Tuesday, July 10, 2007

பழசு - 6

பதிவிட விஷயமில்லாவிட்டால், அதைக் கையாளுவது எப்படியென்றே ஓரிடுகையைப் போட்டுக்கொள்ளலாமென்பதைவிட்டால், வேறென்ன வழிகள் என்ற பட்டியல்
1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -
உதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)
2. கும்மி அடி தமிழ்நாடு முழுவதும் மொக்கைதனைச் சுற்றிக் கும்மியடி
3. இருக்கவேயிருக்கு..... பழசை அள்ளிப்போடுதல்

மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள். அல்லாரும் பகவத்கீதை படியுங்கோ (நன்றி: சோ)..... அப்படியே....வலைப்பதிவிலே பின்னாலே எங்கிருந்தோ அல்லது சொந்தக்கிட்டங்கியிலிருந்தோ வெட்டி முன்னாலே கிடக்கும் கிடங்கை நிரப்ப மின்துகள் கொட்டுங்கள்.. ஏதோ எம்மாலானது...

கரை
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.

சமர்ப்பணம்: பாக்கு நீரணைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும்

எழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத்தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை. எழுத்தனுக்கு, முழுமண்ணுக்கு விரும்பாதார் யாரோ ஒரு கண்மூடி மண்ணுருட்டிப் புரண்டோடும் நல்லது செய்தறியா ஆற்றை ஊற்றிப் பயிர்செய்துவிட்டுப் போக, பிளந்த நிலத்தின் மறுகரை அது. இன்றைக்கும் பெரிய எழுத்தன் இருந்திருந்தால், இவன் ஓலைகளை விற்பதற்குக் கொண்டு வந்திருக்கப்போவதில்லை. பனையோ தென்னையோ, ஓலை பறித்து ஊறவிட்டு, பதம்பிறக்கப் பிரித்தெடுத்து, தேறியதை நீட்டி வெயிலிலே உலரவிட்டு, கைமுன்னேயுள்ள - எழுத்து, இருப்பு, இறப்பு -தேவைகட்களவாக சுவடிக்கு வெட்டி நறுக்கியோ, கூரைக்கும் கூடைக்கும் பாடைக்கும் இழைத்து முடைந்துமோ, பக்குவப்படுத்தி விற்பதே எழுத்தனின் குடும்பத்தொழில்.

அவன் மண்ணும் மரங்களும் இயற்கையின் வரட்சிமிகைப்படவும் வனவிலங்குகள் மேயவும்முன்னால், அவன் அம்மான் எழுத்தனின் காலத்தில் ஆற்றுக்கு அந்தக்கரையிலும் ஒரு சந்தை - சின்னதாகவேனும் முளைத்து, உயர்ந்து வளராத அடர்ந்த வெப்பவலயமுட்பற்றை போல அனற்புழுதிக்கும் சூரியன் தகிப்புக்கும் இறுமாந்திருந்தது. ஆனால், மேலேயிருந்து அணை திறவுண்ட ஆறு பெருகி முள் மண்முடி மூடிக் கவிழ, மாதமாக மூடிக் கிடந்த புதர் ஆறு வற்ற வேர் அழுகி நாறியது. வெயில் வேருக்கிறங்கிக் காயமுன், கீழிருந்து முள்ளம்பன்றிகளின் இரை தேடுகை. ஒரு குட்டைப்புதர் முள்ளுத் தின்பதிலே முள்ளம்பன்றிகள் சொர்க்கநிலை உணர்ந்திருக்கமுடியாது என்றும் புதரின் குட்டைநாற்றமே பன்றிகளுக்குச் சுவையைத் தந்திருக்கலாம் என்றும் பன்றிகள் அழுகிய பலவீனமான புதர்களைச் சாய்ப்பதினால், தம் வீரத்தினைப் பெண்பன்றிகளுக்குக் காட்ட ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பின் விளைவே அதுவொழிய, பன்றிகள் ஒரு வெட்டவெளித் தனிக்குட்டைப்புதரினை அழிக்கும் நோக்கத்துடன்மட்டும் வந்திருக்கமாட்டா என்றும் பெரிய எழுத்தரும் மீதி எழுத்த அங்கத்தவர்களும் பேசிக்கொண்டதைக் கேட்டிருந்தான். அதன்பின் சிலகாலம் இவனுக்கு முள்ளம்பன்றிகள் என்றில்லை, சாதாரண பன்றிகளையே கண்டால் வெறுப்பு. கல்லெறிதலும் உண்டு. ஊருக்குள் ஒரு சின்ன எழுத்தனாக இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்றார்கள்.... என்ன செய்வது? ஆள் அங்கம் விளையமுன்னர் அடையாளங்கள் விரைந்துகொள்கின்றன. எழுத்தர்கள் கல்லெறிவதில்லை. அவர்கள் முடிந்தால் ஓலைகளைப் பறிக்கவும் பிரிக்கவும் பதப்படுத்தவும் நறுக்கவும் விற்கவும் மட்டுமே வகுக்கப்பட்டவர்கள். எழுத்தர்கள் ஆற்றைப் பிரித்தோருக்கும் அதன்பின் அணை கட்டினோருக்குமன்றி வேறெவருக்கும் பிரித்தோனால் வெளிப்படையாகச் சுட்டிச்சொல்லப்படாத ஐந்தாம் வருணத்தவர். காலாற்கூட உதறுண்டு பிறந்துழற்றுப்பட முடியாமல், உடலுக்கு வேண்டாமற் கழிந்த மலத்திலோ சிறுநீரிலோ முகிழ்த்து முனைவிட்டு முளைத்துவந்தவர்களாய் ஆற்றுக்கப்பால் தள்ளப்பட்டுப்போனவர்கள். அதன் காரணமாகவே, மூர்க்கமும் மூடத்தன்மையும் நிறைந்த முள்ளம்பன்றிகளின் வனங்களுக்கு மேலும் தான் நினைத்தபோதெல்லாம் அணையுடைத்தோடும் ஆற்றுக்குக் கீழும் தம் பனைவிளை பூமியையும் வெப்பமுட்பற்றையையும் கொண்டிருக்கப்படைக்கப்பட்ட சேற்றுத்திணையினர். கிழட்டு எழுத்தர்களின் உட்கார்வாங்குக்கால்களுக்கு மேலாக வளர்ந்த பின்னர்தான், எழுத்தனுக்கு பன்றிகளும் முள்ளம்பன்றிகளும் வேறு வேறு என்று தெரியவந்தது. தேவையின்றி, சாதாரணபன்றிகளையும்கூட முள்ளம்பன்றிகளுக்காக வெறுத்துக்கொண்டிருந்தோமே என்ற துயர் அடங்காமல் ஆறு துடிக்குமோசை கவியும் காலங்களிலே உள்ளே கவியும். ஆனால், இவனின் எண்ணங்களுக்குச் சம்பந்தப்படாமல், எழுத்தர்களின் சந்தையோ எப்போதோ மடிந்துபோன ஒன்று.

அதன் பின்னர் பெரிய எழுத்தரும் மீதிக்கிழட்டு எழுத்தர்களும் ஏன் இவனோடொத்த ஓரிரு பிஞ்சிலே பழுத்த முட்டுக்காய் எழுத்தன்களும் ஆறு தாண்டி, ஓலை விற்க அக்கரைக்குப் போகையிலும் போய் வந்து விற்றகதை சொல்லுகையிலும், இவனுக்கு ஆற்றை இடையிலே ஊற்றி நிலத்தைப் பிரித்தவர்கள் எவரென்று உறுதியாகச் சொல்லமுடியாதுபோனாலும், அதன் சிற்றிடைத்தூரத்தைக் கடந்துபோக பாலம் அமையாத வேதனை வருத்தும். பெரியஎழுத்தரின் பெருந்தன்மையே, அவரின் கடகம் போன்ற தன்னுட் போட்டத்தை பொறுமையாகத் தாங்கித் தேக்குதிறனிலும் கிடுகின் காக்கும் தன்மையும் ஓலை நறுக்குப்போன்ற ஓரிரு சொற்களிலுமே இருந்தது என்று எல்லோரும்போலவே இவனுக்கும் தெரியும். இவன் அவருக்கு எதிர்; எழுத்தர்களின் குடும்பநிரலிலேயே இவன் ஒருவன்தான், கொஞ்சம் காலிடறி பக்கவாட்டிலே போய், தனக்கு முன்னே ஒரு வழிகாட்டி இல்லாமல், சொந்தமாக வேறு தொழில் செய்யத்தொடங்கினான்; வீடு சமைத்தலும் வீதிபோடுதலும்; பெரியஎழுத்தருக்கு அவ்வளவுக்கு அவை பிடித்திருக்கவில்லை.... அவன் தன் பரம்பரையிலே அவரறிந்து இருந்த எவரையும்விட ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தனாக வரமுடியும் என்று அவர் மற்றவர்களிடமும் மற்றவர்கள் அவரிடமும் புலம்பியும் புகழ்ந்தும் கொண்டிருந்தார்கள். அவன் பதப்படுத்தும் நுட்பத்திலும் தேவைக்கேற்ப நறுக்கியும் இழைத்தும் செதுக்கும்இலாகவத்திலும் கற்றுக்கொள்ள இருப்பினும்கூட, மரத்திலிருந்து தக்க ஓலை தேர்ந்து பறித்தெடுத்து ஊறப்போட்டு, தொழிலுக்கு-உரத்துக்கு என்று பிரித்தெடுக்கும் திறன், அவன் பருவமுற்றலுக்கு மேற்படக் கனிந்ததென அவனிடமும் தாயாரிடமும் புலம்பிக்கொண்டிருந்தார். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்று எண்ணிக்கொண்டான்; அவனுக்கும் ஓலைக்கலை சேற்றிலே ஊறவிட்டுகையிலும் வெயிலிலே காயவிடுகையிலும் தன்னுள்ளும் தானாகவே ஆகி கீச்சுக்கீச்சுமூட்டி வருகின்றதைப் போலத்தான் இருந்தது. ஆனால், அவனுக்குச் சொந்தச்சந்தையினைப் பற்றிய பட்டறிவு இல்லை...... எங்கோ, அந்நிய ஊருக்குச் சுற்றுப்பயணம் போகையிலே, ஊதுகுழலுடன் நினைவுச்சின்னமும் வாங்கிக்கொண்ட ஓரிடம்போலத்தான் இருந்தது, நினைவும் முட்புதர் முள்ளம்பன்றி கிளர்ந்தெறிந்துபோகக் கிடந்த கிழநிலமும். இல்லாத சந்தையிலே, எதிர்ப்படுவோரின் இலக்குக்கேற்ப, பாடையும் கூரையும் அவர்களுக்கன்றி தனக்கில்லாமல் ஒரு சடங்காகச் செய்து வைத்து வயிறு கழுவும் தன்மை ஒவ்வாததது போலத் தெரிந்தது; பாடையிலே குருவித்தோரணக்குஞ்சம் தொங்குவதை எவரும் அனுபவித்துச் சிலாகிக்கப்போவதில்லை; இயற்கைக்கு அதீதமாகத் தேவை பெருகியுள்ளபோது, பாடை ஒரு காவிக்காகவேயழிய, கலைக்காக இல்லை..... அதுவும், பெருவாரிப்பன்றிமுட்களுக்கும் சொல்லாமற்கொள்ளாமல் குறைப்பிரசவித்துத் தள்ளும் ஆற்றுவிலங்குக்கும் பயந்துஅங்குமிங்கும் கண் வைத்து அவதிப்படும் காலச்சந்திலும் களமுடுக்கிலும்.... பாடைகள் கலைக்காகாது. ஆனால், ஒன்றோ இரண்டோ, அபூர்வமாக வீதி போடுகையிலே, வீடு கட்டுகையிலே அவனுக்குத் தன் கையகலத்தினூக உளநுட்பங்களைப் பிரசவிக்க முடிகின்றது...... மேலாக, அவனுக்கு ஒரு கனவு இருந்தது....... அதன் பருப்பம் அவனுக்குத் தெரியாத பொழுதிலும் பருவத்திலும்........ காயமாய்ப் பிளந்த நிலத்தின் கரைகளை -ஒரு பையின் வாயாக இழுத்து தைத்துக் கோக்கும் உறுதிப்பட்ட கயிறாய் - இணைக்கும் ஒரு பாலம் இவனது கலையின் முத்தாய்ப்பாக வேண்டுமென்பது இவனின் ஆற்றாத கனவு. அது ஆற்றை அணைக்கமுடியாதபோதும் அடக்கமுடியக்கூடும். இவ்வாறுதான் இவன் வனைஞனானான். ஆனாலும், மிகுந்த நேரங்களிலே ஓலையைப் பதனிடக் கற்றுக்கொண்டு வந்தான்; குறைந்த பட்சம், பிறர் கற்றுக்கொள்கின்றதைக் கண்டு கொண்டிருந்தான்.....உன்னித்து உள்வாங்குதலே ஒரு கலை என்று உணர்ந்தான். என்னதான் தேவையென்றாலும், இத்தனை வேகமாய்க் குருத்தோலைகள் அவசரத்துக்குத் தறிக்கப்பட்டுப் பாடைக்கு இழுத்து வரப்பட்டால், எதிர்காலத்திலே ஒற்றைப்பொட்டெனச் சிரிக்கக்கூடப் பாளைக்குத் தென்னை மிஞ்சுமா என்று பயம்பிறக்க, கலக்க அவதானிக்கொண்டுதான் இருந்தான். வாங்குவாரின்றித் தொலைந்து போகும் நுட்பமாகிக் கொண்டிருந்தது, குறுவோலை அமை கலை. பேரோலைப்பாடையின் தேவை பெருகும் காலத்திலே, சிற்றோலை தறித்தலும் தகவமைத்தலும் வாய்ப்பற்றுப் போதல் வியப்பாகவில்லை. இறுதியிலே பெரிய எழுத்தர், குடும்பத்தொழிலிருந்து விலகியதற்குப் பிராயச்சித்தமாக இவன் அதை இரு சங்கிலி வளையத்திடையே இருக்கும் கொழுக்கியாகவேனும் கற்றுக்கொள்கின்ற நிம்மதியோடு அற்றுப்போனார்.

அவன் எண்ணத்திலும் பட்டறிவிலும் முதிர்ச்சியடைந்தபோது, பெரிய எழுத்தரைப்போலவே, புலன்களிலே சுருதியைக் கூட்டிக்கொண்டு, பேச்சினைத் தறித்துக்கொண்டான். அவனுக்கு முதிர்ச்சியென்பது தன் இயலாமையின் எல்லைகளை உணர்ந்துகொள்வது என்பது தெளிந்தது. அது தெளிந்தபோது, ஆற்றை மேவிப் பாலம் அமைக்கும் நோக்கு அற்றுப் போனது. முனைப்பு என்பது அந்த இயலாமையின் எல்லைகளை இயலுமானவரை வெளியே தள்ளிவிட்டுக்கொள்ள முயல்வது என்பதும் அடுத்த கட்டமாகத் தோன்றியபோது, குறுவோலைக்கலைக்கு அக்கரையிலே ஒரு சந்தை அமைத்தலினையும் அக்கரையின் புதியநுட்பங்களையும் கற்று கலையினை மேம்படுத்துதலும் தனக்கான முனைப்புகளாகலாம் என்று எண்ணிக்கொண்டான். அதன் விளைவு, இன்றைக்கு தானும் தன் மூதாதையரும் செதுக்கிய ஓலைகளிலேயே சீர்மிகு குறுவோலைப்பொதிகளுடன் இந்த ஆறு கடப்பு. அவன் ஆற்றைக் கடக்கப்போகின்றான் என்ற விடயம் அத்துணை வரவேற்பினையும் உற்சாகத்தினையும் சிறுநீர்த்துளிநிலத்து மீதி எழுத்தர்களிடமோ, ஏன் எழுத்தர்கள் அல்லாத சக வனைஞர்கள், இசைஞர்கள் மத்தியிலோ தரவில்லை. ஓரிரு ஆண்டுகள் முன்னமே சென்றிருந்தால், சந்தை சந்தோசமாக இருந்திருக்கும் என்றவர்களும் கண்ணீர்த்துளிநிலத்துக் குறுவோலைகளிலும்விட பாடைகளுக்கே அங்கே சந்தை அதிகமென்று பாடைகளை இவனுடன் படகேற்றச் சொன்னவர்களும் கூட இவனின் நம்பிக்கையினை மழுங்கடிக்கமுடியவில்லை; ஆனால், இதுபோன்ற கருத்துகளையே சாராமல், கலைஞரே அல்லாத புவியியலாளர்களும் கனிமவியலாளர்களும், "ஒரு காலத்திலே இரு நிலங்களும் ஒன்றாக இருந்தது உண்மையாயினும், ஊடறுத்த ஆற்றின் ஓட்டத்தின் காரணமாகச் சேர்ந்த வண்டற்றன்மையுடனும் காற்றுத்திசை மாறுதல்களாலும், இரு நிலங்களும் ஒரே தன்மையுடைத்ததாக இராது" என்றார்கள்; "அதனால், அக்கரை பற்றிய பட்டறிவும் புவியியலறிவும் துப்பரவாகவேயற்ற அவன் தன் கனவுகளையும் சொந்தக்கருத்துக்கட்டமைப்புகளையும்மட்டுமே நம்பி கலையை அங்கே கொண்டு செல்கின்றது, குறுவோலை பதப்படுத்தும் கலைப் பரிமாற்றத்துக்கும் சந்தைப்படுத்தலுக்குமப்பால், அவன் உடல் நலத்துக்கும் கேடாகலாம்" என்று எச்சரித்தது பயத்தினைத் தந்தது. எந்தளவு ஓலையாக்கிப் பேணும் கலையிலே ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதும், தன் உடல்நலத்துக்கு ஊறு விளைவித்துக்கொண்டு அதைச் செய்யும் உளத்திடமும் நோக்கும் சின்ன எழுத்தனுக்கு இருக்கவில்லை; அதுமட்டும் இருந்திருந்தால், என்றைக்கோ அவன் கீழ்வனத்திலே முள்ளம்பன்றி வேட்டையாடவும் ஆற்றுக்கப்பால், பனைநிலத்தின் துயரான அதை அடிக்கடி திசைமாற்றி அவதிப்படுத்தும் எதேச்சாதிகார அணைவாயை வெடித்தடித்துடைக்கவும் போயிருப்பான். அவன் திடநெஞ்சில்லாதவன்.....

....... ஆனாலும், பனையோலையிலே குறுவோலை நறுக்கு எழுத்தனாகப் பிறந்துவிட்டவன். அதனால், ஒரு முடிச்சு சீர்மை ஓலைக்குறுக்குகளுடனும் என்றோ தொடர்புவிட்டுப்போன பெரிய எழுத்தரின் சில அக்கரைச்சொந்தங்களின் முகவரிகளுடனும் படகேறினான். கட்டிக்கொடுத்த சோற்று ஆலோசனைகளும் அனுதாபத்துடன்கூட அவனோடேறின.

படகோட்டி இறக்கிப்போனபின், கூட வந்த பயணிகள் எல்லோரும் கலைந்துபோகும்வரைக்கும் நெடுநேரம் தரித்திருந்து இறங்கிய கரை மண்ணை எடுத்து முகர்ந்தான்; கிட்டத்தட்ட அவன் கரையை நுகரின்பம்.... ஆனால், அந்த முள்ளம்பன்றிக்கழிவின் துர்நாற்றமோ மண்ணுட் புதைந்த முள்ளின் 'சுருக்' குத்துதலோ இந்நுகரனுபவத்துள்ளே இல்லை என்று பட்டது. காற்றும் அதுபோலத்தான் வீசியதென்றாலும், கொஞ்சம் கூதற்றன்மை தூக்கலாக இருந்தது போல...... ஆறு பிரிக்கும்போது எதைத்தான் சிறிதாகவேனும் மாற்றிப் பிரிக்காமல் விட்டது - ஆற்றினை அலட்சியப்படுத்தி வானத்திலே குறுக்கும் நெடுக்கும் இக்கரைக்கும் அக்கரைக்கும் தான்தோன்றித்தனமாகப் பறக்கும் சிறுபுட்களைத்தவிர? அவனின் விளிம்பு தளும்பிய உணர்வோட்டம் சூழலுக்குக் கட்டுப்பட்டு மட்டுப்பட்டபின்னர், ஓலை முடிச்சினை ஐந்தாறு மாதக்குழந்தையை தூக்கி ஏந்திக்கொண்டவன்போலப் பக்குவமாக விழாமல் இறுக்கியும் நோகாமற் தளர்த்தியும் வைத்துக்கொண்டு, படகுத்துறை அதிகாரியிடம்போய் சந்தைக்குப் போகும் வழியினைக் கேட்டான். ஏற்கனவே, அவனுக்கு ஓரிருவர் ஊரிலேயே சொல்லியிருந்தாலும், சொல்லப்பட்டது அக்கரையில்; சொல்லியவர்கள்தான் அங்கே இருந்துகொண்டு, "போகத்தான் வேண்டுமா? போய்த்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடித்தால், இப்படிப்போ" என்று பாதை வளிவெளியினைக் கிழித்துக்குறித்தவர்கள்; 'இக்கரை அதிகாரிக்கு இடம் பற்றிய தெளிவு அதிகம் இருக்கும்; என்னவிருந்தாலும், உயிருள்ளதொன்று முன்னுக்கு நின்று சுட்டி வழிகாட்டுவதுபோல வராது என்று நினைத்தான்.

பதிலுக்கு, அதிகாரி ஒரு சந்தேகப்பார்வையை வீசினான், "அக்கரையிலே இருந்து படகிலே வந்தாயா?"

எந்தக்கரை என்றால் என்ன? நேற்றைக்கு வந்த ஆறு நிலத்தைப் பிரிக்கலாம்; காற்றைத் திருப்பலாம்; வேண்டியபோது அணைப்படுத்தலாம்; அதைத் திறக்கலாம்..... ஆனால், சொல்லசைத்திசைக்கும் பண் வேறுபட்டாலும் மொழியிலக்கணத்தை, அடிப்படைச்சொல்லொலியமைப்பை முறிக்கமுடியுமா?

சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று சொன்னபோதிருந்த மகிழ்ச்சி அதிகாரிக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சரிபாதியாகக் கலந்து நாட்டுமருந்துக்குக் குளிகையாக உருட்டிக் கொடுத்திருக்கவேண்டும்.

"ஏன் வந்தாய்? அணைப்பக்கம் போகிறாயா? மார்போடு வீங்கிய துணிமுடிச்சிலே என்ன?"

அந்த ஆண்டுக்கான ஓலைக்கலைச்சந்தைக்கு வந்ததைக்கூறினான்; முடிச்சுக்குள் ஓலையென்றான்; கேட்காமலே அவிழ்த்துப்போட்டுக்காட்டினான். பெரிய எழுத்தரின், அவரின் முன்னோரின் தேர்ந்தெடுத்துக்கொணர்ந்த ஓலைகளினை எடுத்துக்காட்டி, அவை செய்யப்படும் முறைகளினை விளக்கியதில், அதிகாரிக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் கூடவே குழப்பத்தினை அதிகரித்தது என்றும் அறிந்துகொள்ளும் கிரகிதிறனும் உளநிலையும் அவனுக்கு இருக்கவில்லை. வாங்குக்கால்களிலே கேட்கப்பட்ட அக்கரை பற்றிய கதைகளிலே, அதிகாரிகளைப் பற்றியே எவரும் பேசாதபோது, அவர்களின் குறுவோலைகள் பற்றிய ஈடுபாட்டினைப் பற்றிப் பேசியிருக்கச் சாத்தியமேயில்லை. அணைப்பக்கம் போவது பற்றிய கேள்வியின் அர்த்தம்மட்டும் இவனுக்குப் புரியவில்லை.

அதிகாரி, ஓலைகளை வாங்கி தாறுக்கும்மாறுக்கும் கொட்டிக்கிண்டி எதைத் தேடினான் என்று இவனுக்கு புரியவில்லை; சிரித்துக்கொண்டிருந்தான். பிறகு, அதிகாரி தனக்குப் பின்னாலிருந்த அறைகளிலே இருந்து இன்னும் சில (மேல்??)அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து ஓலைகளைக் கிண்டித் தேடியபோதும் சிரித்துக்கொண்டிருந்தான். தான் வேறு என்ன செய்யமுடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை; நேராகவே அவர்களிடம் கேட்காமல் போயிருக்கலாமோ என்று ஓரிரு தடவையும் பழம்பனையோலைகள், அலட்சியத்தேடற்றட்டல்களிலே சேதமுற்றுவிடக்கூடாதே என்ற பயம் முழு நேரமும் தொடரவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் முள்ளம்பன்றிகளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு. ஆற்றுத்துறை அதிகாரிக்கு, ஓர் ஓலைத்தறிப்பானுக்குப் புரியாத, புரியத்தேவையில்லாத தொழிற்கடமைகள் நிச்சயமாக உண்டு. பிரிப்பது இடைப்புகுந்த ஓர் இருட்டாறென்றாலும், இக்கரைக்கும் அக்கரைக்கும் துப்பரவற்ற படகுகளிற் கடக்கும் பயணிகள் நோய்க்கிருமிகளை உணவுப்பண்டங்களிலும் கொண்டு சென்று எதிர்க்கரைநிலங்களிலே வயிற்றுப்போக்கினையும் தலைவலியினையும் பரப்பிவிடக்கூடாதே என்ற பாதுகாதுப்பு உணர்வு அத்தியாவசியமானதே. ஆற்றின் இறங்குதுறை அதிகாரி அதனைக் கவனித்துக்கொள்ளாவிட்டால், வேறு எவர்தான் கண்டு கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியும்? இன்னமும் சிரித்துக்கொண்டான்.

பிறகு என்ன நினைத்தார்களோ தெரியாது, வேண்டாக்குப்பையினைக் கட்டுவதுபோல, ஓலைகளை அள்ளித் துணிமூட்டையிலே போட்டுக்கட்டி, சலவைக்கு அழுக்குடைகள் மூலையிலே எறிந்ததுவாய், இவனை நோக்கி எறிய இவன் இலாவகமாகப் பிடித்துக்கொண்டான்; அப்போதும் சிரித்தான்..... பெரிய எழுத்தர், முள்ளம்பன்றிகள் முட்புதர்களைக் கிண்டிக் கெல்லி எறிகையிலே வேறேதும் செய்யத்தோன்றாமல் இப்படித்தான் சிரித்திருப்பாரோ என்று எண்ணிக்கொண்டதாலும் சிரித்தான். சந்தைக்குப் போகும் வழியினை அந்த அதிகாரி இவனுக்குச் சொல்லி, சந்தையிலே அவன் விற்றல்-வாங்கல் வெற்றிகரமாக நடக்கின்றதோ இல்லையோ என்று தனக்குக் கவலையில்லை என்றும் ஆனால், அக்கரைச்சட்டப்பிரகாரம் அவன் அணைக்கட்டுப்புறம் போகக்கூடாதென்றும் அன்று இருட்டமுன்னரே படகுத்துறைக்குத் திரும்பி அவன்புறக்கரைக்குப் படகேறிப் போய்விடவேண்டுமென்றும் சொன்னார். தலையை ஆட்டிக்கொண்டான். "ஓலைச்சந்தை, படகுத்துறை அல்லவே; ஆர்வலர்கள் கூடும் இடம், ஒன்றுமில்லாததற்கெல்லாம் அதிகாரிகள் அராஜகம் பண்ணுமிடமல்ல. ஆற்றுக்குக்குறுக்கே பாலம் கட்டவிரும்பியவன் அந்த ஆற்றை அவதிப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் அணைக்கட்டினைப் பார்க்கவிரும்புவது இயல்பே என்றாலும், இக்கரைச்சட்டம் இடம் கொடுக்காதவிடத்திலே கட்டாயப்படுத்த நானேதும் இந்த நிலத்தவன் இல்லையே! ஆற்றின் உற்பத்தித்தானத்தினையும் அணை கட்டப்பட்ட வரலாற்றினையும் வெவ்வேறு நூல்களிலே படித்தறிந்திருந்தபோதும், சொந்தமாக தன் புலன்களாலேயே உண்மையினை அறிந்து உணர்ந்து கொள்வது சிறப்புத்தான். ஆனாலும் இன்றையச்சட்டம் அதற்கொவ்வாததென்றால், ஒன்றும் செய்வதற்கில்லை." எழுத்தன் தான் வந்த நோக்கு, குறுவோலைச்சந்தையிலே பங்கு கொள்வதுமட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொண்டு நகர்ந்தான்.

இவன் நடந்து தடியாக, விரலளவாகிப் புள்ளியாகி, அதுவும் மறையும்வரை அதிகாரி அவன் அணைப்பக்கம் போகிறானா என்றே அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை எழுத்தன் கவனித்திருக்கமுடியாது. அவரவர்க்கு அவரவர் கவனம். அது கலைந்தபின், அதிகாரி, எழுத்தனுக்காக ஏனோ கவலைப்பட்டுக்கொண்டான்; தான் அவனுடன், அந்தளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்; அவன் தன் வயிற்றுப்பாட்டுக்கு, போயும்போய் பழைய ஓலைகளை விற்றுத் தின்ன வந்திருக்கின்றான். உள்ளம் நிரம்பச் சங்கடப்பட்டது. என்ன செய்வது? அல்லாதுவிடின், பின்னாலறைகளுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் பெரிய அதிகாரிகள் தன்னைவேறு அணைப்பக்கம் போகின்றானா என்று கவனிக்கத்தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம். சிற்றதிகாரிகளுக்கும் குற்றம்சுமத்தும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உண்டு. பேரதிகாரிகளுக்கு ஆறடுத்த ஆறாம்திணையார் என்றால் அக்கறையில்லை என்பதிலும்விட, சின்னப்பையன்கள் மழைகாலத்திலே கம்பிளிப்பூச்சிகளைப் பிடித்து ஓடவிட்டு, பின் நசுக்குவதுபோல ஓர் அதீத சித்திரவதைச்சுகமும்கூடத் தரும் ஆத்திரம் உள்ளுக்குள்ளே இருக்கின்றதுண்டு...... இக்கரைக்கு அப்பாலான எவருமே ஆற்றுக்குக் குறுக்கான அணையை உடைந்துவிடுவார்களோ என்ற அச்சம்போலும். அவர்களினையும் தவறு சொல்லமுடியாது.... ஒவ்வொரு கல்கல்லாக எடுத்து அணையைக் கட்டியவர்கள் அவர்களின் முன்னோரென்றால், ஆற்றின் இன்றையத்திசையினை அணைக்கட்டுப்பாட்டால் நிர்ணயிக்கின்றவர்களும் அவர்கள்தான். அவரவர்களின் அச்சங்களை அவர்கள் மட்டுமே நியாயப்படுத்தமுடியும்......... சின்ன ஆற்றுத்துறையதிகாரி பின்னர் தன் கவலைகளிலே மூழ்கிப்போனான்.....

சந்தையின் ஆரவாரிப்பும் புழுதியும் தொலைவிலேயே கேட்கவும் தெரியவும் செய்தன. பொதுவாக, ஓலைச்சந்தைகளிலே காளைமாடுகள் சண்டையிடுதலும் காலிலே கத்திகட்டிக்கொண்ட சேவற்சண்டைகளும் அதன் பின்னணியிலே ஒவ்வொரு பக்கத்துக்கும் கட்சியாகிக்கொண்ட ஓலைவியாபாரிகளின் உற்சாக, வசவு, சோர்வு ஆர்ப்பரிப்புகள் பற்றி வாங்கடிக்காலங்களிலே தெகிட்டத்தெகிட்டவே கேட்டிருக்கின்றான்....... சேவற்குஞ்சத்து ஓலைப்பாடைக்காரர், பாவாடைக்கிடுகார், வெளிறோலையார் போன்ற புனைபெயர்களால், பட்டப்பெயர்களாலே வழங்கப்பட்டவர்களின் கதைகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் மாற்றப்பட்டும் திரிக்கப்பட்டும் இவனுக்கு எது உண்மை எவர் சொன்னது பொய் என்று அறியாமலே இருந்ததுமட்டுமல்ல, அவர்களையெல்லாம் நேராகக் கண்டு உண்மைகளைத் தானே உணர்ந்து, ஒவ்வொருவர் திரிபுகளினையும் அவை எப்படி தமது இறுதிக்கதைநிலைகளை அடைந்தனவென்றும் இனம் கண்டு கொள்ளவேண்டுமென்றும் ஆவலாக இருந்தான்..... ம்ம்ம்ம்ம்.... யுககாலம் முந்தியகதைகள்... எவர் இருக்கின்றாரோ.... இருக்கின்றவர்களும் எப்படியெப்படி மாறியிருக்கின்றார்களோ........ அருகிலே வர வர அவன் உள்ளம் மகிழ்வுடனும் ஏனோ ஒரு பதட்டத்துடனும் கூடி அடித்துக்கொண்டது...... இதுவும் என் நிலம், காற்று இங்கிருந்து பிறந்துதான், ஆற்றைத் தாவியோ அல்லது ஆறு காவியோ என் கரையினையும் அடைகின்றது. நடக்கும் பாதைகளிலே இருந்த மரத்தோலைகளை எல்லாம் உன்னிப்பாகக் கண்டுகொண்டு நடந்தான். மரங்களும் அப்படித்தான் இருக்கின்றன..... என்ன தென்னைகள் கொஞ்சம் குறைவு. இப்போது ஏன் இந்தக்கரையில் இருக்கின்றவர்கள், அந்தக்கரையிலே இருக்கின்றவர்களிடம், பாடைகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் என்று புரிந்ததுபோல இருந்தது. இளம் தென்னோலைகள் அதிகம் பறிக்கப்படக்கூடிய தேவையும் நிலையும் இருக்கும் இடங்களிலேயே குருத்துப்பாடைகள் அமைக்கும் கலை அதிகம் வளரும்...... பனம்குறுவோலைகளிலே சரம் கட்டுவது இங்கே அதிகம் வளர்ந்திருக்கும் என்பதால், தான் கற்றுக்கொள்ள அதிக நுட்பங்களும் விடயங்களும் அகப்படும் என்று எண்ணிக்கொள்ள மகிழ்ச்சியும் முள்ளம்பன்றி புகுந்த காலம்தொடக்கம் பெரிதாக வளர்க்கப்பட வாய்ப்பின்றித் தேங்கிய தனது எழுத்தர் பரம்பரையின் குறுவோலைநுட்பங்கள் இவற்றோடு பார்க்கப்படும்போது தரத்திலே எங்கே இருக்குமோ என்றும் ஐயமும் வெட்கமும் பிறந்தன.

