Sunday, May 13, 2012

தட்டான்களை விட்டாரல்லர் ஒற்றரும் ஒட்டாதாரும்

தட்டச்சிடுகையிலே வரும் தட்டான்களைப் பற்றி இங்கே நான் சொல்லப்போவதில்லை. மொழியிலே தெரிந்தே (சொல்லப்போனால், தெரியாமலே) இழைக்கும் தவறுகளைத்தான் சொல்லவருகிறேன்.

தமிழிலே ஒழுங்காக ஒருவர் எழுதக் கற்கவில்லை என்றால் அதற்கு அவரைமட்டும் குற்றம் சொல்லமாட்டேன். வேறு நியாயமான புல, நேர, சூழல் சம்பந்தப்பட்ட நிர்ப்பந்தங்களும் காரணங்களுமிருக்கலாம். ஆனால், சிலர் விதண்டாவாதத்துக்கு, தம் இயலாமையை 'மொழியின் நியதியாக ஏற்றுக்கொள்' என்பதுபோல நிற்பது அவ்வப்போது வெறுப்பேற்றும். ஓர் ஏழெட்டு ஆண்டுகளுக்குமுன்னால், உலகத்தமிழ்க்குழுமத்திலே வன்பாக்கம் விஜயராகவன் என்பவர் இங்கிலாந்திலேயிருந்து கொண்டு இப்படியாக வெறுப்பேற்றினார்; "தமிழிலே ந/ன்/ண், ர்/ற், ல்/ழ்/ள் வேறுபாடுகள் இருப்பதே அவசியமில்லை" எனும் தொனிப்பட எழுதுவார். இதை வாசிக்கும் சிலரும் அதைக் கண்டிருந்தனர். தமிழ்மணத்திலே எழுதும் பிரபல(ப்)பதிவர்கள் சிலரை(த்) தமிழ்(த்)தெய்வம் என்றாவது கைப்பற்றினால், எண்ணெய்க்கொப்பறையிலே இறக்கி, நாவையும் எழுதுகையையும் வெளிநீட்டச் சொல்லி, ஒவ்வொரு தமிழ் எழுத்தாகச் சூடு போடும்.

இன்னமும் ஒரு சுவையான அவதானம்; உயூரியூப்பிலே பழைய தமிழ்ப்பாடல்களைத் தேடும்போது, ||பொதுவாக|| ஒற்றெல்லாம் சரியாக, "தமிழ்ப்பாடல்" எனக் 'குறிபெயர்த்து'ப் போட்டுத் தேடவேண்டியிருக்கின்றது. ஆனால், புதுப்பாடல்களைத் தேடும்போது,  "தமிழ் பாடல்" என்றுதான் எழுதி, "குறிபெயர்த்து"த் தேடவேண்டியிருக்கின்றது. நான் அழுத்திச் சொல்லியிருப்பதுபோல, ||பொதுவாக||; எப்பொழுதிலும் பொருந்துமென்பதில்லை. (இதைக்கூட, 'பொருந்தும் என்பது இல்லை' என்றுதான் எல்லோருக்கும் புரியும்படி எழுதவேண்டுமென வற்புறுத்துகின்ற நிலையிலே நாமிருக்கின்றோம்)

நேற்றும் இன்றும் காண நேர்ந்த இரு தொடர்கள் எப்படியான விபரீதம் ஒற்று இருக்கவேண்டிய இடத்திலே இல்லாதுபோனாலோ இல்லாதிருக்கவேண்டிய இடத்திலே வந்து சேர்ந்தாலோ நடக்குமெனக் காட்டின.

இணையத்திலே ஓரிடத்திலே மேய்ந்துகொண்டிருந்தபோது, பூங்காவிலே எழுதியிருந்த அறிவுற்றுத்தல்வாக்கியம்: "மலர்களைப் பறிக்காதீர்'. இதையே ஒற்றியெழுதப் பஞ்சிப்படுகின்றவர்கள், "மலர் களை பறிக்காதீர்"  என்று எழுதினால், தோட்டக்காரர் தேவையேயில்லை. நெருஞ்சி குறிஞ்சியை மேவி வளரும்.

