காகங்கள்
காகங்களை நான் உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. காகங்கள் என்று நான் சொல்லும்போது, நீங்கள், பசித்தவுடன் பறந்தும் சிறகு களைத்தவுடன், மரம் கண்ட இடங்களிலே உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர், மீண்டும் இரைக்காகப் பறக்கும் சனிபகவானின் கண்பார்வைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் எண்ணிக்கொள்ளவேண்டும். காகங்களை ஏன் அத்துணை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆவல் எனக்கு ஏற்பட்டதென்றும்கூட உங்களிலே ஒரு சிலர் புருவத்தினை உயர்த்தக்கூடும். காகங்களை நான் முதன்முதலிலே கூர்ந்து அவதானிக்க முனைந்தது, என்னை நானே நுழைந்து பார்க்க முயன்ற அன்றைக்குத்தான்.
இதன் காரணமாகத்தான், மனிதன் பறவைகளைப் பார்த்து விமானத்தினை அமைக்கமுயன்றான் என்று அந்தக்காலத்திலே எண்ணிக்கொள்வேன். இங்கே, அந்தக்காலம் என்பது, நான் திரைப்படப்பாடல்களிலே இந்தக்கருத்தைக் கேட்ட காலமோ, டாவின்சியின் ஓவியங்களைப் பற்றிப் பள்ளிக்கூடத்திலே படித்த காலமோ அல்ல. அவை எனக்கு, வெறுமனே செவிக்கான பாடலும் பரீட்சைப்புள்ளிக்கான பாடமும் என்றளவுக்குமட்டுமேதான். இங்கே நான் சொல்ல வருகின்றது, அதற்குப்பின்னால் -அதற்கு வெகுகாலத்துக்கும் பின்னால்- எனது கடவுட்சீட்டிலே இன்னொரு நாட்டு உத்தரவுமுத்திரையின் எச்சிலிட்ட மை காய்ந்துகொண்டிருந்த மதியப்பொழுது ஒன்றை. இன்னோர் எச்சில் என்று சொன்னதற்காக நாங்கள் எவருமே எச்சிலிட்டுக்கொண்டிருக்கும்போது, அருவருப்பு அடைவதில்லை; முத்தங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் நாங்கள். காகங்கள்கூட மற்றக்காகங்களின் எச்சில்களுக்காக வெட்கப்பட்டுக்கொள்கின்றதில்லை; உரொட்டித்துண்டு முக்கியமா, அல்லது எச்சில் ஒட்டிக்கொள்ளாதது முக்கியமா என்று விவாதித்து முடிவுக்கு வரும் விடயமல்ல இ·து என்பது காகங்களுக்கு மிகநன்றாகத் தெரியும்; விவாதிக்கமுயல்கின்றவர்கள் (விவாதித்தும்கூட முடிவுக்கு வராதவர்கள்), உண்மையான காகங்கள் இல்லை என்பது காகங்களின் மாற்றமுடியாத அபிப்பிராயம். இதனால், விவாதிக்கும் கலை, தம் சொந்தப்பிறப்பிலேயே காகங்களாக உருவெடுக்காதவர்களைக் கண்டு கலையெடுத்துக் கொள்ளத் தாம் பயன்படுத்தும் ஓர் உபாயம் என்று ஓர் உண்மையான காகம் எனக்கு ஒருமுறை தனிப்பட, வெறுப்பு உமிழச் சொல்லியிருக்கின்றது. அதற்கு, நான் காகவியலைக் கவனிப்பின்மூலம் கற்றுக்கொண்டிருக்கின்றேன் என்பது மிகத்தெளிவாகத் தெரியும். தமது தொழிலின் நெளிவுசுழிவுகளை மாற்று உயிரினம் ஒன்று கற்றுத்தெளிவதை மானுடர்கள்போலவே காகங்களும்கூட விரும்புவதில்லை. கூடுவிட்டுக்கூடு பாய்ந்தோ, மான் வடிவிலே மயங்கிப்புணர்வதோ மட்டும்தான் மானிடரின் மாயக்கலை என்று எண்ணிக்கொள்ளும் மந்தகாசமான உலகு காகங்களினது. அதனால், அவை வெறுப்புமிழத்தான் செய்யும் என்று எனக்குத் தெரியும். ஆனால், வெறுப்பைக் கண்டு ஒதுங்கிக்கொண்டால், தொழிற்கல்வி என்னவாகின்றது? அழுக்குமூட்டையைச் சுமந்தாற்றான் வெளுக்கமுடிகின்றது; அழுக்குநீரை வடித்தாற்றான், துலக்கமுடின்றது. இப்படியாக, எதிலும், எவருக்காவது ஏதோ பயன் இருந்துதான் ஆகின்றது என்று எண்னிக்கொண்டு, சில பிறப்புக்காக்கைக்கள், அகத்திலே வெறுப்புநெருப்பைக் கனலக் கனலக் காலிக் கக்கவும், விடாப்பிடியாக காகத்துவத்தினைக் கற்றுக்கொண்டிருந்தேன் நான்.
காகங்களைப் பற்றிப் பல விடயங்கள், மிகவும் வெளிப்படையானவையும் அடித்துத் தீர்மானமாகச் சொல்லிவிடப்படக்கூடியவையுமாகும். இரையை எங்கே தேடும், தேடுவதற்கு என்றைக்கு எந்த உத்தியைக் கையாளும், எந்தத்திசையில் எத்தனை காகங்கள் ஓர் ஒற்றைக்கூட்டத்தை உணவு பற்றும் வியூகமாக்கிப் பறக்கும் என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி; இவற்றையெல்லாம். இத்தனை வருடக் கல்வியின் தரவுகளைக் கொண்டு ஏரணத்தின் அடிப்படையிலே கண்டு என் நாட்குறிப்பிலே பதிந்துவைத்திருக்கின்றேன்.
ஆனால், சில விடயங்கள் குழப்பத்துக்குரியன; ஒருமுடிவுக்கு வரமுடியாதன; பறந்து கொண்டிருக்கையிலே, அறுந்த காத்தாடியன்று, பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதுபோல, அங்கும் இங்கும் அனுமானிக்கமுடியாத ஒயிலாட்டம் ஆடுகின்றவை; உதாரணமாக, காகங்கள் இரைக்காகப் பறக்கின்றனவா, அல்லது பறக்கின்ற சுகத்திற்காக, இரையை, ஓர் எய்-இலக்காக எண்ணிக் குறிக்கின்றனவா என்பது இத்தனை கால எனது கவனிப்பின்பிறகும் அத்துணை வெளிச்சப்படாத மூலையிடுக்கு இருள். வெறுப்பை உமிழாத காகங்களும் இருக்கின்றன எனபதைச் சொன்னேனா? அவற்றினைத் தேடிக் கண்டு கொள்கின்றவை மிகக் கடினமேயழிய, ஆங்காங்கு அப்படியும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றை என் ஆராய்ச்சியின் உச்சத்து ஆயாசக்கட்ட நாளொன்றின் மதியப்பொழுதிலே, எதேச்சையாக ஒரு பட்ட மொட்டை மரத்திலே, தனியே கண்டுகொள்ள நேர்ந்தது. நீங்கள் எண்ணுவது உண்மை; அப்படிப்பட்ட ஒற்றை இலக்கத்துக் காகவுயிரிகள், தனிப்படவே ஒதுக்கப்பட்டு வாழ்வது வழக்கமாம். எனது கேள்வியை ஏதோ ஒரு பெரிய வேள்வி அவிர்ப்பாகமாய், மெல்ல மெல்ல முணுமுணுத்தபடி அதன் முன் வைத்தேன். காகங்கள் பெருமூச்சு விடுக்கூடியவை என்பதைக் கூடக் கற்றுக்கொள்ளமுடிந்தது. தலையைச் சாய்த்தபடி, ஓரக்கண்ணால், ஒரு செத்தபுழுவினை அலகு சொட்டிச் சிதிலப்படுத்திக்கொண்டிருந்து. சத்தம்போடாமல், ஒற்றைச்செயலிலே ஒருங்கே கருத்தூன்றிச் சித்தம் செலுத்தியிருப்பதோர் சித்துவித்தை என்று அர்த்தப்படுமானால், அக்காகம் ஒரு புறச்சுத்தம் செத்ததோர், உட்புனிதயோகி. ஆரம்பத்திலே, அவ்வசிரத்தைத்தோரணை காகத்தின் ஒரு மெத்தத்தனத்தின் மீயுந்தற்பரவுகை என்றே எனக்குப் பட்டது. திட்டிகொண்டு திரும்பி, வெயிலுக்கு நேராக நடக்கத்தொடங்கியபோது, அ·தென்னை அழைத்தது.
அதன்பிறகு, சில நேரம், நானும் அதுவும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இருப்பையும் பறப்பையும் இரைப்பையும் இரைப்பையையும் இரையையும் இறையையும் பற்றி கரையிலே வந்தடிக்கும் ஆற்றடைசல்போல அலைந்தலைந்து நோக்கின்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதனால், மேலே குறிப்பிட்ட காக்கையுடனான எனது உரையாடலைச் சொல்லும்முகமாக, அந்தக்காக்கையை, "அக்காக்கை" என்று இனிமேல் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.
சொற்சந்தங்கள்போலவே, இருப்பும் பறப்பும் இரைப்பையும் இரைப்பும் இரையும் இறையும் தம்முள் மிகவும் நெருங்கியனவாகவும் ஓரிரு நாக்கொட்டல்களிலேயே ஒத்தமை பிறழ்ந்தனவாகவும் உள்ளதென்று ஒருமுறை அது சொல்லிற்று. ஆரம்பத்திலே, பறப்பின் தூரத்தை முன்வைத்து, நானும் அதுவும் இரைக்கும் இருப்புக்குமான முக்கியத்துவத்தினை விவாதித்துகொண்டோம். (காகங்கள் தமக்குப் பெயரிட்டுக்கொள்கின்றவை இல்லை; மூன்று காகங்கள், ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பட்சத்திலே, அருகிலிருக்கும் காகம் "கா" என்றும், அதற்கடுத்த காகம், "காகா" என்று சொல்லிக்கொள்ளப்படும், அந்தக்காகங்கள் அடுத்த கணத்திலே ஒரு சிறுவனின் கல்லெறிக்குப் பயந்து, கிளையிலே இடம்மாறிக்கொள்ளும் கணத்திலே, "கா" எனப்பட்ட காகம், "காகா" எனவும், மற்றது, "கா" எனவும் அழைக்கப்படலாம் என்பது எனது ஆராய்ச்சியின் ஆரம்பகாலத்திலேயே அறியவந்திருந்தது. இதிலிருந்து எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாகியிருந்தன. ஒன்று, காகங்கள், அருகருகே இல்லாத பட்சத்திலே, அடுத்ததன் இருப்பையும் இல்லாமையையும் பற்றி ஏதும் குறைவாகவோ நிறைவாகவோ பேசிக்கொள்வதில்லை. இரண்டாவது, எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பேசிக்கொள்கின்றன என்கின்றதால், தம் இருப்பிற்கான ஏற்பாடுகளை மட்டுமே பேசிக்கொள்கின்றன. கல்லெறிந்த சிறுவன் யார் என்பதைக் கவனிப்பதிலும் விட, கல்லெறிந்தபின்னர், குந்துவதற்கான தமது இருப்பிடங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்துவிட்டன என்பதை உணர்ந்து கொள்வதிலும்விட, இந்தக்கணத்திலே கல்லெறியப்படுகின்றதா என்பதும், இரைக்கான இசைக்கச்சேரிகளுமே எண்ணத்திலே இருத்தி வைக்கப்படுகின்றன.)
பறப்புக்கும் இருப்புக்குமான தூரம் பற்றி எனக்கும் அக்காக்கைக்கும் இடையிலே நடந்த கதையாடலைச் சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா? என்னைப் பொறுத்தமட்டிலே, பறப்பு என்பது இளைப்பும் இயலாமையும் ஏற்படாமல் நடந்து கடந்துமுடிக்கக்கூடிய தூரத்துக்கு அப்பாலே செல்வதற்காக, சிறகுகளை அடித்துக் கொள்ளும் செயல். அக்காக்கையோ, பறப்பும் நடப்பும் ஒரே காரியத்தினை செய்து முடிப்பதற்கான வெவ்வேறு செயலூடகங்கள் என்றதொரு கருத்தினை முன்னுக்கு வைத்தது. அதாவது, அதன் சிந்தைப்பிரகாரம், ஒரு காக்கைக்குத் தத்திச் சென்று இரை கவ்வும் செயல்முடிப்பது இலகுவானால், இன்னொன்றுக்கு இறகெத்தி, இறங்கி, கொத்திக்கொண்டோடுவது சுலபமாகின்றது. இதிலே, எத்துணை இலகுவாக இரையைக் கௌவிக்கொள்கின்றதுதான் முக்கியமேயழிய, வேறொன்றும் அர்த்தமாவதில்லை என்றது. அதாவது, “இரைதான் அந்தக்கணத்துக்கான இறை" என்பது அக்காக்கையின் முத்தாய்ப்பு.
எனது வாதம் எந்த மனிதரும் எதிர்பார்க்கக்கூடியதுபோலவே, "இதைச் செய்ய இது; அதைச் செய்ய அது" என்ற போக்கிலே, தத்தும்தூரத்தைக் கடக்கப் பறக்க அவசியமில்லை என்றும், பறந்துபோய் புதிய தேடல்களுக்குத் தன்னை உள்ளாக்கிக் கடினப்படுத்திக்கொள்கின்றதிலும், பழக்கப்பட்ட சூழலிலேயே, புதிதான தேடலுக்குப் பக்குவப்படுத்தும் முறைமைகளை ஆய்ந்து தேர்த்தல் வேண்டும் என்ற தொனியிலும் இருந்தன. அக்காக்கை சிரித்தது; அந்த நேரத்திலும் கால் கொத்திய புழுவைக் கிளை நழுவவிடவில்லை.
"இருப்பிடத்துக்காக நீயா, அல்லது, இருப்பிடம் உனக்காகவா?"
நேரடியாகப் பதிலேதும் சொல்லாமல், "காகங்களின் உலகு, இரையைச் சுற்றி உலகிலே நகரும் ஒரு வட்டத்தட்டுப்போலும்" என்று கிண்டல் குரல் தெறிக்க, நழுவினேன்.
"இருப்பிலிருந்து வேர்பற்றிப் பிறந்தது இருப்பிடம்; இருப்பு என்பதுவோ இன்றைப் பொறுத்தது; இந்நியதி, காகத்துக்கு வேறு, மானுடர்க்கு வேறல்லவே?" -காகங்களுக்கும் கிண்டல் தொனிக்க வார்த்தை துளிர்க்கத் தெரிகின்றது. பதில்கூறித்தான் ஆகவேண்டும்; காகங்களைவிட மேலானோன் மனிதன்.
"இருப்பிடம் உயிரிகட்காகவே என்பதுகூட, காகத்துக்கும் மனிதனுக்கும் வேறில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மையே; இதனை உணர்ந்துகொண்டவர்கள் ஒருசிலர்தான் என்று எண்ணிக்கொள்வது அறியாமை," -'எல்லோரும்', 'ஒருசிலர்' என்கின்ற பதங்களிலே அழுத்தம் படியக்கூறினேன்.
அக்காக்கை அவ்வழுத்தத்தைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை; "அப்படியானால், எந்த இடமும் வாழ்வசதிகூடினால், தேவைப்படின், எந்த உயிரியினதும் இருப்பிடமாகக் கூடும்; அதிலே, பறப்பினைச் சிறகடிக்கும் பரப்பின் விளிம்பினை வைத்து வரையறுப்பது முட்டாற்றனம்."
நான் பதில் கூற எத்தனித்தேன். அ·து என் குரலை எழமுன் அழுத்தித் தொடர்ந்தது.
"இரைக்காகப் பறத்தல் எந்த வகையிலே கேவலமான செயலாகும்? இரையைக் குறியாக வைக்காத ஒருத்தனைக் கூறு; அதனையட்டி, கேவலத்தை நீயும் நானும் நிர்ணயிப்போம்."
இந்த இடத்திலே இத்தனை கால ஆராய்ச்சிகளின்பின்னால், என்னையும் ஒரு காகமாக நான் உணர்ந்து கொள்ளத்தொடங்கியிருந்த கற்பிதம், தோல் சிதம்பிச் சிதம்பி உதிர்ந்து போகத்தொடங்கியது - கிட்டத்தட்ட, ஒரு பழைய வீட்டின் சுவரிலே படிந்து வேரேறிப் பரவி, வீட்டின் ஒரு கட்டுமான அங்கம்போல ஆகிக்கொண்டிருந்த, காட்டுச் செடியின் ஓரேறியைப் பற்றி, கீழேயிழுத்துச் சொடுக்கிச்சொடுக்கி உரித்து விழுத்தும் உயரிய தொழில்நுட்பம், அதன் சொற்களுக்குட் தொக்கி, கொக்கி நின்றது.
காகத்தின் கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லையா, அல்லது எத்துணை தன்னை மற்றதாக மாற்றிக்கொள்ளமுயன்றாலும் காகமும் மனிதனும் தத்தமளவிலே தமக்கென மட்டுமே நியாயப்படுத்தக்கூடிய நியதிக்கோட்பாடுகளினால் வகுக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுச்சிந்தை உடைத்த உயிரிகளா, நியதி என்பது ஒன்றுக்கு மேற்பட்டதும் முரண்பட்டதும் அதேசமயத்தில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றுகொன்று கொண்டிருப்பவை அல்லாதவையுமா என்பது போல குழப்பங்கள் ஒவ்வொன்றாக - நீர் நிலைத்துத் தூங்கிய குளத்திலிட்ட ஒற்றைக்கூழாங்கல் எழுப்பிப் பரப்பும் ஒரு தொகுதிச்சலனவட்டங்கள்போல- எனக்குள் அகன்று, கரைதேடி அலைந்து கொண்டிருந்தன.
ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிந்தது. கற்றுக்கொண்டு ஒன்றை வேறொன்றாக மாற்றிக் கொள்ளுதல் என்பதும் இயற்கையிலேயே ஒன்றாக இருத்தல் என்பதும் முற்றிலும் வெவ்வேறான விடயங்கள்.
அண்டங்காக்கையாக உருமாறியதாகக் காட்டிக்கொள்வதிலும், எண்ணுகின்றதையும் செய்கின்றதையும் ஒத்தோடவைக்கமுடியாத, எய்கையிற் தோற்ற மனிதனாக வாழ்கின்றதிலேகூட ஏதோ துளி உண்மையும் சொட்டு வெற்றியும் இருக்கின்றதாகத் தெரிந்தன.
"போய்வருகின்றேன்" என்று அக்காக்கையிடம் சொன்னேன்; குரல் மதித்து, என் கூற்றுக்குப் பதில் அது சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை; அந்தப்பொழுதிலே, அதற்கு நான் ஒரு கடந்த காலத்தின் "கா" அரிசிக்காக்கை; முற்கணம் அழிக்கப்பட்ட புதுக்கரும்பலகை அதன் இக்கணப்புத்தி; அதிலே ஒரு செத்த மண்புழுவின், சிதிலச்சதைமட்டும் "வாவா" என்றரற்றிச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கலாம்.
அன்றையிலிருந்து காகங்களைப் பற்றி உன்னித்துக் குறிப்பெழுதிக் கற்றுக்கொள்வதை விட்டுவிட்டேன். ஆனாலும், பொழுதுபோக்காக, போகின்றபோக்கிலே பொதுப்படையாகக் கவனிப்பதை விட்டுவிடமுடியவில்லை. இருப்பதிலே பற்றும் இல்லாதவற்றை அறிந்துகொள்ளும் உளக்குறுகுறுப்பும் இருப்பவனே பிறப்பிலேயே மனிதன் ஆவான் என்பது அனுபவம்.
'00, ஓகஸ்ட் 25
No comments:
Post a Comment