Friday, December 11, 2015

பாதுகை ஓர் அடையாளமே

/எதிர் தரப்பு மீது இனி செருப்பு - கல் - கடப்பாரை - துவக்கு பாயும் என்ற வகையில்தான் இந்நிகழ்வு நகர்ந்து கொண்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். -வளர்மதி / 

சிறுசலசலப்பாக ஒரு பரிவதிர்வாக சிறுகாலகட்டத்துக்கு இது நிகழலாம். இதை மறுக்கவில்லை; ஆனால், அறந்தாங்கி பிரபாகரனின் எதிர்ப்பினை வெறும் உசுப்பலின் விளைவாக மட்டுமே எண்ணிவிட்டுப்போவது முறையல்ல; இதுவரை மாற்றூடகமாக எதைத் தமிழகத்திலே தமிழ்த்தேசியநிலையிலே நிற்பவர்கள் உறுதியாக வைத்திருக்கின்றார்கள்? 

ஒன்றை அவதானிக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட சாரார் சமூகவலைத்தளங்களிலேகூட இதுவெல்லாம் தமக்குச் சாராதவைபோல, மேலிருந்து கீழே எள்ளிப்பார்த்துவிட்டுப்போகும் உளநிலையிலேயே இன்னும் இருக்கின்றார்கள் என்றால், அதற்கு, அவர்களுக்கு ஊடகமும் அராஜகமும் தம்கையிலேயே எப்போதுமென்று தெரிவதாலேயேதான்.
இவர்களுக்குச் சாமரம் மென்மையாக வீசிக்கொண்டிருக்கும் அவரல்லாத கூழைக்கும்பல் எதற்கெடுத்தாலும் தனக்குப் பாதுகாப்பாகவும் தன்பேரைப் பிரகாசிக்கவும் தட்டிலே மண்டேலாவையும் 'முதியவர்'களையும் ஏந்திக்காட்டுகின்றது. திராவிடக்கும்பல்களின் கையிலிருக்கும் ஊடகங்கள் எல்லாம் மோடியையும் மத்தியையும் வாழ்த்துப்பா பாடும் செய்தியாளர்களையே வைத்திருக்கும் அவநிலைக்கு வந்திருக்கின்றன. திராவிடநாடு கேட்டவர்களின் வாரிசுகள் இன்றைக்குத் தமிழ்த்தேசியமென்றாற்கூட -வேண்டாம், தம்கட்சியினை விமர்சித்தாலேகூட- தேசியப்பிரிவினைக்கானது என்று உள்ளே போடு என்று சிபிஐ, சென்னைக்குற்றவிலாகா கண்ணைத் திருப்பமுன்னரே விரல்சுட்டிக் காட்டிக்கொடுத்துக் கயிற்றாற்றிலே தூக்கிலே தொங்கப்போட அலைகின்றார்கள். 

இத்துணை கோரத்துக்குமேலே, சாதியமும் பெண்ணையமுக்கலும் நிச்சயமாக உணர்வு கட்டன்றிப் பொங்கும் தன்மையும்வேறு ஊடுருவி, தமிழ்த்தேசியமென்றால் இவைதாம் என்பதுபோல ஊடகங்களைக் கைக்கொண்டிருக்கும் தேசிய, விதேசிய, திராவிடக்கும்பல்கள் ஊதிப்பெருக்க வழிவகுக்கும் நிலை. இந்நிலையிலே, இதுவரை நாள் தமிழ்த்தேசியம் என்பது ஒரு முற்போக்கான அமைப்பாகவோ ஒன்றுபட்ட அமைப்பாகவோ அமையமுடியாமலே தள்ளாடுவது ஒரு பக்கமிருக்கட்டும், தனக்கென ஒரு காத்திரமான ஊடகத்தைக் கொணரக்கூட, தன் பக்கக்குரலைச் சாயமில்லாமலே கேட்கும்வண்ணம் வெளிக்காட்டமுடியாத நிலையிலே நிற்கின்றது. 

இந்நிலையிலே அறந்தாங்கி பிரபாகரன் போன்றோருக்குத் தம் கருத்தினைக் கொணர வேறு வழியென்னவென்று எண்ணுகின்றீர்கள்? எப்படியும் சமூகவலைத்தளத்திலிருக்கும் படித்த பெருமக்கள், செங்கொடி முத்துக்குமார் எரிந்துசெத்தாலும் தங்கள் தண்டவாளத்திலே தலையை வைத்த கதையை இன்னமும் வண்டவாளமாய்க் கொண்டை அவிழ்ந்தபின்னும் விளாசிக்கொண்டே, "தமிழ்த்தேசிய உணர்வு கொல்முட்டாள்கள்" என்பார்கள்; ஆயுதம் தாங்கிய போராட்டம் முடிந்தாலும் மண்டேலாவை பார் என்பார்கள். இதுவென்ன சிந்துவெளிநாகரீகத்திலே சில்லோட்டும் ஆய்வா, எவருக்கும் நோகாமலே கருத்தைத் தெரிவிக்க? அடிக்கருத்து இதுதான்; எப்படியும் ஆட்சியும் சாதியும் கண்ணசைத்தால் தடா, பொடா, மடா, கடா என்று விரும்பியவகையிலே பாயும் தேன்நாடாம் நும்நாடு. 

பாட்டுப்பாடினாலே, இரண்டு சமூகங்களிடையே சண்டையை மூட்டியதாகக் கைது செய்யலாம்; ஒடுக்குமுறை பற்றிப் படம் எடுத்தாலே நாட்டின் நட்புநாடுகளைவிமர்சித்ததெனத் தடைசெய்யலாம்; இதிலே ஒரு செருப்பு எறிந்ததாலேமட்டும் திடீரென எதிர்வினை நீங்கள் சொல்வதுபோல, புதிதாய்க் கிளம்பி "எதிர் தரப்பு மீது இனி செருப்பு - கல் - கடப்பாரை - துவக்கு பாயும் என்ற வகையில்தான் இந்நிகழ்வு நகர்ந்து கொள்ளுமா, என்ன? 

மாடு கொல்தல் பாவம் என்பதை ஆளைக் கொன்று நிரூபித்த இந்திய பொதுப்புத்தி, இன்றைக்கு(க்) கிறீன்பீஸைத் தடை செய்திருக்கின்றது. இப்படியான நாட்டிலே எல்லாவற்றுக்குமேதான் எதுவும் ஆட்சியிலே இருப்பவர் அதிகார,புளி, உப்புவிசயங்கள், விசங்கள் எல்லாவற்றுக்குமாக எல்லாம் பாயும். எதிர்த்தரப்புகள் மீது செருப்பு பாய்ந்தால், அறந்தாங்கி பிரபாகரனே பொறுப்பாவார் என்றால், சிதம்பரம் மீது பாய்ந்த செருப்பின்பின்னாலே, எத்தனை செருப்புகள் இத்தனை நாள் பாய்ந்து செருப்புவியாபாரம் நெருப்பாயிருந்திருக்கவேண்டும்? 

சட்டையைப் பிடித்திழுக்கும் இலக்கியபூமியும் சீலையைப் பிடித்துரியும் சட்டசபையும் நிறைந்தநன்நாட்டிலே ஓர் ஒற்றைச்செருப்பா ஓடுபோக்கை மாற்றுமென்கின்றீர்கள்? 'சைக்கிள் செயின்', 'கோலிசோடா பாட்டில்' குண்டாக்களிலிருந்து ஏகே 47, ரிஆர் 56 தாதாக்கள் அரசியல்வாதிகளாலே இயக்கப்படும் காலமெல்லாம் வந்தபின்னால், ஓர் ஒற்றைச்செருப்பிலே தொற்றிக்கொண்டிருக்கின்றீர்களே? 

இரகுகுல பரதனுக்குமட்டுமல்ல அறந்தாங்கு பிரபாகனுக்கும் பாதுகை ஓர் அடையாளமே!
-/.
நவம்பர் 6, 2015

No comments: