Friday, December 11, 2015

சின்ன சமஸ்தானங்களின் சில்லறைவருத்தங்கள்

சமஸ் என்பவர் ஒரு கட்டுரை அவர் ஆசிரியாகவிருக்கும் தமிழ் இந்துவுல எழுதியிருக்கிறார், "நமக்குள் ஒரு தலைவன்!" என்ற தலையங்கத்தின் கீழே.

அதிலே சில துண்டங்கள்:

== கட்டுரைப்பகுதி உள்ளீடு===
 ""தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. .... இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

பாலஸ் தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் தானே இலங்கையில் இறுதிப் போர் அவலங்கள் உச்சம் நோக்கி நகர்ந்தன. ஏன் இலங்கை உள்நாட்டுப் போர் கொடூரங்கள் பெரும் செய்திகள் ஆகவில்லை?

நினைவில் கொள்ளுங்கள், காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ இந்தி பேசா மாநிலங்கள் மீது திணிக்கும் வஞ்சனையை நம்மைவிட மோசமாக காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் எதிர்கொள்கின்றன.

...; ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தன்னலம் பார்க்காமல் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கும் ‘உதவும் கைகள்’ தேவைப்படுகின்றன. முக்கியமாக அரசியலுக்குத் தேவைப்படுகிறது. தலைவன் வெளியே எங்கிருந்தோ வர மாட்டான்; அவன் உள்ளுக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறான்!"
==== உள்ளீடு முடிவு======

இது பொருந்தாக்காலப்புள்ளியென்றபோதுங்கூட, இந்த எழுத்தாளியின் முடுக்கலைப் பற்றி 2009 இலிருந்து கண்டதாலே சுட்டவேண்டியிருக்கின்றது. மன்னிக்கவேண்டும்.

2009 மே இலே ஈழத்தமிழர் நொருங்கியபின்னால், காந்தியம் பற்றி, பொருந்தாத்தலைமை, பயங்கரவாதம் பற்றி எடுத்துரைத்த பல தமிழக எழுத்துச்சரக்கு விற்பனையாளர்களிலே தமிழ் இந்துவிலே ஆசிரியரான இந்தாளும் ஒருவர். வழக்கம்போல இலவசமாகப் போராடுவது பற்றிய அறிவுரை கா(இ)ந்தியகாருண்யபானம் வடித்துத்தந்தவரோ அவர் சார்ந்த இந்து நிறுவன ஊடகங்களோ தலைமைகளோ 2009 இலே மக்கள் கொல்லப்பட்டபோது எதனைப் பேசினார்கள் என்பதையோ பேசாமலேயிருந்தார்கள் என்பதையோ இவ்விடம் மேலே அவர் தமிழ் இந்துவிலேயே எழுதிய "ஏன் இலங்கை உள்நாட்டுப் போர் கொடூரங்கள் பெரும் செய்திகள் ஆகவில்லை?" வரிகளை வாசிக்கும்போது கேட்கத்தோன்றியது. "விடு-தலை" பெற்ற கிளிநொச்சிக்கு முதன்முதலிலே ஶ்ரீலங்கா அரசினாலும் இராணுவத்தாலும் விசேடமாக ஆகாயத்தாலே அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர் அதைக் கட்டுரையாக வெளியிட்ட அவர் சார்ந்த ஊடகம் லங்காரத்னாவின் ஊடகமில்லையா?


கூடவே, சரியாகப் பத்தாண்டுகளுக்குமுன்னாக ஆழிப்பேரலையிலே வடகிழக்கு இலங்கை அமிழ்ந்தபோது, சமஸ் விமர்சிக்கும் விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் எடுத்துக்கொண்ட, விரைந்து செயற்படுத்திக்காட்டிய கட்டுக்கோப்பானதும் பயனானதுமான நிர்வாக, நிவாரணப்பணிகளையும் இவ்விடத்திலே "நமக்குள் ஒரு தலைவன்" என்பதை வாசிக்கும்போது நினைவுகூர்ந்தேன். ஆனால், அச்செயற்பாடுகளை அக்காலகட்டத்திலே பத்திரிகையாளர் சமஸோ ரிப்லிகேன் பப்ளிஸர்ஸோ குறிப்பிட்டார்கள தெரியாது. இந்திய ஊடகங்கள் வெள்ளத்திலே குறிப்பிட்ட "ஒருவர்" செத்தார் என்பதான வதந்தியிலேமட்டும் மூழ்கிக்கிடந்தன என்ற ஞாபகம்.


"ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தன்னலம் பார்க்காமல் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கும் ‘உதவும் கைகள்’ தேவைப்படுகின்றன. முக்கியமாக அரசியலுக்குத் தேவைப்படுகிறது. தலைவன் வெளியே எங்கிருந்தோ வர மாட்டான்; அவன் உள்ளுக்குள் உருவாகிக்கொண்டிருக்கிறான்!" என்கிற சமஸின் கருத்தோடு முற்றாக ஒத்துப்போகிறேன். விமானத்திலிருந்து போட்டோசொப் பண்ண படம் காட்டுகின்றவரோ மாளிகைக்குள்ளேயிருந்து தொலைக்காட்சியிலே பார்த்துக்கொண்டு எடுபிடிகளை எதிர்க்கருத்துகளை நடிகர்களுக்கு அளிக்கவிடுகின்றவரோ அல்லர் தலைவர்; அறிக்கைகூட விடாது, முனைப்பாக தன் நிர்வாக அமைப்பும் நிர்வாகிகளும் தாமும் தண்ணீரிலே இறங்கிச் செயற்பட வழி காட்டுகின்றவனே தலைவன்.


பேய்க்கும் அதனிடத்தினைப் பெரியவாக்கள் பெரிய மனசு வச்சுக் கொடுக்கவேண்டும்.

No comments: