not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Tuesday, July 31, 2007
Saturday, July 28, 2007
கரைவு - 10
கல்யாணசுந்தரத்தின் தமிழ் மின்னுரைச்சுவடிகள் பக்கம்
@ உலூசன் பல்கலைக்கழகம் '96 (ஆரம்பம் 23 மே 1995)
முன்னைய பகுதி
அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு - காப்பு (பகுதி 0)
==========
இந்தப்பகுதியிலே மாலனுக்கான பதிலிலே பேசப்படவேண்டிய கருக்களுக்கு முக்கியமற்றபோதுங்கூட, தம்மளவிலே முக்கியமான சில உதிரிக்கூற்றுகள்மீதான எனது விளக்கங்களைத் தரவிரும்புகின்றேன்.
கூற்று 1: இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது
கூற்று 2: தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்
கூற்று 3: இணையபிதா, டாக்டர், பேராசிரியர் என்று பதங்கள் சொல்லப்பட்டது குறித்து எதற்காக நான் 'அதிகம் அலட்டிக்கொள்கின்றேன்' என்பது பற்றி
கூற்று 4: "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி
கூற்று 5: தகுந்த ஆதாரங்கள் என்று முன்வைக்கும்போது, கருத்திலே கொள்ளப்படவேண்டிய குறைந்த பட்ச நம்பிக்கை & தராதரம் பற்றி
இவை தவிரவும் பேசப்படவேண்டிய வேறு உதிரிக்கருத்துகளிருக்கலாம். இத்தொடரை முடிக்கும்போது, அவை ஞாபகத்துக்கு வந்தால், மீண்டும் ஒரு பதிவாக்கி அதனையிடுவேன்.
மேற்கூறிய ஐந்திற்கான விளக்கங்களையும் ஒரேயடியாக இவ்விடுகையிலே விரித்துத் தருதலுக்கான சாத்தியமில்லையென்பதாலே, முதலிரு கூற்றுக்களின் மீதான எனது விளக்கங்களை இங்கே தருகிறேன். மற்றைய மூன்றும் அடுத்த இடுகையிலே தொடரும். அதனைத் தொடர்ந்து கோவிந்தசாமி-இணையத்தமிழ் குறித்த மாலனின் ஆதாரங்களின் தம்மைத்தாமே சுட்டுக்கொல்லும் தன்மையையும் மேலதிக ஆதாரங்களையும் பார்க்கலாம். இயன்றவரை இணைப்புகளை இங்கே தரமுயன்றிருக்கின்றேன். மேலதிக ஆதார இணைப்புகள் தொடர்ந்து கிடைக்கும்போதெல்லாம் தகுந்தவிடங்களிலே ஏற்றப்படும்.
கூற்று 1: இணையத்தமிழினைத் தொழில்நுட்பத்திலே முன்னேற்றாது இணையத்தமிழ் வரலாற்றினைப் பேசும்போது என்பது வெற்றுவிவாதங்களாகி அயர்ச்சியே மிஞ்சுகின்றது என்று எண்ணங்களின் குரல் கூறியிருப்பதன்மீது
'இன்று தமிழர்களுக்கு இணையத்தமிழின் வரலாறா, தமிழ்க்கணித்தொழில்நுட்பமா முக்கியமானது?' என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்தேர்தல் வருமானால், தொழில்நுட்பத்தேவைக்கே என் வாக்கு; இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் ஏதும் பேசமாட்டேன். ஆனால், இங்கே அப்படியான கட்டாயத்துக்கான தேவையேதும் எழவில்லை. அதனால், இணையத்தமிழின் வரலாற்றினைப் பற்றி நான் நீட்டிப் பேசுவதற்கான காரணங்கள் எனக்குத் தெளியத் தெரிந்து, இரண்டு.
காரணம் 1: என் முன்னைய இடுகை ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, "யார், எதை, எப்போது, எங்கே செய்தார்" என்பதற்கான சரியான தரவுக்கோவை முறையான வரலாறாகத் தொகுக்கப்பட்டுப் பதிவாகுவதுகூட அவசியமில்லை. ஆனால், தவறான, திரிந்த, உறுதியற்ற, மழுங்கிய முன்வைப்புகள் வரலாற்றுத்தரவுகளாகத் தரப்படும்போது, "யார், எதை, எங்கே, எப்போது, எங்கே செய்யவில்லை" என்பதற்கான எதிர்த்தரவுக்கோவை முறையாக முன்வைக்கப்பட்டேயாகவேண்டும். அவ்வகையிலே மாலனும் அருணாவும் கூறிய கருத்துகளின், முன் வைத்த ஆதாரங்களின் எதிர்வினையாகவே நான் இணையத்தமிழின் வரலாற்றினை - என் கைக்கெட்டிய ஆதாரங்களுடன் - முன்வைக்கவிரும்புகிறேன். இஃது எவ்விதத்திலும் கணித்தொழில்நுட்பத்தின் முக்கியத்தை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. இது போன்ற நோக்குடனேதான், கணித்துறையிலே திறந்தமூலமென்நிரல்களிலே, அவற்றுக்குப் பங்களித்தவர்களின் பெயர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; அவர்களின் பங்களிப்புகள் காலவரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. இப்படியான பதிதல்களும் சுருக்கமான வரலாற்றுப்பதிதலே; அதன் தேவையும் இங்கே நாம் பேசிக்கொள்ளும் நிரல்களின் வளர்ச்சி, பங்களிப்பினைப் பற்றிய சரியான தகவல்களை ஆவணப்படுத்தும் நோக்காகும்.
காரணம் 2: மேலே கூறிய காரணத்தினைவிடவும் எனக்கு - ஈழத்தமிழனென்ற அளவிலே- முக்கியமாகும் இன்னொரு காரணமுண்டு. ஒரு சமூகம் தன் வரலாற்றினை இயன்றவரை தொடர்ச்சியாகவும் கோவையாகவும் (அது மிகத்திருத்தமாகக்கூட அமைய வேண்டியதில்லை) பதிந்துகொள்வதன் தேவையை ஈழத்தமிழரின் இன்றைய (வரலாற்று)நிலை உணர்த்தியிருக்கின்றது.
அண்மையிலே பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் சொன்னார், "எவருமே நம்ப முடியாத வகையிலே ஆண்சிங்கத்துக்கும் மனிதப்பெண்ணுக்கும் பிறந்து வந்த சந்ததியே சிங்கள (ஹெல) இனம் என்று எழுதிவைத்திருந்தாலுங்கூட, சிங்களவர்களுக்கு, அவர்களின் வரலாறென்பதைக் காலவரையறைப்படி எடுத்துச் சொல்லும் வகையிலே மகாவம்சம், சூளவம்சம் என்ற ஆவணப்படுத்துதல் தொடர்ந்திருக்கின்றது;" இது நாம் மிகவும் கூர்ந்து காணவேண்டிய கோணம். ஈழத்தமிழருக்கென்று இவ்விடத்தின் இன்னார்தான் என நிறுவமுடியாத ஈழத்துப்பூதத்தேவனாரின் கவிதையிலிருந்து வரலாற்றினைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளவேண்டிய அவலமே இன்னமும் இருக்கின்றது. அவரின் பெயரிலேயிருக்கும் ஈழம் என்பது இப்போது நாங்கள் குறிப்பிடும் ஈழமா, வேறிடமா, அச்சொல்லுக்கான வேறேதும் கருத்திலே ('பொன்' என்பது போல) வந்ததா என்றுகூட எங்களால் அறுதியிட்டுச் சொல்லமுடிவதில்லை. அதன் பின்னால், குளக்கோட்டன், குத்தன் - சேனன், எல்லாளன், யாழ்ப்பாடி, திருஞானசம்பந்தர் + சுந்தரர் தேவாரங்கள், பல்லவ_சோழ_பாண்டிய வரலாறுகள், அருணகிரிநாதர் திருப்புகழ் என்று வழிவந்த கதைகளும் பாடல்களும் அடுத்தார் வரலாறுகளும் பேசப்பட்டபோதுங்கூட, இவற்றில் எதுவுமே ஈழத்திலே தமிழர் வரலாற்றினை, அவர்களின் இருப்பின் தொடர்ச்சியினை முறையாக ஆவணப்படுத்தியதாக, ஆவணப்படுத்த உதவியதாக அமையவில்லை. தமிழ்ப்பாடல்களிலிருந்து தரவுகளை உய்த்தறிந்து வடிகட்டி, வரலாற்றினை உருக்கி வடிவமைத்துக்கொள்ளும் இரண்டாம்நிலை ஆதாரத்தினைப் பிடித்துக்கொள்ளும் அவலமே தொடர்ந்திருக்கின்றது. இதன் அவவிளைவே, பரணவிதாரண போன்றோரின் கைகளிலே இலங்கையின் 'தொல்பொருளியலாய்வும் அகழ்வும்' சென்றதும், அதன்பின்னான 'கண்டுபிடிப்புகள்' சிங்களக்குடியேற்றங்கள் முதல் இன்னோரன்ன மொழிசார் இனவமைப்பு ஒடுக்குமுறைகளுக்கு, தமிழ்பேசும் சமூகங்கள் ஈழத்திலே உள்ளாகவும் காலாயிருந்திருக்கிறன; காலாயிருக்கின்றன. தமிழ்ப்பௌத்தர்கள் இருந்திருக்கலாமென்ற வாதத்தைக்கூட முன்வைத்து, சிங்களப்பேரினவாதத்தின் வரலாற்றாக்கத்தை மறுத்துப்பேசமுடியாத நிலையிலே கந்தரோடை, வல்லிபுரம், நயினாதீவு, திரியாய் ஆகிய இடங்கள் 'பௌத்தர்கள்=சிங்களவர்கள்' என்ற சமன்பாட்டினாலே எழுதிவைக்கப்படுகின்றன. இங்கேதான் ஈழத்தமிழர்கள் சந்த்யானாவின் 'தமது கடந்த காலத்தினை நினைவுகூரமுடியாதவர்கள் எதிர்காலத்திலே அதை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்படுவார்கள்' என்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றோம். இந்நிலையிலேதான் வரலாற்றினைப் பதிவுசெய்தலென்பது வாழ்தலின் இருத்தலின் தொடர்ச்சியாக ஒரு சமூகத்துக்கு ஓர் அவசியமான அத்திவாரக்கூறாகின்றது. இன்னமும், வரலாற்றின் தேவைதான் - கடந்த காலத்திலிருந்து எமது இன்றைய நிலையைச் சரிபார்த்துக்கொள்தலும் போகும் பாதைக்குக் கடந்தகாலத்தின் தவறுகளைத் தவிர்த்தலுமே - கற்றுக்கொள்ளவைக்கின்றது; இதன் அடிப்படையிலேயே பொதுவரலாறு ஒரு பாடமாக பாடசாலைகளிலே கற்பிக்கப்படுவதும், இராணுவ,போர்வரலாறு இராணுவக்கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுவதும் அமைகிறன. வரலாற்றின் பதிவின்றி உடோல்ஸ்டோயின் பாதையிலே மோஹன்தாஸ் காந்தியும் அதன் தொடர்ச்சியாக மார்டின் உலூதர் கிங்கும் அடியொற்றி நடக்க முயன்றிருக்கமாட்டார்கள்.
ஒரு சமூகத்தின் விடுதலையென்பதும் சுதந்திரமென்பதும் இருநிலைத்தளங்களிலே நிகழலாமென்பது என் பார்வை. ஒன்று உறைவிடம்சார் பௌதீகதளத்திலே (அச்சமூகத்தின் ஒடுக்கப்படுதலுக்கெதிராக) நிகழ்வது; இன்றைக்கு இலங்கைத்தீவிலே தேடப்படும் விடுதலையென்பதும் இவ்வகை உறைவிடம்சார் இனவிடுதலையாகவே கருதப்படலாம். ('மொழிசார்ந்த' என்று சொல்லவில்லை.... சிங்களவரிடமிருந்து தமிழர்களும் தமிழர்களிடமிருந்து முஸ்லீம்களும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இங்கே 'இனம் சார்ந்த' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கின்றேன்.) இந்த புவிசார் அரசியல் விடுதலை எய்தப்படும்போது, அதன் விளைவாக, அவ்வடிமைத்தனம் சங்கிலித்தொடராகக் கட்டிவைத்திருந்த எல்லைப்படுத்தல்களும் முறிந்து, அதன் வழிப்பட்ட எமது மற்றைய மனிதசுதந்திரங்களும் வந்துசேரும். .
அடுத்தது, உளம்சார், சிந்தைசார்தளத்திலே நிகழும் விடுதலையென்பது; இதற்குப் பௌதீக, புவியமை எல்லையில்லை. இவ்விடுதலையென்பது புவிகட்டுப்படுத்தும் வரையறைகளுள்ளே அவற்றினை முறித்துத் தனித்துவம் காண்பதற்காக நிகழ்வதல்ல. கருத்துத்தளத்திலே தன்மீதான அடக்குமுறைகளிலிருந்து தம்மை உடைத்துக்கொண்டு, விட்டுவிலகிச் சிட்டுக்குருவியாகப் பறக்கும் நோக்கிலே பிறப்பது; தமிழர் என்ற கருத்துநிலையிலே ஈழத்தமிழர், மற்றும் அவர்கள்போன்ற நிலையிலுள்ள ஏனைய உட்கூற்றுத்தமிழர்களின் தம்மடையாளங்களை, 'தமிழினை மேம்படுத்தியவர்கள் நாம்' என்ற கருத்துநிலை மேலாதிக்கத்தாக்குதலின்மூலம், கருத்துநிலை அரசியல்மூலம் இதுவரைநாள் நிலைநிறுத்தி நிற்கின்றவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு காணும் சுதந்திரம் இவ்வகைப்படும்.
மேற்கின் குடியேற்றவாதிகளை எமது சொந்தநாடுகளிலிருந்து வெளியேற்றுவதென்பது உறைவிடம்சார் சுதந்திரப்படுத்துதலென்று கொண்டால், அவர்களின் கருத்தாக்கங்களும் வரலாற்றுப்படுத்துதலுமே முற்றுமுழுதாகச் சரியென்ற கருத்துநிலையிலிருந்து எம்மை விடுவிடுத்துக்கொள்வதிலான சுதந்திரம் கருத்துநிலைச்சுதந்திரமாகும். இதே கண்ணோட்டத்திலேயே ஈழத்தமிழரின் சிந்தை மீதான மேலாதிக்கவாதிகளின் சிறைப்படுத்துதலிலிருந்து விடுதலை பெறும் நிலையையும் நான் காண்கின்றேன். இவ்விரு உறைவிடம்சார் விடுதலைப்போராட்டத்தினை ஈழக்களத்திலும், கருத்துநிலைசார் விடுதலைப்போராட்டத்தினை பல்வேறு தகவலூடகக்களங்களிலும் சமகாலத்திலேயே நிகழ்த்தவேண்டிய அவநிலைக்கு நாம் உள்ளாகியிருக்கின்றோம்.
இப்போராட்டங்களிலே எம் சுயத்தினையும் தேவைகளையும் அடையாளம் காணவேண்டும்; எம் காலம் சார்ந்த இருப்பின் தொடர்ச்சியினையும் பங்களிப்பினையும் நிறுவவேண்டும்; நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எமது புவிநிலை, கருத்துநிலைசார் விடுதலைகளை, ஈழத்தமிழரென்று கொண்டிருக்க நாம் ஆரம்பித்துச் செய்யவேண்டியது இதுதான்: "ஈழத்தமிழரின் சிங்களம் அண்டிய புவிசார் வரலாற்றோடு, கருத்துநிலைசார் அகிலத்தமிழர் என்ற பெருங்கூட்டத்தினுள்ளேயும் எம் தொடர்ச்சியான இருப்பும் பங்களிப்பும் குறித்த வரலாற்றினையும் ஆவணப்படுத்தவேண்டும்." எதிர்கால வரலாறு எம்மை விடுதலை செய்யவேண்டுமானால், எம் கடந்த கால வரலாற்றினை நாம் விடுதலை செய்தாகவேண்டும்; தங்கிநிற்கும் மோழைத்தனமும் இரண்டாம்நிலைச்சமூகமென்ற தாழ்வுணர்வும் நீங்கும்படியாக, மற்றவர்களுக்கீடான எமது சாதனைகள், பங்களிப்புகள் பதியப்பட்டாக வேண்டும்.
இப்படியாக, எதிர்கால இருத்தலை, சமூகத்திலே எமக்கான பங்கை நிச்சயப்படுத்தும் நோக்குடனேயே, நாம் இங்கே தமிழரின் வரலாற்றின் தொடர்ச்சியாக தமிழிணையவரலாற்றினையும் காணவேண்டும். மகாவம்சமும் பரணவிதாரணவும் அடித்துப்போட்டுப் போட்டு நிலையற்று அலையும் ஈழத்தமிழரின் கடந்த புவிசார்வாழ்வுக்கு ஈடான ஓர் இரண்டாம்நிலை(இணைய)த்தமிழ்வாழ்வினையே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' என்ற சொல்லாடல், இச்'சுதேசமித்திரன் பாரம்பரிய'த்தை, அதைச் சார்ந்திருக்கின்றவர்களின் கதைகளுக்கு அப்பாலான எத்தமிழருக்கும் வழங்கும். மாலன் + லேனா தமிழ்வாணன் போன்றோரின் "வெறும் ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் என்பதைக் கொடுத்தவர்கள் நாம்" என்ற சொற்றொடர் வெறுமனே எஸ். பொன்னுத்துரை என்னும் ஒருவரின் நாவடக்கமுடியாத எதேச்சைப்பேச்சுக்கான எதிர்வினையென மட்டுமே கருதிவிட்டுப்போகமுடியாது. அக்கூற்றின் அடியிலேயிருக்கும் குமுதம்+கல்கண்டு ஆசிரியர்களின் நுண்ணரசியல், எம் சிந்தைத்தளத்தினை, அவர்கள் தருவதே வரலாறு என்ற கருத்துநிலைத்தளத்திலே அடக்கி ஒடுக்கும் தன்மையிலேயே எள்ளலாக வெளியிட்டுக் கக்குகின்றது.
இன்றைய காலகட்டத்திலே அச்சு ஊடகங்கள், கேள்காண் ஊடகங்கள் இவற்றினை வளைத்துப்போட்டு அவற்றின் 'ஆசிரியரிடமிருந்து --> வாசகர்களுக்கு' என்ற ஒற்றைத்திசைச்செயற்பாடுகளைத் தம் விருப்பப்படி இயக்கும், தோற்றம் தரச்செய்யும் விதமாக கைகளிலே வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள், இணையத்தின்பால் மிகவும் அவதானமாக அடுத்த நிலைக்கு நகர்கின்றார்கள்; இதன் வழிப்பட்டதே, தமிழ் பேசும் இணையமும் அவர்தம் இயக்கத்தின்படி பொம்மலாட்டமிட வைக்கும் நோக்குடன், இவர்கள் நகரும் திசைதான், "தலையும் முண்ட அவயவங்களும் உங்களிடமேயிருக்கட்டும்; கழுத்தின் கட்டுப்பாட்டைமட்டும் எம் கைகளிற் கொடுங்கள்" என்பதற்கொப்பாக, வலைப்பதிவுகள் எப்படியாக நெறிப்படுத்தப்படவேண்டும், இயக்கப்படவேண்டும் என்பவற்றின் மீது தம் கருத்துகளைச் சாணக்கியத்தனமாக வரையறுத்து மாலன் போன்றோர் முன்வைக்கும் கருத்துகள். இவற்றுக்கு ஆதரவாக, தம் ஆள்தலுக்கு, நெறிப்படுத்துதலுக்கு வசதிசெய்யும் இருக்கைகளை இணையத்திலே அமைத்துக்கொள்ள, தமக்குச் சாதகமான 'நீண்டகாலப்பாரம்பரிய'த்தினை வடிவமைக்கின்றனர்; சாதுரியமாக, இணையத்திலே தமிழுக்கான தம் பங்கினை 'இன்னாருக்கு இணையத்திலே தமிழ்ப்பொறி' படச்செய்தோமெனத் தம்மை முற்படுத்தும் பண்பும், 'வலைப்பதிவுவரை தொடரும் சுதேசமித்திரன் பாரம்பரியம்' போன்ற கருத்தாடல்களும் வாசிப்போரின் உளத்தளத்திலே நுணுக்கிப் பதிந்துகொள்ள இடமாகின்றது. (மாலன் போன்றோரின் பிரபலம், அவரின் கருத்துகளை ஆராய்ந்து சரிபிழை பார்க்காமலே, எத்தனை வாசகர்களை நம்பவைத்திருக்கின்றதென்பதை அவரின் இணையம் பற்றிய கருத்துப்பதிவுகளுக்கு, மற்றும், எனக்கான எதிர்வினை இடுகைகளுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே தெரியப்படுத்துகின்றன.)
இப்பின்புலத்திலேயே மாலன் கூறிய தரவுக்கருத்துகளுக்கான எமது மாற்றுத்தரவுகளை முன்வைத்து, இன்னொரு திருத்தமான கண்ணோட்டத்திலே வரலாற்றினைக் கூறி எம் கருத்துநிலைத்தமிழர் விடுதலையைப் பெற வேண்டியிருக்கின்றது. ஆறுமுகத்துக்கு புகழ் அவருக்கு ஆதீனம் கொடுத்த நாவலர் பட்டத்தினாலல்ல. அவரைப் போன்றவர்களின் செயற்பாடுகளே அப்படியான ஒரு பட்டத்திற்கான தேவையினை, இருப்பினை உருவாக்கியிருக்கின்றதென்ற மறுதலைநிலைதான் உண்மை; நாவலர் என்ற பட்டமின்றியிருப்பதால், ஆறுமுகத்தின் திறமையிலே ஏது பங்கமும் ஏற்பட்டிருக்காது; ஆனால், ஆறுமுகம் போன்ற திறனாளர்களில்லாவிட்டால், 'நாவலர்' என்ற பட்டம் தக்கித்திருக்குமா? அங்கே உண்மையிலே பேசப்படவேண்டியது, நாவலர் என்ற பட்டத்துக்கு இருப்பை நாவலர் கொடுத்ததேயொழிய, ஆறுமுகத்துக்குப் பின்னால் நாவலர் ஒட்டிக்கொண்டதல்ல. ஆனால், அந்த தொப்புட்கொடியாக, சேயாக அங்கிகாரத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கருத்துநிலைத்தமிழ்க்கைதிகளான ஈழத்தமிழரிடையேயேனும், மாலன் போன்றோர் "நாவலர் என்ற பட்டத்தைத் தந்தோம்" என்று ஏற்படுத்தும் மயக்கத்தினைத் தெளியவைத்து, அங்கீகார எதிர்பார்த்தலிலிருந்து கருத்துவிடுதலை செய்ய நாம் வரலாற்றினை மீண்டும் சொல்லவேண்டியதாகவிருக்கின்றது.
தமிழக-ஈழத்தமிழரிடையே தொப்புட்கொடி உறவிருக்கவில்லை என்பதை நான் அவ்வகையிலேயே மாலனுடன் சேர்ந்து ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அப்படியாக ஒத்துக்கொள்வதற்கான என் காரணம், அவருடையதற்கொப்பானதல்ல; தாய்-சேய் உறவென்பதிலும்விட, ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளே ஈழம்-தமிழகம் ஆகியவற்றின் தமிழ்ச்சமூகங்களென்ற எடுகோளின்பாற்பட்டதாகும். இரு தொப்புட்கொடிகளைக் கொண்டு சமகாலத்திலே ஒரு தாயிடமிருந்து பிறந்த குழந்தைகளென்பதே சரியானதாகும். ஆறுமுகத்துக்கு நாவலர் என்பதிலும், பரிதிமாக்கலைஞர் கொடுத்த 'வசனநடைகைவந்த வல்லாளர்'1 என்பதிலும் சிலிர்த்து மகிழ்ச்சியடையும் ஈழத்தமிழர்கள், இராமலிங்கவள்ளலாரோடு ஆறுமுகம் காட்டிய நாவன்மையையினையோ, தமிழிலே முதன்முதலாக -பரிதிமாக்கலைஞர் சுட்டிக்காட்டிய,"பொருட்டெளிவும் விரைவுணர்ச்சியும்' தரத்தக்க- நிறுத்தற்குறிகளை அறிமுகப்படுத்திய திறனையோ மறந்துவிடுகின்றோம்.
சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலர் கொடுத்தனுப்பிய தமிழகம்போலவேதான், வீரகேசரிக்கு வந்த வரா உம், இராமநாதன் நுண்கலைக்கல்லூரிக்கு வந்த இசை கற்பித்த மஹாராஜபுரம் சந்தானமும் பின்னாளிலே தமிழகத்திலே பெயர் பெறும்வரை வாழ இலங்கையும் வழிசெய்ததென்பதை 'சுதேசமித்திரன் பாரம்பரியக்காரர்கள்' மறை/றந்துவிடுகின்றார்கள். (ஒரு வலைப்பதிவு நண்பர், தாம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த கர்நாடக இசைச்செல்வி ஒருவரிடம் ஈழத்தின் பிரபலமான சில இசைக்கலைஞர்களின் பெயர்களைச் சுட்டிப்பேசியபோது, "யார் அவர்கள்?" அச்செல்வி கேட்டதாகச் சொன்னார்) தமிழக ஆதீனங்களுக்கு ஆறுமுகத்தம்பிரான்களையும் ஈழம் தந்திருக்கின்றது (திருவண்ணாமலை ஆதீனம்)2; அண்ணாமலைப்பல்கலைக்கழகத்துக்கு விபுலாநந்தரைத் தந்திருக்கின்றது; கனகசுந்தரம்பிள்ளை, தமிழ் அகராதி கண்ட கதிரவேற்பிள்ளை ஆகியோரைத் தந்திருக்கின்றது; வி. கல்யாணசுந்தரம் சொல்வதுபோல "சுவாமிநாதையர் கூரைபோட உதவிய தமிழ்ப்பதிப்புலகுக்கு, அடிக்கல்லிட்ட ஆறுமுகத்தையும் சுவர்கட்டியெழுப்பிய தாமோதரம்பிள்ளையும்" தந்திருக்கின்றது. தமிழாராய்ச்சி மகாநாட்டினைத் தொடங்க, உழைக்க தனிநாயகத்தினைத் தந்திருக்கின்றது. (அதன் தொடர்ச்சியான தமிழாராய்ச்சி மகாநாட்டிலே சிதம்பரத்திலே ஆறுமுகநாவலரின் சிலை எழுப்பப்படும் என்று அன்றைய தமிழக அரசுத்தலைமைச்செயலர் சொல்லியும் அது தவறிப்போயிருக்கின்றது.2 தொடர்ச்சியாக, ஜெயலலிதா முதல்வராகவிருந்தபோது, ஈழத்திலிருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டுக்குப் போன தமிழறிஞர்களைச் சிறைவைத்த சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது. இஃதெல்லாம் எப்பாரம்பரியத்தின் வழிப்பட்டது? சுஜாதா ரங்கராஜன்கூட "சிங்களத்தீவுக்கோர் பாலமமைப்போம்" எழுதினார். அந்நேரத்திலே மாலன் என்ன செய்தார்? கற்கண்டு இலெட்சுமணன் என்ன செய்தார்?) தமிழிலக்கியவிமர்சனத்துறையிலே மார்க்ஸிய அணுகுமுறைக்கு கைலாசபதியையும் சிவத்தம்பியையும் காலத்தே முந்தியதாக ஈழம் தந்திருக்கின்றது; தலித் எழுத்து முன்னோடியாக, 'பஞ்சமர்' டானியலைத் தந்திருக்கின்றது; கவிப்படிமத்துக்கும் ஒரு பிரமிளை, அவரைத் தமிழகத்தவரென்றே மயங்கிக்கொள்ளுமளவுக்குத் தந்திருக்கின்றது.
1882 இலே தொடங்கிய சுதேசமித்திரனுக்கு ஏறக்குறைய நாற்பதாண்டுகள் முன்னமே இலங்கை உதயதாரகையைத் தந்திருக்கின்றது. சென்னையிலே பீற்றர் பார்சிவல் தான் நடத்திய 1855 இலே நடத்திய தினவர்த்தமானி வாரப்பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த உதயதாரகையின் ஓர் ஆசிரியரான கரோல் விசுவநாதபிள்ளையையும் சி. வை. தாமோதரம்பிள்ளையையும் கூப்பிட்டழைத்து சேவைக்குள்ளாக்கியிருக்கின்றார். இப்படியே பட்டியலை வளர்த்துக்கொண்டுபோனால், தமிழ்ப்பத்திரிகை, படைப்புலகிலே "எல்லாமே சுதேசமித்திரன் பாரம்பரியம் என்பதன் தொடர்ச்சி" என்பது சுக்குநூறாகிப்போகும். இத்துணைக்கும் இங்கே என் இக்குறிப்புகளின் எல்லை ஆக ஈழத்தின் தமிழுக்கான வழங்கலை முன்வைத்துமட்டுமே; தமிழகத்திலேயே சுதேசமித்திரன் பாரம்பரியத்துக்கு மாற்றுப்பாரம்பரியமென்பவை ஒன்றுக்கு மேலாகவிருக்கின்றன. அவற்றினை அவற்றின் நீட்சியும் விரிவும், என் அறிதலின் போதாமை கருதி இங்கே தவிர்த்துக்கொள்கிறேன். இவற்றினை அறிந்து தம்மைத் தாமே இரண்டாம் தள நிலையிலிருந்து, சேய்நிலை 'தரப்படுவதை'யே பெரிதெனக் கருதிப் புளகாங்கிதம் எய்தும் கருத்துச்சிறையிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுவித்துக்கொள்ள, நாம் வரலாற்றினைப் பற்றி, அவசியப்பட்ட போதெல்லாம் மீள மீளப் பேச வேண்டியதாகவேயிருக்கின்றது.
மாலனைப் போன்றவர்கள் சுதேசமித்திரனுக்கு முன்/பின், பாரதிக்கு முன்/பின் (இன்னமும் ஈழ-இந்திய அரசியல்நிலைகளிலே இராஜீவ் காந்தி கொலைக்கு முன்/பின்) என்று காலப்பகுதிகளைப் பிரிக்க அமைகோடு போடும் புள்ளிகளும் இதே மாதிரியாக மிகவும் அவதானமாகக் கேட்கும், வாசிக்கும்போதெல்லாம் 'இவையே/இன்னார்களே மூலாதாரங்கள், மீதியெல்லாம் சார்ந்ததெழுந்தவை' என்பதான உணர்வினை உளத்தளத்திலே மறைமுகமாகத் தூண்டிப் பதிக்கும் வகையிலே அமைபவை. (கிரகோரியன் நாட்காட்டி & கிறீஸ்து ஆண்டுக்கணக்குக்கு மாற்றாக தமிழர் நாட்காட்டி & திருவள்ளுவர் ஆண்டு, இந்து, இஸ்லாமிய ஆண்டுகள் நாட்காட்டிகள் இவை பிறந்ததற்கான காரணமும் இப்படியான மாற்றுக்கண்ணோட்டத்தினையும் எதிர்நிலைகளையும் உணர்த்தவே. எமக்கும் அதுவே அத்தியாவசியமாகின்றது). எதற்காக, தமிழகத்தின் அறியப்பட்ட முதலாவது தமிழிதழிலிருந்து தமிழகத்தின் தாளிகைப்பாரம்பரியம் காலநீட்சி கருதிச் சுட்டப்படமுடியாது?
இதே 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்தளத்திலே கடை விரிக்கப்படும்போது, மீண்டும் கணிசமான பங்களிப்பினை ஆற்றிய தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரும் ஈழ, மலேசிய, சிங்கப்பூர், புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் அது வைக்கப்படும் பாங்கிலே தம் சுய அடையாளமிழப்பார்கள்; தமிழ்மறுமலர்ச்சி அடையாளத்தினை முன்வைத்துச் சங்கத்தமிழ்க்குடிநிலையை மீளக்கண்டெடுத்து, திராவிடப்பாரம்பரியம் கட்டமைக்கும் மறுமலர்ச்சித்திசையிலே சென்றதால், தமது மீனாட்சிசுந்தரம்பிள்ளை பாரம்பரியத்தைச் சுவாமிநாதைய்யர் பாரம்பரியமாகத் தாரைவார்த்துக்கொடுத்தவர்கள் செய்த தவற்றிலிருந்து இந்த "தமிழிலே முதல்" வரையறை செய்யப்படும் வரலாற்றுத்தவறு ஆரம்பிக்கின்றது. அச்சூடகங்களிலும் கேள்காணூடகங்களிலே தமது கிடுக்கிப்பிடியை வைத்திருக்கும் மாலன் போன்றோரின் 'சுதேசமித்திரன் பாரம்பரியம்' இணையத்துக்கு விரிகின்றபோது, -முதற்படையெடுப்பிலே தோற்றாலும் அடுத்தடுத்த படையெடுப்புகளிலே- இணையத்திலே "தமிழில் முதல்" என்று அவராலே கண்டுபிடிக்கப்படுகின்றவர்களின் வரலாறு தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும்வகையிலே அமைக்கப்பட்டு வந்துகொண்டேயிருக்கும்; இதனைத் தகுதியான தரவுகளோடு நாம் எதிர்கொள்ளப்படவேண்டும். தமிழினை முதலிலே இணையத்திலே ஏற்றியவர்கள், தமிழிலே முதற்தேடுபொறிசெய்தவர்கள், தமிழிலே முதல் இணையவுரையாடி அமைத்தவர்கள், தமிழிலே முதற்சஞ்சிகை அமைத்தவர்கள் இப்படியான *சரியான தரவுகளுடனான* வரலாறு -எம்முடையது உட்பட- எல்லோரினதும் சான்றுடனான மொழிப்பங்களிப்பினை உறுதிப்படுத்தி, கருத்துநிலைதமிழ்ச்சுதந்திரத்தினை எமக்கும் எல்லோருக்கும் உணர்த்துவதாக அமையவேண்டும்.
இப்படியாகவே, கருத்துநிலையிலே தமது சொந்த(த் தமிழ்)ச் சமூகத்துள்ளேயே இரண்டாம்நிலைக்குடிமக்களாக உணராதிருக்கும் சுதந்திரம்வேண்டியே எவ்வரலாற்றினையும் - தமிழர் நிகழ்நிலை வரலாற்றையோ, மெய்நிகர் இணைய வரலாற்றினையோ - நாம் திருப்பியும் திருந்தவும் சரியான தரவுகளைத் தாங்கி எழுத வேண்டிய அவசியமேற்படுகின்றது. எம் மொழி,குடி, பண்பு வரலாற்றை நாம் மாலன் போன்றவர்களின் கைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டியதாகின்றது. வாய்ஸ் ஆப் விங்க்ஸ் போன்ற நண்பர்களுக்கு (மீள) வரலாற்றினையெழுதலின் தேவையின்மையும் அதன் முக்கியம் உணர்வதற்கு முடியாததாக வெறும் உணர்வின் அடிப்படைப்பட்ட வெற்றுக்கூச்சலாகவும் படலாம். ஆனால், எனக்கு அப்படியாகத் தோன்றவில்லை. இணையத்தமிழ்வரலாற்றைப் பேசுவது மாலனுடன் வாதத்தினை வெல்வதற்குமப்பால், தனக்கென்றே ஒரு வரலாற்றுத்தேவை அமைந்தாயுள்ளது.
[இம்மீட்டெடுத்தலைத் தம்மளவிற் செய்தவர்கள், தம் அடுத்த செயற்பாடாக, இன்றைய நிலையிலே தம் சுயத்தினைக் காக்க, காந்தி, வ.உ.சிதம்பரம் இவர்களின் வரலாற்றினைப் பாடமாக்கிக்கொள்ளலாம்; தாமே உப்பினைக் காய்ச்சுவதும் இராட்டையிலே கதர் இழைப்பதும் கப்பல்விடுவதும் முயற்சி செய்யமுடிந்தால், பதிப்பகங்களும் ஊடகமும் தம் நிலத்திலேயே வளர்க்கும் நோக்கும் தவறானதல்ல என்பது புரியும். ஆனால், இவை தனியே பேசப்படவேண்டிய விடயம். இப்பதிலுக்குப் பெருமளவிலே சம்பந்தமில்லாததால், இங்கே தவிர்க்கின்றேன்.]
கூற்று 2: தன்னதை ஒத்த கருத்தினைச் சொன்ன எத்தனையோ பேரிருக்க மாலன் தன்னை மட்டும் நான் (-/பெயரிலி.) கேள்விகளைக் கேட்டது காழ்ப்புணர்வின் அடிப்படையிலேயே என்று கூறியிருப்பதன்மேல்
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுண்டு.
காரணம் 1: தமிழ்க்கணிமை தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவினை நான் என்றைக்குமே தேடலுக்கு அணுகியதில்லை. அதனால், அங்கே இட்டிருக்கும் தகவல்களைத் திருத்தவேண்டுமென்ற எண்ணமேற்படவே வாய்ப்பில்லை
காரணம் 2: மாலன் ஆதாரமாகக் காட்டியிருக்கும் கோவிந்தசாமியின் கட்டுரையிலே ஏதேனும் வரலாற்றுச்சந்தேகத்தினைக் கேட்பதானால், நான் யாரிடம் கேட்பது? சொல்லப்போனால், பரஸ்பர நட்பு என்பதை ஓரமாக ஒதுக்கி விட்டுவிட்டு, அக்குறித்த கட்டுரை வாசிக்கப்பட்ட கருத்தரங்கிலேயிருந்த ஏனைய கணித்தமிழுக்குப் பங்காற்றியவர்களே கோவிந்தசாமியிடம் கேட்டிருக்கவேண்டும். அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள் (என்றுதான் இதுவரை வாசித்ததை வைத்துத் தோன்றுகின்றது; வேண்டுமானால், அது வாசிக்கப்பட்டது, ஆரம்பகாலக்கருத்தரங்கொன்று என்பதாலே, இணைநிலையிலே அல்லது முதலிலே ஆங்காங்குத் தனித்தனியே செய்யப்பட்ட முயற்சிகள் கோவிந்தசாமிக்குத் தெரிந்திருக்கமுடியாததுபோலவே, மற்றைய கருத்தரங்கின் பங்காளிகளுக்கும் தெரியாதிருந்திருக்கலாம் என்றும் நாம் கொள்ளலாம்)
காரணம் 3: மாலன்(, அருணா) போன்ற ஊடகத்துறைப்பின்புலமும் பலமும் கொண்டு வருகின்றவர்கள் சொல்லும் கருத்துகள், தமிழூடகங்கள் தரும் தகவல்களை அப்படியே கேள்வியின்றிக் கேட்டுக் கடத்துகின்றவர்களின் தொகை எத்துணையென்பதற்கு மாலனின் பதிவுகளின் பின்னூட்டங்களே சான்று. (இதுபோலவே சுஜாதாவின் அம்பலம் வலையுடையாடலுக்கு வாராவாரம் தீர்த்தயாத்திரைபோலச் சென்று வந்து வலையிலே அவர் தமக்கான வரிப்பதிலிட்டதையும் பேசிப்பெருமிதப்பட்டவர்களையும் கண்டிருக்கின்றேன்)
இப்போதைக்கு உதாரணத்துக்கு மாலனின் பிரபலத்தினை நம்பி அவர் சொன்னவற்றினை அப்படியே எடுத்துக்கொண்டு போகும் வாசகர்களினால் தவறவிட்டவற்றிலே சிலவற்றினைக் காண்போம்:
நேரடியாகத் தெரியும் உதாரணங்கள் சில: -
உ+ம் 1 : கோவிந்தசாமியின் கட்டுரையிலேயே 'தமிழ் முன்னமே இணையத்திலே எழுத்துருவாக ஏறியிருந்தாலும், கோவிந்தசாமியே அதை "செழுமைப்படுத்தி" வெளியிட்டவர்' என்ற அர்த்தத்திலே சொல்லப்படும்போது, "அப்படியானால், இணையத்தின் தமிழ்பிதா என்று எப்படியாக கோவிந்தசாமியைச் சொல்வது எப்படி?" என்று ஒருவரும் அருணாவினைக் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை; ஏற்கனவேயிருந்ததாகச் சொல்லும் கோவிந்தசாமிக்கு மாலன் எப்படி 'இணையத்திலே தமிழேற்றப் பொறிதட்ட'ச் செய்திருக்கலாம் என்பதைப்பற்றியும் இவ்வாசகர்கள் கேட்டதாகத் தெரியவில்லை.
தமிழ்நேஷன் தளத்திலிருந்து கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து தேவையான பகுதி (தடித்த எழுத்தாக்கம் நான் செய்திருப்பது)
/Tamil Eelam Page (http://www.eelam.com) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.
So there was a need to develop a Tamil Internet System which should go beyond Web display. In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time. /
நிலை இப்படியிருக்க, இன்றைக்கு ஆங்கில விக்கிபீடியாவரைக்கும் 'தமிழிணையத்தந்தை கோவிந்தசாமி' என்று எழுதப்பட இப்படியான கேள்வியெழுப்பாததும் விமர்சனத்தன்மையற்ற பிரபலமானவர்களின் சொற்களை அப்படியே நம்பி மலட்டுவாசிப்புச் செய்து அசைபோட்டு மீட்டும் மந்தைத்தன்மையுமே வழியமைத்திருக்கின்றன.
உ+ம் 2: மாலன் தந்திருக்கும் ஐந்து ஆதாரத்தரவுகளிலே, குறைந்தது மூன்று ஆதாரங்கள், ஒன்றிலிருந்து மற்றொன்று வருவிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால், இவ்வெள்ளிடைமலையை ஏன் அவரின் "ஆமாம் சார்" வாசகர்கள் காணமுடியவில்லை? கோவிந்தசாமியின் கட்டுரையிலிருந்து ஆல்பேர்ட்டும் அதிலிருந்து விக்கிபீடியாவும் எடுத்துப்போட்டிருப்பதை மாலனின் "அன்புள்ள பெயரிலிக்கு" இடுகையைத் தொடர்ந்து வாசிக்கும் எவருமே உணர்ந்துகொண்டிருந்திருக்கலாம்.
உ+ம் 3: வருவிக்கப்பட்ட விக்கிபீடியாவின் தரவினை யாராவது முதலாவது ஆதாரமாகத் தரமுடியுமா என்று யோசித்துப்பார்த்தார்களா?
உ+ம் 4: இணையத்திலே உடனடியாகத் தமிழினை ஏற்றிவிடத் துடிக்கும் வகையிலே சிங்கப்பூரிலே தன்னிடம் இணையம் பற்றிப் பொறிபடச் சொன்ன மாலனைப் பற்றி, இணையத்திலே தமிழ் ஏற்றிய தன் மகாநாட்டுக்கட்டுரையிலே ஏன் கோவிந்தசாமி சொல்லவில்லை என்பதும் எவருக்கும் கேள்விக்குரியதாகத் தோன்றவில்லை.
கொஞ்சம் தேடி முயன்றிருந்தால், (மாலனும் தன் தவறினை ஒப்புக்கொள்ளும்படி) அவரின் இணையவரலாற்றினைப் பாராட்டும் வாசகர்கள் கண்டிருக்கக்கூடிய உதாரணங்கள் சில: -
உ+ம் 5: கணியன்/தமிழ்நெட் என்பன கோவிந்தசாமியின் விசைப்பலகை/எழுத்துரு இணை; அதற்கும் கணியன் இதழுக்கும் கணியன் பூங்குன்றனாரின் கவிதைக்கும் வித்தியாசங்கள் உண்டென்பது எனக்குத் தெரியாமலில்லை. அதேபோலவே, தமிழ்நெட் என்ற பாலா பிள்ளையின் மின்னஞ்சற்குழுவிலே 96 இன் பின்னரையிலிருந்து இருந்தேன் என்பதால், அதற்கும் (அது பயன்படுத்திய முரசு-அஞ்சல்/இணைமதி எழுத்துருவிணைக்கும்) தமிழ்நெட் எழுத்துருவுக்கும் உள்ள வித்தியாசம் எனக்கும் தெரியும். கோவிந்தசாமியின் நண்பரும் உத்தமம் அங்கத்தவருமான மாலனுக்கு கோவிந்தசாமியின் எழுத்துரு தமிழ்நெட் என்பதைக்கூடத் தெரியவில்லையென்பது சோகமான விடயம்.
உ+ம் 6: ஆல்பேர்ட் சிங்கப்பூரின் தமிழிணையக்கருத்தரங்கிலே கோவிந்தசாமி குறித்த தன் கட்டுரையை வாசித்ததாக மாலன் சொல்கின்றார். மாலன்கூட கலந்து கொண்ட அக்கருத்தரங்கிலே ஆர்பேர்ட் அக்கட்டுரையை வாசித்தாரா? ஆல்பேர்ட் தன் கட்டுரையை எழுதியது, உத்தமத்தின் மின்மஞ்சரியிலே தோன்றி, பின்னால், அவர் தான் நடத்திய ஈ-சங்கமம் என்ற இணையவிதழின் ஏழாம் இணையத்தமிழ்ச்சிறப்பிதழுக்காக மட்டுமே இடப்பட்டதென ஞாபகம். அதே இதழிலேயே மாலனும் இராம. கி உம் கட்டுரைகள் எழுதியிருந்தார்கள் என்பது மேலதிகத்தகவல். Tamil Nation தளத்திலே ஓரிடத்திலே தவறாகச் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே எடுத்துப் போட்டதால் ஏற்பட்ட பிழை இஃதில்லையென்றால், ஏழாவது தமிழிணையக்கருத்தரங்கிலே சிங்கப்பூரிலே வாசிக்கப்பட்டதாவென மாலன் உறுதிப்படுத்தலாம்.
இதுபோல, இலகுவிலே தகர்ந்துவிடக்கூடிய, ஓட்டை நிறைந்த பாத்திரங்களிலே (பின்னைய இடுகைகளிலே இவை பற்றியும் மேலதிகமான புது ஆதாரங்கள் பற்றியும் மேலும் விபரமாக எழுதுவேன்) நீர் நிரம்பியிருப்பதாக "சார், நல்ல விளக்கம்!", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என்று வாசகர்களை எண்ண வைத்துக்கொண்டு நகரவைப்பது, மாலனுக்குச் சாத்தியப்படுகின்றதென்றால், அதற்கு அவரின் புன்புலம் தந்த பிரபலமே காரணம். இப்பிரபலம் வாசகர்களிடையே பரப்பக்கூடும் வரலாற்றுப்பிறழ்வுகளை, மாலன் நான் ஏன் கேள்வி கேட்டிருக்கக்கூடாதென வினாவிச் சுட்டும் மற்றவர்கள் (இணையத்தமிழ் குறித்த விடயங்களிலே தமிழ்விக்கிபீடியா நண்பர்கள், ஆல்பேர்ட் போன்றோர்) விட்டிருந்தால், தப்பித்துப்போகமுடியாது; சொல்லப்போனால், அவர்கள் சரியாகச் சொன்னாலுங்கூட, மாற்றுக்கருத்துகள், முரண்படும் தரவுகள் தென்படுகின்றதா எனத் தேடுகின்றவர்களே அதிகமாகவிருப்பார்கள். அதுவும் மாலன் போன்றவர்களின் வரலாற்றினைத் திருத்த முயற்சிக்கும்போது, "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது", "காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", என்று கண்ணைமூடிக்கொண்டு வருகின்ற நிலைதான் எம்மிடையேயிருக்கின்றது.
சுஜாதா குறித்து வெங்கட் எழுதியிருக்கும் பதிவும் இரவிசங்கர் சொன்ன கருத்தும் 'பிரபல்யம் தரும் இப்படியான வரலாற்றுப்பிறழ்வுப்பிரச்சனை' பற்றிய என் கருத்தினை மேலும் பலப்படுத்தும்.
ஆக, மாலன் என்பவர் பேசும்போது, அவரிடம்மட்டும் நான் கேள்விகளைப் போட்டதற்கான மூன்றாவது காரணம், இப்படியான வரலாற்றுப்பிறழ்வே வரலாறென வாசகரிடையே வாசகரால், மாலனின் வசனங்களாலே இறுகிப்பதிந்துபோகும் இலகுத்தன்மையை ஆரம்பத்திலேயே தகர்த்து சரியான அத்திவாரமிட்டு நேரே நிமிர்த்தவேண்டுமென்பதாலேதான்.
காரணம் 4: இந்த நான்காவது காரணம் எனக்கு - ஈழத்தமிழனென்றளவிலே - மிகவும் அவசியமானது. மாலன் என்ற பத்திரிகையாளரை, சஞ்சிகையாசிரியரை, தொலைக்காட்சிச்செய்தியாளரை அவரைக் காசு கொடுத்து அச்சுவடிவமாக, ஓரளவுக்குச் காண்கேள் செய்தியாக நான் வாசித்திருக்கும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுக்காலத்திலே முதன் முறையாக நான் கேள்விகளைக் கேட்டு அவர் உலகலாவிய பல இலட்சம் வாசகர்களிலே ஓர் ஈழவாசகனாக எண்ணிக்கொண்டு, தப்பிப்போகமுடியாத சூழலை இந்த இணையம் ஏற்படுத்தித்தர, எனக்குக் கேள்விகள் கேட்கவேண்டியிருந்த புள்ளிகளிலே அவரே தன் கருத்துகளைச் சொல்லி முடுக்கிவிட்டு வாய்ப்பினைத் தந்திருப்பது. மாலனின் ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல், எனது ஈழம்-இந்தியா தொடர்பான நிலைப்பாடு, அரசியல் என்பவற்றினையும் கடந்து, ஓர் ஊடகவியலாளரை அவரின் சேவைக்கு இருபத்தெட்டாண்டுகள் ஏதோ விதத்திலே அப்போதும் இப்போதுமாக சொந்தப்பணம் தந்து பெற்றுக்கொண்டிருக்கும் (ஒரு தமிழ்ச்சமூகத்தின்) ஒரு வாசகன், பயனாளி அவர் பதில் சொல்லாமல் தப்பிக்கமுடியாத தளத்திலே, வகையிலே கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் இது. இப்படியான தேவை எனக்கு விக்கிபீடியாவினரிடமோ ஆல்பேர்ட்டிடமோ கோவிந்தசாமியிடமோ இல்லை; இராமிடமிருக்கின்றது, சோவிடமிருக்கின்றது, ஜெயக்காந்தனிடமிருக்கின்றது; மாலனிடமிருக்கின்றது. மாலனிடம் இணையத்தமிழுக்கு அப்பாலும் கேட்கவேண்டிய கேள்விகளிருக்கின்றன; அதற்கான களத்தினை அவர் செல்வநாயகியின் பதிவிலும் தமிழ்சசி போன்றோரின் முன்னைய பதிவுகளிலும் எனக்கான எதிர்வினையாகவும் ஏற்படுத்தியிருக்கின்றார். அதனாலேயே தேர்ந்தெடுத்தேன்.
அவருக்கான அரசியற்கேள்விகளை இங்கே இவ்விடுகையிலே எழுப்பவில்லை; இத்தொடரிலே பிறகு வரும் இடுகைகளிலே பார்த்துக்கொள்ளலாம். ஆனால், நான் மேலிருக்கும் பந்தியிலே அவரிடம் கேள்வி கேட்பதற்கான காரணமாகச் சொன்னதன் பின்புலத்தினையும் தேவையையும் மேலும் விரிவாக்கி, நிகழ்வுகளின் சுருக்கமாகச் சொல்லவிரும்புகிறேன்.
கொஞ்சம் பின்னோக்கி எழுபதுக்குப் போவோம். ஊரிலே எனது வீட்டினைச் சுற்றிய பகுதியிலே அப்பகுதியினரிடம் மாதாமாதம் சேகரிக்கப்படும் தொகையை வைத்துக்கொண்டு, தினசரி, சஞ்சிகைகள், நூல்கள் வாங்கி நடத்தப்படும் நூலகம். இதுபோலவே பத்துப்பன்னிரெண்டென ஊருக்குள்ளே நூலகங்கள்; தவிர, தனியவே தத்தமது வாசிப்புக்காக, வீடுகளிலே வாங்கும் சஞ்சிகைகள்; எழுபதுகளின் ஆரம்பத்திலே அம்புலிமாமாவோடும் கட்டப்பட்ட கண்ணன் தொகுப்புகளோடும் சிறுவர் உலகம் எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் விரிந்தது. அம்புலிமாமா வகையிலே வந்த இலங்கையின் நட்சத்திரமாமாவினை ஒதுக்கினோம். பின்னர், எழுபதுகளின் பின்னரையிலிருந்து, மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு, தில்லானாமோகனாம்பாள், பொன்னியின் செல்வன் தொடக்கம், வரும் அத்தனை தமிழ் குடும்ப, 'பெண்', சினிமா, சிறுவர் இதழ்களோடு, பெமினா, இலஸ்ரரேட் வீக்கிலி, பிலிமாலயா ஈறாக அடங்கும் உலகமாக விரிந்தது. இதயம் பேசுகிறது, மயன், குங்குமம், சாவி, திசைகள், வண்ணத்திரை, மங்கையர்மலர், ராணி, அலிபாபா, ராணிமுத்து, கல்பனா, மாலைமதி, கல்கண்டு, துக்ளக், முத்து & வாசு காமிக்ஸ்கள் உட்பட்ட திரிசியம் தெறிக்கும் வானவில்வகை தமிழக, இந்தியப்பதிப்புகளையும் உற்பத்திகளையும் காசைவிட்டு வாங்கித்தள்ளினோம்; 'இதயம் பேசுகிறது' வேங்கடசுப்பிரமணியன் இலங்கை வந்துபோனபோது, எங்கே நம்மூரைப் பற்றியும் ஏதேனும் குறிப்பு இவ்வாரமேனும் வருமா என்று காத்திருந்தோம். .. காத்திருந்தோம்.... காத்திருந்தோம்.... அவர் எழுதாமல் ஏமாற்றியபோதுங்க்ட, அவர் ஆனந்தவிகடனிலிருந்து லட்சுமி சுப்பிரமணியம், மாயாவுடன் சென்று நடத்திய அந்த இதயம் பேசுகின்றது இதழினையும், அவர் பதிப்பித்துத்தள்ளிய அத்தனையையும் வாங்கினோம். ஆனால், ஈழக்கவிஞர்கள், படைப்பாளிகளை இன்னாரெனச் சிலர் அறிந்திருந்தாலுங்கூட, பெரிதளவு ஊக்குவிக்கவில்லை. அதன் பின்னால், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரே, பிரமிள் என்னும் ஒரு கவிஞர் தமிழகத்திலேயிருக்கின்றார் என்று தெரிந்தது, அதற்குப் பின்னும் மூன்றாண்டுக்குப் பின்னர்தான் அவர் எம் தெருக்காரராகப் பிறந்து வளர்ந்திருந்து தமிழகத்துக்குப் பெயர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ஆனாலும், அதைப் பற்றியேதும் அச்சமும் நாணமுமுறாமல் இந்திய இராணுவக்காலத்தின் செயற்பாடுகளின்போதும் அதன் பின்னும் எம்மைத் திட்டித் தள்ளிய, இந்திய இராணுவத்தின், அரசின், இந்தியத்தூதுவரின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு குண்டூசிச்சத்தமோ சொல்லோ எழுப்பாதும் அழகிகள் வண்ணப்படங்களுடம் மினுமினுங்கி வந்த தமிழகத்தின் புதுபுதுச்சஞ்சிகைகள் பத்திரிகைகளையும் வாங்கினோம். எண்பத்தேழிலிருந்து (என்று ஞாபகம்; சரியாகத் தெரியவில்லை) தொண்ணூற்றி இரண்டு வரைக்கும் உழைக்கத்தொடங்கிக் காசு கை கண்டபோது, சொந்தக்காசைவிட்டே இந்தியா ருடே, துக்ளக்(, சரிநிகர்) இவற்றினை எங்கள் அயல் நூலகத்துக்கு நானே எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.
இந்திய இராணுவம் குறித்து எவ்விதமான விமர்சனத்துக்கும் உட்படுத்தாது, ஈழத்தமிழருக்கு எது வேண்டுமென்று தாமே தீர்மானித்துக்கொண்ட துக்ளக் போன்ற சஞ்சிகைகளை இறக்குமதி செய்து சொந்தக்காசினை விட்டு வாங்கிக்கொண்டபொழுதிலேதான், இந்திய இராணுவம் ஈழத்தமிழரின் நலனுக்காக வந்திருப்பதாக, இந்திய இராணுவ ஆதரவுச்செய்தியூடகங்களிலே ஜெயக்காந்தன் என்பவரும் மாபொ சிவஞானகிராமணியாரும் எங்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதுதான் முரண்நகை; ஜெயக்காந்தனையும் சிவஞானத்தினையும் விட்டு ஈழத்தமிழருக்குச் சொல்லக் காரணம், அவர்கள்மீதான ஈழத்தமிழருக்கான இலக்கியப்பரிச்சயம் என்பதுதான். காசை விட்டு அவர்களின் படைப்புகளையும் உரைகளினையும் கேட்ட் ஈழத்தவர்களை அவர்களுக்குப் பரிச்சயமிருந்திருக்குமா என்பது இன்றைக்கும் எனக்குள்ளே கேள்விக்குறியே. இப்படியாக, ஜெயக்காந்தன் சொல்லிக்கொண்டிருந்த வேளையிலேதான் அவரை ஆண்டாண்டுக்குப் புண்ணியயாத்திரையாகப் போய்த் தரிசித்து வந்த டொமினிக் ஜீவா பாடசாலையிலே பிள்ளைகள் பயன்படுத்தும் தாள்களைப் போன்ற கடதாசியிலேனும், தன் மல்லிகையைப் பிழைக்க வைக்கமுடியுமா என்று வழி பார்த்துக்கொண்டிருந்தார். ஜெயக்காந்தன் அதைப் பற்றி எதையும் வானொலியிலே எங்களுக்குச் சொல்லவில்லை. எல்லாம் முடிந்து பதினைந்து ஆண்டுகளின்பின்னால், "இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளோடு மோதாமல் திரும்பி வந்திருக்கவேண்டும்" என்ற விதத்திலே ஐங்கரநேசனுக்குச் செவ்வி கொடுக்கின்றார்.3
ஆனால், இப்படியான காலத்திலெல்லாம், குமுதம், இந்தியா ருடே, அவுட்லுக், புரொண்ட் லைன் முதல் எங்களை(யும்) வாசகர்களாகக் கொண்ட சஞ்சிகைகளோ இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைப் பற்றி ஒரு வசனமேதும் உதிர்க்கவில்லை; புத்தகவாசனைக்காற்றிலேகூட விசனிக்கக்கூட இல்லை. மீள மீள தம் அரசின் நிலைப்பாட்டினையே பாடிக்கொண்டிருந்தன; எங்களின் தவறுகளாக தமது செயற்பாடுகளைச் சுமத்தி அவ்வப்போது தேவைக்கேற்ப நியாயப்படுத்திக்கொண்டிருந்தன; அல்லது, பேச்சேயில்லாமலிருந்தன. நாங்கள் தொடர்ந்து குமுதம், இந்தியா ருடே, துக்ளக், கல்கண்டு, கல்கி ஆகியவற்றைச் சலிக்காமல் அகதிக்காசு வந்தபோதும் விட்டு வாங்கிக்கொண்டேயிருந்தோம். ஆக, எம் நிலையைப் பேசியவர்கள் நாங்கள் ஒருபோதும் வாங்கவே எண்ணியிருக்க வாய்ப்பில்லாத, அறிந்திருக்காத ஓரிரு இந்தியச்சிறுபத்திரிகையாளர்களும் பதிப்பாளர்களுமே.
தொண்ணூறுகளின் பின்னால், புலம்பெயர்ந்த ஈழத்தவரினைக் குறி வைத்த பெருவணிகச்சஞ்சிகைகள் அவதானமாக ஈழத்தவர்கள் என்ற பெயரிலே அரசியல் சாராத அல்லது அரசியற்சோரம்போன அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிரான நிலைப்பாடுள்ள அல்லது இந்திய ஆதரவுநிலைப்பாடுள்ள புலம்பெயர்ந்தவர்களை ஈழத்தவர்கள் என்ற பெயரிலும் ஈழத்தவரின் பன்முகத்தலைமைகள் என்ற பெயரிலும் முன்னிலைப்படுத்தின. குமுதம், யாழ்மணம் என்பதினை வெளியிட்டபோது, கேட்காமலே அள்ளிப்போட்டவற்றினை விட்டால் [எப்படி எனக்குத் தெரியுமென்றால், நான் உயிர்நிழலிலே எழுதிய ஒரு கோழிமுட்டைத்துக்கடாவை அள்ளிக் கவிதை என்று வகை பிரித்துப்போட்டதனாலேதான்], மிகவும் கவனமாக, ஈழத்திலே அப்போதும் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தவிர்த்துக்கொண்டன. அரசியலை மிகவும் இலகுவாக இராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால்/பின்னால் என்பதாக மட்டுமே நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டன. அப்போதுங்கூட, புலம்பெயர்ந்தும் பெயராதிருந்தும் குமுதம், இந்தியா ருடே, துக்ளக் இவற்றினை வாங்கிக்கொண்டு மேலதிகமாக சன் தொலைக்காட்சிக்கும் செய்மதியுணர்தி பொருத்திப் பார்த்துக்கொள்ளத் தொடங்கினோம் - எல்லாமே எம் சொந்தக்கையிருப்பினை விட்டுத்தான்.
அதேநேரத்திலே, எங்களுக்கு, சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலருக்குப் பட்டம் கொடுக்கப்பட்டதை இதே சஞ்சிகைகளின் ஆசிரியர்களே எடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னால், பத்தாண்டுகளிலே பார்த்தால், அதே லேனா தமிழ்வாணனின் அண்ணன் ரவி தமிழ்வாணன் ஈழம், புலம் அனைத்திலும் அலைந்து பதிக்க, "சோளங்கதிர் ஐந்து வாங்கினால், ஒன்று இலவசம்" என்ற வகையிலே படைப்பாளிகளைத் தேடிப்பிடித்தார். இந்திய பதிப்பகங்களோ, பத்திரிகை+சஞ்சிகைகள், திரைப்படங்கள் பெரிதான பொருளாதார அளவிலே ஈழத்தமிழரையோ புலம்பெயர்ந்தவர்களையோ நம்பியில்லை என்பதை அறிவேன். ஆனால், ஆனந்தவிகடன் தொடங்கிய காலத்திலிருந்து எமது கைப்பொருளைவிட்டு வாங்கிய இச்சஞ்சிகைகளோ ஊடகசேவைகளோ தம் நாட்டின் மீதான குற்றங்களை முற்றாக மறைத்துவிட்டும் ஈழத்திலான தம் நோக்கத்தினைத் தம் நாட்டின் அதேமொழிபேசும் வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தாமலுமிருந்துவிட்டு (திரித்ததையும் சேர்த்துக்கொள்ளலாம்), தொடர்ந்தும் எம்மை வாடிக்கையாளராகக் கொண்டிருப்பது, எம்மைப் பற்றிய இவர்களின் உட்கருத்தினை மிகவும் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.
எமது கருத்துகள் இந்திய இராணுவத்தின் இலங்கைக்கான வருகையின் பின்னால், ஒருபோதும் இச்சஞ்சிகைகளிலே, ஊடகங்களிலே தெரியப்படுத்தப்பட்டதில்லை. கிட்டத்தட்ட ஈராக்குக்குப் படையினரோடு சென்ற அமெரிக்கப்பத்திரிகையாளர்கள்போலவே தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் செயற்பட்டுக்கொண்டார்கள். இராம், மாலன், சோ போன்ற இதழாசிரியர்கள் இன்னமும் ஒரு படி மேலே சென்று இந்த அரசியலிலே தமக்கான ஒரு நிலைப்பாட்டினைக்கூட எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு அப்படி எடுக்க இருக்கும் உரிமையை எவ்வகையிலும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர்களாகவிருக்கும் ஊடகங்கள், சஞ்சிகைகள், செய்திநிறுவனங்களிலே பணம் விட்டு வாங்கிக் காணும் எல்லா வாசகர்களுக்கும் பேதமின்றிக் கருத்தினைச் சொல்லும் சந்தர்ப்பத்தினையும் செய்திகளைச் சரியான தரவுகளோடு எவருக்குச் சாதகம்-பாதகம் என்றில்லாமலே தந்திருக்கவேண்டும். ஆனால், ஒருபோதும் செய்யவில்லை. எங்கள் குரலைக் கேட்கவிடவில்லை.
இப்படியான பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர்களுக்கு பிரபல இந்திய ஊடகவியலாளர் ஒருவர் காஷ்மீரை முன்னிலைப்படுத்தி இந்தியா-பாக்கிஸ்தான் மக்களைக் குறித்து ஊடகங்களின் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்திச் சொன்னதை இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்; "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." இத்தகைய களநிலையை, உண்மைநடப்பினை, தமிழ்நாட்டின், இந்தியாவின் பத்திரிகையாளர்கள் தம் உற்பத்தியினைத் தொடர்ந்து வாங்கும் ஒரே மொழி பேசும் ஈழத்தமிழருக்காக, அவர்களின் குரல்களையும் கேட்டு, தமது சொந்தநாட்டிலிருக்கும் வாசகர்களுக்கும் அடுத்த பக்கத்தினைச் சொல்லியிருக்கச் செய்திருக்கவேண்டிய அவசியமும் வாய்ப்புமுள்ள பத்திரிகைநெறியும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தவேண்டிய கடப்பாட்டு வியாபாரநெறியுமிருந்திருக்கின்றன. ஆனால், மாலன், லேனா போன்ற ஆசிரியர்கள், உதவியாசிரியர்கள் செய்யவில்லை. எங்கோ ஆங்கிலம் பேசும் அமெரிக்கா அரபு பேசும் ஈராக்குள்ளே நுழைவதற்காக யுத்தத்தினை எதிர்த்துக் குரல் எழுப்பி தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதிலே மும்முரமாகவிருந்திருக்கின்றார்கள். யாரோ ஆங்கிலம் பேசும் அமெரிக்க ஊடகவியலாளர்களிலே ஓரிருவரேனும் விழித்துக்கொண்டு, அரபுத்தேசத்திலே அபு கிராப் பற்றியோ, அமெரிக்க இராணுவத்தினர் சிலரின் ஈராக்கியப்படுகொலைகள், பாலியல்வன்புணர்வுகள் பற்றிப் பேசும்போதும், அந்த அழுத்தத்திலே அமெரிக்க அரசு சம்பந்தப்பட்டவர்களிலே விசாரணை நடத்தும்போதும் நியாயம் நிகழ்ந்ததென இப்பத்திரிகையாசிரியர்கள் வரவேற்கின்றார்கள். ஆனால், இன்றைய நாள்வரை அதேபோன்ற இந்திய இராணுவத்தின் ஈழச்செயற்பாடுகள் குறித்து ஏன் விசாரணை எழுப்பப்படவில்லையென்றோ என்ன நடந்ததென்றோ ஒரே மொழி பேசும், ஈழத்தமிழருக்கு இன்னமும் பதிப்புற்பத்தி ஏற்றுமதி செய்யும் தமிழகப்பத்திரிகையாளர்களோ, செய்தியாசிரியர்களோ அதைப் பற்றி ஒரு சொட்டுச்சத்தமுமெழுப்பவில்லை. நாங்கள் தொடர்ந்தும் குமுதம், கல்கி, துக்ளக், இந்தியா ருடே, புரொண்ட் லைன் வாங்கிக்கொண்டு, சிவாஜி படத்திலே "யாழ்ப்பாணப்பெண்ணெடுப்பது" குறித்து ஒரு வரி சொன்னது எமக்கான அங்கீகாரமெனப் புளகாங்கிதம் அடைந்துகொள்கிறோம். (இங்கேதான் என் முதற்கூற்றிலே சொல்லப்பட்ட கருத்துநிலைவிடுதலை அவசியமாகின்றது. எவரது அங்கீகாரமும் எமக்குத் தேவையில்லை; ஆக, நாம் எதிர்பார்ப்பது, சமதட்டிலிருக்கும் சக நண்பர்களையே)
இத்தனைக்குப் பிறகு, இப்படியான அவலச்சூழலிலே அவம்சுமக்கும் தன் ஊடகவியலாளர் முகத்தினை இன்னமும் இணையத்திலே(யும்) காவி வந்து "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று மாலன் வெட்கமின்றி எம்மிடம் கேட்கும்போது, இத்தனை ஆண்டுகளாக குமுதத்துக்கும் இந்தியா ருடேக்கும் நான் விட்டழித்த காசின் பெயரினாலே, தமிழகச்சஞ்சிகைகளில் இழந்த நம்பிக்கையின் பேரால், ஒரு வாசகனாக, ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளனாக, அவரிடம், அவரது பத்திரிகாதர்மம் மேலே, இங்கே -அவர் தப்பித்துப்போகமுடியாத,என் குரலும் அமுக்கமுடியாது கேட்கும் இணையத்திலே- கேள்வி கேட்காமல், வேறெங்கே, வேறு யாரிடம், வேறெப்போது, வேறெதைப்பற்றி நான் கேட்பது? இதைக் காழ்ப்புணர்விலே கேட்கின்றேன் என்று அவர் கருதினால், "இத்தனை நாள் உங்கள் உற்பத்திகளைத் தரம், குணம், மணம் பற்றியேதும் கேட்காமல் வாங்கிக்கொண்டேயிருந்த எங்களின் அவலங்கள் பற்றி ஒரு சொல் உங்கள் சஞ்சிகைகளிலே, செய்திகளிலே உங்கள் நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ மாற்றானதாக விடாத உங்களின் உணர்விலே எம்மைப் பற்றிக் காழ்ப்பிருந்திருக்கவில்லையா? ஓர் இரண்டாம்நிலைத்தமிழர்களென்ற கீழ்நோக்கிய பார்வையிருக்கவில்லையா? " என்று நான் எதிர்க்கேள்வி கேட்கலாமா?
இத்தனைக்கும் பின்னால், "விடுதலைப்புலிகளையா இந்துவையா உலகம் நம்பும்?" என்று இங்கே இணையத்திலே எள்ளலாகக் கேட்பவர், "...before talking of any political solutions, misgivings have to be cleared. An average Indian especially from the south sees Kashmir only on TV or in the paper and perceives Kashmiris to be unpatriotic or ungrateful. Perhaps the media is responsible for this portraiture. This has to be rectified. Possibly a similar situation prevails with reference to Pakistan. There is a very colonial mindset with a series of biased perceptions against each other. Without clearing the air, it is not possible to put forward a solution. There is a very large constituency for peace and this has to be strengthened before moving towards any solution. And, yes, there is definitely a need for more interaction with Kashmiri journalists..." என்று இலங்கையிலே பெந்தோட்டவிலே நடந்த இந்திய-பாக்கிஸ்தான் உறவுநிலை குறித்த ஊடகவியலாளர்கூடலிலே காஷ்மீரிகள் & பத்திரிகையாளர்கள் பற்றி -கொழும்பிலே சக தமிழ்ப்பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் அதே காலகட்டத்திலே அது பற்றி எங்குமே பதிவு செய்யாமல்- பேச முடிமுடியுமானால், அது பாசாங்குத்தனமில்லாமல் வேறென்னவென்றே தோன்றுகின்றது.
இப்போது, சொல்லுங்கள், மாலன், உங்களைப் போன்ற ஒரு தமிழ்ப்பத்திரிகையாளரிடம், வாய்ப்பாகிப்போன எனது-உங்களது என இருபக்கக்குரல்களும் கேட்கக்கூடிய இணையத்திலே, கேட்காமல், வேறு யாரிடம் நான் இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே என் ஈழம்-இந்தியா பற்றிய கேள்விகளையும் உங்களின் பத்திரிகாதர்மங்களின் இரட்டை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிலைப்பாடுகளைப் பற்றியும் கேட்பதாம்?
உசாத்துணை (அச்சு நூல்கள்)
1 ஆ. இரா. வேங்கடாசலபதி (2002) நாவலும் வாசிப்பும்; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
2 இரா. வை. கனகரத்தினம் (2001) ஆறுமுகநாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும்; பூரணம் வெளியீடு, கொழும்பு
3 பொ. ஐங்கரநேசன் (2006) வேர்முகங்கள்: நேர்காணல்களின் தொகுப்பு; சாளரம் வெளியீடு, சென்னை
-/இரமணிதரன், க.
'07 ஜூலை 27 வெள்ளி 17:28 கிநிநே.
Friday, July 27, 2007
Wednesday, July 25, 2007
அரைகுறை - 11
படத்துண்டின் மூலம் இங்கிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்படத்துண்டத்தையிட்டவருக்கு நன்றி.
வெட்டியெடுக்கப்படும் துண்டத்தினை மட்டும் பார்ப்பதாலே ஒரு படத்தைப்பற்றி முற்றும் எதிர்மாறாக எண்ணிக்கொள்ளலாமென்பதற்கு இத்துண்டம் ஓர் எடுத்துக்காட்டு
வரையுயிர்ப்படமாக்கும் முயற்சீய்
Tuesday, July 24, 2007
Saturday, July 21, 2007
ஒலியம் -2
கரைவு - 9
ஜெயச்சந்திரன் கோபிநாத்தின் வலைப்பக்கம் 1995
சிறுபொறியும் நொய்புள்ளியொன்றில் நெகிழ்ந்த கணத்திலே தெறிக்க, பரவிச் சுற்றெல்லாம் பற்றிக்கொள்கிறது. மாலனின் "விட்டுப்போன எட்டு" என்ற வலைப்பதிவு இடுகையிலே சொல்லப்பட்ட தமிழிணையம் பற்றிய கருத்துகள், பெருமளவிலே இக்குறிப்புத்தொடருக்குப் பொறியாகியிருக்கின்றது.
முன்நிகழ்வுகளின் சுருக்கம்
மாலன் தன் "எட்டியவரைக்கும் ஒரு எட்டு" பதிவின் பின்னூட்டத்தில் சுதேசமித்திரன் பாரம்பரியம், "விட்டுப்போன எட்டு" என்ற பதிவிலேயும் இணையத்திலே தமிழினை ஏற்றியது, கோவிந்தசாமி, கணிச்சொல்லகராதி, தமிழின் முதல் யூனிக்கோட் எழுத்துரு இதழ், வலைப்பதிவின் வரலாறும் வளர்ச்சியும் ஆகியவை குறித்த இரு குறிப்புகளினையும் உள்ளடக்கியிருந்தார். அதற்கு "இணையபிதா கோவிந்தசாமி" என்ற அர்த்தத்திலே அருணா ஸ்ரீனிவாசனும் பின்னூட்டியிருந்தார். இவர்களின் கருத்துகளிலே, தரவுகளிலே காணப்படும் வழுக்களையும் அவ்வரலாற்றுத்தரவுகளுக்கு மாற்றுகளிருப்பதற்கான சாத்தியத்தைச் சுட்டாத முழுமையின்மையும் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதே நேரத்திலே, செல்வநாயகியின் "மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை" பதிவிலே வெளியான மாலனது, எனது எதிர்வினை, தெறிவினைகளின் காரணமாக, இவ்(வி(தண்டா))வாதம் ஈழம், இந்தியா, விடுதலைப்புலிகள், தி இந்து ராம், எள்ளல்/ஏகடியம் ஆகியவை குறித்தும் நீட்சியடைந்து, பேச்சு தடித்து விரிந்தது; இவற்றினைத் தொட்டு, மாலன், தொட்டுப்போனவர்களுக்கு நன்றி" என்ற இடுகையையும் நான் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" என்ற இடுகையினையும் இட்டோம்.
