not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Wednesday, August 31, 2005
குவியம் - 12
நியூ ஓர்லியன்ஸ்-1
நியூ ஓர்லியன்ஸ்-2
நியூ ஓர்லியன்ஸ்-3
நியூ ஓர்லியன்ஸ்-4
நியூ ஓர்லியன்ஸ்-5
நியூ ஓர்லியன்ஸ்-6
நியூ ஓர்லியன்ஸ்-7
நியூ ஓர்லியன்ஸ்-8
நியூ ஓர்லியன்ஸ்-9
நியூ ஓர்லியன்ஸ்-10
புலம் - 17
தங்கர்பச்சான் தலை உருள்கிறது; திரைப்பட உலகினை ஆவென்று பார்க்குமொரு சமூகத்தின் முன்னே அதன் ஒளிவெள்ளத்திலே உலாவுகின்றவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது விவாதப்பொருளாகிவிடுகின்றது; ஹொலிவுட்டின் (உ)ரொம் க்ரூஸ் அண்மையிலே சயின்ரோலஜி குறித்து என்பிசி இன் மற் (உ)லோவரின் காலைநிகழ்ச்சியிலே தான் நடித்த War of Worlds இனை விளம்பரப்படுத்த வந்து War of Words நிகழ்த்தி, வேண்டாமல் ப்ரூக் ஸ்ல்ட்ஸுக்கும் தாய்மையின் நெறி எப்படியாக இருக்கவேண்டுமென்பது குறித்து அறிவுரைகூறி சலசலப்பினையும் ஊடகங்களுக்கு மெல்ல அவலையும் கொடுத்திருந்தார். ('Blue Lagoon' Brook Shields இற்கு என்றபடியாலே விட்டுவிட்டேன்; 'Paradise' Phobe Cates இற்குச் சொல்லியிருந்தால், அண்ணருக்கு பொஸ்ரன் பக்கம் அடுத்த முறை வரும்போது நடந்திருக்கக்கூடியதே வேறு). போலிவுட்டிலே, ஸக்தி கபூர், ஸல்மான் கான்-மான் என்று தொடர்ந்து ஏதாவது அவல் பொரிகின்றது. கோலிவுட் மட்டும் குறைந்ததா என்ன? நிறைய நடக்கின்றது.
ஆனால், அடிக்கடி திறக்கத் தெரியாமல் வாயைத் திறக்கின்றவர்களுக்குமட்டும் சிக்கல் பெரிதாகிவிடுகின்றது; அதுவும் குறிப்பாக, பெரும்பான்மையிலிருந்து விலகி நின்றுகொண்டு, கண்ணாடி வீட்டுக்குள்ளே கல்லெறிகின்றவர்களுக்கு மிகவும் சிக்கல். அதுதான் தங்கர்பச்சானுக்கு நிகழ்ந்திருக்கின்றது. தங்கர்பச்சான் குறித்து தங்கமணி மிகவும் சுருக்கமாகவும் அருமையாகவும் எம். கே. குமாரின் பதிவிலே சொல்லியிருக்கின்றார்; வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது ('இவைகள்' என்று எழுதுவதைத் தவிர ;-)).
தயாரிப்பாளர் தங்கர்பச்சானின் பக்கம் கூலி- வேலை நேரம் தொடர்பாக நியாயமிருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். அது குறித்து, தொடர்ச்சியாக நான் வாசித்திருக்கவில்லை. அதனாலே ஏதும் சொல்லமுடியாது; ஆனால், அவர் பக்கம் நியாயமிருக்கிறதோ இல்லையோ, தங்கர்பச்சான் "நடிகைகள் விபசாரிகள்" என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்திலே சொன்னால், அவரின் அக்கருத்தினை எந்தக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தமுடியாது; நியாயப்படுத்தத்தேவையில்லை. மன்னிப்பு பிரச்சனையை ஆற்றுமோ, அல்லது அவர் குறித்த மற்றவர்களின் பார்வையை மாற்றுமோ தெரியாது; ஆனால், அதற்கு அவர் மன்னிப்புக் கேட்பதுதான் நியாயமே - அஃது அவரினை ஒரு பகிடிக்குரிய பண்டமாக, வித்தையாட்டப்படும் குரங்கின்நிலையிலே மற்றவர்கள் பார்க்க வைத்தபோதுங்கூட.
அவமதிப்புக்குரிய பாத்திரப்படைப்புகளையும் காட்சிகளையும் நகைச்சுவை, பண்பாடு என்ற விதத்திலே உள்ளிடும் படங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் வாய்ப்புக்கிடைத்தாலே சரியென்ற விதத்திலே நடிக்கவும் செய்கின்றார்கள். பாடலாசிரியர்களும் கதாசிரியர்களும் 'பெண் என்றால் இப்படியாகத்தான்' என்று வரையறுக்க, அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கும் கேடான நிலையையும் காணலாம். ஆனால், இவை மறைமுகமான ஆமோதிப்பென்று விட்டுவிடலாம். தயாரிப்பாளர்.எதிர்.நடிகர் என்ற நோக்கு என் கரிசனைக்கு அப்பாற்பட்டதாலும் அந்தக்கோணத்திலே நிகழ்ந்தது முழுக்க எனக்குத் தெரியாததாலும் ஏதும் சொல்லமுடியாது.
ஆனால், இந்த விடயம் தொடர்பாக வேறு சில பக்கங்கள் பார்க்கப்படவேண்டியவை; குறிப்பிடத்தக்க இரண்டு.
1. அவதூறு பேசுதல் என்பது, அரசியலும் திரையுலகும் கலந்த கோடம்பாக்கத்திலே இன்றைக்கு நேற்றைக்கு நிகழ்ந்ததல்ல; திரைப்படக்காரர்களைக் கூத்தாடிகளென்று முதலமைச்சர்களாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லியிருந்தார்கள்; அஃது இழிவுபடுத்தும் நோக்குத்தான். எஸ். எஸ். சந்திரன் போன்ற அரசியல்நடிகர்கள் (முன்னாள்) பெண்நடிகைகள் பற்றி, முன்னாள் சொன்னதெல்லாம் இழிவு நோக்குத்தான். கூட நடிகைகளை, சக ஜரிதாபீடா நடிகர்கள் பறக்கும் விமானத்திலே, அவமானப்படுத்துவது தொடக்கம், தொட்டு அழுத்துவது தொடக்கம், வெளிப்புறப்படப்பிடிப்புகளிலே அத்துமீறி நடிகைகள் அறைக்குள்ளே நுழைவதுவரைக்கும் கிசுகிசுக்கள் வராத சஞ்சிகைகள் இல்லை; அப்படியான "நடிகைகளின் கதைகளை" விற்றுப்பிழைக்காத கௌரவமான பத்திரிகாசிரியர்களுமில்லை. அந்த நேரங்களிலே எதுவுமே நடிகர்கள் சகநடிகைகளுக்காகக் குரல் கொடுத்துவரவில்லை. (ஹொலிவுட்டிலே இவ்வாறு நடிகைகளுக்கு நிகழ்பவை குறித்து அண்மையிலே ஒரு குறை_சுயசரிதை வந்திருக்கின்றது). நடிகைகள் நடிகர்களை அவமதிப்பதும் (ரஜனிகாந்த்~மனோரமா) நடந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கர்பச்சானை நடிகர்சங்கக்கூட்டத்திற்கு வரச்செய்து, இறுதியாக, "இப்படியாக நடந்தால், தொழில்புரிய மறுப்புத்தான்" என்று சொன்ன விஜயகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே, தொலைக்காட்சி நடிகையான புவனேஸ்வரி தொடர்பாகச் சொன்னது, "தொலைக்காட்சிநடிகைகள் மட்டுமே விபசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; சினிமா நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதில்லை." குஷ்பு, ராதிகா, தேவயானி, மனோரமா, சரிதா, காந்திமதி தொடக்கம் எத்தனையோ திரைப்பட நடிகைகள் தொலைக்காட்சியிலே பெரும்புகழடைந்திருக்கும் இந்நேரத்திலே, இவர் சொன்னது குறித்து எந்த நடிகரும் நடிகையும் எதையும் கேட்டதாகத் தெரியவில்லை; கண்டித்ததாகவும் தெரியவில்லை.
2. தங்கர்பச்சான் குறிப்பாகத் தாக்கப்படுவதற்கான காரணம், 'நடிகர்-எதிர்-தயாரிப்பாளர்' என்ற கூட்டமைப்புகளுக்கிடையேயான பலப்போட்டியிலே, இவர், முழுமையாக, ஒரு தமிழ்த்தயாரிப்பாளருக்குரிய பொதுப்பண்புகள் கொண்டிராததால், தயாரிப்பாளர்கள் முழுமையாக ஆதரிக்கமுடியாத ஆளென்பதும் ஆனால், அதே நேரத்திலே தயாரிப்பாளர் என்ற குறியீடாக இவர் பயன்படக்கூடுமென்பதும் இருக்கலாம். மேலும், குறிப்பாக அவரின் கார்காலநுணல்வாயின் வினை குறித்தும் காணவேண்டும்; இவர் இரஜனி குறித்துச் சொன்ன கருத்துகளின் பின்னால், சில ஆண்டுகளின் முன்னால், இணையத்திலே தமிழ்க்குழுமங்களிலே இவர் ரஜனியைத் தாக்கிப்பேசினாரென்ற காரணத்தினாலே மட்டும் "(இ)ரஜனி என் வீட்டிலே ஒண்ணுக்கடித்தார்" என்று அணுக்கத்தார் பதிவுகள் போடக்கூடியவர்களாலே தாக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கின்றோம்; இவரும் சேரனும் ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளுக்கும் பொலீஸுக்கும் கொடுத்த பெண்ணினாலே இழுத்தடிக்கப்பட்டார்கள்; பின்னால், அப்பெண் சொன்னவை பொய்யெனத் தகவல்கள் வந்தன. அந்த விசாரணையும் அதன் முடிவுகளும் என்ன ஆயின என்பது குறித்தோ, அல்லது சுடச்சுட மெல்லும் வாய்க்குப் பொய்யவல் கொடுத்தது குறித்தோ எந்த அச்சூடகமும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், இப்படியான நிலை, 'சேரன், தங்கர்பச்சான் போன்றவர்கள் காட்டமாகக் குறிவைத்து திரைப்படவுலகத்திலும் பத்திரிகையுலகத்திலும் இணையத்திலும் சிலரினாலே தாக்கப்படுவதற்கு தங்கர்ப்பச்சானின் ஓவெனத் திறந்த வாய்மட்டுமே முழுக்கக் காரணமெனச் சொல்லிவிடமுடியாது' என்ற கருத்துந்தலையே தருகின்றது; அவருடைய அரசியல்நிலைப்பாடும் அதிலே பெரும்பங்கு நடத்துகின்றதென்றே சொல்லலாம். தங்கமணி சுட்டிக்காட்டியதுபோல, தங்கர்பச்சானின் இக்கருத்தினை எதிர்த்துப்பேசுகின்ற திரைப்படம்சாராதவர்களிலே சிலர், சங்கராச்சாரியாரின்மீது அனுராதா ரமணன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியோ அது ஏன் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையிலே வெளிவர அதன் அன்றைய ஆசிரியர்கள் விடவில்லையென்பது குறித்தோ ஒரு கருத்தும் சொல்லவில்லையென்பதைக் காணவேண்டும்.
தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது; அதேபோல, நடிகைகள் குறித்து இன்னும் "எம்பிபிஎஸ் படித்து பெரிய வக்கீலாகியிருப்பேன்" 'ஜோக்' போடுகின்றவர்கள் குறித்தும் நடிகைகள் குறித்து சொல்வன்முறை, உடல்வன்முறை செய்யும் சகநடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் தங்கர்பச்சானை அவரின் திரைப்படம்சாரா அரசியல்குறித்து இலக்குவைத்துத் தாக்குகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.
'05 ஓகஸ்ற் 31, புத. 16:54 கிநிநே.
Tuesday, August 30, 2005
படிவு - 13
'04 ஜூன், 17 11:00 மநிநே.
பிறந்த ஊரைப்போல, படித்த ஊர்களும் நெஞ்சிலே நின்று கொள்கிறன. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நெ'ஓர்லின்ஸ் அப்படியாகப் பிடித்துக்கொண்டது. பிரெஞ்சுச்சதுக்கம்; தெருவண்டி எனப்படும் 'ட்ராம்'; கேஜன் - க்ரியோல் உணவு; ஜாஸ் - அக்காடியன் இசை; மாடி க்ரா; மிஸிஸிப்பி ஆறு; பொஞ்சட்ரீன் ஏரி; சார்ல்ஸ் வீதிமருங்கு வீடுகளின் கலை; புதைகுழிகள்; ஓடபேன் பூங்கா; உவூடு மந்திரக்காரர்கள் & ஜாஸ் மரணவூர்வலங்கள்; எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் நகரமத்தி ஸுப்பர்டோம் ........................ கூடவே, கோடைகளின் ஓடவைக்கும் தென் திசைப்பெரும்புயல்.
அமெரிக்காவிலே பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலே மூன்றாவது மிகமோசமான புயலாக, முந்தநாள் கத்ரீனா நெ'ஓர்லியன்ஸினை உலுப்பி எழுப்பியிருக்கின்றது. அடிப்படையிலேயே கொஞ்சம் மழை பெய்தாலும், ஆடிப்போகும் ஊர் நெ' ஓர்லியன்ஸ். பிரெஞ்சுக்காரர், சதுப்புநிலத்திலே துறைமுகவசதிக்காக மிஸிஸிஸிப்பி ஆற்றுமுகத்துவாரத்திலே நிரப்பிக்கட்டிய நகர்; ஒரு புறம் மிஸிஸிப்பி ஆறு; மறு புறம் கடல், மூன்றாவது பக்கம் கடலோ எனப் பிரமிக்கவைக்கும் 24 மைல் நீளத் தொடர்பாலம் குறுக்கோட, பொஞ்சட்ரீன் ஏரி. இவையிடையே, இவற்றின் மட்டத்துக்கு ஆறடி கீழ்த்தாழ, நெ' ஓர்லியன்ஸ் நகர். ஊருக்குள்ளே வரும் நீரை உறுஞ்சி அனுப்ப, ஒன்றோ இரண்டோ மட்டுமே மழைநீரகற்றும் குழாய்களுடனான வசதி; எப்போதும், பெரும்புயலுக்கு, நகர் "கூழ்ப்பானை" (Soup Bowl) என வர்ணிக்கப்படும். ; மேலும், கடல்மட்டத்துக்குக் கீழான நிலையிலே இருப்பதாலே, நிலமட்டத்துக்கு மேலே கல்லறைகளிலே புதைக்கப்படும் பிணங்கள் வெளியே மிதப்பதும் அவற்றினை மீண்டும் எடுத்துப்புதைப்பதும் என்ற மிகவும் மனவழுத்தம் தரக்கூடிய சம்பவங்களும் ஒவ்வோர் ஆண்டிலும் நடக்கும். அருந்தப்பிலே '1998 இலேயும் '2002 இலேயும் நகர் தப்பியது. இந்த முறை அந்தளவுக்குத் தப்பிக்கும் வாய்ப்பிருக்கவில்லையென்றாலுங்கூட, எண்ணியதிலும்விடப் பரவாயில்லையென்ற நிலையிலே ஓரளவு திருப்தியடைந்திருக்கின்றார்கள்.
புயலோடு வரும் அபாயங்கள் காற்றும் மழையும் சம்பந்தப்பட்ட அபாயங்கள்தான்; இவை குறைத்து மதிப்பிடப்படமுடியாது; ஆனால், அதன்பின்னாலே ஆற்றுமண்தடுப்போ, ஏரிமண்தடுப்போ உடைத்தால் வரக்கூடியதுதான் பெருமபாயம்; நேற்றிரவு, பொஞ்சரிட்டன் ஏரியிலே இப்படியாக உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. இயன்றவரை உடனடியாக, மின்சார, தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக்கொண்டாலுங்கூட, வெள்ளத்துடன் குடிநீர்வசதி, கழிவகற்றல் வசதி, நோய்த்தொற்று என்பன பெரிய சிக்கல்களாக இருக்கும்; சரியான அழிவு விபரங்கள், அங்கும் நேரடித்தாக்குதலுக்குட்பட்ட, மிஸிஸிப்பி மாநிலத்தின் ப்லொக்ஸி நகரிலும் மதிப்பிட்டுமுடியவில்லை.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலே இருக்கும் திட்டமிடல் வசதிகளாலே (FEMA போனற அரசமைப்புகளாலே)இவ்வழிவுகள் வளர்முகநாடுகளிலே ஏற்படுவதிலும்விடக் குறைவானதாகவே இருக்குமென்றபோதிலும், "This is our Tsunami" என்றவகையிலே இம்மாநிலத்தார் சொல்வதிலும் உண்மை ஓரளவுக்கு உண்டு; அமெரிக்காவின் வறுமையான மாநிலங்களிலே, தென்திசைக்குடா அடுத்த பெருஞ்சாலை 10 ஊடறுத்தோடும் நெ'ஓர்லியன்ஸ் இருக்கும் உலூயிசியானா மாநிலம், மிஸிஸிப்பி மாநிலம், அதையடுத்த அலபாமா மாநிலங்கள் அடங்கும். கலிபோர்னியா நிலநடுக்கத்துக்கும் மஸாஸுஸெட்ஸ் பனிப்புயலுக்கும் புளோரிடா மழைப்புயலுக்கும் செய்ததுபோல, செலவழிக்கக்கூடிய வசதி இம்மாநிலங்களிடமில்லை. அந்நிலையிலே இம்மாநிலங்கள் மீண்டும் பழையநிலைக்கேனும் நிமிர்ந்தெழுவது மிகவும் பிரயத்தனப்படவேண்டியிருக்கும்.
நெ'ஓர்லியன்ஸுக்கும் அதற்கு மேற்கிலே இடெக்ஸ்ஸாஸ் மாநிலம் நோக்கிப்போகும் உலூசியானாவின் தலைநகரான பட்டன்ரூச்சுக்குமிடைப்பட்ட பிரதேசம், புற்றுநோய்த்தாழ்வாரமென, அப்பிரதேசங்களின் வேதியற்றொழிச்சாலைகள் குறித்துக் கருதப்படும்; இவ்வேதியற்றொழிச்சாலைகளும் மெக்ஸிகோகுடாவிலிருக்கும் எரிபொருளகழ்வும் சுத்திகரிப்பும் உலூயிஸியானாவின் சூழலுக்கான அக்கறையுள்ளவர்களினாலே எப்போதும் குற்றம் சாட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இவ்வேதியற்றொழிச்சாலைகளிலே புயல் சேதமேற்படுத்தின், புயலின் அளவையிட்டும் வேதியமப்பொருளின் தன்மையையிட்டும் பாதிப்பு எவ்வளவு பிரதேசத்திற்கிருக்கும், அந்நிலையிலே எவ்வாறு மக்களை வெளியேற்றுவதென்பதெல்லாம் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், ஆய்வுகளின் முடிவுகளின்பின்னான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தனியே அறிவியல், சமூகவியல் மட்டும் சார்ந்த விடயமில்லையே; உள்ளூர் அரசியலும் திறைசேரிப்பொருள்நிலையும் தீர்மானிக்கிற சங்கதிகள் இவை. தற்காலிகமாக, எரிபொருள் உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம் தடங்கிப்போயிருப்பதால், ஏற்கனவே அமெரிக்காவிலே ஏறிநிற்கும் எரிபொருள்விலை இன்னும் ஏறுமயில் ஏறிவிளையாடும்.
உலூஸியானாவின் தென்மேற்குப்பகுதிகளிலே, அமெரிக்காவின் சீனியுற்பத்தியிலே முக்கியம் வகிக்கும் உலூயிஸியானாவின் கரும்பு விவசாயப்பகுதி. இவை 1992 இன் அண்ட்ரூ புயல் போல இல்லாது, தப்பி, நெ' ஓர்லியன்ஸின் கிழக்குப்பகுதியே சேதமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இறக்குமதியாகும் சீனியினாலே நொடிந்துபோயிருக்கின்றோமென உலூயிசியானாவின் சீனியுற்பத்தியாளர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கையிலே, இப்புயலும் சேதமேற்படுத்தியிருப்பின், மாநிலத்துக்குப் பெரும் பொருளாதாரநட்டமே.
ஆனால், உலூயிசியானாவுக்கு, "தனக்கு வந்தது மிஸிஸிப்பியோடு போனது" என்ற நிலையிலே நிம்மதி.
'05 ஓகஸ்ற், 30 12:00 கிநிநே.
Monday, August 29, 2005
கணம் - 477
The Swamp Thing
நிர்ச்சலனத்து நீர்ப்பரப்பிருந்து
பட்டென் றெழுந்து வருகிறது;
சேற்றுக்காலிரண்டு முன்தூக்கி
ஆற்றா மூர்க்கத்தே அலறும்;
மூசுமூச்சு முழுவெப்பம்.
ஆள் தின் எண்ணம்
மின்னும் நகக்கண்.
சொட்டு நீர், சுரி சிலும்பிச்
சுற்றுதோல் உரித்தெறியும்.
உற்றுப் பார்க்கமுன்னால்,
உடுக்கு மொரு நரத்தோற்றம்.
மிடுக்கோடு செருகும்
ஒரு தொப்பி
மேலோ ரிறகு
பத்துப்பேனா
பளபளக்கச் சட்டை
சொட்டு விழியன்பு
மொத்தச்சப்பாத்து
கத்தைத்தாள்,
மடிக்கணணி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கழற்ற மறுத்துக்
கடந்து நடக்கும்.
அலைச்சத்தத்தில்
கூட்டச்சனத்துள்
எட்டிக் கலக்கும்
இன்னோர்
அப்பனாய்
அண்ணனாய்
புத்தனாய்
புதல்வனாய்
போதிசத்வனாய்
புத்தகப்புழுவாய்
மெத்தப்படித்தாரின்
மொத்த வாணிகனாய்.
உரித்துக் கரைகாயும்
தோற்சொரசொரப்பு,
பற்ற
வரும்
மாலை.
'05 ஓகஸ்ற், 28~29 ஞாயி.~திங்.
Saturday, August 27, 2005
குவியம் - 11
...................
.......அபிநயம்...................
..................அபிநயம்..............
..............அபிநயம்....................
..........அபிநயம்...........................
.................அபிநயம்......................
Friday, August 26, 2005
கரைவு - 5
நாகூர் (உ)ரூமி சல்மாவின் "இரண்டாம் ஜாமங்களின் கதை" ஐச் சாமியேறி உறுமிச் சாட்டையாற் சாத்தி வேப்பிலையால் உருவி எடுத்து விமர்சித்திருக்கிறார் (=விமர்சையாய்த் திருகியிருக்கிறார்). (இங்கே, 'மைலாஞ்சி'க்கு அவரிடமிருந்து வந்த விமர்சனமெனக் கேள்விப்பட்டதையிட்டு "மீண்டுமொரு முறை" என்று சொல்வதா அல்லது அவரின் பதிவுகளை இட்டு "வழக்கம்போல" என்று சொல்வதா என்று எனக்குள்ளே குழப்பமேற்பட்டது; அதனாலே, அப்படியான இடைச்செருகற்கூற்றுகளை மேற்படி வசனத்திலே நான் நுழைக்கவிரும்பவில்லை)
தட்டச்சுச்செருமலான ஆரம்பப்பந்திக்கு அடுத்த வரிகளாக இங்கே சொல்லிக்கொள்ளவேண்டியவை இரண்டு:
1. 'இரண்டு ஜாமங்களின் கதை' இனை நான் இன்னும் வாசிக்கவில்லை; அதனாலே, நூல் குறித்து வாசகனாகச் சொந்தக்கருத்துச் சொல்ல எனக்கு இக்கணத்திலே ஏதுமில்லை. சொல்வதெல்லாம், ரூமியின் புத்தகப்பார்வை குறித்த என் கோணற்/ப்பார்வைவழிப்பட்டதே.
2. இவரின் இஜாக விமர்சனத்தினை வாசிக்கமுன்னாலேயே, சல்மா குறித்தும் ரூமி குறித்தும் எனக்கு இன்னார் இப்படித்தான் எழுதுவார், எதிர்வினைப்பாரென்று அழுத்தி குத்திக் கொங்கிறீட் போட்டமாதிரியான நிலைப்படு பிம்பமுண்டு.
சல்மாவின் நூல் பற்றி ரூமியின் விமர்சனம் பார்த்த பின்னால், சல்மா பற்றிய பிம்பம் எனக்குள்ளே சற்று ஆடி நடுங்கித் தளும்பிப் போயிருக்கின்றது; ரூமியின் பிம்பம், இன்னும் உறுதியாய் உருக்காகியிருக்கிறது.
புதினம் பற்றிய ரூமியின் கருத்து, அண்மையிலே திவாகர் என்பவர் வெங்கடரமணனின் "குவாண்டம் கணிணி" நூல் பற்றி இந்திய ருடே இலே எழுதிய விமர்சனத்தை ஒத்ததாக இருக்கின்றது; புத்தகத்தை(யும் எழுதியவரையும்) விமர்சகர் என்ற சுதந்திரத்தோடு ஒரு வாங்கு வாங்கிவிடலாமென்ற திட்டத்துடனேயே வரிந்து கட்டிக்கொண்டு எழுதியதாக ஒரு தோற்றம்.
புதினம் குறித்து ரூமியின் முடிவின் சாராம்சத்தினை அவரின் சொற்களிலேயே கேட்டால்,
இந்த கதையினூடே இரண்டு விதமான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அவற்றை சல்மா ஸ்பெஷல் என்று சொல்லலாம்: 1. போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம். 2. மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம். 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்பதால் இந்த இரண்டையும் ஜாமத்துக்கு ஒன்றாக வைத்துக்கொள்ளலாம
அவர் சாரம்சத்தினைத் தனது இந்தக்கதை குறித்த முடிவென்றே சொன்னாலும் இரண்டாங்கட்டக் கட்டுடைப்புக்கு நாங்கள் நகர்ந்துவிடலாம்; அவரோ ஒரு படி மேலே போய் குறித்த ஒரு புதினத்தின் முடிவிலே எழுத்தாளரின் எழுதுபண்புக்குறித்தொடையாக ஒரு பொதுக்கருத்தினைக் கட்டியெழுப்பி, "சல்மா ஸ்பெஷல்" என்று குருமா போட்டுவிடுகிறார். இதனாலே நமக்குத் தெரிவதென்னவென்றால், சல்மாவின் முன்னைய படைப்புகள் குறித்தும் இவர் இதே கருத்தினைத்தான் கொண்டிருக்கின்றார். மூடிய நம்பிக்கை கொண்டவரென்றும் தன்னைத் தானே சொல்லியிருப்பதாலே, இது குறித்து நாங்கள் ஆச்சரியப்படத்தேவையில்லை; ஆனாலும், இப்புதினத்தை வாசிக்கும்போது, மூடியைக் கொஞ்சம் திறந்து வைத்துக்கொண்டு, வாசித்திருக்கலாமே, விமர்சித்திருக்கலாமேயென்ற ஆதங்கம் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இப்போது, இவர்கூறும், "போலித்தனமான பெண்ணியக் குரல். துணிச்சல் என்ற போர்வையில் வெளிப்படுத்தப்படும் வக்கிரங்களும் இதில் அடக்கம்" பற்றி;
நிச்சயமாகப் போலித்தனமான பெண்ணியக்குரல்கள் படைப்புலகத்திலே ஆண்கள், பெண்கள் இரு சாராரினாலும் பல காரணங்களுக்காக எழுதப்பட்டு வரவே செய்கின்றன; சல்மாவின் புதினத்தினை ரூமி எடுத்துச் சொல்வது தவிர்த்து நான் முழுமையாக வாசிக்கவில்லையாதலால், இப்புதினம் எப்படியானதென்பது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப்போலித்தனமான பெண்ணியக்குரல் எழுவதிலே துணிச்சலென்ற போர்வையிலே வெளிப்படுத்தும் வக்கிரங்களும் அடங்குமென்கிறார்; ஜெயமோகனின் கன்னியாகுமரி சொல்லாத வக்கிரங்களை கதை பண்ணும் வக்கிரத்துக்காவே சல்மா சொல்லியிருக்கின்றாரா என்று யோசித்தால், கதையிலே சொல்லப்படும் வக்கிரங்கள் குறித்து, ரூமி தெரிந்தெடுத்து ஒரு பட்டியல் போட்டிருக்கின்றார்.
அந்தப்பட்டியலைப் பார்க்கும்போது, கே. டானியலின் 'பஞ்சமர்' புதினத்துக்கு வெளிவந்ததாக வாசித்த எதிர்மறைக்கருத்து ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகின்றது; "சாதிமான்களின் பெண்களெல்லாம் பஞ்சம ஆண்களுக்காகத் துடிக்கின்றார்கள்; கள்ளமாக உறவு கொள்கின்றார்கள் என்பது போல டானியல் கதை எழுதியிருக்கின்றார்." ஒரு விதத்திலே பார்த்தால், புதினம் என்பது குறித்த சம்பவங்களைத் தேர்ந்து தம்முள்ளுள்ளே உள்ளிழையத் தொடர்போடு தொகுத்துத் தருவதுதான்; சம்பங்களைத் தேர்ந்தெடுப்பதென்னும்போது, வெள்ளைத்தளத்திலே கறுப்புப்புள்ளிகளைத் தேரும் விகாரப்படுத்தலுடனான தேர்வாகத்தான் முடியும். சமூகத்தின் முழுக்குறுக்குவெட்டினையும் பிரதிபலிக்கும் மாந்தர்களை, நிகழ்வுகளை, கதையிலே சொல்வது எப்போதும் சாத்தியமாகாது. ஒரு மனிதனின் இயல்பிலே நல்லதும் கெட்டதும் கலந்திருக்குமென்பதைக்கூட அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இஸ்லாமிய ராமராஜ்யம் (sic) ஒன்றிலே சல்மா கதை படைக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றாரோ என்பதாகவும் ஐயமெழுகின்றது. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசத்தாயினைமட்டுமே சாத்தியமானவளென எண்ணிப் பரவசமடையும் அவருக்கு, தென்னாசியாவிலே நிகழுவதாக நாம் அடிக்கடி வாசிக்கும் "கௌரவத்துக்கான (பெண்)கொலை"களை ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். மனிதர்களெல்லோரும் ஒரு வகைப்பட்டவர்களில்லை. அக்கினிப்பிரவேசத்தாய்க்கிருக்கும் சாத்தியம் கௌரவகொலை செய்யும் தாய்க்குமுண்டு. சல்மாவினை கருத்தினை மறுத்து, ரூமி சொல்ல/செய்ய முயல்வது தாய்மை (பேசப்படும் பெண்மாந்தர்கள் எல்லோரும் தாய்களில்லாதபோதிலே திரைப்படங்களிலே எதுகைமோனைக்குப் பயன்படும் "பெண்மை" என்ற பதத்தை இங்கே கொள்வதிலே தவறில்லை) என்ற திரு(கு)நிலைப்படுத்தலூடாக, பெண் என்பவளின் இயல்புகளை, அவர் விழையும் விதத்திலே தன் நம்பிக்கைக்கட்டுக்குள்ளே அடக்கமுயல்வதுதான். மறுபுறத்தில், இவற்றுக்கு மாற்றான பாத்திரங்களை விதந்தோத்தக்கூடிய சம்பவங்களையும் மாந்தர்களின் சமூக நெறிக்கோவையின்படி நல்லதென வரையறுக்கப்பட்ட இயல்புகளையும் ஓரிரண்டு முன்வைக்கும்போது, அவை சப்பைக்கட்டுகளாக ரூமிக்குத் தோன்றுகின்றன.
சாத்தியமில்லாத சில சம்பவங்கள் கதையிலே சொல்லப்படுவது குறித்து ரூமி சுட்டியிருப்பதிலே உண்மைகூட இருக்கலாம்; முற்றாக மறுக்கமுடியாது; முஸ்லீம் வாசகர்களுக்குமப்பாலான வாசகவட்டத்தின் விரிவு கருதி, சல்மா தானறிய நடந்திருக்கமுடியாத, அல்லது நடந்தவற்றினை உருப்பெருக்கி ("பலான திரைப்படம்" குறித்த சம்பவம்) சிலவற்றினையும் சேர்த்துப் பொய்யான தன்மையைக் கொடுத்திருக்கலாம். இவ்வகைப்பட்டு இந்திய வாசகர்களைக் கருத்திலே கொண்டெழுதும் ஈழத்து எழுத்தாளர் தொடக்கம் புலம்பெயர்ந்தாரைக் கருத்திலே கொண்டு படம் சமைக்கும் கோடம்பாக்கக்காரர்கள்வரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், அந்நிலையிலேகூட, சல்மாவின் புதினத்தின் மீதிச்சம்பவங்களை நிராகரிக்க முடியாதென்றே படுகின்றது; தமிழக முஸ்லீங்கள் குறித்து கடந்த பத்திருபதாண்டுகளிலே வந்த புதினங்களிலே, தோப்பில் மீரானின் 'கூனந்தோப்பு', 'துறைமுகம்' என்பன குறிப்பிடத்தக்கன. அவற்றினை எடுத்தாற்கூட, அவற்றிலும் சல்மா புனைந்த களத்துக்கும் சம்பவங்களுக்கும் மாந்தருக்கும் சமனான கூறுகளைக் காணலாம். அந்நிலையிலே, சொல்லப்படும் கருத்தினையும் சொல்கின்றவரையும் குறித்து, போலித்தனமான பெண்ணியக்குரலென்றோ, வக்கிரமென்றோ அல்லது 'சல்மா ஸ்பெஷல்' என்றோ ரூமி தட்டிவிட்டுப்போவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.
இரண்டாவதாக இவர் வந்த முடிவு, "மதம் குறித்த சந்தேகங்களை, கேள்விகளாகவும், கிண்டலாகவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம்." இந்த முடிவினை வாசித்தபோது, Eco இன் "Der Name der Rose" இலே சிரிப்பதனை இறைக்கெதிரான பண்பென மறுதலித்துக் குற்றமாகக் கருதி குருமடத்து நூலக நூல்களிலே விஷம் தடவி வாசிப்பாரைக் கொலை செய்யும் மடப்பாதிரிதான் ஞாபகம் வந்தார்.
Jorge de Burgos: Laughter is a devilish whim which deforms, uh, the lineaments of the face and makes men look like monkeys.
William of Baskerville: Monkeys do not laugh. Laughter is particular to men.
Jorge de Burgos: As is sin. Christ never laughed.
William of Baskerville: Can we be so sure?
Jorge de Burgos: There is nothing in the Scriptures to say that he did.
William of Baskerville: And there's nothing in the Scriptures to say that he did not. Why, even the saints have been known to employ comedy, to ridicule the enemies of the Faith. For example, when the pagans plunged St. Maurice into the boiling water, he complained that his bath was too cold. The Sultan put his hand in... scalded himself.
ஒரு படைப்பாளி தன் சூழல் குறித்துத் தன் கருத்துச்சுதந்திரத்தோடு எந்தவித எழுத்து(ச்சு)த்தியோடும் தன் கருத்தினை வெளிப்படுத்தலாம். சல்மா இப்படியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்; இதிலே ரூமிக்கு எழுத்து உத்திதான் முக்கியமாகியிருக்கின்றதென்றால், அவர் கிறீஸ்துவுக்கு முன்னால், ஐந்தாம் நூற்றாண்டிலே Aristophanes இலிருந்து தனது அவதானத்தினை ஆரம்பிக்கவேண்டும். அரசியல்வாதிகளை விரும்பியவாறு பகிடி செய்கிறோம்; திரைப்படநடிகநடிகைகளை விரும்பியவாறு பகிடி செய்கிறோம்; மாற்றுச்சமூகத்தினரை இப்படியானவர்களென வரிச்சுக்கட்டி அடைத்துப் பகிடி பண்ணுகிறோம். அடுத்துப்படுத்திருக்கும் மனைவி பற்றியே "ஜோக்" அடிக்கின்றோம்; மதக்கருத்துகளுக்கும் மாதாக்களுக்கும்மட்டும் புனிதம் போட்டு பகிடிக்கு விலத்தப்பட்டதென வைக்கவேண்டுமென்பதென்ன நியாயம்?
இடையிலே ரூமி தன் விமர்சனத்திலே தனக்கு வரக்கூடிய எதிர்ப்புகளை எண்ணி எச்சரிக்கையாக ஒரு குண்டு துளைக்காக்கவசத்தினை மாட்டிக்கொள்கிறார்:
இத்தகையை கேள்விகளும் இதற்கான பதில்களும் பல முறை கேட்கப்பட்டு பதில்களும் சொல்லப்பட்டு நீர்த்துப் போயாச்சு. ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அதன் சட்டதிட்டங்கள் தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படிக் கேள்வி கேட்பதே முற்போக்கு என்றும் ஆதிக்கத்துக்கு எதிரான நியாயமான குரலென்றும் எழுத்தில் பதிவு செய்வது, அதுவும் சீரியஸாக அல்ல, ஒரு ஓரமாக, எந்த வகையில் சரி என்று எனக்கு விளங்கவில்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி ஈரான் போன்ற நாடுகளில் விபச்சாரம் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி ஏழைப் பெண்களை பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொலை செய்கிறார்கள். இதை எதிர்த்து என்றைக்காவது சல்மா போன்றவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா? (பார்க்க எனது கட்டுரை கற்காலம்).
கேள்விகளை எழுப்புதலுக்குப் பதில்கள் சொல்லப்பட்டு நீர்த்துப்போய்விட்டதென்கிறார்; (கேள்வி நீர்த்ததா, அல்லது, பதில் நீர்த்ததா என்பது இவரது வசனத்திலிருந்து தெளிவாகவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்) ஆனால், கேள்விகள் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையா? பதில்கள் மட்டுமே நடைமுறையிலே தீர்வாகாது; நாளாந்த வாழ்க்கையிலே தீர்வு ஏற்படும்வரை கேள்விகள் ஒரேதன்மையானவை என்றாலுங்கூட எழுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதேபோல படைப்புகளிலே கேள்விகளெழுப்புவதை "முற்போக்கென்றோ ஆதிக்கத்துக்கு எதிரான குரலென்றோ எழுத்திலே பதிவு செய்வதைச் சிலாகிப்பது" ஓர் ஆர்ப்பாட்டமும் அதீத வேஷமும் கொண்ட ஆடம்பர அவலமாகத் தமிழ்ப்படைப்புலகிலே காணக்கூடியதாகவிருக்கின்றது என்பதை பெருமளவுக்கு நாம் ஒத்துக்கொள்ளலாம் (இத்தருணத்திலே, தமிழ்ப்படைப்புலகின் நூல்களின் அறிமுகவுரைகளிலே, தன் நண்பர்களின் நூல்களுக்கான விமர்சனங்களிலே புத்தகவெளியீட்டுவிழாக்களிலே, எழுத்தாளர்களைப் பாராட்டி இதேவகையான முற்போக்குப்பதங்களை, அமெரிக்காவிலே, "Great" என்று பயன்படுத்துவதற்கீடான சொற்களை, "சல்லிக்கு ரெண்டு சொல்லு" என ரூமி அள்ளி வழங்குகின்ற பொய்மை கொண்டவரில்லை என்றே நம்புவோம்). தனிப்பட சல்மா குறித்தும் அப்படியாகவே உயர்வுநவிற்சியாய் விதந்தோத்தி, ரவிக்குமார் சொல்லியிருப்பதாகவும் வைத்துக்கொள்வோம்; ஆனால், அதற்காகமட்டும் ரூமி, "அதெல்லாம் இவர்களுக்கு முக்கியம் அல்ல. பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்" என்றெழுதுவது இவரின் கற்பனை வளர்ச்சியையோ வரட்சியையோ காட்டுவதாக மட்டுமல்ல, அவர் சுட்ட விழைவதுபோல, பெண்களை மதிக்கின்ற முன்மாதிரியாகவும் ("மோகமுள்" அதைச் செய்ததா என்பதை அம்பை, கோ. ராஜாராம், வாசித்தவர்கள் கருத்துக்கு விட்டுவிடுவோம்) தெரியவில்லை. அப்பாவி ஏழைப்பெண்ணைக விபசாரியெனக் கல்லாலடிப்பதற்கும் "பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான்" என்றெழுதித் தன் நம்பிக்கைக்கு மாறான கருத்துள்ள பெண்ணெழுத்தாளரைச் சொல்லாலடிப்பதற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை.
சல்மா வேண்டுமென்றே எழுதியிருக்கின்றாரா என்று ரூமியின் விமர்சனத்தினை மட்டும் வைத்துக்கொண்டு எனக்கேதும் சொல்லமுடியாது; சல்மா குறித்து மட்டுமல்ல, பெரும்பாலான பெண் கவிஞர்கள் குறித்து எனக்கும் ஓர் ஆதங்கம் ஓரமாகவிருந்தது (சிலர் குறித்து இன்னமுமிருக்கின்றது); பெண்களின் துயரங்களைக் குறித்து - குறிப்பாக, ஆண்களைச் சாடி- எழுதுகிற இவர்களிலே எத்தனை பேர் மெய்யாகவே தமக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டோ அல்லது தமக்கு வாய்ப்பிருக்கும் சந்தர்ப்பங்களிலோ அத்துயரங்கள் குறித்து எதிர்நடவடிக்கைகளாக எதனையேனும் நடைமுறையிலே செயற்படுத்தியிருக்கின்றார்கள் என்பதே அதுவாகும். அச்சிலும் இணையத்திலும் உற்பத்தியாகும் வெறும் கவிதையும் கதையும் கட்டுரையும் மட்டுமே எதையும் சாதித்துவிடமுடியுமென நான் நம்பவில்லை.
ஆனால், ஒரு படைப்பினை விமர்சிக்கும்போது, இரண்டு வழிமுறைகளிலே வாசிக்க/விமர்சிக்க வாய்ப்புண்டு; ஒன்று, எழுத்தாளரினையும் படைப்பு சம்பந்தமான எழுதப்பட்ட காலம், சூழல் போன்ற புறச்சூழல்களை முழுக்க எண்ணத்திலிருந்து உரித்து ஒதுக்கிவைத்து, படைப்பினை மட்டுமே முன்னெடுத்துக்கொண்டு, அதன் ஆழம் அகலத்தினை வெளிப்படையான கருத்து, சூட்சுமசொற்பயன்பாடுகளினை வைத்துப் பார்ப்பது; மற்றது, படைப்பாளியின் தனியாள் பண்புகளையும் ஆளுமையையும் படைப்பின் புறச்சூழல்களையும் உள்வாங்கிப் படைப்பினை வாசித்தல். இரண்டு நிலைகளிலுமே வாசகர் தன் நிறுவப்பட்ட நம்பிக்கைக்கோவையை விலத்தி வைத்துவிட்டு வாசிக்கமுடியாதுபோனாலுங்கூட, நிச்சயமாக, ஒரு படைப்புக்கு இந்த இரு விதமான விமர்சகர்களும் (அதாவது, வாசகர்களும்) இருக்கவே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களிலே இந்த இரண்டு பார்வைகளூடாகவும் காணப்படுகின்றவை ஒத்திருக்க வாய்ப்பிருக்காது; ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளுக்கும் படைப்பாளிகள் குறித்து மாறுபட்ட கருத்துகளுக்கும் வர வாய்ப்பிருக்கின்றன.
அந்த வகையிலே, படைப்பையும் படைப்பாளியையும் சேர்த்துப்படிக்கும் இரண்டாம்வகை விமர்சகராக, சல்மா குறித்தும் அவரது சகோதரர் மனுஷ்யபுத்திரன் குறித்தும் அறிந்திருக்கும் ரூமிக்கு சல்மா குறித்து அவருடைய சொந்தவாழ்க்கை குறித்தும் சொல்லக் எதிர்மறையான கருத்திருக்கலாம்; (சல்மா மனுஷ்யபுத்திரன் சகோதரி என்பது காரணமாகவும் கனிமொழி கருணாநிதி புதல்வி என்பது காரணமாகவுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்களென்ற கருத்து என்னிடமும் இருந்ததென்பதை இங்கே சுட்டிவிடுகிறேன்; சல்மா சில ஆண்டுகளுக்கு முன்னால், இலங்கைக்கு முஸ்லீம் பெண்கள் மகாநாடு ஒன்றுக்குப் போனபோது சேரன் தனக்குச் சொன்னதை வைத்தே இலங்கைநிலை குறித்துப் பார்த்தவிதத்திலும் எனக்கு முரணுண்டு; ஆனால், அவை இப்படைப்புக்கு அப்பாற்பட்ட புறக்காரணிகள்; அதனால், அவர் இலங்கை குறித்துக் கவிதையோ கதையோ எழுதாதவரை அவருடைய படைப்பினைக் குறித்து என் பார்வை இப்புறக்காரணிகளை உள்வாங்கி இருக்க வாய்ப்பில்லை.) ரூமியின் இவ்வெதிர்க்கருத்தினை நியாயமென்றே கொள்வோம். ஆனால், சல்மாவின் படைப்பினை அத்தியாவசியமற்ற தோல்வியான அழுகிய முட்டை என்று சொல்லுமளவுக்கு இப்புறக்காரணி மட்டும் போதாது; அதைத் தீர்மானிப்பவை இரண்டு: ஒன்று, நடைமுறையிலே, சல்மா சொன்ன பிரச்சனைகள் (கேள்விகள்) இன்னும் எதிர்நோக்கப்படுகின்றதா என்பதும் அவற்றுக்கான தீர்வுகள் (நடைமுறைப்படுத்தப்படும் பதில்கள்) எந்நிலையிலே சாத்தியப்பட்டிருக்கின்றன என்பதும்; இரண்டாவது, இந்தப்பிரச்சனைகள் குறித்த பின்புலத்திலே எழுதப்பட்ட முன்னைய படைப்புகளிலும்விட, சல்மா எந்தவளவுக்கு தன்னைத் தனித்துக்காட்டும்விதமாகப் படைப்பினைத் தந்திருக்கின்றாரென்பது.
உயிர்களின் தோற்றம் குறித்து, அறிவியலாளர் "குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன்" என அணுகும் விதத்துக்கும் சமயவாதி "ஆண்டவன் படைத்தான் எங்கிட்டே கொடுத்தான்" என்று அணுகும் விதத்துக்கும் வித்தியாசமுண்டு. எது சரி பிழையென்பது இருக்கட்டும்; ஆனால், அவை குறித்து புதிய சிந்தனைகளும் கருத்துவிரிவாக்கத்துடனும் விவாதிக்கப்படக்கூடாதெனச் சொல்லமுடியுமா? அப்படியாகவிருந்திருந்தால், இன்றைக்குச் சமயவாதிகள் இன்னொரு புதுக்கருத்தோடு வந்திருக்கமுடியாது. இது போலத்தான் ரூமி கேட்கப்பட்ட கேள்விகள்- சொல்லப்பட்ட தீர்வுகள் பற்றிச் சொல்வதற்கும் பதில் சொல்ல முடியும். சரி, ரூமி சுட்டிச்சொல்லும் கேள்விகள் தீர்வுகள் சொல்லப்பட்டவைதானென்றே வைத்துக்கொள்ளலாம்; ஆனால், தீர்வினை யாரோ எந்த மதநூலிலேயோ கட்டுரையிலேயோ சொல்லியிருக்கின்றாரென்பதற்காக மட்டும், ஒரு கதையின் பாத்திரங்கள் இயல்பாகப் பேசாமல், வெட்டிவைத்துவிட்டுப் பேசாமற் போக எல்லா நிலைகளிலும் முடியுமா? வேண்டுமானால், அதைத் தவிர்க்கும் விதத்திலும் சொல்லும் உத்தியிலும் படைப்பாளி தோற்றிருக்கின்றார் வென்றிருக்கின்றாரென்று நாம் பேசலாம்; அதை விட்டுவிட்டு, இந்தக்கேள்விகளுக்குப் பதில் ஏற்கனவேயுண்டு என்ற விதத்திலே, ஒரு மார்க்க அறிஞர் பேசலாம், ஆனால், ஓர் இலக்கியத்திறனாய்வாளர் பேசலாமா? அப்படியாக பதில் சொல்லப்பட்டது குறித்துப் பேசக்கூடாதென்றால், இத்தனை மதங்கள் தோன்றியிருக்க வாய்ப்பில்லை; செமித்தியமதம் ஒன்றேயொன்றாகவே இருந்திருக்கும்; 'ஆலம் ஆரா" இன் பிறகு காதல் குறித்து ஓர் இந்தியப்படமுமே வந்திருக்கவாய்ப்பில்லை. இலக்கியத்திறனாய்வாளர் இந்த வகையிலே அணுகுதல் எவ்விதத்திலும் நேர்மையாகத் தோன்றவில்லை.
