தமிழ் இலக்கியவாதிகளும் என் ஓர் ஆனி சனி மாலையும்
" முற்பகல் 11:00 கார் வருகிறது - திரும்புகையில்
பிற்பகல் 01:30 நீ வருகிறாய் - பின்
மாலை 5:30 இலக்கியக்கூட்டம்" - என்று
"தாத்தா தவறிவிட்டார்;
இரயிலேறி இங்கு நில்லு" என்பதுவாய்
கட்டெறுப்பு சுள்ளென்று
கடித்ததுபோல்,
போனதொரு சனி காலை
ஒரு கணினிக்கடிதம்,.
நல்லை நல்ல பையன்தான்;
இல்லையெனேன்; ஆனால்,
உள்ள(த்)து இலக்கியப்பித்து.
ஊரிலே ஒவ்வொரு முழுநிலவுக்கும்
உள்ள ஓட்டைக்கூரைச் சிறுவர் பள்ளியன்றின்
காக எச்ச மேசைக்கருத்தரங்கு
'சங்கப்பலகை' என்ற
சங்கீத, சங்கத்தமிழ்நாமத்திலே
"சமுதாயச்சீர்திருத்தத்திற்கு
பங்கிடு பொதுவுடமையா?
முதலாளி முழுவுடமையா?"
என்பதுபோல் மக்கள் மோகிக்கா
முழு மோசமான மூடத்தலைப்பிலெல்லெல்லாம்
ஏழெட்டுப்பேர் குந்தி இல்லாத இழவெல்லாம்
ஊசிப்போன வடையோடும் வாடையோடும்
பேசிக்கிடைக்கையிலே, ஊர்சுற்றும்
பொலிஸ் அவருடலைத் தம்முடையாக்கி
உள்ளே வாட்டி வரி போட்டபோதும்,
வெளிற்றுத்தூளிட்டுச் சலவை செய்தும்
வெள்ளை எட்டுமுழ வேட்டிமேலே
போகாத பாணிப்பினாட்டுக் கறைகணக்காய்
கனக்கவே மனதில்
இளித்துக்கிடந்தது இலக்கிய ஆர்வம்.
சின்னதாய் இப்போது,
கல்லறைதூங்கு அவன் அப்பா, "ஒடியல், பனங்கிழங்கு
சில்லறை வியாபாரம்" சீவரத்தினத்தார்போல, என் மன
உள்ளறையுள்ளும் ஒரு குறை:
"ஊர்ப்பள்ளி சங்கப்பலகை மேசையெல்லாம்
வெள்ளரசுக்கிளை கொண்டு செய்திருந்தால், ஏதோ ஒரு
வைகாசிப்பௌர்ணமிக்காவது பொல்லென்று அவன்
இளைய முழுமொட்டைத் தலைமீது
பொழிந்திருக்கும் ஞான ஒளிமழை; இல்லையென்றாலும் கூட,
ஓரிரு சில்லறைத் துளித் தெளிப்பாவது சிந்தியிருக்கலாம்.
என்ன செய்ய? பள்ளிக்கூட மேசையெல்லாம், அரசுச்
சொந்தத் தச்சுவேலைக்கூடத்திலே, ஒட்டுப்பலகையாற்
சட்டுப்புட்டென்று வெகுவிரைவில் ஒட்டு
விட்டுவிடவென்றே திட்டமிட்டுச் செய்ததாலே
சாதிச்சுத்தம் விட்டுப்போச்சு மரமேசையெல்லாம்.'
சரி விட்டு வைப்போம் அக்கதையை
வேறொரு வேளை கிட்டும் வேலைக்கு.
//நாட்டில் நடமாடும் மக்களுடல், இஷ்டப்பட்டவரெல்லாம்,
வேட்டை பண்ணி, கரியடுப்பு அடுப்பு ரொட்டிபோல சுட்டுவைக்க,
சங்கப்பலகையை ஊர்ச்சந்திச் சந்தையிலே ஊன் வெட்டத் தொங்கவிட்டு,
இனி வேண்டாம், இந்தப்பங்கமென்று தன் முதற்
சங்கம் மூடிக்கட்டி, திரை கடலோடித் திரவியம் தேடவர
இங்கொரு சிறு இடைச்
சங்கம் தோன்றியது என் நண்பன் நல்லைக்கு.//
கார் வந்தது 12:00 மதியம்.
திரும்பியது 3:30 மாலை.
சங்கத்தின் ஒவ்வொரு முக்கிய அங்கமும் தன் அங்கமெல்லாம்
பொங்கு சதையுடனும் தங்கப்பொலிவுடனும்
வந்து முடிய மணி 8:00 இரவு.
இலக்கியக்கூட்டம் இலங்கை இந்திய நேரப்படிக்கோ இல்லை,
இங்கே உள்ள இடைமேற்கு நேரப்படிக்கோ என்று கேட்காமல் விட்டதற்கு
என்னை இடைவிடாது எத்தனையோ திட்டிக்கொண்டேன்.
"ஏனப்பா, இதற்கு சிறு இடைச்சங்கமென்று பேரிட்டாய்?
இந்த இடைச் சங்க, முதற் சங்கப்பிளாஸ்ரிக் பலகைக்கு வந்த
எந்த ஓர் அம்மணிக்கும் சிறு இடைக்கும் எட்டாத பூமி
விட்டப்பொருத்தம்
என்றெனக்குப் பட்டிருக்குது" என்றேன் பட்டென்று மனதிற் சுட்டதை
வெளிவிட்டு.
