Monday, July 09, 2007

பழசு - 4

".... ஆங்கே அல்குல் அகல..."

கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,

1.
எனக்குப்
பெண்குழவியில்லை.

2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.
கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.

கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?

சுதர்ஷனி ஆவி அறிக; நான் நெபுயேவின் 'லொலிட்டா'
விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.

ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலே இழுத்துக் கட்டியிருக்கவேணும்.

உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.
அதுவரையில்.....

நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;

இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;

நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........


..........." ............ ஆங்கே,

காம அல்குல் அகல,

ஒல்கு இடைவிரிந்து

ஒசிந்து தான் உருள,

துள்ளித் தெறித்து

எண்துண்டாய் விழுந்தது,

பொறிபடத் தரையில்

பெண் பூண்

பொன் மேகலை.... "'99/07/15 வியாழன்
~~~~~~~~~~~~~~~~~
உடைப்பும் உருவமைப்பும்

Constructive Marxists, read from top to bottom;
Deconstructive Post-modernists, read from bottom to top;
Intellectual academics, first "zig-zag" as usual, and then ,
watch Paddaiyappa,
read Anandavikatan,
quote KuraL,
keep low profile,
post 'unsubscribe' mails,
praise the 'Lords of the net-flies',
and, finally rest in cozy arm chairs.
Others, overpass the post and go to the next.தலை அல்லது வால்:-

முன் உடைப்பும் உருவமைப்பும்
உருவமைப்பும் பின் உடைப்பும்
ஒப்பற்றனவல்ல,
ஒன்றை விஞ்சி இன்னொன்று;
உருண்டு சுற்றும்
உப்பற்ற சடங்குருவே
உள்ளே தம்மமைப்பே.

முண்டம்:-

கட்டுமானமும் .......
..........................


காலச் சிலை உறைந்தது
கர்ப்ப மூலத்தில்.
உட்கரு,
துருக் கொட்டியதாம்
தூளாகிச் சடங்குருவில்.
சிறைப்பட்டுச் செத்தது சிலை
நளின நர்த்தனத்தே
சொல்லவரு சேதியெலாம்
என்று நகுந்தனர்
நயமற்ற இளைஞர்.

குழுமினர்;
உருவினர் ஆயுதம்.
உருத்தலை சிதறிச் சரிந்தது,
உட்கார்ந்திரு தெய்வம்.
கொல்கருவி,
குதித்துக் குதித்தாடிற்று
கோவிற் சுவரெங்கும்.

மழுங்கிய தலையினர்,
மறைந்தோடிப் போயினர்.

தரையினில் அமைதி.

அடித்துத் தட்டிய தரையினில்,
புதுக் கல் சுட்டு நட்டு,
ஒப்பற்றதோர் கட்டிடம் சமைத்திட
கட்டினர் கங்கணம்.

கனதியாய்த் தட்டுண்டது
கால் பட்டதோர் கருங்கல்;
சிற்றுளி செதுக்கச் சுருண்டது,
இருட்செதில் சொட்டிப் பாறை;
வரை நிழற்சித்திரம் ஒன்று,
உற்றது உரு
முப்பரிமாணம்;
பொன்-உடைத்த இடத்தே
சின்னமானது இன்னொரு வன்னச்சிலை.

கல் வேறு;
ரூபக்கல்லமை அருவக்கரு வேறு;
கட்டித்த சுத்தியலறை கரங்கள் வேறுவேறு;

ஆயினும்,
களம் ஒன்று;
இனியும்,
கவின்சிலை உண்டு.

சூல் கொண்டன,
புதுச்சிலைசூழ் செயல்கள்.
அம்பாய்ப் புகுத்தினர்,
அவை சுற்றி அர்த்தம்.

பின்,
மௌனத்தே சடங்கு யாகம்.

இனிவரும் இளைஞர்க்காய்,
இருட்டுக் கர்ப்பமூலத்தில்
உறையும்,
காலத்தே கட்டித்துக்
கருஞ்சிலை.

பிசிறின்றிச்
செத்துப்போம் சுழல்வில்
பிறிதொரு காலம்.

...........................
......... கட்டுடைப்பும்.99/07/16
~~~~~~~~~~~~~~

நாட்டுப்பற்று

நேரான தெருவுக்கு நேர் குறுக்கே காரோட்டு
இரவுத் திரைப்படத்தை வேலைப்பொழுதில் விமர்சி
அலுவலக் குளிரூட்டியை அணைக்காமல் வீட்டுக்குப் போ
மேல்மாடிக் குப்பையை இருட்சன்னலாற் கவிழ்த்துக்கொட்டு
பெட்டிவாக்கு, துவக்குத்தோட்டாக்கு வலிதென்று பேசு
அரசியல்வாதிகளை அவதூறாய் அடித்துப் பழி
பணக்காரமுதலைகளின் பலிக்கடா நீ என்று சொல்லு
அமெரிக்கத்தூதரகத்தில் அதிகாலையிலே காத்து நில்லு
கணணிச்சுவர்க்காகிதமாய் உன் தேசக்கொடி பரவ ஒட்டு
சுரணையின்றிச் சாத்திக்கொள் அரசுச்செய்திச்சக்கைச்சூரணத்தை.


இனி, நீயே சங்கிலியாற் கட்டி சட்டையிற் கொழுவிக்கொள்,
உனக்கொரு ஒப்பற்ற நற்சான்று:-
"எத்தேசமும் காணாத நாட்டுபற்றுமிக்கோன்
நான் ஒருத்தன் மட்டும்தான் நம்நாட்டில் மிச்சமாம்."

~~~~~~~~~~~~~~~~~~~


தாய்த்தமிழுக்கு வணக்கம்

முற்கால திக்காத துல்லிய தமிழ்த்தாத்தாக்களைத் தெரியும். இப்போது,திக்குத்திக்காய் அலகு குத்தி முளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறது ஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரை என்று சொன்னால்,குறி தப்பாமல் தப்பான தமிழ்த்தாதா வா வேனோ நான்?
இலக்கணம் இவரின் சொத்து; இலக்கியம் அவரின் சொத்து; இடைப்பட்ட சொத்தை மட்டும் எனக்கான பிதிர்த்தேங்காய்ச்சொட்டு.
சரித்திரத்திற் கிவர் வாரிசு; சாஹித்யத்துக் கவர் வாரிசு - மீதிச்சரிப்படா சங்கதியெல்லாம் சக்கடத்தா னெனக்கென்றாச்சு.
கைக்கோல் பண்டிதன் கக்கம்; கத்தரி காண் விமர்சகன் சட்டம்; கத்தரிக்கும் கோலுக்குமிடை அந்தரிப்பதெந்தன் கட்டம்.
தத்துவத்துக் கொப் பவர் கூடு; நட்டுவித்துக் காப்பவர் பாடு; -தின்னப் புட்டவித்து விற்று நாளும் போஷாக்கு பார்ப்ப தாரோ?
ஓரிரண்டு ஒப்பில்லா மொழி திக்காத முற்காலத்தமிழ்த்தாத்தாக்களைத் தெரியுமென்றாலும்கூட இப்போதுதான், திக்குத்திக்காய் வாயலகு குத்திமுளைக்கத் தத்திக் கொண்டிருக்கிறது ஒரு தமிழ்மாமாக்கள் பரம்பரை என்று சொல்லமட்டும்,குறி தப்பாமல் தப்பான தமிழ்த்தாதாவா வேனோ நான்?

16, நவம்பர் 2001 வெள்ளி 04:22 மநிநே.