நிறையப்பேர், பின் - நவீனத்துவமென்பது, ஒரு குறித்த ஆண்டிலே குறித்த மனிதரூடாகத் தோன்றிய ஒற்றைக்கூறான கொள்கை வடிவமென்ற தோரணையிலே பேசிக்கொண்டிருக்கின்றார்களென்றால், மீதிப்பேருக்கு, இப்போதெல்லாம் அதை வரையறை செய்வது, தொடரங்காடியிலே தள்ளுவண்டியிலே அள்ளிப்போடும் அனைத்துப் பண்டங்களினதும் தொகுப்பாகிவிட்டது; அவரவர் வண்டிக்கு அவரவர் பட்டியலும் பண்டங்களும். ஆனால், "இது(மட்டுந்)தாண்டா பின் - நவீனத்துவம்" என்று தன் இரவுக்கனாப்பட்டியலை மட்டும் அச்சடித்துக் கடைவாசலிலே நின்று உள்ளே போகும் அத்தனை பேரிடமும் கொடுப்பது, தமிழிலக்கிய உலகத்திலே கொஞ்சக்காலமாக தொண்ணூறுகளின் பின்னரையிலே நடந்த விடயம் (காண்க: நடந்த விடயமென்றுதான் நினைத்திருந்தேன்; இப்போதும் நடக்கின்றதென்பதை, ரூமி ரவிக்குமார் சொல்வதாகக் குறித்திருப்பதிலிருந்து அறிந்து கொண்டேன்). வெறும் சொற்களை வைத்துக்கொண்டு வெருட்டுவதெல்லாம் ஆயதமிழ்க்கலைகளிலே அறுபத்தைந்தாவதான, சமகாலப்படைப்பிலக்கியக்கலையின் சாப்பாட்டிலையிலே அடக்கம். ஒளித்து மறைத்து வாசிக்காத சஞ்சிகை, பத்திரிகைகளிலே, படங்களிலே கழிவுறுப்புகளையும், பாலுறுப்புகளையும் அதுசார் உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் சொட்டிவிட்டால், இடக்கரடக்கல் இல்லாத எதையுமே பின் - நவீனத்துவம் என்று வகைப்படுத்துதலும் அதை படைப்புத்துறைமுன்னெடுப்பென்றும் இலக்கியக்கெடுதலென்றும் ஆளாளின் விருப்புவெறுப்புக்கேற்ப தூக்கியும் தாழ்த்தியும் பிடித்துக்கொள்வது அநியாயம்.
சங்க இலக்கியங்களிலே அல்குல், கொங்கை என்று சொல்லப்படுவது அக்காலத்திலே வெட்கக்கேடாக இருந்திருக்குமா? (நான் வாசித்த அளவிலே ஆணுறுப்பினைப் பற்றி எங்கும் பேசப்பட்டதாது பண்டைத்தமிழ்க்குமுகாயம் ஆணாதிக்கம் மிக்கதாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாக உறுத்தவே செய்கிறது) பின்-நவீனத்துவம் தமிழிலே விரியப் பேசப்படாத காலத்துக்கு முன்னரே, 'குருதிமலை' புதினத்திலே வேலைசெய்யாப்போராட்டம் நடத்துவதை எதிர்க்கும் ஒரு பாத்திரம் பேசும், "(தேயிலை கிள்ளும்) தொழிலுக்குப் போகாமலிருந்தால், நாளைக்கு யாருக்குக் குண்டி காயும்?" கோமல் சுவாமிநாதனின் (பாலசந்தர் திரைப்படமாக இயக்கிய) "தண்ணீர் தண்ணீர் தண்ணீர்" இலே ஒரு பாத்திரம் கேட்கும், "குண்டி கழுவவே தண்ணீரில்லை." பாலுமகேந்திராவின் வீடு படத்திலே அர்ச்சனாவிடம் ஏமாற்றிய கட்டிடக்காரர் குறித்து ஒரு பாத்திரம் ஆத்திரத்தோடு பேசும், "விட்டுத்தள்ளும்மா; அவன் உன்னோட ஒரு பீக்கட்டிக்குச் சமனாவானா?" அல்லது, ஆதவனின் காகிதமலர்கள் தொட்டிருக்கும் சில பிரச்சனைகளின் (தாய்-மகன் இடையான உணர்வு) தன்மை; இந்தப்படைப்புகளிலே வாசகர், பார்வையாளர் எவருமே இது குறித்து இடக்கரடக்கலில்லாத படைப்பென முறையிட்டுக்கொண்டிருக்கவில்லை; சொல்லப்போனால், இந்தப்பதங்களில்லாவிட்டிருந்தால், அந்தப்படைப்புகளின் வீரியம் வெளிப்படாமல் ஸ்கலிதமாகியிருக்கும் ;-) மிகவும் சிறப்பாக, இப்படியான சொற்களைப் பயன்படுத்திய படைப்புகளாக, ஷோபா சக்தியின் "கொரில்லா", ராஜ்கௌதமனின் "சிலுவைராஜ் சரித்திரம்", பாமாவின் "கருக்கு", "சங்கதி" ஆகியவறினைச் சொல்லலாம். அவர்கள் இடக்கரடக்கல் இல்லாமலே நடைமுறையிலே புழங்கு சொற்களைப் பயன்படுத்திய விதமும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் மிகவும் கச்சிதமாகவுமிருந்தன; அங்கே ஆபாசமும் அசிங்கமும் உதட்டைத் துருத்தி எட்டிப்பாக்கும் தெத்திப்பற்களாகத் தோன்றவில்லை; வெறுமனே கதையை வலுப்படுத்தும் அவசியமே தெரிந்தது. (அமெரிக்காவிலும் இதே நிலைதான் இருந்திருக்கின்றது. "All in the Family" வரும் காலம் வரைக்கும் தொலைக்காட்சியிலே கழிப்பறை என்பது குறித்துப் பேசுவதென்பதே நினைத்துப் பார்க்கமுடியாததாம்; ஆனால், இந்தத்தொலைக்காட்சித்தொடரிலே கழிப்பறையிலே ஆணும் பெண்ணும் நடந்து கொள்ளும் விதத்தினைச் சுட்டிப் பேசுவதினை வைத்தே சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். "அந்நேரத்திலே பார்வையாளர்களும் அதனைப் பெரிது படுத்திச் சுட்டவில்லை; இயல்பான பிரச்சனையின் விவாதமென்றே கொண்டு போனார்கள்" என்று தயாரிப்பாளர் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னார்).
நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தவென்றே வரும் படைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை; சில சாருநிவேதிதாவின் படைப்புகள், ஷோபா சக்தியின் 'ம்', இருள்வெளியிலே வந்த ஐந்துபேர் கூட்டுப்புணர்தல் பற்றிய கதை (மகாபாரதக்கதை அல்ல) போன்றவற்றினை அவற்றுக்குள்ளே அடக்குவேன். பொருத்தமாக ஒரு படைப்பிலே/விமர்சனத்திலே ஒரு பதம் வருவதற்கும் அதிர்ச்சிக்காகத் திணிப்பதற்குமுள்ள வித்தியாசத்தினை இலகுவிலே கண்டுகொள்ளலாம்; உதாரணத்துக்கு, 'மன்மதன்' படத்துக்காக, "சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்" என எழுதினால், அது பக்கப்பக்கமான விமர்சனம் எழுதி அந்தப்படத்தினைக் கிழிப்பதிற்கும் மேலான விளக்கத்தினைத் தருகின்றது; அதே நேரத்திலே, "சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்" என ஐம்பது பதிவுகளின் பின்னூட்டங்களிலே 'மன்மதன்' ஐம்பதாவது நாளுக்காக போட்டுக்கொண்டு திரிவது அதிர்ச்சிக்காகவும் விளம்பரத்துக்காகவும் திணிப்பதாக மாறுகின்றது.
இங்கே கேள்வி, "சல்மாவின் கதையிலே பேசப்படவேண்டிய பிரச்சனைகளை, அதற்குரிய தொனியிலே, அதீதமின்றி, தேவையான பதங்களைப் பொருத்தமாகப் பயன்படுத்திப் பேசியிருக்கவில்லையா?" என்பதே? ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரமோ, பாமாவின் 'சங்கதி', 'கருக்கு' ஆகியன பயன்படுத்தாத விதத்திலே சல்மா பயன்படுத்தியிருக்கின்றாரா? இன்னும், இரா. முருகனின் அரசூர் வம்சம் குறித்துச் சிலாகித்து ரூமி எழுதியிருக்கின்றார்; அதிலே இராமு பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் / சம்பவங்கள் / செயற்பாடுகள் குறித்துச் சமாதானம் கொள்கிறார்/ சொல்கிறார் இவர்களைப்போலத்தான் பெருமளவில் சல்மாவும் பயன்படுத்தியிருக்கின்றாரென்றால், இராமுவுக்கு எதிராகவும் சல்மாவுக்கெதிராக வைத்த குற்றச்சாட்டுகளையொத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கவேண்டும், ராஜ்கௌதமன், பாமாவுக்குமெதிராகவும் அதேபோன்ற விமர்சனத்தினை முன்வைப்பாரா? (ரவிக்குமாரும் ராஜ்கௌதமனும் ஒரேமடத்திலேதான் வாயிற்காப்போராக இருக்கின்றார்களென்ற அபூர்வமான காரணமேதுமில்லாவிட்டால்). சல்மாவின் தொனி கதைக்கு ஆகாததெனில், அதைச் சுட்டும் விதம் வேறு; சாருநிவேதிதா குறித்த ரூமியின் ஆதங்கத்தோடு, "ஆனால் பைத்தியக்காரன் வழித்துக் காட்டுகிறான் என்றால் அதே போல செய்துகாட்டித்தான் அடுத்தவருக்குப் புரியவைக்க வேண்டும் என்ற நினைப்பை என்னவென்று சொல்வது? இதுதான் பின் நவீனத்துவமோ!" என்பது வேறு.
பொதுவிலே, முஸ்லீம் பெண்கள் எதைக் குறித்து (குறிப்பாக, இஸ்லாம் & முஸ்லீங்கள் சம்பந்தப்பட்டு) எப்படி எழுதவேண்டுமென்று தன் நம்பிக்கைகளை நியாயப்படுத்துவதாகவே (அல்லது நிர்ப்பந்தப்படுத்துவதாகவெனச் சொல்வோமா?) ரூமியின் சொற்கள் அறுத்துத் தெறித்து விழுந்திருக்கிறதாகத்தான் தோன்றுகிறது; அதிலுங்கூட, முஸ்லீம் பெண்ணாக இல்லாமல், தோப்பில் மீரான் போன்ற முஸ்லீம் ஆணாகவிருந்திருந்தால், சல்மாவுக்கெதிரான/ அவர் நூலுக்கெதிரான விமர்சனம் காட்டமாக வைக்கப்பட்டிருக்காதோ எனவும் ஐயமெழுகிறது (ரசூலுக்கு நிகழ்ந்தது வேறு; "ஏனொரு பெண்நபியில்லை வாப்பா?" என்று கேட்டது போலித்தனமான பெண்ணியக்கருத்தின் வழிப்பட்டிருக்கலாம்) . ஆங்கிலப்பேராசிரியரான ரூமி, பிறப்பாலேயோ வளர்ப்பாலேயோ முஸ்லீங்கள் அல்லாத காமம் குறித்துப் புனைகதை பதிந்த கமலா மார்க்கண்டேயா தொட்டு அண்மைய மேரி ஆன் மோஹன்ராஜ் வரையான பெண்பதிவுகள் குறித்து என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்தால், சல்மாவின் படைப்பினைக் குறித்து இவருடைய பார்வை இன்னும் எமக்குத் தெளிவாகலாம்.