நல்லை கொல்லத்துணிபவன் போல் கோர வேட்டைப்பல்லைக்
கடித்தான்,ஞானப்பல்
இல்லாத தனி நாய்ப்பல்மனிதன் போல;
மேல்வீட்டு வெள்ளை அல்ஷேசனும் பாற்கடல் ஆதிஷேசனும்,
விவித்பாரதி விளம்பரசேவை இடை
வந்த நேயர் விருப்பமாய் ஒரு நிமிடம் தலைதூக்கித்
துள்ளிப்போயின.
வாலி வாலை உட் சுருட்டி. "இல்லை இல்லை, நல்லை;
என் உள்ளக்கமலம் உத்தமனார் வேண்டு
குயில் நீலம் தரும் கொள்ளை வெள்ளை.
சிறு இடைச்சங்கம் என்ற பெயரும் நன்றாகவே இருக்கும்; நீயிட்டால்,
மசாலா வடைச்சங்கம் என்ற பெயர் கூட வாகாய்த்தான் பொருந்தும்"
என்று
மெல்லிய குரல் உரைத்து மேலே நட்ட கல்லாய், இனி
என் சித்தமெல்லாம் மூலைச் சுவரென்று நான் இருந்தேன்.
இடது பாதம்தூக்கு தில்லைப்பெருமான்கூட திகைத்து
சிதம்பரக்கோவிற் கொல்லையிலே ஒளியும் வண்ணம்
இரு பாதமும் நிலம் பாவாது துள்ளிப் பறந்து
நடமிட்டுச் செயல் நடத்தியிருந்தான் நம் நண்பன்;
விழிப்புருவம் வழித்து, பின் அ·து இருந்தவிடம் இருட்டு
வர்ணக்கற்றைச்செயல் வளைத்து வந்த வனிதாமணியிடம்
முன்னம் அவர் நாமம் கேட்டான், பின்
மூர்த்தி தான் நடத்தும் செயல் வண்ணம் சொன்னான்.
பின்னொரு முறை கன்னியுடன் பேசுவதாய்த் (பிதற்றுவதாய்த்?) திண்ணமாய்
உரைத்து,
முன் நகர்ந்து, இன்னொரு
தன்னந் தனிக் கனவானிடம் "இன்னமும் வேணுமோ
பொன்னிறத் தண்ணீர் அவர் கலை வண்ணம் வானவில்லாய்
சிந்தனை விசும்பெங்கும் சிறகடித்து ஓங்கி விரிதலுக்கு?"
என்றொரு சின்னக்(!) கேள்வி அம்பு.
பானப் பரவசமிருந்தவர் பதில் பிரவசமாகுமுன்,
இடையிற் பஞ்சுக்கதிரை ஒன்றுக்குள்
தலை ஒளிந்திருக்க பெரும்
நிகொட்டின் புகை விட்டுப் பிறந்தது, அசரீரி ஒன்று,
"வேலையால் வெந்தபோதும் நான்
தமிழ் வேட்கையால் இங்கு வந்தேன்.
ஆகையால் நீரெனக்கு
என்ன தலைப்பில் எவர் என்ன பேசுவார்
என்றுரைத்துத்தானாக வேண்டுமென்று."
" 'தமிழ்த்தலித் இலக்கியவாதிகளின்
புலம்பெயர்தற் சிந்தனைகளும் போக்குகளும்'
என்று ஒரு சீர்த்தூக்கி அலசு இலக்கியக்கட்டுரை
தர நண்பர், ரொரண்டோ எஸ். லெனின்; "
என்றொரு நல்(¨)ல பதில் பிறக்க,
என்னருகே
இத்தனை இரு மணிநேரத்துக்கு
கம்யூவும் கப்ரியல் கார்ஸியாவும்
என்று அந்நியமாய்ப் பேசிக்கிடந்த
பக்கத்துக் கதிரைத்தமிழர்
பச்சைத்தமிழ் இரத்தம்
செக்கச்சிவந்து சூடேறி,
முதல்முறையாய்த் தமிழுதிர்த்து,
"நாசமாய்ப்போச்சு" என்றார்.
நாயினேன் எனக்கு என்ன பிரச்சனை என்று
உறைக்கவில்லை; அறிவுவிழி திறக்கவில்லை.
கதிரைக்கனவான் கடித்துக் கத்தாதகுறை;
கத்தி எடுத்து என்னை வெட்டாத நிலையில் கேட்டார்,
"தலித் இலக்கியத்தில் லெனின் கருத்துரைக்கலாமோ?"
எனக்கென்றால் கக்கத்திற் கூட மிகு வெட்கமாய்ப் போச்சு;
தமிழ்ச்சினிமாக் கன்னியின் தொடை
திரை கண்ட 'குடும்பப் பெண்'ணெனக் குனிந்து கொண்டேன்;
வேறு கதிரை இடம்பெயரவும் முடியாமல்,
கழுத்தை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டார்,
புலம்பெயர்ந்த கனவான் கண்ணீர் கதறிப்
பெருகு பெரும் புலம்பல் புரையேற;
"நல்லது; நீயே சொல்க நண்ப,
தலித்துக்கு வக்காலத்து வாங்க
லெனினுக்கு தகுதி என்ன?
தோட்டி என்று இவன் அப்பன் காட்டம் பண்ணியகாலம்
இன்னமும் மழை மூட்டமாய் கவிழ்ந்திருக்கு என் மனதில்.-அந்த
ஆட்டம் முடிந்ததனால், இவன் புதிதாய்ப் போட்டுப்
பேசவந்தான், தலித்துக்கு பக்கத்தவில் தானென்று சொல்வதுபோல்."
