறந்ததுமுதல் வளர்ந்தது என்றும் கைவிட்ட தந்தையின் மிகைப்பணிவடக்கமும் நன்றித்தனமும் அறிவுத்திறனும் நிறை நன்நாய் என்றும் அதன் சரித்திரம் ஒரு தமிழ்த்திரைப்படக் கதாநாயகனின் வாழ்க்கைக்குறிப்புப் போல விரிந்து நகர்ந்துபோகும்.

அதன் மேற்குடிப்பிறந்த தந்தையாக, ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுநாய்களை எங்கள்தெரு முடிதிருத்தும் நிலையத்து இலவசப்பத்திரிகை படிக்கும் முழுமொட்டைத்தலையர்கள், வான்குண்டு சிகையற்ற சிரங்களில் விழுந்துபோகும் கால(ன்)ம்வரை குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள். வீட்டுநாய்கள், தம் சாதியின் ஒரு புறம்போக்குப்பேர்வழியின் செயலால் மற்ற அப்பாவிகள்மீது பொதுப்படையாகக் குற்றம் சாட்டக்கூடாது என்பதையே, அடிக்கடி கட்டறுத்து இவர்களுக்கு கடித்து குறியீட்டுபூர்வமாகச் சொல்லிவைக்க முயர்சித்ததாக எனக்குப் பட்டது ஏனோ மற்றவர்களுக்குப் படவேயில்லை.

கொசு, தன் தாயினைத் தேடிக் கண்டுபிடிக்க, ஏதாவது ஒரு பரம்பரையலகூடாகக் கடத்தப்பட்ட தனித்துவ ஊளையிடல், அல்லது சங்கேதக்குரைப்பு என்று தாய்நாய் அதற்குப் பிறந்த நேரத்திற் சொல்லிக் கொடுத்திருந்ததா, மேலும், தந்தையைக் கண்டுபிடிக்க சிகைசிரைநிலையத்துச் சிகையற்றோர் ஏதாவது மரபணுப்பரிசோதனை பண்ண எண்ணியிருந்தார்களா என்பதெல்லாம் இங்கே அநாவசியம் என்று விட்டுவிட்டுப்பார்த்தால், கொசு ஒருநாளும் என்னைத் துரத்தியது இல்லை என்பதே அதன்மீது என் (அதீத)அன்புக்கான காரணம். ஞாயிற்றுக்கிழமை சைவமுட்டை கலந்த இலைதழைக்காக அது என்னைத் துரத்தவில்லையா, அல்லது அது துரத்தாததாலேயே நான் அதை ஞாயிறு அடுப்பு நெருப்பு நடுப்பகல்களிற் தேடித் திரிந்திருந்தேனா என்று அறிய விரும்புகிறவர்கள், எனக்கு முதலில், "கொடியசைந்ததும் காற்று வந்ததா,காற்று வந்ததும் கொடியசைந்ததா" என்ற பாடலுக்கான முழு விளக்கத்தையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நாய்களுக்கும் அவற்றின் வாலைப் பிடிப்பது வைரவருக்கு வாலைப் பிடிப்பது என்று நினைத்துக்கொள்ளும் வீட்டுமேல்மட்டங்களுக்கும் இடைமட்டத் தரகூடாக ஓர் எழுதா ஒப்பந்தம் உருவாக முடியுமானால், ஓர் முன்னேறத்துடிக்கும் இடைமட்டத்துக்கும் ஒரு புரிந்துணர்வுள்ள நாயிற்கும் இடையே ஏன், "உனக்குச் சைவமுட்டை, எனக்கு கண்ணாடிக்குண்டு" என்று ஒரு 'வாழ்க்கையே ஒரு பண்டமாற்று வியாபாரம்'தான் தத்துவ நடைமுறைப்படுத்தல் நிகழக்கூடாது? இதற்கு மேலாலும் ஒப்பந்தப்பங்குதாரர்கள் என்ற எல்லைக்கு அப்பாலும்கூடக் கொசு எனக்கு எந்த நேரத்திலும் மரியாதை தந்திருக்கிறது. என் கண்முன்னால், எந்தப் பெட்டை நாயையும் விரட்டியதில்லை; வீதிமரங்களுக்கு, விளக்குக்கம்பங்களுக்கு உரவிலக்கு என்பது தன் கொள்கையில் உள்ளடக்கம் என்று காட்டியிருக்கின்றது.

மேலும் கல்லடி பட்டு முனகியோ முடங்கியோ நொண்டிக் கிடக்கும் நேரத்திலும்கூட எழுந்து வாலாட்டி மரியாதை செய்ய முயற்சித்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். தன் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் ஜீவன்களுக்கு மோதிப்பைக் கொடுத்து முகமலர்ச்சியைக் காணுவதை மரியாதை என்று எண்ணும் ஓர் இடைத்தரத்துக்கும்கூட இந்தக் கனம்பண்ணும் செயல்கள் தன் தகுதிக்கு மீறியவை எனப்பட்டது. இதனால், அங்கீகாரத் தலையாட்டலுக்கு மேலாக, அ·து என்னைக் கவனிக்காத காரணத்தினால், காதல்விடு நிகழ்வுகளையும், கழிப்புக்கடன்கள் உந்து விளைவுகளையும் பண்ணிக் கொண்டிருந்தாலும்கூட காணாததுபோல நகர்ந்துவிடும் யுக்தியை, எப்போதும் முகத்துக்கு முன்னே பணிவான, என் சில்மிஷங்களைத் தற்செயலாகக் காண நேர்ந்தும் காணாததுபோகும் போகும் தமிழாசிரியர்களிடம் இருந்து கற்றிருந்தேன்.

காலப்போக்கில் எனக்கும் அதற்குமிடையான இந்த ஒப்பந்தம் அதற்கு மேலும் இந்த வெற்றியிலான வியாபாரத்தில் விரிந்து போயிருக்கிறது. என்னைத் தெருநாய்கள் துரத்தும்போது, எனக்காக அவற்றுடன் அதன் தொழிலாகப் பட்டால், அதற்கு அதே நிகழ்வு நடக்கையில் நான் அதற்காகப் படை திரட்டி என் கணக்கினைச் சமப்படுத்த முயல்வதுண்டு. நாய்ப்போருக்குப் பயந்த சில கோழை இடைத்தரங்கள், "கொசுதான் மற்ற நாய்களிடம், 'நீ கடிக்கின்ற மாதிரி பாவனை பண்ணு; நான் காக்கின்ற மாதிரி பாவனை பண்ணுகிறேன்; பதிலுக்கு, ஒரு நாளைக்கு அந்த மரம், அல்லது இந்தப் பெண்நாய் உனக்கு' என்கின்ற மாதிரி ஓர் ஏற்பாடு" என்ற தப்பபிப்பிராயத்தைத் திணிக்க முயன்றார்கள். நான் காதலித்துக்கொண்டிருக்கும் பெண்கள் வேறு யாரையாவது காதலிக்கக்கூடும் என்று நம்ப நான் அன்றைக்கும் தயாரில்லை என்பதை அவர்களுக்கு அந்தந்த நேரங்களிலும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். மேற்தரமோ கீழ்த்தரமோ வாழ்க்கையில் நம்பிக்கைதான் முக்கியம்; இல்லையா, என்ன?

ரொமியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியவை இரு வசனங்கள் மட்டுமே. ஒன்று, திரைப்படக்கெட்டவனான 'வில்லனி'ன் (குறிப்பாக, பௌதீக விதிகள் அனைத்தையும் மறுதலித்த கதாநாயகன் அந்தரத்திலிருந்து குதித்துக்குதித்து குத்துகையில், சந்தைகளிற் உடைவதெற்கென்றே காத்திருக்கும் மண்குடங்கள், மரக்கறிவண்டிகள் என்பற்றில் விழுந்து நொருக்கும் கெட்டவனின்) சகல குணவியல்புகளும் அதனுள் அடக்கம்; அதற்கு என்னைப் பிடிக்காததால், கொசுவைப் பிடிக்கவில்லை அல்லது கொசுவைப் பிடிக்காததால், என்னைப் பிடிக்கவில்லை என்பது மற்ற வாக்கியம். அதனது பற்கடி எனக்கும், எனது கல்லடி அதற்கும், வகை தொட்டு வலி வரைக்கும் முதலாம் வாய்ப்பாடு மாதிரி. என் ஞாபகசக்தி இன்றைக்கும் சரியாகத் தொழிற்படுகின்றது என நம்பிக் கொண்டால், 'கடிப்பவை, நாய்களோ, நரர்களோ முதற்கடியிலேயே வாழ்க்கைக்கும் அவர்களை வெறுக்கும் இயல்பினை என்னுள் அனுபவத்தூடாகத் திணித்த பெருமையை ரொமி எவரோடும் பங்குபோடவிடாமல் பலகாலம் தன் பற்களிற் கவ்விக் காவி வைத்திருந்தது' என்பதாய் நினைக்கின்றேன், ரொமியோடு ஏதாவது கண்முறைப்புத் தொடக்கம் காலுதைப்பு வரையுமாகத் தொடர்புபடாமல், தெருநாய்களின் எல்லையை நான் கடந்து வந்த நாட்கள் முற்றாக இல்லை - முறைப்பும் உதைப்பும் அன்றன்றைய எம்மிருவர் மனநிலைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கும் என்பதைத் தவிர. போகும் ஏதாவது நாய் கடித்தோ, வாகனம் உடல் ஏறியோ, இல்லை நகரசபை நாய்வண்டி உள்ளே ஏற்றியோ என் கண் முன்னாலேயே அ·து அற்றுப்போயிருக்க வேண்டும் என்பதே என் பரீட்சைப்புள்ளிகளுக்கான கடவுளுடனான பேரம் பேசலினைக்கூடச் சமயாசமயங்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளிவைத்த லயப்பிராத்தனைகளாக இருந்திருக்கின்றன. அ·து என்னை வேதனைப்படுத்தி வம்புக்கிழுப்பதற்காகவே சும்மா பந்து வி¨ளையாடப் போய்க்கொண்டிருக்கும் என் முன்னே அதிகம் கொசுவை வம்புக்கிழுத்துக் கடித்து வைப்பதாகப்பட்டது. சைவமுட்டை+இலைகுழைக் கூட்டுக்கு முன்னாலான கொசுவுக்கான - மேற்தட்டை வேறு வேறு நாய் என்று நம்பவைக்கும் முயற்சியின் பேரிலான- என் கை+வாய் ஒப்பனைத்திறனுக்கும் மிஞ்சி, பலமுறை "ஏன் ரொமியூடாக வைரவரின் புண்ணியம் கிடைக்கக்கூடாது?" என்று மேற்தட்டு அக்கலாய்த்திருக்கின்றது. ஆனாலும் அப்படியான அங்கலாய்ப்புக்கள் அல்லது ஆளும்வர்க்கத்தின் விருப்புத்தேர்வு வாக்குகள் பிரயோகிக்கப்படலாம் என்றான சமயங்களில், என் ஏதாவது ஒரு காலில் (அல்லது இரண்டு கால்களிலுமே, நிலைமையின் தீவிரத்துக்கேற்ப தொடை, கைகள், கழுத்து, மூக்கு என்றும் பரவக்கூடும் என்பதையும் அறியத் தருவது என் கடமை) உள்ள காற்பந்துக்காயங்கள், மரமேறு உரசல்கள் எல்லாவற்றுக்கும் ரொமி திட்டு வாங்கவைக்கும் விதத்தில் வாக்குமூலம் அளிப்பது என் கடமை என்பதாய் மனச்சாட்சி குத்திச் சொல்ல உணர்ந்து செயற்பட்டிருக்கின்றேன்.

#######################

ஆனால்,
உதைத்து விட்டு,
வீட்டுக்குப் போய்,
மூலைச்சுவரில்
சக்கரவண்டி சாத்துகையில்,
மௌனத்தில், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,
அந்தச் சில அப்பாவி நாய்களிடம்,
என் மதத்தின் மூர்க்கத்தின் மூலம்,
கடிவாளம் அற்ற காட்டு நாய்களின்
அப்பாவியிற் பல் பதிக்கும் அற்ப செயல்கள்
என்பதை எனக்குளேயே எடுத்துச் சொல்லி......

புரையோடிப்போன புண்களில்
புழு கொழுத்து அவதிப்படும்
அப்பாவி நாய்கள் அறியப்போவதில்லைத்தான்,
என் செயலின் அற்பத்தனத்தின் திமூலம்.


()()()()()()()()()()

உங்களைக் கனம் பண்ணுகின்றவர்கள் என்று நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்பவர்கள், உங்களைக் கண்டும் காணாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமானபோதும், அதைச் சமதட்டுகளுக்குக் காட்டிக் கொள்வது உங்களுக்கு அவமரியாதையாகும் என்பதை என் வீட்டு மேற்தட்டுக்களும் எல்லாவீட்டு மேற்தட்டுக்களும் சொற்படுத்தாது, - ஆனால்- செயற்படுத்தி ஏற்கனவே காட்டியிருப்பதால், கொசுவின் 'கண்டும் காணாத இருப்பி'ன் போக்கை நானும் கண்டும் காணாததுபோல திட்டமிட்டு அலட்சியப்படுத்தி, கூட வந்த இடைத்தட்டுக்களுக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும், முதல் ஞாயிறுகூட, அரை மணிநேரம் அலைந்து, தொடர்ந்து மூன்றாவது வாரமும் (ஆனால், இடையில் ஒரு வாரம் கிட்டே வந்து மேற்தட்டுகள் அடையாளம் காணத் துடிக்காத மாதிரிக்குச் சாக்கடைத்தீர்த்தம் அதற்குத் தெளித்து) வைரவசாந்திக்கு, என் வீட்டு முன் சந்நிதிக்குக் கொண்டுபோயிருந்தேன். வேறு உயர்வான முழுமாமிச வைரவவிருந்துக்காரனுக்கு வாடிக்கையாளன் ஆகிவிட்டதோ என்ற என் வாழ்வுக்கவலையும் வயிற்றெரிச்சல் வசப்பட்ட சினமும் அலட்சியப்படுத்தப்பட்ட அவமான உணர்ச்சியும் சேர நகர்ந்தவன், வீட்டுக்கு, சந்திமுனையில் ஒரு பொய்முகம் எடுத்துப் போட்டுக் கொண்டுபோய், அன்றைக்கு விளையாட்டுமைதானத்தில், இரண்டு ஓட்டங்கள் அடித்த நிலையில், போட்டவன் கைக்கே பந்தை அடித்து வெளியே போனவன் படவேண்டிய அளவுக்கு அதீதத்திலும் அதீதமாகவே மீறி ஆனந்தமயநிலையைச் சொரிந்து (¦)காட்டினேன்.

சொல்லப்போனால், இந்தச் சம்பவத்தில், எல்லாவற்றிலும்விட, மிக வெறுப்பாக இருந்த விடயம், ரொமியும் கொசுவும் அருகருகே குந்தியிருந்து, "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" என்ற மௌனத்திலே ஒன்றை ஒன்று பார்த்திருந்து என்னை முறைப்பதாக இருந்ததே. ரொமி, காத்திரமான ஆத்திரப்பார்வைக்குள், கேலிப்புன்னகை பொதி கட்டி வேறு அனுப்பக் கற்றிருந்ததாய் வேறும் தெரியவந்தது. என்ன மனித-நாய் இடைப்பட்ட அந்நியோன்ய நட்பென்றாலும், தன் இனம் என்று வரும்போது, மனிதர் மனிதருடனேயே; நாய்கள் நாய்களுடனேயே என்று சொல்லும் சலித்துப்போன உவமை, 'இனம் இனத்தோடுதான்' உண்மையாகிப் போய் பள்ளித் தமிழ்ப்பாடத்திட்டங்களிலும் வாழ்க்கைக்குப் பயன்படும் அர்த்தமுள்ள விடயங்கள் இருப்பது காலநேரம் தெரியாமல் ஞாபகத்துக்கு வேறு வந்து தொலைத்தது. முகம் தெரியாத எதிரிகள் தொகை பத்தின் நேரடுக்குகளின் எண்ணிக்கையில் வலுத்தொடராக அதிகரிப்பதிலும்விட, நண்பர்கள் ஒற்றைப்படையாய்க்கூட எதிர்முகாம் போவது வேதனைக்குரியது.

