Saturday, October 15, 2011

பூமியைத் தோண்டுதல் பூண்டு நாட்டலுக்காய்...

வால்களும் குதிகளும்

குரங்கின் வாலும் நாயின் வாலும்
குழைத்துப் புனைந்ததென் கூர்ப்பு வால்.
எரிகின்ற முனையும் குழைகின்ற திசையும்
எப்போது முளைக்கும் எனக்கே தெரியாது.

விலங்கும் பூப்பூக்கும் தாவரமும் ஊனுண்ணும்
விந்தைப்பூமியிலே உலவுன்றதென் குதிகள்.
கண்கள் அறுந்த காலக்குமிழிற் கிளர்ந்து
குதித்துக் குதித்துக் குதிர்ந்தெல்லாம் பெருங்குதிகள்.

அடுத்த விலங்கின் ஆதர்சம் காண் கண் துடித்து விளையாது
அந்தக விலங்கின் வால் விரிவின் செவ்வெரிவும் தண்குழைவும்.

ஊன்றிக் குதி நடக்கின்ற நிலம் குறித்து வால் முளைக்கின்ற
குருட்டுவிலங்கொன்றின் நீள்மூக்கிற் துளிர்ப்பது புறப்பார்வை.

விழியறு விந்தைப்பூமிக்குள் வில்லெடுப்பார் வேண்டாதார்.

'05 Feb., 14 03:23 EST
~~~~~

படுக்கவிடுவாயா பாம்பை?

நாட்டுப்பட்டறைக்கு அப்பாலே படர்வது என் தாவரம்;
வைத்திருக்கும் கையுளியால் உனக்குப் பட்டதை, கொத்து, கொந்து;
உன் உளி; உன் வழி; உன் இஷ்டம்; ஆனால்,
விட்டுவிடு படாத அடர்வனத்தை பரந்து படர்ந்திருக்க.
பட்டறை, சிந்தைக்குட்படு செத்த கட்டைச் சிலும்பாச் சிலைக்குதவும்;
எதேச்சை ஒரு சுயேட்சை இலை வெடிக்க என்றேனும் இயலுமா?

உளி செதுக்கிக் காய் காயமரப்பட்டறைக்கப்பாலே
கால் தன்னிச்சைப்படி ஏறிப் படர்வதென் பெருவனம்.

ஓய வனம் படுக்கும் பாம்புவால் மிதிப்பாயா,
இல்லை, பையத் திரும்பி,
பாதம் வந்த திசை நோக்கி மெல்ல நடப்பாயா,
நீ?

'05 Feb., 14 02:54 EST
~~~~~

ஒரு நாய்க்கவிதை

நாயைப் பற்றிய கவிதைக்குட்
பாம்புகளும் பைய வரலாம்.

வால் தோன்று வரிகளுக்கு முன்
ஊரலாம் வழுக்கிக்கொண்டு வயிறு.

ஆதிக்கவிநாய் மெல்லத் திரியும்
பாம்பெனத் தோல் பளபளத்து.

கவிக்கணக்கிற்கு, வெறு
வாலால் வனைந்தது இவ்வையகம்.

'05 பெப்., 25 வெள். 07:39 கிநிநே.
~~~~~

முறுக்காமற் கிட

போகின்ற பாதையிலே புடுங்கிப்போடுகிறாய் புதர்முள்;
ஒரு சொல் பேசாமற் போகிறேன்; சுற்றி முன் போய், விடாது
போகக்கூடிய வெளிப்புல்லிற்கூட முள்ளைத் தழைக்கிறாய்.

உனக்குத் தெரிந்ததெல்லாம் வகிடெடுத்து வகுத்த தெருவில்,
வரைந்த வயல்வரம்பில், திசை கிடத்திக் கிழித்த நீர் வாய்க்காலில்
தேரும் ஏரும் படகும் ஆள் காட்ட வழி நகர்த்துதல்.

வெளியில் அடுத்தான் விதை கிள்ளி அள்ளிப்போட்டுக்கொண்டு
பெருமரம் முளைப்பார் பாவனையில் முயங்கக் கிடக்கிறது முழுத்தேசமும்.
முழுத்தேசமென்றால், உன் பூச்சித்தேகமும் அடங்கும் பார் அதனுள்ளே.

"எனக்கென்ன? கிடக்கட்டும் விடு" என்றிருக்க நான், சொல்,
தன்பாட்டில் விரல் முடக்கிக் கிடப்பான் குறியை முறுக்குவானேன் நீ?

'05 Feb., 14 04:22 EST
~~~~~

ஒதுக்கம்

நிழல் தேய்ந்த நேரத்திலே
கல்லெறிவார் கூட்டத்திலிருந்து காணாமற்போனேன்.
ஒடித்த ஒரு விலாவென்பை உள்ளொளித்துக்கொண்டு
இல்லாச் சடத்தை இதுவென்றே
உருக்கொடுக்க அலைந்தேன் ஊரூராய்.
மீன்பிடிகுளங்களிலே தேங்கிய வலைகாரர் முகங்களை
மெய் சோர்ந்த பொழுதுகளில் கடந்து நடந்தேன்.
பறித்ததைப் பறிவிட்டுக் கால்கீழ்க்குட்டை சேந்திப் பின் பறிக்கும்
காலச்சேதத்தைக் கண்டும் காணேனாய்ப்
பாதைக்கல் விலக்கிப் போந்தேன் மேலும் கால்.
பார்த்த ஆறெல்லாம் பகுக்க இத்தனையாய் வகைமச்சம்;
அள்ளும் வலையெல்லாம் சொல்லடங்கிப்போன எண்கள்.
அகத்தில் மழைக்காட்சி துளி முளைக்க பயிர் முளைக்க
அடுத்தவர் கவியோரத்து வேலிக்கப்பால் மட்டும்
காலாற நடக்கின்றேன் காற்றுவெளியில் நான்.
காற்சட்டைப் பைகளுள்ளே என்புக் கணக்குப் போடும் கைகள்.
நடத்தலுமாகும் நாளைக்கான தவம்;
தேவத்துவம்.

26, ஜனவரி 2003 - ஞாயிறு 00:39 மநிநே.

1 comment:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது