

பல்கலைக்கழகப்படிப்பினை முடித்ததைத் தொடரும் காலப்பகுதியிலே இன்னமும் கூடும் சூடும் கலைந்துபோகாத நண்பர்களிடையே பொஸ்ரனின் புறநகர்ப்பகுதியிலே ஒரு கோடைகாலத்திலே நிகழும் உறவுகளைப் பற்றிய படம்; மார்னி (கேற் இடொலன்மெயர்) என்ற பெண்ணைச் சுற்றிக் கதைக்கொடி படர்கிறது. சற்றே போதையேறிய நிலையிலே பச்சைகுத்துகின்றவரிடம் வந்து "பச்சை ஒன்று குத்திக்கொள்ளவா? விடவா?" என்று தொடங்குவதிலேயே தன்னைக் குறித்தும் தன் தேவை எதிர்பார்ப்பைக் குறிக்கும் திட்டமான முடிவுகளுக்கு வரமுடியாத, இலக்கின்றிச் தற்காலிகத்தொழில்களிலே மாறிக்கொண்டிருக்கும் ஓர் இருபத்திநான்குவயதுப்பெண்; நாளும் இரவு ஒன்றுகூடல்களும் சந்திப்புகளும் என்று பல்கலைகழக எச்சம் தெரிய வாழும் அவளின் நண்பர்கள் - ஒரு காதலிணை, சில உதிரி நண்பர்கள், மார்னிக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும், ஆனால், தற்போதுதான் தன் பெண்நண்பருடன் உறவில் விரிசல் கண்டிருக்கும் அலெக்ஸ் (கிறிஸ்டியன் இரட்டர்). தான் எவரையும் கவரும் தன்மை கொண்டவளில்லை எனும் சொந்தக் கருத்தோடு இருக்கும் மார்னி, இரேச்சலிடம் அலெக்ஸ் பற்றிய தன் ஈர்ப்பினைச் சிந்திவிட, அது இரேச்சலின் இணையூடாக. அலெக்ஸின் சகோதரிக்கும் அலெக்ஸுக்கும் வந்து சேருகின்றது. அலெக்ஸ், "உன்னிலே எனக்குக் காதல் இல்லை; ஆனால், எம்மைப் பற்றிப் பின்னர் பேசுவோம்" என்ற குழப்பம் தருவதும் அவமானத்தினையும் கழிவிரக்கத்தினையும் ஏற்படுத்துவதுமான தொலைபேசி உரையாடலை மார்னியிடம் நிகழ்த்துகிறான். மார்னி பதிலுக்கு, அலெக்ஸின் சகோதரியிடம் முதல்நாள் சற்றே போதையிலே அலெக்ஸ் மீதான தனது ஈர்ப்பினைப் பற்றிய கருத்தை, "அப்படியாகத் நான் சொல்லவில்லை, நீ தவறாகப் புரிந்து கொண்டாய்" என்பதாகச் சமாளிப்பதன்மூலம் தன் கௌரவத்தினைக் காப்பாற்ற முயற்சிக்கின்றாள். மறுநாள், இரவுக்கேளிக்கை ஒன்றுகூடலிலே இன்னொரு நண்பன் முத்தமிட்டுவிட்டு, "நீ பொருத்தமில்லை" என்று மறைமுகமாகச் சுட்டி விலகிச் செல்லும் அவமானப்படுத்தலைத் தொடர்ந்து, இவள் சற்றே பொறாமையுடன் பார்க்கும் காதலிணையின் காதலன்கூட, இவளை இரேச்சலுக்குத் தெரியாமல் முத்தமிடுகிறான்.