மனமொத்த காதலும் அதைக் காட்டும் அன்புச்செயல்களில் மாற்றமில்லாவிடின், சலிப்புத் தரும் என்று வகுப்புப்புத்தகங்களுள் மறைத்துப் படித்த மஞ்சள் இலக்கியம் சொன்னதாய் ஒரு சின்ன ஞாபகம். அடுத்த ஞாயிறு, ஒரு சமாதானத்தூது போய் வந்து நட்பைப் பழுதுபார்ப்பது என்பதும் தூசு தட்டுவதென்பதும் அர்த்தமுள்ள செயலாகப்பட்டது. ஆனால், போனபோது, கண்ட மாத்திரத்தில், இரண்டும் ஒத்த இணைகளாய்க் குரைத்துத் துரத்த (அதிலும், கொசு, மிகவும் குதறும் கொலைத்தனம் உமிழ்நீர்ப்பையிருந்து ஒழுகி அதன் பற்களினைக் கோரப்படுத்த...), மற்றைய இடைத்தட்டுக்களில் நகைப்பினையும் பொருட்படுத்தாது, வீட்டுச்சமையலறை வரை நில்லாதோடிய ஓட்டத்துக்கு உயிர் தந்தது, அவமானாமல்ல; உயிரச்சமுமல்ல; நம்பிக்கைத்துரோகத்தின் அடியென்றே என் கருத்தாகி இருந்தது. மேற்தட்டு, முதல்முதலில் என் குரலுக்குப் பயந்து பயந்து பேசியது, அன்றைக்கே முதற்றடவை என்று எண்ணுகின்றேன்.

#######################

ஆனாலும்,
வெறி மிஞ்சிப்போனால்,
ஒரு நாள்,
கடி விலங்குகள்
என் கைத்துப்பாக்கிக்குண்டுகட்கு,
தம் நெற்றிப்பொட்டில்
திலகம் வைத்துச் செத்துச் சாய்கையிலே,
முட நாய்கள் அறியும்,
என் மூர்க்கம்,
முற்றிலும் பிறழ்ந்ததல்லவென்று.


()()()()()()()()()()

அதற்கடுத்த ஞாயிறு வரமுன்பு, செவ்வாயோ புதனோ, ஒருநாள் கொசுவுக்கு வெறி என்று ஊருக்குச் பேச்சு. இரண்டு மூன்று பேரைக் கடித்ததாய்ச் சொன்னார்கள். முடிதிருத்துநிலைய மொட்டைத்தலையர்கள் தொடக்கம் வீட்டு மேற்தட்டுவரைக்கும் எல்லோரும் தங்களுக்கு சாதுக்கொசு இப்படி வெறிக்கொசுவாகும் என்பது முன்னமே எந்தவளவுக்கு ஊகிக்கக்கூடிதாக இருந்தது என்று -தரவு சேகரிக்கப்பட்ட நேரத்தொடர் நிகழ்வுகளுக்கு, அவசியம் செத்த காலந்தாழ்த்திய எதிர்வுகூறல்- சொல்லி, தங்களின் முதுகுகளைத் தாங்களே தட்டமுயற்சித்து, மற்றைய சொந்த முதுகுதட்டிகள் வாரிவிட்டதாற் தோற்றும் ஒத்துக் கொள்ளாமல், திரும்பவும் தன் முயற்சியிற் தளரா விக்கிரமாதித்தன்களாவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அப்பாவிகள் மட்டுமே மேலும் தலையிற் குட்டப்படுவதாகப்பட்டது. நல்லவை என்பதற்கு, இயல்பில் நீதி பிறழ்ந்த உலகில், நெறியென்று சொல்லப்பட்டதோடு வாழப்போராடித் தோற்றுப்போகின்றவை என்பதே வரைவிலக்கணமாக -எப்போதாவது ஓர் ஒழுங்கான என் மொழி அகராதி யாராலும் தொகுக்கப்பட்டால், கோப்பாளர்கள் சொல்லிவைக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை- என் விஞ்ஞானப்புத்தகத்தின் இல்லாத கடைசிப்பக்கத்திற்கு முன்பக்கத்திற் 2HB எழுதுகோலால் எழுதிவைத்த ஞாபகம். தாய்நாயோ, தந்தைநாயோ, எதுவாயினும் இப்போது கவலைப்படக்கூடுமோ என்ற ஓர் அநாவசியச் சந்தேகம் வேறு எழுந்தது. கடந்தகாலங்களில் உப்புச்சப்பில்லை என்று நினைத்த அதனுடனான தொடர்பு ஒவ்வொன்றிற்கும், குறைந்தபட்சம் ஏதோவோர் அர்த்தம் உணர்வு அளவில் எழுந்ததாய்ப்பட்டது. கூடவே, ஏன் இந்த வெறி, ஏற்கனவே தன் நாள்நாய்ச்செயலளவில் நடைமுறைப்படுத்தும் ரொமிக்குப் பிடித்திருக்கக்கூடாது என்று தீயவற்றின் பிரதிநிதி என நான் கருதியதன்மீது, ஒரு கையாலாகாத ஆத்திரம், விடை தேவைப்படா வினாவாகவும் அநீதியாக எழுந்தது.

மற்றையநாள், வீரனைச் சுட்டு நகரசபைநாய் வண்டியுட் போடுக் கொண்டுபோனதைப் பார்க்க மற்றவர்களுடன் நான் போகாததற்குக் காரணம், நான் அழுவதை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடுமோ என்று வெட்கப்படுவதாக கீழ்த்தட்டு எண்ணிக்கொண்டது; காப்பாளன் இல்லாததால், இனி ரொமியைக் கண்டால், முற்றாகவே அஞ்சிக் கட்டைக்காற்சட்டையில் மூத்திரம் பெய்துவிடுவேன் என்று அனைத்துமறிந்ததாக அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கும் மேற்தட்டு, நானறியாமற் தமக்குட் சொல்லிக் கொண்டோமெனத் தம்முட் திருப்திப்பட்டுக்கொண்டு, ஒரு எச்சில்நாய்க்கான பார்வைப்பரிதாபம் எனக்காய், ஆளுக்கொன்று (சமையலறைக்குள் ஒன்று, சாய்வுநாற்காலிக்குள் மற்றொன்று) எறிந்துபோனது. எனக்கென்றால், கண்ணுக்கு முன் இறக்காத ஒன்று எங்கேயோ இன்னமும் தற்காலிகமாகப் பிரிந்திருப்பதாக எண்ணி -அறிவுபூர்வ முட்டாற்றனத்துடனெனினும்- உணர்வுபூர்வமாக வேதனை குறைந்திருக்கலாம் என்பதே என் செயலுக்கான என் காரணமாகத் தெரிந்தது.

#######################

நாய்கட்கும் நீதி கேட்கும் நியாயம் உண்டு என்பதுபோல்
என் நியாயம் புரியும் பக்குவமும் நெஞ்சிருக்கும் என்ற நம்பிக்கை.
அவற்றிற்குத் தெரியும்,
கடி நாய்க்கும் முடநாய்க்கும் உள்ளே பல்பேதமிருந்தாலும்,
இல்லை, வெளித்தூங்கு நீள்மூஞ்சியில்
ஏதும் பாடபேதமென்று.

முட நாய்கள்,
என் மூர்க்கத்தைப் புரிந்து கொள்ளமட்டுமே
என் இன்றைய காலைப் பிராத்தனை,
கடிநாய்கள் என் காலைப் பதம் பார்க்கத்தொடங்கிய
காலம் தொட்ட காலைகள் எல்லாம் போல.

()()()()()()()()()()

ஆனாலும், அடுத்து வந்த நாட்களில் அந்தவீதியை எக்காரணம் கொண்டும் நான் உபயோகப்படுத்த மறுத்திருந்தேன். பிறகு வரும் ஞாயிறுகளில், வைரவவிருந்துக்கு நாய் தேடப்போக என்னை எவரும் அழைக்கவில்லை; எனக்கும் என்னை அழைத்துவிடுவார்களோ என்பதே பெரிய பயமாக இருந்தது.

இரண்டு மாதங்களின்பின் எதேச்சையாக இன்னொரு வீதியில், என் துவிச்சக்கரவண்டியின் முன்னே குறுக்கே ரொமி ஓடக்கண்டேன். ஆனால், அ·து என்னைத் துரத்தமுயலவில்லை. எனக்கும் அதற்கு எட்டி உதைக்கவேண்டும் என்றுபடவில்லை. (இருவரும்) திரும்பிப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன, எதிர்பாராத சந்திப்பெனிலும், இளைத்திருந்த அதன் விழிகளில் எதையோ தொலைத்திருந்த வெறுமை; என் கண்களும் அதன் சிந்தைக்கு அப்படித்தான் பட்டது போலும்; தான் ஓடுவதாற்றான் ஓடுவதுபோலத் தோன்றும்படி, மெதுவாக வாலை ஆட்டிய உணர்வு. வண்டி மணியை எனக்கு முன்னே போகாத கிழவியொருத்திக்குப் பாதையோரத்தை ஞாபகப்படுத்த நானும் அடித்துவைத்தேன், என் பங்கு சரியாக இருக்கவேண்டும் என்ற நேர்மையான உணர்விலும் கவனத்திலும்.

அடுத்த ஞாயிறுக்கு டசின் கண்ணாடிக்குண்டுகளுக்கோ, தங்கமீன் இணைக்கோ பேரம்பேசாமல், எவரும் வேண்டுகோள் விடுக்காமலே, "நானே வைரவவிருந்துக்கு நாய் தேடிப்பிடித்து வருகின்றேன்" என்று புறப்பட, புதிதாக தொழில் பெற்ற கீழ்மட்டம் தன் பஞ்சுமிட்டாய் வயிற்றிலடித்ததாய், 'வீட்டுவழமையை' முன்னிறுத்தி ஆட்சேபித்து, ஆர்ப்பாட்டம் பண்ணியது; மேல்மட்டம், என் புத்திசுவாதீனத்திற் சந்தேகப்பட்டதாய்த் தெரிந்தது. அரைமணிநேரம் கழித்து, ரொமியுடன் வந்து, தனக்கான கூலியைக் கீழ்மட்டத்துக்குக் கையுறையாகக் கொடுக்கும்படி மேல்மட்டத்திடம் தாழ்மையாக விண்ணப்பித்துவிட்டு, சாதுவாக சைவமுட்டை கலக்காமலே, இலைகுழைச்சோறு சாப்பிடும் ரொமியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் புத்திசுவாதீனத்தின் சமநிலையைக் கீழ்மட்டமும் சந்தேகித்தது மிகவும் தெளிவாக முகங்களிற் தெரிந்தது; உதவி மேல்மட்டம், அதியுயர்மேல்மட்டத்திடம், "இடைமட்டத்துக்கு வைரவபூசை ஒன்று பண்ணி, நூல் மந்திரித்துக்கட்டவேண்டும்" என்று மிகக்கவலையாகச் சிபார்சு பண்ணி அங்கலாய்த்து, மேற்கொண்ட செயலுக்கு அடுக்குப்பண்ணிக் கொண்டிருந்தது.

இடைமட்டம், தான் கூர்ப்புத்தாவரத்தின், இதுவரையில்லாத ஒரு மேற்மட்டப் புதுக்கிளையினைத் துளிர்ப்புப்பண்ணிப் பூப்பெய்தியதாக உணர்ந்து கொண்டது.


'99, பெப்ருவரி, 13, சனி 22:52 மநிநே

Monday, March 21, 2005

பின்னல்- 18


Network towards Sky


புலம் - 10

ந(நா)றுங்கள்ளும் புதுப்பிழாவும் - 1



1968; வியட்நாம் போரின் உச்சக்காலம்; ஏழாண்டுகாலம் அந்தப்போருக்கு அமெரிக்காவின் பாதுகாப்புச்செயலராக இருந்தவர், உரொபேர்ட் மக்னமாரா; அவரை உலகவங்கியின் தலைமைப்பொறுப்புக்கு இலிண்டன் ஜோன்ஸனின் அரசு முன்மொழிந்து அமர்த்தியபோது, அமெரிக்காவுக்கு வெளியே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எதுவும் அந்நியமனம் குறித்து எழுந்ததாகத் தெரியவில்லை. காலச்சுழற்சி; 2005; ஈராக் போரின் நிகழ்காலம்; அதற்காக நெடுங்காலத்திட்டமிட்டார்களிலே ஒருவர், அமெரிக்காவின் துணைப்பாதுக்காப்புத்துறைச்செயலாளர் போல் உல்ப்ஃபெவிட்ஸ். அவரினை உலகவங்கியின் தலைவராக அமெரிக்க அரசு முன்மொழிந்திருக்கின்றது. அவரின் நியமனம் குறித்து, அமெரிக்காவுக்கு வெளியே முணுமுணுப்பு ஏற்படாத நாடென்று எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இருவரினதும் நியமன முன்மொழிவுகளுக்குமான உலக எதிர்வினையிலே இருக்கும் வேறுபாட்டுக்குப் பல காரணங்கள் உண்டு. மக்னமாரா, தன் வியட்நாம் போரின் மீது, செயலர் என்ற தொழில்ரீதியான செயற்பாட்டுக்கு அப்பால் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை. மேலும், உலகவங்கிக்காக அவரை ஜோன்ஸன் அரசு முன்மொழிந்ததையிட்டு உலகம் ஆச்சரியப்பட்டிருந்தது; ஏனென்றால், வியட்நாம் போர் குறித்த போக்கினைக் குறித்து, அக்குறிப்பிட்ட காலகட்டத்திலே மக்னமாரா ஜோன்ஸனுடன் முரண்பட்டிருந்தார். வியட்நாமின் உள்நாட்டுப்போரிலே, தென் வியட்நாமுக்காக அமெரிக்கா சார்புநிலை எடுத்து நேரடியாக ஈடுபட்டபோது, வட வியட்நாம் அன்றைய கொம்யூனிச நாடுகளின் மறைமுக உதவியினைப் பெற்றிருந்திருந்தது. இது தவிர, மக்னமாரா தொழில்சார் அடிப்படையிலே ஒரு வங்கியாளரும் நிதித்துறை அனுபவம் கொண்டவருமாவார். உல்ப்ஃபெவிட்ஸ் மக்னமாராவுக்கு மாறானவர்; செப்ரெம்பர் 11 இற்கு வெகுகாலம் முன்னதாகவே, ஈராக் உள்ளே அமெரிக்கா நுழைய வேண்டுமென்பதிலே வெகு அக்கறையாக இருந்த புது-வழமைபேண் குழுவினரிலே ஒருவர்; குறிப்பாக, ஐரோப்பாவின் பெருநாடுகளிலே சிலவற்றினைப் பழைய_ஐரோப்பா என்று அழைத்த குழு இது. ஆனால், இப்பொழுது, பொதுவுடமைக்கொள்கை நடைமுறையிலே அற்றுப்போய் முதலாளித்துவம்-பொதுவுடமை என்ற இருகிளைப்பலநிலை உடைந்த, பலமுனைப் பலப்பரீட்சைக்குரியது. மேலும், உல்ப்ஃபெவிட்ஸ், தொழில்முறையிலே, கொலம்பிய பல்கலைக்கழகத்தின் ஜெப்ஃரி சார்ச் (jeffrey sachs) சொன்னதுபோல, "நிதி தொடர்பான அனுபவம் உடைத்தவர் அல்லர்."

அதனாலே, ஐரோப்பிய ஒன்றியத்தின் 'பழைய_ஐரோப்பிய' நாடுகளும் அபிவிருத்தி அடைந்து வரும்(!) நாடுகளும் மூன்றாம் உலகநாடுகளும் உல்ஃபெவிட்ஸினை விரும்பாமல் முணுமுணுக்கவே செய்யும்; ஆனால், ஒவ்வொருவரினதும் காரணங்கள்தான் வேறு வேறு. இந்நிலையிலுங்கூட, உல்ப்ஃபெவிட்ஸ் உலக வங்கியின் தலைமையினை ஏற்பதினைத் தவிர்க்க/தடுக்க எவருமே முயலப்போவதில்லை எனலாம். பிரான்ஸின் வெளித்துறை அமைச்சர், "வேறு பெயர்களும் இப்பதவிக்காக முன் மொழியப்படும் என்று நம்புகின்றோம்" என்று சொல்லியிருந்தாலுங்கூட, அவருக்கு நிச்சயமாக உல்ஃபெவிட்ஸ்தான் இந்தப்பதவியைப் பெறப்போகின்றார் என்பதிலே சந்தேகமிருக்குமென்று படவில்லை. உலகவங்கித்தலைவரை அமெரிக்காவும் அகில பணநிதியத்தின் தலைவரை ஐரோப்பாவுமே முன்மொழிவது என்பது எழுதாக்கிளவியாக கால வழிவருவது; 2000 இலே பணநிதியத்தலைவராக ஐரோப்பா முன்மொழிந்த ஜேர்மனியின் காயோ கொச் வெஸர் (Caio Koch-Weser) இனை அமெரிக்கா ஏற்கமறுத்துவிட்டபோதிலுமங்கூட, இன்றைய நிலையிலே உல்ப்ஃபெவிட்ஸினைப் பிளவுபட்டிருக்கும் ஐரோப்பா (பழைய_ஐரோப்பா, புது_ஐரோப்பா+பிரித்தானியா) எதிர்க்கும் என்று எண்ண இடமில்லை. மேலும், உலகவங்கியும் அகிலபணநிதியமும் அபிவிருத்தியடைந்தநாடுகள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் மூன்றாமுலகநாடுகளிலும் தமது வல்லமையையும் சுரண்டுதலையும் பங்குபோட்டுக்கொள்ள அமைந்த அமைப்புகள்; இதிலே தாம் தமக்குள்ளே வெளிப்படையாகக் கொம்பு சீவி முட்டிக்கொள்ள, பழைய_ஐரோப்பாவோ, ஐக்கிய அமெரிக்காவோ முயலப்போவதில்லை. இரண்டாம் உலகப்போரின்பின்னாலே, ஐப்பான் எந்தநிலையிலும் அமெரிக்காவினை எதிர்த்ததாகத் தெரியவில்லை; கிட்டத்தட்ட, ஓநாய், புலியின் பின்னால் நிழலாகத் தொடரும் கழுதைப்புலியாக மட்டுமே அது செயற்படுகின்றது.

முணுமுணுக்கக்கூடிய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளென்று குறிப்பிட்டுச் சொல்லப்படக்கூடியவை, சீனா, இந்தியா; அடுத்தநிலையிலே, பிரேஸில். சனத்தொகையளவிலே இம்மூன்று நாடுகளும் முன்னாளிலே உல்ப்ஃபெவிட்ஸ் தூதராக இருந்த இந்தோனேசியா, நைஜீரியா இவையிரண்டும் பெருத்தவை. ஆனால், உள்நாட்டு அரசியலின் உறுதியற்ற, ஊழல்மலிந்த நிலையிலே இந்தப்பின்னிரு நாடுகளும் குரல் எழுப்புமென்று எண்ணமுடியாது. தானும் தாய்வானும் சம்பந்தப்படாத எந்த உலகச்சிக்கலிலும் சீனா என்றைக்குமே பெரிதும் தன் நிலைப்பாட்டினைத் தெளிவாகக் காட்டிக்கொண்டதில்லை. இன்றைய சீனாவைப் பொறுத்தமட்டிலே, அரசியற்கொள்கையும் வர்த்தக நடைமுறையும் ஒன்றையொன்று சாராமல் இயங்கும் விடயங்கள். உலக வர்த்த அமையங்கள் தொடர்பாக, வளர்ந்தநாடுகளுக்கும் சீனாவுக்குமிடையிலே வர்த்தகவரி குறித்த சிக்கல்கள் இன்னமும் முழுதாகத் தீர்த்துக்கொள்ளப்படாதநிலையிலேயே இருக்கின்றன. அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தகம் தொடர்ந்து உச்சத்திலே இருக்கின்றது. சில ஆண்டுகள் முன்னாலே, சீனாவிலே அமெரிக்க விமானம் உத்தரவின்றி இறங்கியபோது, அமெரிக்கா சீனாவின் மனித உரிமைமீறல்கள் குறித்துக் கண்டனம் செய்த நிலை மாறி, சென்ற கிழமை, அமெரிக்கா சீனாவின் மனித உரிமைகள் மீதாக (வட கொரியாவினை அணுகுதல் குறித்தேனும்) அலட்டிக்கொள்ளாத கருத்தினை வெளியிட்டிருக்கின்றது. வழக்கம்போல, தாய்வான் குறித்த சீனாவின் கருத்திலே அமெரிக்கா ஏதும் கருத்தினைத் தெரிவிக்கவேண்டாமென்று சீனா கண்டனம் தெரிவித்திருக்கின்றது. இப்படியாக, அரசியலிலே முட்டிக்கொள்ளும் தன்மையும் வர்த்தகத்திலே தழுவிக்கொள்ளும் தன்மையும் கொண்ட சீனா, அமெரிக்காவின் உல்ப்ஃபெவிட்ஸின் நியமனத்தினை எதிர்க்கப்போகாது.

இந்தியாவிலே பெருமக்கள் கருத்து ஈராக் போர் குறித்துப் பெரும்பாலும் அமெரிக்க புஷ் அரசுக்கு எதிரானதாகவே இருக்கின்றது; அதே நேரத்தில், நரேந்திர மோடியினை அமெரிக்காவுக்குள்ளே வரவிடாததினை இந்தியத்தேசியத்துக்கான களங்கம் என்று சில பகுதியினர் அமெரிக்க-எதிர்ப்பினைக் - அஃது எந்தளவுக்கு உள்நாட்டிலேயே வரவேற்பினைப் பெறும் என்பது கேள்விக்குறி- காட்டுகின்றார்கள்; ஆனால், இவற்றிலே எதுவுமே, அமெரிக்காவிலே அமெரிக்காவுக்கு எதிரான - அதன் இந்தியாவுடனான உறவினைப் பாதிக்கும்- எதிர்ப்பாகக் கணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை; பொதுவிலேயே அமெரிக்காவிலே இந்தியா என்பது, முஸ்லீம் பாக்கிஸ்தானுக்கு எதிரான "இந்து" நாடு என்றதுமாதிரியான ஒரு கருத்துநிலை செப்ரெம்பர் 11 இன் பின்னால் நிலவுகின்றதாகத் தெரிகின்றது. ஆனால், தன் மக்கள் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்குழுமத்திலே நிரந்திர அங்கத்துவம் பெற இந்தியா அமெரிக்கா உட்பட பல (பலமான) நாடுகளின் ஆதரவைப் பெற, சில ஆண்டுகளாகவே முயற்சித்துவருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னான, அமெரிக்காவுடனான, அமெரிக்க-இந்தியப்போர்வீரர்கள் குறித்த பரிமாற்ற ஒப்பந்தமும் இப்படியான ஒன்றே. ஐரோப்பாவுடனான தொழில்நுட்பம்சார்வர்த்தகமும் தொழில்வாய்ப்பும் சென்ற ஓரிரு ஆண்டிலே அதிகரித்து வருகின்றபோதும், அமெரிக்காவுடனான இவ்வழியான வர்த்தகமும் வாய்ப்பும் இந்தியாவிலே பெரிதானது. அதிலேதும், பங்கப்பட இந்தியா அனுமதிக்குமென்று தோன்றவில்லை. அதனால், மக்கள்குழுக்கள் சார்ந்து குறிப்பிடத்தக்கதான எதிர்க்குரல் உல்ப்ஃபெவிட்ஸுக்கு எதிராக இந்தியாவிலே ஆங்காங்கே எழுமென்று கொண்டாலுங்கூட, இந்திய அரசு கண்டனமேதும் எழுப்புமென்று எண்ணவில்லை.

அண்மைக்காலத்திலே, உலகவங்கி, அகில பணநிதியம் இவற்றுடனான கடன் கொடுப்பிலும் அடைப்பிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஓரளவுக்கு முறுகல்நிலைப்பாட்டிலும் கண்டனக்குரலோடும் இருப்பதினை அவதானிக்கலாம். பிரேஸிலும் ஆர்ஜெண்டீனா, வெனிஸூலா போன்ற சில தென்னமெரிக்க நாடுகளிலும் இந்நிலையிலே ஆட்சேபக்குரல்கள் எழும்பலாம்; ஆனால், இவை உல்ப்ஃபெவிட்ஸின் நியமனத்தினை நிறுத்துமளவுக்குப் பலம் பொருந்தியதாக இருக்குமா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஆக, உல்ப்ஃபெவிட்ஸின் உலகவங்கிக்கான தலைவர் பதவியேற்றலைத் தடுக்கமுடியாதென்ற நிலையிலே, தற்போதைய தலைவர் ஜேம்ஸ் உல்ப்ஃபென்ஸன் (James D. Wolfensohn) இன் நிர்வாக முறையிலிருந்து உல்ப்ஃபெவிட்ஸின் நிர்வாக முறை எந்தவிதத்திலே மாறுபடுமென்பதுதான் பரந்து பட்டு ஆயப்படுகின்றது. உல்ப்ஃபெவிட்ஸின் நிர்வாக முறையை ஆய்கின்றவர்கள் இயல்பாகவே அவரின் இராணுவ ஆட்சிக்காலத்துக்குரிய இந்தோனேசியத்தூதர் பதவி, தற்போதைய துணைப்பாதுக்காப்புத்துறைச்செயலாளர் பதவி என்பவற்றிலே அவர் நடந்துகொண்ட, கொள்ளும் போக்கோடு, அவருடைய தனிப்பட்ட புது_வழமைபேண் கருத்துக்களினையும் ஒன்று சேர்த்துப்பார்க்கின்றார்கள். அவர், தனது கருத்தினை உலகக்கருத்தாகத் திணிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் தோன்றியிருக்கும் பெருமளவிலே அச்சம். அவர் தன் அண்மைய பிரெஞ்சுப்பத்திரிகைக்கான செவ்வியிலே, "'(எனக்கு விரும்பாத) ஆட்சியை மாற்றுக' என்ற விதத்திலே உலகவங்கியிலே செயற்படமாட்டேன்" என்று சொல்லியிருந்தாலுங்கூட, அவரின் "காவலன் நான்" என்ற விதத்திலே காட்சியை மாற்றவே முயல்வார் என்றுதான் அவரின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, எண்ணமுடியும். அந்நிலையிலே, பழைய_ஐரோப்பா, தன்னலனை முன்வைத்து, வெல்லமுடியாவிட்டால், சேர்ந்து பங்குபோடு என்ற விதத்திலே நடக்கும்; சீனா, இந்தியா போன்ற பெருநாடுகள் தமது இன்றைய நலன்களுக்குச் சேதமின்றி, இயைந்துபோகும்; ஆனால், இவை தவிர்ந்த சிறிய நாடுகள், குறிப்பாக, கடன்சுமையிலே மிதியுண்டிருக்கும் அதேவேளையிலே உறுதியான அரசுமில்லாத, மிகச்சிறுநாடுகள்தான் தம்மீது சுமத்தப்படும் பொருளாதாரச்சுமை தொட்டு பொம்மை ஆட்சியாளர்கள்வரை - முன்னைவிட, அரசியலும் இராணுவமும் பொருளாதாரமும் வெகுவாகக் கலக்கப்பட்டு- ஏற்றுக்கொள்ளவேண்டி வரும் என்று சொல்லலாம்.

ஓநாய்க்கு ஓநாய் மானை, மரையைக் கௌவும் தந்திரம் மாறலாம்; ஆனால், மானையும் மரையையும் தீனியாக்கியே தீரும். ;-)

'05 மார்ச், 21 13:49 கிநிநே.


Tuesday, March 15, 2005

கணம் - 460

அவரவர் தொழில்கள்

ஆடுவது நான்;
சலங்கையைக் கட்டிக்கொள்வேன்;
காலை விடு.

ஊதுவது நான்;
சங்கைத் தூக்கிக்கொள்வேன்;
கையை எடு.

தோண்டி மருதாணி
தோய்த்துப் பூச ஆசையில்லை;
காயக் கைப் பொறுதி இல்லை.
அரைத்து அள்ளிய சாயம் அனைத்தும்
உனக்கே; விரியக் கை பதுக்கிக்கொள்.

இனி என்ன செய்வதென்று என்னைக் கேளாதே.
திருப்பு உன் முகத்தை; கண்டாயா, கதவும் தெருவும்?
முதுகு குறுக்கிப் போ; மெல்ல முனகாதே உனக்குள்.
வெளிப் பார்ப்பாய்: - விரிந்திருக்கும் விண்;
நட நெடுக்கே; தந்திக்கம்பம் கண்டால் தரி கணம்.
கால் தூக்கிச் சர் என்றடி சலம்; பட்டமரம் ஒன்றுதான்
சுனைப்பட்டுத் திரும்பச் சுர்ரென்று பேசாதென்றறி.

சிறுபிள்ளைத்தமிழ் சொன்னால்,
உன் பருத்த தலைக்குள்ளும் முளை
சுரக்கும் என்றாயா, சொன்னேன்.

புரிந்ததுக்குப் பெருநன்றி.

இனி, உன்னித் திரும்பாதே;
ஓயாமல் நிழல் தொடர நட;
இன்னும் இருக்குமாம் வழி
எண்ணில்லாத் தந்திமரம்.

அடுத்த முறை சக மனுஷனாய் வா;
அமர்ந்திருந்து கதைப்போம் ஆறி.

'05 மார்ச் 15, 18:33 கிநிநே.

புனைவு - 21

கழியும் பழையது
நான் என்பது இன்மை ஆகும்

"எனது பார்வை முற்றிலும் தெளிவாக இல்லாதவரை.....
நான்கு மேதகு உண்மைகளைப் பொறுத்தமட்டில்,
மெய்யான விழிப்பினை நான் உணர்ந்து
கொண்டேன் என்று சொல்லமாட்டேன்." -கௌதமபுத்தர்.


I

பதினாறு அகவைச் சித்தார்த்தனின் ஓரப்பார்வைகள் யசோதராவின் விழித்திசையை விரிகோண வளைப்புகளில் வழிமடக்கி விரட்டின. இரு சிறு பொய்கைகளிற் துருதுருத்துச் சுற்றிச் சுழன்றோடின கரு மச்சங்கள் இரண்டு. சாக்கிய சுத்தோதனன் இதைச் சாக்கிட்டு மேலும் கோப்பை மதுவை ஊற்றி விழுங்கினான். மட்டற்ற மகிழ்ச்சி; வில் வளைத்து மலரம்படிக்கும் மாரனே இறுதியில் வென்றேன் என்று மெல்லச் சிரித்தான் என்று மட்டற்ற மகிழ்ச்சி.அந்தக்கிழட்டுக் குறிசொல்பவனின் எச்சரிக்கை காத்தது. இனி கௌதம சித்தார்த்தன் எட்டுத்திசைகளும் கட்டியடக்கித் தன் காலடிக்குள் வைத்திருக்கப் பட்டம் கட்டவேண்டியதுதான் பாக்கி என்றான் சுத்தோதனன் மனக்கட்டியக்காரன்.

சித்தார்த்தன் கண்களிலோ, அவன் நாற்பதாயிரம் ஆடற்பெண்களினையும் தன் பாதம் படும் திசைக்குத் தூசு தட்ட வைத்திருக்கும் அழகு யசோதரா மட்டுமே. அவனது உலகத்தில், யானைகள் மதம் கொண்டு போரிடவில்லை; வெள்ளி ஆபரணம் அணிந்து அழகு பார்க்கப்பட்டன. யுத்தபேரிகைகள் சப்தித்து, மரண மேளங்கள் முழங்கி அறியப்படவில்லை; யாழ்களின் நாதத்தில் மேல்மாடத்துப்பார்வைகளில் மலைச்சாரல்களில் தண்மதி மட்டும் மோனத்தில் மோகமாய், மோகனமாய்ப் புன்னகித்தான். இறந்த குழவியை எழுப்பித் தரக்கேட்டு எந்த ஏழை ஏழைப்பெண்ணும் இறைஞ்சி நிற்கவில்லை. மேனிக்கும் ஆடைக்கும் பேதம் புரிபட்டாவண்ணம் குழப்பம் தரும் பட்டுப்பாவையர் மட்டும் அவன் குரல் கேட்டமாத்திரத்தில் நர்த்தகித்து நின்றார்கள். குட்டநோயில் எவரும் அங்கங்கள் அழுகித் தொங்க, துண்டாக, தோல் தளர்ந்து கண்முன்னே கிடக்கவில்லை. இளமனம் விம்மிப்புடைக்க, மலர்ந்த, மதர்த்த அங்கத்து மங்கையர் மட்டும் அன்னமாய், மயிலாய், கிளியாய், குயிலாய் அங்குமிங்கும் அசைந்திருந்தார்கள் ...... இப்போது இவையெல்லாமே அர்த்தமேயற்ற சின்னச் சந்தோஷங்கள் என்று ஆவியாய்ப் போம் வண்ணம்... மனமெங்கும் சுற்றி,,, யசோதரா ... சித்தார்த்தன் மனப்பொய்கையில் காதலும் காமமும் கலந்தொரு பொன்மீனாய்ப் பிரகாசித்து, மகிழ்ச்சியிலே மேலெழுந்து மீண்டும் மீண்டும் துள்ளித் துள்ளி விழுந்தது இன்ப எண்ணச்சுழியுள் .. . . . . .


"நானே பாக்கியசாலி; எனக்காய் உலகத்தே எத்துணை இன்பம் படைந்து வைத்தாய், மலரன்பு மாரா. . . . ."

##########

குஞ்சுத்தங்கமீனுக்கு மகிழ்ச்சி; மகிழ்ச்சியென்றால், கண்ணாடித்தொட்டி மேலாயும் கரைபுரண்டோடி, அதை அதற்குள் விட்டவனின் வீடெல்லாம் நிரப்பும் தடுப்பற்ற ஊழிப்பெருவெள்ளம். தனக்கென அழகுத் தொட்டிவீடு தந்தவன் கைகளை முத்தமிடவும் தோன்றியது, சுட்டி மீனுக்கு. அதற்கென ஒரு வீடு; சுத்தமாய் நீர்; சுற்றியோடச் சுழன்றோடும் தாவரங்கள். விளையாட வண்ணங்கள் வடிவங்கள் வேறுபட்டாலும் எண்ணங்கள் வேறுபடா இன்னும் பல மச்சத்தோழர்கள். ஒழிந்து கொள்ள பொம்மைச் சுழியோடி, குட்டிக்கற்கள், கவிழ்ந்த சிப்பி. "எத்தனை கோடி இன்பம் வைத்தனை நீ, என்னை இத்தகு நீர்ப்பிறப்பென்று படைத்தவனே! இத்தகு நீர்ப்பரப்பினை நீந்தக் கொடுத்தவனே!! " காற்றை எடுத்துக் கொண்டு அடிச்சிப்பிக்குள் விட்ட குமிழ்கள், பெரிதாகி மேலே வந்து மீண்டும் காற்றில் உடைந்து போனது காணவில்லை, சின்னத்தங்கமீன். தன் குதூகலத்தின் பிடியில் மேலும் காற்றைக் குடித்து குமிழை விட்டுக் கொண்டிருந்தது.

##########

மயானத்துச் சுவரிற் துள்ளியிருந்தவன், இடிந்த நூற்றாண்டுக்காலச்சமாதி வெடிப்பிருந்தெல்லாம் மகிழ்ச்சி பாளம் பாளமாக வழிந்தோடக் கண்டான். கரித்துண்டொன்றெடுத்து அத்தனை மயானமதில், மரம், சின்னம் எல்லாம், "என்னவள் பெயர் இது; அவளை நான் என் இன்னுயிர் மேலாய் இந்தளவு நேசிக்கிறேன்" என்று விடலைத்திரைப்படநாயகர்கள்போல எழுத ஆவல். கூனோ, குருடோ, செவிடோ, அழகோ, அதுவுமில்லையோ ஒருத்தி தன்னைக் காதலிக்கிறாள் என்ற எண்ணமே எத்துணை மாற்றங்களை உன்னதங்களை ஒருவனுள் ஆக்குகின்றது. தினசரிச்சவரம், உடைகளிற் தேர்ந்தெடுப்பு, பின்காற்சட்டைப்பையுள் சிறு கண்ணாடியும் சீப்பும், சந்திக்கொருமுறை வண்டி நிறுத்தித் தலைவாருகை, 'பார் என் ஒவ்வொரு அசைவிலும் அலட்சியம் நிறைந்த காளைமாட்டுத்தனம்' என்பது போலக் காட்டிக் கொள்வதில் மிக அவதானம். . . . . . .. எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்க்கையில் முன்னேற ஒரு துடிப்பும் ஒழுங்கும் அர்த்தப்படுதலும் அதனால் நெஞ்ச நிறைவடைதலும். இப்போதெல்லாம் மறுபிறப்புக்கள் மனிதனுக்கு உண்டு என்று பட்டது அடிக்கடி நெஞ்சுக்குள், அவள் நினைவு முகிழ்க்கும்போதெல்லாம். சொல்லப்போனால், இந்த வாழ்க்கை எப்போதும் அற்றுப்போகலாம் என்ற வகையிலும் அவளைப் பிரிவது என்பதை ஒத்துக்கொள்ளமுடியாததால், தொடர்ந்தும் பிறப்புக்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதை நம்புவது காதலுக்குச் சிரஞ்சீவித்தனத்தைத் தந்து, தோன்றும் பயம் நிறை பிரிவுத்துயரை நீக்கியது. இன்னும்மேலாக, ஆயிரமாயிரம்வருடங்களுக்கு முற்பட்ட பிறப்பொன்றில், ஏதோ காரணங்களால், தான் விட்டுப் பிரிந்தவளோ, அல்லது தன்னை விட்டு அகன்றவளோ மீண்டும் கைக்கெட்டியிருக்கிறாள் இனியேனும் விட்டுப்பிரியாதே எந்தப்பிறப்புக்கும் ஏது காரணம் கொண்டும் என்பதுபோற் சித்தப்பிரமை.

>>>>>>>>><<<<<<<<<<<<<
"ஒரு கனவைப் போல.
எனக்கு மகிழ்ச்சி தருகின்ற எதுவும்
ஒரு ஞாபகப்படிவாய் உருமாறும்;
கடந்தவை மீள வரா" - சாந்திதேவர்


II

பள்ளியறை வாயிற் கதவினின்று திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான் சித்தார்த்தன். நிலவொளியிற் சப்ரமஞ்சத்தில் மார்புத்துகில் கலையத் தூங்கிக் கிடந்தாள் யசோதரா. பதின்மூன்று வருடத்து இன்பத்துய்ப்பு; மண வாழ்க்கை ஆரம்பத்திற்கு இன்று சற்றே உடற்கட்டுக் குலைந்து போயிருந்தாலும் சித்தார்த்தன் தேவைகட்காய் மட்டுமே இன்னும் தன் இளமையைக் குலையாமற் காக்கப் போராடிக் கிடந்தாள் அந்நங்கை என்று அறியாதான் அல்ல சாக்கிய இளவரசன். அவனுக்கான அவள் சேவையிலும் காதலிலுங்கூடச் சிறுமருவுக்கும் களங்கம் இல்லை. ஆயினும், விரல் அழுகித் தொங்க, வீதி கடக்க முனைந்தும் முடியாக் குட்டரோகிக்காய்த் தேர்ச்சக்கரங்கள் சுற்றமறுத்ததே. . . . . பல்லக்கின் மூடுதிரைக்கூடாக மூப்புக் கைநீட்டி உண்டிக்குப் பொருள் யாசித்ததே . . . . யாக்கை நிலையாதென உயிரற்ற தெருப்பிணம் சொல்லாமற் சொல்லிப் போனதே . . . .

..இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இயற்கையுடன் நீ தாக்குப்பிடிப்பாய் என் இளவழகி யசோதரா? மூப்பு உன்னையும் குருதி வழியவழியப் பற்றித் தின்னும்; என்னையும் அதுபோலவே. . . இறுதியில் முன்னோ பின்னோ மாரன் சக்தி இற்றுப்போய் ஒரு காலம் காலன் கைப் பற்றிப்போவான் உன்னை, என்னை. என் இடத்தே அமர்வான் இராகுலன்; உன் பஞ்சணையிற் துயில்வாள் இன்னொரு இளநங்கை இராகுலனுக்காய்த் தன் எழில் வற்றிப் போகாமல் காலத்துடன் தோற்பேன் என்றறிந்தும் சமர் நிகழ்த்தி. . . . வீதியிற் கண்ட விதிச்சக்கரமோ, மேலும் தன் ஒழுக்கிலேயே மெதுவாய்க் கறங்கும்..

...மீண்டும் திரும்பாமல் ஒரு திருடனைப் போல் கதவை மூடிச் சென்று தேர்ச்சாரதியிடம் கபாடக்கதவு திறந்து காடு நோக்கித் தேரை ஓட்ட ஏவல் படைத்தான். நாட்டெல்லையிற் தேர்ச்சாரதி அங்கி தான் புனைந்து, செயலளவில் சித்தார்த்தன் உலகுக்குச் செத்து அடவிக்குட் துறவியாய் அறியாத ஒன்றைத் தேடி அலையத் தொடங்கினான்.

##########

தங்கமீன் பருத்திருந்தது. ஆயினும், தன்னைத் தவிர வேறொரு மீனும் தனியே நீரைச் சுற்றி தெரியாத எதையோ தேடி ஓடுவது போலவோ அல்லது அறியாத ஏதோ துரத்த ஓடுவது போலவோ அதற்குப் படவில்லை. நட்புக்காய் மிகுதி மச்சங்கள் இப்போதும் தன்னுடன் தாவரம் சுற்றினாலும் கற்களுள்ளே ஒளிந்திருந்து விளையாடினாலும் எல்லாமே ஒரு வெளி ஒப்புக்கு என்று பட்டது. அவற்றின் கவனம் தத்தமது துணைகளிலும் முட்டைகளிலும் குஞ்சுகளின் உணவுக்காய் ஒன்றோடொன்று போரிடுவதற்காகவுமே என்று தென்பட்டது. தங்கமீன்களுக்கு மட்டுமே தனிமை அதிகமாக இருக்குமென்பதாய் ஒரு சுட்டிக்காட்டும் உணர்வு. மிகுதி வெள்ளி, பூச்சுவண்ண மீன்களிலே பொறாமை விரிந்தது. தங்கமீனுக்கு நீருள் வெறுமை பூத்தது; நீர் தனிமைத்துயர் கலந்து கரைந்து நிரம்பற்கரைசலாய் மூச்சைத் திணறப் பண்ணியது.

நேரத்துக்கு உணவும் நீந்த நீரும் மட்டுமே வாழ்க்கையில்லை என்று பட்டது. அடிக்கடி நீர் மேலோரம் எழுந்து வந்து வெளித்துள்ளி வெறுமையகற்ற ஏதும் வழி காணமுயன்றது. உணவு தந்தவன் மீண்டும் நீருள்ளே தூக்கி விட்டான், இன்னும் திணறு... நான் இரசித்திருப்பேன் என்பதுபோல. தாவரத்தினைச் சுற்றிச் சுற்றியே இருத்தல் அலுத்துப்போய், மற்றைய குடும்பங்கள் மகிழ்ச்சியையும் கெடுக்காவண்ணம் தொட்டி அடிப்பகுதிப் பொய்யசைவு பொம்மைச் சுழியோடியோடு தனித்து விளையாடக் கற்றுக்கொண்டது. அதன் உலகம் வெளிச்சுருங்கி, உள் விரிந்தது.

##########

.லையுணவு, கார்ச்சாரத்தியம், கணினிவேலை, மதியவுணவு, கணினிவேலை, கார்ச்சாரத்தியம், நளபாகம், இரவுணவு, தொலைக்காட்சி, தொலைபேசி, தூக்கம், கா. .

. . >>>>>>>>>>>> கடந்த நான்காண்டு சுழல்வே கார்ச்சக்கரம்போல. . . . . நிமிடநேரங்கள் வாழ்ந்திருக்கும் நோய்க்கிருமிகள், நாட்காலம் உயிர்தரிக்கும் நுளம்புகள் - இவை வாழ்க்கைகள் எத்துணை மேற்பட்டவை என்றுபட்டது நெஞ்சுக்கு. வாழ்தலுக்காய்த் தொழிலா, தொழில்புரிதட்காய் வாழ்க்கையா? தொழிலைக் குறை சொல்லி என்ன பயன்? எங்கிருந்தாலும் தின்னத்-தூங்க தேவைப்பட்டததுதானே. ஆனால், முன்னர் மறுத்தவர்கள் அந்நாட்டிலே இந்நாட்டுத்தூதரகத்தினர் என்றால், இன்றைக்குச் பெற்றோர் சொந்தக்கடமைகள் சுற்றிப்போட அவள். கடமைகள் . . .. . எவர்க்குத்தான் இல்லை? இதுதான் உனக்காக என் கடமைகளிற் பிறழ்ந்ததுபோல, நீயும் பிறழக் கற்றிருக்க மறுப்பதென்ன என்று எதிர்ப்பார்க்கும் நீதியற்ற ஏமாற்ற மனப்பாங்கோ??? புரியவில்லை. வலுப்படுத்தி அழைத்தால், வராது போகாள். ஆனால், வந்தும் கடமை பிறழ்ந்ததற்காய் தன்னுள் வருத்துண்டு, அதனால், தன்னவனுள்ளும் குண்டூசி விதை முளைக்கக் கற்பித்துக் கிடந்தால் . . . . ஒரு வீடு . . . நூல்களிற் சொல்லப்பட்ட நரகங்களில் இரண்டு. யாருடையதோ வேடிக்கை மீன்பிடித்தல்களுக்குத் தூண்டிற் புழுவாய்த் தாம் நெளியச் சபிக்கப்பட்ட இரு மானுடர்கள். பொம்மைக்கணினிப்பொய்யைத் துரத்திச் சாரளத்தினைத் திறந்து தெருவுக்கு அடுத்த கரை மயானத்தைப் பார்த்திருக்கத் தொடங்கினான் . . .. இந்நாட்டு மயானங்கள் மிகு நேர்த்தி . . . . உணர்வுகள் குமிழியிட்டுப் பொங்கிவர சமாதிகளில் வெடிப்புகள் சிதறல்கள் இருப்பதில்லை. . .. இறுகிப் பாறைக் கற்களாகவே அற்றவர் உலகம் . . . சாகாத சவங்கள் சிலதின் மனங்கள் போல...

>>>>>>>><<<<<<<<<<
"பிறவாத வெறுமையானது, இருப்பினதும்
இருப்பின்மையினதும் அதீதங்களைக் கடந்ததாகும்.
ஆதலினால், அது, தானே மையமாகவும்
மையப்பாதையாகவும் இருக்கின்றது. வெறுமையானது,
நடுநிலைமனிதன், நகரும் தடமாகும்" - ஷொங்கப்பா


III

"நகர எல்லைப்புறத்தே வந்திருக்கிறான் சித்தார்த்தன்" - தொனி அகட்டிச் சொன்னவன் அவனைப் பெற்றவன், சுத்தோதனன்; "அல்ல, இளவரசி; இவர் வேறொருவர், புத்தநிலை பெற்ற மகான் என்று முகத்தில் ஒட்டிக்கிடக்கிறது", சொன்னாள், குரல் தணித்தொரு சேடிப்பெண். யசோதராவின் குழப்பமனம், "எவராயினும் என்ன? என் இளவரசராகவும் இருக்கக்கூடும்; இல்லாவிட்டாலும் மகானையாவது கண்டு வருவேன்" என்று இராகுலனையும் நகர் எல்லைக்கு இழுத்துக் கொண்டோட வைத்திருந்தது.


a.
தன் முன்னே தலை தாழ்த்தி நிற்கின்ற பெண்ணை நோக்கி யாக்கை நிலையாமை பாற்றி எடுத்துச் சொன்னான் புத்தன். மீதிப்பேர்கள் காலத்தின் கோரப்பல் கடிபட்டு கடவாயிற் குருதி வடிந்தோடும் இந்த விசித்திரத்தைக் கண்டிருந்தனர்.

முடிவில் யசோதரா, "பிட்சாபாத்திரம் ஏந்திப் பிக்குணியாய்ப் போக விழைவு, ஐயனே" என்றாள். இராகுலனும், "தந்தை வழி, தாய்வழி என்பதுவே எந்தன் வழியும்" என்று சொன்னான். புத்தன் அதற்குச் சொல்வான், "தந்தை வழி தாய்வழி அல்ல; இது எவரிலும் சார்ந்தெழாத உனக்கான உந்தன் சொந்தத் தனி வழி."

O~O~O~O~O

b.
யசோதராவின் கண்களிற் போதிசத்துவன் தெரியவில்லை, வெளிக்கு இளைத்திருந்து சீவர ஆடையில் பிட்சாபாத்திரம் ஏந்தி அவள் சித்தார்த்தனே கண்ணிற்பட்டான். "சித்தார்த்த, என் இளவரச, என்ன குறை என்னிற் கண்டு இந்நிலைக்கு சென்றிருப்பாய்? என்னிடம் சொல்லாமலே நடுவிரவில் விலகிப் போக . . . உன்னை நம்பித் தொடர்ந்து வந்து உனக்கென மட்டும் வாழ்ந்தவளை, வாழ்பவளை, நிர்க்கதியாய் இடைவிட்டு உந்தன் உய்வைத் தேடித் தனியே கானகம் போய் நீ கண்டு கொண்டதுதான் உண்மையென்று ஊர் சொன்னாலும், அது எந்தவகையில் நேர்மைத்தனம் நிறைந்த சொல்; நீயே சொல் . . " - அவள் வெளிப்படையாயக் கேட்டுத் தன் சித்தார்த்தனை அவமதிக்க விரும்பவில்லை. சீதையுடன் இராமன் வாழ்ந்த காலம் இலக்குமணனுடன் ஊர்மிளை வாழ்ந்த காலத்திலும் மேல். ஆனால், உறங்காவிலிக்காய்த் தான் உறங்கிக் கிடந்த பெருமையெல்லாம்கூட அவனுக்கே போகவிட்டிருப்பதில் பெருமை கண்டாள். யசோதரா தன் சித்தார்த்தனை, மற்றோர்முன், அவன் புத்திரன் முன் தன் வருடகாலத்து வினாக்களினால், களங்கப்படுத்த விரும்பாள்; அவன் புத்தனானதில் பெரும் பூரிப்படைந்தாள். "சித்தார்த்த, காமத்தீயடங்கிப் காலம் பல; ஆயினும், உன் மேலெனக்குக் காதற்தீ அணையாது." - தங்கமீன், அவள் நெஞ்சுப்பொய்கைக்குட் இறுதி முறையாய் எகிறித் துள்ளியது- "தினம் உன்னைக் காணும் திருப்திக்காய் என்னையும் இணைத்துக் கொள்வேன் உன் சங்கத்தில்" - இதையும் வெளிச் சொல்லாள், சமநிலை பிறழ்ந்த உலகுக்காய்த் தண்டிக்கப்பட்ட பாவை. சித்தார்த்தன் உணர்ந்திருக்கக்கூடும். பிற்காலத்தில், குத்தனின் வீட்டு நஞ்சேறு காளான் உண்டு மரித்தபோதாவதெனிலும், அவனுக்குப் பட்டிருக்கக்கூடும், யசோதரா தன்னை விடத் தெளிவு பெற்ற போதிசத்துவ அவதாரம் என்பது ஏட்டில் எவராலும் எழுத விழையப்படா வரலாறு என்பதை. வெளிப்பார்வைக்கு மாலையில் முத்துக்கள் முன்னதுபோலவே கோர்க்கப்பட்டு இருந்தன; ஆனால், உள்ளே சேர்த்திருந்த இழை மட்டும் வேறார், புதிதாய்... . . .


##########

இத்துணை காலம் தனியே கிடந்ததேயென்று தொட்டிக்குள் தங்கமீனுக்குத் துணையாக ஒரு பெண் பொன்மீன் தேடிக் கொணர்ந்துவிட்டனன் அதன் வளர்ப்பாளன்.

a.
துள்ளிக் குதித்தோடிய பெண்மீனைக் கண்ட மாத்திரத்தே, உள்விரிந்த உலகம் சுருங்கி வெளியே குளிர்நீருள்ளும் நெருப்பேறியது தங்கமீனுக்கு. அதற்கெனவும் ஓர் தனி உலகம் விரிந்தது. நாளை அவ்வுலகில் நண்ப மச்சங்களுக்காய்ப் போக்கமுடியாது பொழுதுகள் பொறுப்புக்கள் நிறைந்து வழியலாம்; ஆயினும் என்ன?? சுமைகளும் இரண்டு வகைப்படலாம் . . .. இன்பச்சுமை, துன்பச்சுமை. வட்டத்துள் கறுப்புவளைபாதியுள் வெளுப்புச் சிறுவட்டம், வெளுப்புவளைபாதியுள் கறுப்புச் சிறுவட்டம் என்று யிங்-யாங் கற்காமலே புரிந்து கொண்டது மீன். கற்றும் செயற்படுத்தாததிலும் கற்காமலே செயற்பட்டிருத்தல் சிறப்பு.

O~O~O~O~O

b.
துள்ளிக்குதித்தோடிய பெண்மீன், தன்னைக் கண்டமாத்திரத்தே கீழிருந்த தங்கமீன் மேலோடி வராத காரணத்தைத் தான் சுழியோடிக் கீழ்ச்சென்று கண்டு கொண்டது. தங்கமீன் மல்லாக்காய் மிதக்க அதிககாலம் இல்லை என்பது போல பக்கவாட்டிற் சரிந்து அசைந்திருந்தது.

தனியாகவே இருந்திருக்கலாம்; நம்பி வந்த துணையும் இறந்திருக்கக்காணல் மிகக் கொடுந்துயர். இனி, பெண்மீன் தனியே பொம்மைச் சுழியோடியைத் தான் சுற்றி வரலாம். ஆனால், அதற்குக் கூடவே சுமையாய், தன்னைக் காலம் தாழ்த்தி இங்கு அனுப்பிய கொடுமைக்கு எவரில் ஆத்திரம் கொள்வது என்று புரியாத ஓர் இலக்கற்ற குருட்டுவேதனை அதன் இறப்பு வரைக்கும் வாலுடனேயே மாயக் குஞ்சம் கட்டித் தொடர்ந்திருக்கக்கூடும்.

அதன் வளர்ப்பாளனின் விருந்தாளி வெளிப்பார்வையாளனுக்கு, தங்கமீன் நீர்த்தொட்டிக்குள் அன்றைக்குப் போல இன்றைக்கும் மாறுதலின்றி நீந்திக் கொண்டுதான் இருந்தது. வளர்ப்போனுக்குத் தெரியும், முன்னைக்கு நிலை இன்றைக்கு வேறென்று; ஆனால், பொம்மைக்குத் தனியே காவல் நிற்கச் சபிக்கப்பட்ட மீனுக்கு மட்டும் புரியக்கூடும், அதன் துயர்களும் கோபங்களும், அதற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் போலவே, அதிகமென்றாலும் அவைபோற் திட்டமிடப்பட்டவை அல்லவென்று.


##########

சுங்கப்பரிசோதனை முடிந்து பைகளை வண்டியிற் தள்ளிக் கொண்டு வந்தவளைக் கண்ட மாத்திரத்தில்,

a.
மனது எட்டு வருடங்களுக்கு முன்னே மயானச்சுவரிற் குதித்ததுபோலவே துள்ளியது. இடைவந்த காலத்துயர்களும் கோபங்களும் வேதனைகளும் கணப்பொழுதில் அற்றுக் கலைந்தன விமானநிலைய மேகக்கூட்டங்களுடன். வற்புறுத்திப் பற்றித்தெடுத்த பைகளைத் தான் சுமந்து, ஊர்தியில் வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கைக்கு மறுபக்கத்துக் கதவைத் திறந்து இருக்கசொன்னான்.

வண்டி நகர ஒன்னொரு உலகம் முளைத்தெழுந்தது. காதல் என்பது வயதில் இல்லை; வயப்படுகிறவர்களில் என்று ஒற்றைப்பொறி இரட்டை மூளைகளில் ஒற்றைக்கணத்திற்குப் பட்டுத் தெறித்தது, முகங்களின் புன்னகைபோல.

தொய்ந்த இழை முறுக்கேறிப் பலம் பெற்றது.

O~O~O~O~O

b.
இரசாயனமாற்றம் எட்டு வருடங்களுக்கு முன்னைப்போலவே ஏற்படவேண்டும், ஏற்படும் என்று அவனும் எண்ணியிருக்கவில்லை; அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும், அவளைப் பார்க்க இவனுக்கும் இவனைப் பார்க்க அவளுக்கும் பரிதாபமாக இருந்தது. சில பைகளைக் கைகளில் வாங்கிக் கொண்டான். ஊர்தியில் அவற்றை வைத்துவிட்டு, பின்புறக்கதவைத் திறந்து அமரச் சொல்லி வாகனத்தை அவன் ஓட்ட, பௌதீக அளவில் நெருங்கிய நிலையிலும், இரண்டு உலகங்கள் இடைவெட்டாமலே தனித்து நகர்ந்தன.

காதல் மாறவில்லை; ஆனால், இனி வெளியே உணர்வு பீறிடமுடியா சமாதிக்கல்லாய் உருமாறிப் போயிருந்தது காலச்சாட்டையின் சொடுக்குதலால் விறைத்துப்போய். இருவரும் ஒட்ட எதிர்பார்த்தும்கூட, தொய்ந்த இழை, கடைசித் தொட்டிருத்தலும் ஏனோ அற, முற்றிலுமாய் உயிரற்றுத் தொங்கியது.


>>>>>>>><<<<<<<<<<
"எந்த நிபந்தனைகளும் நிரந்திரமானவையல்ல;
எந்த நிபந்தனைகளும் நம்பகரமானவையல்ல;
தான் என்பது இன்மை ஆகும்" - கௌதமபுத்தர்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

'99, பெப்ரவரி 4, வியாழன் 17:48 மநிநே.

குவியம் - 3

ஆர். எஸ். கே.


ஆர்.எஸ்.கே., நடு இரவிலே வைத்தியசாலையிலே தனிமையிலே இறந்தார். அருகிலே துணைக்கிருந்த கடைசிமகன், அவர் நோயின் தவிப்புக் குறித்துச் சொல்ல நாட்டின் அகாலவேளையிலும் வீட்டுக்கு ஓடியிருந்தான். வைத்தியசாலைப்படிகளிலே தவறி விழுந்து இறந்தாரா அல்லது அதீத குடியின் விளைவான ஈரலழற்சியினாலே இறந்தாரா என்பது இற்றைநாள்வரை அறுதியிட்டுத் தெரியவில்லை. செத்தவீட்டிலே வந்திருந்த எல்லோரும் அழுதார்களாம்; அதேநேரத்திலே, ஒரு வித நிம்மதியும் படர்ந்திருந்ததென்றார்கள். இத்தனை நாள் குடி கொடுத்திருந்த உள அழுத்தம் அப்படியானது. சுற்றுப்புறத்திலே, இனி எந்த மரியாதைக்கேடுமிராது என்றதிலே எழுந்த உணர்வு அதாக இருக்கக்கூடும். பிரேதத்துக்கு, இரண்டாவது மகன் ஊருக்கு வந்து கொள்ளி வைத்தான். வெளிநாட்டிலேயிருந்த மூத்த மகனுக்கு, இவர் இறந்து எரித்த அடுத்த நாளே தெரியவந்தது; அதுவும் நண்பர்கள் புண்ணியத்தில். பிரேதத்தை அருகிலே இருந்து பார்க்காததால், உள்ளுக்குள்ளே இறுகிய உணர்வு மட்டுமேயிருந்தது; அழுகை வரவில்லை. அடுத்தநாள் வீட்டுக்குத் தொலைபேசியபோதுதான், அழுகை தானாக வழிந்திருக்கவேண்டும்.

ஆர். எஸ். கே., பிறந்து சில நாட்களிலேயே தாயை இழந்தவர் என்று கேள்வி. தந்தை ஒரு குக்கிராமத்து விதானை. விதானைக்கு, அடுத்த கல்யாணங்களும் இன்னும் பல குழந்தைகளும். பொடியனின் அறிவினைக் கண்ட ஒரு பாதிரியார் மாகாணத்தலைநகருக்குக் கொண்டு போய் பெயர்பெற்ற தனியார் ஆங்கிலமொழிக்கல்லூரியிலே சேர்த்தார். கல்லூரிப்படிப்பு முடிந்தபின்னால், மைசூர் பல்கலைக்கழகத்திலே விஞ்ஞான இளநிலைப்பட்டப்படிப்புக்கு அனுப்பி வைத்தார். ஆர். எஸ். கே., அங்கே நாடு நன்றாகச் சுற்றினார்; தன்னுடைய சின்னப்படப்பெட்டியிலே கறுப்பு வெள்ளையிலே ஹம்பி, அஜந்தா, எல்லோரா, மஹாபலிபுரம், கஜுஹோரா எல்லாம் சுட்டுத்தள்ளினார்; பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தலைவராக இருக்கையிலே டெல்கி போய் பண்டித நேருவுடன் ஒரு படமும் எடுத்துக்கொண்டார்; ஆனால், ஆத்துமா வருத்தத்தொடங்கியது; சாராயம் மூச்சிரைப்பைச் சுகமாக்குமென்று நண்பர்கள் கூறியதாலே, பழக்கமேற்பட்டது.

ஏற்பட்ட பழக்கம், மீண்டும் தன் நாடு திரும்பி, கற்ற கல்லூரியிலேயே ஆசிரியர் ஆகி, கல்யாணம் நிகழ்ந்து, குழந்தைகள் பெற்ற பின்னும் தொடர்ந்தது; சொல்லப்போனால், அதிகரித்தது. மனைவி அவரின் இந்தப்பழக்கத்தைத் திருத்த தன்னால் ஆகுமட்டும் முப்பதாண்டுகள் விடாமல் முயற்சித்தார் என்று சொல்லலாம். குடும்பத்தைக் கொண்டோடும் பொருளாதாரத்தினைப் பொறுத்தமட்டிலே மனைவியின் பரம்பரைச்சொத்து, மனைவியின் வரும்படியினாலே ஏதும் தாழ்விருக்கவில்லை. ஆனால், குடி என்பது, ஒரு மத்தியதட்டுக்குடும்பத்திலே பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல; சமூக அந்தஸ்து குறித்ததுமாகும். பொதுச்சொத்திலே திருடுகின்றவனுக்கு இருக்கின்ற மரியாதைகூட, தானும் தன் குடியுமென்று இருக்கின்ற ஒருவனுக்கு வாய்ப்பதில்லை. குழந்தைகளுக்கும் மனைவிக்கும் ஆர். எஸ். கே. என்பவர் ஒருவரல்லர்; இருவர்; குடிக்கின்ற நேரத்திலே, அடிக்கிற ஆளில்லாதபோதும், குடி என்பது அவரோடு ஒட்டிக்கொண்டதைச் சுட்டிக்காட்டும் சமூகம் காரணமாக வெறுப்புக்குரியவர்; குடியாத வேளையிலே, தானும் புத்தகங்களும் தோட்டமும் வளர்ப்புப்பிராணிகளும் வானொலியுமென்று ஒரு தன்னுடைய உலகுக்குள்ளே அடங்கிப்போன சாதுவான மனிதர். குழந்தைகள் - குறிப்பாக மூத்தமகன், அவரிடமிருந்து வாசிப்பையும் வானொலியையும் கற்றுக்கொண்டார்கள்; குடியைத் தொட்டும் பார்ப்பதில்லை என்று உறுதிப்பட்டுக்கொண்டார்கள். மீதிப்படி அவரோடான குழந்தைகளின் உலகம் ஒட்டியும் ஒட்டாமலும் நகர்ந்த ஒன்று.

நான்கு குழந்தைகளும் வளர்ந்து, தம்மைத் தம் காலிலே நிறுத்திய பின்னும் அவராலே குடியை நிறுத்த முடியவில்லை. அவரின் இளங்காலத்தோழர்களிலே அவரின் வாசிப்பு, அறிதலிலே எட்டியும் நிற்கமுடியாதவர்களெல்லாம் வாழ்க்கையிலேயும் தொழிலேயும் ஓஹோ என்று எங்கோ போய்விட்டார்களே என்று மனைவிக்குக் கவலை நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மற்றவர்களை எவருமே குற்றம் சொல்லமுடியாது; அவரின் குடியையும் தன் வாசித்தலையும் அறிதலையும் கோவையாக எடுத்துச் சொல்லும் திறனில்லாத, கருத்து ஒருங்குதற்படமுடியாத தன்மையைத்தான் குறை சொல்லமுடிந்தது.

ஆர். எஸ். கே. பற்றி எண்ணும்போதெல்லாம், அவரது மூத்த மகனுக்குத் தோன்றுவதெல்லாம், அவனுடைய ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்லும் சொற்றொடரே; "தன்னை ஒரு பெறுதிக்குரியவனாக எவன் ஒருவன் கருதிச் செயற்படாதவனோ, அவன் பிறரையும் அவனைப் பெறுதிக்குரியவனாக எண்ண எதிர்பார்க்கும் உரித்துடையவன் அல்லன்." இப்போது, அவரிடமிருந்து வாசிப்புவிடாயினை அவன் தான் அறியக் கற்றிருந்திருக்கலாம்; ஆனால், அறியாமலே, அவரின் சிந்தை ஒருங்கிச் செயற்படவியலா அவத்தன்மையையும்கூடக் கடத்தப்பெற்றிருக்கின்றானோ என்ற அச்சமுங்கூடவே எழுகிறது.

ஆர். எஸ். கே, எப்போதும்விட இப்போது எனக்கு மிகவும் அருகானவர் என்று தோன்றுகிறார். அவர் இருக்கும்போதே இந்தப்புரிதல் ஏற்பட்டிருந்தால், உள்ளூறச் சில குற்றவுணவுகளிலே அழுந்தக் கிடந்த அவர் மகிழ்ந்திருக்கக்கூடும்.

2005 மார்ச்., 15 05:05 கிநிநே.

Thursday, March 10, 2005

கரைவு - 3

ஜே. ஜே. சில குறிப்புகள்


‘ஜேஜே சில குறிப்புகள்’ குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், எழுதியதை இங்கே இட்டிருக்கின்றேன். இடைப்பட்ட காலத்திலும்,
புத்தக வாசத்திலே இப்போது வாசித்ததன் பின்னாலும், புதிய பரிமாணங்களும் பார்வையும் கிடைத்திருக்கின்றனவாதலால், கீழ்காணும் குறிப்பில் இருப்பதிலிருந்து இன்றைக்கு என் கருத்திலே கொஞ்சம் மாறுதல் உண்டு. ஆனாலும், இயன்றவரை, முதல் வாசனையிலே புரிந்ததை இடுதல் நல்லதெனப்பட்டதால், இட்டிருக்கிறேன். (முன்னைக் கொடுந்தமிழ் நடையைப் பொறுத்தருள்க அல்லது பொருட்படுத்தாது விடுக :-))



2001 மே, 11




வெளிவந்து ஏழு வருடங்களின் பின்னர் கேள்வியுற்று, கைக்கிட்டாது, இருபது வருடங்களின் பின்னர் தற்செயலாகக் கிடைக்க வாசித்த குறிப்புக்கள். இந்தக்காலதாமதத்தினால் குறிப்புகளை எழுத்தாளரின் எழுத்தூடான நேரடிச்சாட்சியாக உணரமுன்னர் திறனாய்வு, விமர்சகத்தரகர்களின் பார்வைப்பூச்சுக்கூடாய்ப் பார்க்கவேண்டி ஏற்பட்ட (அவ)நிர்ப்பந்தம் (இன்னும் வாசிக்காது விலத்திக்கொண்ட சில குறிப்புகளின் பின்னான ஃபிரான்ஸ்வா க்ரோவின் உரை தவிர) அவ்வப்போது ஏற்பட்டதனைத் தவிர்க்கமுடியவில்லை. அதே நேரத்திலே இதே காலவிடைவெளி இந்நூல் மேலான விமர்சனங்களுக்குக் கதாசிரியரின் தன் விளக்கங்களையும் வாசிக்க வழிவகை செய்தது. இத்தனைக்குப்பின்னரும் ஆசிரியர் 99ம் ஆண்டு குமுதம் இதழிலே “‘ஜே:ஜே: சில குறிப்புகள் ’ மீதான முழுமையான விமர்சனம் இதுவரை வரவில்லை” என்பதாகக் குறிப்பிடுகின்றார். எந்தவொரு ஆசிரியரினதும் கருத்துக்களும் குறியீடுகளும் அதன்மீதான எதிர்பார்ப்புகளும் முழுக்க முழுக்க சக எழுத்தாளர்களாலும் விமர்சகர்களாலும் வாசகர்களாலும் அவர் அமைத்த வியூகத்தின் மர்மஸ்தானங்களைப் பிளந்துமட்டுமே புரிந்து உள்வாங்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. அப்படி நிகழாத அதேநேரத்திலே தனது முடிச்சுகள் தான் எதிர்பார்த்த கோணத்திலோ வேறேதோ மாற்றுச்செயலாலோ முற்றாக அவிழ்க்கப்படும்வரை ஆசிரியன் தன் படைப்பு முழுக்க வெற்றியடைந்ததாகக் கருதிக்கொள்கின்றதில்லை. இங்கே அப்படி நிரப்பப்படாத வெளியின் ஓரிரு துவாரத்தை - கதைக்குறிப்பானவனையோ குறிப்பிட்டவரையோ சாராத வாசகர் களமும் பேசப்படு காலமும் அமைந்துபோய், ‘குழுக்கருந்துவாரங்கள்’ உள்ளிழுத்துக்கொள்ளாத விமர்சனத்தினைச் சாக்கிட்டு, மறுவாசிப்பு~உடற்பகுப்பாய்வு செய்துகொள்ளாத ஒரு வாசகனுக்குச் சொல்ல என்ன மிஞ்சியிருக்கக்கூடுமா என்ற தயக்கத்தோடு- எழுந்தவாக்கிலே நிரப்ப எண்ணுகிறேன். அதனால் சொல்லப்பட்டவை மீண்டு இந்தச்சிறுகுறிப்புகளுள்ளே சொல்லப்பட்டால் குறை தவிர்க்கவேண்டுமென விழைவு.

புதினத்துக்கு இலக்கணம் வலிந்து அதன்படி ‘தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல்’ வகுத்து தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்த பத்து பொறுக்கும் பெரும்பாலான ‘சாதாரண வாசகர்’வரைக்கும் பலரும் தமது முன் பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால் தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன் ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும்விட வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலுங்கூட எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.

இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால் கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் - இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின் மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் ‘விரிவும் ஆழமும் தேடி’யிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- “யாரோ இவர் யாரோ? இவரோ? அவரோ?” என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலுங்கூட கதை விரியுமிடத்திலே ‘அந்தத்’ தனியாளை ‘இந்தப்’ பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால் தானானது உள்ளே மாறாமற் போகின்றது.

குழந்தைக்கு வித்திட்டுப் பெற்றுக்கொள்ளும் செயல் தவிர்ந்த வேறெதிலுமே கற்பனையும் உண்மையும் கலக்காத படைப்பு இருக்கமுடியாது; இதற்கு ஒரு தோட்டக்காரனோ ஒரு கதைசொல்லியோ வேறெந்த வகைப்படைப்பாளியோ விதிவிலக்காகிவிடமுடியாது. ஜேஜேயும் பாலுவும் இரண்டான பேர்வழிகள் என்று கொள்கின்றது என்பதிலும் இடையினிலே ஊடாடி தன்கரைகளிலே வேறான ஒன்றின் இரண்டு பகுதிகளாகப்படுகின்றன..... (முற்றாகி நிறைவேறாத) இலட்சியமும் அதன்மீதான ஈர்ப்புச் சுவறாதபோதும் அதனுள் முழுதாக மூழ்கிச்செத்துப்போகாமல் தன் வாழ்தலை நிச்சயப்படுத்துக்கொள்ளும் நடைமுறையும். ஜேஜேயின் இறப்பு என்பது ‘பாலு’வின் ‘புதிய பார்வையும் பாதையும்’ பிறப்பதற்கான அசைபோடும் அஞ்ஞாதவாசத்தின் பிறப்பான குறியீடாகக் கண்டுகொள்ளத்தான் இங்கே இந்த வாசகனுக்கு முடிந்திருக்கின்றது. தேடலுடனான பிடிவாதத்தையும் அதன்பின்னான சோர்வு தந்த இடைவெளியிலே முன்னைய இருப்பு எதற்காக எண்ணியதற்கு மாற்றான முனைகளிலே வந்து நின்றதென்கின்றதை ஆய்தலையும் நீரும் நெய்யுமாகப் பிரித்தடுக்கும் முயற்சியே ஜேஜேயின் குறிப்புகளும் பாலுவின் கருத்துக்களும் என்ற எண்ணம் வாசித்துமுடிக்கும்போது தோன்றுகின்றது. மனித இருப்பின் தேவையினை இலக்கியத்தின் அவசியத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கேள்விகள் எழுதல் தவிர்க்கமுடியாதாயினும் தான் சூழ்ந்த உலகம் (குறிப்பாகப் படைப்புலகம்) சம்பந்தமாக ஜேஜேயின் வினாக்கள் ஜேஜேயின் காலத்துக்கு முன்னாலும் சமகாலத்திலும் வருங்காலத்திலும் இருந்தன; இருக்கின்றன; இருக்கும் என்கின்றதை அறியாதானாக இத்தனை வாசிப்புக்கும் அனுபவங்களுக்கும் தன்னை உட்படுத்திக்கொண்ட ஜேஜே இருந்திருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. அவ்வப்பொழுதுக்குத் தகுந்த தீர்வுகளைக் கிஞ்சித்தேனும் ஏற்றுக் கொள்ளாமல் அந்தவினாக்களை அவிழ்த்தல் மட்டுமே தன் வாழ்வுக்கான விதி என்று அவன் வாழ்ந்திருக்கின்றான் என்று (ஜேஜே பற்றி எனக்குப் பிடிபடுகின்றது சரி என்று கொண்டால்) சொல்லப்பட்ட அவனது அகண்ட வாசிப்பினதும் ஆழத்தேடலுக்கும் பலன் என்னவென்கிற கேள்விவும் அவநம்பிக்கையுமே வாசகன் மீது கவிகின்றதாகப் படுகின்றது. பாலுவினை உன்னதத்தினை நோக்கி வியப்போடு பார்க்கும் அதே நேரத்திலே நடைமுறையிலும் தன் இருப்பினைக் காத்துக்கொள்ளும் ஆளாக்கிவிடும் ஆசிரியர் ஜேஜேயினை அதீத இலட்சியத்துக்கு ஆக்கிவிடுகின்றார். மேன்மைக்குணங்களின் வரையறுப்புகள், நோக்குகள் முற்றிலும் வேறாயினும் இலட்சியத்தன்மை என்பதைப் பார்க்கும்போது ஜேஜேயும் இலக்கு என்றது நாம் முட்டிப்பார்க்க இழுத்துக்கொள்ளும் கற்பனை உச்சத்துக்கோடு என்கிறதை மறுத்து நா. பார்த்தசாரதியின் கதாநாயகர்களின் பண்புகளோடு போட்டிக்கு உரசிப்பார்க்கும் ஒரு மனிதனாகவே தெரிகின்றான். ஜேஜேயின் அகம்பாவமும் அச்சமும் தோல்வியும்கூட “பிச்சை பெற்றாலும் கொடுப்பவன் பிடிக்க நான் எடுத்துக்கொள்கின்றேன்” என்ற வகையான நாயகனின் இலட்சியத்தினை அலங்கரிக்கும் பண்புகளாகின்றதோ என்று படுகின்றது.

இஃது ஒரு மையம் சார்ந்தொழுகாத படைப்பா இல்லையா என்கின்றதும் ஜே.ஜே.யின் (தெரிவிக்கப்பட்டதும் வாசகனாகப் புரிந்துகொண்டமைந்ததுமான) கருத்துத்தளம் மீதான விவாதங்களும் படைப்பினை வருங்காலத்துக்காக வகைபிரிக்கும் நோக்கிலும் அவரவர் தத்துவநோக்கு நிலையிலே நின்று வாதாடப்படவேண்டியதாகவும் பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலே வாசகனுக்கு கதை நகர்கின்றபோதிலே காலித்து கழன்றுகொள்ளாத சுவராசியமும் கதை எழுப்பும் உணர்வும் திறனாய்வாளரின் திமிறத்திமிற அழுத்தியூட்டலில்லாத தன்னறிதலும் திருப்தியும் முக்கியமாகின்றன. அந்தளவிலே - தம்மளவிலே சிறப்புற்றாலும் காலமும் சூழலும் பிறழ்ந்த சில நகைச்சுவையிழைகளையும் சில நீண்ட குறிப்புகளையும் தவிர்த்து - ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ பேச வந்த பொருளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி. மையம் சார்ந்தொழுகாத படைப்பா என்கின்ற கேள்வியின் தேவை எனக்குத் தேவையில்லாதபோதும் நாட்குறிப்பு என்பதுதான் மையம் என்று பருமப்பொருள் சார்ந்து ஏற்றுக்கொள்ளலாமோ என்று எண்ணுகின்றேன். இன்னொரு வாசகருக்கு அவரின் அனுபவத்தினைப் பொறுத்து அவர் கதையிலே வேறொரு குறியீடு மையமாகலாம்.

கலை இலக்கியம் சார்ந்து எழும் இதுவகையான கேள்விகளுக்கு ஜேஜேயோ வேறெவரோ பதிலேதும் கண்டு புதர் விலக்கிப் புதிர் அவிழ்க்கமுடியாது; எனக்கென்றால் ஏனோ ஜேஜேயின் வினாக்கள் மட்டுமல்ல தமிழ்ப்படைப்புலகமும் அப்படியேதான் பொம்மைகளும் பொம்மலாட்டக்காரர்களும் மாறினாலும் கூத்தேதோ மாறாமல் உலவும் என்று தோன்கின்றது. சில கேள்விகள் தொடர்ந்துகொண்டேதாம் இருக்கும். சூழலுக்கும் காலத்துக்குமேற்ப மனிதன் தனது வாழ்காலத்தைக் கருத்திலே வைத்துக்கொண்டு காய்களைச் சிறிதாக தனக்குப் பட்ட முன் திசையிலே நகர்த்திக்கொண்டு போகவேண்டும். ஆனால் கேள்விகளையும் குழப்பங்களையும் திணிவேற்றாமல் சுவராசியமாக வாசகர்கள்முன்னே பின்னிப்போட்டு உள்வாங்க வைத்ததன் காரணமாக ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ தமிழ்ப்படைப்புகளிலே ஒரு சிறப்பிடத்திலே இனி வருகின்றவற்றுக்கு ஓர் ஒப்புநோக்கியாக்கமாக இருக்கும் என்பது மறுக்கப்படமுடியாததாகும்.


ஜே. ஜே. சில குறிப்புகள்.
வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்.


படங்கள்: நன்றி => சென்னை ஒன்லைன்


சிதறல் - 95


Robot Exhibit


Robot Exhibition
'05 March 09


Wednesday, March 09, 2005

புலம் - 9

நதியும் வழியும்

இப்போதெல்லாம், வலைப்பதிவிலே எந்தவொரு விடயத்தைப் பற்றி எழுதும்போதும், சரியான பதத்திலே சமையலை இறக்கவேண்டுமேயென்ற அவதானத்துடன் எழுதவேண்டியிருக்கின்றது. கொஞ்சம் கூர்மைப்படுத்தினால், தனிப்பட்ட தாக்குதலென்று தீய்ந்துபோய்விடுகின்றது; கொஞ்சம் மழுங்கச்சொன்னால், கிசுகிசுவென்று அவியாக்கறியாகின்றது. மழித்தலும் நீட்டலுமில்லாமல் புத்தர் சொன்ன மத்தியபாதையிலே நடை போடுவதென்பது மிகவும் கடினமாகின்றது. இந்தப்பதிவு, இந்தப்பாதை குறித்ததல்ல; ஆனாலும், எழுகிற ஆள், விடயம், நடை குறித்து தவறுதலான புரிதல் மிகவும் இலகுவாகிப் போய்விடுமென்பதாலே, இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே இந்த வசப்படா நடுநடையைப் பற்றிச் சொல்லிவிடுவது கொஞ்சம் காலிலே தண்ணீரை ஊற்றிக்கொண்டே தீமிதிக்க இறங்கும் பாதுகாப்பு உணர்வைத் தருகின்றது. அவ்வளவே.

பெண்கள்_நாள் குறித்து எத்தனை பதிவுகள் குறிக்கப்பட்டிருக்கின்றன என்று நான் கணக்கெடுக்கவில்லை. ஆனால், ஆண்கள், பெண்கள் இரு சாராராலும் சேர்த்து, நிறையப் பதிவுகள் - ஆழமாக, ஆழப்போலியாக, மேலோட்டமாக, பகிடியாக, போகிற போக்கிலே. ஆண்டுக்கொரு முறை வரும் சடங்கென்ற போக்கிலே, வாழ்த்தும் கவிதையும் கட்டுரையும் சொன்ன பதிவுகளே பல என்பது என் தனிப்பட்ட கருத்து. இப்படியான பெண்கள்_நாள் என்பது, பெண்களுக்கு ஆண்டுக்கொரு முறை வரும், போகும் என்றில்லாது, எதையாவது பெண்களைக் குறித்து திரும்பிப்பார்க்க, திருத்திக்கொள்ள, வரையறுக்க, பால் பேதமின்றி ஆண்-பெண் இரு பகுதியினருக்கும் மேலோட்டமான வாழ்த்து, படைப்புக்கு அப்பாலும் உதவுமென்பதாலே, இருப்பது அவசியமென்றே தோன்றுகின்றது. (இதிலே வாழ்த்திக்கொள்ள என்ன இருக்கின்றதென்பது எனக்கு இன்னும் தெரியவில்லை; தெளிவாக இருக்கின்ற யாராவது சொன்னால், நன்றி உண்டு. கடந்த பாதையிலே, ஆண்டிலே இந்தளவு சாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்காக இந்த வாழ்த்து என்றால், ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால், வாழ்த்து சொல்கின்றவர்கள் அந்தச்சாதனைக்காக எந்தளவு உழைத்திருக்கின்றார்கள் என்பதையும் பார்க்க எத்தனிப்பேன்.)


இந்த ஆண்டு தமிழ் வலைப்பதிவுகளிலே பகிடியாக, மேலோட்டமாக வந்த பெண்கள்_நாள் குறித்த பதிவுகளை, இந்தப்பதிவின் நோக்குக் குறித்து விலக்கிவிட்டுப் பார்க்கிறேன்; மீதிப்பதிவுகளிலே பேசப்பட்டிருக்கின்றவற்றிலே என்னாலே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றவற்றினை, இப்படியாக வகைப்படுத்துவேன்:

1. பெண்களின் நிலை எந்தளவுக்கு காலவோட்டத்திலே மாறியிருக்கின்றது / முன்னேறியிருக்கின்றது என்பது குறித்துப் பேசுகின்ற பதிவுகள்;

2. பெண்களின் நிலை எப்படியாக மாற வேண்டுமென்று திட்டமிடுகின்ற அல்லது எதிர்வுகூறும் பதிவுகள்;

3. இன்னும் ஆண் எதிர்ப்பு என்பதையும் அவனுக்கெதிரான அறைகூவல்களையுமே கட்டமிட்டுக் கெக்கட்டமிடும் பதிவுகள்; மற்றும்,

4. பெண்கள் குறித்த ஆண்களின் உளநிலை, களநிலை மாற்றங்களினை (புரிந்து கொள்ளக்கூடியதும் அவசியமானதுமான முன்னெச்சரிக்கையோடு) வரவேற்கும் பதிவுகள்.


இந்தப்பதிவுகளிலே ஒத்துப்போகக்கூடியனவாக பல கருத்துகள் இருந்தன. அவற்றினை இங்கே நான் சுட்டப்போவதில்லை; இடத்தினையும் நேரத்தினையும் குறித்து, அவற்றின்மேலே எந்தக்கருத்தும் பதியாமல் விடுவதன் மூலம், அவற்றோடு எனக்கு, எனது ("ஆண்")சிந்தைக்கு உடன்பாடே என்று கூறிவிடுகின்றேன். ஆனால், துருத்திக்கொண்டும் தேடியுங் காணமுடியாமலும் இருக்கின்ற ஐந்து விடயங்களை இங்கே பதிவு செய்யலாமென்று நினைக்கின்றேன்.

1. ஆண் உலகின் விரிவும் ஆழமும் குறித்த பார்வை: ஆண்கள் (அல்லது அவர்களிட்ட சட்டம், நெறிக்கோவைப் பிரகாரம் ஒழுகும் உலகு) மட்டுமே பெண்களைக் கூண்டுக்கிளிகளாக வைத்திருக்கின்றதென்று கூறுவதும் அறிவியல்மூலம் பெண்களுக்கு முழுக்க முழுக்க ஆண்களிலிருந்து விடிவும் வந்துவிடும் என்பதுமான மூன்றாவது வகைப் பதிவுகளின் கூற்று, இன்றைய நிலையிலே அளவுக்குமீறிய மிகைப்படுத்துதலாக இருக்கின்றதென்பேன். Stepford Wives போன்று கூண்டுக்கிளித்தனமும் ஆணுலகுக்கான வெறும் தொழில்புரி இயந்திரமயமாக்கமுமான பெண்களின் விடுதலைக்கான உலகத்தினை இனியும் கவிதைகளிலே சித்தரித்துக்கொண்டிருப்பது குறைந்தபட்ச அபத்தமென்றால், "பெண்கள் தற்பாலுறவாளர்களாக மாறிவிடுவார்கள், ஜாக்கிரதை" என்பது மாதிரியான வாதம் அபத்தத்தின் உச்சம். பெண்களின் வளர்ச்சிக்கான தடைக்கற்களிலே எத்தனை ஆண்கற்கள், எத்தனை பெண்கற்கள் என்ற எண்ணிக்கை விகிதத்தினைக் குறித்து எவருமே சொல் பதிந்திருப்பதாகத் தெரியவில்லை. சாதாரண வீட்டு மாமியார்-மருமகள் சண்டையை விட்டுவிடலாம்; அது, இரு தனிப்பட்ட ஆட்களுக்கிடையேயான நீ-நான் ஆளுமைமோதல்; ஆனால், கவர்ச்சி நடிகைகளாக, பெருநிறுவனங்களிலே பெண்களை வெறும் அழகுப்பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்துகையிலே அந்த படாபட்டோபம், பணம், பதவிக்காக, தாம் பெண்கள் என்பதை முன்னிறுத்திப் பயன்பெறும் பெண்களைப் பற்றிப் பேசும் போது, ஆண்களை மட்டுமே அவர்கள் வனைந்து, வளைத்தெடுத்த சட்ட, நெறிக்கோப்புகளூடாக மட்டுமே திட்டித்தீர்ப்பதாலே ஆவதென்ன? அப்படியாக, பெண்களினை இன்னும் ஆண்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் வகையிலே செயற்படும் பெண்களைப் பற்றி எந்தப்பெண்பதிவுமே மூச்சு விட்டதாகத் தெரியவில்லை.

2. ஆண்களின் மீதான எதிர்த்திக்கு-பேதங்காட்டுகை: தொழிலளவிலே ஆண்களின் அதிகாரமே மிகுந்த அளவிலே பல துறைகளிலே இருக்கின்றன என்பதினையும் தனிப்பட்ட சமூக வாழ்க்கையிலே தந்தைவழிச்சமூகநிலையுமே மேலோங்கி இருக்கின்றதென்பதையும் மறுக்க -சுற்றி நிகழ்வனவற்றைப் பார்க்கையிலே-, எந்த வகை நியாயமும் இல்லை. அந்த வகையிலே பெண்களுக்கான ஒதுக்கீடு என்பது இன்னும் நெடுங்காலத்துக்கு, நிலைமை சீராகும்வரையிலும் அவசியம்; ஒரே தொழிலுக்கு, ஆண்-பெண் இருபாலாருக்குமிடையே, இலங்கையின் தேயிலைத்தோட்டத்தொழிலாளர் முதற்கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் பெருநிறுவன நிர்வாகிகள் வரையிலே ஊதியபேதம் இருக்கின்றது; பெண்களுக்குக் குறைவாக; ஆண்களுக்கு மேலாக. அந்த வகையான பாகுபாட்டுக்குற்றங்கள் சீர் செய்யப்படவேண்டும். ஆனால், இந்த வகையான பால்சார் ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தும் பெண்கள் அதிகாரத்தினை தமக்குக் கீழாகத் தொழில் புரியும் ஆண்களுக்கெதிராக எந்த விதத்திலே ஆண்களென்ற ஒரே காரணத்தினாலே துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை நான் அறிவேன்; அனுபவித்திருக்கின்றேன். ஆண்களுக்கு மாறிக்கொண்டதற்காக (அல்லது சரியாகச் சொன்னால், மாறும் ஆண்களுக்காக) "ஓ" போடும் பெண்கள் மகிழ்ச்சியைத் தருகின்ற வேளையிலே, இப்படியாக நிகழும் சத்தமில்லாத எதிர்த்திக்குப் பேதங்காட்டலைப் பற்றி எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றார்களென்று பதிவிலே தெரியவில்லை. நான் இதை, பொதுவாக பெண்களிலே குற்றமேதும் காணவேண்டுமென்று கூறவில்லை; ஆனால், இன்னொரு பெண் என்பதற்காக நாலாம் மட்டத்திலிருந்த ஷியா உல் ஹக்கினை சுல்பிகார் அலி பூட்டோ சுற்றி மேலாக முதன்மைப் பதவிக்குக் கொண்டு வந்ததுபோல, ஒரு பெண்மேலதிகாரி செய்வாரானால் என்ன சொல்வது? பெண்களுக்கு எதிராக நடக்கும் ஆண்களின் அதிகார அடக்குமுறைக்கு முன்னே இப்படியான ஓரிரு சந்தர்ப்பம் ஒதுக்கித் தள்ளிவிடப்படக்கூடியது என்றே நான் நினைக்கிறேன். ஆனால், அதிகாரமென்பதற்கு ஆண் பெண் எவர் கையிலே வந்தாலும் ஒரே நிறம், அதே குணமென்று மட்டுமேதான் சலித்துக்கொள்ளத்தோன்றுகின்றது. இது குறித்து எந்தப் பெண்பதிவாளருக்கும் கண்ட, கேட்ட அனுபவம் இல்லையோ, அல்லது அறிந்திருந்தும் சுட்ட விரும்பவில்லையோ என்றே நேற்றைய பெண்கள்_நாள் பதிவுகள் உணர்த்தின.

3. மிகவும் கவனமான பதிவு அல்லது மிக நல்ல ஆண்கள் சிலர்: பெரும்பாலான பெண்கள்_நாள் பதிவுகள் இன்றைக்கும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் பதிவாளரின் தினந்தினம் பழகும் ஆண் உறவினர்கள், சக ஆண் தொழிலாளர்கள் குறித்த எந்த விதமான எதிர்மறையான கருத்தினையும் நேரடியாகச் சுட்டிச்சொல்லவில்லை; ஒன்று, இறந்தவர்கள் அல்லது நிச்சயமாக இப்பதிவுகளைப் பாராதவர்கள் என்ற வகையிலே இருக்கக்கூடியவர்கள் பற்றிய பதிவுகளாக இருந்தன; அல்லது, தாமும் அறியாத, அத்தனை துன்பங்களும் ஒருங்கே புக, உருவாகிய முகமில்லாத படர்க்கைப்பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்ததாகவே இருக்கின்றன. இப்படியான பதிவுகள், வாசிப்பவர்களை இரண்டு முடிவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. ஒன்று, நெருங்கிய ஆண் உறவினர்கள், சக ஆண்தொழிலாளர்கள் தாம் ஆண் என்பதை முன்னிலைப்படுத்திக்கொண்டு, இந்தப்பெண்பதிவாளர்களைப் பெண் என்ற நிலையிலே நிறுத்தி அணுகுவதில்லை என்ற விதத்திலே ஆண்மேலாதிக்கம் சில ஆண்களிடமாவது ஒழிந்து போயிருக்கின்றது; அல்லது இப்பதிவாளர்கள், தமது ஆண் உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேச மறுக்கின்றனர் என்ற விதத்திலே தாங்கள் பிழை என்று கருதும் ஆண்சட்டங்களுக்குப் பலத்தினை மறைமுகமாகக் கொடுத்துக் கொள்கின்றனர். இது வேண்டாத மயிர் பிளக்கின்ற வாதமாகத் தோன்றலாம்; ஆனால், என்ன சொல்ல வருகின்றேனென்றால், பெண்களின் அவநிலை குறித்து எழுத்திலே குறிக்கும் பெண்களிலே பலருங்கூட, வெளிப்படையாக நிலைமையை நடைமுறையிலே எதிர்ப்பதற்குப் பதிலாக, எழுத்திலே ஆற்றாமையைக் கக்கிவிட்டுப்போய்விடுகின்றனர் என்பதைத்தான் குறிக்க விரும்புகின்றேன்.

4. எல்லாப்பெண்களுக்குமான பதிவு: இணையமும் வசதியும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை; வாய்க்கும் எல்லோருமே எந்த வகையிலோ மீதியான சமுதாயத்திலும்விட, வசதிப்பட்டவர்களாகவும் கருத்துச்சுதந்திரம் உள்ளவர்களாகவும் இணையசமுதாயத்திலே அடுத்த கணிநுனியிருந்து பதிகின்றவருக்கு பால், சாதி, மதம், நாடு, வயது பேதம் கண்டு அஞ்ச வேண்டிய தேவையின்றி, முகம் தெரியாமற் பதியும் வசதியும் தளையற்ற சுதந்திரமும் கொண்டிருப்பவர்கள்; இப்படியான நிலையிலே, இந்தப் பெண்கள்_நாள் பதிவுகள், தமக்கென்றொரு முகமும் அதைக்கூற வசதியுமில்லாத எல்லாத்தட்டுப் பெண்களையும் பற்றிப் பேசியிருக்கவேண்டும். ஓரளவுக்கு தம்மைத் தம்மிலே நிறுத்தி வாழும் வசதியும் பிடித்ததைப் பேசும் சுதந்திரமும் கொண்ட பெண்கள், கூண்டுக்கிளியையும் ஆண்விந்தெடுத்துச் செயற்கைக் கரு சேர்ப்போமென்ற அறைகூவலையும் தாத்தா காலத்திலிருந்து பேரன் காலம் வரை எவ்வளவு மாறியிருக்கின்றதென்று பேசுவதையும் மட்டுமே பெண்கள்_நாள் வேண்டி நிற்கின்றதென்று எண்ணிவிட்டார்களா என்ற உணர்வு பதிவுகளால் எழுந்தது. முகமில்லாத படர்க்கைப்பெண்ணைத் தவிர, முகம் தெரிய பேச்சுச்சுதந்திரமும் இணைய வசதியும் வாய்க்காத ஒரு பெண்ணிற்குக் குரல் கொடுத்திருக்கலாமே என்று தோன்றியது. ஜெயலலிதாவும் ஹிலரி க்ளின்டனும் பெண்களின் வெற்றியைத் தீர்மானித்துவிடலாமா? (குறைந்த பட்சம் கென்யாவின் வங்காரி மத்தாய் குறித்தாவது ஒரு பதிவு இருந்திருக்கக்கூடாதா? அவரும் இப்போது பிரபல்யமென்றபோதுங்கூட, அவரின் பெரும் பெண்பயிர்ச்செய்கை குறித்தாவது)

5. அகிலமயமாதலும் வலைபிணைதலும்: இனிவரும் காலத்திலே தனித்துப் பிரித்து இதுதான் காரணமென்றும் இதுதான் விளைவு என்றும் கூற முடியாத வகையிலே, உலகின் சிக்கல்களும் செயற்பாடுகளும் பின்னிப்பிணைந்து வருகின்றன. இனி வரும் காலத்திலே இவர்தான் இத்துறையிலே பேரறிவியலாளர் என்று ஐன்ஸ்டைனையோ நியூட்டனையோ இழுத்தெடுத்துக் காட்டமுடியாதவண்ணம், அறிவியலிலே பல துறைகள் ஒன்றோடு ஒன்று உருகிக்கலந்து வருகின்றன; உலகப்பிரச்சனைகளும் அந்த விதத்திலே கரைப்பானெது கரையமெது என்று புரியாத வண்ணம் கரைந்து போயிருக்கின்றன. முன்னைப்போல, இடது-வலது, ஆண்டான்-அடிமை என்று இரட்டைநிலை மிக எளிமையாகச் சூத்திரம் போட்டு எதிலுமே தீர்வு காணமுடியவில்லை. பெண்கள் குறித்தும் இதே நிலைதான்; பெண்களின் விடுதலை என்பது ஆண்களை எதிர்ப்பதிலே இல்லை; அதிகம் வேண்டாம்; 60 களிலேயே சென்று பார்த்தால், கறுப்பினப்பெண்ணுக்கு யார் அதிகம் சேதாரம் விளைவிக்கமுடியும்? வெள்ளைப்பெண்ணா? கறுப்புஆணா? அல்லது பஞ்சமர் சாதிக்குள்ளே வகுக்கப்பட்ட பெண்ணுக்கு யாரினாலே அடக்குமுறை அதிகம்? மேற்சாதிப்பெண்ணினாலா? தன்சாதி ஆணினாலா? சரி அதைத்தான் விடலாம்; பெண் தன் சுதந்திரத்தினைத் தானே வைத்துக் கொள்வதென்பது, தனியே Vagina Monologues இலே தரித்திருக்கின்றதென்று நினைக்கவில்லை; பொருளாதாரம், சுற்றாடல், அரசியல், எழுத்து எல்லாமே கலந்த போராட்டமாகவே இருக்கின்றது; இந்த நிலையிலே, இடத்துக்கேற்றவாறு பிரச்சனைக்கேற்றவாறு, தன்னைப் போல, பாதிக்கப்பட்டவர்களை, சிறுபான்மையினரைச் சேர்த்தவண்ணமே ஒரு பெண் தன் போராட்டத்தைத் தொடரலாமேயொழிய, கூடப்போராடுகின்றவளும் பெண்ணா என்பதைக் கொண்டு அல்ல; பங்களாதேசத்திலே கிராமியன் வங்கியின் பயன்பெறும் பெண்களுக்கும் கென்யாவிலே மரம் நாட்டிப்போராடும் பெண்களுக்கும் தென்னமெரிக்காவிலே காணாமற்போன பிள்ளைகளுக்காகப் போராடும் பெண்களுக்குமிடையே போராட்டக்குறிக்கோளிலே, பாதையிலே, தேவையிலே பல வேறுபாடுகளிருக்கின்றன; அதேபோலவே, அவர்களோடு கூடிப்போராடும் ஆட்களிலுங்கூட; இந்தத் தாங்குங்கூட்டத்திலே ஆண்களும் இருக்கலாம்; அடக்குமுறையாளர்களிலே பெண்களும் இருக்கலாம் (பெண்களை வைத்து விபசாரத்தினை நடத்துகின்றவர்களிலே பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதென்பது குறிப்பிடப்படவேண்டியதாகும்). பெண்ணின் தற்பொருளாதாரம், சூழல், அரசியல் இவற்றினை முன்னிறுத்திய எத்தனை பதிவுகள் வந்திருக்கின்றன என்று தேடினேன். கிடைக்கவில்லை. இந்த நிலையிலே "ஆண்கள் ஜாக்கிரதை" என்று தடித்த எழுத்துகளிலே எழுதுவதுமட்டும் என்ன தீர்வினைத் தரப்போகிறது? ( இஃது ஆண்களிடம் முன்ஜாக்கிரதையாக இருக்கவேண்டாமென்று சொல்வதாகாது என்று தமிழ் ஒழுங்காக வாசிக்கத் தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள் என்பது என் நம்பிக்கை.)


