Saturday, October 15, 2011

கடவுள்

அவர்கள் கடவுளைத் தேடித்திரிந்தபோது, அவர் தன்னவரின் 'சிச்ருஷைக்கும் சில்மிசத்துக்கும்' பேரஞ்சி ஓர் இடிந்த கருங்கல் மண்டப இருட்டுக்குளிருக்குள்ளே தனியே விறைத்திருந்தார். கடைசியாக, அவர் ஓடத்தொடங்க முதற்கணம் தன்னைச் சூழ அவர்கள் இருந்ததைக் கண்டிருந்தார். தன் இருத்தலுக்கு அவர்களை முழுக்க முழுக்க நம்பியிருந்ததற்குக்கூட தன்னிற்றானே கழிவிரக்கம் கொள்ளவும்கூட முடியாத அந்நேரத்தில், அவரை ஆழ்பயம் பிடித்தாட்டியது.

கடவுளுக்கு, தனது குழந்தைப்பருவம் நினைவுக்கு வந்தது. நினைவாற் தொட்டாலே பொடிப்பொடியாகி உதிர்ந்து காற்றாகிப் போகக்கூடும் மிகவும் புராதனமான காலம். எல்லோரும் அவரை அவரின் அழகுக்காக மட்டும் நேசித்த ஆரம்ப அவத்தைப்பொழுது அது; சொந்தமேயற்ற கொழுக்குமொழுக்குக் குண்டுக்குழந்தையை தமது சொந்தம் என்று சொல்லித் தூக்கிக் கொண்டாட, உலகமே வரிசையிலே நின்ற வேளை. கடவுளுக்கும்கூட அப்போது, தன் வசதியை நிறைவேற்றக்கூடிய சொந்தங்களின் மணிக்கட்டுகளிலே தன் குழந்தைக்குண்டிச்சதையினை அழுத்திக் குந்தி, கன்னத்தோடு கன்னம் வைத்து அழுத்தித் தேய்த்து, முத்தத்துக்கொரு மோதகமோ முறுக்கோ பெறுவதிலே அதீத ஆனந்தம்; ஆதிமுதலே, வாய்க்கப்பெற்றதெல்லாம் கழிக்காமலே முழுக்கப் புசிக்கின்றவர்தான் ஆண்டவன்! அனர்த்தனமே இல்லாத அந்தக்காலம்.... பெருமூச்செறிந்துகொண்டவருக்கு தனக்கு வாழ்க்கை சலிப்படையத்தொடங்கியது எப்போது என்று முன்னைய ஞாபகத்திலே வராகக்கொம்பு கொண்டு கிளறித் தேடத்தேடவும் தேவைப்பட்ட விடை தெரியவில்லை. இருளுக்கப்பால், எழுந்த இடிந்த சுவரின் ஒவ்வோர் ஒலியதிர்விற்கும் காரையுதிர்வுக்கும் அஞ்சிக் குறுகினார்.

மூஞ்சூறொன்று தன் மூஞ்சி மீசைமேல் மூசி அவரை முகர்ந்து விட்டு, வாலாற் தட்டியபடி விலகிப்போனது. அலட்சியம்!! காலத்தினைத் தன் கையை விட்டு கட்டவிழ்த்துவிட்ட கணத்தினை நொந்துகொண்டார். தனது செல்வாக்கினை அஞ்சுதலுக்கு இழந்தாரா அல்லது கெஞ்சுதலுக்கு இழந்தாரா என்றுகூட இன்றைக்கு அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. உள்ளதையெல்லாம் கண்டவர்க்கும் கேட்டவர்க்கும் கையள்ளி வாரிக்கொடுத்துக்கொண்டு, வரட்டுத்தான்தோன்றித்தனத்திலே எதேச்சதிகாரமும் செய்து திரிந்த இளமையை எண்ணிக்கொண்டார். அந்த ஊதாரிப்பருவத்தை திரும்ப வாழப்பெற்றால், தான் காலத்தினை மீளத் தன் கைக்குள்ளே கொண்டு வரமுடியுமென்றும் இன்றைக்குக் கோணலாகத் தெரியும் எத்தனையோ நிகழ்வுகளினை நீட்டி நேராக்கமுடியுமென்றும் மெல்லியதாக வாய்விட்டு அரற்றியதனைக் கேட்டு யாருமிங்கு சிரித்தார்களோ? துணுக்குற்றவர், ஓடிய ஊத்தைச்சாக்கடையில் பாத்திரம் புண்டொழுகிய பாலுக்கேங்கியதை மறந்தார்; சுற்றும்முற்றும் திரும்பாமலே, இருட்டிலும் பொருட்கள் ஏற்றிய வெளிவர்ணத்தைப் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர் இறைவன்; அந்த முகர்ந்த மூஞ்சூறைத் தவிர எதையும் அடர்ந்த இருள் அவருக்கு உணர்த்தவில்லை. மூஞ்சூறுகளைச் சிரிக்கும்தன்மையுடைத்ததாய் -அதுவும் தன்னைப்பார்த்து- இறைவன் படைத்ததில்லை. பெருவிரலழுத்தப் பிய்ந்து நீர்ச்சதை பீறிடும் நுங்கின் நொய்கண்ணொத்த தன் ஞானவிழியின் ஊற்றுமுனையிலே தனக்காகாக் கொடுந்தீமையேதும் கருவண்டாய் உருமாறி உட்கார்ந்து அடைத்ததோ என்று அதிர்ந்தார். இறுதியிலே, "ஒன்றாகியும் பலவாகியும் ஒரே நேரத்திலே இருப்பதே நான்" என்று சொல்லிக்கொண்டு, தன் சுயவிமர்சனத்துக்குத் தானே நகைத்திருக்கக்கூடுமென்று தனக்கொரு சமாதானம் தேடிக் கொண்டார்.