ரவிக்குமார் குறித்த என்னிடமிருந்த பிம்பம் (சில நண்பர்களினது கருத்துகளுங்கூட) கலங்கிப்போய்விட்டது; நாற்சார்மடத்திலே சில சீடர்கள் அகல புதுச்சீடர்கள் சேர்ந்திருக்கின்றார்கள்; பீடத்துக்கு அருகாமையிலும் சேய்மையும் வந்தும் போய்க்கொண்டிருமிருக்கின்றார்கள்; ரவிக்குமார் சிறந்த துவாரபாலகராயிருக்கின்றதாகவே தோன்றுகின்றது; ("பிள்ளைகெடுத்தான் விளை" குற்றக்குறளிகள் நுழையாமற் காத்ததினைப் பார்க்கவேண்டுமே). ஆனால், சல்மாவின் விமர்சனத்துக்கு "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி இமயமலையில் உச்சியின் சல்மாவை வைப்பதற்கு ரவிக்குமாரின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என்று ரூமி எழுதுவாரென்றால், இதேபோல, மனுஷ்யபுத்திரனுக்காக இத்துணை ரூமி கவலைப்படக்காரணமென்னவென இன்னொரு விதண்டாவாத ஆராய்ச்சியின் முடிவு, "நல்லது. எனது நோக்கம் இலக்கியம் மட்டுமே. இப்படி மரியானா அகழியின் ஆழத்தில் சல்மாவை வைப்பதற்கு ரூமியின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை" என சல்மாவின் புதினம் குறித்த ரூமியின் இவ்விமர்சனத்தினை வாசிப்பவர் எழுதுவதிலே முடிவடையும். ஆனால், இவையெல்லாம் தேவையில்லாத கேள்விகளெனத் தோன்றுகின்றன; தமிழ்ப்படைப்புலக விமர்சனங்களிலே, வெளியீட்டுவிழாக்களிலே, அணிந்துரை, முகவுரை ஆகியவற்றிலே இருக்கும் கோளாறெல்லாம், படைப்பை விட்டுவிட்டு, படைத்தவனையும் படைப்புக்குப் பங்களித்தாரையும் அதீதமாகத் தூக்கிப்பிடித்துக்கொள்ளும் நோயின் குணம்வழிப்பட்டதெனவே தோன்றுகின்றது.
"காலியிடத்தில் ஒரு அழுகின கோழி முட்டை" என்பது சரிதான்; யார்/எங்கே 'காலி' என்பதுதான் குழப்பமாகிறது :-(
"Facts are stubborn things, and whatever may be our wishes, our inclinations, or the dictates of our passions, they cannot alter the state of facts and evidences." - John Adams
'05 ஓகஸ்ற், 26 வெள்ளி. 18:34
பி.கு.; எழுதியதை, வாசிப்பின் இலகு எண்ணிப் பிரித்தது கழித்துக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து சீர்படுத்த முயன்றாலும், அஃது ஆகிற காரியமாகத் தெரியவில்லையாதலால், அப்படியே தொக்கவிட்டிருப்பதற்கு மன்னிக்கவும். "புரிகிறமாதிரி எழுதவும்",, "அகராதி தரவும்" போன்ற புண்ணிய பின்னூட்டங்களை எழுதத் தனியே ஒரு பின்னூட்டப்புத்தகம் வருங்காலத்திலே சேர்ப்பேனென இத்தால் உறுதிப்படுத்துகிறேன். :)
கணம் - 476
காலக்குருதி மெல்லத் துளை
காலிடைச் சிந்தத் தள்ளும்
செயல் பொறுக்கிப் பாதம்,
தக்கிட, தடக்கித் தக்கிட,
நடை.
அள்ளும் காற்று; கொல்லும் வெயில்;
வெள்ளம் மழை; எல்லாம் சமமாம்.
கணம் தரியான், நாளெல்லாம்
நசிகின்ற சனங்களுள் நெரியக்
கசியும் ஊனாய்க் கலக்கின்றான்.
நேரென நிலையாக் கண்ணன்
தனைத் தின்னு பசியும் தின்று
ஆலென விரி திரிசடையில், நினைவு
ஆர் தேடியலைவான் இவ்வண்?
சிறு பூனைக்கும் மணிகட்ட
பெரும் போக்குக்காட்டும்
அசலும் நகலும் அரைத்துக்
கைபிசை அழுக்கு நகரிலே
எது தேடி அலைகிறான்
இத்தோட்டி?
காத்து ரயில் பார்த்த காரிராப்
பொழுதொன்றில், மூசி விரை
கடப்பான் முணுமுணுத்தான்,
"எட்டி ஆள் நடக்க
எத்துணை இடமிருக்க
எதற்காய்த் தரிப்பான்
இத்தனை நாள்?"
தனக்கா சொன்னான்?
'05 ஓகஸ்ற், 26 வெள்ளி 14:35 கிநிநே.
Thursday, August 25, 2005
படிவு - 12
ஒவ்வொரு நாட்டின் அரசியலும் ஒவ்வொரு மாதிரி; ஈராக், இலங்கை அரசியல்கள், சண்டைப்படம், வெஸ்ரேன் படம் பார்ப்பது மாதிரி; பாக்கிஸ்தானுடையது, புராணப்படம் பார்ப்பதுபோல; அந்த வகையிலே, துருக்கிஸ்தானுடையதைப் பார்த்துக்கொண்டிருந்தால், நகைச்சுவைப்படம் பார்ப்பதுபோலத் தோன்றுகின்றது. ஒரே நகைச்சுவை அளவுகோலை வைத்துக்கொண்டு பார்த்தால், துருக்கிஸ்தான் அரசியலுக்குச் சமானமான பகிடிக்காட்சிகள், அமெரிக்க கிறீஸ்துவப்போதகர்களின் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலே (அவற்றினை நான் செல்லமாக, "கொமடி ச(ன்)னல்கள்" என்று சொல்லிக்கொள்வதுண்டு) மட்டுமே கிட்டுமெனத் தோன்றுகிறது.
துருக்கிஸ்தான் அதிபர் நியாசோ கிட்டத்தட்ட, சோ. ராமசாமியின் முகமது பின் துக்ளக் நாடகத்திலே நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துக்ளக் போடும் சட்டக்கூத்துவகையிலே மெய்யாகவே நின்று நிருத்தியமாடுகின்றார். துக்ளக் செய்யும் கூத்துக்கள்போலவே (இந்தி-ஆங்கிலம் என்பவற்றுக்கிடையே தேசியமொழியேதெனப் பிரச்சனை வராமலிருக்கப். பாரசீகமொழியைத் தேசியமொழியாக்குவது, 'கிளிஜோஸ்யகாரி'யை அமைச்சராக்கி, கிளியைச் சட்டங்களைத் தேர்ந்தெடுக்கவிடுவது, "நான் அமெரிக்கா பார்க்கவேண்டாமா?" எனத் தன் அமெரிக்கப்பயணத்துக்கு ஒரு வாதம் வைப்பது, கர்நாடகாவுக்கும் மஹாராஷ்ராவுக்குமிடையேயான நிலப்பிரச்சனையைத் தீர்க்கச் சர்ச்சைக்குரிய நிலத்தினைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தல், தன் கட்சி அரசமைக்க வேண்டுமென்பதற்காக, கட்சியிலே சேரும் இருநூற்றுச்சொச்சம் பேரும் துணைப்பிரதமர்கள் என்று சொல்வது, ஆனால், அனைத்து 'இலாகா'களும் தன் வசமே இருக்குமென்பது) நியாசோவும் சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றார்; பெருநாடகங்களும் நிருத்தியங்களும் தடை செய்யப்படுகின்றன (அவுரங்கசீப்பை மிஞ்சிவிடுவார்); நீள்சடையும் தாடியும் தடைசெய்யப்படுகின்றன (ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என சனநாயகநாடுகள் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்); எல்லாப் பொதுவிடங்களிலும் ஒளியக்கண்காணிகள் (பீப்பிங்ரொம்ஸ், வொயேஜர்களுக்கு வேலையில்லாமற் போகின்றது); தலைநகர் தவிர்ந்த அனைத்துப்பகுதிகளிலும் வைத்தியசாலைகள் மூடப்படுகின்றன (அமெரிக்காவிலே மூடப்படும் இராணுவம்சார் தொழிற்றளங்களுக்காகக் கவலைப்படும் ஊர்மக்கள் பார்த்துத் தம்மைத்தானே தேற்றிக்கொள்ளலாம்); நாட்காட்டிகளிலே மாதங்கள் அதிபரின் பெயரிலும் அவர் அன்னை பெயரிலும் மாற்றப்படுகின்றன (அப்படியே ஜூலியஸ் சீஸர், ஒகஸ்டஸ் சீஸர் உயரத்துக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார்)... எல்லாவற்றுக்கும் மேலாக, விழாக்களிலும் வைபவங்களிலும் இசையைப் பதிவு செய்து ஒலித்தட்டாகப் போடுவது தடைசெய்யப்படுகின்றது (அம்மணி ஆல்ஸி ஸிம்ஸன் இப்போதைக்கு துருக்கிஸ்தானிலே இசைநிகழ்ச்சி நடத்துவது குறித்து எண்ணிப் பார்க்கத்தேவையில்லை).
தன் அத்தனை நிர்ணயங்களுக்குமான அவரது நியாயம்: "அந்நியப்பண்பாடு ஊருடுவிவிடும்" (இப்போது, இதுதான் சாட்டென்று அன்புமணியையும் ராமதாஸையும் வழமையான வம்புமணிகள் லாஸு லாஸு என்று சொற்சவுக்கெடுத்துச் சாத்துவார்கள்)
நியாசோவின் கூத்துக்களைப் பார்க்கும்போது, Z படத்தின் முடிவிலே நாட்டிலே இராணுவ அரசு தடைபோடும் சங்கதிகளின் பட்டியல்தான் ஞாபகம் வருகின்றது;peace movements, labor unions, mini skirts, long hair on men, Sophocles, Tolstoy, Aeschylus, strikes, Socrates, Ionesco, Sartre, the Beatles, Chekhov, Mark Twain, the bar association, sociology, Becket, the International Encyclopedia, the free press, modern and popular music, the new math, and the letter Z.
பாடப் பயந்தாலும்,உதடு விரித்துச் சிரிக்கக் கொடுத்த வைத்த துருக்கிஸ்தான் மக்கள். அதிபரின் இலவசக்கூத்தைப் பார்த்தாலே போதுமே; நாடகங்களும் நிருத்தியங்களும் காசு கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டுமா?
'05 ஓகஸ்ற், 25 வியா. 16:24 கிநிநே.
Tuesday, August 23, 2005
கணம் - 475
காயைக் கனியென்று விடாமல்
நிறுவிக்கொண்டிருப்பவனுக்கு
உதவ விரும்புவோனுக்கான
இரு துணைக்குறிப்புகள்:
அடித்துத் தடி கனிக்கலாம்; வெம்மைக்
குருதியில் ஆழ முக்கிக் கொடுக்கலாம்.
'05 ஓகஸ்ட், 23 செவ். 03:26 கிநிநே.
Wednesday, August 17, 2005
கந்தை - 35
Plurocrazy
.............................................
....................................
..........................
................
........
Monday, August 15, 2005
புலம் - 16
"அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்
துறை எனல் ஆயிற்று அன்றே? தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ! நீ, என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்
முறை அல செய்தான் என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்!"
