Sunday, October 16, 2011

பழைய வலைப்பக்கங்கள்

1996 இலிருந்து வைத்திருந்த வலைப்பக்கங்கள் பெருமளவிலே சேமிக்கப்படாது கரைந்துபோய்விட்டன. சேமிப்பதற்கென்று உள்ளடங்கு விடயப்பெறுதியாக ஏதுமில்லையென்றாலுங்கூட, கடந்த காலத்தின் குறுக்குவெட்டுகளாதலாலே - ஒரு பழைய நண்பனோ நடிகனோ இறக்கும்போது, அவருடனான எம் மீளாக்காலத்தை நினைவூட்டுவதுபோல - அக்காலப்பெறுதிமட்டும் பதிந்துவிடுகின்றது. அவ்வகையிலே என் வலைப்பக்கங்கள் சிலவற்றின் குறுக்குவெட்டுகளை webarchive களஞ்சியத்திலே பெறக்கூடியதாயிருந்தது. 1996/1997/1998 இலே நெட்ஸ்காப்பிலே மயிலை/முரசு அஞ்சல் எழுத்துருக்களிலே geocities, angelfire, tripod இலவசத்தளங்களிலே செய்யப்புகுந்தவை. வலைப்பதிவு மீயுரை மொழியினை நான் படித்ததில்லை. அதனாலே மிகவும் அசிங்கமான பக்கங்களாகவே வடிவமைக்கமுடிந்தது. இதிலே ஒரு பக்கத்திற்கு அமெரிக்காவின் இடைநிலைப்பாடசாலைமாணவர்களிடமிருந்து வந்திருந்த அஞ்சல், "இன்று இப்பக்கத்தினை எப்படி வலைப்பக்கத்தை வடிவமைக்கக்கூடாதெனக் கற்பிக்க எங்கள் ஆசிரியை உதாரணத்துக்குப் பயன்படுத்தினார். அதற்கு நன்றி" என்றிருந்தது.

Rizi's Personal Tamil Galaxy
Eelam Related Web Photo Album
TRINCOMALEE, THE NATURAL HARBOUR TOWN

An Ezhaththu Wandering Acrobat's Daily Scribbles
tmizfcfciBkAt ugfkAq nlfvrEvbfki[fbT (சிறுகதை??ப்பக்கம்)
WATERWORLD

"Poem of the day" வலைப்பக்கம் 1996-1997 வரை மயிலை எழுத்துருவிலே angelfire இலே போட்டிருந்தது, அகப்படவில்லை. அதன் முகவரியும் ஞாபகமில்லை. தமிழிலே தட்டச்சிடத்தொடங்கியதற்கு, கல்யாணசுந்தரத்துக்கும் முத்து நெடுமாறனுக்கும் பாலாபிள்ளைக்கும் என்றும் கடன்பட்டுள்ளேன்; 1995-1998 ஆண்டுக்காலங்களை வெறுமையின்றிக் கடத்த இவர்கள் தந்த வசதிகள்தான் -எழுதவும் பகிரவும் தமிழிலே ஈடுபாடுள்ள நண்பர்களை அகிலம் பரவப் பெறவும்- வழியமைத்தன.