இத்தகைய ஒரு குழப்பமான உளநிலையோடு, ஓலைச்சந்தைக்குள்ளே காலடி வைத்தான். அதன் அமைப்பினைப் பார்க்கும்போது, அது சந்தையா அல்லது ஒரு விளையாட்டுமைதானமா என்று சந்தேகம் அவனுள்ளே பிறந்தது; நடுவிலே கணிசமான நிலத்தினையைடைத்த வட்டத்தளக்களம். அதைச்சுற்றி உயர்ந்துசெல்லும் படலச்சங்கிலிபோல, இருக்கைகளும் ஓலைச்சந்தைக்கூடாரங்களும். களத்தினிலே ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று சேவற்சண்டைகளும் காளைகள்பொருதுகைகளும் பார்த்துக்கொண்டு ஆர்ப்பரித்தும் ஆத்திரப்பட்டும் அட்டகாசம் செய்துகொண்டிருந்தவர்களும்கூட, சந்தை எதற்காக என்று தாம் மறந்துவிடக்கூடாதேயென்றோ வேறேதோ காரணத்தினாலோ, ஏதோவொரு ஓலையைக் காதிலோ கையிலோ மூக்கிலோ கழுத்திலோ கௌவிக்கொண்டுலாவினார்கள்; ஒருவருக்கொருவர், மற்றவர்களின் அணியோலைகளைப் பிரமாதப்படுத்திப் பேசினார்கள்; தாமொன்றைக் கொடுத்து கொடுத்தவரிடம் இன்னொன்றினைப் பண்டமாற்றுச் செய்துகொண்ட வேளைகளிலே, சுற்றியிருந்தவர்கள் சேவற்சண்டைகளைக் கணநேரம் நிறுத்தி வைத்துவிட்டு, கைதட்டியதையும், வாங்குகை-விற்பனைக்கணக்கில் எழுதிக்கொண்டார்கள். பிறகு ஆளையாள் கடந்துபோனபின்னர், கணம்முன் வாங்கியதை வேறொருவருக்கு வேறொன்றுக்கு விற்றுக்கொண்டார்கள். முகம் பொருள் பார்க்கவேண்டிய இடத்திலே பார்க்காமலும் பார்க்கவேண்டாத சந்தர்ப்பத்திலே பார்த்தும் பண்டமாற்றுப்பண்ணுதலும் வாங்கியதைப் பக்குவப்படுத்தி வைக்காமல் இன்னொரு பண்டமாற்றுக்குக் கைமாற்றுவதும் பொழுதுபோக்கிற்கு அப்பாலும் தொழிலாகவே விரிந்து நடக்கின்றதைக் கண்டுகொண்டான். இவன் இந்தக்கரைப்பணம் கொஞ்சம் கொண்டு வந்திருந்தான் என்றாலும், இங்கே வெறும் பண்டமாற்றே போதும் என்பதாக வர்த்தகம் நிகழ்வதினைக் கண்டான். புல்லாக்கு அணிந்த சிலரை பெரும் ஓலைப்பல்லாக்குகளிலே வைத்து சிலர் காவிப்போக, முன்னால் "பராக்" கூறியபடி ஓரிருவரும், பக்கத்திலே சாமரைவீசியபடி இருவரும், பின்னால் திருப்புகழ் பாடியபடி சிலரும் போய்க்கொண்டிருந்தார்கள். இத்தகைய பாடைவடிவத்துப்பல்லக்குகள் ஒன்றையன்று குறுக்கிட்டபோது, குறுவோலைகளை ஆளுக்காள் பல்லக்கிருப்பிகள் எறிந்துகொண்டார்கள். மழையே காணாத நிலத்திலே பாதங்களையும் குளம்புகளையும் கூரியநகங்களையும் கீறிக்கீறி சுருதிகூட்டிச் சண்டைகள் நிகழும்போது, புழுதி கிளம்புவது தவிர்க்கமுடியாததே. புழுதி கிளம்ப, செருமலும் இருமலும் கனைப்பும் பின் தொடரும் என்கிறதை இவன் தன் கரையின் வீதிகளிலே பல்லக்குகள் பவனிவரும் வேளைகளிலே கண்டிருக்கின்றான்....... முள்ளம்பன்றிகள் புகமுன்னால்; இப்போது பல்லக்குத்தூக்கிகளும் பல்லக்கிருப்பிகளும் பல்லக்குகளும் பல்லற்றுப்போன காலம். அப்போதெல்லாம் இதேபோலத்தான், வரண்ட தொண்டையிலே, மூச்சுக்குழலிலே மட்புழுதி ஒட்டிக்கொண்டு அடிக்கடி செருமலேற்படுத்தாமல், இருமலுக்கு மருந்து உட்கொள்கின்றது வழக்கம்தான். உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவு வெளிப்பாடுகளை, எறிந்துடைந்த மருந்துக்குடுவைகள், குப்பிகளின் உடைந்த கண்ணாடி ஓடுகள் பாதங்களிலே கீறிக்கொள்ளும்போது இவன் உணர்ந்ததுண்டு. பெரிய எழுத்தரிடம்கூட ஒரு பெரிய பல்லக்குக்கும் சில விசுவாசமான பல்லக்குத்தூக்கிகளும் தீவட்டி பிடிக்கின்றவர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் எழுத்தர்பரம்பரையினரல்லாத பதிப்பர், உரைப்பர்குடியினர் என்றாலும்கூட, அவர்களின் சாமரவீசுகை வாங்கடியிலே இருக்கும் இவன் குஞ்சிவிளிம்புக்குக்கூடச் சொட்டி எட்டியதுண்டு....... எல்லாம் பொய்யாய், புழுகாய், இனியில்லாப்பெருநினைவாய்......... போனதையிட்டு இவனுக்கு நிறையவே சந்தோஷம். பதிப்பர்கள் யார், எழுத்தர்கள் யாரென்று சொல்லமுடியாத அளவு பதிப்பர்கள் உரைப்பர்களின் எண்ணங்கள் எழுத்தர்களின் ஓலைக்கலைக்குள்ளே மெல்ல மெல்லத் திணிவாகி வெளிப்பட்டு, ஒரு நிலையிலே முழுதுமே அவர்களின் கருத்துக்களுக்கு வடிவம் தரும் கைகளாகவே எழுத்தர்களின் ஓலைக்கலை ஒய்யாரப்படுத்தும் கதை ஆகிப்போனதுண்டு. எழுத்தர் பரம்பரையுள்ளே பதிப்பர்குடும்பங்கள் பின்னிய பிளவுகளும்கூட இலேசிலே மறக்கப்படக்கூடியவை அல்ல. ஓலைப்பல்லக்குகள் சில சிறப்புத்தினங்களிலே இன்றைக்கும் பதிப்பர்களின் வேண்டுதலுக்காக சில எழுத்தர்குடும்பங்களிலே கட்டப்படுவதுண்டு. ஆனால், இவை எல்லாமே எழுத்தர்கள், புழுதி இருமலுக்காக பதிப்பர்களின் உரைப்பர்களின் செருமல்மருந்துகளை வாங்கி நேரகாலம் தெரியாமல் பருகியதும்மீறிப்போய், பானைபானையாக அருந்தத்தொடங்கியபின்னரேதான்.

அவன் தன்னுள்ளே ஞாபங்களிலே அழுந்திப்போனது விலக்கி வெளியே வந்தபோது, சேவற்சண்டைகளுக்கு சிற்றோலைநறுக்குகளையும் காளைகளின் பொருதுதலுக்கு ஓலைப்பாடைகளையும் கூத்தாடிச்சூதாடிகள் பந்தயம் வைத்துக்கொண்டிருந்ததைக் கண்டான். இன்னும் மனிதக்கைத்தொழிலாகவும் குடும்பத்தொழிலாகவுமே பக்தியோடும் கலைப்பொறுப்புணர்வோடும் தன்னூரிலே தங்கிப்போன குறுவோலைத்தயாரிப்பு, இயந்தியமயமாக்கப்பட்ட நிலையிலே தொகுதிதொகுதியாக ஒரிரு வடிவங்களிலும் நிறங்களிலுமே பந்தயத்துக்காக காளைகள் இழுத்து வந்த வண்டிகளிலே பட்டுத்துணிமுகக்கவசங்களிலேயிருந்து அள்ளி எறிந்து சொரியப்பட்டு, பல்லக்குத்துக்கிகளினதும் சண்டைக்கோழிகளினது கால்களிலேயும் மிதிபட்டுக்கிழிபடுகின்றபோது, சின்ன எழுத்தனுக்கு ஏமாற்றமும் வேதனையும் கூடவே வெகுவாய்ப் பயமும் ஏற்பட்டுக்கொள்ள, தன் பனையோலைநறுக்குகளை, உடல் வியர்வையினையும் மறந்து இறுக்கி நெஞ்சிலே அழுத்திக்கொண்டான். அங்குமிங்கும் பாய்ந்து, தனது தனிப்பட்ட ஆர்வச்சேமிப்புக்காக, ஒவ்வொரு வகை ஓலைத்துணுக்கிலும் ஒவ்வொன்றைப் பொறுக்கி, ஊதித் தூசு தட்டி, தன் சட்டைப்பையினுள்ளே பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். இங்கே குறுவோலை பறித்து பதப்படுத்தி நறுக்கிப் பிழைப்பது, தன்கரையிலே ஓலைப்பாடைகள் கட்டும் மும்முர பெரும்வணிகர் தொழிலெனப் போய்விட்டதுபோல உணர்ந்தான். அதற்குமேலே அங்கே இருக்கப்பிடிக்கவில்லை. இத்தகைய தடகளச்சமரிகளிடமிருந்து விலகி, மேலே பார்வையாளர் கூடாரங்களிலே, பாடை, கூடை, கூரை, கிடுகு, நறுக்கு பிரிவுகளிலேயும் இத்தகைய சூழ்நிலை நிலவக்கூடுமோ என்ற அச்சவுணர்வோடு அகன்றான்.

பெரியதும் சிறியதுமாக அகன்ற கூடாரங்கள். முழுவதுமே ஆறுதலாகச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் நாளுக்கு எட்டு மணிநேரம் என்று பார்த்தாலும்கூட, மூன்று நாட்கள் தேவைப்படும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால், என்ன செய்வது? மாலைக்கு முன்னர் இறுதிப்படகினைப் பிடித்தேயாகவேண்டிய நிலை. இரவு தங்கிடும்பட்சத்திலே, இந்தவூர்ச்சட்டம் எவரெவர்க்கு என்னவென்னவற்றுக்கு என்னென்ன தண்டனை வைத்திருக்கின்றதோ தெரியாது. சிறிய எழுத்தன், தன் உள்ளத்துக்குத் தவறெனத் தெரியும் சட்டத்துக்கு என்றைக்கும் அஞ்சினவன் இல்லாதபோதும், தண்டனைக்கு அஞ்சினான்; அதற்குமேலாக, எத்தகைய தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும்கூட, அதற்குப் பெறுதியாக இருந்து முழுதாக அனைத்துப்புலன்களாலும் அனுபவித்து அனுபவங்களைப் பகிர்ந்து போகவேண்டிய சந்தைதானா இது என்ற சந்தேகம் வேறு அவனுக்கு கடந்த ஒரு மணிநேரத்திலே ஏற்பட்டுவிட்டது. கூடவே, ஆங்காங்கு, சில இக்கரை ஓலைப்பாடை வணிகர்கள் தங்களுடன்கூடவே அழுக்கினைச் சிலுப்பும் முள்ளம்பன்றிகளை வளர்ப்புப்பிராணிகளாகக் கொண்டு உலாவியது அதிர்ச்சியினையும் அடுத்தநாளைக்குரிய அவனின் இருப்புக்கான பயப்பிராந்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்படகுக்கு இன்னும் இருப்பது ஏதோ நான்கு மணிநேரங்கள் மட்டுமே. இதற்குள் விழைந்து திட்டமிட்டதிலே சிலவற்றினை விலக்கி, மிகவத்தியாவசியமெனப் பட்டவற்றினை மட்டுமே இந்தமுறைக்குக் கண்டுபோகலாம் என்று எண்ணிக்கொண்டான். அவசர அவசரமாக, எல்லாவற்றினையும் காகப்பார்வை பார்த்துக்கொண்டு எதையுமே செரிக்கச் சுவைக்காமல், வதவதவென்று வாய்க்குள்ளே கொட்டமுன்னரே விழுங்கிக்கொண்டு போகின்றதிலும்விட, இயற்கை இப்போது இருப்பது போலக்கூட பேணுண்டால் நகர்ந்தால், வருங்காலத்திலே ஓரிரு தடவைகள் வந்து மற்றையவற்றினைக் கண்டுகொள்ளலாம் என்று தோன்றியது. அதனால், குறுவோலைப்பிரிவிலே இருக்கக்கூடியவற்றினைக் கண்டுகொண்டு, தன்னுடைய ஓலைகளினைப் பற்றி ஆர்வலர்களுக்கு விளங்குறுத்தி அவர்களின் தம் அறிமுகங்களையும் கருத்துக்களையும் கேள்விகளையும் கேட்டுப் பதிலிறுத்தும் பதிவுசெய்தும் கொண்டபின்னர், பெரிய எழுத்தரின் இக்கரைநண்பர், வெளிறோலையார் (இயற்பெயரோ, பட்டப்பெயரோ அல்ல, தன்தொழிலுக்கேற்ப அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டது) இனைச் சந்தித்துக்கொண்டு, பின்னர் நேரமிருப்பின், அவரின் ஆலோசனைப்படி, வேறு ஓலைத்தொழில்களிலேயிருக்கும் எந்தநுட்பங்களைத் தனது குறுவோலை நறுக்குக்கலைக்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டறிந்து அவற்றினையும் கண்டு தன் குறிப்புகளிலே பதிந்து செல்லலாம் என்று எண்ணிக்கொண்டான். இவற்றுக்கே நேரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்தநேரத்திலே நேரத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பது, தன்னை இதைவிடவும் உற்சாகம்குன்றியவனாக ஆக்கிவிடும் என்று பயந்தபடி நறுக்குப்பிரிவுக்கு நகர்ந்தான்.

நறுக்குப்பிரிவு அவன் படகேறமுன் எண்ணியதிலும் சிறிதாக இருந்தாலும், அந்தப்பிரிவுக்குள் நுழையமுன்னர் எண்ணிக்கொண்டதிலும்விடப் பெரிதாக இருந்தது உள்ளத்துக்குக் கொஞ்சம் ஊட்டத்தினைத் தந்தது. பங்குதாரர்களிலும் பார்வையாளர்களிலும் பெரும்பான்மையோர் நடுத்தரவயதினைக் கடந்தவர்களாகவும் கடந்துகொண்டிருக்கின்றவர்களாகவுமே இருந்தார்கள். கண்ணாடிப்பேழைகளிலே பழைய குறுவோலைகள் தூசு தட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்காடிகளுக்கு முன்னால் வழிப்பாதைகளிலே நின்று பேசிக்கொண்டவர்களின் குரல்களைச் செவிமடுத்துக்கொண்டே கண்களினால் விதவிதமான குறுவோலை நறுக்குகளைக் கண்டுகொண்டு நடப்பது மிகவும் ஆனந்தத்தைத் தந்தது. சில அங்காடிகளின் கண்ணாடிப்பேழைகளின் முன்னே தானும் தனக்கு இருக்கும் கெடுகாலநேரத்தையும் மறந்து பதுமையாக நின்றான். பெரிய எழுத்தர், அடிக்கடி வெவ்வேறு பாணி குறுவோலை செலுக்கலுக்கு உவமானங்களாகச் சொல்லிக் காட்டும் உன்னதமான நறுக்குகள் எனப்பட்டவை எல்லாம் வஞ்சகமின்றி அங்குமிங்கும் 'முதலில் என்னைப் பார், பிறகு வேண்டுமானால், அதனையோ வேறெதனையோ' என்று இருக்கின்ற நிலையிலே அவனின் புத்தி உற்சாகசன்னதமாடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானவை பார்வைக்குமட்டுமே அரசநூதனசாலைகளிலேயிருந்து கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தூசு தட்டப்பட்டதும் பேணி வைத்திருந்ததும் நிறைவான முறையிலே நிகழ்ந்திருந்ததா என்று சொல்லமுடியாதவளவுக்குத் தம் அகவைக்கும் மீறி பழுப்பேறியும் ஆங்காங்கே பூச்சி அரிப்புண்டும் மூப்புண்டு கிடந்தவை மனதுக்கு வருத்தத்தினைத் தந்ததற்கு, இழந்த சிறிய எழுத்தனின் கரைச் சந்தையும் பேணியும் மூர்க்கமுள்வராகங்கள் கிழித்துக்குதறிய, கண்மூடிக்காட்டாறு அள்ளிக்கொண்டுபோய் அமிழ்த்தியழித்த பல அபூர்வ ஓலைநறுக்குகளின் ஞாபகமும் ஒரு முக்கிய காரணமாகும். அவ்வாறு அழிந்துபோன ஓர் ஓலைநறுக்கினைக் கூட அவன் தொட்டோ, ஏன் கண்ணால் கண்டோ அறியான்தான்; அறிந்ததெல்லாம் பெரிய எழுத்தரின் ஓலைநறுக்குகள் பற்றிய சில ஓவியங்களிலே கண்டதும் கீழிருந்த அவற்றின் செழுமையினைப் பற்றி சிலாகித்துச் சொல்லியிருந்த குறிப்புகளிலே அறிந்துகொண்டதும் மட்டுமேதான். அவற்றின் பாணியிலே, இந்த அபூர்வ பழம்குறுவோலைகளிலே ஏதேனும் அமைந்திருக்கின்றதா என்று தேடிப் பார்த்து தோற்றான். ஓலைக்கலையின் தன்கரைக்கிளை தறிக்கப்பட்டது அவனுக்குப் புரிந்தது. பொதுவாக, அவனது கரையோலைகள் - அவன் கொண்டு வந்தவை உட்பட- செய்கால எல்லைகளுக்கு அப்பாலும்கூட சில கலைப்பண்புகளைத் தமக்கெனத் தனித்துவமாய் இவற்றிலிருந்து வேறாகக் கொண்டிருந்தன....... உதாரணமாக, இந்தக்கரையோலைகளின் இடக்கை விளிம்புகள் செங்கோணத்திலோ அல்லது சீராய்மாறும் வளைவாக அமைந்திருக்கின்றபோது, பெரிய எழுத்தரினது அம்மானின் ஓலைகளோ அல்லது பெரிய எழுத்தரின் நறுக்கு இடப்புறமூலைகளோ, புறாக்கழுத்து வடிவிலே இருந்தன. ஓலைகளைப் ஊறவிடும்-ஒளிபடர்த்திப் பதனிடும்முறையிலும் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுகள் வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓலைகளின் நிறங்களிலேயும் தொடுவுணர்விலும் தெரிந்தன. இவனது ஓலைகள், உடலம்முழுவதும் சீராக அதிக வெயிலிலே பட்ட ஆழ்பழுப்பாகவும் கரடுமுரடாகவும் ஓரிரு உரசல்களிலேயே விரற்றோலை எரிக்கிறதாக தம்மை உணர்த்தியிருந்தவேளைகளிலே, இந்தக்கரை ஓலைநறுக்குகள் ஓரங்களிலே வெளிறியும் மத்தியிலே மினுங்கட் காவிமஞ்சளும் உடைத்து மிகுமென்மையாக வருடவருட விடாமற் தடவிக்கொண்டே இருக்கவேண்டும்போல ஒரு மோகத்தன்மையினை வளர்த்துக்கொண்டே போயின. இவை மிகவும் கச்சிதமாக கைக்கடங்கி ஒரு சதுரநெறியினை மீறவா வேண்டாமா என்று கேட்டபடி மீறிக்காட்டும் செவ்வகக்கவர்ச்சியாகவிருக்க, அவனது துணுக்குகள் உயரம் குன்றி பக்கவாட்டிலே அகன்று சாய்ந்து சரிவகமாகித் தொங்கின. ஈரப்பதனைக்கூட கொஞ்சம் உள்ளுறுஞ்சி இவன் கொணர்ந்த ஓலைகள் வைத்திருக்கும் என்று இரு கைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒன்றைத் தூக்கிப் பார்த்து எண்ணிக்கொண்டான். இதிலே எ·து அழகு என்று இவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஒவ்வொன்றும்தான்; எல்லாமும்தான். ஓலைகளின் சாமுத்ரிகாலக்ஷ்ணம் வேறு. பத்தினியுடன் சித்தினியினை ஒத்துப்பார்த்துக்கொள்ளமுடியுமா, அல்லை, வேண்டும்தானா? ஒவ்வொன்றும் தம்மளவிலே தமக்கான சிறப்பியல்புகளைக் கொண்டு கிடைக்கையிலேயே, இதோடு அதனையும் அதோடு இதனையும் மேலானது எது என்ற வினாவினை முன்வைத்து சீர்தூக்கிப்பார்க்கின்றதிலே அர்த்தம் இல்லை என்றே பட்டது. வேலையற்றவர்கள் வேண்டுமானால், ஒவ்வொரு வகைக்குள்ளும் போட்டி வைத்துக்கொள்ளலாம்; மற்றவர்கள், ஒவ்வொரு வகையின் இயல்புகளையும் மற்றதற்குள் அமைவுச்சுருதியிலே அபம் விளைவிக்காது பொருந்தக்கலந்து புதிய கலப்பின ஓலைநறுக்குகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்; கிளைகள் சடைத்து விருட்சம் வளரவேண்டுமேயழிய, ஒரே விருட்சத்தின் கிளைகளுள்ளே எ·து அழகிலே சிறந்தகிளை என்று கூட்டற்கழித்தற்கணக்குகள் பார்க்கின்றது அர்த்தமற்ற பின்னோக்கிய நகர்வு. சிலம்புகளைச் செய்த ஆசாரியை எடைபோடுவதற்காகமட்டும், உடைத்து மாணிக்கமா முத்தா என்று இனியும் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.