- கம்பநாட்டாழ்வான், வாலிவதைப்படலம்
வரலாற்றினைப் பயன்படுத்துதல் குறித்து இரு சிக்கல்களைக் காணலாம்; ஒன்று, நிகழ்வுகளை வரலாறாகத் தொகுத்தவரின் விருப்புவெறுப்புகளூடாக உள்வாங்கிப் பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம்; இரண்டாவது, அந்த வரலாற்றினைச் சுட்டி, அதன் தொடர்ச்சியாக இன்றைய நடைமுறைச்சிக்கலை விளக்கமுயல்பவர், வரலாற்றினை ஆரம்பிக்கும் காலப்புள்ளி. உதாரணத்துக்கு, இந்தியா-ஈழம் தொடர்பான சிக்கலின் எளிமைப்படுத்தப்பட்ட கூறுகளைப் பார்ப்போம். ஈழத்தமிழர் ஒருவரின் வரலாற்றுக்கூற்றின்படி, பெரும்பாலான ஈழவிடுதலை இயக்கங்களுக்கு - பாக்கிஸ்தான் ஆதரவான ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகச் செயற்படும் நோக்கோடு- ஈழவிடுதலைக்கான இந்திய அரசு/அரசியல்வாதிகளின் ஆதரவும் அவர்களின் ஆசீர்வாதத்துடனான இந்திய ஆயுத உதவியும் பயிற்சியும் எண்பதுகளின் ஆரம்பங்களிலேயும், இந்தியாவின் ஈழத்தலையீடு மீதான வெறுப்பு/எதிர்ப்பு நிலைப்பாடு, இந்திய அமைதிப்படையின் ஈழத்தமிழர்மீதான அராஜகத்தோடு எண்பதுகளின் பின்பகுதியோடும் தொடங்குகின்றன. இந்தியத்தேசியவாதியொருவருக்கு, ஈழத்தமிழர்களின் மீதான இந்தியாவின் தன்னலமற்ற கருணை எண்பத்துமூன்றோடும் ஈழத்தேசியம்மீதான இந்தியாவின் எதிர்ப்புநிலையும் ஸ்ரீலங்கா அரசுக்கு வேண்டிய ஆதரவும் இராஜீவ் கொலைக்குப் பின்னாலும் தமிழ்நாட்டிலே ஆயுதக்கலாசாரம் தமிழீழவிடுதலைப்புலிகளாலும் தொடங்குகின்றன. பெரும்பாலான ஈழத்தமிழர்களின் வரலாற்றுப்படி, ஈழத்தமிழர்களின் நலத்துக்குப் புறம்பாகச் செயற்படுவதாகக் கருதப்படும் இலங்கைத் தமிழ்க்குழுக்கள், இந்தியத்தேசியவாதிகளினதும் ஸ்ரீலங்காதேசியவாதிகளினதும் வரலாற்றுப்படி ஈழத்தமிழர்களின் முறையான, மக்களாட்சியின் பிரதிநிதிகளாக முன்வைக்கப்படுகின்றனர். இப்படியான ஒரு விழிக்காகத்தின் 'வரலாற்றுப்பார்வை' இருக்கும்போது, ஏதோவொரு நாட்டின் நலனைத் தன்னலனோடு பிணைந்திருக்கக்கண்டு அதைப் பேணும்வகையிலே உளப்பாங்கும் உணர்திறனுங்கொண்ட எந்த மனிதனுமே நடுநிலையான பார்வை தனது என்றோ, தார்மீகத்தினை நிலைநாட்டப் போராடுகின்றேனென்றோ, அடுத்தவரின் நலனுக்காகத்தான் தனது கருத்தும் செயலும் இருக்கின்றனவென்றோ குரலெழுப்பி அடித்துப் பேசமுடியாது; அவ்வாறு பேசுவாராயின், அதைப் பொய்மை என்றே கருதமுடியும். சில சமயங்களிலே என் குரலும் இந்தப் பொய்மைக்குள்ளே அடங்கியிருக்கலாமென்பதை நான் மறுக்கப்போவதில்லை.
இதே மாதிரியான ஒற்றைப்பரிமாணக்குரல்களையே கதிர்காமரின் இறப்பின் பின்னாக, அநேக சந்தர்ப்பங்களிலே வரலாறு குறித்த எடுத்துக்காட்டுகளோடும் வருங்காலம் குறித்த எதிர்வினைகளோடும் கேட்கமுடிகின்றது. இந்தக்குரல்களை எழுப்புகின்றவர்கள், பல திசைகளிலிருந்தும் வருகின்றவர்கள்; இவர்களின் தன்னலங்கள், உள்நோக்குகள் குறித்து மிக இலகுவாக வகைப்படுத்தமுடியாது. ஆனால், கொன்றவர்களெனச் சந்தேகிக்கப்படுகின்றவர்கள்-கொல்லப்பட்டவரினது நிலைப்பாடு குறித்து இங்கே தேவைக்காக, இரண்டு வகைப்படுத்திக்கொள்வோம்:
அ. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்களும் கதிர்காமரின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களும் (கதிர்காமர் குறித்து எவ்வித அபிப்பிராயமுமற்ற, ஆனால், விடுதலைப்புலிகளை கண்மூடித்தனமாக வெறுப்பவர்களும் இதனுள் அடங்குவார்கள்).
ஆ. விடுதலைப்புலிகளின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களும் கதிர்காமரின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்களும் (விடுதலைப்புலிகள் குறித்து இயக்கம் சார்ந்த கண்மூடித்தனமான ஆதரவில்லாத, ஆனால், கதிர்காமரின் நிலைப்பாடு குறித்து மிகுந்த எதிர்நிலைப்பாடு உள்ளவர்களும் இதனுள் அடங்குவார்கள்);
முதலாவது வகையினரின் முக்கியவாதங்கள்
அ. விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு போவதற்காக, அரசினையும் அரசபடையினையும் கொதிப்படையும் செய்து எதிர்வினையாற்றத் தூண்டும் வண்ணமே கதிர்காமரைக் கொலை செய்திருக்கின்றனர். இவ்விதத்திலே, நடைமுறையிலிருக்கும் சமாதான ஒப்பந்தத்தை மீறியிருக்கின்றனர்.
ஆ. கதிர்காமர் உலகநாடுகளின் மதிப்பினைப் பெற்றவரும் விடுதலைப்புலிகளை வெவ்வேறு நாடுகளிலே தடைசெய்யும்விதமாக மிகவும் திறமையாகச் செயற்பட்டவருமாவார், ஏற்கனவே புலிகள், அவரினை சந்திரிகா குமாரணதுங்காவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாகச் சொல்லப்படும் நீலன் திருச்செல்வத்தினைக் கொன்றபோது, நீலனின் இடத்தினை இலக்ஸ்மன் திறமையாக நிரப்பினார்; இப்போது, அவரின் இடத்தினை இன்னொருவர் தமிழரென்ற முகத்தோடும் கிடைப்பது அரிது.
இ. புலிகள் உரிமைகோராதபோதுங்கூட, இராஜீவ் இனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, எதனையும் மறுப்பாகத் தெரிவிக்கவில்லை; அதுபோலவே, இப்போதும் மறுப்பு தெரிவிக்காமலிருக்கின்றார்கள்.
ஈ. இக்கொலையை இவ்விதத்திலே செய்யவேண்டுமென்றால், நெடுங்காலம் திட்டமிட்டிருக்கவேண்டும்; ஆகவே, விடுதலைப்புலிகள் நெடுங்காலமாகப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பத் திட்டமிட்டிருக்கவேண்டும்.
இரண்டாவது வகையினரின் முக்கியவாதங்கள்:
அ. கதிர்காமரைக் கொன்றது விடுதலைப்புலிகளென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால், சமாதான ஒப்பந்தத்தை மீற விடுதலைப்புலிகள் அரசினைத் தூண்டத்தான் இப்படியாக விடுதலைப்புலிகள் செயற்பட்டிருக்கின்றனர் எனச் சொல்லும் எந்த அதிகாரியோ ஊடகமோ சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து இதுவரைகாலம் இதே வகையிலே அரசபடையினரின் ஆதரவோடு துணைப்படையினராலும் ஆயுதக்குழுக்களாலும் அரச நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியிலே கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் பிராந்திய மேல்மட்ட உறுப்பினர்களான டிக்கான், பாவா, கௌசல்யன் போன்றோரது கொலைகள் குறித்து எதுவுமே கடிந்து பேசியதாகவோ அக்கொலைகள் சமாதான ஒப்பந்தத்தை முறிப்பதற்காக விடுதலைப்புலிகளைத் தூண்டும் நோக்கோடு செயற்பட்டதாகவோ குறிக்கவில்லை. இன்னும், அரச நிர்வாகப்பிரதேசத்துள்ளேயே அரசியற்பிரிவு விடுதலைப்புலிகளுக்குப் பாதுகாப்பினைத் தரமறுத்திருக்கின்றனர். இப்படியானவர்கள் இப்போது, தார்மீகமும் நடுநிலைமையும் பேசுவது, புலாலுண்ணாமை குறித்து ஓநாய் உரைநிகழ்த்துவதுபோலத்தான் இருக்கின்றது.
ஆ. கதிர்காமர் தமிழ்மக்களினால் மட்டுமல்ல, சிங்கள,முஸ்லீம் மக்களின் வாக்குகளாலேகூட பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை; அவர் சந்திரிகா அம்மையாரின் விருப்பின்பேரிலே, தேசியப்பட்டியலிலே பாராளுமன்றத்துக்கும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கும் சிங்களத்தேசியவாதச் செயற்பாடுகளை மறைத்துக்காட்ட, இன்றைய அவரின் இறப்பின் பின்னாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டப்படும் "ஒரு தமிழர்" என்ற அடையாளத்தினை மிகமுக்கியமாகக் காட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அவர் தமிழ்ப்பிரதேசங்களிலே வாழ்ந்த காலத்தின் அளவோ அவருக்குத் தெரிந்திருக்கக்கூடிய தமிழ்மொழியின் அளவோ அவரைத் தமிழரென்ற அடையாளத்துக்கே உரித்தாக்காது; அதன் மிக முக்கியமான வெளிப்பாடாக, பிறப்பால், கிறீஸ்துவத்தமிழர் என்று சுட்டிக்காட்டப்பட்டவர் முழுதான பௌத்த சிங்களவர் என்ற அடையாளத்தோடு எரிக்கப்பட்டத்தைக் காட்டலாம்.
இ. அரசுசார்பாக, அல்லது விடுதலைப்புலிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எவர் கொலை செய்யப்பட்டாலுங்கூட, உடனடியாக பழியினை எதுவித ஆதாரமுமின்றி விடுதலைப்புலிகள் மீது போடுவது ஈழப்பிரச்சனையிலே ஏதோவொரு காரணத்துக்கேனும் ஈடுபாடுள்ள விடுதலைப்புலிகளுக்கு/ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களுக்கு வழக்கமாகிவிட்டது; இதுபோலத்தான், இலலித் அத்துலத்முதலி கொல்லப்பட்டபோதும், விடுதலைப்புலிகள் மீது பழி போடப்பட்டது; ஆனால், பிறகு, அது கட்சிப்பிளவின் காரணமாக நிகழ்ந்ததெனத் தெரியவந்தது. இங்கேயும், அரசுக்குள்ளும் சிங்களப்பெரும்பான்மையுள்ளேயும் கதிர்காமருக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்கள் குறித்து எதுவிதமான சந்தேகமும் எழுப்பாதது நியாயமில்லை; உதாரணத்துக்கு சமாதான ஒப்பந்தக்காலத்திலேயே வன்னியிலே விடுதலைப்புலிகளின் மேல்மட்ட அங்கத்தவர்களிலே ஒருவரான கேர்ணல். சங்கர் இதே வகையிலே கொல்லப்பட்டபோது ஊருடுவித்தாக்கும் அரசபடையினரே செய்திருந்தனர் என்பதை அண்மைக்காலத்திலே அரசபத்திரிகைகளே அரசுள்ளான முரண்பாடுகள் காரணமாக வெளியிடவேண்டி வந்தது. அந்தவகையிலான ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல், எடுத்த வாக்கிலே, விடுதலைப்புலிகளெனக் குற்றம் சாட்டுவதிலே ஈடுபடுகின்றவர்கள் ஊடகங்களின் உள்நோக்கு என்ன?
