அவரவர் தொழில்கள்
ஆடுவது நான்;
சலங்கையைக் கட்டிக்கொள்வேன்;
காலை விடு.
ஊதுவது நான்;
சங்கைத் தூக்கிக்கொள்வேன்;
கையை எடு.
தோண்டி மருதாணி
தோய்த்துப் பூச ஆசையில்லை;
காயக் கைப் பொறுதி இல்லை.
அரைத்து அள்ளிய சாயம் அனைத்தும்
உனக்கே; விரியக் கை பதுக்கிக்கொள்.
இனி என்ன செய்வதென்று என்னைக் கேளாதே.
திருப்பு உன் முகத்தை; கண்டாயா, கதவும் தெருவும்?
முதுகு குறுக்கிப் போ; மெல்ல முனகாதே உனக்குள்.
வெளிப் பார்ப்பாய்: - விரிந்திருக்கும் விண்;
நட நெடுக்கே; தந்திக்கம்பம் கண்டால் தரி கணம்.
கால் தூக்கிச் சர் என்றடி சலம்; பட்டமரம் ஒன்றுதான்
சுனைப்பட்டுத் திரும்பச் சுர்ரென்று பேசாதென்றறி.
சிறுபிள்ளைத்தமிழ் சொன்னால்,
உன் பருத்த தலைக்குள்ளும் முளை
சுரக்கும் என்றாயா, சொன்னேன்.
புரிந்ததுக்குப் பெருநன்றி.
இனி, உன்னித் திரும்பாதே;
ஓயாமல் நிழல் தொடர நட;
இன்னும் இருக்குமாம் வழி
எண்ணில்லாத் தந்திமரம்.
அடுத்த முறை சக மனுஷனாய் வா;
அமர்ந்திருந்து கதைப்போம் ஆறி.
'05 மார்ச் 15, 18:33 கிநிநே.
~~~~~
தளையுறாததும் தலைப்புறாததும் X
ஒவ்வொரு குள்ள வௌவால் மனிதனுக்கும்
வழிசொல்லிப்போகிற நவகாலம்
கௌவிக்கொண்ட தென் காலை.
நகராது நிலம். நசிக்கும் பாதம்.
அவி இணையச் சந்தெங்கிருந்தும்
வெப்பேற்றி விரிந்தலையும் வெறி அந்து,
யானை நினைவும் நாகக்கண்ணும்
தேளின் கொடுக்கும் நண்டின் நடையுமென.
கேள்வி கன நுங்குக்குலையாக்கிச்
சீவிச் சீவிக் கொட்டு மென் சிறுதலை.
தோல் அரித்து அரிந்து உரித்துக்
கொடுக்கச் நொடிப்பி கழியத் தின்று
வீசும் திரள்குலைக் கேள்வித்தொடர்.
அலை விந்துவால் வினாக்கெல்லாம்
விடை சொல்லிக் கழியுமென் விநாடி.
june 5, 2004
~~~~~
சமீபத்திற் படுத்தியவை
விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.
விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.
விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.
எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.
விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.
~19 May 2004 Wed. 21:06 CST
~~~~~
வளர்ச்சி
முடிந்த கொண்டைக்குள் ஊரும் ஈராக, கிழமைக்கு
கழியும் அஞ்சலுக்குள் ஒன்றேனும் கண்டன அஞ்சல்.
முறைப்பாட்டுக்கடிதங்கள் மட்டும் முன்பல் முளைத்துத்
தாளிற் தழைக்கின்ற காலமாம் இது.
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்றான
கண்டனம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்துப் புடைத்த கைபேரிலொன்று.
இலக்கியம் பேரில் ஏதோமடத்தாரை எழுத்தடித்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் எழுந்த மடத்தாரை எடுத்தடித்தவர் பேரிலொன்று
இலக்கியம் பேரில் மடத்தார் எதிர்த்ததை இழுத்துப் பகைத்தார் பேரில்
தடித்தவர் அடித்தவர் அவரைப் படித்தவர் விறைத்தததின் பேரிலொன்று.
எண்ணொணாக் கவலை என்னோடு இருந்தாலும்
இலக்கியக்கவலையன்று இறந்தது காண் இன்று.
வருந்தமிழ் எப்படி வரண்டாலும், பரம்பும் பார், பையப் பைய
கடித இலக்கியச்சுரையேனும் தமிழ்க் காய்ந்து.
~10, ஜூலை '03 02:30 மநிநே.
~~~~~
மதிப்பீட்டைக் கேட்டுப்பெறுதல் பற்றிய மதிப்பீடு
எதையும் தவறாகச் சொன்னதாய் ஞாபகமில்லை;
"மாடுதான் என்றாலும் நான் வண்டில் மாடில்லை"
என்று மட்டும் மேய்வழியிற் சொன்னதாய்,
சின்ன நிழலாட்டம் உள்ளே.
நிரைக்களத்தில் வயல்மாட்டைப் பற்றி
வரி பத்துச் சொல்லக் கேட்டார் போலும்;
"மாடுகள் பற்றிய என் மதிப்பீடுகள்,
திரைப்பட விளம்பரங்கள் அல்ல
காணும் தெருமூலைக்கெங்கும்
சாறி, சாணிச்சுதை சேர்க்க"
என்றிருப்பேனாக்கும்; வேறில்லை.
இதிற்கூட, கேட்டவர் மூலத்தில்
ஆழக் கெளுத்தி செருகியதாய்
எனக்கேதும் தோற்றமில்லை.
உன்னைப்போல், அவனைப்போல்
நானும் உணர்கொம்புள்ள மாடுதான்.
விலகிப்போகாது வேண்டுமென்றிடித்தால்
வேறென்ன செய்ய?
முட்டிய தெருவில், முதுகில், முனை
இலேசாய் இடறக் குத்துதல் தவிர
வேறேதும் புரியவில்லை; வேறேதும் தெரியவில்லை.
இனியாவது தெரிந்துகொள்; உன்னைப்போல்
இவ்வூரில் எந்தத் தெரு மாட்டுக்கும்
உண்டு ஏதேனும் உட்கருத்து.
ஆனாலும், மாட்டுக்கு மாடு
வால் தூக்கி மாறாது மூத்திரமணம்.
01, ஜனவரி 2003, புதன் 23:35
~~~~~
வழுப்படு தலைப்பிலி - VI
காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.
காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?
அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.
"திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே"
-திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.
திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து.....
"நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??"
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.
30, ஒக்ரோபர், '01 23:59 மநிநே
~~~~~
கிளிப்போர்வீரன்
காலைத்தூக்கத்தின் கடைசியிலே
தனிக்கிளிப்போர்வீரன் கழிசுற்றி
வழிபோகக் கண்டேன் நான்;
அகல விழி கொண்டேன் பின் விரைந்து.
மெல்லாமலே மிரட்டுஞ்சொற்களை,
கூவித்தின்றும் கூட்டித்துப்பியும்
குறுக்கும் நெடுக்கும்
கொண்டுபோனான்;
கொட்டிக் கொட்டிக்
குதறிக்கொண்டும்கூட.
தனக்கு வெந்ததையே மீளமீள வெக்கைப்படுத்திப்போனான்;
சொல் மாளச் சொல் மாள, பையெடுத்துச்
சொன்னதையே வன்கதியிற் சுற்றிப்போனான்.
இல்லாத கேள்விகளுக்கும் இந்தா பதிலென்று
எடுத்தெறிந்தான் இங்குமங்கும்.
எதற்கு இதுவென்றால், அதற்குமோர்
அந்தரத்தே தான் தங்கும் அசிங்கப்பதில் தந்தான்.
வந்ததுவும் போனதும் தன்னடைக்கே தெளிவு என்றான்;
என்னதுவும் உன்னதுவும் எல்லாமே பொய்யென்றான்.
கண்ணைத் திறந்தால் கூர்க்காற்கைகொண்டு பொத்தினான்;
நான் நிலவைக் காணத்தானே தான்
கண்ணைக் கொண்டு பறத்தலென்றான்.
தத்தித்திரிந்தான் முன்னுக்கும் பின்னுக்கும்;
முடுக்கத்தில் முக்கிக் கழித்தான் சொட்டெச்சம்;
முரமுரவென்று மூக்குள் மூச்சோடு முனகினான்.
எந்த வினைக்கும் எதிர்ப்பட்டாரைக் குறை சொன்னான்;
தன் வினைக்கு முன்வினையைத் தானே முன்வைத்தான்.
கழுத்தைச் சுழித்தான்; சரித்தான்; வட்டக்கண்ணைப் படபடத்தான்;
அடர்ந்த அலகைமட்டும் அவதியிலே கொறிக்க வைத்தான்.
இறக்கை தறித்த கிளிப்போர்வீரன் தத்தலுக்கு,
ஏட்டுச்சுவடியினை இழுத்துக் கதை சொல்வதற்கு,
என்னத்தைப் பதிலாக இங்கே எழுதிவைக்க?
"அவதி அலகை மூடிக்கொள்; அறுந்த சிறகை முளைக்கச்சொல்;
விரைந்து பறக்கக்கல்; வெளியை மிதிக்கச்செல்.
கொறித்துக் கொறித்துக் குறை கொட்டித் திரிதலுக்கு,
கொவ்வை ஒன்றை ஒழுங்காய் எடுத்துருட்டி,
உண்டலகு மென்று தின்று மூடிக்கொள் நா"
என்றால் கேட்குமா இறகறுந்த அலகுக்கிளி?
தனிக்கிளிப்போர்வீரனின் போர்வையெல்லாம்
கேட்டலும் கிழித்தலும் பிதற்றலும் பீய்ச்சலுந்தான்.
"கழிசுழற்றும் கிளியெல்லாம்
கிண்ணிக்களி கண்டால்,
தண்ணீர்சுனை கண்டால்
என்ன செய்யும்?
என்னைப்போல்,
தின்னுமா, குளிக்குமா,
தினவெடுத்துத் திரியுமா?
என்ன சொல்வாய்?"
என்று கேட்டேன்.
பதிலொன்றும் சொல்லாமல்
காலைத்தூக்கத்தின் தனிக்கிளிப்போர்வீரன்
கழிசுற்றி கடந்துவழிபோகக் கண்டேன் நான்;
அசரும் விழி மூடிக்கொண்டேன்.
மோனத்தில் என்னைமட்டும்
மோகித்து மொத்தமாயொரு
வட்ட முடிச்சிட்டிருந்தேன்
மிச்சவிடிநேரத்துக்கு.
'01, ஜூன் 22, வெள்ளி 20:05 மநிநே.
~~~~~
அம்பறாத்தூணியுடன் அலைதல்
வாழ்க்கைக்கு
வேட்டுவப்பிழைப்பில்லையென்றாலும்,
அங்குமிங்கும் அம்பறாத்தூணியுடன்
அலைந்துகொண்டிருத்தல்
ஆகவேண்டியதாயிற்று.
கீச்சிட்ட குருவிகள் எக்கிக்
கக்கிப் பீச்சிட்ட துளியெச்சம்.
உள்ளங்காற்சருகுக்குள்
அருகுதடவி நகரும் அவதிச்சாரை.
சுண்டுவிரற்றுண்டு வெண்தேங்காய்ச்சொட்டுக்குக்
கிளை தொங்கித் தலைதாக்கும் இளமந்தி.
கடக்குமொரு பாட்டையின் உதைத்து நகரும் ஓயாப்புரவி.
குறியிட்ட பார்வைச் சுனைத்தலை மட்டும்
விரித்த பின்முதுகே ஒளிர்த்து முனைப்படுத்தி
ஒளிந்துலவும் மரத்தறை இருள் நிழல்.
இவற்றிடையே கால்மிதி வசப்படும்
சச்சரவுக்குறி சொல்
நாத்தடித்த பல்லியிரண்டைப்
பல்குத்திச்சிராயுச்சிப் புட்டு நடந்தாலும்
வெற்றுவெருட்டலுக்கேனும்,
வீண்வேடிக்கையாய்
அம்பறாத்தூணியுடன்
அலைந்தாகவேண்டியதாயிற்று.
June 07, 2001 Thurs 4:54 CST
~~~~~
இவை பற்றி ஏழு கருத்துகள்
1. இவை பற்றி ஏழு கருத்துகள் எனக்குண்டு.
2. இவை பற்றி ஏழு கருத்துகள் உனக்குண்டு.
3. இவை பற்றிச் சொல்லாத கருத்திரண்டும் இவற்றுள் அடக்கம்.
4. இவை பற்றி ஒளிந்து, இன்னும் கிடைக்கலாம் கருத்திரண்டு.
5. என் ஏழு கருத்துகளும் என் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
6. உன் ஏழு கருத்துகளும் உன் சொந்தக்கருத்துகள் என்பதற்கில்லை.
7. எதைப் பற்றியும் ஏழு கருத்துகள் எவர்க்குமுண்டு
- சொல்லாத இரண்டு, ஒளியும் இரண்டு, சொந்தமில்லாதவை என்றும் உள்ளடங்க, அடங்காதிருக்க.
'07 ஏப்ரல் 27, வெள்ளி 13:40 கிநிநே
=====
No comments:
Post a Comment