இன்று, சிங்கள-தமிழ் ஒற்றுமை பல்கிப் பெருகிச் சமதர்மசமுதாயம் தேனும் பாலும் வழிந்தோட அதிலே ஓடம்விடுமென்ற கனவிலிருக்கும் பொதுவுடமைநண்பர் ஒருவர் எழுதியிருப்பதைக் கண்டேன், "ஒடுக்கப்படுகிற தமிழ் மக்களுடன் அர்த்தம் பொதிந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இதுவே வழி அமைக்கும். சிங்களத் தமிழ் உணர்வுத் தோழமைக் கான முதல் படி இங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்." நத்தார்ப்பப்பா (இவ்விடத்திலேகூட, 'ப்' இடையிலே வருமா வரதா எனத் தீர்மானிக்கும் தேவையை வாசிக்கின்றவர்களிடமே விட்டுவிடுகிறேன்) கலைமானிலே வடதுருவமிருந்து வருகின்றார் என்பதை நம்பும் வயதும் தேவையும் எனக்குக் கடந்துவிட்டதால், அவரின் உட்கருத்தினை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இரண்டாம் வரிகளைக் காண்போம்;

"சிங்களத் தமிழ் உணர்வுத் தோழமைக் கான முதல் படி இங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்."  ஒட்டவேண்டியவற்றை உடைத்து எழுதும் அவலம் இத்தொடரிலும் உண்டு. ஆனால், சமயத்திலே ஆங்கிலத்திலே எழுதி, குறிபெயர்க்கும்போது, இப்படியான உடைவு ஏற்படுவது வழக்கம்; அதனாலே, விட்டுவிடலாம்; மிகுதியைக் காணலாம். அவர் சொல்லியதன்படி பார்த்தால்,  அவர் ஆரம்பமாகவேண்டுமெனக் கேட்பது, ஏற்கனவே நாட்டிலே நிலவுவதுதான் பிரச்சனையே என்று சொல்ல எந்நா உந்துகின்றது; அவரின் 'சிங்களத்தமிழ் உணர்வுத்தோழமை வாழட்டும்" என்று வாழ்த்திக்கொண்டே நகர்கிறேன். வேறென்ன சொல்வது! (ஈங்குகூட '?' என்று கேள்விக்குறியைக் கொழுவிவிட்டுப்போயிருக்கலாம்; ஆனால், இதுகூட மொழிவழக்கின்படி வியப்புக்குறியாகத்தான் வரவேண்டும்)

ஈங்கு நான் எழுதியிருக்கும் பந்திகளிலும் நான் அறியாமலே எத்தனையோ (எத்துணையோ அல்ல; many, not much) தவறுகளிருக்கலாம். நான் கன்றல்ல, என்றாலும் பன்றியாகிக்கொண்டிருக்கின்றேன் என்பதுவும் உண்மை :-(

2 comments:

கோவி.கண்ணன் said...

உங்கள் சொல் நடை சற்று கடினமாகத்தான் இருக்கிறது, கொஞ்சம் கூர்ந்தால் புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ சொல் வழக்குகள், எழுத்து வழக்குகளில் ஒன்றாகக் கருதுகிறேன், இதைத் தவறு என்று சொல்ல ஒருவருக்கும் அருகதை இல்லை.

-/பெயரிலி. said...

கோவி கண்ணன்,
என் எழுத்துநடை குறித்து நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், இங்கே நான் எழுதியிருப்பது என் எழுத்துநடையைப் பற்றியதல்ல; பொதுவாக தமிழிலே புணர்ச்சிவிதிகள், வல்லின/மெல்லின/இடையின எழுத்துகள், ஒற்றுகள், சாரியை/வேற்றுமை இவை பற்றியே அக்கறை கொள்ளாது, தமிழை முடுக்கிய சந்திலே மூத்திரம் பெய்கின்றதுமாதிரியாக எழுதுகின்றவர்களைப் பற்றியது. "மலர்களைப் பறிக்காதீர்கள்" என்பதற்கும் "மலர் களை பறிக்காதீர்கள்" என்பதற்குமிடையே பெருவேறுபாடு உண்டு. அதுபோலத்தான், "சிங்கள தமிழ்" என்பதற்கும் "சிங்களத்தமிழ்" என்பதற்குமிடையேயான வேறுபாடும். அதையேதான் சொன்னேன்.