ஈ.விடுதலைப்புலிகள் இயக்கம் இப்படியாக ஒரு கொலையைச் செய்ய நெடுங்காலம் திட்டமிட்டு, அதன் மூலம் சமாதான ஒப்பந்தத்தை முறிக்கத்திட்டமிட்டிருந்ததைக் காட்டியிருக்கின்றதென்றே கொள்வோம். அப்படியானால், இதற்கு இரண்டாண்டுகள் முன்னரே, சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகு, விடுதலைப்புலிகள் சார்பாக வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைகளுக்கும் போய்வந்த கேர்ணல். கருணா பிரிந்ததோ, அல்லது, அதன் பின்னால், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அரசபடையினரினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவோடு மட்டக்கிளப்பின் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றதும் சிங்களப்பிரதேசங்களிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துள்ளே வந்து தாக்குதல் அரசபடையினரின் ஆதரவோடு செய்துபோவதும் எவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருக்கப்படவேண்டும். இந்த நேரத்திலே தார்மீக, நடுநிலையான புத்திசீவிகளும் பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் மீதிநாட்டினரும் எங்கே தங்கள் புலன்களைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள்? மேலும், விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளிலே மிகவும் எதிர்நிலை எடுத்துநின்றவர்தான் கதிர்காமர்; அவர் இறப்பினாலே, உடனடியான பதட்டமிருக்குமென்றாலுங்கூட, நீண்டகாலநோக்கிலே, சமாதானத்தீர்வுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதென்றே கூறலாம்.
இந்த விதத்திலே இரு புறங்களிலும் ஒற்றைப்பரிமாண வரலாற்றுப்பார்வைகள் வைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, கூடவே விழைவுச்சிந்தைகளும் உள்ளிட்டு வருங்காலம் இரு சாரார்களாலும் எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வகையான பார்வைகள், வெளியிடும் ஊடகங்கள், ஆட்கள், வெளிப்படும் விதங்கள் ஆகியவற்றினைப் பொறுத்து ஆத்திரத்தினையோ எரிச்சலையோ கவலையையோ சிரிப்பினையோ மகிழ்ச்சியினையோ ஏற்படுத்துகின்றன. நான் எழுதியிருப்பதும் அவ்வாறே வாசிப்பவர்களைப் பொறுத்து ஏற்படுத்துமென்பதை அறிவேன். ;-)
'05 ஓகஸ்ற், 15 திங்கள் 23:46 கிநிநே.
கணம் - 474
எரிக்கும் வெயிலில்
எறிந்து கிடக்கிறது
நிழல் சிலுவை.
ஆடு மேய்ப்பர்கள் பேரில்
மேரி மக்தலேனா பேரில்
உருண்டு வரும் போகும்
மனிதச்சுமைமூட்டைகள்
மரமூட்டைத் தறிக்கும்
முதுகால் முதுகென்பால்.
தறித்து வெக்கை தகித்த
பசுமரத்தைப் பாவக்குருதி
ஒழுக்கித் தகைத்தார்; கழு
வலிக்கும் முள்முடிக்கும்
துளைந்த மூவாணிக்கும்
பாவச்சுமை பாய்ந்து.
இன்றைக்கு, நாள் மூன்றில்
ஆவி உயிர்த்தெழக் கல்வாரி
சேராது சரியச் செத்த சிலாகை
மரச்சிலுவைக்குத்தான் தேவை
சின்னதாயேனும் அஞ்சலிக்கவி,
அமைதி வழிபாடு, அடையாளம்;
வேண்டினால், கூட மூன்று
கூராணிகளுக்கும் குருதி
குத்துப்பட்டதற்காய் மேல்
முள்முடிக்கும் ஓரிரண்டு.
ஒவ்வொரு கைகூப்புக்கவிதைக்கும்
கரந்துண்டு ஒன்றுக்கு மேற்பட்டு
முளைமாற்றுக்கவிதை; எந்த கள
மாற்றுக்கவிதைக்கும் விதை சில
எதிர் மாற்றுக்கவிதை.
கொத்தித் தூக்குறு மேய்ப்பர்தம்
தொகைபாவம் சாய் சிலுவைதன்
பெருந்துக்கத்தைச் சேர்ந்திசையாய்
நாற்றிசையும் நாம் பாடுவோம், வா.
'05 ஓகஸ்ற், 15 திங். 15:11 கிநிநே.
Sunday, August 14, 2005
கந்தை - 34
Black-Out
.............................................
....................................
..........................
................
........
Friday, August 12, 2005
கந்தை - 33
Meteor Shower
மேலோட்டமாய்ச் செய்தி பார்த்தேன்; "Meteor Shower இன்று" என்றிருந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தேன்; நிர்மலமாய் அந்திவானம். "குறிப்பிட்ட நேரத்திலே பார்த்தால்மட்டுமே தெளிவாகத் தெரியும்" என்கிறார்கள். ஆனால், சொல்லும் வேளையிலே ஒன்று சந்திரவொளி மறைக்கின்றது; அல்லது, விண்கல்விழுகைகள் தாம் ஒளிசிந்த நாமிருக்கும் இடத்திலே நிகழ்வதாகத் தெரியவில்லை; சந்திரனும் மேகத்துள்ளே மறைந்து விண்கற்களும் ஒளிசிந்தப் பொழியுமென்றால், அந்நிகழ்வு ஏற்படும் வேளை அகாலவேளையாக எமக்கு இருக்கின்றது. எமக்கென்றால், நாம் இப்போதிருக்குமிடத்திலேயிருந்து விண்கல்விழுதலின் ஒளிச்சித்தை, சிந்தைக் காண்போமென்ற நம்பிக்கையில்லை. ஆனாலும், வால்வெள்ளிகளைக் காணவில்லை என்ற திருப்தியும் பெருவிண்கற்கள் நாமிருக்கும் வீட்டுக்கூரைகளைத் தாக்க வாய்ப்புக்குறைவென்ற நிகழ்தகவின் கணிப்புமே பெருநிம்மதியாக இருக்கின்றன.
வானொளிவாணவேடிக்கையும் வேண்டாம்; வால்வெள்ளிகள் வாசல்மேலாகப் பறந்து போகவும் வேண்டாமென்பதே எமது விழைவு. எரிந்தொழிந்து போகும் வால்வெள்ளிகளுக்காக நாம் ஒரு சொட்டுக்கண்ணீரும் சிந்தமுடியாது; சிந்த விழைவோருக்கும் எமது கண்ணீர்ப்பைகளை இரவல் கொடுக்கமுடியாது. ஆனாலும், ஒரு வால்வெள்ளியின் அழிவினை ஒளிசிந்தும் விண்கற்களின் விழுகைகளாகக் காட்டி, வால்வெள்ளிகளை விண்கற்களாக உருப்பெருக்கவும் உருத்திரிக்கவும்போகும் அறிவியலாளர்களின் புத்திசார்த்திட்டமிடுதல்களை எண்ணி அஞ்சுகிறோம்.
Monday, August 08, 2005
கணம் - 473
____________________________
_____________________________
ஓடுநாளில் எழுத,
ஒரு கவிதை!
வரி;
சொல்,
எழுத்து?
Thursday, August 04, 2005
படிவு - 11
இன்று செய்தியில் இரண்டு வினை-எதிர்வினையான தொடர்சம்பவங்கள்; ஒன்று, பாலஸ்தீனத்தில்; மற்றது, ஈழத்தில். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டு நாடுகளும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள். இரண்டிலும் ஆக்கிரமிப்பு இராணுவங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள், தாமும் தம்வேலைகளுமாக இருந்த அப்பாவிக்குடிமக்களைச் சுட்டுக்கொன்றிருக்கின்றார்கள்; கொன்றதற்கான காரணங்கள் இதுவரை இவைதானெனச் சரியாகச் சுட்டப்படவில்லை; வெறும் இனக்காழ்ப்புக்கூடக் காரணமாகவிருந்திருக்கலாம். அடுத்ததாக, இரு சம்பவங்களிலுமே, ஆக்கிரமிப்புப்படைகள் இவ்வெதேச்சையான கொலைகளைச் செய்த தம் படைவீரர்களை உடனடியாகக் காப்பாற்றியிருக்கின்றன. விளைவாக, இந்நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த அந்நிலத்துக்குரிய பூர்வீகமக்கள் கொதித்துப்போய், உடமைகளை எரித்தல் கொளுத்துதலுக்குமப்பால் மிக மூர்க்கமாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். பலஸ்தீனத்திலே, பாதுகாப்பாக வைக்கப்பட்ட யூத விடலை இராணுவவீரனை, இராணுவப்பாதுகாப்பினையும் மீறி உடைத்துக்கொண்டுபோய்க் கொன்றிருக்கின்றார்கள்; ஈழத்தில், நிகழ்வைப் பார்வையிட, சட்டத்தினை நிலைநாட்ட(வென்று சொல்லிக்கொண்டு) வந்த நகர்காவல் மேலதிகாரியினைக் கடத்திப்போய்க் கொன்றிருக்கின்றார்கள்.
"ஒரு கண்ணுக்கு இன்னொரு கண்ணென்பது பயனாகாது" என்பதை, காலகாலமாக மறைமுகமாக அழுத்தப்பட்டும் உடனடிச்சம்பவத்தினாலே நேரடியாகப் பாதிக்கப்பட்டும் ஆத்திரத்தின் உச்சத்திலே இருப்பவர்களுக்குச் சொல்வதிலே ஏதும் பயனிருக்குமென்றோ நியாயமிருக்குமென்றோ நான் நம்பவில்லை. ஆனால், இப்படியான, அநாவசியமான எதிர்வினைக்கொலைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயனளிக்கப்போவதில்லை; ஆக, தமக்கான பாதிப்பினைச் சுட்டிக்காட்டி அதன்மூலம் நியாயமான அனுதாபத்தினை மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் இழக்கின்றார்களென்றே தோன்றுகின்றது. இன்னுமொருபடி கீழேபோய், பாதிப்பினைச் செய்தவர்களுக்கும் தமக்கும் ஏதும் வித்தியாசமில்லையென்ற அபிப்பிராயத்தினைக்கூட வெளியுலகுக்கு ஏற்படுத்திவிடக்கூடும். எல்லாவற்றுக்கும்மேலாக, ஈழச்சம்பவத்திலே, சம்பந்தப்பட்ட நகர்காவலதிகாரி இச்சம்பவத்திலே குடிமக்களுக்கு ஏதும் கெடுதல் செய்ததாக செய்திகளை வாசித்தவரையிலே தெரியவில்லை; அந்நிலையிலே, இராணுவத்தின் கூத்துக்கு, தன் கடமையைச் செய்யவந்த ஒரு நகர்காவலதிகாரியினைக் கொல்வது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாததாகும். நகர்காவலதிகாரியினை வேறொரு காரணத்துக்கு வேறொரு சந்தர்ப்பத்திலே கொன்றவர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால், இச்சந்தர்ப்பத்திலே எதுவுமே கெடுதல் செய்யாது தன் கடமையைச் செய்யவந்த அதிகாரியினைக் கொன்றதற்கு அவரைக் கொலை செய்தவர்கள் வெட்கப்படவேண்டும்; வருத்தப்படவேண்டும். இவ்வெதிர்ச்செய்கை முறையற்றது மட்டுமல்ல, கெடுதலானதுங்கூட. இதனாலே முழு ஈழச்சமுதாயத்துக்குமே பின்னடைவுதான் எஞ்சக்கூடும். இந்தப்பின்னடைவினை - குறிப்பாக, எந்தளவு நிகழ்ந்தது எந்தளவு திரிவுற்று ஊடகவியலாளரின் விருப்புவெறுப்புக்கேற்ப வேண்டியவிதத்திலே வளைத்து வனையப்பட்டுத் தரப்படுவதால், வரக்கூடிய இந்தப்பின்னடைவினை- நேரடியாக அறிய விரும்புகின்றவர்களை, இணையப்பதிப்பு அல்லது நாளைய அச்சிடப்பட்ட இலங்கை, இந்திய ஆங்கிலப்பத்திரிகைகளை வாசிக்கக்கேட்டுக்கொள்கிறேன்.
'2005 ஓகஸ்ற், 04 வியா. 15:14 கிநிநே.