~~~~~~~~~~~~~~~~~

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்து வலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன் கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அஃது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இ·து எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல; கிழக்குத்தீமோர் ஒலம்பிக்கில் நடந்த இன்றைய நாளினை நினைவிலே வைத்துக்கொள்ளமட்டும் எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the race. They sent me to finish the race."
- During 1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place winner.

~~~~~~~~~~~~~~~~~~~

''We have a package...(which) we will disclose at a proper time'' *

எங்களிடம் ஒரு பொதி உண்டு;
வேண்டியபோ ததை நாங்கள் திறப்போம்.

எங்களிடம் இரு நிலைகள் உண்டு;
விழைந்தவே ளையில் விரித்துப் பிழைப்போம்.

எங்களிடம் சில பொடிகள் உண்டு;
விரும்பியபோ தவை நாங்கள் விசிறுவோம்.

எங்களிடம் பல நாய்கள் உண்டு;
வேண்டாதபோ தவை நாங்கள் அவிழ்ப்போம்.

எங்களிடம் எதுவுமே இல்லை;
எல்லோருக்கு மெம் மில்லாமையையும் பிரிப்போம்.

ஸீயஸ் பண்டோராவிடம் ஒரு பெட்டியைத் தந்தார்;
திறந்தபோ ததில் தொல்லைகள் தொடர்ந்து வந்தன.

-/
'00, யூலை 04

*Thanks to Ajit Panja.
http://famulus.msnbc.com/FamulusIntl/reuters07-03-101202.asp?reg=ASIA

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மணற்றிடர் மாந்தருக்காய்....#

இங்கே,
படகுகளை இழந்துவிட்ட
மணற்றிட்டு மனிதருக்காக
எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
*****

எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

******
என்னை விடு எனக்கென்ன குறை?
எழுதிக்கொண்டிருக்கின்றேனே
எலியைப் பற்றியாவது,
எவரையாவது பற்றியேதாவது;
என்னவரை, மண்ணவரை,
எங்கேனும் ஆழிமணற்றிட்டில்
திக்கற்றுத் தனி நின்றவரை,
படகை, கடலை, மீனை, தமிழை,
நிலத்தை, நெருப்பை, பனையை, முனியை,
நினைவை, கனவை, சனியை, பனியை,
சளியை, வளியை, வலியை, கலியை,
இரவே கவிந்த இருளின் செறிவை,
குனிந்த புருவத்தை, கொன்ற நற்காலத்தை,
பனித்த சடையை, பாவக்கரங்களை,
மதர்த்த கொங்கையை, மடிந்த பெண்டிரை,
உடைத்த பொற்பாதத்தை, உடையா நன்நம்பிக்கையை,
முனித்த சேனையை, முடியாத் துயரத்தை,
வனைத்த பானையை, வள்ளியை, மலைக்குறமாதை,
சினைத்த கர்ப்பத்தை, சிதிலித்த பிண்டத்தை,
நரிப்படு மனிதரை, நாய்ப்படு நம்வாழ்க்கையை,
தமிழ்ப்படு பெருந்தாயகத்தை, தவறிய எம் கட்குறிவீச்சை,
குறைப்படு நோக்கினை, கொல்குற்றப் பெருஞ்சாட்டினை,
எதைப்படவோ இருக்காமல் எழுதுவேன், எழுதுவேன்
இங்கே எங்கோ என் உயிரிரந்த பூமியில்,
தங்காவோட்டங்காண், தமிழ் எழுத்தாணி இற்றல்வரை.

இதில் வயப்படா நண்ப, எம் திசை கிளைப்படு மிங்கே.
புறப்படு நீ போ, போய் புக்குன் உடற்சிறைக்குள்.
மாது அணைப்பினுட் சேரு; நம்மூழ் மறந்துறவாடு.
சினைப்படப் பெருக்கு; சிக்கிக்கொள் உன்னுள்ளே செய்சித்தம்;
வசித்திரு வுலகு தானே வழிப்படச் சிறக்குமென் றன்றோவுன்னிருப்பு?

நினைவிற் கடற்பரப்பில் வாழ்வேன்; என் கைக்களைப்பினைக் காண்பேன்.
அந்தோ!
மணற்றிடர் மாந்தர் மீண்டும் கடல் புறப்பட்டார் கண்டேன் யானே.
செல் திசைக்குறிப்பறியா மூடர், மீண்டும் வலிந்து
சென்றார் வடக்கினை வழியென் றெண்ணி.
உன்னில் வடக்கிருந் திறந்தால் வாழ்வி
லெமக்கு வழி பிறக்குமோ,
சொல்
- கடல் மணற்றிட்டே?

******
இதிலேதென்றாலும்,
என்னையிங்கு விட்டுவிடு;
எனக்கென்ன குறை இனி?

படகுகளை இழந்துவிட்ட
கடல் மணற்றிட்டு மாந்தருக்காய்
கவி பாடிக்கொண்டிருப்பேன்,
ஒரு பனிப்பசுமைத்தேசத்து,
குளிர்பதன அறையிருந்து.

17 ஜூன், 2000

# "A group of Tamil refugees has been refused entry to India and
handed over to the Sri Lankan navy on a remote uninhabited island off
India's southern coast." - BBC, Saturday, 17 June, 2000, 15:56 GMT
16:56 UK
http://news.bbc.co.uk/hi/english/world/south_asia/newsid_795000/795230.stm

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.

14/ஜூன்/'00
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உருவிலி

அனுமானிப்பதை அப்படியே அறுத்துவிட்டால்
அரைப்பங்கு ஆகிவரும் என்று படுகின்றது;
பட்டாம்பூச்சிகள் பற்றிப் பாடல் எழுதுவதைப்
பத்தியச்சோற்றைப் போல் படிப்படியாய் நிறுத்திவிடலாம்;
ஆனால்,
அந்தரத்தில் அப்படியே இன்றைய இரவோடு,
அனுமானிப்பதை முற்றாய் அறுத்தாற்றான்,
அரைப்பங்கு தானாய்ச் சரியாகும் என்று படுகின்றது.

பாதிப்பேருக்குத் தானாய்ப் புரிகிறது;
மீதிப்பேருக்கு பாடமோ படிவதில்லை.....
நிகழ்வான திதுவானால்,
யாருக்குக் கம்பசூத்திரம்?
யாருக்குக் குறியுடைத்து,
அதற்கொரு விரிபாஷ்யம்?

இலக்கு இதுவென் றானபோதில்,
இடதால் இலகுவாக இங்கே வரமுடிகிறது;
சுழன்று வலதாலும் வளைந்து வந்து,
இடதின் வலதுகையை இறுக்கக் குலுக்கமுடிகிறது.
இலக்குக்கு இல்லை,
இடதும் வலதும்.
எம்மவர் என்பது மட்டுமே இருப்பு.

அசந்த வேளையில்,
"Profit over People:
neoliberalism and global order"
உரைத்தார் நோம் ஸோம்ஸ்கி.

அரண்டுபோய்,
சுரண்டி,
உரித்துப்பார்த்தேன் அவர் தோலை;
ஆதிசங்கரர் அரைச்சப்பணத்தில்
அலங்கமலங்க விழித்துக்கிடந்தார்.

உருவம் உரிக்க உரிக்க,
உடலிலி ஒரு வெங்காயம் மட்டும்தான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இடைக்கால அமைதி

"வெடிக்குமா? வெடிக்காதா?"
என்ற வேடிக்கை-விசர் மேவி
சொக்கப்பானைப்பூமியில்
திரி கொளுத்திப்போட்ட
சீனவெடிக்குமுன்னால்
கோணிக் குந்தியிருக்கிறது
என் சனம்.


எப்போதும்போலத்தான்,
எதையும் திடமாய்
எண்ண, சொல்ல, எழுத
ஆகாத
இப்போதும்.


கறுத்த இரவு தட்ட, நெடுநாள்முன்
துவக்குவெடிக்குட் தொலைந்த
கடல்நிலவைத் தேடிப்போனால்
உப்பு மணல் கரைந்து
குப்பென்று நுகர்நாசி