ஆனால், கடந்த இப்பக்கங்களையோ இதற்கு முன்னாலான 95 இலான soc.cuture.tamil பயனர்குழுப்பங்கங்களையோ பின்னான தமிழ்நெற், மையமன்று, யாஹூ குழுமங்கள் இடுகைகளையோ பார்க்கும்போது, பன்றி குட்டிகள் போட்டதுதான் தெரிகின்றது. எத்தனை மணிநேரத்துளிகள்! எத்தனை உள்ளீடுகள்! ஆனால், கருத்தைக் குவியப்படுத்திப் போட்டிருக்கலாமென்ற உணர்வுதான் மிஞ்சுகின்றது. ஆனாலும், அக்கடந்தகாலத்திலே அவற்றுக்கான பெறுதி கணிசமானது; அழுத்தங்கள், குற்றவுணர்வுகள் இவற்றினைத் தவிர்க்க வடிகால்களாக இருந்திருக்கின்றன, நல்ல நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கின்றன என்றளவிலே அவற்றுக்கான பெறுதி தங்குகின்றது. திரும்பிப்பார்க்கையிலே ஒரு குறித்த காலகட்டத்துடன் ஒவ்வொருவரும் தம்மைப் பொருத்திப் பார்க்க, மற்றோருக்கு எடுத்துச் சொல்ல, பொதுவிலே பகிர்ந்துகொண்ட புலனாலுணரக்கூடிய கணியங்கள் தேவைப்படுகின்றன - ஒரு காலகட்டத்திலே வந்த திரைப்படப்பாடலைப்போல, நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களைப்போல, எழுதியனுப்பிய அஞ்சல்களைப்போல, உடன்பிறந்தாரோடு பகிர்ந்துகொண்ட வீட்டின் அறைகளிலே இருக்கும் காரைபெயர்ந்த சிறுசுவர்வெடிப்பினைப்போல. அப்புலனறியும் சிறிய மரக்கீறல்களும் இடப்பெறுதியையும் காலக்குறியினையும் பெற்றுக்கொள்கின்றன. வாழ்க்கையின் அமைப்பிலே இறுதியிலே மிஞ்சிப்போவது இப்படியான குறுக்குவெட்டுப்படிமங்களே.

2 comments:

ராஜா said...

நனவிடை தோய்தல் வாழ்வின் எல்லா கூறுகளிலும் ஒரு இதமான உணர்வை அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது. தொலைத்து விட்டதாக நினைத்திருந்தது கிடைக்கப் பெறுவது அதை உடனடியாக சேமித்து வைத்துக்கொள்ளும் ஆவலை தூண்டுகிறது. எனக்கும் webarchive இப்படியான தருணத்தை வழங்கியது. பழைய எழுத்து முயற்சிகளில் உள்ளடக்கத்தைவிட எழுதினோம் என்பதே தன்னளவில் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த காலகட்டத்தில் அதன் மீது குவித்த கவனமும் அளித்த உழைப்பும் இன்று அதை விட சிறப்பாக எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ள நிலையிலும் திரும்பிப் பார்க்க பிரமிப்பாகவே உள்ளது.

நீங்கள் உங்களுடைய எழுத்துக்களை ஒரு தனி வலைதளம் உருவாக்கி ஆவணப்படுத்தினால் என்ன? உங்களுடைய சில ஆக்கங்களையும் தர்க்கங்களையும் கால இடைவெளிகளில் தேடிப்படிக்க முயன்றிருக்கிறேன். அவைகள் ஒரே இடத்தில் அணுக எளிதாக கிடைப்பது வசதியாக இருக்கும்.

//ஒரு காலகட்டத்திலே வந்த திரைப்படப்பாடலைப்போல, நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட படங்களைப்போல, எழுதியனுப்பிய அஞ்சல்களைப்போல, உடன்பிறந்தாரோடு பகிர்ந்துகொண்ட வீட்டின் அறைகளிலே இருக்கும் காரைபெயர்ந்த சிறுசுவர்வெடிப்பினைப்போல. அப்புலனறியும் சிறிய மரக்கீறல்களும் இடப்பெறுதியையும் காலக்குறியினையும் பெற்றுக்கொள்கின்றன. வாழ்க்கையின் அமைப்பிலே இறுதியிலே மிஞ்சிப்போவது இப்படியான குறுக்குவெட்டுப்படிமங்களே.//

அருமை.

ராஜா,
நாமக்கல்.

-/பெயரிலி. said...

நாமக்கல் ராஜா
நன்றி.
எழுதியவை சிதறித்தான் கிடக்கின்றன- எங்கென்றும் தெரியாமலே.