தொந்தரவான மனிதர்கள் அற்ற விளையாட்டு மூஞ்சூறுகளுடான கர்ப்பக்கிரக இருட்பொழுதுகள் கடவுளுக்குப் புதிதானதல்ல என்றபோதும், இத்தகைய அஞ்ஞாதவாசத்தின்கீழ் எதுதான் புதிராக இராது? அவருக்கு மனிதர்கள்மீது பொறாமை வந்தது; அது, வழியவழியக் கொட்டும் மகிழ்ச்சியினை மற்றவன் கேட்டுவிடப்போகின்றானோவென்று வதவதவென்று அள்ளி வாய்க்குள்ளே கொட்டிக்கொள்கின்றவர்கள், சின்னச்சிராயன்று சிகை சிலும்பிச் சீண்டும் துன்பத்தினையும்கூட அவர்மீது அப்படியே குற்றச்சாட்டோடு, -தாம் சுவைக்கத் தின்று யாரோ வேண்டியள்ளத் தள்ளுவதாய் தம் மூக்குகளைப் பொத்தி பொதுவிடத்திற் கழித்த மலமாய்- தள்ளிவிட்டுப் போய்விடுகின்றார்களே என்ற பொறாத தன்மையல்ல; கடவுள் மற்றவர்களின் தற்சிந்தைச்செயலுக்கு முற்றாய் வழிவிட்டுவிடுகின்ற வழிவகையின் சூத்ரதாரி; அதனால், தன்மீது சுமத்தப்படும் குற்றத்தையும் துன்பத்தையும் மீள்தன்மையில்லாத்தளமாய் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று தார்மீகப்பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றவர். ஆனால், தனது சொந்தத்துன்பத்தினையும் வேதனையினையும் சொல்லித் தள்ளி அடுத்த வாழ்கணத்திலே ஆழக் கை நனைக்கவென்றொரு இறைசுவர் இல்லாதது ஏக்கத்தையும் பொறாமையையும் தந்தது.... கொடுத்துவைத்தவர்கள் இந்த மனிதர்கள். ஹ¥ம்!!

சுற்றுமுற்றும் அதிர்வுகளும் உதிர்வுகளும் சட்டென்று நின்றனவாய் உணர்ந்தார்; சட்டென நிற்கும் இயற்கையின் இயக்கங்கள் நல்லதற்கல்ல. எண்ணவிழையை அரையிற் தொங்கவறுத்து இருப்புச்சூழலுக்குச் சுதாரித்துக்கொள்ளமுன், மண்டபக்கதவுகள் மாரடித்துத் திறந்துகொண்டன; ஒன்றின்மேலாய் இன்னொன்றாய் படிந்தும் பிளந்தும் பரவி நகரும் நிழல்களின் அசைவுகளின் பின்னாலிருந்து அங்குமிங்குமாய் வந்த ஒளிக்கீற்றுகள் கடவுளின் கண்மணிகளுக்கு ஊசிகளைச் சொரிந்தன:- "ஒளியும் மறந்து வெறுக்கும்வண்ணம் அதிககாலம் இருட்டுக்குள் இருந்துகொண்டேன்." கூசிய கண்களூடு இருட்பொந்திலே பதுங்கும் மூஞ்சூறுகளையும் எலிகளையும்கூடக் காணமுடியவில்லை. இறுதிப்புலனும் எரிந்தறுந்த முழுத்தீவு.

எவரோ "இங்கே இன்னொருவன்" என்று வெளிவாயிலை நோக்கித் திரும்பியும் திரும்பாமலும் அலறியது, குரல் சுருங்கிய அறைச்சுவர்களிலே முட்டிக்கீறி அங்குமிங்கும் எகிறிப் பந்தடித்து அணைகின்ற விதத்திலே புரியக்கூடியதாக இருந்தது;

வெறுஞ்சுவரோடு சுவராக உருவம் தெரியாமல் உறைந்திருந்தவரை ஒருவன் கண்டு கொண்டான் போலும்; "அதோ! அங்கேயிருக்கின்றான்"; அவன் தன்னைக் கண்டுதான் கத்தினானா, அல்லது கூட்டத்தினரின் குழப்பத்திலே தான் கோலோச்சக் கத்தினானா என்பது கடவுளுக்குத் தெரியவில்லை. நிறமற்ற நீரின் நிறமும் நிறமில்லாநிறமெனப் பெயர்கொண்டதுபோல, தன் உருவமின்மையும் தனக்கோர் உருக்காட்டியானது சூக்குமசரீரனுக்குச் சோர்வைத் தந்தது. கத்தியவன் பின்னாலிருந்து பாய்ந்தவர்கள், கடவுளைச் சுவரிலிருந்து - இரத்தம் உறுஞ்சும் தேயிலைத்தோட்ட அட்டையைப்போல்- பிய்த்து நிலத்திலே போட்டார்கள்; அடையாளம் கண்டதாய்க் காட்டிக்கொண்டவன் முகத்தைப் பார்த்தார்கள்; நெடுக்கிய நிலைக்குத்துநிலை பெயர்த்துக் கிடைப்போட்ட சிலையான கடவுளும்கூட கத்தியவன் முகத்தைப் பார்த்தார்; அவன்தான்; அவரின் நெருக்கத்துக்கும் விசுவாசத்துக்குமுரியவனான தரகன்தான்; அவரது ஐம்புலனும் அறிநிலையும் மறைதிரையுமானவன். அவரின் தொழில்நுட்பங்களின் முதற்சீடன்; கடின உழைப்பாளி; அவனிலே தன் வளர்ச்சிக்காலத்தெறிப்பைக் கண்டே முதலடிப்பொடியாக அவர் தத்தெடுத்திருந்தார்.

இருட்டிலே தேவமாறாட்டம் கொண்டவன், வெளிச்சத்திலே தன்னை அடையாளம் கண்டு தூக்கித் தோளிலே போட்டு ஊர்வலம் போகப்போகின்றான் என்ற எண்ணம் அவருக்கு நிம்மதியைத் தந்தது; சனம் கேட்கக்கேட்க, கொடுத்துக்கொண்டே இருந்ததால் தன் மீது அவர்களுக்கு மதிப்பு மங்கி, 'கேட்பது எம் உரிமை; தரவேண்டியது உம் கடமை' என்ற நிலைமை மேலோங்கியதாலே தன் அருமையை நிலைநாட்ட ஓடியது தான் எண்ணியதுபோல அருமையாகவே வேலை செய்திருப்பதை எண்ணித் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு எழுந்திருக்க முயன்றார்; "தெய்வத்தை இன்றாவது தேடியலைந்தீர்களா, குஞ்சுமானுடங்களே? உப்பில்லாவிட்டாற்றான் தெரியும் உப்பின் அருமை; அப்பன் இல்லாவிட்டாற்றான் தெரியும் அப்பனின் அருமை"; கேலிப்புன்னகை, மண்டபமண்ணைத் தொட்ட, கோபுரத்தைப் பார்த்த, மற்றெல்லா.... அவரது அத்தனை முகக்கடைவாய்களிலும் அரும்பியது. கொஞ்சநேரம் மனிதமுகங்களின் நவரசங்களுக்குப் பயந்தோடி ஒளிந்திருந்தாலும், இறுதியிலே இப்படியாகத் தான் எவ்வளவு உயர்ந்தவன் என்று தன் சட்டத்திட்டங்களின்கீழ் நிரூபித்தறிந்து கொள்ளும் கணங்கள் இன்பகரமானவை; திருப்தியைத் தருகின்றவை...... பெருமிதம் அகத்துள்ளே முற்றி தேஜஸ் தன்னைச் சுற்றிப் பெருகிப் பரவுவதை அவரால், அறிகிடைநிலையிலும் அறியக்கூடியதாகவிருந்தது.

சுற்றிய ஒளியிலேதான் கண்டார்: அவரின் அடிப்பொடியின் முகம் மிகவும் விகாரமானது. "மண்டபத்துக்கு வெளியே இழுத்துப்போங்கள்" - கத்தினான்; "அங்கும் போலி! இங்கும் போலி!! எங்கெங்கும்...." தன்னுள் உளச்சோர்வும் கூட்டத்திற் பரிதாபமும் கடவுளிலே காட்டமும் கொண்டதை ஒருமித்துச் சொல்லும் குரலிலே அவனுக்குக் கத்தத்தெரிந்திருந்தது. "அடிப்பொடி! நன்றாய்ப் பாரடா என்னை; இருட்டிலே அழுக்குச்சுவரிலே அரூபனாயிருந்தவனையும் அடையாளம் கண்ட உனக்கு, இந்த ஒளிக்குழம்புள் இத்தனைநாள் நீ கைகட்டிக் கால் சிரசேற்றிச் சேவகம் செய்த என்னைத் தெரியவில்லையா? அடே! ஒரு நாளிலே மறக்கும்விதமாகவா யுகம் கண்டு பார்த்த என்முகமும் கோலமும் ஆகிப்போனதுனக்கு?" அதட்டினார்.

"எல்லாப்போலிகளின் நாடகங்களும் அபிநயங்களும் ஏன் இப்படி பாவபேதமின்றி ஒற்றைவார்ப்பிலே செய்தவையாக இருக்கின்றன?! இவனுக்கு முன்னாலே பார்த்த போலிகள் நடத்தைகளுக்கும் இவனதுக்கும் ஏதேனும் வித்தியாசமிருக்காது என்று அப்போதே சொன்னேனே, பார்த்தீர்களா? அதே வெல்ல அச்சு" - அடிப்பொடி சனத்தைப் பார்த்துக் கொக்கரித்துவிட்டு, இவரின் இடுப்பிலே உதைந்தான். கடவுளுக்கு நிலை ஏனோ விபரீதமாக மாறியிருப்பது மெல்லப் புரிய ஆரம்பித்தது.

இன்னமும் கூட்டம் பின்னால் வருவது தெரிகின்றது. கூட்டம்கூட்டமாக நகர்ந்து தம்மிலிருந்து வேறாய், ஒளிந்திருக்கும் மனிதர்களினையோ தம்பாட்டிற்கலையும் மிருகங்களையோ அடையாளம், தோல் சுரண்டிச்சுரண்டித் தேடுவதற்குப் பெயர், வேட்டை; கடவுளுக்குத் தெரியும். கடவுளும் வேட்டை ஆடியதுண்டு; அவர்பேரிலும் ஆடப்படுவதையும் ஆட்டப்படுவதையும் அவர் அறிந்ததுண்டு. அப்போதெல்லாம், வேட்டைக்குறியிலும்விட, அதைக் காட்டிக்கொடுக்கின்றவர்களினை அடையாளம் கண்டுகொள்கின்றதையே கடவுள் குறியாகக் கொண்டிருந்தார்; பலிகளைப் பிடித்துத் தருகின்றவர்களைக் கொலுப்படியிலே மேல்நோக்கி விரைவாக நகர்த்தியவருக்கு, அவர்களின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதை உணர்த்த அதுவொன்றுதான் அடையாளம் என்ற அபிப்பிராயம் இருந்தது.

'என் ஏவலாளர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற கணத்திலே என்னைத் தம் ஏவலாளன் ஆக்கிக்கொள்கின்றவர்களிலே அண்டத்தினை நான் முற்றாகப் பாரம்கொடுத்துவிட்டுச் சுமையின்றி மிதக்கத்தொடங்கும் நேரச்சொட்டின் போதையை நான் நுகரத்தொடங்கிய கணத்துக்கு முன்னர்....' - கடவுள் தனக்கினிதான சூழலுக்குத் தற்காலிகமாகவேனும் மீள முயன்றார். நிலவரம் ஏதாக இருந்தாலும், 'சாவுக்குத் தான் பயந்தவனில்லை' என்று ஒருவித அர்த்தமற்ற தன்னம்பிக்கையை அடிக்கடி உதடு பிரித்து முணுமுணுத்துக்கொண்டார். தனக்கும்கூடச் சாவு வரும் என்று ஏற்கனவே தெரியாதவரில்லைத்தான் என்றாலும், இத்தகைய ஒரு சூழ்நிலையிலே அ·தமைவதை அவர் முற்றாக விரும்பவில்லை.

"மண்டபத்துக்கு வெளியே முற்றத்துக்குக் கொண்டு போவோம்; வாருங்கள்" -கத்தியவன், வேறு யாருந்தான் அந்த இழுத்துப்போகும் செயலைச் செய்யவேண்டும் என்பதிலும் உறுதியானவனாக நின்றான். கூட்டத்திலிருந்து சில ஆர்வமுள்ள இளைஞர்கள் பாய்ந்து வந்தார்கள்; "அடிப்பொடிக்கும் அடிப்பொடிகள்" -கடவுளுக்குச் சிரிப்பும் வெறுப்பும் அச்சமும் ஒன்றையன்று முட்டியடித்தன. நிலம் முட்டிய முகமும் முதுகும் சிராயச்சிராய இழுத்துப்போனார்கள்; அடிப்பொடி முன்னால், ஒரு குழந்தையைப் பலிபீடத்திலிடவோ, ஒரு குற்றவாளியைக் கழுவேற்றவோ இட்டுச்செல்லும் சிறுதானைத்தலைவன்போல, விலகி வழிவிடும் கூட்டத்திலே தனக்கான அங்கீகாரத்தை விழியாலே தேடிக்கொண்டு, கிடைத்தபோதிலே சாய்தலையால் ஏற்றுக்கொண்டும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தான்.

மண்டபத்தின் வெளியிலே ஒரு தாயக்கூட்டமாக நிரையிலும் நிரலிலும் நிறையச் சிலுவைகள்; உடல்கள் தூக்கியறையப்பட்டும் காத்துக்கொண்டதுமான சிலுவைகள்; ஆடையணிகள் மாறுபட்டுக்கிடந்தாலும், தூக்கி அறையப்பட்ட உருவங்களெல்லாம் அவருடையதாகவிருந்தன. வெற்றுச்சிலுவையன்றின் முன்னர் நிறுத்தப்பட்ட கடவுளுக்குக் கண்கள் இருட்டின; இத்தனைநாள் அள்ளி அள்ளித் திகட்டத்திகட்டக்கொடுக்கையிலே பருக்கையிலே மறுத்து ஏற்காமலே பெரியமனிதத்தனம் காட்டிக்கிடந்தவர், முதன்முதலிலே பசியை, தாகத்தை உணர்ந்தார். கவளச்சோறும் கிண்ணநீரும் அடிப்பொடியிடம் கேட்டார்.

"நீதான் கடவுளென்றால், எங்களுக்குத் தரவேண்டியவன் நீ" - அவரிடம் கொக்கரித்துவிட்டு மக்களைப் பார்த்து பார்வையிலே ஆமோதிப்புக் கேட்டுக் கேள்வி தொடுத்தான், அடிப்பொடி.

"அதுதானே? நீதான் கடவுளென்றால், எங்களுக்குத் தரவேண்டியவள் நீயேதான்" - அடிப்பொடியின் இளைய அடிப்பொடியருவன் கைச்சாட்டையைக் காற்றிலே சொடுக்கி ஒரு யுகப்பிறழ்ச்சிக்கு நியாயம் கேட்பவன் என்ற பாவத்திலே சொற்களை அடிக்கண்டத்து நரம்புகள் அதிரக்கக்கினான்.

"அப்படித்தான்; பசியையும் தாகத்தையும் போக்கும் கடவுளைத் தேடித்தானே எங்கள் அலைச்சலெல்லாம்; எங்கள் தோற்றத்தைக் கண்டுமா வாய்த்தீனியும் துளிநீரும் கேட்கிறாய்?" - வியர்வைநாற்றம் கடவுளின் எல்லாச்செவிப்பறைகளிலும் அறைந்து எதிரொலித்து அடங்கியது.

இப்போதுதான் கடவுள் சுற்றுமுற்றும் பார்த்தார். அடிப்பொடியைத் தவிர்த்துவிட்டால், மிகுதியெல்லாம் சுருங்கிய தோல் துருத்தித்தொங்கும் எலும்புகள் பிளந்து நிலம் விழாது அடக்கிக் காத்திருக்க மூச்சுக்காற்றிலே உலாவும் உருக்கள்.... சிறிதும் பெரிதுமாக...ஒன்றையன்று தாங்கிய அதேநேரத்திலே ஒன்றோடொன்று போட்டியிட்டுக்கொண்டு..... இத்தனை கால அவரது கோலோச்சுகையிலே, அவரின் திரைக்கப்பாலிருந்து கால இடைவெளியில்லாமல் நெருக்கி நார் கோர்த்த சரமாக அடிப்பொடி அழைத்துவந்த மனிதர்கள் இவ்வகைப்பட்டவர்களல்ல; அவர்களின் தேவைகளைப் போலவே அவருடைய வாயிலும் வரமும் அவர்களுக்குப் போதுமாயிருக்கவில்லை; "இவர்களிலே ஒருவரையும் நான் காணவில்லையே? அடிப்பொடி இப்படியான மனிதர்களைப் பற்றியேதும் என்னிடம் சொல் சொட்டவில்லையே??" கடவுளின் வினாக்களும் திகைப்பும் அனுபவமும் தன்விளக்கமும் விரிந்துகொண்டே போக, அடிப்பொடியைப் பார்த்தார்.