கிட்டும் குளிர்காற்றை
தேவாசுரர் கடைந்து மீந்த
கடைசி அமுதச்சொட்டென்றென்று
உனக்கேனும் உரத்துச் சொல்லி
உறுஞ்சி உட்பை தக்கவைத்து
இளக்கி மெல்லவிடு மேலே;
மூச்சுவெப்பு கிள்ளிக் கரையட்டும்
வெண்கடற்புகார்; உன் உள்ளத்தணல்.

இங்கே சொல்வது மறக்காமல்,
சவட்டைக்கால் கிறுக்குப்பிடித்து
குறுக்காலே பாதை நறுக்கிப்போகும்
சிறுத்த கோணல் நண்டுகளை
செல்நாட்கள் நினைவிருத்தி
நான் அழுத்திக்கேட்டதாயும்
எடுத்துச் சொல் நன்றாய்.
தேசத்துப்பேட்டுக்குருவிகள் பாட்டை
உள்ளுக்குள் இன்னும் நான்
அசைமீட்டிக் கேட்டுக்கொண்டிருப்பதாயும்
ஊட்டிச்சொல் என் உணர்வை.

செல்; விரை; ஓடு...
பிய்யமுன் முழு
நிலவை மோந்து
முகில் நிழலில்
மணல் தூங்கு;
கிடைத்த வெளியில்
அகட்டிக் கைபரப்பு; கால்பரப்பு.
பாதம் புதை; பத்துவிரல் கழுவு;
அலை தழுவ, அடி பதி;
ஓலக்காற்றில், ஓலைக்கீற்றசைவில்
உனக்கோ எனக்கோ
பித்தாய் ஒட்டிப் பிடித்த
ஓர் எட்டு வரி கவிதையை
குரல் பெருக்கிச் சொல்,
கோணமலைப்பித்தனுக்கு;
கேட்டவர் சிரித்தால்,
நாக்குக் கடியாதே;
இன்னும் கேளென்று
முழக்கிச் சொல்
மேலொன்று,
கடல்மேல்,
மணல்மேல்,
காற்றின்மேல்.
இதுவரை எவர் சிரித்தார்?
இனி வரவும் எமக்கெதுவோ?
கலகலத்துச் சிரிக்கச் சொல்,
கத்துங்கடலுக்கும் ஒரு பிடிகவி.
விதைவிதையாய்ப் புதைமணலுள்
சோகி சிப்பி சப்திக்க விசிறி எறி,
இத்தனை நாள் புத்தகப்பொறிக்குள்
அச்சப்பட்டுப் பொத்தி வைத்த
எம் துக்கக்கவித்தொடர்,
கலித்தொகையெல்லாமே.

மேல் காற்றுத் தடவ,
கசியக் கடல் படிக்க,
நற்சுருதிப்பாட்டொன்றை
ஆழப் பொத்திப் புதை
நம் நாட்டு மணலுள்;
நாளைக்கோ,
இன்னொரு வேளைக்கோ,
வரும் எம் வீட்டுச்சிறு
துள்ளல் ஆட்டுக்குட்டிகள்
தாவிப் பறித்துத்தின்ன
தழை இலை முளைக்கும்
பாடல் மரமாகட்டும்
வருங்காலத் தல விருட்சம்.


இப்போது போலத்தான்,
எதையும் திடமாய்
எழுத, சொல்ல, எண்ண
ஆகாத
எப்போதும்
எமக்கென்றேயானது.

யார் கண்டார்?
முன்னைப்போலவே,
பின்னைப்பிள்ளைக்கறியுங்கூட
ஒல்லப் பசியாறட்டுமென்றான
குமிழ்மைம்மற்பொழுதுமாகலாம்
இது.


அதுவரைக்கும் கிடைபொழுதில்,
அகல் தேசத் திக்கேதென்றாலும்,
நகர்நிழலின் வாசம் தக்கித்துயிலும்
அக்கடலின் நீரை இறைத்தெடு
என்னை உன் கைகளில் அள்ளி.
எடுத்துச்செல் கையோடு எம் வீடு....
....செல் வழியில்,
எங்கே காட்டு எனக்கென் இழந்த ஊரை

05, Mar. '02 Tue. 04:38 CST

3 comments:

Anonymous said...

ம்

டிசே தமிழன் said...

எதன்/எவர் பொருட்டோ மீண்டும் இப்படிச் சேர்த்து வாசிக்க முடிந்ததே. அதற்கு அவைக்கு/அவரவர்க்கு நன்றி. தங்களுக்கான நன்றி -தொகுப்பாய் கவிதைகள் வெளிவராத மட்டும்- இல்லை என்க.

-/பெயரிலி. said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
இப்படி நாலு பேர் கேட்கவேண்டுமென்றதற்காகவே நாலு பழசு வருசத்துக்கென்று போடுகிறேனென்று நாலு பேர் சொல்லமுன்னால்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்