இத்தனைக்குப் பின்னர் ஒரு பெரியகடையிலே, விழிகளிலே ஒட்டிக்கொண்டு விலகமறுத்த சில நறுக்குகளைத் தனது நினைவுப்பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் நோக்குடன் சித்திரப்படுத்த முயல்கின்றவேளையிலே, கடை உரிமையாளர்தோரணையிலே நடமாடிக்கொண்டிருந்தவர் வந்து, அதற்கு அனுமதி இல்லாததைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார். விருப்பமானால், ஏற்கனவே அவற்றினைப் பதிவு செய்த ஓவியங்களை அவனுக்குத் தாம் விற்கமுடியும் என்று கூறியபோது, அவன் தன்னை அறிமுகப்படுத்தி தான் வந்த நோக்கினைச் சொன்னான். அக்கரையிலேயிருந்து வந்தவன் என்று சொல்லியபோது, கடைக்காரர் நெளிந்தார்; சுற்றுமுற்றும் இருந்தவர்களிலே பலர் தமது பார்வைகளை ஓலைகளிலே இருந்து விலக்கி இவனை ஊருடுவ நோக்கிச் செலுத்திவிட்டு, ஓலைகளுக்கு மீண்டனர். தனக்கான மரியாதை தனது சொந்தமுயற்சிக்கான விளைவின் அளவுமட்டமாகமட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றவன் ஆதலினால், தான் பெரிய எழுத்தரின் புதல்வன் என்பதினைச் சொல்லிப் பரிச்சயம் தேட விரும்பவில்லை. அக்கரைக்காரர்கள் பொதுவாக, 'தென்னோலைப்பாடைகள் பிரிவுக்குத்தானே சந்தையில் அதிகம் வந்துபோவதுண்டு!?" என்று இருகுறிகள் இறுதியிலே ஒருங்கித்தொனிக்கக் கேட்டபோது, சின்ன எழுத்தன், அவர்கூறியதுபோலவே தன் அண்ணனின் ஈடுபாடும் வாழ்க்கைக்கான தொழிலும் அதுதான் என்றும் ஆனால், அவன்கூட பாடையின் கலைநயத்திலும்விட தாங்குதிறனுக்கும் ஓலைத்திறனிலும்விட விற்பனைத்தேவைக்கும் விலைக்குமே அதிக ஈடுபாடு கொடுக்கின்றதுண்டு என்று கூறினான். பிறகு, தணிந்த குரலிலே தான் தொழில்ரீதியிலே வீதிபோடுகின்றவன் என்றும் நேற்றைக்கும் நாளைக்குமான சங்கிலிக்கொழுக்கியாகித் தான்போன உள்ளத்திருப்திக்குமாகவே குறுவோலைக்கலையிலே ஈடுபாடு உள்ளது என்று சொல்லி, நெஞ்சோடு ஒத்துப்பார்க்கத் திறந்திருந்த தன் பொட்டணியினை மேசைமேல் விரித்து வைத்தான்.

கடைக்காரர் விஷயகாரர் என்று கண்களின் விஷமம் சொன்னது; நறுக்குகளின் பெறுமதி பளிச்சிட்ட அவரின் கண்மணிகள் சுருங்கமுன்னர், காளைச்சண்டைக்களத்தினிலே கண்ட பண்டமாற்று உத்தி அங்கும் செல்லுபடியாகும் என்று எண்ணிக்கொண்டதனால், அவற்றிலே சிலவற்றினை அவரிடம் கொடுத்து, தான் ஓரிரு ஓவியங்களை வாங்க வாய்ப்புண்டா என்று கேட்டான். "சாத்தியப்படும்" என்ற கடைக்காரர் அடுத்து, "பேரம் பேசமுன்னர், அவை திருட்டோலைகள் இல்லை என்பதற்கு அத்தாட்சி ஏதுமுள்ளதா?" எனக் கேட்டார். எழுத்தன் எல்லா ஓலைகளின் வலதுகீழ்மூலையிலே இருக்கும் 'உ' குறியினைக் காட்டி, எழுத்தர் பாரம்பரிய ஓலைக்கலைஞர்கள்மட்டுமே அவ்வண்ணம் இடுவார்கள் என்று கூறினான். கொஞ்ச நேரம் அதனை நம்பமறுக்கின்றவர்போல, தாமதம் செய்த கடைக்காரர், பேரத்திலே தன் கையோங்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, கலைப்படைப்பு-தரம்-பொய்மை-திருட்டு-நீதி என்பன பற்றி சிறிது அச்சுறுத்தற் சொற்பொழிவின்பின், எழுத்தனின் ஓலைகளை எடுத்து 'நிறுத்தலளவிலோ நீட்டலளவிலோ' பெறுதியளக்க வேண்டும் என்று கேட்டார். இவன் அவர் விரும்பியதைச் செய்யும்படி சொல்ல, அவர் தன் தராசிலே சின்ன எழுத்தனின் சில நறுக்குகளை எடுத்துப்போட்டார். தராசின் மறுபக்கம் சித்திரங்களை வைக்கப்போனவரை எழுத்தன் தடுத்தான். எல்லோருக்கும் பொதுவான நிறைப்படிகளையே வைத்து நிறுத்துக்கொள்வது இந்தவிடத்துக்குப் புதிய தனக்கு வியாபாரத்திலே நம்பிக்கையைத் தரும் என்றான். கடைக்காரருக்குக் கோபம் வந்தது. "செய்கின்றது பண்டமாற்றேயழிய பணம் ஊடோடும் வர்த்தகமல்ல, அதனால், இரு பண்டமாற்றுப்பொருட்களையும் பக்கம்பக்கமாக வைத்துக்கொள்கின்றதே போதுமானதும் நேரச்சிக்கனத்துக்குரியதும்" என்று அதட்டலாகச் சொன்னார். எழுத்தனுக்கு அரசு இலச்சனைகள் பொறிக்கப்பட்ட நிறைப்படிகள் மட்டுமே தராசின் நேர்மையினையும் சுட்டக்கூடும் என்று பட்டது. இறுதியாக சில நிமிடப்நேரப்பிணக்கின் பின், வேண்டாவெறுப்பாக நிறைப்படிகள் ஒருபுறமும் இவனின் நறுக்குகள் மறுபுறமும் இடப்பட்டுச் சமானம் பார்க்கப்பட்டபோது, எழுத்தனுக்கு தராசின் நேர்மையினைப் பற்றிமட்டுமல்ல, அரச இலச்சனைப்படிகளுமே திட்டமிட்டுப் பொய் சொல்லக்கூடுமோ என்று எண்ணம் வந்தது. அவனது கரையிலே எட்டு ஓலைகளைக் கேட்ட நிறைப்படியிற்குச் சமானமாக வேண்டிய இந்தக்கரை நிறைப்படி பத்து ஓலைகளைத் தட்டிலே பெய்யெனக் கேட்டது. இவன் அதனை வெளியே வாய்விட்டே சொன்னான். கடைக்காரருக்கு அதீதகோபம் வந்துவிட்டது. 'தன் நிலத்திலேயே வந்து தன்னைப் பொய்யன் என்று அழைக்கும் அசாத்தியதுணிவுள்ள அக்கரைக்காரன்' என்று கத்தத்தொடங்கியது மட்டுமல்லாது, தனது தராசின், அதன்படியின் நீதியை நிரூபிக்க வேண்டி, 'ஆறு பிரிப்பதினால், புவியீர்ப்பு எவ்வாறு நிலங்களுக்கிடையே மாற்றமடைகின்றது என்பதை அவன் கணக்கிலே கொள்ளவில்லை' என்றும் குற்றம்சாட்டினார். எழுத்தன் பதிலுக்கு, பூமியிலே கிட்டத்தட்டச் சமானமான உயரத்திலேயிருக்கும் எந்த நிலத்திலும் இரண்டு ஓலையைப் பெயர்க்கும்வண்ணம் நிறைக்கல்லிலே புவியீர்ப்பு மாறாது என்று அழுத்திச் சொன்னான். இறுதியாக, கடைக்காரர் 'உன்னைப் போன்றவர்களுக்கு நான் விற்கமாட்டேன்" என்று இழுக்காத குறையாக கடைக்கு வெளியே கொண்டு வந்து தள்ளிவிட்டுப்போனார்; கடையிலே ஓலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனுக்கு நடப்பதையும் பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதற்குப்பிறகும் கடைக்காரரிடம் பேரம் பேசாமல் சொன்னவிலைக்கு ஓலைகளை வாங்கிக்கொண்டும் போனார்கள். அவமானவுணர்வோடு இவனுக்குக் கண்கலங்கிவிட்டது. அழுத்தத்திலேயிருந்து கொஞ்சம் இளகி வருவதற்காக, கொஞ்சம் தள்ளி நடந்து தனிமையிலே நின்று தன்னை ஆசுவாசப்படுதியபின்னர், தன்னைக் கடந்து வழியிலேபோன ஒருவரிடம் பெரிய எழுத்தரின் நண்பர் வெளிறோலையாரின் முகவரியினைக் காட்டி, அதற்குச் செல்லும் வழியினைக் கேட்டான்.

அவர் இவனை ஆதரவோடு அழைத்துக்கொண்டுபோய் ஒரு சிறிய கடையினைச் சுட்டிக்காட்டி விட்டுப்போக, இவன் நன்றி கூறிவிட்டு உள்ளே நுழைந்தான். ஒரு வயதான பெண்மணி மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அது மூடப்படும் நிலையிலே இருந்த கடை என்று தெரிந்தது. நறுக்குகள் அரைவிலையிலும் சிலவற்றினை வாங்கியதற்கு வேறுசில இலவசமாகவும் கொடுக்கப்படும் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நறுக்கோலைகள் மீதிக்கடைகளிலே காணப்பட்டதற்கு மாறாக இவனுக்கு பல காலமாக மிகவும் பரிச்சயப்பட்டனபோலவும் தோன்றின. இவனுக்கு முன்னைய பண்டமாற்றுப்பேரம் விளைவித்த வெறுப்புத்தனத்தின் பின்னால், உள்ள பணத்திலே படகுக்கூலிக்குத் தவிர்ந்த மீதிக்கு - பசியினை இரவு வீட்டுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம் என்று பட்டதால்- தேர்ந்தெடுத்து குறுவோலைகளை இங்கேயே வாங்கிப் போனால், வந்ததற்கு வருத்தப்படமாட்டோம் என்று பட்டது. இவ்விடத்தில் எக்காரணம்கொண்டும் பேரம் பேசுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டான்; சொன்னவிலைக்கு வாங்கிக்கொண்டு வெளிறோலையாரைப் பற்றி விசாரிக்கலாம் என்று பட்டது. கட்டிக்கொண்டு வந்த தனது ஓலைகளை அடாத விலைக்கு இங்கே எந்த ஏமாற்றுக்காரனுக்கும் விளக்கவோ விற்கவோபோவதில்லை என்ற உறுதி முன்னைய கடையிலே இருந்து வெளியே வருகின்றபோதே உள்ளுக்குட் தீர்மானித்த விடயமாகி விட்டது. இவர்களுக்கு நறுக்கோலைகளை விற்கின்றதும் அக்கரையிலே சாமரைப்பதிப்பர்பரம்பரைக்கு விற்கின்றதற்கும் ஏதும் வித்தியாசமில்லை. நாய் விற்ற காசையும் குரைக்கச்சொல்லிக்கேட்கும் ஒத்தகூட்டங்களேதான் மொத்தத்திலே இரண்டும். வேறு சுருதியிலே பேசிக் கெடுக்காமல், சிறியதொரு சிரிப்பினைமட்டுமே கிழவிக்குச் சிந்திவிட்டு, குறிப்பிடப்பட்டிருந்த விலைகளையும் தன் கையிருப்பினையும் கணக்குப் பார்த்துப்பார்த்து தெரிந்தும் விலக்கியும் சேர்த்துக்கொண்டான். கிழவி உற்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்; இவன் நிமிர்ந்துபார்க்கும் நேரங்களிலே ஒரு சிறிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வாள்; சரி, அந்நியன் என்றுதான் என் முகத்திலே கரியாற் குறிப்பெழுதி ஒட்டிக்கொண்டிருக்கின்றேன், கோலால் பகற்றிருடன் என்றுகூடவா நெற்றியிலே சூடு போட்டிருக்கின்றேன்!! எட்டாண்டு காலமாக இந்த யாத்திரைக்கென்று சிறுகச்சிறுக இப்படி பணத்தினைச் சேர்த்துவந்து இங்கே திருடன் என்ற பார்வையினையும் அநியாயத்திட்டினையும் வாங்கிக்கொண்டு கொட்டிவிட்டுப்போகவேண்டுமா என்ன என்று ஆத்திரம் தன்மீதே சின்ன எழுத்தனுக்குப் பீறிட்டது.