புதியவேலையிலே - வரவேற்பாளர் + செயலாளர் - சேர்கின்றாள்; அவளைப் போன்ற அதே வேலையிலே அங்கே ஏற்கனவே இருப்பவன், மிகவும் சமூக ஊடாட்டம் இல்லாதவனும் கோணங்கித்தனமான செய்கைகள் புரிகிறவனாகத் தோன்றுகிற மிட்செல் (அன்ரூ புஜல்ஸ்கி). எரிச்சல் மூளுமளவுக்கு - ஆனால், முரண்நகையாக ஓரளவுக்கு அவளுக்குத் தன்னைப் பற்றிய நம்பிக்கையைத் தருமளவுக்கு - அவளைக் கேள்விகள்மூலமும் தன் வளைந்து குழையும் நடத்தைகள்மூலமும் தொந்தரவு செய்கிறான்; அவள் எரிச்சல் மூண்டு வெளியே தெரிகையிலே, "மன்னிக்கவேண்டும்; நான் அப்படியாகக் கேட்டிருக்கக்கூடாது; உன் சுதந்திரத்திலும் சொந்த விடயங்களிலும் நான் கேள்வி கேட்டது தவறு" எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறான். இதனிடையே அலெக்ஸ், மார்னியுடன் ஈர்ப்பு நிறைந்தவனாகக் காட்டிக்கொள்கிறான். தனது உறவினரான பேராசிரியரிடம் பரிந்துரை செய்து மார்னிக்கு அவரிடம் தற்காலிகமாக ஆய்வுதவுனர் வேலை கிடைக்கும்படி செய்கிறான். அவள் வேலைக்குச் சேரும் அன்று, அலெக்ஸ் தனது முன்னாள் காதலியைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்து உடைந்துபோகிறாள். தொடர்ந்து வளைந்து குழைந்து தொல்லை தரும் மிட்செலின் மேலோட்டமான கோணங்கித்தனத்தின்கீழே இருக்கும் பொறாமை, போதாமை இவற்றோடு சகித்துக்கொண்டு பழகவேண்டியுமிருக்கிறது. அலெக்ஸினையும் அவன் இணையினையும் இரேச்சலையும் அவள் இணையினையும் கடையிலே சந்திக்கிறாள்; இரவுகூடல்களுக்கு இனி வரமுடியாதென்பதைக் குறிப்பால் உணர்ந்துகிறாள். அலெக்ஸும் இரேச்சலின் துணையும் சங்கடப்படுகின்றனர். சில நாட்களின்பின் அலெக்ஸ் மீண்டும் இவளிடம் வருகிறான். புல்வெளியிலே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, "இதோ பார் அலெக்ஸ் நல்ல மதியம்; நல்ல காலநிலை; நல்ல உணவு; இதையேன் குழப்பிக்கொள்ளவேண்டும்" என்கிறாள். இதைக்கூட அவள் ஏனோ என எதேச்சையாத்தான் தீர்மானமின்றிச் சொல்கிறதுபோலத் தோன்றினாலுங்கூட, படத்திலேயே இதுதான் அவள் ஏதோ தீர்க்கமாகச் சொன்ன முடிவாகத் தோன்றுகிறது.

தடுமாறும் மிட்சலாக நடித்த இயக்குனர் புஜல்ஸ்கி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் படத்துறையிலிருந்து பட்டம் பெற்ற காலகட்டத்தைத் தொடர்ந்து இயக்கிய இப்படம், கேம்பிரிட்ஜின் பின்புலத்தையும் பல்கலைக்கழகவாழ்க்கையின் பகைப்புலத்தையும் கொண்டிருப்பது, இயல்பே. மார்னியாக நடித்த கேற், சாயலிலே ஒப்பனையில்லாத நமது அந்தக்கால ஈர்ப்பு, Phoebe Cates இனை ஞாபகப்படுத்தியதும் படம் பிடித்துக்கொண்டதற்கு மறைமுகமான காரணமோ தெரியவில்லை. :-)
பொறியியல்பயிலுனர் வேலையிலே தொங்கிக்கொண்டிருந்த கட்டத்துக்குப் பின் பல்கலைக்கழகம் திறந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னால், அந்தப்பிரிவுக்கு, தொடர்ந்தும் இணைந்திருந்த நண்பர்களைக் காணச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட பெண் மணம் செய்து சொந்த ஊருக்கு மாறிப் போய்விட்டிருந்தார் என்றார்கள். சொந்த நகமே எதேச்சையாகக் கீறிவிட்டதுபோல, சில மணிநேரங்களுக்கு மெல்லிய எரிச்சலும் வரியும் கிழிந்து கலந்த உணர்விருந்தது. ஆனால், இடையேயான நான்காண்டு காலத்திலே, அவரின் ஞாபகம் ஒரு முறையேனும் தோன்றியிருந்ததா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டும்; ஈர்ப்பு, மழைக்காலக்குட்டையின் தவளைப்பேத்தைகள் போல, இலையிலிருந்து தரை, தரையிருந்து நீர்நிலை என உளமிழுத்த இழுப்புக்கும் சந்தர்ப்பத்திற்குமேற்ப எகிறிக்கொண்டிருந்ததைமட்டும் நிச்சயமாகச் சொல்வேன். பல்கலைக்கழகவாழ்க்கையின் எச்சம் காய்ந்தலர்ந்து காற்றான சில ஆண்டுகளின்பின்னால், மார்னி என்ன உணர்ந்திருக்கக்கூடும் என எனக்கு ஓரளவுக்கு உணரக்கூடியதாகவிருக்கின்றது. சாரமாக, பதின்மப்பருவத்துக்கும் வாழ்க்கைத்தேர்வினை, தொழில், இணையளவிலே குறிப்படுத்தாதவரைக்குமான ஊசலாட்டக்காலமே அது. இந்த ஊஞ்சலிலே அவரவர் உந்தலுக்கேற்ப ஆடிக் குதித்தே எல்லோரும் அடுத்த கட்டத்துக்கு வருகிறோமோ?
மொழி: ஆங்கிலம்
நாடு: ஐக்கிய அமெரிக்க நாடுகள்
ஓடுநேரம்: 89 நிமிடங்கள்
இயக்கம்: அன்ரூ புஜல்ஸ்கி (Andrew Bujalski)
நடிகர்கள்: கேற் இடொலன்மெயர், கிறிஸ்டியன் இரட்டர், அன்ரூ புஜல்ஸ்கி
'06, ஜனவரி 17 புதன் 12:15 கிநிநே.
6 comments:
சாரமாக, பதின்மப்பருவத்துக்கும் வாழ்க்கைத்தேர்வினை, தொழில், இணையளவிலே குறிப்படுத்தாதவரைக்குமான ஊசலாட்டக்காலமே அது. இந்த ஊஞ்சலிலே அவரவர் உந்தலுக்கேற்ப ஆடிக் குதித்தே எல்லோரும் அடுத்த கட்டத்துக்கு வருகிறோமோ?
>>>>>
Absolutely.
இணையளவிலே
>>>
No comments on this though :)
இருந்த ஊரின்கதை என்றவுடன் கூடப்பாசம் ஆக்கும் :-).
....
கதையைப் பார்க்கும்போது நான் கடந்துவந்த பாதையையும்தான் நினைவுபடுத்துகிறது. இன்னும் ஊஞ்சலாட்டம் முடியவில்லை என்றபடியால் இப்போதைக்கு மெளனம்.
ஹ்ம்ம்ம்ம்ம்.....
இன்னிக்கு புத்தகக்காட்சிக்கு போய்விட்டு வந்தேன். அதிலே எனக்கு ஒண்ணு புரிஞ்சது. நீங்க சொல்றதுக்கு ஈடான விஷயம். என்ன பண்றதுங்க...life is like that only :-)
சரி, சரி :))
pari
on this, no comments on this side too ;-)
--
டிசே:
ஆடும்வரை ஆட்டம்; ஆயிரத்தில் நாட்டம். கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?
settle dAwn.
---
இகாரசு; இந்த வயதில்.. வாழ்க;உங்க தலவரே ஜிவாஜி ஆகலாம்; நீங்களேன் ஊஞ்சலாடக்கூடாது?
--
மலைநாடான்,
முதல்சரி சரிதான்; இரண்டாவதுதான் நக்கலாய்த் தெரியுது
;-))
---
மிக இளவயதில் அதாவது பள்ளிப்பருவத்தில் காதல் வயப்படாத எல்லோருமே(பெரும்பாலும்) நீங்கள் கூறியுள்ள அந்தர தருணங்களைக் கடந்துதானிருப்பார்கள். நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதே இராணுவச் சூழ்நிலையில் நானும் இருந்ததை நினைவுபடுத்தியது உங்கள் பதிவு. திரைப்படத்தை முடிந்தால் எடுத்துப் பார்க்கவேண்டும். நீங்கள் பயன்படுத்திய தமிழ்ப்பதங்களிற் சிலவற்றைக் கவனத்திற் குறித்துக்கொண்டேன்.
Post a Comment