அவன் கண்டும் காணாதவனாய் தன் கண்ணசைவுக்காகக் காத்திருந்த சின்ன அடிப்பொடிகளை நோக்கினான். ஆண்டாண்டு பழக்கப்பட்ட தொழிலொன்றின் நாளாந்தக்கிரியையன்றைப் புரிகின்ற கடைநிலை ஊழியராய் முள்முடிதாங்கிய கையுடனொருவனும் வலக்கை ஆணிகளும் இடக்கை சிறுசுத்தியலும் கொண்டு இன்னொருவனும் கடவுளை நோக்கி நகர்ந்தனர். ஒரு கணத்துக்கு அவருக்குத் தான் வரலாற்றிலே காலபேதப்பட்ட உணர்வு வெடித்து, பின் வடிந்தது; "இப்போது நான் தக்கிக்கவேண்டும்." - தற்காலத்துக்குச் சிலிர்த்துக்கொண்டார்.

"எதற்கு?" கடவுளின் குரல் அதிர்ந்து, ஆணி, முடியுடன் நகர்ந்தவர்கள் தொடங்கி, அடிப்பொடி, கூட்டம் என நிலைப்படுதல் அலையாகச் செல்லத் தொடர்ந்தது, "நான் போலியென்றால், என் மீதான குற்றங்கள் எவை? இங்கு எவரேனும் ஒருவர் என்னாலே பாதிக்கப்பட்டதாக சொன்னாலுங்கூட எனக்கான எந்தத் தண்டனையும் ஏற்றுக்கொள்வேன்" - தான் என்றைக்குமே சந்திக்காத இவர்கள் தன்னிலே என்ன குற்றம் சுமத்தமுடியும் என்ற திடமான நம்பிக்கை அவருக்குப் பிறந்திருந்தது.

அடிப்பொடி, நிமிட இடைவெளியும் விடவில்லை...."பார்த்தீர்களா?... திரும்பவும்.... தங்களைக் கடவுள் என்று பகிரங்கப்படுத்திக்கொள்ளும் போலிகளின் செய்கைகள் ஒரே சிற்பி செதுக்கிய சிலைகள்போல...ஒரே குற்றப்பத்திரிகையை ஆள் தூங்கும் ஒவ்வொரு சிலுவையின்முன்னும் சுமத்திச்சுமத்தி ஓர் இயந்திரமாகிப்போனேன். இயந்திரமாக உருவானவனா நான்??" - அடிப்பொடியின் குரல் இவ்விடத்திலே உடைந்து தடங்க, "இல்லையில்லை; போலிகளைப் பற்றிய பிம்பங்களை உடைத்தெறிந்த நீங்கள் எமது விமோசனத்துக்கான வழிகாட்டி போன்றவர்" என்று அடிப்பொடியின் அடிப்பொடிகள் ஒத்த குரலிலே உரத்துக்கூறினார்கள்... மீண்டும் அதே ஒத்தூதும்கிரியை.... சிறிது தயக்கத்தின்பின்னர், மெல்லியகுரலிலே சனங்களின் ஆமோதிப்புப்பரவியது.

தன் இடுப்புக்கச்சையின் அடியிலிருந்து ஒரு கசங்கிய சுருளை எடுத்து அடிப்பொடி விரிக்க, தேவப்பிரசங்கம் கேட்கும் பாவனைக்குக் கூட்டம் தன்னைத் தயார்ப்படுத்தியது. "இந்தக்குற்ற ஆவணம், போலி இலக்கதாரி இத்தனையாவதானவன் மேலே சமர்ப்பிக்கப்படுகின்றது; இவன் மீதான குற்றங்கள் பின்வருகின்ற இரண்டிலே ஏதாவதொன்றாகலாம்; முதலாவது, தன்னைக் கடவுள் என்று பொய்யாகக் கூறிப் பித்தலாட்டம் செய்வது; கடவுளுக்குப் பசிப்பதில்லை; பசித்தாலும்கூட, அவர் பருகத் தண்ணீரும் புசிக்க வெற்றிலையும் மனிதரிடம் யாசிக்கக்கூடியவரல்லர். அதனால், இவன் கடவுளாக இருக்கமுடியாது....."

இந்த இடத்திலே கடவுள் குறுக்கிட்டுப் பாய்ந்தார்; "கடவுளுக்குப் பசிப்பதில்லை; தாகமேற்படாது என்பதற்கான ஆதாரமென்ன?"......"நான் கடவுளின் அடிப்பொடியாக நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றேன். கடவுள் பசித்து, தனக்குப் பிடித்ததென்று எதையும் மொறுமொறுக்கத் தின்றோ, தாகமேற்பட்டதென்று சலசலக்கும் எதையும் அருந்தியோ நான் கண்டதில்லை." - அடித்துச் சொன்னான் அடிப்பொடி.

"அடே அடிப்பொடி! கண்ணிலே வஞ்சகத்தை நழுவவிட்டுக்கொண்டு பேசாதே" -கடவுள் பொறுமையிழந்தார்.

"..... இவர் கடவுள்தான் என்றிருந்தால், இவர் இழைத்த குற்றம் பொய்யாகத் தன்னை அடையாளப்படுத்துவதிலும்விடப் பெரிது; படைத்த கடவுளின் கடமை என்ன?" -அடிப்பொடி தொடர்ந்தான்.

"படைத்த மக்களைக் காத்தலும் அவர்களைத் தான் கவனிக்கின்றேனென்பதை அவர்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கை அடிக்கடி காட்சி தந்து உணர்த்திக்கொள்ளுதல்" - அடிப்பொடியின் பொடியர்கள் கத்தினார்கள்...

...."இவனை மண்டபத்துச் சுவரிலே உருவமில்லாமல் திசைப்பட்டுக் கிடக்கமுன்னர் பார்த்தவர்கள் எவராவது இங்கே இருக்கின்றீர்களா?"

"இல்லை! இல்லவேயில்லை!!" - கூட்டம்.

"அப்படியானால், இவன் கடவுளாக இருந்து தான் பெற்ற மக்களுக்கான கடமையைச் செய்தானா? அப்படிச் செய்யவில்லை என்பது மிகத்தெளிவு; அப்படிச் செய்யாதவிடத்திலே இவன் தன் கடமையிலேயிருந்து வழுவியவனாகவும் தன்புத்திரர்களின் கஷ்டங்களையே மறைந்திருந்து பார்த்து இரசிக்கும் கொடூரத்தன்மை கொண்டவன் அல்லவா?"....

கடவுளுக்கு அடிப்பொடி எப்படி வலையை விரித்துத் தன்னைத் தள்ளிச் சுருக்கை இழுக்கத்தொடங்கியிருக்கின்றான் என்று தெரியத்தொடங்கியது..... "பாவி, இவன் இத்தனை நாளாக பொருளும் உடலும் விளைந்து கிடந்தவர்களைக் கொண்டு வந்து 'அதுவும்கூடப் போதாமை' என்ற பொருமல் மட்டும் புழுத்துப்போயிருந்தவர்களுக்கு விழற்றிசையிலே நீர் பாய்ச்சவிட்டுவிட்டு, திரைக்கப்பால், இவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றான் என்று எனக்கெப்படி தெரியும்? திரைக்கப்பாலும், இவர்களைப் பார்க்க நான்தான் மறுக்கின்றேன் என்று காரணம் சொல்லியிருக்கக்கூடிய ஆள்"....கடவுள் விக்கித்துப்போய் முகமும் மூளையும் விறைத்து நிற்க,

கூட்டம், "அடிப்பொடி, நீ சொல்வது சரிதான்" என்று கத்தியது....

கடவுள் தனக்குத்தானே சட்டத்தரணியானார்; இயலுமானவரை குரலை உயர்த்தினார்.

"அடிப்பொடி; துரோகி. காலகாலங்களுக்கு முன்னர், என்னைப் படைத்த ஒவ்வொரு மனிதனையும் நானே சென்று கண்டு குற்றம்குறை கேட்டு, அவலம் போக்கினேன். அப்போதெல்லாம், மனிதர்கள் இவர்களைப் போலவே நொய்யெலும்பும் மேற்போர்த்திய மென்றோலாகவும் இருந்தார்கள். உனக்கே தெரியும். அன்னையின் சுருங்கிய மார்பை பாலுக்காய் இழுத்து வதைத்துக்கொண்டிருந்த உன்னைக்கூட நான் அங்கேதான் கண்டுபிடித்து எடுத்துப்போனேன். உன்னை என் எடுபிடியாக்க, காலத்தோடு ஒருமிக்க ஒரு முழுமாட்டூன் தின்ற புழுவாய் உடல் கொழுத்துக்கொண்டு வந்தாய்.என் உடலின் பெருப்பம் உயிருக்காகாதென்று சொல்லி, என் வெண்ணையையும் வெத்திலையையும் கண்டம் கையழுத்தி நிறுத்தியவன் நீ. பின்னர், என் பவனிப்பல்லக்குக்கும் உலகுக்குமிடையே அரசுப்பெண்டிர் அந்தப்புரங்கள்போல மூடுதிரை போட்டவன் நீ. கேட்க, தீரா என் தொழிலிருந்து எனக்கு சிறிது ஓய்வெடுத்துக்கொள்ள வழி செய்கின்றதாகச் சொன்னாய். என் மீதிருக்கும் இரக்கத்திலே, உன்னை ஓயாமற் சுற்றி என் நலம் பார்க்கின்றாய் என்று எண்ணிப் பெருமிதமடைந்து சொன்னபோதெல்லாம், புன்சிரிப்புச் சிந்தினாய். பின்னர், என்னைக் காண வந்தோரெல்லாம் பலிக்கிட விளைத்த ஆட்டுக்குட்டிகளாக இருந்தார்கள்; மக்களின் வாழ்க்கை நிலை வளம் பெற்றதாக எண்ணிக்கொண்டு மகிழ்ந்தேன்..." - கடவுள் மூச்சுக்குக் கணம் தரிக்க, அடிப்பொடி உள்ளே பாய்ந்தான்...

"பார்த்தீர்களா? இவன் கடவுளாக இருந்தாற்கூட, எவர்களின் சகவாசத்தை இவன் எப்போதும் பெற்று அருள் பாலித்திருக்கின்றான் என்று...அவர்களினது.... சேற்றுப்பன்றிகளாய்க் கொழுத்த அவர்களினது... உங்களை ஏன் கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் இவன் கண்டு கொள்ளாததற்குக் காரணம், தினமும் கிடார நெய்யும் பெட்டி ரொட்டிகளுக்கும் தேவைக்கதிமாகத் திணித்துக்கொள்ளும் முள்ளுப்பலாப்பழங்கள் அவர்களாம்..."

"இவற்றைச் சொல்லும் இவன்தான் கடவுளென்றால், இரண்டு முறை கொல்லு அவனை" -கூட்டத்திலேயிருந்து ஒரு நோஞ்சான் ஒரு கூழாங்கல்லை எடுத்து தன்னால் ஆகுமென்ற தொலைவுக்குக் கடவுளை நோக்கி எறிந்தான். அவரின் காலடியிலே வந்து வீழ்ந்தது.

"நில்லுங்கள்; நில்லுங்கள்; இதையும் கேளுங்கள்; என்னைப் பற்றிய முழுவிபரம் தெரியும் தெளிவாகும். பின்னால், நீங்கள் என்னைத் தேடி வந்தபோது என்னை ஏன் காணமுடியவில்லை என்பதையும் கேளுங்கள். அந்தப் பன்றிக்குட்டிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை; எப்போதும் 'இதைத்தா அதைத்தா' என்ற ஓயா நச்சரிப்பு. தேவைக்கதிகமான நச்சரிப்பு. கிடையாதவிடத்து, வசை. இவனிடம் நிறுத்து என்று சொன்னால், கேட்பவருக்குக் கொடுப்பதே கடவுளின் கடமையென்றான். அதனால், எனது உண்மையான இருப்பின் நோக்கையும் அவர்களுக்கு நியாயமான தேவைகள் எவையென்று தெரிவதற்குமாகவே ஒளிவிடம் தேடி ஓடினேன். இல்லாவிடத்துத்தான், என் அருமை தெரியும் என்று ஓடினேன்.."

சிலுவைகளடுத்த மலைத்தொடரெல்லாம் அதிர்ந்து எதிரொலிக்க உரக்கச்சிரித்தான் அடிப்பொடி; நிறுத்தமுடியாமலே, சிரித்தானாம்; ஆத்திரமும் பொசுக்கிப்பொசுக்கிச் சிரித்தானாம். மக்கள் கற்களை எடுத்துக் கடவுளின் கண், கன்னம், கழுத்து, முகம், முண்டம், மூக்கு, எல்லாவிடமும் எறிகணைத்தடம் பதிக்கப்பதிக்க எறிய எறிய, எரிந்து சிரித்தானாம் ஆண்டவன் அடிப்பொடி.....

..." எவ்வளவுதான் உமக்குச் சலிப்பானாலும், தேவைகளைக் கேட்டு வரும்போது நிறைவேற்றக் கிடக்கிறன்றவன்தான் ஆண்டவன். இவர்கள் உம்மைப் படைத்தது தம் தலைக்கு மேலே ஓர் அந்தரத்தை ஆக்கி இருத்தியதே தம் தேவைகளைத் தலையுயர்த்தி உம்மிடம் சொல்லதான் என்றபோது, நீர் உமது கடமையை விட்டு ஒளிந்தோடினால், எப்படி? இப்படி ஓடியவர், இன்றைக்குக் கல்லடிக்கும் சிலுவைக்கும் பயந்து நீர்தான் கடவுளென்று உம்மிருப்பினையும் பதவியையும் நிலைப்படுத்த விழைவதும்கூட வெட்கமும் அருவருப்பும் நிறைந்தது"....

"அவனோடு என்ன பேச்சு? தூக்கிக்கட்டு அவனை; ஆணி நெற்றிமத்தியடித்து அவனைக் கொல்ல ஆணையிடு"

....."உமது வெண்ணையிலே ஊறிய அந்த விருந்தினர்கள்கூட உம்மைக் கைவிட்டார்கள் என்பதை அறியீரா? நீர் காணாமற்போனால், உமக்குப் பாதிப்பேயழிய அவர்களுக்கில்லை என்பதையும்தான் அறியீரோ?வெண்ணெய்க்கும் வெத்திலைக்கும் நீர்தான் நீர் சொல்லும் கடவுளென்றாலும், நீர் மட்டுமல்ல ஏக மொத்த விற்பனையாளன்....உமது மூடுபல்லக்குப் போகாத சேரித்தெருமூலைகளில் உம்முடையதுபோல எத்தனையோ கீரைக்கடைக்கடைகளிருந்ததை அறியாத நீரெல்லாம் கடவுளாயிருந்தீர் என்று சொல்லிக்கொள்வது வெற்றியான வரம் கொடுக்கும் வியாபாரம் நடத்தும் தெய்வங்கள் பெயர்களுக்கு இழுக்காகும்"..... மிகைநக்கல், நா மிதக்கச் சொன்னான் அடிப்பொடி...

கடவுளுக்குக் கல்லாயோ வெள்ளைச்சுவராயோ மட்டும் இருப்பதிலே தொக்கி நின்ற நட்டம் மெள்ளமெள்ள விரியத்தொடங்குகையிலே, கூட்டம் பொறுமையிழந்து ஆர்ப்பரித்து ஆவேசத்துடன் கத்தியது;

"முடிவாகச் சொல்கின்றோம்: விளக்கமும் விவரிப்பும் இத்துடன் நிற்கட்டும்...... இவன் பொய்யனோ, பொருந்தாதவனோ, அதற்கான குற்றத்தண்டனையைப் பற்றிமட்டும் இனிப் பேசு."

"சரி; மக்கள் விருப்பம் அப்படியானால், உங்களிலொருவனும் உங்கள் சேவகனுமான எனக்கேதும் ஆட்சேபணையிருக்கப்போவதில்லை; ஆனால், எந்தக்குற்றத்துக்கும் பகிரங்கவிசாரணை நடத்தியபின்னரே தீர்ப்பு வழங்குவது, ஜனநாயகம்; இந்நீதி தெய்வநிந்தை, நிந்தைத்தெய்வத்துக்கும் சேர்ந்ததே; அதன் வழியே செயற்பட்டேன். ஆக, மற்றச்சிலுவைப்போலிகள் போலவே இவன் குற்றமும் நிரூபணமாகிறது; இத்தகு குற்றங்களுக்கு நான் மூன்று விதமான தீர்ப்புகளை வைத்திருக்கின்றேன். அதிலே, இவனின் குற்றத்தின் ஆழத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, மக்கள் நீங்கள்தான் நடுவர்களாகத் தீர்ப்புச் சொல்லவேண்டும். உங்களைப் பாதித்தவனுக்கான தீர்ப்பு உங்களிடமிருந்தே வரவேண்டும்" - கூட்டத்தைப் பார்த்து அடிப்பொடி இடது ஆட்காட்டி விரலை உயர்த்திக் காற்றிலே அடித்தடித்துப் பேச, கூட்டம், "அப்படியே செய்தாற்போயிற்று; மாற்றுத்தீர்ப்புகளைக் கூறு; தீர்ப்புகளைக் கூறுஉஉ" என்று உயர்மீடிறனிலே அலறியது.

"ஒன்று, இவன் தான் படைத்த மக்களின் நலத்தினைச் சிந்தை வைக்காத கடவுளென்றால், தன் குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமிடத்து, கூட்டத்தோடு இன்னொரு ஆளாக ஏற்றுக்கொள்வோம். தான், இனித் தனியே திரைபோட்டு வாழாது கூட்டத்தோடு கூட்டமாகவிருந்து தனது கடமையைச் செய்யலாம்; அல்லது, கூட்டம் அவன் தனது மேம்பட்ட தன்மையை விலக்க, கூட்டம் போலவே தனது வாழ்க்கையினையும் சமநிலையிலேயிருந்து நடத்தவேண்டும்; இல்லையேல், இவன் கடவுள் இல்லை என்றால், இந்தப்பெரும்பொய்மைத்தனமும் தெய்வமாறாட்டமும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை; சிலுவையிலே அறையப்பட்டேயாகவேண்டும்."

"இதிலே நீ எந்தக்குற்றத்தை உனதென்று இறுதியாகச் சொல்கின்றாய்?" -கடவுளைப் பார்த்துக் கத்தினான்.

கடவுள் வாய்விட்டு அலறினார்; "பாவி, இவர்களைத் திரைக்குப் பின்னால் மறைத்தவன் நீயில்லையா? இப்போது, என் தலையிலே கருங்கல், நெற்றியில் இரும்பாணியா?"

"பார்த்தீர்களா? உண்மையைச் சொன்னதற்காகக் கடைசியிலே என் தலையிலே தன்னோர் அம்பெய்கிறான்" -அடிப்பொடி மனம் பொடிபட்டானாம் என்று சொன்னது அவன் முகம்.

"சிலுவையிலே அறை" என்றது கூட்டம்.

கடவுள் அடுத்த வசனம் பேசமுன் வாயமுக்கி, வலுக்கட்டாயமாகத் தூக்கப்பட்டார்; அலறமுன் ஆணி அவர் நெத்தியிலே தைத்தது

காட்சி முடிந்த கூட்டம் விலகமுன்னர் அடிப்பொடி கேட்டான்;
"எமது முதலாவது போலிகளை இனங்கண்டு களை கில்லும் பணி இனிதே முடிந்தது; அடுத்ததாக, உண்மைக்கடவுள் எங்கோ தொலைந்துபோனதால், அவர் வரும்வரை தற்காலிகமாகவேனும், எமது வருங்காலத்துக்காக ஒரு கடவுளை உருவாக்கவேண்டும். அந்தக்கடவுள் காணாமற்போன கடவுள் போல, இருக்கும்போது காக்கும்பொறுப்பைக் காட்டாமலும் தொலையும்போதும் பொறுப்பாகச் சொல்லிப்போகாமலும் அமைபவனாகவிருக்கக்கூடாது. என்ன சொல்கின்றீர்கள்?"

கூட்டம், "நீயே இரு! உனக்குத்தான் காணாமற்போன கடவுளுடன் இருந்து கடவுளாகவிருத்தல் பற்றிய அனுபவம் நிறையவுண்டு" என்று முடிவாகச் சொல்லி, "எல்லாம் அறிந்து எம்மைக் காக்கும் மனமும் வல்லமையும் வாய்ந்த எமது புதுக்கடவுள் வாழ்க" என்று கோஷமிட்டது.

பழைய கடவுள் இந்தக்கோரிக்கையும் குழுமுடிவும் கோஷமும் கேட்காமலே நெத்தியிலும் உள்ளங்கையிரண்டு இரத்தம் ஒழுக ஒழுக தனது இருப்பிடத்திசையும் இறுதியில் நோக்கவும் முடியாமல், தலை தொங்கச் செத்துப்போனார். இறக்கும்போது, தன்னால் இறக்கடிப்பட்டவர்களையும் தான் அடிப்பொடியாக இருக்கையிலே பதவிக்கு வரக் கொன்ற கடவுளையும் நினைத்துக்கொண்டார்;

"எந்த சிலுவையிலே அந்தக்கடவுளை ஏற்றினேன்?? இங்கே சிலுவைகளிலே ஏற்றப்பட்டிருக்கின்றவர்களிலே நான் ஏற்றியவர்கள் எத்தனைபேர்??"

கூட்டம், "செத்த போலி வீழ்க! புதிய கடவுள் வாழ்க!!" என்று புதுக்கடவுளுடன் தீவட்டி வெளிச்சத்திலே பஜனை பாடிக்கொண்டு சாமரம் வீசிக்கொண்டு நகர்ந்தது; புதுக்கடவுள் தனது புது கையுதவி அடிப்பொடியிடம் தின்ன வெத்திலை மடிக்கவும் பருகப் பால் காய்ச்சவும் மறக்காமற் சொல்லிக்கொண்டு பல்லக்கு மூடுதிரைக்குள்ளே முகத்தை மூடிக்கொண்டு போனார். புதுப்பொடிக்கையாள், குழைவுடன் ஆமோதித்தபடி தனக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு திரைக்கு உள்ளும் புறமும் தலையை மாற்றி மாற்றி மர ஓணான் விளையாட்டுக்காட்டிக்கொண்டு அவர் கூடவே போனான். கடவுள் கூட்டத்தின் கோஷத்துக்குப் புன்னகைத்து,கைகாட்டி, தலையசைத்தாலும், தன் வேலைக்காரனின் தொட்டாட்டு வேலைகளின்போதான ஒவ்வொரு அசைவையும்கூடத் துல்லியமாக அவதானித்துக்கொள்வதே குறியானார்.

உருவாக்கம்: ~01, மார்ச் '01 - ~03, மார்ச் '02
இறுதித்திருத்தம்: ~07, மார்ச் ‘02

2 comments:

Amudhavan said...

உக்கிரமான கோபத்துடனேயே ஒரு நல்ல பதிவை எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கள் பலமான அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அது ஒருபுறமிருக்க உங்களின் வித்தியாசமான எழுத்துநடை பிடித்திருக்கிறது.

-/பெயரிலி. said...

நன்றி அமுதவன்