சேர்த்துக்கொண்ட குறுவோலைகளை எடுத்து கிழவியிடம் பணத்தினைக் கொடுக்க நகர்ந்தபோது, அவளுக்குப் பின்னால், சூரியன் ஆற்றுக்குப் பின்னால், இவனது கரையினை நோக்கிச் சாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. 'என்னவாயிற்று இந்த நிலத்துக்கு!' என்று எழுத்தனுக்குள் சோர்வுடன் நொந்தது. பெரிய எழுத்தரும் மற்றவர்களும், "எமது கரை எமது அக்கரை" என்று பேதமில்லாமலே சக்கரைக்கட்டிகள் சலித்துக்கொட்ட, வாங்கினடியிலிருந்து சிந்திக்காமலே அள்ளியள்ளி வாய்க்குள்ளே மென்றுகொண்டு அக்கரை யாத்திரைக்கான ஆசையை வளர்த்து இன்றைக்கு வந்திறங்கியது தன் தவறுதான் என்று பட்டது. ஆறு பிறந்தபின்னால், அணை அமைந்தபின்னால், அக்கரை வேறு இக்கரை வேறுதான்.... இல்லாவிட்டால் கரை என்ற கதையே இருந்திருக்காதே..... இருந்துகொள் எனது கரையே.... இன்னும் சில மணித்துளிகள்தான். வந்துவிடுவேன். உள்ளுக்குள்ளே எங்கேயோ இருந்தெழுந்த அந்தக்கரைக்காற்றின் அழுகல்நுகர்ச்சியிலும் ஒரு கணம் இலயித்தான்.

அவன் கிழவியிடம் எடுத்த ஓலைகளைக் கொடுத்துவிட்டு, பணத்தினைச் சரியாக எண்ணி வைக்க, கிழவி எண்ணிக்கொண்டிருக்கும்போதே கேட்டாள், "நீ அக்கரையானா?" ஆத்திரம் வந்தது; ஆனாலும், மூன்றாம் ஆளாக விலகி நின்று பார்த்தால், சாதாரண வினா. காசை எடுத்து எண்ணிமுடிக்கும்வரைக்கும் வெறும் மௌனமே விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் எஞ்சியிருந்தால், அதன் இறுக்கத்திலும் இது பரவாயில்லைத்தான். இக்கரைக்காரனாக இருந்திருந்தால், 'இன்றைக்கு எரிக்கும் வெயில்; இல்லையா?" என்று அவள் வினாவியிருக்கக்கூடும்.

"ஓமோம்."

நன்றி சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளிடம் வெளிறோலையாரைப் பற்றிக் கேட்பதா இல்லையா என்று அவன் தனக்குட் தீர்மானித்துக் கொண்டிருந்தபோது, "கேட்கின்றேன் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதே; பெரிய எழுத்தருக்கு நீ ஏதும் உறவுமுறையா?" - கிழவி கேட்டாள். இவனுக்குள் இந்தக்கடைக்குள்ளே புகுந்தது முதற்கொண்ட தன் அனைத்துக்கணத்தின் எண்ணங்களுக்கும் உள்வாங்கல்களுக்கும் மிக மாறுதலான புரிதல்கள் -கணத்திலே பழையனவற்றைத் தகர்த்து- உருவாகின.

"ஓமோம்!!" உற்சாகமாகக் கூவி அவருடனான தன் உறவு முறையினையும் கூறினான்... தொடர்ந்து, வெளிறோலையாரைப் பற்றியும் விசாரித்தான்.

அவரைத் தனது கணவரே என்று சொன்ன கிழவி, தங்களது வகை நறுக்கோலைகளுக்கு தற்போது எவரிடமும் அதிக நாட்டம் இல்லாததினால், வெளிறோலையார் ஏற்றுமதித்தேவையதிகமுள்ள குருத்தோலைப்பாடைக்கடையன்றிலே நாட்கூலிக்கு வேலைக்குப் போவதாகவும் சில வாரங்களிலே இந்தக்கடையையும் முற்றாக மூடியபின், தானும் அந்தப்பக்கம் எங்காவது வேலை செய்யவேண்டும் என்றும் கூறியவள், பெரிய எழுத்தர் தங்களின் அன்பு நண்பரென்றும் அவர் இறப்புக்காகத் தாம் வருந்துவதாகவும் சொல்லி மௌனமாக இருந்தாள்; முகத்திலே அகத்து வேதனை கோடுகளாய் நெளிந்தோடியது. சில கண இடைவேளையின் பின்னர், இறுதிமுறை அவர் நறுக்கோலை கொண்டு அக்கரைச்சந்தைக்கு வந்திருந்தபோது, அணைக்கட்டுப்பாதுக்காப்புச்சட்டத்தின்பேரிலே, திருட்டோலை கொண்டு வந்ததாக சிலநாட்கள் அதிகாரிகள் அவரைக் காவலிலே வைத்திருந்ததாகவும் கூறி வேதனைப்பட்டாள். ஓலைச்செதுக்கலையும் சீர்படுத்துதலையும் தவிர எதையும் புரியாத அந்த மனிதரின் கைகளும் ஓலை ஆய்தலையும் மிதித்தலையும் தவிர வேறெந்த வினைக்கும் பயன்படாத அவரின் கால்களும் தமது இறுதிக்காலத்திலே இவ்வளவு வருத்தத்தினை எதற்குத் தாங்கியிருக்கவேண்டிய நியதி ஏற்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என்றாள். இவனுக்கோ இந்தச் செய்தி புதிது. பெரிய எழுத்தர் இறக்கும்வரைக்கும் இதைப் பற்றியேதும் குடும்பத்தினருக்குச் சொன்னதில்லை.... சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அக்கரையின் எம் எழுத்தவரின் சிறப்பையும் பதிப்பர்களின் செழுமையினையும் -கூடவே- ஆறும் அணையும் பிரித்தாலும் காற்றும் நிலமும் மனிதர்களும் எப்படி ஒன்றே போலவே அங்கும் இங்கும் இன்னமும் இருக்கின்றார்கள் என்றதையும்தான்.

சின்ன எழுத்தன் நெஞ்சுள்ளே நெரிந்ததும் எரிந்ததும் கிழவிக்கும் புரிந்தது. கிழவி இவன் மறுக்கமறுக்க இவன் தேர்ந்தெடுத்த ஓலைகளுக்குக் கொடுத்த பணத்தினைத் திரும்பக் கொடுத்துவிட்டாள்..... பெரிய எழுத்தரின் பிள்ளையிடம் ஒரு செப்புநாணயமும்கூடத் தானோ வெளிறோலையாரோ பெற்றுக்கொள்ளமுடியாதென்று திட்டமாகச் சொல்லிவிட்டாள்; இவன் தான் கொண்டுவந்த நறுக்கோலைகளிலே தனதும் பெரிய எழுத்தரினதும் அவரது அம்மானினதும் நறுக்குகளை எடுத்து கிழவியின் கையிலே தமது நினைவாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தான். அக்கரைச்சட்டத்தின் வரையறைக்குள்ளே தன்னுருவக்குறிப்பும் நிலைமையும் எவையென்று எடுத்துச்சொல்லி இறுதிப்படகுக்கு அப்போதே அங்கிருந்து நடக்கவேண்டிய நேரம் ஆகிவிட்டதினால், வெளிறோலையாரை அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாகவும் அவருக்குத் தன் அன்பினையும் எடுத்துரைக்கும்படியும் சொல்லி நகர முயற்சித்தபோது, கிழவி படகுத்துறையிலே அமர்ந்திருக்கும்போதாவது சாப்பிடும்படி கூறி, சிறு உணவுப்பொட்டலம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தாள். வாங்கிக்கொண்டு, இவன் மிக நெகிழ்ச்சியுடன் வெளியே நடந்தான். தான் வாக்குவாதப்பட்ட கடைப்புறம் நகர்கையிலோ அல்லது இன்னமும் பல்லக்குத்தூக்கிகளும் காளைமாடுகளும் சண்டைச்சேவல்களும் மருந்துக்குப்பிகளுடன் தடமிடும் புழுதிப்போர்க்களத்தினைக் கடக்கும்போதோ, அக்கரையின் காற்றிலோ புவியியலமைப்பிலோ பெரும்பாலான நிகழ்வுகளிலுமோ அவனுக்கு விருப்பு இன்னமும் ஏற்படாது காலையிலேயேற்பட்ட அந்நியத்தன்மை முற்றாக விலகாதபோதும், முன்னிருந்த வெறுப்பும் அருவெருப்பும் கணிசமாகக் குறைந்திருந்தன.

படகேறுதுறைக்கு ஓர் அரைமணிநேரம் முன்னராகவே போய்விட்டான்; அக்கரைக்குக் கொண்டுபோகும் பொருட்களினை அதிகாரிகளுக்கு முன்னாலே சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டுமென்ற நியதி. ஆசனத்திலே, வேறு சிற்றதிகாரி இருந்தான். இப்போது, இவன் இந்தக் கரையை நன்றாகவே வாழ்ந்து கற்றுக்கொண்டவன்போல தன் ஓலைப்பொட்டணியைக் கொட்டிய தோரணையைப் பார்த்த அதிகாரி உணவுப்பொட்டலத்தினைக் கிண்டிக்கிண்டித் தேடியபிறகு, மீளக்கட்டி எழுத்தனிடம் எறிந்துவிட்டு, அவனுக்கு உணவு தந்தவரின் பெயரையும் முகவரியினையும்மட்டும் கேட்டுக் கவனமாகக் குறித்து வைத்தபின், படகுக்குப் போகும்படி சொன்னான். படகுத்துறையிலே வந்தமர்ந்து அதிகாரியின் கைக்கோல், பதிவுப்புத்தகம், கூரிய விரல்நகங்கள் என்பனவற்றின் நாட்பட்ட கறை சேர்ந்த உணவைத் தின்பதா கொட்டுவதா என்று எண்ணித் தடுமாறியவன், கிழவியையும் அதன்மூலம் பெரிய எழுத்தரையும் -இடைப்புகுந்த ஆற்றையும் அணையையும் அலட்சியம் பண்ணி மறந்த- நேசத்தையும் அவமதிக்கக்கூடாது என்பது தெளிவுபட்டு உண்ணத்தொடங்கினான். உணவு உட்கொண்டிருக்கும்போது, முன்னிருந்த பாதையிலே, காலையிலே "இரவுக்கு முன்னர் திரும்பிவிடவேண்டும்" என்று கூறிய அதிகாரி, தொழில்சாரா சாதாரண உடையிலே போனான். இவனைக் கண்டு நிற்க எழுத்தனுக்குப் பயம் பிறந்தது; அதிகாரியோ, இவனின் அன்றையப்பொழுது எவ்வாறு கழிந்தது என்று கொஞ்சம் அன்பு செருகிய தொனியிலே விசாரித்தபின், தணிந்த குரலிலே "அடுத்தமுறை வருவதானால், இன்றுபோலவே செவ்வாய்க்கிழமை ஒன்று பார்த்து வா; இறங்குதுறையிலே நான்தான் கடமையிலே இருப்பேன்; இன்றிருந்ததுபோலச் சிக்கலிராது; திங்கள் வெள்ளிக்கிழமைகளிலே அணைக்கட்டுப்பூதங்கள் தாமே வாயிற்காப்போராகக் குந்திக்கொண்டிருக்கும்; உன்னாலே அவற்றின் இம்சை தாங்கக்கூடியதல்ல" என்று சொல்லிவிட்டுப்போனான். சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று உணவை மென்று விழுங்கிக்கொண்டே மேலுக்கும்கீழுக்கும் தலையாட்டினான். அவனுக்கு அந்தச் சிற்றதிகாரியைக் காலையிலே மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டாம் என்றுபட்டது.... அதிகாரிக்கும் தன் தொழிற்பாதுக்காப்புணர்வும் தாங்கி-சாய்த்துச் செல்லக் குடும்பங்களும் இருக்கக்கூடும் என்பதைத் தான் மறந்துவிட்டோமே(¡) என்று வெட்கப்பட்டுக்கொண்டான். இப்போது பாலத்தைப் பற்றி எண்ணமேதும் அவனுக்குள்ளே தோன்றவில்லை. 'ஆறு வேண்டுமானால், என்றைக்காவது திசை மாறி மண்சரிந்த வேறு மட்டம் தாழ்ந்த பூமிசார்ந்து ஓடட்டும், ஓடும், ஓடுமா' என்றெல்லாம் மட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது.

படகிலே ஏறியபோது, ஓலைச்சந்தை முடிந்து தொகையாக மலிவுவிலையிலும் இலவசமாக அக்கரைக்கு அறிமுகப்படுத்தவும் பெற்றுக்கொண்ட பாடைகளினையும் கூடைகளினையும் கிடுகுகளினையும் ஏற்றிக்கொண்டு இவனின் கரை ஓலைவியாபாரிகளும் அவர்களின் வளர்ப்புமுள்ளம்பன்றிகளும் அணைக்கட்டு அதிகாரிகளின் விஷேட அங்கீகாரத்துடன் எல்லோரினையும் தள்ளிக்கொண்டு முன்னர் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆற்றுக்கு அந்தத்திசையிலே இங்கிருந்து கொண்டுபோகும் பாடைகளும் கூடைகளும் கிடுகுகளும் வசதியாகப் போவதற்காகவே சின்ன எழுத்தனைப் போன்றவர்கள் இருக்கைகளைக் கொடுத்து விட்டு படகின் ஓரங்களிலே நின்று கொண்டிருக்கும்படி அணைக்கட்டுயியக்கிகள் அறுத்துறுத்துச் சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள். அவற்றினைப் பார்க்க, 'ஊருக்குள் எவ்வளவுதான் அசுரவேகத்திலே உற்பத்தி பண்ணினாலும், குருத்தோலைப்பாடைகளை அக்கரையிலிருந்து இறக்குமதி செய்தாலும்கூட சிலவேளைகளிலே இருக்கும் தேவைக்கு கட்டுப்படியாவதில்லை' என்ற உண்மை அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. ஊருக்குள்ளேயே சகலவிதமான ஓலைக்கலைகளுக்கும் ஆரம்பத்திலே வாழ்க்கைத்தொழில்களுடன் சமரசம் செய்துகொண்டாவது அணைக்கட்டியியக்கிகளினதும் முள்ளம்பன்றி வளர்ப்பாளர்களினதும் அராஜகச்சைகைகளின் நட்டுவத்துக்காகக் காத்திராது நமக்கென ஒரு சந்தையை உருவாக்க முடிந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றியது.

படகு நகர, ஏறிய பக்கக்கரையினிலே இருட்டு ஏற்கனவே குமிந்துவிட, இவனது செல்திசைக்கரையினைத் திரும்பிப்பார்த்தபடி உடலைமுறுக்கி-கழுத்துப்பிடிக்காமல் வசதிக்காக நின்றான்; அந்தப்புறம் சூரியன் நிலத்திற்குப் பின்னால் பிளந்துகொண்டு போகின்றது தெரிந்தது. இவனுக்கு ஆற்றுக்காற்று எந்தத்திசையிலிருந்து குளிருடன் வீசுகின்றது என்று சொல்லமுடியவில்லை. கொண்டுவந்ததும் பெற்றுக்கொண்டதுமான துணிக்குள் உறங்கும் தனது ஓலைநறுக்குகளை நெஞ்சோடு இறுக்கி விதிர்க்கும் ஐந்துமாதக்குழவியை அணைப்பதுபோல அழுத்திக்கொண்டான்; பின்னர், சந்தைப்பொருதுகளத்திலே பொறுக்கிய நறுக்குகளைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, படகின் வெளியே எறிந்து, பதிலுக்கு ஆறு உறுமுகிறதா அல்லது ஓலமிடுகிறதா என்று கூர்ந்து கவனிக்கத்தொடங்கினான் சின்ன எழுத்தன்.

'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.

4 comments:

செல்வநாயகி said...

///பதிவிட விஷயமில்லாவிட்டால், அதைக் கையாளுவது எப்படியென்றே ஓரிடுகையைப் போட்டுக்கொள்ளலாமென்பதைவிட்டால், வேறென்ன வழிகள் என்ற பட்டியல்
1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -
உதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)////


உதைப்பவர்களின் பெயர்களை எழுதாமல், உதைப்பது, உதைபடுவது எல்லாம் செரித்தும் வலையுலகில் (எழுதுவதிலிருந்து) செத்தும்போகாமல், யாரையும் சாகடிக்கவும் விரும்பாமல் உலவும் கிறுக்குகள் யாரும் இல்லையா என்ன இங்கே பெயர் சொல்லியோ சொல்லாமல் பெயரிலே ஒரு ஒற்றையோ அல்லது ஒற்றின் உச்சியிலே உள்ள புள்ளியையோ மட்டும் எடுத்துவிட்டு எழுதிப்போடுவதற்கு:)) "சக்தி" யை "சகதி" ஆக்கத் தெரிந்த உங்களுக்கு இதெல்லாம்கூட என்னைப் போன்ற அங்குமிங்கும் அரைநாளாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே அலையவேண்டிய அற்பங்கள் வந்து சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது என்ன செய்ய:))

பின்குறிப்பு:

இந்தப் பழைய பதிவு அருமை. நேற்று முந்தைய இடுகையிலே மூக்கு சுந்தருக்குச் சொன்ன பதிலிலே பின்னிரவிலே நீங்கள் தூக்கம் வராமல் நடக்கவேண்டியதன் பின்னான வலிக்கு அழுகை. இந்த அழுகை பெயரிலிக்கு மட்டுமல்ல, (இங்கேமட்டுமல்ல எங்கேயும்) எந்த ஈழத்தமிழ்நாட்டு மனுசனோ மனுசியோ சொன்னாலும் கண்களை முட்டிக்கொண்டு வந்து தொலைக்கிறது. அதிலே எந்த மனுசன் மனுசி எங்கே எனக்கெதிராக எத்தனை முறை கத்தி சொருகினார்கள் அல்லது எனக்கு மாலையிட்டார்கள் என்று கணக்கிலே வைத்திருந்து பழிக்குப் பழியாக அளவுபார்த்து திருப்பி அந்த மனுசன் மனுசியின் வலியில் அடிக்கவோ அல்லது எனக்குப் போட்ட மாலையின் நீளத்திற்க்கேற்றார்போல் கண்ணீரின் அளவை இன்னும் இரண்டுபடிகள் அதிகமாய் அளந்து ஊற்றவோ முடியாமல் அந்த நேரத்தில் விரல்களால் சுண்டி எறியும் சிலதுளிகளாகவோ, ஒருதுளியாகவோ தன் கண்ணீர்ப்பையின் சுரப்புத் திறன் சார்ந்தேவும் இருக்கிறது.
எங்கே எவரோ அழுதாலும் அழுதுட்டும் போகட்டும், இலங்காரத்னாவும் ஆகிவிட்டுப் போகட்டும் என்று ஓரமாய் உட்கார்ந்து தொலைக்காட்சியிலே சிவாசி போட்டுவிட்டுக்கொண்டு பாப்கார்னும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கமுடியாமல் இங்கே மற்றவர்களின் உணர்வை ஏதோ ஒருவிதத்தில் தூண்டிவிடுகிற செய்திகளையெல்லாம் எடுத்துப்போட்டுக்கொண்டு இருக்கிறேனே!!!!

இடுகையாக எழுத ஏதும் இல்லாததால் இப்படித் தேடிப்பிடித்து நிரப்பும், என் உள்மனதில் எனக்கே தெரியாமல் உறங்கும் ஒரு ஆசையின் சிறுதுளியாக இருக்குமோ!! இருந்தாலும் இருக்கும். "எங்கே என்ன பூக்குமென்று யாருக்குத் தெரியும்? ". நன்றி பெயரிலி.

-/பெயரிலி. said...

/உதைப்பவர்களின் பெயர்களை எழுதாமல், உதைப்பது, உதைபடுவது எல்லாம் செரித்தும் வலையுலகில் (எழுதுவதிலிருந்து) செத்தும்போகாமல், யாரையும் சாகடிக்கவும் விரும்பாமல் உலவும் கிறுக்குகள் யாரும் இல்லையா என்ன இங்கே பெயர் சொல்லியோ சொல்லாமல் பெயரிலே ஒரு ஒற்றையோ அல்லது ஒற்றின் உச்சியிலே உள்ள புள்ளியையோ மட்டும் எடுத்துவிட்டு எழுதிப்போடுவதற்கு:)) "சக்தி" யை "சகதி" ஆக்கத் தெரிந்த உங்களுக்கு இதெல்லாம்கூட என்னைப் போன்ற அங்குமிங்கும் அரைநாளாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே அலையவேண்டிய அற்பங்கள் வந்து சொல்லித் தொலைக்கவேண்டியிருக்கிறது என்ன செய்ய:))/

ஐயோ!! ஐயோ!
இதென்ன கிணறுவெட்டப்பூதம் கிளம்பின கதையாக...

மெய்யாகவே இங்கே நீங்கள் சொல்வதிலே தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. சக்தி? சகதி?? எங்கே அப்படியாகப் போட்டிருக்கின்றேன்.
சத்தியமாக நான் எங்கேனும் எழுதியதைத் தற்செயலாக உங்களுக்குச் சொன்னதாக எடுத்துக்கொண்டீர்களென்றால், என்ன சொல்வதென்று தெரியவில்லை.

என்ன சொல்கிறீர்களென்றே புரியவில்லை செல்வநாயகி. கொஞ்சம் விரித்து இங்கேயோ தனியஞ்சலிலோ சொன்னீர்களென்றால், விளக்கம் தர வசதியாகவிருக்கும்.

இதுக்கு நான் நேரடியாக,
1. சிவாஜியின் வசூல்,
2. பெண்விடுதலைக்கவிதை
3. ஈழத்தின் இன்றைய இறப்பு
4. அப்துல் கலாமுக்கு என்ன ஆச்சும் அரசியல்வாதிகளும்
என்ற பட்டியலையே நேரடியாகப் போட்டு தானம் தருகின்றவர்களிடம் விழுகிறதைப் பார்த்திருக்கலாம்.

-/பெயரிலி. said...

செல்வநாயகி, "Fame (sic) preceeds the person" என்பது என்னிலே இன்னொரு முறை வாய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கின்றதோ?

செல்வநாயகி said...

ஆமாம் பெயரிலி,

நீங்களெல்லாம் home(country) sic இலே துவண்டு கொண்டிருக்க அதிலே குளிர்காய்ந்து ஒரு வலாரத்னா வாங்கி எங்காவது தொங்கவிட்டு அதில் தூரி கட்டி ஆடலாமென்ற fame sic துரத்தத்தான் அலைந்துகொண்டிருக்கிறேன்:)) உங்களின் அரிய பெரிய கண்டுபிடிப்பு இது. பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்:))