குரல் தவித்துபோனேன்; உடல் தகித்துப்போனேன்;
ஒட்டக்கூத்தருக்கும் ஔஔஅவ்வைக்கும் இடையே
இப்படி தமிழ் உணர்ச்சிச் சுத்தத்தில் சித்தம் கலைந்து,
எத்தனை ஒல்லிப் பொடிப் புலவர்கள் உதைபட்டு செத்தாரோ
என்று உள்ளத்தே ஓலமிட்டு சிறு ஒப்பாரி வைத்தேன்;
ஒன்றும் புரியவில்லை.
புத்தர் பூவைக் காட்ட, இங்கே
ஆனந்தன் அவர் முகத்தைப் பார்த்தான்.
இதற்கிடையில் நான் தப்பவென்றே
யாரோ எக்கச்சக்கமாய்க் கைதட்டினார்கள்;
நான் கனவான் கையைப் கள்ளக்கண்ணாற் பார்த்தேன்;
இரு சுட்டுவிரல்நகம்கூட கிட்டவும் ஒட்டவிடேன் என்றொரு திட்டம்
போலும்;
நான் மறந்தும் மரத்துப்போனாலும் கையிரண்டும்
காரேறும் வரைக்கும் பொய்யாய் காதலிக்கவும் விடேனென்று சொல்லி
காற்சட்டைப்பையுள் கமுக்கமாய் வைத்துக்கொள்ள,
தலித்துகளின் தனிப்பெரும் காவலர் தூக்கிப்போட்டார்
கண்ணிரண்டில் துளிர்த்துப்போன
இரண்டு நன்றி எலும்புத்துண்டு.
பின்னாடி சிந்தனை வானவில்லுக்கு,
கண்ணாடிப்பான வர்ணம் சேர்த்த தனிமைத் தவிலார்
தன் தமிழிற் பேசினார்;
"தமிழ்ச்சமூகத்திற் தலித்துக்கள்.."
யாரோ இடைமறித்து ஏதோ வெட்டிச் சொன்னார்; பிறகு
அதைத் தடுத்து ஒத்துச் சொன்னார் இன்னொரு யாரோ;
பின்னாடி,
முன்னாடி பேசியவரின் மூதாதை
"தலித்தின் மூக்கில் கயிறோ
வாயில் கடிவாளமோ போட்டு
தார் ரோட்டிலும் இழுத்ததாக"
கதிரைக்கனவான் கடிந்து வெடித்தார்.
அவரைச்
சொந்த இனத்தைச் சுரண்டும் வெட்டிப்பேசு
வெண்டைக்காய்ப்பயல்" என்றார்,
கதிரைக்குள் ஒளித்திருந்த சிறு சுண்டக்காய்த்தலையர்.
இமை சிரைத்து மை சமைத்த மங்கை எட்டிக்கேட்டாள்,
"இவர்களில் எவர் லெனின்?" என்று.
சுற்றிப்பார்த்தேன்; கத்தும் ஒரு முட்டாள்பயல் மூஞ்சியிற்கூட
கரப்பான் பூச்சிக்கால் கருமீசை பொட்டுக்கறையுமில்லை.
"லெனின் இனித்தான் வருவார் போலும்" என்ற பின்னே,
"என் தங்கையின் சிரிப்பும் அவளது போலவே அச்சு" என்பதையும்
வெகுமதி இனாமாய்க் கொடுத்தேன்.
"அதுவும் அந்த இட மேலுதட்டில் முட்டுப்படு அழகுச்சிறு தெற்றுபல்லுக்கூட
ஒட்டிப்பிறகும் இரட்டையர்க்கு ஒன்றாய்க் கிடப்பதுபோல" என்பதும்
என் சொல்லில் ஏனோ விட்டுவிடாமல் ஒட்டிக்கொண்டது.
மிச்ச நேரம் எமக்குள் சர்ச்சையின்றி சங்கீதம் கேட்டது.
பிறகு மணி பன்னிரண்டு
சொச்சத்துக்கு நல்லை வந்து
" 'தமிழ் இலக்கியவாதிகளின்
புலம்பெயர்தற் சிந்தனைகளும் போக்குகளும்'
எப்படி?" என்று கேட்டான்.
மங்கையின் முகவரி மறக்காமற் கேட்கவேண்டும் என்பது
சிந்தையின் போக்கிருக்க,
"தெளிந்த சிந்தனை, சிறப்பான போக்கு" என்றேன்.
நல்லை சொன்னான்,
"இன்றைக்கு இவர் வாசித்த ஆழக்கட்டுரையும்
தொடர்ந்து வந்த துல்லிய கருத்துப்பரிமாறலெல்லாம்
-சொல்கிறேன், இருந்து பார்-
பின்னொரு காலத்தே பேசப்படும் தமிழெழுத்தின்
தொலை காட்டும் மைல் கல்லென்றே.
தமிழ் இலக்கியம் தலை நிமிர, இனி மையம்
இடம்பெயர்ந்த தமிழ்க்குழுமத்தே"
"நல்லது"
என்று சொன்ன நான் எண்ணிக்கொண்டேன்,
'மறக்காமல் எழுதவேண்டும் வீட்டுக்கு,
"ஒரு தங்கை பெற்றெடுக்கவோ
குறைந்தது ஒன்று தத்தெடுக்கவோ
என்னைப் பெற்றவர் ஏதாச்சும்
அவசரமாய் இந்த வருசத்துட்
பண்ணி ஆகத்தான் வேண்டுமென்று
ஆகிப்போச்சுது இன்றிரவு
அமெரிக்கத்தமிழ்விழா
ஒன்றிலென்ன்று."'
-98 ஆனி 26 வெள்ளி 09:31 CST
```````````````````````````````
CNN தலைப்புச்செய்தி
சங்கதி தெரியுமெண்டோ?
சி என் என் இலை தலைப்புச்செய்தியெல்லோ?
நயோமி சம்பொல் எல்லோ குளிசை குடிச்சிட்டாள்.
என்ன! பெடிச்சி ஆரெண்டோ?
பேய்க்கேள்வி உதுவெல்லே?
பசியால விலாவொட்டிக் கொங்கை வற்றி, பரலோகம் போய்ச்சேர்ந்த
பாரீசவாதக் கொங்கோ கிழவி போலை, பார்வைக்கு எண்டாலும்
கறுத்தஇளங்குமரியின்ரை,
ஒடிச்சு வத்தப் போட்ட ஒடியலுடம்புக்கு
ஒண்டுமண்டெடியோ, பரிஸில,
ஓரங்கிழிஞ்ச உடுப்புப்போட்டு
நடத்திப் பாக்க உள்ள கூட்டம்.
சரி, உதைவிடு, உடுத்துப்போன பழங்கதை.
இப்ப கேளன்,
விறுவிறுத்த விசவிசயம் என்னவெண்டு.
பெடிச்சிக்கும்,
பிளெமிங்கோ ஆடுற ஒரு ஸ்பனிசுப்பொடியுக்கும்
கோதாரியிலபோன 'கோஹபிற்றிங்' சிறுதொடுப்பாம்.
பொடி, அலுக்க, பின்னால,
புதுப்பெட்டை பாத்தானெண்டு,
உவள் விசரி,
ஊத்தியிட்டாளாம் விசத்தை
உள்வாய்க்கை அண்ணாந்து.
ஆள் அருந்தப்பாம்.
ஆனாப்பார்,
அந்தரங்க அசிங்கமெல்லோ,
ஆஸ்பத்திரிக்குள்ளாலை
அம்பலத்திலை ஆடுதிப்ப.
சி என் என் ரீவி பெப்பராஸிக்காரன்,
மூளை வலுத்த, ஆளெல்லே பாருங்கோ.
என்ன இருந்தாலும்,
வெள்ளைக்காரனோ, சும்மாவோ?
கன காசைக் குடுத்தெல்லே
கறந்து போட்டான் விசயத்தை.
உது காட்டின பின்னாலை,
தாண்டிக்
கடுகுலகச்செய்தியிலை, காத்திருந்த
தாண்டிக்குளம் பாப்பமெண்டால்.
காணயில்லை அங்கையண்டும்.
முடிஞ்சுபோனசனம், ஆக
முன்னூத்துமுப்பதெல்லே?
மூவாயிரம் முடியேக்கில
கடுச்செய்தியிலை
கட்டாயம் காட்டுவான் பார்,
அமெரிக்க ஜனாதிபதி
ஆழ்ந்த அனுதாபம்
காம்டேவிட்டில கொல்ப்
திரும்ப மற்றக்காலுடைக்க
தீவிரமாய் விளையாடி
வேதனை தாளாமல்
அரைப்பக்கம்,
அறிவிச்சாரெண்டு.
- In late 97, when 'Super Model' Naomi Champel was treated for drug overdose after quarrelling with her Felmingo dancer boyfriend; And, this news was leaked through the hospital autorities to CNN.
```````````````````````````````
குரங்குகள் குட்டிபோடுதலும் என் கவிதையும்
குரங்குகள் குட்டிகள் போடுவதைப் பற்றிக் கவிதை எழுதவில்லை என்பதாய்க்
கவலை எனக்கு குட்டிகளுடன் ஓடாத குரங்குகளைக் கண்டாலும் எழும்;
மனைவிக்கும் மற்றவர்களுக்கும் என் ஆதங்கத்தில் சந்தேகம் சங்கடத்துடன் கூட,
'கவிகள் கருக்கட்டுவது அப்படி என்ன கவிக்குக் கரு?'
வீட்டுக்கு முன்னால் மல்லிகைப் பதியன் இல்லையா,
பக்கத்துவீட்டில் சின்னக்கைப்பெண் குழந்தை இல்லையா,
ஏதாவது நாட்டில் மழையோ போரோ விமானமோ விசித்திரமாய் விழுந்து போகவில்லையா,
இளவரசிகளும் முதுமனுசிகளும் மூச்சு நிறுத்திக் கரு தூக்கித் தரவில்லையா?
பிறகேன் இன்னும் குரங்குகள் குட்டி போடுவது பற்றி
எனக்குக் கவி எழுத ஆசை என்று
மனைவிக்கும் மற்றவர்களுக்கும் என் ஆதங்கத்தில் சந்தேகம் சங்கடத்துடன் கூட.
மல்லிகைப் பதியன்களுக்கு மனைவி இருக்கிறாள்,
மழை இருக்கிறது, படர மரம் இருக்கிறது;
பக்கத்துக் குழந்தைக்கு இப்போதைக்கு தாயிருக்கிறாள்,
கொஞ்சம் வளர்ந்தால், வீதிப் பையன்கள் இருக்கிறார்கள்;
மழைக்கு நிவாரணம் கொட்டுகிறது;
போருக்கு ஆயிரம் பேர் பேருக்குச் சமாதானிக்கிறார்கள்;
விமானத்துக்குக் கறுப்புப்பெட்டியும் புகைப்படங்களும் பரவிக்கிடக்கிறன
தரையிலும் பத்திரிகையிலும்;
இளவரசிக்கு கறுப்பு மலர் விற்பனைக்கடைகள் காத்திருக்கிறன
தொலைக்காட்சியுடன்;
முதுமனுசிகளுக்கு அரச வாகனமும் ஆண்டவர் ஆக்குகையும் ஆங்காங்கே நடந்தேறும்;
ஆனால்,
இராமாயண காலாட்சேபம் பாகவதர் முடித்து,
தேங்காய், பழம் அனுமன் சிலை முன் சாத்தியபின்,
குரங்குகள் குட்டிபோடுவதைப் பற்றிக் கவி எழுத
யாராவது சாமான்யன் வேண்டாமா?
ஆக,
குரங்குகள் குட்டிகள் போடுவதைப் பற்றிக் கவிதை எழுதவில்லை என்பதாய்க்
கவலை எனக்கு குட்டிகளுடன் ஓடாத குரங்குகளைக் கண்டாலும் எழும்;
``````````````````````````````
திறனாய்வு
எழுதப்பட்ட நல்லதெல்லாம்
என் 2'X4'X1/2' அலுமாரிச்சுவருள் அடங்கும்
மறுப்பிருப்பின்,
உன் 5'X3'X1' புத்தகப்புற்றைப் பெயர்த்தெறி.
சொருகிக்கொள்ள நூல் தருவேன் நான்.
~12, ஓகஸ்ட் '03 செவ்வாய் 00:29 மநிநே.
-/பà¯à®¯à®°à®¿à®²à®¿. பதிà®à¯
``````````````````````````````
ஞமலி விடு தூ!தூ!
எழுதுவதுக்கு முன்னால், சந்தர்ப்பம்கூறுதலென்பதிலே பொதுவிலே எனக்கு நம்பி
க்கையில்லை. இந்தவிடத்திலே இது தவிர்க்கமுடியாததாலே:
ஜெயமோகனின் அண்மைய கணையாழிச்செவ்வியை முன்னிட்டு பதிவுகள்
கருத்துத்தளத்திலே இன்று பேசப்பட்டதினை வாசித்ததின் தொடர்ச்சியாகக் குறித்துக்கொண்டதிது.
இப்போதெல்லாம் இலக்கியம் அச்சடிப்பது மாசாத்துவான்கள் சங்கதியாய்ப் போச்சு. கொல்லைப்புறத்திலே நானொரு இலக்கியம் படைத்தால், கூடத்துநாற்காலியிலிருந்து நீர் முகவுரை எழுதும்; காசை நான் விட்டால், என் சகலை அம்மான் ஆராச்சும் பதிக்கலாம். குசினிப்புறத்திலே நீர் வைத்திருக்கும் மடைப்பள்ளிக்காரர் மதிப்புரையைப் பரிந்துரையாகவே புரிந்தெழுதித்தருவார். புத்தகம், முகவரி, மதிப்புரை வந்த சேதியை வாலயத்துக்குஞ்சுகள் கொண்டு வந்து சேர்க்கவேண்டிய இடத்திலே சேர்க்கும். ஆதரித்து வரும் சேதியைக் கொண்டுபோய் நாற்காலிக்காரருக்குச் சேர்க்கும்; எதிர்த்தால், பாய்ந்து விறாண்டிக்கடிக்கும். இத்தால் அறிய வேண்டியது யாதெனில், படைப்பிலக்கியம் என்பது பண்டம் விற்கும் விளம்பர உத்தியினால் வெல்லப்படுவதாக்கும். சிற்றிலக்கியம் பேரிலக்கியம் என்ற பேதமில்லாமலே இந்த பேய்க்காட்டல் நிகழ்கிறது. இந்த நிலையிலே ஒதுங்கி, சிற்றிலக்கியம்/பேரிலக்கியம், பெரும்பத்திரிகை/சிறுபத்திரிகை என்ற கறுப்பு/வெள்ளை தீற்றுக்களுக்குள்ளே அடங்காது தான் மட்டும் ஒளிர நிற்பதே எழுத முயல்கிறவன் முதலிலே எண்ணிக்கொள்ளவேண்டியதென்று நினைக்கிறேன். பெரியோர் முகவுரை, நூலனுப்பிப் பெறும் அறிந்தார் மதிப்புரை, நாட்டுக்கு நாடோடி புரிந்துணர்வு விழாவெடுப்பு என்பனவற்றின் விபரங்களோடு என்னை நோக்கி
உருண்டோடி வரும் "புத்தம்புது வீரிய இலக்கிய உலகத்தை" சப்பித்துப்பின் கரும்புச்சக்கை என்று மட்டுமே எண்ணிக்கொண்டு திறக்கிறேன். தனியே Marketing Technique இன் வெற்றி மட்டுமே நல்ல படைப்பென்றதாகி விடாது என்பதிலே நம்பிக்கை இன்னும் கொண்ட ஓரிருவர்களிலே நானும் ஒருவன். ஞமலி விடு தூ!தூ!
~~~
வலை ஞமலி! வலை ஞமலி!!
எடுத்துப்போவாயோ ஆசான் குட்டிச்சாத்தானுக் கென் சேதி!
தனியிடம் கணியிலே தவித்துத் தமிழெழுதி
பதிவிடமில்லா தலையும் என் பெயர் பற்றியும்
பரிவுடன் அவர் மனம் பதியச்சொல்லு
~செ(¡)ல் சேதி~
அடுத்த முறையாச்சும் தமிழ் ஆண்டே,
தயைகூர்ந்து தமிழ்படைத்த
ஆகாக்காய் அரைவேக்காட்டு
ஊறுகாய் பெயரிலேனும்
உள்நுழையும் எனதையும்.
பாரும்,
ஆறு கவி நாலு கதை நானும் எழுதியுள்ளேன்.
குறித்துக்கொள்ளும்;
கூடவே உம்மை விதந்து ஓரிரு பதில் முறியும்
வேணுமென்றால் வாரும்
வெளிநாட்டில் வீசுவேன் நானும் உமக்குக் காத்து
நீரும் வீசவேணும் உள்நாட்டில் எனக்கும் பார்த்து
தேஜஸ் கூடத்துநாற்காலியிலே சீமானே உம் சேவை
கொல்லைப்புலத்துக்குக் கூட்டாளி நான் தமிழ்க்காவல்
குசினிப்புறத்துக்கு ஆராச்சும் நீர் பார்த்துப்போட்டால், அவராச்சு.
உமக்கு வாலாட்டும் எலும்பு நாய் எனக்கும் வாலாயப்படவேணும்.
எனைப் பாரும் தேவே! இறங்கி வாரும் ஏறே!
இந்தப்பக்கம் நான் தமிழரசன் உந்தப்பக்கம் நீர்
இந்த மாசம் இருக்குங் காசைவிட்டு என்னொரு கவித்தொகுதி;
நீர் முகவுரை; பதிப்பார் நம் பங்காளி; மடைப்பள்ளிக்காரர் விமர்சனம்
தாம்பாளம் எடுத்துப்போகவும் எதிர்த்தாரை எடுத்தெறியவும்
வாலாயப்பட்ட பூராயத்தெரியா வேட்டைநாய்த்தொகுதி.
அடுத்த மாசம் கட்டாயம் அறிஞர் உமது எட்டுத்தொகுதி காவியத்துக்கு
இந்தப்பக்கம் எடுப்போம் நாம் பிளாஸ்ரிக் குட்டிவாழை கட்டி ஆராத்தி.
ஆகையினால்,
அடுத்த முறையாச்சும் தமிழ் ஆண்டே,
தயைகூர்ந்து தமிழ்படைத்த
ஆகாக்காய் அரைவேக்காட்டு
ஊறுகாய் பெயரிலேனும்
உள்நுழையும் எனதையும்.
பாரும்,
ஆறு கவி நாலு கதை நானும் எழுதியுள்ளேன்.
குறித்துக்கொள்ளும்;
கூடவே உம்மை விதந்து ஓரிரு பதில் முறியும்
~செ(¡)ல்சேதி முடிவு~
சேதி எடுத்துப்போகும் எழில் நாயே
நடனம் சுழிக்குமுன் துடிவாலுக்கும் நன்றி.
இணைய நாயே!! இணைய நாயே!!
எடுத்துப்போகாயோ என் ஆசான் குட்டிச்சாத்தானுக்கு
இவ்விணையத்து ஏகலைவன் ஏக்கச்சேதி!
~31, ஜூலை '03 வியாழன்
(முதற்கிறுக்கல்; திருத்தமும் பின்னால் வரலாம்; வருத்தமும் பின்னால் வரலாம்)
`````````````````````````````
நளப(¡)(ங்)கம்*
"வேலை மிகக்கேடு,
காலமும் கஷ்டமும்;
வேண்டா வேதனை,
விடப்பா, வெளியுண்போம்",
நவில் நண்பன்,
"உடலுக்கிங்குறையினும் தஞ்சம்,
உணவுக்கு,
மக் சிக்கனும்
மெக் ஸிக்கனும்
புகுவாயோ பேடி, நீ?
சேலை கட்டு சிகண்டி"
என்ற என் சினங் கண்டு,
அனலிடையிடு அறுக்குளாவென,
துடித்துப்பின், துவண்டனன்.
ஹா! என் சொற்தூண்டில்துவள்புழு, அவன்.
காய்கறிக்கடை சென்ற கதை கதி இன்னொரு
கணணியேறாக் காவியம்; அது விடும்,
கட்டுட் சமையலுக்கு வாரும்.
இ·து இளங்கத்தரி,
அது கடுகு காண்,
அப்பாலே அரிசி, கல்நெல்லற்று பஸ்மதியாய்,
வேறு, இவையிவை இன்னென்ன அறிவீர்.
புதுமை செய் சொர்க்கார் நான்;
வையவிரிவுவலைச் சங்கத்தமிழ்ச்
சமையற்பக்கமிருக்கப் பயமேன்? பங்கமேது?
படிவமெடுத்தது வலக்கைவேலாய்
வடிவமெடுத்தது வாகாய்க் கூலாய்.
தாளிப்போம் என்று,
தண்ணீரிட்ட கடுகு
கொதிஎண்ணெய்க்குளிடல் கண்டு,
வெண்காயம் உரித்துக்
கண்ணீர்விட்டழுத கைகேயிதன்
கடைசி வேண்டுதலாய்,
"விடவேண்டும் இத்தொழில்
விபரம் அறியாய் நீ"
என அவனரற்ற,
"விட்டேனோ, சுவர்ணபூமிக்குக்
கப்பலோட்டிய வீரம், சுவறிடுமோ
பேதை? கடுகிற்கு அஞ்சல் தகுமோ,
இது முறையோ? தள்" எனப் பொங்கி,
அண்ணன் ரஜனியென, அலாக்காய்த்
தூக்கிப்போட்டு, அதிலரை தரை கொட்டி,
"சட்டச்சட வென்றெட்டுத் திசையடி"
ஈழத்து, உயிர்கொல் 'செல்', தூணிலுந்
துரும்பிலுமென்றாகி,
ஓடிஒளிந்தேன்,
அடுப்புப்பின் மேசைப் பங்கரின் கீழ் நான்.