இவ்விடுகையிலே, நாவலர், உதயதாரகை, மற்றும் கணித்தமிழ், பாரம்பரியம் இவை பற்றி மாலனினாலே சொல்லப்படாத மாற்று வரலாறுகளுக்கான சாத்தியங்களையும் சான்றுகளையும் ஓரளவுக்கு இணைத்திருந்தேன். இதற்கான எதிர்வினைகளாக, என் இடுகைகளிலே 'பாஸ்டன்' பாலாஜி, டிசே, 'மூக்கு' சுந்தர், தீவு, இரவிசங்கர், தங்கமணி, கொழுவி, குளக்காட்டான், குழப்பி உட்பட சிலர் பின்னூட்டியிருந்தனர். பதிலுக்கு, அருணா ஸ்ரீனிவாசன் மூன்று இடுகைகளைத் தந்திருந்தார்; தலைப்பற்ற இடுகை (சுட்டும் காரணம் நோக்கி அவ்விடுகையினை அதன் முன்மூன்று சொற்கூட்டால் "பெயரிலி என்ற ரமணீதரனுக்கு" என்று இனிக் காட்டுவேன்), TamillNet 97 and 2000, Tamil on Web. இவ்விடுகைகள், கு. கல்யாணசுந்தரம், 'முரசு' நெடுமாறன், நா. கோவிந்தசாமி ஆகியோரினை அவர் கண்ட செவ்விகளைத் தந்திருந்தன. இவற்றிலே மாலன், 'அச்சுப்பதிப்பிலிருந்து இணையத்தின் ஏறிய முதலாவது தமிழ்ச்சஞ்சிகை' என்று குறிப்பிடுதலுடன் மாலனின் கருத்தும் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னால், மாலன், அன்புள்ள பெயரிலிக்கு என்ற இடுகையைத் தந்திருந்தார். இவரின் இவ்விடுகை விடுதலைப்புலிகள், வலைப்பதிவுகளின் எதிர்காலம், எதிர்வினைகளில் எள்ளல், தமிழ்ப்பாரம்பரியம், கோவிந்தசாமி- இணையத்தில் தமிழ் ஆகியவற்றுக்கான அவரின் ஆதாரங்கள் அடக்கியவை.
இவற்றுக்கான எதிர்வினைகளை அவ்வப்போது என்னுடைய முன்னே சுட்டிய "விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலே இட்டுவந்தேன். விடுதலைப்புலிகள் தொடர்பான மாலனின் ஒரு கருத்துக்கு, கொழுவி தனது, "கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும்" இடுகையினை எதிர்வினையாக்கியிருந்தார். வலைப்பதிவுகளின் அமைப்பு, தொழிற்பாடு குறித்த எதிர்வினைகளை ஓசை செல்லா, "இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன்?" எனவும், மாயன் "மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள்" எனவும் தந்திருந்தனர். மேலும், செல்வநாயகி, "அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்" என்று ஈழத்தமிழர் குறித்த மாலனின் இடுகைக்குத் தொடர்பான இடுகையைத் தந்திருந்தார். இவற்றோடு வாய்ஸ் ஆன் விங்க்ஸ், இவ்விவாதங்களின் போக்கினைச் சுட்டி, "வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி" என்ற இடுகையினை இட்டிருந்தார்.
இவ்விடுகைகளின் பட்டியலை வாசிப்பவர்களின் வசதிக்காக, கீழே தந்திருக்கின்றேன்.
1. எட்டியவரைக்கும் ஒரு எட்டு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post.html
2. விட்டுப்போன எட்டு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html
3. மக்கள் பங்குபெறாத புரட்சியிலே பயனில்லை - செல்வநாயகி
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html
4. விட்டதன் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல் - -/பெயரிலி.
http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html
5. பெயரிலி என்ற ரமணீதரனுக்கு - அருணா ஸ்ரீனிவாசன்
http://aruna52.blogspot.com/2007/07/blog-post_12.html
6. TamillNet 97 and 2000 - அருணா ஸ்ரீனிவாசன்
http://arunasarchive.blogspot.com/2007/07/tamil-net-97.html
7. Tamil on Web - அருணா ஸ்ரீனிவாசன்
http://arunasarchive.blogspot.com/2007/07/naa.html
8. தொட்டுப்போனவர்களுக்கு நன்றி - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_2256.html
9. அன்புள்ள பெயரிலிக்கு - மாலன்
http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html
10. இப்படிச் சொல்லீட்டிங்களே மாலன் ? - ஓசை செல்லா
http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html
11. மாலன் Vs. செல்லா - சில கருத்துக்கள் - மாயன்
http://www.pkblogs.com/maayanpaarvai/2007/07/vs.html
12. கள நிலவரங்களும் மக்கள் ஆதரவும் - கொழுவி
http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_16.html
13. அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும் - செல்வநாயகி
http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html
14. வெற்றுவிவாதங்கள் தரும் அயர்ச்சி - வாய்ஸ் ஆன் விங்க்ஸ்
http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_15.html
இத்தொடர் மீதான என் எதிர்பார்ப்பு
இவ்வாதங்கள்மீதான தொடர்ச்சியான என் சிறுகுறிப்புகளை வாசிக்க முன்னால், மேலே தந்திருக்கும் இடுகைகளை மிகவும் அவதானமாக வாசிக்கும்படி ஈடுபாடுடையோரைக் கேட்டுக்கொள்கிறேன். அவரசமான எதிர்வினையாற்றல், குழப்பத்தைத் தந்து எதிர்வினைகளைத் திசை திருப்புவதோடு நேர, சக்திவிரயங்களையும் எல்லோருக்கும் ஏற்படுத்தும். இதுவரை இவ்விடயத்திலே நான் அவதானித்ததன்படி, அருணா, மாலன் போன்ற சம்பந்தப்பட்டவர்கள்கூட என் இடுகை, பதில்களின் கருத்துகள், இணைப்புகள் ஆகியவற்றினைக் கவனிக்காமல், மீண்டும் எனக்கே அவ்விணைப்புகளை வாசிக்கும்படி சுட்டுவதும் (கோவிந்தசாமியின் தமிழ்நேஷன் தொடர்பான சுட்டி, Casting their Net) தமக்கு வாய்ப்பான ஆதாரத்தரவுகளைக்கூடத் தவறவிடுவதும் (நா. கோவிந்தசாமியின் 1995 ஆண்டின் இணையமேறிய தமிழ்க்கவிதைப்பக்கத்தினையும் அவர் 1995 செப்ரெம்பரிலே தொடங்கியதாகச் சொல்லி, 27 ஒக்ரோபர் 1995 இலே தமிழ்பொயம்ஸ் ஏறியதாகக் குறித்த அவரின் இணையப்பக்கத்தினையும் சுட்டிக்காட்டியும் மாலன் அதற்குப் பின்னாலான இரண்டாம்நிலைத்தரவுகளை முன்வைக்கின்றார்) அவலமான நிலை. இதற்கு என் இடுகையின் எழுத்துநடை ஏதேனும் காரணமாகவிருந்திருந்தால், அவர்கள் மன்னிக்கவேண்டும்.
பொதுவாக என் வலைப்பதிவுக்கு எவரையும் வரவேண்டுமென்ற எண்ணத்தினைத் தமிழ்மணத்திலே சேர்த்தலுக்கப்பால், நான் பின்னூட்டக்கயமையினாலோ வேறேதோ வகையினாலோ முயற்சிப்பதில்லை. ஆனால், இச்சிறுதொடரை வாசிக்கும் நண்பர்கள், இயன்றவரை தம் நண்பர்களிடம் (-பல்லைக்கடித்துக்கொண்டு) வாசிக்கும்படி கேட்க வேண்டுகோள் விடுக்கின்றேன். இஃது என் பதிவு கவனம் பெறுவதற்காகவல்ல; ஆனால், "சார், நல்ல விளக்கம்!", "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது","காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?", "இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி" என வெளிப்படையான வழுக்களும் பலமில்லாத ஆதாரங்களும் பரவிக் கிளைத்திருக்கும் மாலனின் இடுகைக்கு விழுந்திருக்கும் பின்னூட்டங்கள் தமிழ் இணையம், தமிழ்க்கணிமை குறித்த நிகழ்வுகள் எதிர்காலத்திலே எப்படியாக எழுதிவைக்கப்படப்போகின்றதென்ற பயத்தினை ஏற்படுத்துகின்றன. 'முப்பதாண்டு பத்திரிகையனுபவம் மிக்க' மாலனின் பிரபலமோ, 'இணைய ரவுடி' -/பெயரிலி. மீதான தனிப்பட்ட வெறுப்புணர்வோ தமிழ்மொழி சார்ந்த வரலாற்றினைத் திரிபுற்றுப் புரிந்துகொள்ளக்காரணமாகிவிடக்கூடாது. அதற்காகத்தான் இவ்வேண்டுகோளை முன்வைக்கின்றேன் - -/பெயரிலி. குறித்த அபிப்பிராயத்தினை மாற்றவல்ல. மாலன், அருணா ஆகியோர் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள், தரவுகள், கருத்துகளை, இத்தொடரிலே இனி வரும் இடுகைகளிலே ஒவ்வொன்றாக எதிர்கொண்டு பதிலளிப்பேன்.
வரலாறென்பது விமர்சனத்தோடு அணுகப்படவேண்டியது. நிகழ்வுகளை வரலாறு என்ற பெயரிலே பதியும்போது, பதிகின்றவனின் பார்வை நிகழ்வின்மீது தொடர்ந்தும் தன் எச்சத்தை இட்டுப்போவதைத் தவிர்க்கமுடியாது; ஆனால், நேர்மையான வரலாற்றுப்பதிதல் என்பது, வரப்போகும் விமர்சனத்தன்மையுள்ள வாசகன் சொல்லப்பட்ட வரலாற்றிலிருந்து எழுதியவனின் பார்வையைப் பிரித்து தரவுகளை உள்வாங்கவும் இன்னொரு வரலாற்றுக்குறிப்பாளன் அத்தரவுகளை நம்பிக்கையுடன் மேற்கோள்காட்டி விட்டுப்போன பகுதியைப் பொருத்தமான வகையிலே மீளாய்ந்து இட்டுநிரப்பவும் கிட்டும் புதிய தரவுகளை தகுந்த இடங்களிலே இடைச்சேர்க்கவும் வசதியை வழங்குவதாகவும் இருக்கவேண்டும். அறியாத காலம் பற்றிய வரலாற்றினை, தன் கைவசமிருக்கும் அல்லது தான் நம்பும் தரவுகள் போதுமானவையும் அறுதியானவையும் என்ற தீர்மானத்துடன் எவரும் முழுமையாகப் பதிவு செய்யமுடியாது; பதிவு செய்யக்கூடாது. தமக்கு அறியப்படாத மாற்றுநிலைகளும் நிகழ்வுகளும் இருக்குமென்பதை ஏற்றுக்கொண்டு அவற்றின் சாத்தியத்தைத் தன் வாசகருக்கு உணர்த்தி, தன் பார்வையிலே தரவுகளைத் தருகின்றபோதே அவ்வரலாறும் அதன் ஆசிரியரும் தன்னுடைய இன்றைய நாளைய வாசகர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் சரியானதைச் செய்கின்றவராகின்றார்; நேர்மையுடைத்தவராகின்றார்.
வரலாறு என்பது ஒற்றைப்புல்லுமில்லாத வெட்டவெளியிலே ஒற்றைத்தடமாக மணற்கோடு கீறுவதாகாது; நிகழ்வுகளாக உறுதிப்படுத்தப்பட்ட பல புள்ளிகளூடாகச் செல்லக்கூடிய அனைத்து நெளிகோடுகளினதும் தொகுப்பாகவே இருக்கமுடியும். இவற்றிலே எக்கோடு பொருத்தமானதென்பதை இனிவரும் நாட்களிலே தோண்டியெடுத்துச் சரிபார்த்த புதிய தரவுகளே தீர்மானிக்கமுடியும். சாதாரணமாக வாசகர்களுக்குப் போகின்றபோக்கிலே கதை சொல்கின்றபோதுங்கூட, இக்கவனம் பிறழாமல் ஒருவர் செய்யவேண்டும். இதன் அடிப்படையிலேயே என் இக்குறிப்புகள் தொடர்கின்றன. நான் எத்தரவினையும் ஆதாரத்துடன் முன்வைக்கும்போதும், கருதுகோள்களை அவற்றுக்குரிய போதும்-போதாமை உணர்ந்து எடுத்துக்கொள்வதிலும், முடிவான நிறுவல்களை, தரவுகள் போதாத வெளிகளிலே இருக்கும் தரவு, கருதுகோள் ஆகியவற்றினைப் பயன்படுத்தி ஏரணத்தின் அடிப்படையிலும் இயன்றவரை தர முயற்சிக்கின்றேன் என்பதை வாசகர்களுக்குத் தெளிவுபடத் தெரியப்படுகிறேன்.
எனது இச்சிறுதொடரின் நோக்கம், எவரையும் எதிலும் வெல்வதல்ல; நாவற்கிளையேதும் நான் நாட்டித்தொடங்கவில்லை. ஆக, நிகழ்ந்ததை, திருத்தமான ஆதாரத்தரவூடாக மேலும் தெளிவாக்கியும் நேராக்கியும் காட்டுதலும் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் என் தனியான புரிதல்களையும் பார்வைகளையும் தருதலுமேயாம்.
தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களிலே எழுதச் சந்தர்ப்பம் வாய்க்காது; ஆனால், ஓகஸ்டு 2007 இற்கு முன்னால் இச்சிறுதொடரை -இடையிலே வரும் எதிர்வினைகளுக்கும் இயன்றவரை பதிலளித்து- முடித்துவிடுவேன்.
இச்சிறுதொடரிலே கீழ்க்கண்ட இடுகைகளை இப்போதைக்கு இடுவதாக இருக்கின்றேன்
பகுதி 1 - மு(எ)ன்னுரையும் இன்ன பிறவும்
மாலன், அருணா, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் ஆகியோரின் மையக்கருத்துகளிலிருந்து விலகியோ முக்கியமற்றோ துகள்போலக் காணப்படும் சில உதிரி விடயங்கள் பற்றிய பதிவு இது. இணையபிதா, டாக்டர்/பேராசிரியர், வரலாற்றை உரைப்பதில் பிரபலங்களின் தாக்கம், எள்ளலும் மாலனைக் கேள்வி கேட்பதற்குமான காரணங்கள், ஆதாரங்களை முன்வைக்கும் முறையிலிருக்கும் பிரச்சனைகள், வலைப்பதிவுகளை நோக்குதல், இணையத்தமிழ் வரலாற்றினைப் பதிவு செய்யும் நோக்கு
பகுதி 2 - இணையத்தமிழ் ஆரம்பம்
soc.culture.tamil, gif தமிழ், இணையபிதா?, இணையத்திலே தமிழ் மீதான பொதுக்கருத்து, கோவிந்தசாமி, தமிழ்நெற் எழுத்துரு.எதிர்.தமிழ்நெற் இணையக்குழு, கணியன்+தமிழ்நெற் விசைப்பலகை+எழுத்துரு .எதிர்.கணியன் இதழ்.எதிர்.பூங்குன்றனார் கவிதை, மாலனின் ஆதாரங்களின் ஓட்டைகளும் துருக்களும் களிம்பேற்றமும், கல்யாணசுந்தரம் (மயிலை)/மின்னூலகம், ஜெயச்சந்திரன் கோபிநாத்+சைரஸ் தமிழினை எழுத்துருவினால் இணையமேற்று முயற்சி (ஓகஸ்ட்/செப் 1995)
பகுதி 3 - தமிழில் முதல் சஞ்சிகை, யூனிகோட் சஞ்சிகை, இன்ன பிற 'முதல்'
இணையம் கண்ட முதல் தமிழச்சுச்சஞ்சிகை 'குமுதம்' ஆ?, முதல் யூனிகோட் தமிழிதழ் 'திசைகள்' ஆ? முதல் தமிழ்ப்பக்கங்கள் தேடி, முதல் தமிழிணைய உரையாடி, இன்ன பிற
பகுதி 4 - தமிழில் கணிச்சொற்கோவை அமைத்தலும் தன்னாவத்தொண்டுகளும்
தமிழிலே கணிச்சொற்கோவை இணையத்திலே ஆகிவரும் முறை, தன்னார்வத்தொண்டுகளும் செயற்பாடுகளுக்கான பங்களிப்புகளும் பங்குபிரித்தல்களும்
பகுதி 5 - தமிழில் வலைப்பதிவு
தமிழில் வலைப்பதிவு.. எங்கிருந்து, எங்கே, எவரால், இனி எப்படி
பகுதி 6 - தமிழ் இலக்கியப்பாரம்பரியம்
யாருடையது, தமிழகத்தின் சுதேசமித்திரன் பாரம்பரியம் அடக்குவன இவை என்ற பிம்பக்கட்டுமானம், கட்டுமானம் உருவாகும் முறை, தமிழுக்கு சுதேசமித்திரன் சுட்டாதனவற்றின் பங்களிப்பு பேசும் தேவைக்கேற்ப, மொழிவளர்ச்சியில் ஈழத்தின் பங்களிப்பு
பகுதி 7 - ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள்
ஈழம், இந்தியா, இந்து ராம், மாலன், விடுதலைப்புலிகள், தரவின்றித் தன் மையத்துக்காய்க் கருத்துக் கட்டமைத்தல்
இயன்றவரை கைக்கெட்டிய இணையம், கையிருப்பு நூல்கள் ஆகியவையே என் ஆதாரங்களாகும். ஆனால், அவற்றினை முன்வைத்தே பேசுவேன். இக்கட்டுரைக்கான மேலதிகமான ஆதாரங்களையும் தொடர்புகளையும் ஏற்படுத்தித் தந்த (& தரப்போகும்) நண்பர்களுக்கும் நேரமெடுத்து என் பதிவுக்குப் பதில் தரும் விதத்திலே பதிவிட்ட மாலன், அருணா ஆகியோருக்கும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
'07 ஜூலை 21, சனி 00:35 கிநிநே.
Friday, July 20, 2007
Thursday, July 12, 2007
பழசு - 8
குழித்தீயோடு சீதையையும்
கோதைசீதையோடு ராமனையும்
உத்தரராமனோடு அனுமனையும்
வலிஅனுமனோடு அங்கதனையும்
அம்பிகாபதியோடு கம்பனையும்
கவிகம்பனோடு வால்மீகியையும்
கல்லூரியோடு கழற்றித் தொலைத்து
கரைத்து மறந்துபோக்கியாகிவிட்டது.
ஆனால், போர்க்களமிருந்து
கடன்பட்டார் நெஞ்சத்தோடு
தலைகுனிந்துபோன
அந்த அவனை மட்டும்
என் மனமிருந்து இன்னும்
இறக்கி விட முடியவில்லை.
கம்பராமாயணம் குறித்து அண்மைய பதிவுகளிலே நிறையப் பேசப்படுகின்றது. எவரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது; எல்லோரும் எழுதியதை வாசித்து வாசித்து விளக்கத்துக்குப் பதிலாகக் குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது - குறிப்பாக, பேச்சு பேசிக்கொண்டிருந்த படைப்பினை விட்டு மிகவும் விலகி மிகவும் கருத்துரு சார்ந்த தளத்திலே மட்டும் பேசும் நிலை வந்தபின்னாலே. என் பங்குக்கு இங்கே அங்குமிங்கும் அளைந்து ஒரு சட்டிக்குழம்பு :-)
இராமாயணத்தினை எப்படியாகப் பார்க்கின்றோம் என்பது அவரவர் எதை அதிலே தேடுகின்றார் என்பதைச் சார்ந்தது. மிக எளிதான "தேடுங்கள் கிடைக்கப்பெறும்" உண்மை அது. இலக்கியத்துக்காகத் தேடுகின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; இறைவனுக்காகத் தேடிக்கொள்கின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் & ஒரு களத்தின் குறுக்குவெட்டினை அறியத் தேடுகின்றவர் - ஓரளவுக்கு கவித்துவமும் புனைகற்பனையும் மயக்கும் இரைச்சல் விலக்கி - அதற்கேற்ற மாதிரியாகப் பகுத்துக்கொள்ளட்டும். இதிலே முரண் ஏதுமிருக்கமுடியாது. ஒருவரின் பார்வையே சரியென்பதாகவும் தோன்றவில்லை (நிகழ்வு என்பது ஒன்றாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்டது; சொல்லப்போனால், ஒருவருக்கான உண்மை என்பது, நிகழ்வினை அவர் கிரகித்து உள்வாங்கும் விதமும் பார்வையுமே). இந்த வடிவிலேயே, ஒரு புறம், கம்பனுடைய இராமாயணத்தினை வைத்து ஒரு சாராருக்கு கம்பனையோ இராமனையோ குற்றக்கூண்டிலே இழுத்து ஏற்றவும் தாடகையை ஏற்றிப் புகழவும் முடிகிறது; மறுபுறம், செவ்வியல் என்ற அளவிலே அதனை இலக்கியமாக மட்டும் பார்க்கின்றவர்களின் பார்வையும் அதனளவிலே சரியென்று படுகின்றது. ஆனால், இவ்விரண்டு பார்வைகளும் எதிரும் புதிருமென்று தமக்குள்ளே மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எந்தப்படைப்பிலக்கியம் தொடர்பாகவும், அதனதன் தேவை சார்ந்து இவற்றிலே எந்தப்பார்வையும் சரிதான்.
அதன் காரணமாகத்தான், முழுமையாகக் கம்பராமாயணத்தினை முழுக்க நான் ஒருபோதும் வாசித்ததில்லை என்கிறபோதும், அங்குமிங்கும் துண்டங்களாக வாசித்த அளவிலே, நான் ப. ஜீவாவினது எனச் சொல்லப்படும் கட்சி. கம்பன் கவிதையின் ஊற்றையும் ஒழுக்கையும் வாசிக்க உற்சாகம் பொங்க, கம்பராமாயணம் பிடிக்கின்றது; எனக்கு வாசிக்கும்போது, அப்படியாகப் பொங்கிவரும் உத்வேகத்தினைத் தருகின்ற, கம்பனைப் போன்ற, வேறு "பழம்நூற்றாண்டுகாலத்துக்கவிகள்" இருவர்தான்; இன்றைய எந்தத் துள்ளற்பாட்டுக்காரர்களும் தரமுடியாத துள்ளலை மணிப்பிரவாளத்திலே தந்த அருணகிரிநாதர் & ஆளை உருக்கும் வாசகம் தந்த மாணிக்கவாசகர். இங்கே கம்பராமாயணக்கவிதையை கவிதை உணர்வுக்காகமட்டுமே பார்த்துவிட்டுப் போகிறேன். கவிஞனாகக் கம்பன் பிடித்திருக்கிறான். ஆனால், கம்பராமாயணத்தின் கதாபொருள், கதாபாத்திரங்கள், கருத்து என்பனவற்றினை முன்னிலைப்படுத்தி, அதற்குள்ளே ஒரு காலகட்டத்திலே களத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைப் பகுப்பாய்வு பண்ணிக் கட்டுடைக்கப்போனால், தாடகைக்கும் சூர்ப்பனகைக்குமாக நியாயம் கேட்கவே இயல்பாக விருப்பமெழுகின்றது. அந்நிலையிலே கம்பன் என்கின்றவன் துளசி இராமாயணத்திலே எடுத்து எழுதினானா இல்லையா என்பதொரு புறமிருக்க, வடநில இராமனை எப்படியாகத் தமிழ்ச்சூழலிலே உருவகிக்க விரும்பியிருக்கின்றான் என்ற பார்க்க விரும்புகையிலே, கம்பனை, அவன் புரவலர், பின்புலம், புனைகாலம் எல்லாம் நோக்கி விசாரிக்கவே முடிகிறது; அதிலே தவறுமில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவன் கம்பராமாயணத்தினை(யோ அல்லது வேறெந்தப் படைப்பினையோ) அணுகலாமா என்றால், (என்னால்) முடியுமென்றே சொல்வேன். இப்படியாக ஒரு படைப்பினைக் குறித்துச் சாத்தியமாகக்கூடிய இரு நிலைப்பாடுகளுக்கு வேறு சில உதாரணங்களையும் தரலாம்.
அ. தமிழ்த்திரைப்படப்பாடல்கள் & Shaggy_மற்றும் பல Rap பாடகர்களின் பாடல்கள் - "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்" & "பழகத் தெரிய வேணும்; பெண்கள் பார்த்து நடக்கவேணும்" இவை இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்களிலே அடங்கும். முதலாவது பாடல், அதிலே இருக்கும் கவிதைப்படிமத்துக்காக; இரண்டாவது பாடல், ஏ. எம். ராஜாவின் குரலுக்காக; ஆனால், சமூகக்கருத்தாக்கத்திலே அப்பாடல்வரிகளைப் பார்க்கும்போது இரண்டுமே பெண்களினை அவமதிக்கின்ற, ஆணாதிக்கத்தினைச் செருகுகின்ற பாடல்களாகவே இருக்கின்றன. "மண்ணில் இந்தக்காதலன்றி" போல, இன்னும் பல பாடல்களை இதே வரிசையிலே சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், "It wasn't me" தொடக்கம் பல பாடல்களும் - இசை கொடுக்கும் துள்ளலும் அசைவும் பிடிக்கின்றன; கருத்து பிடிக்கவில்லை. வேண்டுமானால், சமூகக்கருத்-தாக்கத்துக்காக, இச்சந்தர்ப்பங்களிலே பாடலாசிரியர்களைக் குற்றம் சாட்டி விசாரிக்கலாம்; அதேநேரத்தில், பாடலின் இசையமைப்பு & படிமங்களுக்காக, பாடலைப் புகழ்ந்துவிட்டும்போகலாம்.