முதல் மூன்று பதிவுகளிலே தோன்றா விடயங்களையுமிட்டு நான் பெரிதும் அலட்டிக்கொள்ளமாட்டேன்; அவை தனிப்பட்ட பதிவாளருக்கான தீர்மானத்துக்குரியவை. ஆனால், கடைசி இரண்டு "தோன்றா விடயங்"களும் திறந்த பேச்சு/எழுத்து வசதிகொள் பெண்பதிவாளர்களுக்கான பிரதிநிதித்துவத்தினையும் தார்மீகக்கடமையையும் எதிர்காலச்செயற்பாடுகளுக்கான விரிதலுக்குரிய புரிந்துகொள்ளலையும் வேண்டி நிற்பன என்று நினைக்கிறேன். இவற்றிலே எதையும் நான் பெண்களின் "நாம் பெண்கள்; நமது விடுதலை" போராட்டக்கூர்மையை மழுங்கடிக்கும் வண்ணம் வலைச்சாமபேததண்டதான ஆண்(கு)யுக்திகளாகப் பயன்படுத்தச் சொல்லவில்லை; அப்படியாக நான் சொன்னாலுங்கூட, அவற்றினை இனங்கண்டு எம் தோல்மேற்சாயத்தினை ஒரு சீறுநீர்த்தாரையடிப்பிலே கலைத்துக்கரைத்துக்கழுவும் வல்லமை இல்லாதவர்களல்ல இப்படியான மேற்கூறிய பதிவுகளைக் குறித்த பெண்கள் என்பதை நான் அறிவேன். இஃது எனக்குத் தோன்றியது; இதுதான் சரியென்றோ இப்படித்தான் நடந்திருக்கவேண்டுமென்றோ வாதாட எனக்கு எந்த உரிமையுமில்லை. பெண்கள் எதைப்பற்றிப் பேசவேண்டும் பேசக்கூடாதென்று முடிவெடுக்கும் உரிமை ஒரு பெண்குழுமப்பட்டதுகூட இல்லை; தனித்தனியான ஒவ்வொரு பெண்ணுமுடையதாகக்கூட இருக்கலாம்; அதனால், இப்பதிவின் நோக்கு வெறுமனே என்னுடைய பார்வையிலே பட்டதைச் சொல்வதுமட்டுமே. மத்தியபாதையிலே பயணிக்க முயற்சித்திருக்கிறேன். மொத்துவதானாலும் மொத்துங்கள்; பார்வையிலோ பாதையிலோ தவறிருப்பின், சு(ட்)டத் திருத்திக்கொள்வேன்.

அண்மையிலே ஒரு நண்பர் கேட்டார், "ஏன் எப்போதுமே நீங்கள் ஒரு cynic ஆகவே இருக்கின்றீர்கள்?" மூன்று கிழமைகளாகச் சொல்ல ஒரு பதிலைத் தேடுகிறேன். தெரியவில்லை :-( cynism இல்லாவிடின் செத்துப்போய்விடுவேன் என்பதாலோ? :-)

'05 மார்ச் 09, 15:40 கிநிநே.

Tuesday, March 08, 2005

தெறிப்பு - 11


Advertisment, Orange Line, Boston


துளிர் - 14


Harbinger Bud


கணம் - 459

தரவு

உயிர்மெய்யென்று ஏதுமில்லை,
இனி எல்லாமே வெறுந்தரவு:
எனது, உனது, அடுத்திருந்து
அவதானிக்கும் அவனது.

எதிர்காலத் தெங்கும் எல்லாமே
ஏனென்றில்லாமற் செல்லுபடியாகும்
என்றானதால், எதிர்த்தாற் போல் வரும்
எதையுங் கண் இடுங்கக் கவனங்கொள்:

என் நெடுமூக்குக்குக் கீழான சளியை,
உன் முன்னுதட்டுக்கு மேலான மறுவை,
அவன் முடிதன் நுனிக்கறுப்பை, வேர்வெளுப்பை,
காலூரும் கறுப்பெறும்பை, இவ்வூரில்லாச் சிவப்பெறும்பை.

சுட்டு விரலிடுக்குச் சொட்டு அழுக்கைக்கூட,
வட்டப்பெருவிரல்நகம் சுண்டிக் கழிக்கமுன்.
- தரித்து ஒரு கணம் -
உனக்குள் எண்ணிக்கொள்;
கறளோடு தொலைந்து போகிறதா,
தரவுத்துகளேதும் காற்றில்?

காத்திருந்து பார்;
தரவு கிறுக்கும் தள ஒழுக்கில்
ஓயா துருளும் ஒரு தட்டாகும்
நாம் வாழுலகம்.

விரைந்தான் வெல்வான்.

'05 மார்ச் 08 02:09 கிநிநே..

Monday, March 07, 2005

சலனம் - 3

ஒஸ்கார் வைல்ட்

ஒவ்வொரு ஆண்டும் ஒஸ்கார் விருதினைத் தொலைக்காட்சியிலே நிகழ்நேரத்திலே (realtime = live + 5 min ;-)) பார்ப்பது, என்னைப் பொறுத்தமட்டிலே, விடலைப்பருவத்திலே நீலப்படங்களைப் பார்க்கையிலே அல்லது தற்போது, அமெரிக்காவிலே இருந்து கொண்டே அமெரிக்க வெளிவிவகாரக்கொள்கையை விமர்சிக்கையிலே இருக்கும் உளநிலையிற்றான் நிகழ்கின்றது; கட்டிலாவிதத்திலே கிளர்ச்சியூட்டுகின்றது - அதே நேரத்திலே, இம்மகிழ்ச்சியின் நிழலிலே குற்றவுணர்வொன்று மிதித்து, ஆளை உற்று நோக்கிக்கொண்டு தொடர்வதாகப் பிடரியிலே உறுத்துகின்றது.

ஒஸ்கார் விருது வழங்கு நிகழ்ச்சி, திரைப்படக்கலையின் திறமைக்காகவோ அல்லது திரைப்பட நுட்பத்தின் பரிமாணத்தை, பரிணாமத்தை மெச்சவோ அல்ல, ஆனால், ஹொலிவுட், தன்முதுகிலே தானே தட்டிக்கொள்ளும் பெருமைத்தனத்தினையும் ஆடம்பரத்தின் வீச்சை, ஒரு தேர்ந்த நெறியாள்கையின்கீழே நிகழ்நேரத்திலே ஓர் ஒன்றுகூடலின்மூலம் உலகம் பூராக நடித்துக்காட்டும் திறனைச் சுட்டவுமே நிகழ்கின்றதென்பதை உணர்ந்திருக்கின்றேன்; எல்லாவற்றுக்குமேலாக, தன் உற்பத்திகளுக்கு மிகச் சிறந்த அளவிலே அகிலம் பரந்து, வேறு விளம்பரதாரர் நெற்றி நாமத்திலே விளம்பரம் செய்யவும் பயன்படுத்திக்கொள்கின்றது. ஒஸ்கார் பெற்ற படங்களுஞ் சரி, அதன் இறுதித்தேர்வுக்கு வந்த படங்களுங் சரி, ஒஸ்காருக்கு முன்னும் பின்னுமான இரு மாத காலத்திலே, மிகவும் விளம்பரப்படுத்திக்கொண்டு, விற்பனையைச் செய்து தள்ளிவிடுகின்றன. உதாரணமாக, இத்தனை காலமுமில்லாத அளவிலே இப்போது, 'மில்லியன் டொலர் பேபி' ஒஸ்கார் விருதுகளைத் துணைக்கழைத்துக்கொண்டு, தொலைக்காட்சியிலே விளம்பரமாகின்றது. மேலாக, ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் தொலைக்காட்சியிலே வராத வண்டி, வளையல் விளம்பரங்களுக்கு அப்பாலும், ஒவ்வொரு கணத்தினையும் ஒவ்வொரு நடிக நடிகையின் உடலையும் ஏதோ ஓர் உற்பத்தி நிறுவனம் மணிநேரங்களுக்குக் குத்தகைக்கு வாங்கியிருப்பது தெளிவு; அந்த செங்கம்பளப்பூனைநடை இடையிலே நடிகநடிகைகளின் உடை கடை விரிக்கப்படுகின்றது; அடுத்த நாள், சுப்பர் போலின் மறுநாள் தொலைக்காட்சி விளம்பரங்களிலே சிறந்தது-அல்லாதது வகை பிரித்து வரிசைப்படுத்துவதுபோல, ஒஸ்காரின் மறுநாள், விருதுகள் யாருக்கு என்பதற்கீடாக, நடிகைகளின் உடை-குடை ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. இதுவரை நாள், இது நடிகைகளின் ஆரம்பரத்தினைச் சுட்டுகின்றதே என்று வெறுப்பேறியிருந்தேன். இந்த முறை, க்ரிஸ்டீன் இடன்ஸ்ட் கண்ணைத் திறந்தார்; அவரின் உடையைச் சிலாகித்து ஒஸ்காரின் பின்னால், அந்த உடை பற்றி விசாரித்த தொலைக்காட்சிப்பேட்டியாளருக்கு, அவர் சொன்னார்; "இந்த உடை என்னாவாகுமென்று எனக்குத் தெரியாது; ஒஸ்கார் முடிய நான் இதை க்ரிஸ்டியன் டியோரிடம் ஒப்படைக்கவேண்டும்."

ஒஸ்காருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சுயாதீனப் படங்களுக்கான விழா நிகழ்ந்தது. (சுயாதீனப்படங்கள் என்று சொன்னாலுங்கூட, எந்தவளவுக்குக் கட்டற்ற நிலை படைப்பிலே இருக்கமுடியுமென்பது கேள்வி. இது குறித்து முன்னரொரு முறை, Laura Flanders Show இலே ஒரு மணிநேர விவாதமே நடைபெற்றிருந்தது). அது குறித்தோ அல்லது பட விமர்சர்களின் விருதுகள் குறித்தோ பேரோட்ட ஊடகங்கள் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை (நான் மட்டும் வித்தியாசமில்லை என்பதையும் ஒத்துகொண்டுவிடுகின்றேன்; இந்த ஒத்துக்கொள்ளல்தான் அரிச்சந்திரனை நிழலாய்த் தொடர்ந்த சுக்கிரியன் என்பதான குற்றவுணர்வின் ஒரு கூறு ;-)). ஒஸ்கார் படங்களிலே அமெரிக்காவின் நல்ல படங்கள் எல்லாமே வருவதுமில்லையெனலாம். Side Ways (அதுகூட, பெரிதும் பிரபல்யமான நடிகர்களைக் கொண்டதல்லவெனிலும், சுயாதீனமான படமென்று சொல்லிவிடமுடியாது; Fox Searchlight வெளியீடுதான்; பேரோட்டத்திலே கலக்க முன்னாற்கூட, Miramax கூட சுயாதீனமானதென்று ஆகிவிடாது; வெயின்ஸ்ரைன் சகோதரர்கள் ஒஸ்காரை வெல்வதற்கான "ஆட்பலம்" கொண்டவர்கள்தான்). ஒஸ்கார் நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சி நடத்துநர் க்ரிஸ் உரொக், மஜீக் ஜோன்ஸன் அரங்கின் வெளியே செவ்வி கண்டவர்களிலே திட்டமிட்டு நுழைக்கப்பட்ட அல்பேர்ட் ப்ரூக் தவிர, மீதிப்பேரின் அபிப்பிராயங்கள் தேரப்பட்ட படங்களையே அறிந்திருக்கவில்லையென்று காட்டியது. ஆனாலும், உலகம் பூராக, தொலைக்காட்சி வசதியுள்ளவர்களிலே பலர் நேரடி ஒலிபரப்பையோ, குறைந்த பட்சம் அதன் முடிவுகளையோ தப்பவிட்டதில்லை. போதாக்குறைக்கு, இந்தியப்படங்கள் ஒஸ்காரின் வெளிநாட்டுப்படச்சிறப்புக்குக்கூடப் போகவில்லையே என்ற கவலை வேறு எங்களிலே பலருக்கு. இந்த ஆண்டு, அமிதாப் பச்சன், திடீரென ஞானோதயம் வந்து ஹொலிவுட் படங்கள் ப்லிம்பேர் விருதுக்கு வராதபோது, பாலிவுட் படங்கள் ஏன் ஒஸ்கார் விருதுக்கு ஆசைப்படவேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார். நல்ல கருத்து. இதைக் கேட்டாவது, கலைப்படங்களென்றாலே, 'இருளும் ஒளியும்; நத்தையும் நகர்வும்' என்று கிண்டல் செய்து புகழ் பெறும்கூட்டத்திலே ஒன்று இரண்டாவது, வரும் ஆண்டுக்காவது இந்தியப்படங்களுக்கு ஒஸ்கார் கிடைக்கவில்லையே என்று கவலைப்படாமலிருக்கட்டும்.

ஆனாலும், ஒஸ்காரினைப் பாராமல் என்னாலே இருக்கமுடியவில்லை; எதற்காகப் பார்க்கின்றேன் என்று குற்றவுணர்வு நிமிண்ட நிமிண்ட ஒவ்வோர் ஆண்டும் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்; பதில் தெளிவாகவில்லை; உள்ளூர, நான் பகிடி பண்ணும், வெறுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த ஆடம்பரத்தினை எண்ணி விழைகின்றேனா என்றால், நிச்சயமாக இல்லை என்று சொல்லமுடியும். இது நல்ல கலைஞன் நடத்தும் பொம்மலாட்டமென்று நிச்சயமாகத் தெரிந்தேயிருக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் உவூடி அலன் போல, ஒஸ்கார் நடக்கும் அன்றைக்கு நியூ யோர்க் நகரிலே ஒரு உணவுவிடுதியிலே இசை வாசிப்பதுபோல (2002 தவிர; 2001 செப். 11 இனை நினைவுகூர வந்தாராம்), என்னாலே ஏன் எழுந்து வேறெங்கோ போகமுடியவில்லை; அல்லது குறைந்த பட்சம் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றவோ, அல்லது மூடி வைத்துவிட்டாவது, கூகி வா த்யாங்கோவின் குருதியின் இதழ்களை வாசிக்கமுடியவில்லை? நிச்சயமாக, க்ரிஸ் உரொக்கின் புஷ் குறித்த கிண்டலுக்காக அல்ல; அதற்கு வேண்டுமானால், எயார் அமெரிக்கா வானொலியிலே அல் ப்ராங்கைன், ஜெனீன் கார்பெலோவின் ஓயா உரைகளைக் கேட்டுவிட்டுப் போய்விடுவேன். அதற்காக அல்ல. ஆனாலொன்று; நிச்சயமாக, போன ஆண்டு மைக்கேல் மூரின் கட்டற்ற உரை உள அழுத்தத்துக்கு வடிகாலாக இருந்ததென்பது உண்மை; அப்படியான தருணத்துக்காக, 1973 இலே கோட் பாதருக்கான சிறந்த நடிகர் விருதைத் தான் எடுக்காமல், ஒரு செவ்விந்தியப்பெண்ணை அனுப்பி வைத்த மார்லன் பிராண்டோவின் தருணத்துக்காக, 1997 இலே ஜூலியாவுக்காக சிறந்த துணை நடிகை விருதைப் பெறும் போது வனேஸா இரெட்க்ரேவ் ஆற்றிய ஸியோனிய எதிர்ப்பு உரைக்காக, எட்கார் கூவரினாலே அமெரிக்கா உள்நுழைய மறுக்கப்பட்ட சார்லி சப்ளினுக்கு 1972 இலே கொடுக்கப்பட்ட ஆயுட்கால கௌரவ விருதிற்கு எழுந்து நின்று கைதட்டிய ஹொலிவுட் கூட்டத்தின் கணத்துக்காக, 1999 இலே எலியா காஸனுக்குக் கொடுக்கப்பட்ட ஆயுட்காலச்சேவைக்குரிய கௌரவ விருதுக்கு வெளியே நின்று எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கணத்துக்காக ஒஸ்கார் பார்க்கவிரும்புகின்றேன்; இந்த, நாடகப்படுத்தி இயக்காத தன்னாலாகு தருணங்கள் ஒஸ்கார் பார்க்கும்போது, குற்றவுணர்வு மறையும் தருணங்கள். ஆனால், இப்படியான தருணங்களுக்காக மட்டும் ஒஸ்காரினை நான் பார்ப்பதில்லை.

மெய்யாகவே ஏன் ஒஸ்கார் பார்க்கின்றேன் என்று எனக்குத் தெளிவில்லை. ஆக, யோசிக்கும்போதெல்லாம், எனக்குத் தோன்றுவது, உலகத்திலே பலரோடு ஒரே விடயத்தினைச் சேர்ந்து பார்க்கின்றேன் என்ற மூலஸ்தானத்திலே பூசை நடக்கும்போது, சேர்ந்து நின்று தீபவொளி காணும் மகிழ்ச்சி கண்ட சிறு வயதுக்கணத்துக்குரிய காரணமே; புத்தாண்டு பிறக்கும்போது, உலகம் பூராக ஒவ்வொரு நாடாகக் காட்டிக் காட்டி வாண வேடிக்கையைக் காட்டும்போது, காத்திருந்து பார்ப்பதுபோன்ற இந்தச் சந்தோஷமோ? சில வேளை அதுவாகக் கூட இருக்கலாம்; அல்லது, எந்தவொரு நிகழ்வையும் அது நடக்கும்போது, உடனேயே கண்டு கொள்கிறேன் என்ற விபரம் கொய்ந்து மூளைக்குள்ளே சொருகிக்கொள்ளும் சந்தோஷமோ? தெரியவில்லை.

எதுவோ சின்னதாக குற்ற உணர்வு துரத்தத் துரத்தத்தான் ஒஸ்கார் பார்க்கின்றேன்; ஆனாலும், பார்க்காமலிருந்தாலும், எதற்கென்று தெரியாமல், எதையோ இழந்தது போன்ற குற்றவுணர்வு. அதுக்கு, பார்க்கிற குற்றவுணர்வு எவ்வளவோ மேல் :-)

'05 மார்ச் 07, 19:11 கிநிநே.