என்ன, அவன் கதியோ?
ஒளியோ(ந்தோ)டு கதியிலும் மேல்;
ஆர் கண்டது?
குளிர் சாதனப்பெட்டி உள்ளேயோ,
ஆள் உயிரோடு இல்லையோ?
வெளிவந்து,
"வேண்டாம் விஷப்பரீட்சைச் சோறுகறி,
ஊற்று உடன் தோசை; (வயிறு, தலை)வலி குறைவு"
என முட்டையிட்டகோழிக்கேரல்கேட்டு,
"உடன் உண்ண, சாம்பாரோ, சட்டினியோ?"
-தேம்பாமற் கேட்டுவைத்தேன்;
முன்வெடித்த கடுகெல்லாம்
தன்முகத்தேவெடிக்கலுற்று,
"நாயே,
நாள் முழுக்க
நான் பட்டினி;
இதற்குள்
ஆர் கேட்டான்
உனை, சட்டினி?"
நான் ஏன் போக, அரைச்சட்டினியாய்?
தோசை ஊற்று சத்தமின்றி,
வேறு சத்தம் போட்டறியேன்.
பின், சிக்ஸருக்கடித்ததை
பவுண்றிலைனில் விட்டவன் போல்,
ஒட்டு உடம்பு ஒட்டுதற்காய் உணவுக்கு,
ஊற்றிய உடன்தோசை சுட்ட தட்டு
உடன் ஒட்டி, உருகி, உருவி,
வெந்து வெளிவந்த வினை, உப்புமா எனக்
காண் நெற்றிக்கண் நரன்,
"பக்கத்துச்சீனன், இரவு
பத்தரைக்கும் திறந்திருப்பான், கடை;
குக்கரை மூடிக் கட்டு அங்கு குறுநடை",
செப்புதல் கண்டு, விட்டால்,
ஒரு விள்ளலிலே அள்ளிவிழுங்குவான் ஆளையென
திரிபுரம் எரித்த விரிசடைச்சிவனென நானும்
ஊழித்தாண்டவம் ஆடிக்களைத்த அரன் அவனும்
வெளிவந்து, விட்டோம் எட்டுப்பிறவிக்கும் எம்சமையல்:
முட்டாள் நளன்,
கெட்டான் உடல் கறுத்து; பின்,
பட்டான் வதை சமையலால்;
பின்னென சொல்ல?
கைப்பக்குவம் குப்பைத்தொட்டி தின்னல் கண்டு
முதல் முகர்ந்தருகோடி,தன் முகம் வெறித்துச்சீறி,
பின், வால் கூரை வளை படப் பறந்தோடி,
மறுநாள், தன் தலை காண,
நக்கலாய்ச் சிரித்ததென்றான் நண்பன்,
பக்கத்தறைப் பைங்கிளி தன்
பஞ்சுமிட்டாய்ப் பொமெரேனியன் (நாய்).
-*'97 வைகாசியில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இராமபாணம்*#
ஆதியிலே ஒரு சொல் இருந்தது.
அதிலிருந்து கிளைத்துப் பிறந்தன இரண்டு.
மீதி தொடரத் தாவி மேலேறியது மரக்கிளை.
அறிக;
ஆதிக்கு முன்னாலும்,
முளைவித்தை அவியாமற் காக்கும் சேதியுண்டோர்,
காலனை விண்டோர்.
ஆக்கத்தின் ரகஸ்யம் அறிந்த நசிகேதனும், அரிப்பின்
அவதி தாங்காமற் சொல்லிப்போனானோ,
நம்மாள் கையில் சிருஷ்டியின் பாஷ்யம்?
வாதத்தை வானரத்து வாலாய் வளர்த்தித் தீவைத்தோர் வாழ்ந்தார்;
திண்ணை நெடுக்கத்தீ
அடுப்புமுகடு, கவட்டுமுடுக்கெல்லாம்
தடதடத்துப்போகுது பார் தண்டவாள ரயில்;
பிடித்த முயலுக்கு முறித்தகாலைப் புறமொளித்து,
முழுக்க மூன்றுகால் என்றடித்துத் திணித்த விவாதம்;
அவதாரபுருஷன் புரண்டுறங்கும் யுகங்கூட,
புறத்தே ஒருங்கிக் கண்மூடியடுங்காது
விழுது பெருத்துத்தூங்குது பார் "இராமபாணம்"
பள்ளி கொண்டபுரத்தைப் படைத்த அனந்தபுரத்துப்
பத்மநாபனைக் கணம் எண்ணிக்கொண்டேன்;
சத்தமின்றிப் பெற்றான்;
சலனமின்றிச் சஞ்சரித்தான்;
தக்கித்தான் தமிழில் தன்னிடம்.
-----
*நிலைமறுப்புக்கூற்று: இராமபாணம் என்பது ஓர் மத்தியகால புண்ணியபாரதத்துக்கற்பனை ஆழாத்திருநகரியல்ல; திராவிடப்பாரி, இடதுசாரி, வலதுசாரி, பாதசாரி, எறும்புச்சாரி, அனந்தசாரி, டம்பாச்சாரி, ஜிப்பாவாலா, ஆசாடபூதி எதுவோடும் எத்துணைச்சம்பந்தமும் சீர்வரிசையும் அற்றது. வரைவிலக்கணம் வேண்டுமென்பது கட்டாயமானால், கிட்டத்தட்ட வாலியை ஒளிந்திருந்து தாக்கிய இராமபாணம் என்றே கொள்ளலாம்.
# 'விஷ்ணுபுரம்' மீதான ஆண்டுக்கணக்கான ஜெயமோகனின் தாங்கமுடியாத அலட்டலுக்கு வழுவல்-நழுவல்-ஜார்கனின்றி அர்ப்பணிக்கப்பட்டது.
`````````````````````````
இலக்கியவிசாரியின் எடுகோள்கள்
உள்ளே தூங்கிக்கொண்டிருப்பது கலை உலகம்
வெளியே விழித்துக்கொண்டிருக்கும்
ஒற்றைக்காவல்நாய், நான் மட்டும்
- தெளிந்த தூக்கம் வராதலைபவன் நான் என்றாலும் நீ.
ஒட்டி எழுதியவன் உருப்பட வழியில்லாதான்;
வெட்டியெழுது; விரட்டிப்போ வேறாள் கருத்து;
சுற்றி வை சூழல், உன் சொல் கேட்டு
மற்றோனை அறம் பாடும் மத்தளச்சுற்றம்;
உள்ளபடி உணர்ந்துகொள்
- உண்மை என்பதும் உற்பத்தியாவதே.
அங்கு எந்தப்பக்கத்தும் உருள்வது இருளும் மருளும்;
இந்தப்பக்கம் வா; இதோ என் சூரியசாம்ராஜ்யம்.
என்னைப் பற்றிக்கொள்; இறுக்கியணை உடலம்;
இழு கோட்டை எமக்கப்பால் - இந்தப்புறம், அந்தப்புறம்;
இனிச் சொல்வோம் - இந்த இரட்டையரைக் கோட்டை விட்ட
விமர்சக மட்டியராற் செத்ததாம் இற்றைமொழியின் எழுத்து.
உனக்குத் தெரிந்த தெதுவோ தெரியவில்லை,
எனக்குத் தெரிந்து என்னதெல்லாம் இலக்கியம்
-உன்னவை,
என்னைத் தழுவாவிடத்தெல்லாம்,
நான் உரக்க முன்னவை சொன்னவதாம்.
18, நவம்பர் 2001 சனி 15:17 மநிநே.
````````````````````````````
எனது சாத்தியங்கள்
காலை பேஹர் மதியம் பருப்பு மாலை பிட்ஸா
இடையில் தேநீர், நடையில் கோப்பி
எக்ஸ்பிரஸோ நுரைக்கும், ஸம்பேன் மதுரம் ருசிக்கும்
பியர் பாகற் கச்சல், வெரி ப்ளடி மேரி
எல்லாம் செரிக்கும் என் ஈழத்து இரப்பை.
"இவ்வித்தை எப்படி உனக்கு சாத்தியம்?" என்பார் சக அமெரிக்கர்
இந்த வருடம் இரண்டறை வதிவிடம்;
போன வருடம் புகை பொழி தனியறை;
வந்த வருடம் தனியறை -இரு நபர்;
வருமொரு வருடம் இரு அறை -ஒரு நபர்...
எல்லாம் சொர்க்கம் எதிலும் சுகத்தூக்கம்.
"இவ்வித்தை எப்படி உனக்கு சாத்தியம்?" என்பார் சக அமெரிக்கர்
இட்டலி தின்னல் பற்றியோர் இன்குறள்
கார்கில் வெற்றிக்கு துக்கடா வெண்பா
தமிழ்மொழி அலசலில் பொறிபடு கவிதை
துருக்கிப் பூநடுக்கம் முழுக்கவும் அறிவேன்....
.... அது அமைந்த பண் காந்தாரம்; தாளமோ ஆதி.
வாழ்க குர்தீஷியத் தனித்தேசப் போராட்டம்!
"இவ்வித்தை எப்படி உனக்கு சாத்தியம்?" என்பார் சக அமெரிக்கர்
இத்தொழில் வித்தை புரி நுட்பம்,
எப்படி அவர்க்கு எடுத்துச் சொல்ல, நான்?
சக்கரையறு வெண்புக்கை செய் குறிப்புக்கு கிழக்கே
மேடமும் இடபமும் முட்டு ராசிக்களரிதன் மேற்கே
பின்னி ஜட்டிக்குக் கீழே, பெரனாஸ் பட்டுக்கு மேலே
போர்ஹே பிறந்தார் போன நூறாண்டென்று
கொடி இலக்கியம் பிடிக்கும் குடும்ப ஏடுதம் இலக்கணம்,
எண்ணில்லா வருடம் இயலாய்க் கற்றுணர் பழக்கமென
எப்படி அவர்க்கு நான் வாய், சட்டென்று உடைத்துச் சொல்ல?
'99 செப்ரெம்பர், 06
````````````````````````
இலக்கியச்சிந்தனை
யாயும் ஞாயும் யாராகியரோ
(என் மகள் எவனையும் நினைத்திருப்பாளோ)
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
(எவனோடாச்சும் ஓடிப்போனாளோ)
யானும் நீயும் எவ்வழி அறிதும்
(எம் சாதி சமயங்கள் ஒத்துவருமோ)
செம்புலப் பெயல் நீர் போல
(செந்நீர் ஒழுகி ஓடினுங்கூட)
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
(வலுச்சண்டையில் அவர்தமைப் பிரித்திடல் குலநீதி)
``````````````````````
No comments:
Post a Comment