ஆ. D.W. Griffith இன் "The Birth of a Nation" இனையும், Mario Vargas Llosa இன் "The Real life of Alejandro Mayta" இனையும் அவற்றின் ஏற்படுத்த விழையும் கருத்துப்பதிவுகளுக்காக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், அவை என்னைக் கவர்ந்தவற்றிலே அடக்கம். படம், அது தயாரிக்கப்பட்ட காலத்துக்குரிய "கருத்தாக்கத்தினைப் பிரதிபலித்தாலும்" அக்காலத்திலே திரைப்படம் என்ற சாதனத்திற்குப் புதிய நுணுக்கங்களையும் அச்சாதனத்தின் புதிய சாத்தியங்களையும் தந்திருப்பதாலே பிடித்திருந்தது. புதினம், அது சொல்லப்படும் உத்தி குறித்துப் பிடித்திருந்தது.
ஆனால், இராமாயணம் போன்ற காதைகளைப் பயன்படுத்தும் விதத்திலே, அது நாளாந்த வாழவிலே சிக்கலை உருவாகின்ற நிலமைகளும் இருக்கின்றன. உதாரணமாக, இராமாயணத்தினை வைத்து
அ. வரலாற்றினை வரையறுத்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால அரசியலையும் சமூகச்சிந்தனைப்போக்கினையும் வளர்த்தலும் (அயோத்தி, அரசியற்களமாகவும் பயணக்கலமாகவும் மாற்றப்பட்டது இதன் வடிவமே),
ஆ. கதையைத் தெய்வீகப்படுத்தி, அதிலே சொல்லப்படும் நம்பிக்கைகளையோ கருத்தாங்கங்களையோ கேள்வி கேட்டலையும் அவற்றோடு முரண்படுதலையும் (மறுவாசிப்பும் மாற்றுப்பார்வைகளும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்) குற்றங்களாக தெய்வநிந்தை என்ற போக்கில் அழித்தலும் அமுக்குதலும்
ஆகியன எதிர்க்கப்படவேண்டியனவாகும் (- குறிப்பாக, நாட்டின் அரசியலும் மதமும் ஒன்றிலொன்று சாராதிருக்கின்றதற்கும் கருத்துச்சுதந்திரத்துக்கும் அடிப்படைச்சட்டமிருக்கின்றபோது).
இனி, காவியத்தை (இங்கே, கம்பராமாயணத்தினை) ஓர் இலக்கியப்படைப்பு என்று ஒத்துக்கொண்டு பார்க்கின்றபோது, அதன் பாத்திரங்களின் அமைவும் பண்புகளும் கவிஞன் (இங்கு கம்பன்) என்ற தனிப்பட்டவனின் சொந்த அனுபவம், விருப்பு-வெறுப்பு, விபரிப்பு எல்லை ஆகியவற்றினாலே வரைந்து வனையப்பட்ட பட்ட பார்வை மட்டுமே; அதே பாத்திரங்கள், வேறு காலத்திலே வேறு களத்திலே மாறுபட்ட அனுபவங்களூடாகப் பயணித்து வந்தவர்களுக்கு வேறு கோணங்களிலே நோக்கப்படவும் காதையை மீண்டும் மாற்றுப்போக்கிலே புனைந்து பார்க்கப்படவும் சாத்தியமிருக்கின்றது; தாடகை, சூர்ப்பனகை, வாலி போன்றவர்களின் நிலைமையை அவர்களைக் கம்பன் படைத்த பின்புலத்தினை ஒத்த பின்புலத்திலே வருகின்ற ஒருவரால், அப்படியான பின்புலத்தினைச் சமைத்த கம்பன் உணர்ந்திருக்கமுடியாத உணர்வூற்றோடச் சொல்லமுடியும்; நியாயப்படுத்த முடியும்; இதற்குச் சமாந்திரமாகச் சென்ற ஒரு நூற்றாண்டிலே வந்த உதாரணமாக, வெள்ளைக்காரப்பெண்ணான Margaret Mitchell எழுதிய "Gone With the Wind" இற்கு இருக்கக்கூடிய இன்னொரு சாத்தியத்தைச் சொல்லும் "The Wind done Gone" இனை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளின் பின் கறுப்புப்பெண்ணான Alice Randell எழுதியதைச் சொல்லலாம்.
ஆனால், இராமாயணத்தின் கூறுகளான துணைக்கதைகளையும் பாத்திரங்களின் கதைகளையும் மீள எழுதுதலுங்கூட, தமிழிலே வெவ்வேறு காலகட்டங்களிலே வெவ்வேறு நோக்கங்களிலே நிகழ்ந்திருக்கின்றன. பாரதியாரின் சிறுகதையிலே இராமாயணம் நகைச்சுவையை முன்வைத்து முரணுக்குச் சொல்லப்படுவதாக, குதிரைக்கொம்பாக வந்திருக்கின்றது. மரபுசார்ந்த இராமாயணத்தின் ஷத்ரிய இரவிகுல இராமனை ஆரியன் என்றும் பார்ப்பன புலத்திய இராவணனைத் திராவிடன் என்றும் திராவிட இயக்கங்களுக்குக் காட்டத் தேவையிருந்தபோது, புலவர் குழந்தையின் படைப்பும் அண்ணாவின் கம்பரசமும் எம். ஆர். ராதாவின்(?) கீமாயணமும் வந்திருக்கின்றன. துணைக்கதைகளளும் அப்படியே பேசப்பட்டிருக்கின்றன; வாலியின் வதம் ஏற்கனவே இராமகாதை சொல்லும் தாங்கும் விழுமியங்களின் அடிப்படையிலே ஒரு துளைபோடுவதாகத் தோன்றுவதாலே, திரும்பப் பேசப்பட்டிருக்கின்றது - சில வேளைகளிலே வாலியை நியாயப்படுத்தி & மீதி வேளைகளிலே கோசலைராமனை நியாயப்படுத்தி. புதுமைப்பித்தன் தொடக்கம், தளையசிங்கம், சிவசேகரம் வரைக்கும் அகலிகையைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அதுபோலவே, அண்ணனுக்காகத் தூக்கமில்லாமற் பின்னாலே திரிந்த உறங்காவிலி இலக்குமணனுக்குமாய்ச் சேர்த்து அயோத்தியிலே தூங்கின அவன் மனைவி ஊர்மிளை பற்றியும் அநியாயமாகத் இராமன் தீக்குள்ளே இறக்கிய சீதை பற்றியும் நிறையவே பெண்ணியல்வாதிகள் தாங்கியிருக்கின்றனர். அதுபோலவே, வாலி/சுக்ரீவன் மனைவி தாராவும் இராவணன் மனைவி மண்டோதரியுங்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அனுதாபத்துடன் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஏன், கைகேயிகூட நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றாள் - கூனியின் முதுகினை இன்னும் வளைத்தேறி. ஆனால், இங்கேதான் ஒரு சுவையான தொடர்ச்சி இருக்கின்றது. இந்தப்பெண்கள் அனைவருமே அடிப்படையிலே முனிபத்தினி, அரசிகள், இளவரசிகள், குலத்தலைவிகள் என்ற நிலையிலே கற்ற (ஆண் & பெண் என்ற பேதமின்றி) பெண்ணியல்வாதிகளால் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், சமூகத்திலே விளிம்பு நிலையிலே படைக்கப்பட்ட தாடகை, சூர்ப்பனகை (இராவணன் தங்கை என்றாலுங்கூட, அவள் வர்ணிக்கப்படும் விதம் அவளை ஒரு கௌரவத்துக்குரியவளாகக் காட்ட முயல்வதில்லை), கூனி போன்றவர்களுக்காக இந்தப்பெண்ணியல்வாதிகள் பேசியதாக நான் வாசித்தறியேன். இவர்கள் பேசப்படத்தொடங்கியது, பஞ்சமர் வாழ்க்கையும் தலித்தியமும் தமிழ் இலக்கியத்துள்ளே ஒரு தனியிடத்தினை ஊடுருவிப் பெற்றுக்கொண்ட பின்னாலேதான். சில ஆண்டுகளுக்கு முன்னாலே சூர்ப்பனகையின் மூக்கறுபடுவதற்குக் காரணமாக, ஆக, "அவள் ஒருவனை நான் உன்னை விரும்புகின்றேன்" என்று கேட்டதே அடிப்படைக்காரணமாகிவிட்டதா என்ற வாதம் வந்து எங்கோ வாசித்தேன். சூர்ப்பனகையின் கதை, இப்போதெல்லாம் ஓரளவுக்கு Matthew Shepard இனைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகின்றது. ஆக, இருவரும் செய்த தவறு, தவறான மனிதரிடம் தங்கள் இச்சையைத் தெரிவித்ததன்றி வேறில்லை. அதன் பின்னர், சொல்லப்படும் சூர்ப்பனகையின் வெருட்டல், அருட்டல் எல்லாவற்றினையும் களைந்துவிட்டு மாற்றுப்பார்வை இருக்கலாமென்றே தோன்றுகின்றது. தாடகையின் கதையின் நவீனப்படுத்தப்பட்ட வடிவமாக வேண்டுமென்றால், பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டியினைச் சொல்லலாம். அதிலே ஏன் சிவண்ணா ஒரு கட்டத்திலே துப்பாக்கியினை எடுக்கவேண்டி வந்ததென்பதற்கும் முனிவர்களைத் தாடகை பயமுறுத்தியதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அஃது இயலாமையின் இறுதிக்கட்டத்திலே, மூலைக்குள்ளே ஓரங்கட்டப்பட்ட, பூனைக்குட்டியும் காற்பாதம் தூக்கிச் சீறும் நிலையை ஒத்தது. அதனால், தாடகை அட்டூழியம்-அழிப்பினைக் குறித்துச் சொல்வதற்குப் புதிய இராமகாதை எழுதப்படவேண்டுமென்றால், அதேபோல, சூர்ப்பனகையின் காமம்-மூக்கறுப்புக் குறித்து, இராமமூக்கை எழுதப்படவேண்டும்; கூனிக்கு உண்டுவில் அடித்தது குறித்து, இராமமுதுகை எழுதப்படவேண்டும். இன்னும் வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் ஆரம்பத்திலே வரும் ஆழ்வார்க்கடியான் - சிவனடியார் வகை வாதாட்டம் மேவிய பார்வையிலே "இராவணன் மேலது நீறு" என்று சம்பந்தர் ஏற்றிய சைவன் தசக்க்ரீவனின் நிலையை நியாயப்படுத்தி, வைஷ்ணவ கம்பநாட்டாழ்வானின் இராமனுக்கு எதிராக ஒரு படைப்பு இதுவரை வராதது ஆச்சரியத்தினைத்தான் தருகின்றது.
இவை எல்லாம் தவிர, தனியொருவனின் பார்வைகூட, காலத்தோடும் அனுபவத்தோடும் ஒரு படைப்பினைக் குறித்து நிகழலாம். சிறுவயதிலே, கடவுளாகத் தோன்றியவன் இராமாயணத்தின் இராமன்; பின்னாலே, இராவணன் என்னூரான் என்ற ஐதீகத்தின் அடிப்படையிலே இராமாயணத்தின் பார்வை, இராவணனுக்கு அனுதாபம் கொண்டிருந்தது. பின்னால், ஜி. பார்த்தசாரதி இந்திரா அம்மையாரின் தூதுவராக வந்தபோது, இலங்கைத்தமிழர்சார்புப்பத்திரிகைகள், அனுமார் என்று போற்றப்பட, இராமாயணம் தொடர்பாக ஒரு குழப்பம். கடைசியிலே இந்திய அமைதிப்படையோடு வானரசைனியம் வனத்துள்ளே நுழைந்தால், இதுதான் ஆகுமென்று உணர்வு. எல்லாவற்றுக்கும்மேலாக, கடந்த பதினேழு ஆண்டுகளாக ராம் என்ற ஒற்றைச்சொல் மனிதன் ஏற்றும் வெறுப்பு. ஆக, இன்றைய நிலையிலே என்னைப் போன்ற உணர்வு, அனுபவத்தூடாகப் போன ஒருவன் கம்பநாட்டாழ்வானின் இராமாயணத்தினை மீளத் தன் பார்வையிலே எழுத முயன்றால், நிச்சயமாக, அஃது இராவணனுக்கும் வாலிக்கும் தாடகை சூர்ப்பனகை போன்றோருக்கும் அனுதாபமான பார்வையாக மட்டுமே இருக்கமுடியும். (சுப்பிரமணிய ஸ்ரீதரனின் இராமாயண கலகம், இலங்கையின் பிரச்சனை-இந்தியாவின் மூக்கு நுழைப்பு என்பதன் பார்வையிலே மீட்டு எழுதப்பட்ட இராமாயணத்தின் துண்டு எனலாம்)
அடுத்ததாக, சிலப்பதிகாரம் தமிழர்/திராவிடர் சார்பான மக்கள்காதையாகக் காட்டமுயல்வது குறித்து, சிதம்பர ரகுநாதனின் "இளங்கோவடிகள் யார்? (சிலப்பதிகாரம் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி)" என்ற நூலையும் அதன் மீதான எம். ஏ. நுஃமானின் "ரகுநாதனின் சிலப்பதிகார ஆராய்ச்சி" என்ற விமர்சனக்கட்டுரையையும் ("மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும்" என்ற நூலில்) வாசிப்பது சில பார்வைகளைத் தருமென்று நினைக்கிறேன். சிதம்பர ரகுநாதன் உண்மையில் இளங்கோவடிகள் வணிக வகுப்பினைச் சேர்ந்தவரென்றும் அதனால், அவ்வகுப்பின் வர்க்க நலன் குறித்து அரசகுடிக்கெதிரான காவியமாகச் சிலப்பதிகாரத்தினை முன் வைத்திருக்கின்றார் என்று முன்வைக்க, நுஃமான் அக்கருதுகோளை அது வலிந்து பெறப்பட்ட முடிவு என்று மறுக்கின்றார். (ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி மதுரையை எரிக்கின்றபோது, பசுவையும் பார்ப்பனரையும்விட்டுவிட்டே கொளுத்தும்படி சொல்கிறாள் என்பதையும் தொழிலாளி பொற்கொல்லனையும் கெட்டவன் என்ற வகைக்குள்ளே போட்டதையும் இந்த திராவிட மக்கள்கதையிலே எப்படியாகப் பொருத்துவது என்று எனது துணைச்சந்தேகமுங்கூட உண்டு).
'05 மே 08., ஞாயி 04:04 கிநிநே.
Wednesday, July 11, 2007
Tuesday, July 10, 2007
பழசு - 6
1. உங்களின் (வலையிலே சிலரின்) உணர்வைத் தூண்டும் & நெருக்கமான இடுகைக்கான செய்திகளைத் தேடியெடுத்து இணைப்பினைக் கொடுப்பது -
உதாரணம் காட்டினால், உதைப்பார்கள் (ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேற்பட்ட எதிரிகளைத் தேடுவதில்லை என்பது என் இம்மாத்தொடக்க உறுதிமொழி)
2. கும்மி அடி தமிழ்நாடு முழுவதும் மொக்கைதனைச் சுற்றிக் கும்மியடி
3. இருக்கவேயிருக்கு..... பழசை அள்ளிப்போடுதல்
மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு வோட்டு போடாதீர்கள். அல்லாரும் பகவத்கீதை படியுங்கோ (நன்றி: சோ)..... அப்படியே....வலைப்பதிவிலே பின்னாலே எங்கிருந்தோ அல்லது சொந்தக்கிட்டங்கியிலிருந்தோ வெட்டி முன்னாலே கிடக்கும் கிடங்கை நிரப்ப மின்துகள் கொட்டுங்கள்.. ஏதோ எம்மாலானது...
கரை
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.
சமர்ப்பணம்: பாக்கு நீரணைக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும்
எழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத்தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை. எழுத்தனுக்கு, முழுமண்ணுக்கு விரும்பாதார் யாரோ ஒரு கண்மூடி மண்ணுருட்டிப் புரண்டோடும் நல்லது செய்தறியா ஆற்றை ஊற்றிப் பயிர்செய்துவிட்டுப் போக, பிளந்த நிலத்தின் மறுகரை அது. இன்றைக்கும் பெரிய எழுத்தன் இருந்திருந்தால், இவன் ஓலைகளை விற்பதற்குக் கொண்டு வந்திருக்கப்போவதில்லை. பனையோ தென்னையோ, ஓலை பறித்து ஊறவிட்டு, பதம்பிறக்கப் பிரித்தெடுத்து, தேறியதை நீட்டி வெயிலிலே உலரவிட்டு, கைமுன்னேயுள்ள - எழுத்து, இருப்பு, இறப்பு -தேவைகட்களவாக சுவடிக்கு வெட்டி நறுக்கியோ, கூரைக்கும் கூடைக்கும் பாடைக்கும் இழைத்து முடைந்துமோ, பக்குவப்படுத்தி விற்பதே எழுத்தனின் குடும்பத்தொழில்.
அவன் மண்ணும் மரங்களும் இயற்கையின் வரட்சிமிகைப்படவும் வனவிலங்குகள் மேயவும்முன்னால், அவன் அம்மான் எழுத்தனின் காலத்தில் ஆற்றுக்கு அந்தக்கரையிலும் ஒரு சந்தை - சின்னதாகவேனும் முளைத்து, உயர்ந்து வளராத அடர்ந்த வெப்பவலயமுட்பற்றை போல அனற்புழுதிக்கும் சூரியன் தகிப்புக்கும் இறுமாந்திருந்தது. ஆனால், மேலேயிருந்து அணை திறவுண்ட ஆறு பெருகி முள் மண்முடி மூடிக் கவிழ, மாதமாக மூடிக் கிடந்த புதர் ஆறு வற்ற வேர் அழுகி நாறியது. வெயில் வேருக்கிறங்கிக் காயமுன், கீழிருந்து முள்ளம்பன்றிகளின் இரை தேடுகை. ஒரு குட்டைப்புதர் முள்ளுத் தின்பதிலே முள்ளம்பன்றிகள் சொர்க்கநிலை உணர்ந்திருக்கமுடியாது என்றும் புதரின் குட்டைநாற்றமே பன்றிகளுக்குச் சுவையைத் தந்திருக்கலாம் என்றும் பன்றிகள் அழுகிய பலவீனமான புதர்களைச் சாய்ப்பதினால், தம் வீரத்தினைப் பெண்பன்றிகளுக்குக் காட்ட ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பின் விளைவே அதுவொழிய, பன்றிகள் ஒரு வெட்டவெளித் தனிக்குட்டைப்புதரினை அழிக்கும் நோக்கத்துடன்மட்டும் வந்திருக்கமாட்டா என்றும் பெரிய எழுத்தரும் மீதி எழுத்த அங்கத்தவர்களும் பேசிக்கொண்டதைக் கேட்டிருந்தான். அதன்பின் சிலகாலம் இவனுக்கு முள்ளம்பன்றிகள் என்றில்லை, சாதாரண பன்றிகளையே கண்டால் வெறுப்பு. கல்லெறிதலும் உண்டு. ஊருக்குள் ஒரு சின்ன எழுத்தனாக இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்றார்கள்.... என்ன செய்வது? ஆள் அங்கம் விளையமுன்னர் அடையாளங்கள் விரைந்துகொள்கின்றன. எழுத்தர்கள் கல்லெறிவதில்லை. அவர்கள் முடிந்தால் ஓலைகளைப் பறிக்கவும் பிரிக்கவும் பதப்படுத்தவும் நறுக்கவும் விற்கவும் மட்டுமே வகுக்கப்பட்டவர்கள். எழுத்தர்கள் ஆற்றைப் பிரித்தோருக்கும் அதன்பின் அணை கட்டினோருக்குமன்றி வேறெவருக்கும் பிரித்தோனால் வெளிப்படையாகச் சுட்டிச்சொல்லப்படாத ஐந்தாம் வருணத்தவர். காலாற்கூட உதறுண்டு பிறந்துழற்றுப்பட முடியாமல், உடலுக்கு வேண்டாமற் கழிந்த மலத்திலோ சிறுநீரிலோ முகிழ்த்து முனைவிட்டு முளைத்துவந்தவர்களாய் ஆற்றுக்கப்பால் தள்ளப்பட்டுப்போனவர்கள். அதன் காரணமாகவே, மூர்க்கமும் மூடத்தன்மையும் நிறைந்த முள்ளம்பன்றிகளின் வனங்களுக்கு மேலும் தான் நினைத்தபோதெல்லாம் அணையுடைத்தோடும் ஆற்றுக்குக் கீழும் தம் பனைவிளை பூமியையும் வெப்பமுட்பற்றையையும் கொண்டிருக்கப்படைக்கப்பட்ட சேற்றுத்திணையினர். கிழட்டு எழுத்தர்களின் உட்கார்வாங்குக்கால்களுக்கு மேலாக வளர்ந்த பின்னர்தான், எழுத்தனுக்கு பன்றிகளும் முள்ளம்பன்றிகளும் வேறு வேறு என்று தெரியவந்தது. தேவையின்றி, சாதாரணபன்றிகளையும்கூட முள்ளம்பன்றிகளுக்காக வெறுத்துக்கொண்டிருந்தோமே என்ற துயர் அடங்காமல் ஆறு துடிக்குமோசை கவியும் காலங்களிலே உள்ளே கவியும். ஆனால், இவனின் எண்ணங்களுக்குச் சம்பந்தப்படாமல், எழுத்தர்களின் சந்தையோ எப்போதோ மடிந்துபோன ஒன்று.
அதன் பின்னர் பெரிய எழுத்தரும் மீதிக்கிழட்டு எழுத்தர்களும் ஏன் இவனோடொத்த ஓரிரு பிஞ்சிலே பழுத்த முட்டுக்காய் எழுத்தன்களும் ஆறு தாண்டி, ஓலை விற்க அக்கரைக்குப் போகையிலும் போய் வந்து விற்றகதை சொல்லுகையிலும், இவனுக்கு ஆற்றை இடையிலே ஊற்றி நிலத்தைப் பிரித்தவர்கள் எவரென்று உறுதியாகச் சொல்லமுடியாதுபோனாலும், அதன் சிற்றிடைத்தூரத்தைக் கடந்துபோக பாலம் அமையாத வேதனை வருத்தும். பெரியஎழுத்தரின் பெருந்தன்மையே, அவரின் கடகம் போன்ற தன்னுட் போட்டத்தை பொறுமையாகத் தாங்கித் தேக்குதிறனிலும் கிடுகின் காக்கும் தன்மையும் ஓலை நறுக்குப்போன்ற ஓரிரு சொற்களிலுமே இருந்தது என்று எல்லோரும்போலவே இவனுக்கும் தெரியும். இவன் அவருக்கு எதிர்; எழுத்தர்களின் குடும்பநிரலிலேயே இவன் ஒருவன்தான், கொஞ்சம் காலிடறி பக்கவாட்டிலே போய், தனக்கு முன்னே ஒரு வழிகாட்டி இல்லாமல், சொந்தமாக வேறு தொழில் செய்யத்தொடங்கினான்; வீடு சமைத்தலும் வீதிபோடுதலும்; பெரியஎழுத்தருக்கு அவ்வளவுக்கு அவை பிடித்திருக்கவில்லை.... அவன் தன் பரம்பரையிலே அவரறிந்து இருந்த எவரையும்விட ஒரு நல்ல பக்குவப்பட்ட எழுத்தனாக வரமுடியும் என்று அவர் மற்றவர்களிடமும் மற்றவர்கள் அவரிடமும் புலம்பியும் புகழ்ந்தும் கொண்டிருந்தார்கள். அவன் பதப்படுத்தும் நுட்பத்திலும் தேவைக்கேற்ப நறுக்கியும் இழைத்தும் செதுக்கும்இலாகவத்திலும் கற்றுக்கொள்ள இருப்பினும்கூட, மரத்திலிருந்து தக்க ஓலை தேர்ந்து பறித்தெடுத்து ஊறப்போட்டு, தொழிலுக்கு-உரத்துக்கு என்று பிரித்தெடுக்கும் திறன், அவன் பருவமுற்றலுக்கு மேற்படக் கனிந்ததென அவனிடமும் தாயாரிடமும் புலம்பிக்கொண்டிருந்தார். 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்று எண்ணிக்கொண்டான்; அவனுக்கும் ஓலைக்கலை சேற்றிலே ஊறவிட்டுகையிலும் வெயிலிலே காயவிடுகையிலும் தன்னுள்ளும் தானாகவே ஆகி கீச்சுக்கீச்சுமூட்டி வருகின்றதைப் போலத்தான் இருந்தது. ஆனால், அவனுக்குச் சொந்தச்சந்தையினைப் பற்றிய பட்டறிவு இல்லை...... எங்கோ, அந்நிய ஊருக்குச் சுற்றுப்பயணம் போகையிலே, ஊதுகுழலுடன் நினைவுச்சின்னமும் வாங்கிக்கொண்ட ஓரிடம்போலத்தான் இருந்தது, நினைவும் முட்புதர் முள்ளம்பன்றி கிளர்ந்தெறிந்துபோகக் கிடந்த கிழநிலமும். இல்லாத சந்தையிலே, எதிர்ப்படுவோரின் இலக்குக்கேற்ப, பாடையும் கூரையும் அவர்களுக்கன்றி தனக்கில்லாமல் ஒரு சடங்காகச் செய்து வைத்து வயிறு கழுவும் தன்மை ஒவ்வாததது போலத் தெரிந்தது; பாடையிலே குருவித்தோரணக்குஞ்சம் தொங்குவதை எவரும் அனுபவித்துச் சிலாகிக்கப்போவதில்லை; இயற்கைக்கு அதீதமாகத் தேவை பெருகியுள்ளபோது, பாடை ஒரு காவிக்காகவேயழிய, கலைக்காக இல்லை..... அதுவும், பெருவாரிப்பன்றிமுட்களுக்கும் சொல்லாமற்கொள்ளாமல் குறைப்பிரசவித்துத் தள்ளும் ஆற்றுவிலங்குக்கும் பயந்துஅங்குமிங்கும் கண் வைத்து அவதிப்படும் காலச்சந்திலும் களமுடுக்கிலும்.... பாடைகள் கலைக்காகாது. ஆனால், ஒன்றோ இரண்டோ, அபூர்வமாக வீதி போடுகையிலே, வீடு கட்டுகையிலே அவனுக்குத் தன் கையகலத்தினூக உளநுட்பங்களைப் பிரசவிக்க முடிகின்றது...... மேலாக, அவனுக்கு ஒரு கனவு இருந்தது....... அதன் பருப்பம் அவனுக்குத் தெரியாத பொழுதிலும் பருவத்திலும்........ காயமாய்ப் பிளந்த நிலத்தின் கரைகளை -ஒரு பையின் வாயாக இழுத்து தைத்துக் கோக்கும் உறுதிப்பட்ட கயிறாய் - இணைக்கும் ஒரு பாலம் இவனது கலையின் முத்தாய்ப்பாக வேண்டுமென்பது இவனின் ஆற்றாத கனவு. அது ஆற்றை அணைக்கமுடியாதபோதும் அடக்கமுடியக்கூடும். இவ்வாறுதான் இவன் வனைஞனானான். ஆனாலும், மிகுந்த நேரங்களிலே ஓலையைப் பதனிடக் கற்றுக்கொண்டு வந்தான்; குறைந்த பட்சம், பிறர் கற்றுக்கொள்கின்றதைக் கண்டு கொண்டிருந்தான்.....உன்னித்து உள்வாங்குதலே ஒரு கலை என்று உணர்ந்தான். என்னதான் தேவையென்றாலும், இத்தனை வேகமாய்க் குருத்தோலைகள் அவசரத்துக்குத் தறிக்கப்பட்டுப் பாடைக்கு இழுத்து வரப்பட்டால், எதிர்காலத்திலே ஒற்றைப்பொட்டெனச் சிரிக்கக்கூடப் பாளைக்குத் தென்னை மிஞ்சுமா என்று பயம்பிறக்க, கலக்க அவதானிக்கொண்டுதான் இருந்தான். வாங்குவாரின்றித் தொலைந்து போகும் நுட்பமாகிக் கொண்டிருந்தது, குறுவோலை அமை கலை. பேரோலைப்பாடையின் தேவை பெருகும் காலத்திலே, சிற்றோலை தறித்தலும் தகவமைத்தலும் வாய்ப்பற்றுப் போதல் வியப்பாகவில்லை. இறுதியிலே பெரிய எழுத்தர், குடும்பத்தொழிலிருந்து விலகியதற்குப் பிராயச்சித்தமாக இவன் அதை இரு சங்கிலி வளையத்திடையே இருக்கும் கொழுக்கியாகவேனும் கற்றுக்கொள்கின்ற நிம்மதியோடு அற்றுப்போனார்.
அவன் எண்ணத்திலும் பட்டறிவிலும் முதிர்ச்சியடைந்தபோது, பெரிய எழுத்தரைப்போலவே, புலன்களிலே சுருதியைக் கூட்டிக்கொண்டு, பேச்சினைத் தறித்துக்கொண்டான். அவனுக்கு முதிர்ச்சியென்பது தன் இயலாமையின் எல்லைகளை உணர்ந்துகொள்வது என்பது தெளிந்தது. அது தெளிந்தபோது, ஆற்றை மேவிப் பாலம் அமைக்கும் நோக்கு அற்றுப் போனது. முனைப்பு என்பது அந்த இயலாமையின் எல்லைகளை இயலுமானவரை வெளியே தள்ளிவிட்டுக்கொள்ள முயல்வது என்பதும் அடுத்த கட்டமாகத் தோன்றியபோது, குறுவோலைக்கலைக்கு அக்கரையிலே ஒரு சந்தை அமைத்தலினையும் அக்கரையின் புதியநுட்பங்களையும் கற்று கலையினை மேம்படுத்துதலும் தனக்கான முனைப்புகளாகலாம் என்று எண்ணிக்கொண்டான். அதன் விளைவு, இன்றைக்கு தானும் தன் மூதாதையரும் செதுக்கிய ஓலைகளிலேயே சீர்மிகு குறுவோலைப்பொதிகளுடன் இந்த ஆறு கடப்பு. அவன் ஆற்றைக் கடக்கப்போகின்றான் என்ற விடயம் அத்துணை வரவேற்பினையும் உற்சாகத்தினையும் சிறுநீர்த்துளிநிலத்து மீதி எழுத்தர்களிடமோ, ஏன் எழுத்தர்கள் அல்லாத சக வனைஞர்கள், இசைஞர்கள் மத்தியிலோ தரவில்லை. ஓரிரு ஆண்டுகள் முன்னமே சென்றிருந்தால், சந்தை சந்தோசமாக இருந்திருக்கும் என்றவர்களும் கண்ணீர்த்துளிநிலத்துக் குறுவோலைகளிலும்விட பாடைகளுக்கே அங்கே சந்தை அதிகமென்று பாடைகளை இவனுடன் படகேற்றச் சொன்னவர்களும் கூட இவனின் நம்பிக்கையினை மழுங்கடிக்கமுடியவில்லை; ஆனால், இதுபோன்ற கருத்துகளையே சாராமல், கலைஞரே அல்லாத புவியியலாளர்களும் கனிமவியலாளர்களும், "ஒரு காலத்திலே இரு நிலங்களும் ஒன்றாக இருந்தது உண்மையாயினும், ஊடறுத்த ஆற்றின் ஓட்டத்தின் காரணமாகச் சேர்ந்த வண்டற்றன்மையுடனும் காற்றுத்திசை மாறுதல்களாலும், இரு நிலங்களும் ஒரே தன்மையுடைத்ததாக இராது" என்றார்கள்; "அதனால், அக்கரை பற்றிய பட்டறிவும் புவியியலறிவும் துப்பரவாகவேயற்ற அவன் தன் கனவுகளையும் சொந்தக்கருத்துக்கட்டமைப்புகளையும்மட்டுமே நம்பி கலையை அங்கே கொண்டு செல்கின்றது, குறுவோலை பதப்படுத்தும் கலைப் பரிமாற்றத்துக்கும் சந்தைப்படுத்தலுக்குமப்பால், அவன் உடல் நலத்துக்கும் கேடாகலாம்" என்று எச்சரித்தது பயத்தினைத் தந்தது. எந்தளவு ஓலையாக்கிப் பேணும் கலையிலே ஆர்வம் கொண்டவனாக இருந்தபோதும், தன் உடல்நலத்துக்கு ஊறு விளைவித்துக்கொண்டு அதைச் செய்யும் உளத்திடமும் நோக்கும் சின்ன எழுத்தனுக்கு இருக்கவில்லை; அதுமட்டும் இருந்திருந்தால், என்றைக்கோ அவன் கீழ்வனத்திலே முள்ளம்பன்றி வேட்டையாடவும் ஆற்றுக்கப்பால், பனைநிலத்தின் துயரான அதை அடிக்கடி திசைமாற்றி அவதிப்படுத்தும் எதேச்சாதிகார அணைவாயை வெடித்தடித்துடைக்கவும் போயிருப்பான். அவன் திடநெஞ்சில்லாதவன்.....
....... ஆனாலும், பனையோலையிலே குறுவோலை நறுக்கு எழுத்தனாகப் பிறந்துவிட்டவன். அதனால், ஒரு முடிச்சு சீர்மை ஓலைக்குறுக்குகளுடனும் என்றோ தொடர்புவிட்டுப்போன பெரிய எழுத்தரின் சில அக்கரைச்சொந்தங்களின் முகவரிகளுடனும் படகேறினான். கட்டிக்கொடுத்த சோற்று ஆலோசனைகளும் அனுதாபத்துடன்கூட அவனோடேறின.
படகோட்டி இறக்கிப்போனபின், கூட வந்த பயணிகள் எல்லோரும் கலைந்துபோகும்வரைக்கும் நெடுநேரம் தரித்திருந்து இறங்கிய கரை மண்ணை எடுத்து முகர்ந்தான்; கிட்டத்தட்ட அவன் கரையை நுகரின்பம்.... ஆனால், அந்த முள்ளம்பன்றிக்கழிவின் துர்நாற்றமோ மண்ணுட் புதைந்த முள்ளின் 'சுருக்' குத்துதலோ இந்நுகரனுபவத்துள்ளே இல்லை என்று பட்டது. காற்றும் அதுபோலத்தான் வீசியதென்றாலும், கொஞ்சம் கூதற்றன்மை தூக்கலாக இருந்தது போல...... ஆறு பிரிக்கும்போது எதைத்தான் சிறிதாகவேனும் மாற்றிப் பிரிக்காமல் விட்டது - ஆற்றினை அலட்சியப்படுத்தி வானத்திலே குறுக்கும் நெடுக்கும் இக்கரைக்கும் அக்கரைக்கும் தான்தோன்றித்தனமாகப் பறக்கும் சிறுபுட்களைத்தவிர? அவனின் விளிம்பு தளும்பிய உணர்வோட்டம் சூழலுக்குக் கட்டுப்பட்டு மட்டுப்பட்டபின்னர், ஓலை முடிச்சினை ஐந்தாறு மாதக்குழந்தையை தூக்கி ஏந்திக்கொண்டவன்போலப் பக்குவமாக விழாமல் இறுக்கியும் நோகாமற் தளர்த்தியும் வைத்துக்கொண்டு, படகுத்துறை அதிகாரியிடம்போய் சந்தைக்குப் போகும் வழியினைக் கேட்டான். ஏற்கனவே, அவனுக்கு ஓரிருவர் ஊரிலேயே சொல்லியிருந்தாலும், சொல்லப்பட்டது அக்கரையில்; சொல்லியவர்கள்தான் அங்கே இருந்துகொண்டு, "போகத்தான் வேண்டுமா? போய்த்தான் ஆகவேண்டும் என்று அடம்பிடித்தால், இப்படிப்போ" என்று பாதை வளிவெளியினைக் கிழித்துக்குறித்தவர்கள்; 'இக்கரை அதிகாரிக்கு இடம் பற்றிய தெளிவு அதிகம் இருக்கும்; என்னவிருந்தாலும், உயிருள்ளதொன்று முன்னுக்கு நின்று சுட்டி வழிகாட்டுவதுபோல வராது என்று நினைத்தான்.
பதிலுக்கு, அதிகாரி ஒரு சந்தேகப்பார்வையை வீசினான், "அக்கரையிலே இருந்து படகிலே வந்தாயா?"
எந்தக்கரை என்றால் என்ன? நேற்றைக்கு வந்த ஆறு நிலத்தைப் பிரிக்கலாம்; காற்றைத் திருப்பலாம்; வேண்டியபோது அணைப்படுத்தலாம்; அதைத் திறக்கலாம்..... ஆனால், சொல்லசைத்திசைக்கும் பண் வேறுபட்டாலும் மொழியிலக்கணத்தை, அடிப்படைச்சொல்லொலியமைப்பை முறிக்கமுடியுமா?
சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று சொன்னபோதிருந்த மகிழ்ச்சி அதிகாரிக்கு ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சரிபாதியாகக் கலந்து நாட்டுமருந்துக்குக் குளிகையாக உருட்டிக் கொடுத்திருக்கவேண்டும்.
"ஏன் வந்தாய்? அணைப்பக்கம் போகிறாயா? மார்போடு வீங்கிய துணிமுடிச்சிலே என்ன?"
அந்த ஆண்டுக்கான ஓலைக்கலைச்சந்தைக்கு வந்ததைக்கூறினான்; முடிச்சுக்குள் ஓலையென்றான்; கேட்காமலே அவிழ்த்துப்போட்டுக்காட்டினான். பெரிய எழுத்தரின், அவரின் முன்னோரின் தேர்ந்தெடுத்துக்கொணர்ந்த ஓலைகளினை எடுத்துக்காட்டி, அவை செய்யப்படும் முறைகளினை விளக்கியதில், அதிகாரிக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை என்பதையும் கூடவே குழப்பத்தினை அதிகரித்தது என்றும் அறிந்துகொள்ளும் கிரகிதிறனும் உளநிலையும் அவனுக்கு இருக்கவில்லை. வாங்குக்கால்களிலே கேட்கப்பட்ட அக்கரை பற்றிய கதைகளிலே, அதிகாரிகளைப் பற்றியே எவரும் பேசாதபோது, அவர்களின் குறுவோலைகள் பற்றிய ஈடுபாட்டினைப் பற்றிப் பேசியிருக்கச் சாத்தியமேயில்லை. அணைப்பக்கம் போவது பற்றிய கேள்வியின் அர்த்தம்மட்டும் இவனுக்குப் புரியவில்லை.
அதிகாரி, ஓலைகளை வாங்கி தாறுக்கும்மாறுக்கும் கொட்டிக்கிண்டி எதைத் தேடினான் என்று இவனுக்கு புரியவில்லை; சிரித்துக்கொண்டிருந்தான். பிறகு, அதிகாரி தனக்குப் பின்னாலிருந்த அறைகளிலே இருந்து இன்னும் சில (மேல்??)அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து ஓலைகளைக் கிண்டித் தேடியபோதும் சிரித்துக்கொண்டிருந்தான். தான் வேறு என்ன செய்யமுடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை; நேராகவே அவர்களிடம் கேட்காமல் போயிருக்கலாமோ என்று ஓரிரு தடவையும் பழம்பனையோலைகள், அலட்சியத்தேடற்றட்டல்களிலே சேதமுற்றுவிடக்கூடாதே என்ற பயம் முழு நேரமும் தொடரவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் முள்ளம்பன்றிகளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு. ஆற்றுத்துறை அதிகாரிக்கு, ஓர் ஓலைத்தறிப்பானுக்குப் புரியாத, புரியத்தேவையில்லாத தொழிற்கடமைகள் நிச்சயமாக உண்டு. பிரிப்பது இடைப்புகுந்த ஓர் இருட்டாறென்றாலும், இக்கரைக்கும் அக்கரைக்கும் துப்பரவற்ற படகுகளிற் கடக்கும் பயணிகள் நோய்க்கிருமிகளை உணவுப்பண்டங்களிலும் கொண்டு சென்று எதிர்க்கரைநிலங்களிலே வயிற்றுப்போக்கினையும் தலைவலியினையும் பரப்பிவிடக்கூடாதே என்ற பாதுகாதுப்பு உணர்வு அத்தியாவசியமானதே. ஆற்றின் இறங்குதுறை அதிகாரி அதனைக் கவனித்துக்கொள்ளாவிட்டால், வேறு எவர்தான் கண்டு கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கமுடியும்? இன்னமும் சிரித்துக்கொண்டான்.
பிறகு என்ன நினைத்தார்களோ தெரியாது, வேண்டாக்குப்பையினைக் கட்டுவதுபோல, ஓலைகளை அள்ளித் துணிமூட்டையிலே போட்டுக்கட்டி, சலவைக்கு அழுக்குடைகள் மூலையிலே எறிந்ததுவாய், இவனை நோக்கி எறிய இவன் இலாவகமாகப் பிடித்துக்கொண்டான்; அப்போதும் சிரித்தான்..... பெரிய எழுத்தர், முள்ளம்பன்றிகள் முட்புதர்களைக் கிண்டிக் கெல்லி எறிகையிலே வேறேதும் செய்யத்தோன்றாமல் இப்படித்தான் சிரித்திருப்பாரோ என்று எண்ணிக்கொண்டதாலும் சிரித்தான். சந்தைக்குப் போகும் வழியினை அந்த அதிகாரி இவனுக்குச் சொல்லி, சந்தையிலே அவன் விற்றல்-வாங்கல் வெற்றிகரமாக நடக்கின்றதோ இல்லையோ என்று தனக்குக் கவலையில்லை என்றும் ஆனால், அக்கரைச்சட்டப்பிரகாரம் அவன் அணைக்கட்டுப்புறம் போகக்கூடாதென்றும் அன்று இருட்டமுன்னரே படகுத்துறைக்குத் திரும்பி அவன்புறக்கரைக்குப் படகேறிப் போய்விடவேண்டுமென்றும் சொன்னார். தலையை ஆட்டிக்கொண்டான். "ஓலைச்சந்தை, படகுத்துறை அல்லவே; ஆர்வலர்கள் கூடும் இடம், ஒன்றுமில்லாததற்கெல்லாம் அதிகாரிகள் அராஜகம் பண்ணுமிடமல்ல. ஆற்றுக்குக்குறுக்கே பாலம் கட்டவிரும்பியவன் அந்த ஆற்றை அவதிப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் அணைக்கட்டினைப் பார்க்கவிரும்புவது இயல்பே என்றாலும், இக்கரைச்சட்டம் இடம் கொடுக்காதவிடத்திலே கட்டாயப்படுத்த நானேதும் இந்த நிலத்தவன் இல்லையே! ஆற்றின் உற்பத்தித்தானத்தினையும் அணை கட்டப்பட்ட வரலாற்றினையும் வெவ்வேறு நூல்களிலே படித்தறிந்திருந்தபோதும், சொந்தமாக தன் புலன்களாலேயே உண்மையினை அறிந்து உணர்ந்து கொள்வது சிறப்புத்தான். ஆனாலும் இன்றையச்சட்டம் அதற்கொவ்வாததென்றால், ஒன்றும் செய்வதற்கில்லை." எழுத்தன் தான் வந்த நோக்கு, குறுவோலைச்சந்தையிலே பங்கு கொள்வதுமட்டுமே என்பதை நினைவு படுத்திக்கொண்டு நகர்ந்தான்.
இவன் நடந்து தடியாக, விரலளவாகிப் புள்ளியாகி, அதுவும் மறையும்வரை அதிகாரி அவன் அணைப்பக்கம் போகிறானா என்றே அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை எழுத்தன் கவனித்திருக்கமுடியாது. அவரவர்க்கு அவரவர் கவனம். அது கலைந்தபின், அதிகாரி, எழுத்தனுக்காக ஏனோ கவலைப்பட்டுக்கொண்டான்; தான் அவனுடன், அந்தளவு கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டுமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்; அவன் தன் வயிற்றுப்பாட்டுக்கு, போயும்போய் பழைய ஓலைகளை விற்றுத் தின்ன வந்திருக்கின்றான். உள்ளம் நிரம்பச் சங்கடப்பட்டது. என்ன செய்வது? அல்லாதுவிடின், பின்னாலறைகளுக்குள் இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் பெரிய அதிகாரிகள் தன்னைவேறு அணைப்பக்கம் போகின்றானா என்று கவனிக்கத்தொடங்கிவிடுவார்கள் என்ற அச்சம். சிற்றதிகாரிகளுக்கும் குற்றம்சுமத்தும் கண்காணிப்பு மேலதிகாரிகள் உண்டு. பேரதிகாரிகளுக்கு ஆறடுத்த ஆறாம்திணையார் என்றால் அக்கறையில்லை என்பதிலும்விட, சின்னப்பையன்கள் மழைகாலத்திலே கம்பிளிப்பூச்சிகளைப் பிடித்து ஓடவிட்டு, பின் நசுக்குவதுபோல ஓர் அதீத சித்திரவதைச்சுகமும்கூடத் தரும் ஆத்திரம் உள்ளுக்குள்ளே இருக்கின்றதுண்டு...... இக்கரைக்கு அப்பாலான எவருமே ஆற்றுக்குக் குறுக்கான அணையை உடைந்துவிடுவார்களோ என்ற அச்சம்போலும். அவர்களினையும் தவறு சொல்லமுடியாது.... ஒவ்வொரு கல்கல்லாக எடுத்து அணையைக் கட்டியவர்கள் அவர்களின் முன்னோரென்றால், ஆற்றின் இன்றையத்திசையினை அணைக்கட்டுப்பாட்டால் நிர்ணயிக்கின்றவர்களும் அவர்கள்தான். அவரவர்களின் அச்சங்களை அவர்கள் மட்டுமே நியாயப்படுத்தமுடியும்......... சின்ன ஆற்றுத்துறையதிகாரி பின்னர் தன் கவலைகளிலே மூழ்கிப்போனான்.....
சந்தையின் ஆரவாரிப்பும் புழுதியும் தொலைவிலேயே கேட்கவும் தெரியவும் செய்தன. பொதுவாக, ஓலைச்சந்தைகளிலே காளைமாடுகள் சண்டையிடுதலும் காலிலே கத்திகட்டிக்கொண்ட சேவற்சண்டைகளும் அதன் பின்னணியிலே ஒவ்வொரு பக்கத்துக்கும் கட்சியாகிக்கொண்ட ஓலைவியாபாரிகளின் உற்சாக, வசவு, சோர்வு ஆர்ப்பரிப்புகள் பற்றி வாங்கடிக்காலங்களிலே தெகிட்டத்தெகிட்டவே கேட்டிருக்கின்றான்....... சேவற்குஞ்சத்து ஓலைப்பாடைக்காரர், பாவாடைக்கிடுகார், வெளிறோலையார் போன்ற புனைபெயர்களால், பட்டப்பெயர்களாலே வழங்கப்பட்டவர்களின் கதைகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் மாற்றப்பட்டும் திரிக்கப்பட்டும் இவனுக்கு எது உண்மை எவர் சொன்னது பொய் என்று அறியாமலே இருந்ததுமட்டுமல்ல, அவர்களையெல்லாம் நேராகக் கண்டு உண்மைகளைத் தானே உணர்ந்து, ஒவ்வொருவர் திரிபுகளினையும் அவை எப்படி தமது இறுதிக்கதைநிலைகளை அடைந்தனவென்றும் இனம் கண்டு கொள்ளவேண்டுமென்றும் ஆவலாக இருந்தான்..... ம்ம்ம்ம்ம்.... யுககாலம் முந்தியகதைகள்... எவர் இருக்கின்றாரோ.... இருக்கின்றவர்களும் எப்படியெப்படி மாறியிருக்கின்றார்களோ........ அருகிலே வர வர அவன் உள்ளம் மகிழ்வுடனும் ஏனோ ஒரு பதட்டத்துடனும் கூடி அடித்துக்கொண்டது...... இதுவும் என் நிலம், காற்று இங்கிருந்து பிறந்துதான், ஆற்றைத் தாவியோ அல்லது ஆறு காவியோ என் கரையினையும் அடைகின்றது. நடக்கும் பாதைகளிலே இருந்த மரத்தோலைகளை எல்லாம் உன்னிப்பாகக் கண்டுகொண்டு நடந்தான். மரங்களும் அப்படித்தான் இருக்கின்றன..... என்ன தென்னைகள் கொஞ்சம் குறைவு. இப்போது ஏன் இந்தக்கரையில் இருக்கின்றவர்கள், அந்தக்கரையிலே இருக்கின்றவர்களிடம், பாடைகளை மட்டும் அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் என்று புரிந்ததுபோல இருந்தது. இளம் தென்னோலைகள் அதிகம் பறிக்கப்படக்கூடிய தேவையும் நிலையும் இருக்கும் இடங்களிலேயே குருத்துப்பாடைகள் அமைக்கும் கலை அதிகம் வளரும்...... பனம்குறுவோலைகளிலே சரம் கட்டுவது இங்கே அதிகம் வளர்ந்திருக்கும் என்பதால், தான் கற்றுக்கொள்ள அதிக நுட்பங்களும் விடயங்களும் அகப்படும் என்று எண்ணிக்கொள்ள மகிழ்ச்சியும் முள்ளம்பன்றி புகுந்த காலம்தொடக்கம் பெரிதாக வளர்க்கப்பட வாய்ப்பின்றித் தேங்கிய தனது எழுத்தர் பரம்பரையின் குறுவோலைநுட்பங்கள் இவற்றோடு பார்க்கப்படும்போது தரத்திலே எங்கே இருக்குமோ என்றும் ஐயமும் வெட்கமும் பிறந்தன.
இத்தகைய ஒரு குழப்பமான உளநிலையோடு, ஓலைச்சந்தைக்குள்ளே காலடி வைத்தான். அதன் அமைப்பினைப் பார்க்கும்போது, அது சந்தையா அல்லது ஒரு விளையாட்டுமைதானமா என்று சந்தேகம் அவனுள்ளே பிறந்தது; நடுவிலே கணிசமான நிலத்தினையைடைத்த வட்டத்தளக்களம். அதைச்சுற்றி உயர்ந்துசெல்லும் படலச்சங்கிலிபோல, இருக்கைகளும் ஓலைச்சந்தைக்கூடாரங்களும். களத்தினிலே ஆங்காங்கே கூட்டம்கூட்டமாக நின்று சேவற்சண்டைகளும் காளைகள்பொருதுகைகளும் பார்த்துக்கொண்டு ஆர்ப்பரித்தும் ஆத்திரப்பட்டும் அட்டகாசம் செய்துகொண்டிருந்தவர்களும்கூட, சந்தை எதற்காக என்று தாம் மறந்துவிடக்கூடாதேயென்றோ வேறேதோ காரணத்தினாலோ, ஏதோவொரு ஓலையைக் காதிலோ கையிலோ மூக்கிலோ கழுத்திலோ கௌவிக்கொண்டுலாவினார்கள்; ஒருவருக்கொருவர், மற்றவர்களின் அணியோலைகளைப் பிரமாதப்படுத்திப் பேசினார்கள்; தாமொன்றைக் கொடுத்து கொடுத்தவரிடம் இன்னொன்றினைப் பண்டமாற்றுச் செய்துகொண்ட வேளைகளிலே, சுற்றியிருந்தவர்கள் சேவற்சண்டைகளைக் கணநேரம் நிறுத்தி வைத்துவிட்டு, கைதட்டியதையும், வாங்குகை-விற்பனைக்கணக்கில் எழுதிக்கொண்டார்கள். பிறகு ஆளையாள் கடந்துபோனபின்னர், கணம்முன் வாங்கியதை வேறொருவருக்கு வேறொன்றுக்கு விற்றுக்கொண்டார்கள். முகம் பொருள் பார்க்கவேண்டிய இடத்திலே பார்க்காமலும் பார்க்கவேண்டாத சந்தர்ப்பத்திலே பார்த்தும் பண்டமாற்றுப்பண்ணுதலும் வாங்கியதைப் பக்குவப்படுத்தி வைக்காமல் இன்னொரு பண்டமாற்றுக்குக் கைமாற்றுவதும் பொழுதுபோக்கிற்கு அப்பாலும் தொழிலாகவே விரிந்து நடக்கின்றதைக் கண்டுகொண்டான். இவன் இந்தக்கரைப்பணம் கொஞ்சம் கொண்டு வந்திருந்தான் என்றாலும், இங்கே வெறும் பண்டமாற்றே போதும் என்பதாக வர்த்தகம் நிகழ்வதினைக் கண்டான். புல்லாக்கு அணிந்த சிலரை பெரும் ஓலைப்பல்லாக்குகளிலே வைத்து சிலர் காவிப்போக, முன்னால் "பராக்" கூறியபடி ஓரிருவரும், பக்கத்திலே சாமரைவீசியபடி இருவரும், பின்னால் திருப்புகழ் பாடியபடி சிலரும் போய்க்கொண்டிருந்தார்கள். இத்தகைய பாடைவடிவத்துப்பல்லக்குகள் ஒன்றையன்று குறுக்கிட்டபோது, குறுவோலைகளை ஆளுக்காள் பல்லக்கிருப்பிகள் எறிந்துகொண்டார்கள். மழையே காணாத நிலத்திலே பாதங்களையும் குளம்புகளையும் கூரியநகங்களையும் கீறிக்கீறி சுருதிகூட்டிச் சண்டைகள் நிகழும்போது, புழுதி கிளம்புவது தவிர்க்கமுடியாததே. புழுதி கிளம்ப, செருமலும் இருமலும் கனைப்பும் பின் தொடரும் என்கிறதை இவன் தன் கரையின் வீதிகளிலே பல்லக்குகள் பவனிவரும் வேளைகளிலே கண்டிருக்கின்றான்....... முள்ளம்பன்றிகள் புகமுன்னால்; இப்போது பல்லக்குத்தூக்கிகளும் பல்லக்கிருப்பிகளும் பல்லக்குகளும் பல்லற்றுப்போன காலம். அப்போதெல்லாம் இதேபோலத்தான், வரண்ட தொண்டையிலே, மூச்சுக்குழலிலே மட்புழுதி ஒட்டிக்கொண்டு அடிக்கடி செருமலேற்படுத்தாமல், இருமலுக்கு மருந்து உட்கொள்கின்றது வழக்கம்தான். உட்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவு வெளிப்பாடுகளை, எறிந்துடைந்த மருந்துக்குடுவைகள், குப்பிகளின் உடைந்த கண்ணாடி ஓடுகள் பாதங்களிலே கீறிக்கொள்ளும்போது இவன் உணர்ந்ததுண்டு. பெரிய எழுத்தரிடம்கூட ஒரு பெரிய பல்லக்குக்கும் சில விசுவாசமான பல்லக்குத்தூக்கிகளும் தீவட்டி பிடிக்கின்றவர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் எழுத்தர்பரம்பரையினரல்லாத பதிப்பர், உரைப்பர்குடியினர் என்றாலும்கூட, அவர்களின் சாமரவீசுகை வாங்கடியிலே இருக்கும் இவன் குஞ்சிவிளிம்புக்குக்கூடச் சொட்டி எட்டியதுண்டு....... எல்லாம் பொய்யாய், புழுகாய், இனியில்லாப்பெருநினைவாய்......... போனதையிட்டு இவனுக்கு நிறையவே சந்தோஷம். பதிப்பர்கள் யார், எழுத்தர்கள் யாரென்று சொல்லமுடியாத அளவு பதிப்பர்கள் உரைப்பர்களின் எண்ணங்கள் எழுத்தர்களின் ஓலைக்கலைக்குள்ளே மெல்ல மெல்லத் திணிவாகி வெளிப்பட்டு, ஒரு நிலையிலே முழுதுமே அவர்களின் கருத்துக்களுக்கு வடிவம் தரும் கைகளாகவே எழுத்தர்களின் ஓலைக்கலை ஒய்யாரப்படுத்தும் கதை ஆகிப்போனதுண்டு. எழுத்தர் பரம்பரையுள்ளே பதிப்பர்குடும்பங்கள் பின்னிய பிளவுகளும்கூட இலேசிலே மறக்கப்படக்கூடியவை அல்ல. ஓலைப்பல்லக்குகள் சில சிறப்புத்தினங்களிலே இன்றைக்கும் பதிப்பர்களின் வேண்டுதலுக்காக சில எழுத்தர்குடும்பங்களிலே கட்டப்படுவதுண்டு. ஆனால், இவை எல்லாமே எழுத்தர்கள், புழுதி இருமலுக்காக பதிப்பர்களின் உரைப்பர்களின் செருமல்மருந்துகளை வாங்கி நேரகாலம் தெரியாமல் பருகியதும்மீறிப்போய், பானைபானையாக அருந்தத்தொடங்கியபின்னரேதான்.
அவன் தன்னுள்ளே ஞாபங்களிலே அழுந்திப்போனது விலக்கி வெளியே வந்தபோது, சேவற்சண்டைகளுக்கு சிற்றோலைநறுக்குகளையும் காளைகளின் பொருதுதலுக்கு ஓலைப்பாடைகளையும் கூத்தாடிச்சூதாடிகள் பந்தயம் வைத்துக்கொண்டிருந்ததைக் கண்டான். இன்னும் மனிதக்கைத்தொழிலாகவும் குடும்பத்தொழிலாகவுமே பக்தியோடும் கலைப்பொறுப்புணர்வோடும் தன்னூரிலே தங்கிப்போன குறுவோலைத்தயாரிப்பு, இயந்தியமயமாக்கப்பட்ட நிலையிலே தொகுதிதொகுதியாக ஒரிரு வடிவங்களிலும் நிறங்களிலுமே பந்தயத்துக்காக காளைகள் இழுத்து வந்த வண்டிகளிலே பட்டுத்துணிமுகக்கவசங்களிலேயிருந்து அள்ளி எறிந்து சொரியப்பட்டு, பல்லக்குத்துக்கிகளினதும் சண்டைக்கோழிகளினது கால்களிலேயும் மிதிபட்டுக்கிழிபடுகின்றபோது, சின்ன எழுத்தனுக்கு ஏமாற்றமும் வேதனையும் கூடவே வெகுவாய்ப் பயமும் ஏற்பட்டுக்கொள்ள, தன் பனையோலைநறுக்குகளை, உடல் வியர்வையினையும் மறந்து இறுக்கி நெஞ்சிலே அழுத்திக்கொண்டான். அங்குமிங்கும் பாய்ந்து, தனது தனிப்பட்ட ஆர்வச்சேமிப்புக்காக, ஒவ்வொரு வகை ஓலைத்துணுக்கிலும் ஒவ்வொன்றைப் பொறுக்கி, ஊதித் தூசு தட்டி, தன் சட்டைப்பையினுள்ளே பாதுகாப்பாக வைத்துக்கொண்டான். இங்கே குறுவோலை பறித்து பதப்படுத்தி நறுக்கிப் பிழைப்பது, தன்கரையிலே ஓலைப்பாடைகள் கட்டும் மும்முர பெரும்வணிகர் தொழிலெனப் போய்விட்டதுபோல உணர்ந்தான். அதற்குமேலே அங்கே இருக்கப்பிடிக்கவில்லை. இத்தகைய தடகளச்சமரிகளிடமிருந்து விலகி, மேலே பார்வையாளர் கூடாரங்களிலே, பாடை, கூடை, கூரை, கிடுகு, நறுக்கு பிரிவுகளிலேயும் இத்தகைய சூழ்நிலை நிலவக்கூடுமோ என்ற அச்சவுணர்வோடு அகன்றான்.
பெரியதும் சிறியதுமாக அகன்ற கூடாரங்கள். முழுவதுமே ஆறுதலாகச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் நாளுக்கு எட்டு மணிநேரம் என்று பார்த்தாலும்கூட, மூன்று நாட்கள் தேவைப்படும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால், என்ன செய்வது? மாலைக்கு முன்னர் இறுதிப்படகினைப் பிடித்தேயாகவேண்டிய நிலை. இரவு தங்கிடும்பட்சத்திலே, இந்தவூர்ச்சட்டம் எவரெவர்க்கு என்னவென்னவற்றுக்கு என்னென்ன தண்டனை வைத்திருக்கின்றதோ தெரியாது. சிறிய எழுத்தன், தன் உள்ளத்துக்குத் தவறெனத் தெரியும் சட்டத்துக்கு என்றைக்கும் அஞ்சினவன் இல்லாதபோதும், தண்டனைக்கு அஞ்சினான்; அதற்குமேலாக, எத்தகைய தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும்கூட, அதற்குப் பெறுதியாக இருந்து முழுதாக அனைத்துப்புலன்களாலும் அனுபவித்து அனுபவங்களைப் பகிர்ந்து போகவேண்டிய சந்தைதானா இது என்ற சந்தேகம் வேறு அவனுக்கு கடந்த ஒரு மணிநேரத்திலே ஏற்பட்டுவிட்டது. கூடவே, ஆங்காங்கு, சில இக்கரை ஓலைப்பாடை வணிகர்கள் தங்களுடன்கூடவே அழுக்கினைச் சிலுப்பும் முள்ளம்பன்றிகளை வளர்ப்புப்பிராணிகளாகக் கொண்டு உலாவியது அதிர்ச்சியினையும் அடுத்தநாளைக்குரிய அவனின் இருப்புக்கான பயப்பிராந்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்படகுக்கு இன்னும் இருப்பது ஏதோ நான்கு மணிநேரங்கள் மட்டுமே. இதற்குள் விழைந்து திட்டமிட்டதிலே சிலவற்றினை விலக்கி, மிகவத்தியாவசியமெனப் பட்டவற்றினை மட்டுமே இந்தமுறைக்குக் கண்டுபோகலாம் என்று எண்ணிக்கொண்டான். அவசர அவசரமாக, எல்லாவற்றினையும் காகப்பார்வை பார்த்துக்கொண்டு எதையுமே செரிக்கச் சுவைக்காமல், வதவதவென்று வாய்க்குள்ளே கொட்டமுன்னரே விழுங்கிக்கொண்டு போகின்றதிலும்விட, இயற்கை இப்போது இருப்பது போலக்கூட பேணுண்டால் நகர்ந்தால், வருங்காலத்திலே ஓரிரு தடவைகள் வந்து மற்றையவற்றினைக் கண்டுகொள்ளலாம் என்று தோன்றியது. அதனால், குறுவோலைப்பிரிவிலே இருக்கக்கூடியவற்றினைக் கண்டுகொண்டு, தன்னுடைய ஓலைகளினைப் பற்றி ஆர்வலர்களுக்கு விளங்குறுத்தி அவர்களின் தம் அறிமுகங்களையும் கருத்துக்களையும் கேள்விகளையும் கேட்டுப் பதிலிறுத்தும் பதிவுசெய்தும் கொண்டபின்னர், பெரிய எழுத்தரின் இக்கரைநண்பர், வெளிறோலையார் (இயற்பெயரோ, பட்டப்பெயரோ அல்ல, தன்தொழிலுக்கேற்ப அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டது) இனைச் சந்தித்துக்கொண்டு, பின்னர் நேரமிருப்பின், அவரின் ஆலோசனைப்படி, வேறு ஓலைத்தொழில்களிலேயிருக்கும் எந்தநுட்பங்களைத் தனது குறுவோலை நறுக்குக்கலைக்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டறிந்து அவற்றினையும் கண்டு தன் குறிப்புகளிலே பதிந்து செல்லலாம் என்று எண்ணிக்கொண்டான். இவற்றுக்கே நேரம் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும், அந்தநேரத்திலே நேரத்தைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பது, தன்னை இதைவிடவும் உற்சாகம்குன்றியவனாக ஆக்கிவிடும் என்று பயந்தபடி நறுக்குப்பிரிவுக்கு நகர்ந்தான்.
நறுக்குப்பிரிவு அவன் படகேறமுன் எண்ணியதிலும் சிறிதாக இருந்தாலும், அந்தப்பிரிவுக்குள் நுழையமுன்னர் எண்ணிக்கொண்டதிலும்விடப் பெரிதாக இருந்தது உள்ளத்துக்குக் கொஞ்சம் ஊட்டத்தினைத் தந்தது. பங்குதாரர்களிலும் பார்வையாளர்களிலும் பெரும்பான்மையோர் நடுத்தரவயதினைக் கடந்தவர்களாகவும் கடந்துகொண்டிருக்கின்றவர்களாகவுமே இருந்தார்கள். கண்ணாடிப்பேழைகளிலே பழைய குறுவோலைகள் தூசு தட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அங்காடிகளுக்கு முன்னால் வழிப்பாதைகளிலே நின்று பேசிக்கொண்டவர்களின் குரல்களைச் செவிமடுத்துக்கொண்டே கண்களினால் விதவிதமான குறுவோலை நறுக்குகளைக் கண்டுகொண்டு நடப்பது மிகவும் ஆனந்தத்தைத் தந்தது. சில அங்காடிகளின் கண்ணாடிப்பேழைகளின் முன்னே தானும் தனக்கு இருக்கும் கெடுகாலநேரத்தையும் மறந்து பதுமையாக நின்றான். பெரிய எழுத்தர், அடிக்கடி வெவ்வேறு பாணி குறுவோலை செலுக்கலுக்கு உவமானங்களாகச் சொல்லிக் காட்டும் உன்னதமான நறுக்குகள் எனப்பட்டவை எல்லாம் வஞ்சகமின்றி அங்குமிங்கும் 'முதலில் என்னைப் பார், பிறகு வேண்டுமானால், அதனையோ வேறெதனையோ' என்று இருக்கின்ற நிலையிலே அவனின் புத்தி உற்சாகசன்னதமாடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானவை பார்வைக்குமட்டுமே அரசநூதனசாலைகளிலேயிருந்து கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தூசு தட்டப்பட்டதும் பேணி வைத்திருந்ததும் நிறைவான முறையிலே நிகழ்ந்திருந்ததா என்று சொல்லமுடியாதவளவுக்குத் தம் அகவைக்கும் மீறி பழுப்பேறியும் ஆங்காங்கே பூச்சி அரிப்புண்டும் மூப்புண்டு கிடந்தவை மனதுக்கு வருத்தத்தினைத் தந்ததற்கு, இழந்த சிறிய எழுத்தனின் கரைச் சந்தையும் பேணியும் மூர்க்கமுள்வராகங்கள் கிழித்துக்குதறிய, கண்மூடிக்காட்டாறு அள்ளிக்கொண்டுபோய் அமிழ்த்தியழித்த பல அபூர்வ ஓலைநறுக்குகளின் ஞாபகமும் ஒரு முக்கிய காரணமாகும். அவ்வாறு அழிந்துபோன ஓர் ஓலைநறுக்கினைக் கூட அவன் தொட்டோ, ஏன் கண்ணால் கண்டோ அறியான்தான்; அறிந்ததெல்லாம் பெரிய எழுத்தரின் ஓலைநறுக்குகள் பற்றிய சில ஓவியங்களிலே கண்டதும் கீழிருந்த அவற்றின் செழுமையினைப் பற்றி சிலாகித்துச் சொல்லியிருந்த குறிப்புகளிலே அறிந்துகொண்டதும் மட்டுமேதான். அவற்றின் பாணியிலே, இந்த அபூர்வ பழம்குறுவோலைகளிலே ஏதேனும் அமைந்திருக்கின்றதா என்று தேடிப் பார்த்து தோற்றான். ஓலைக்கலையின் தன்கரைக்கிளை தறிக்கப்பட்டது அவனுக்குப் புரிந்தது. பொதுவாக, அவனது கரையோலைகள் - அவன் கொண்டு வந்தவை உட்பட- செய்கால எல்லைகளுக்கு அப்பாலும்கூட சில கலைப்பண்புகளைத் தமக்கெனத் தனித்துவமாய் இவற்றிலிருந்து வேறாகக் கொண்டிருந்தன....... உதாரணமாக, இந்தக்கரையோலைகளின் இடக்கை விளிம்புகள் செங்கோணத்திலோ அல்லது சீராய்மாறும் வளைவாக அமைந்திருக்கின்றபோது, பெரிய எழுத்தரினது அம்மானின் ஓலைகளோ அல்லது பெரிய எழுத்தரின் நறுக்கு இடப்புறமூலைகளோ, புறாக்கழுத்து வடிவிலே இருந்தன. ஓலைகளைப் ஊறவிடும்-ஒளிபடர்த்திப் பதனிடும்முறையிலும் காலத்திலும் குறிப்பிடத்தக்க அளவுகள் வித்தியாசங்கள் இருக்கக்கூடும் என்பது ஓலைகளின் நிறங்களிலேயும் தொடுவுணர்விலும் தெரிந்தன. இவனது ஓலைகள், உடலம்முழுவதும் சீராக அதிக வெயிலிலே பட்ட ஆழ்பழுப்பாகவும் கரடுமுரடாகவும் ஓரிரு உரசல்களிலேயே விரற்றோலை எரிக்கிறதாக தம்மை உணர்த்தியிருந்தவேளைகளிலே, இந்தக்கரை ஓலைநறுக்குகள் ஓரங்களிலே வெளிறியும் மத்தியிலே மினுங்கட் காவிமஞ்சளும் உடைத்து மிகுமென்மையாக வருடவருட விடாமற் தடவிக்கொண்டே இருக்கவேண்டும்போல ஒரு மோகத்தன்மையினை வளர்த்துக்கொண்டே போயின. இவை மிகவும் கச்சிதமாக கைக்கடங்கி ஒரு சதுரநெறியினை மீறவா வேண்டாமா என்று கேட்டபடி மீறிக்காட்டும் செவ்வகக்கவர்ச்சியாகவிருக்க, அவனது துணுக்குகள் உயரம் குன்றி பக்கவாட்டிலே அகன்று சாய்ந்து சரிவகமாகித் தொங்கின. ஈரப்பதனைக்கூட கொஞ்சம் உள்ளுறுஞ்சி இவன் கொணர்ந்த ஓலைகள் வைத்திருக்கும் என்று இரு கைகளிலும் ஒவ்வொன்றிலும் ஒன்றைத் தூக்கிப் பார்த்து எண்ணிக்கொண்டான். இதிலே எ·து அழகு என்று இவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஒவ்வொன்றும்தான்; எல்லாமும்தான். ஓலைகளின் சாமுத்ரிகாலக்ஷ்ணம் வேறு. பத்தினியுடன் சித்தினியினை ஒத்துப்பார்த்துக்கொள்ளமுடியுமா, அல்லை, வேண்டும்தானா? ஒவ்வொன்றும் தம்மளவிலே தமக்கான சிறப்பியல்புகளைக் கொண்டு கிடைக்கையிலேயே, இதோடு அதனையும் அதோடு இதனையும் மேலானது எது என்ற வினாவினை முன்வைத்து சீர்தூக்கிப்பார்க்கின்றதிலே அர்த்தம் இல்லை என்றே பட்டது. வேலையற்றவர்கள் வேண்டுமானால், ஒவ்வொரு வகைக்குள்ளும் போட்டி வைத்துக்கொள்ளலாம்; மற்றவர்கள், ஒவ்வொரு வகையின் இயல்புகளையும் மற்றதற்குள் அமைவுச்சுருதியிலே அபம் விளைவிக்காது பொருந்தக்கலந்து புதிய கலப்பின ஓலைநறுக்குகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்; கிளைகள் சடைத்து விருட்சம் வளரவேண்டுமேயழிய, ஒரே விருட்சத்தின் கிளைகளுள்ளே எ·து அழகிலே சிறந்தகிளை என்று கூட்டற்கழித்தற்கணக்குகள் பார்க்கின்றது அர்த்தமற்ற பின்னோக்கிய நகர்வு. சிலம்புகளைச் செய்த ஆசாரியை எடைபோடுவதற்காகமட்டும், உடைத்து மாணிக்கமா முத்தா என்று இனியும் பார்த்துக்கொள்ளக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.
இத்தனைக்குப் பின்னர் ஒரு பெரியகடையிலே, விழிகளிலே ஒட்டிக்கொண்டு விலகமறுத்த சில நறுக்குகளைத் தனது நினைவுப்பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் நோக்குடன் சித்திரப்படுத்த முயல்கின்றவேளையிலே, கடை உரிமையாளர்தோரணையிலே நடமாடிக்கொண்டிருந்தவர் வந்து, அதற்கு அனுமதி இல்லாததைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார். விருப்பமானால், ஏற்கனவே அவற்றினைப் பதிவு செய்த ஓவியங்களை அவனுக்குத் தாம் விற்கமுடியும் என்று கூறியபோது, அவன் தன்னை அறிமுகப்படுத்தி தான் வந்த நோக்கினைச் சொன்னான். அக்கரையிலேயிருந்து வந்தவன் என்று சொல்லியபோது, கடைக்காரர் நெளிந்தார்; சுற்றுமுற்றும் இருந்தவர்களிலே பலர் தமது பார்வைகளை ஓலைகளிலே இருந்து விலக்கி இவனை ஊருடுவ நோக்கிச் செலுத்திவிட்டு, ஓலைகளுக்கு மீண்டனர். தனக்கான மரியாதை தனது சொந்தமுயற்சிக்கான விளைவின் அளவுமட்டமாகமட்டுமே இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றவன் ஆதலினால், தான் பெரிய எழுத்தரின் புதல்வன் என்பதினைச் சொல்லிப் பரிச்சயம் தேட விரும்பவில்லை. அக்கரைக்காரர்கள் பொதுவாக, 'தென்னோலைப்பாடைகள் பிரிவுக்குத்தானே சந்தையில் அதிகம் வந்துபோவதுண்டு!?" என்று இருகுறிகள் இறுதியிலே ஒருங்கித்தொனிக்கக் கேட்டபோது, சின்ன எழுத்தன், அவர்கூறியதுபோலவே தன் அண்ணனின் ஈடுபாடும் வாழ்க்கைக்கான தொழிலும் அதுதான் என்றும் ஆனால், அவன்கூட பாடையின் கலைநயத்திலும்விட தாங்குதிறனுக்கும் ஓலைத்திறனிலும்விட விற்பனைத்தேவைக்கும் விலைக்குமே அதிக ஈடுபாடு கொடுக்கின்றதுண்டு என்று கூறினான். பிறகு, தணிந்த குரலிலே தான் தொழில்ரீதியிலே வீதிபோடுகின்றவன் என்றும் நேற்றைக்கும் நாளைக்குமான சங்கிலிக்கொழுக்கியாகித் தான்போன உள்ளத்திருப்திக்குமாகவே குறுவோலைக்கலையிலே ஈடுபாடு உள்ளது என்று சொல்லி, நெஞ்சோடு ஒத்துப்பார்க்கத் திறந்திருந்த தன் பொட்டணியினை மேசைமேல் விரித்து வைத்தான்.
கடைக்காரர் விஷயகாரர் என்று கண்களின் விஷமம் சொன்னது; நறுக்குகளின் பெறுமதி பளிச்சிட்ட அவரின் கண்மணிகள் சுருங்கமுன்னர், காளைச்சண்டைக்களத்தினிலே கண்ட பண்டமாற்று உத்தி அங்கும் செல்லுபடியாகும் என்று எண்ணிக்கொண்டதனால், அவற்றிலே சிலவற்றினை அவரிடம் கொடுத்து, தான் ஓரிரு ஓவியங்களை வாங்க வாய்ப்புண்டா என்று கேட்டான். "சாத்தியப்படும்" என்ற கடைக்காரர் அடுத்து, "பேரம் பேசமுன்னர், அவை திருட்டோலைகள் இல்லை என்பதற்கு அத்தாட்சி ஏதுமுள்ளதா?" எனக் கேட்டார். எழுத்தன் எல்லா ஓலைகளின் வலதுகீழ்மூலையிலே இருக்கும் 'உ' குறியினைக் காட்டி, எழுத்தர் பாரம்பரிய ஓலைக்கலைஞர்கள்மட்டுமே அவ்வண்ணம் இடுவார்கள் என்று கூறினான். கொஞ்ச நேரம் அதனை நம்பமறுக்கின்றவர்போல, தாமதம் செய்த கடைக்காரர், பேரத்திலே தன் கையோங்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, கலைப்படைப்பு-தரம்-பொய்மை-திருட்டு-நீதி என்பன பற்றி சிறிது அச்சுறுத்தற் சொற்பொழிவின்பின், எழுத்தனின் ஓலைகளை எடுத்து 'நிறுத்தலளவிலோ நீட்டலளவிலோ' பெறுதியளக்க வேண்டும் என்று கேட்டார். இவன் அவர் விரும்பியதைச் செய்யும்படி சொல்ல, அவர் தன் தராசிலே சின்ன எழுத்தனின் சில நறுக்குகளை எடுத்துப்போட்டார். தராசின் மறுபக்கம் சித்திரங்களை வைக்கப்போனவரை எழுத்தன் தடுத்தான். எல்லோருக்கும் பொதுவான நிறைப்படிகளையே வைத்து நிறுத்துக்கொள்வது இந்தவிடத்துக்குப் புதிய தனக்கு வியாபாரத்திலே நம்பிக்கையைத் தரும் என்றான். கடைக்காரருக்குக் கோபம் வந்தது. "செய்கின்றது பண்டமாற்றேயழிய பணம் ஊடோடும் வர்த்தகமல்ல, அதனால், இரு பண்டமாற்றுப்பொருட்களையும் பக்கம்பக்கமாக வைத்துக்கொள்கின்றதே போதுமானதும் நேரச்சிக்கனத்துக்குரியதும்" என்று அதட்டலாகச் சொன்னார். எழுத்தனுக்கு அரசு இலச்சனைகள் பொறிக்கப்பட்ட நிறைப்படிகள் மட்டுமே தராசின் நேர்மையினையும் சுட்டக்கூடும் என்று பட்டது. இறுதியாக சில நிமிடப்நேரப்பிணக்கின் பின், வேண்டாவெறுப்பாக நிறைப்படிகள் ஒருபுறமும் இவனின் நறுக்குகள் மறுபுறமும் இடப்பட்டுச் சமானம் பார்க்கப்பட்டபோது, எழுத்தனுக்கு தராசின் நேர்மையினைப் பற்றிமட்டுமல்ல, அரச இலச்சனைப்படிகளுமே திட்டமிட்டுப் பொய் சொல்லக்கூடுமோ என்று எண்ணம் வந்தது. அவனது கரையிலே எட்டு ஓலைகளைக் கேட்ட நிறைப்படியிற்குச் சமானமாக வேண்டிய இந்தக்கரை நிறைப்படி பத்து ஓலைகளைத் தட்டிலே பெய்யெனக் கேட்டது. இவன் அதனை வெளியே வாய்விட்டே சொன்னான். கடைக்காரருக்கு அதீதகோபம் வந்துவிட்டது. 'தன் நிலத்திலேயே வந்து தன்னைப் பொய்யன் என்று அழைக்கும் அசாத்தியதுணிவுள்ள அக்கரைக்காரன்' என்று கத்தத்தொடங்கியது மட்டுமல்லாது, தனது தராசின், அதன்படியின் நீதியை நிரூபிக்க வேண்டி, 'ஆறு பிரிப்பதினால், புவியீர்ப்பு எவ்வாறு நிலங்களுக்கிடையே மாற்றமடைகின்றது என்பதை அவன் கணக்கிலே கொள்ளவில்லை' என்றும் குற்றம்சாட்டினார். எழுத்தன் பதிலுக்கு, பூமியிலே கிட்டத்தட்டச் சமானமான உயரத்திலேயிருக்கும் எந்த நிலத்திலும் இரண்டு ஓலையைப் பெயர்க்கும்வண்ணம் நிறைக்கல்லிலே புவியீர்ப்பு மாறாது என்று அழுத்திச் சொன்னான். இறுதியாக, கடைக்காரர் 'உன்னைப் போன்றவர்களுக்கு நான் விற்கமாட்டேன்" என்று இழுக்காத குறையாக கடைக்கு வெளியே கொண்டு வந்து தள்ளிவிட்டுப்போனார்; கடையிலே ஓலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனுக்கு நடப்பதையும் பேசாமற் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதற்குப்பிறகும் கடைக்காரரிடம் பேரம் பேசாமல் சொன்னவிலைக்கு ஓலைகளை வாங்கிக்கொண்டும் போனார்கள். அவமானவுணர்வோடு இவனுக்குக் கண்கலங்கிவிட்டது. அழுத்தத்திலேயிருந்து கொஞ்சம் இளகி வருவதற்காக, கொஞ்சம் தள்ளி நடந்து தனிமையிலே நின்று தன்னை ஆசுவாசப்படுதியபின்னர், தன்னைக் கடந்து வழியிலேபோன ஒருவரிடம் பெரிய எழுத்தரின் நண்பர் வெளிறோலையாரின் முகவரியினைக் காட்டி, அதற்குச் செல்லும் வழியினைக் கேட்டான்.
அவர் இவனை ஆதரவோடு அழைத்துக்கொண்டுபோய் ஒரு சிறிய கடையினைச் சுட்டிக்காட்டி விட்டுப்போக, இவன் நன்றி கூறிவிட்டு உள்ளே நுழைந்தான். ஒரு வயதான பெண்மணி மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அது மூடப்படும் நிலையிலே இருந்த கடை என்று தெரிந்தது. நறுக்குகள் அரைவிலையிலும் சிலவற்றினை வாங்கியதற்கு வேறுசில இலவசமாகவும் கொடுக்கப்படும் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. நறுக்கோலைகள் மீதிக்கடைகளிலே காணப்பட்டதற்கு மாறாக இவனுக்கு பல காலமாக மிகவும் பரிச்சயப்பட்டனபோலவும் தோன்றின. இவனுக்கு முன்னைய பண்டமாற்றுப்பேரம் விளைவித்த வெறுப்புத்தனத்தின் பின்னால், உள்ள பணத்திலே படகுக்கூலிக்குத் தவிர்ந்த மீதிக்கு - பசியினை இரவு வீட்டுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம் என்று பட்டதால்- தேர்ந்தெடுத்து குறுவோலைகளை இங்கேயே வாங்கிப் போனால், வந்ததற்கு வருத்தப்படமாட்டோம் என்று பட்டது. இவ்விடத்தில் எக்காரணம்கொண்டும் பேரம் பேசுவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டான்; சொன்னவிலைக்கு வாங்கிக்கொண்டு வெளிறோலையாரைப் பற்றி விசாரிக்கலாம் என்று பட்டது. கட்டிக்கொண்டு வந்த தனது ஓலைகளை அடாத விலைக்கு இங்கே எந்த ஏமாற்றுக்காரனுக்கும் விளக்கவோ விற்கவோபோவதில்லை என்ற உறுதி முன்னைய கடையிலே இருந்து வெளியே வருகின்றபோதே உள்ளுக்குட் தீர்மானித்த விடயமாகி விட்டது. இவர்களுக்கு நறுக்கோலைகளை விற்கின்றதும் அக்கரையிலே சாமரைப்பதிப்பர்பரம்பரைக்கு விற்கின்றதற்கும் ஏதும் வித்தியாசமில்லை. நாய் விற்ற காசையும் குரைக்கச்சொல்லிக்கேட்கும் ஒத்தகூட்டங்களேதான் மொத்தத்திலே இரண்டும். வேறு சுருதியிலே பேசிக் கெடுக்காமல், சிறியதொரு சிரிப்பினைமட்டுமே கிழவிக்குச் சிந்திவிட்டு, குறிப்பிடப்பட்டிருந்த விலைகளையும் தன் கையிருப்பினையும் கணக்குப் பார்த்துப்பார்த்து தெரிந்தும் விலக்கியும் சேர்த்துக்கொண்டான். கிழவி உற்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்; இவன் நிமிர்ந்துபார்க்கும் நேரங்களிலே ஒரு சிறிய சிரிப்பினை உதிர்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வாள்; சரி, அந்நியன் என்றுதான் என் முகத்திலே கரியாற் குறிப்பெழுதி ஒட்டிக்கொண்டிருக்கின்றேன், கோலால் பகற்றிருடன் என்றுகூடவா நெற்றியிலே சூடு போட்டிருக்கின்றேன்!! எட்டாண்டு காலமாக இந்த யாத்திரைக்கென்று சிறுகச்சிறுக இப்படி பணத்தினைச் சேர்த்துவந்து இங்கே திருடன் என்ற பார்வையினையும் அநியாயத்திட்டினையும் வாங்கிக்கொண்டு கொட்டிவிட்டுப்போகவேண்டுமா என்ன என்று ஆத்திரம் தன்மீதே சின்ன எழுத்தனுக்குப் பீறிட்டது.
சேர்த்துக்கொண்ட குறுவோலைகளை எடுத்து கிழவியிடம் பணத்தினைக் கொடுக்க நகர்ந்தபோது, அவளுக்குப் பின்னால், சூரியன் ஆற்றுக்குப் பின்னால், இவனது கரையினை நோக்கிச் சாய்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. 'என்னவாயிற்று இந்த நிலத்துக்கு!' என்று எழுத்தனுக்குள் சோர்வுடன் நொந்தது. பெரிய எழுத்தரும் மற்றவர்களும், "எமது கரை எமது அக்கரை" என்று பேதமில்லாமலே சக்கரைக்கட்டிகள் சலித்துக்கொட்ட, வாங்கினடியிலிருந்து சிந்திக்காமலே அள்ளியள்ளி வாய்க்குள்ளே மென்றுகொண்டு அக்கரை யாத்திரைக்கான ஆசையை வளர்த்து இன்றைக்கு வந்திறங்கியது தன் தவறுதான் என்று பட்டது. ஆறு பிறந்தபின்னால், அணை அமைந்தபின்னால், அக்கரை வேறு இக்கரை வேறுதான்.... இல்லாவிட்டால் கரை என்ற கதையே இருந்திருக்காதே..... இருந்துகொள் எனது கரையே.... இன்னும் சில மணித்துளிகள்தான். வந்துவிடுவேன். உள்ளுக்குள்ளே எங்கேயோ இருந்தெழுந்த அந்தக்கரைக்காற்றின் அழுகல்நுகர்ச்சியிலும் ஒரு கணம் இலயித்தான்.
அவன் கிழவியிடம் எடுத்த ஓலைகளைக் கொடுத்துவிட்டு, பணத்தினைச் சரியாக எண்ணி வைக்க, கிழவி எண்ணிக்கொண்டிருக்கும்போதே கேட்டாள், "நீ அக்கரையானா?" ஆத்திரம் வந்தது; ஆனாலும், மூன்றாம் ஆளாக விலகி நின்று பார்த்தால், சாதாரண வினா. காசை எடுத்து எண்ணிமுடிக்கும்வரைக்கும் வெறும் மௌனமே விற்போனுக்கும் வாங்குவோனுக்கும் எஞ்சியிருந்தால், அதன் இறுக்கத்திலும் இது பரவாயில்லைத்தான். இக்கரைக்காரனாக இருந்திருந்தால், 'இன்றைக்கு எரிக்கும் வெயில்; இல்லையா?" என்று அவள் வினாவியிருக்கக்கூடும்.
"ஓமோம்."
நன்றி சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவளிடம் வெளிறோலையாரைப் பற்றிக் கேட்பதா இல்லையா என்று அவன் தனக்குட் தீர்மானித்துக் கொண்டிருந்தபோது, "கேட்கின்றேன் என்று தவறாக எண்ணிக் கொள்ளாதே; பெரிய எழுத்தருக்கு நீ ஏதும் உறவுமுறையா?" - கிழவி கேட்டாள். இவனுக்குள் இந்தக்கடைக்குள்ளே புகுந்தது முதற்கொண்ட தன் அனைத்துக்கணத்தின் எண்ணங்களுக்கும் உள்வாங்கல்களுக்கும் மிக மாறுதலான புரிதல்கள் -கணத்திலே பழையனவற்றைத் தகர்த்து- உருவாகின.
"ஓமோம்!!" உற்சாகமாகக் கூவி அவருடனான தன் உறவு முறையினையும் கூறினான்... தொடர்ந்து, வெளிறோலையாரைப் பற்றியும் விசாரித்தான்.
அவரைத் தனது கணவரே என்று சொன்ன கிழவி, தங்களது வகை நறுக்கோலைகளுக்கு தற்போது எவரிடமும் அதிக நாட்டம் இல்லாததினால், வெளிறோலையார் ஏற்றுமதித்தேவையதிகமுள்ள குருத்தோலைப்பாடைக்கடையன்றிலே நாட்கூலிக்கு வேலைக்குப் போவதாகவும் சில வாரங்களிலே இந்தக்கடையையும் முற்றாக மூடியபின், தானும் அந்தப்பக்கம் எங்காவது வேலை செய்யவேண்டும் என்றும் கூறியவள், பெரிய எழுத்தர் தங்களின் அன்பு நண்பரென்றும் அவர் இறப்புக்காகத் தாம் வருந்துவதாகவும் சொல்லி மௌனமாக இருந்தாள்; முகத்திலே அகத்து வேதனை கோடுகளாய் நெளிந்தோடியது. சில கண இடைவேளையின் பின்னர், இறுதிமுறை அவர் நறுக்கோலை கொண்டு அக்கரைச்சந்தைக்கு வந்திருந்தபோது, அணைக்கட்டுப்பாதுக்காப்புச்சட்டத்தின்பேரிலே, திருட்டோலை கொண்டு வந்ததாக சிலநாட்கள் அதிகாரிகள் அவரைக் காவலிலே வைத்திருந்ததாகவும் கூறி வேதனைப்பட்டாள். ஓலைச்செதுக்கலையும் சீர்படுத்துதலையும் தவிர எதையும் புரியாத அந்த மனிதரின் கைகளும் ஓலை ஆய்தலையும் மிதித்தலையும் தவிர வேறெந்த வினைக்கும் பயன்படாத அவரின் கால்களும் தமது இறுதிக்காலத்திலே இவ்வளவு வருத்தத்தினை எதற்குத் தாங்கியிருக்கவேண்டிய நியதி ஏற்பட்டது என்று தனக்குப் புரியவில்லை என்றாள். இவனுக்கோ இந்தச் செய்தி புதிது. பெரிய எழுத்தர் இறக்கும்வரைக்கும் இதைப் பற்றியேதும் குடும்பத்தினருக்குச் சொன்னதில்லை.... சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் அக்கரையின் எம் எழுத்தவரின் சிறப்பையும் பதிப்பர்களின் செழுமையினையும் -கூடவே- ஆறும் அணையும் பிரித்தாலும் காற்றும் நிலமும் மனிதர்களும் எப்படி ஒன்றே போலவே அங்கும் இங்கும் இன்னமும் இருக்கின்றார்கள் என்றதையும்தான்.
சின்ன எழுத்தன் நெஞ்சுள்ளே நெரிந்ததும் எரிந்ததும் கிழவிக்கும் புரிந்தது. கிழவி இவன் மறுக்கமறுக்க இவன் தேர்ந்தெடுத்த ஓலைகளுக்குக் கொடுத்த பணத்தினைத் திரும்பக் கொடுத்துவிட்டாள்..... பெரிய எழுத்தரின் பிள்ளையிடம் ஒரு செப்புநாணயமும்கூடத் தானோ வெளிறோலையாரோ பெற்றுக்கொள்ளமுடியாதென்று திட்டமாகச் சொல்லிவிட்டாள்; இவன் தான் கொண்டுவந்த நறுக்கோலைகளிலே தனதும் பெரிய எழுத்தரினதும் அவரது அம்மானினதும் நறுக்குகளை எடுத்து கிழவியின் கையிலே தமது நினைவாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தான். அக்கரைச்சட்டத்தின் வரையறைக்குள்ளே தன்னுருவக்குறிப்பும் நிலைமையும் எவையென்று எடுத்துச்சொல்லி இறுதிப்படகுக்கு அப்போதே அங்கிருந்து நடக்கவேண்டிய நேரம் ஆகிவிட்டதினால், வெளிறோலையாரை அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாகவும் அவருக்குத் தன் அன்பினையும் எடுத்துரைக்கும்படியும் சொல்லி நகர முயற்சித்தபோது, கிழவி படகுத்துறையிலே அமர்ந்திருக்கும்போதாவது சாப்பிடும்படி கூறி, சிறு உணவுப்பொட்டலம் ஒன்றைக் கட்டிக்கொடுத்தாள். வாங்கிக்கொண்டு, இவன் மிக நெகிழ்ச்சியுடன் வெளியே நடந்தான். தான் வாக்குவாதப்பட்ட கடைப்புறம் நகர்கையிலோ அல்லது இன்னமும் பல்லக்குத்தூக்கிகளும் காளைமாடுகளும் சண்டைச்சேவல்களும் மருந்துக்குப்பிகளுடன் தடமிடும் புழுதிப்போர்க்களத்தினைக் கடக்கும்போதோ, அக்கரையின் காற்றிலோ புவியியலமைப்பிலோ பெரும்பாலான நிகழ்வுகளிலுமோ அவனுக்கு விருப்பு இன்னமும் ஏற்படாது காலையிலேயேற்பட்ட அந்நியத்தன்மை முற்றாக விலகாதபோதும், முன்னிருந்த வெறுப்பும் அருவெருப்பும் கணிசமாகக் குறைந்திருந்தன.
படகேறுதுறைக்கு ஓர் அரைமணிநேரம் முன்னராகவே போய்விட்டான்; அக்கரைக்குக் கொண்டுபோகும் பொருட்களினை அதிகாரிகளுக்கு முன்னாலே சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டுமென்ற நியதி. ஆசனத்திலே, வேறு சிற்றதிகாரி இருந்தான். இப்போது, இவன் இந்தக் கரையை நன்றாகவே வாழ்ந்து கற்றுக்கொண்டவன்போல தன் ஓலைப்பொட்டணியைக் கொட்டிய தோரணையைப் பார்த்த அதிகாரி உணவுப்பொட்டலத்தினைக் கிண்டிக்கிண்டித் தேடியபிறகு, மீளக்கட்டி எழுத்தனிடம் எறிந்துவிட்டு, அவனுக்கு உணவு தந்தவரின் பெயரையும் முகவரியினையும்மட்டும் கேட்டுக் கவனமாகக் குறித்து வைத்தபின், படகுக்குப் போகும்படி சொன்னான். படகுத்துறையிலே வந்தமர்ந்து அதிகாரியின் கைக்கோல், பதிவுப்புத்தகம், கூரிய விரல்நகங்கள் என்பனவற்றின் நாட்பட்ட கறை சேர்ந்த உணவைத் தின்பதா கொட்டுவதா என்று எண்ணித் தடுமாறியவன், கிழவியையும் அதன்மூலம் பெரிய எழுத்தரையும் -இடைப்புகுந்த ஆற்றையும் அணையையும் அலட்சியம் பண்ணி மறந்த- நேசத்தையும் அவமதிக்கக்கூடாது என்பது தெளிவுபட்டு உண்ணத்தொடங்கினான். உணவு உட்கொண்டிருக்கும்போது, முன்னிருந்த பாதையிலே, காலையிலே "இரவுக்கு முன்னர் திரும்பிவிடவேண்டும்" என்று கூறிய அதிகாரி, தொழில்சாரா சாதாரண உடையிலே போனான். இவனைக் கண்டு நிற்க எழுத்தனுக்குப் பயம் பிறந்தது; அதிகாரியோ, இவனின் அன்றையப்பொழுது எவ்வாறு கழிந்தது என்று கொஞ்சம் அன்பு செருகிய தொனியிலே விசாரித்தபின், தணிந்த குரலிலே "அடுத்தமுறை வருவதானால், இன்றுபோலவே செவ்வாய்க்கிழமை ஒன்று பார்த்து வா; இறங்குதுறையிலே நான்தான் கடமையிலே இருப்பேன்; இன்றிருந்ததுபோலச் சிக்கலிராது; திங்கள் வெள்ளிக்கிழமைகளிலே அணைக்கட்டுப்பூதங்கள் தாமே வாயிற்காப்போராகக் குந்திக்கொண்டிருக்கும்; உன்னாலே அவற்றின் இம்சை தாங்கக்கூடியதல்ல" என்று சொல்லிவிட்டுப்போனான். சின்ன எழுத்தன், "ஓமோம்" என்று உணவை மென்று விழுங்கிக்கொண்டே மேலுக்கும்கீழுக்கும் தலையாட்டினான். அவனுக்கு அந்தச் சிற்றதிகாரியைக் காலையிலே மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டாம் என்றுபட்டது.... அதிகாரிக்கும் தன் தொழிற்பாதுக்காப்புணர்வும் தாங்கி-சாய்த்துச் செல்லக் குடும்பங்களும் இருக்கக்கூடும் என்பதைத் தான் மறந்துவிட்டோமே(¡) என்று வெட்கப்பட்டுக்கொண்டான். இப்போது பாலத்தைப் பற்றி எண்ணமேதும் அவனுக்குள்ளே தோன்றவில்லை. 'ஆறு வேண்டுமானால், என்றைக்காவது திசை மாறி மண்சரிந்த வேறு மட்டம் தாழ்ந்த பூமிசார்ந்து ஓடட்டும், ஓடும், ஓடுமா' என்றெல்லாம் மட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது.
படகிலே ஏறியபோது, ஓலைச்சந்தை முடிந்து தொகையாக மலிவுவிலையிலும் இலவசமாக அக்கரைக்கு அறிமுகப்படுத்தவும் பெற்றுக்கொண்ட பாடைகளினையும் கூடைகளினையும் கிடுகுகளினையும் ஏற்றிக்கொண்டு இவனின் கரை ஓலைவியாபாரிகளும் அவர்களின் வளர்ப்புமுள்ளம்பன்றிகளும் அணைக்கட்டு அதிகாரிகளின் விஷேட அங்கீகாரத்துடன் எல்லோரினையும் தள்ளிக்கொண்டு முன்னர் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் ஆற்றுக்கு அந்தத்திசையிலே இங்கிருந்து கொண்டுபோகும் பாடைகளும் கூடைகளும் கிடுகுகளும் வசதியாகப் போவதற்காகவே சின்ன எழுத்தனைப் போன்றவர்கள் இருக்கைகளைக் கொடுத்து விட்டு படகின் ஓரங்களிலே நின்று கொண்டிருக்கும்படி அணைக்கட்டுயியக்கிகள் அறுத்துறுத்துச் சொல்லிவிட்டுப்போய்விட்டார்கள். அவற்றினைப் பார்க்க, 'ஊருக்குள் எவ்வளவுதான் அசுரவேகத்திலே உற்பத்தி பண்ணினாலும், குருத்தோலைப்பாடைகளை அக்கரையிலிருந்து இறக்குமதி செய்தாலும்கூட சிலவேளைகளிலே இருக்கும் தேவைக்கு கட்டுப்படியாவதில்லை' என்ற உண்மை அவனைப் பார்த்துப் பல்லிளித்தது. ஊருக்குள்ளேயே சகலவிதமான ஓலைக்கலைகளுக்கும் ஆரம்பத்திலே வாழ்க்கைத்தொழில்களுடன் சமரசம் செய்துகொண்டாவது அணைக்கட்டியியக்கிகளினதும் முள்ளம்பன்றி வளர்ப்பாளர்களினதும் அராஜகச்சைகைகளின் நட்டுவத்துக்காகக் காத்திராது நமக்கென ஒரு சந்தையை உருவாக்க முடிந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்று தோன்றியது.
படகு நகர, ஏறிய பக்கக்கரையினிலே இருட்டு ஏற்கனவே குமிந்துவிட, இவனது செல்திசைக்கரையினைத் திரும்பிப்பார்த்தபடி உடலைமுறுக்கி-கழுத்துப்பிடிக்காமல் வசதிக்காக நின்றான்; அந்தப்புறம் சூரியன் நிலத்திற்குப் பின்னால் பிளந்துகொண்டு போகின்றது தெரிந்தது. இவனுக்கு ஆற்றுக்காற்று எந்தத்திசையிலிருந்து குளிருடன் வீசுகின்றது என்று சொல்லமுடியவில்லை. கொண்டுவந்ததும் பெற்றுக்கொண்டதுமான துணிக்குள் உறங்கும் தனது ஓலைநறுக்குகளை நெஞ்சோடு இறுக்கி விதிர்க்கும் ஐந்துமாதக்குழவியை அணைப்பதுபோல அழுத்திக்கொண்டான்; பின்னர், சந்தைப்பொருதுகளத்திலே பொறுக்கிய நறுக்குகளைச் சட்டைப்பையிலிருந்து எடுத்து, படகின் வெளியே எறிந்து, பதிலுக்கு ஆறு உறுமுகிறதா அல்லது ஓலமிடுகிறதா என்று கூர்ந்து கவனிக்கத்தொடங்கினான் சின்ன எழுத்தன்.
'01, March 19 Mon 02:40 CST
திருத்திய எழுத்தம்: ’01, March 24 Sat.