
இந்திய இராணுவம் ஈழத்திலே பரவியிருந்த நேரம். இரண்டாம் ஆண்டாக, இறுதியாண்டுக்கல்வி படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழகமும் மூடியிருக்கின்றது. எதிர்காலம் பற்றி நிச்சயமாக வரையறுத்துத் திட்டம் போடமுடியாத நிலை. வரதராஜப்பெருமாளின் தலைமையிலான மாகாணசபை இயங்குவதை நிறுவிக்காட்டுவதற்காக, அதன் கீழே (வரவு)செலவுத்திட்டங்களின் வரைப்படி சின்னச்சின்னத்திணைக்களங்கள் நகருக்குள்ளேமட்டும் இயங்குகிறன; அவற்றிலொன்றிலே சில நண்பர்களுடன் பயிலுனனாகத் தொத்திக்கொள்கிறேன். வேலை என்று எதுவுமில்லை; நண்பர்களுடன் அரசியல் பேசுவது; நூல்நிலையத்திலே எடுத்துச்சென்ற புதினங்களை வாசிப்பது; கதைகவிதைநாடகப்போட்டிகளுக்கு எழுதுவது (
எழுத்தால் உலகத்தை நெம்பலாமென்ற பொய்மை உள்ளே ஆழத்துளைத்து ஆணிவேரிட்டிருந்த நேரம்); இரு நண்பர்களின் காதலுக்குத் தூதுபோவது (
இரண்டுமே இறுதியிலே சரிப்படவில்லை); மாதக்கடைசியிலே கையொப்பமிட்டு வாங்கும் தொகையை, புதினம், பத்திரிகை, திரைப்படம், விழியக்கொட்டகையெனக் கரைப்பது. (
திசைக்கும் சற்றடே ரிவியூவிற்கும் செலவழித்ததையிட்டுத் திருப்தியிருக்கும் வேளையிலே, இன்றைக்கு துக்ளக்குக்கும் இந்தியா ருடேக்கும் கொடுத்த தொகை எரிச்சலேற்படுத்துகிறது); மீதி நேரத்திலே கட்டடவரைபடங்களைப் புரட்டிப் பரிமாணங்களைக் கணக்கெடுப்பது. உடன் பேச அறிந்த ஒரு நண்பர்; அவர் மேலே இருந்தது, அவர்தான் இருந்து தொடர்ச்சியாக நீண்ட நேரம் பேச வாய்ப்புக் கிடைத்த, பதிலுக்குச் சங்கடமின்றிப் பேசிய முதலாவது பெண்ணென்பதாலான ஈர்ப்பா, இருவரும் பேசிக்கொள்ளும் படைப்புலகம் குறித்த ஒட்டுதலா, அல்லது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையிலே அந்நிலையை மறந்து சில பொழுதிருப்பதற்கான கவனக்கோளாறா - இப்போது எண்ணிப்பார்க்கிறேன் - எல்லாமேதான் என்று தோன்றுகிறது. அவருக்கு அவ்வேளையிலே என்ன எண்ணம் இருந்ததெனத் தெரியாது. சொல்லப்போனால், தெரிவதிலும் பெரிய ஆர்வமிருந்திருக்கவில்லை- பதிலுக்கு அதே ஈர்ப்பு இல்லாமலிருக்கலாமென்ற பயம் உள்ளோடிக்கொண்டிருந்ததும் காரணமாகவிருக்கலாம்.
ஃபனி ஹா ஹா பட நாயகியும் என் நிலைக்கு எவ்விதத்திலும் மாற்றானவளில்லை.

பல்கலைக்கழகப்படிப்பினை முடித்ததைத் தொடரும் காலப்பகுதியிலே இன்னமும் கூடும் சூடும் கலைந்துபோகாத நண்பர்களிடையே பொஸ்ரனின் புறநகர்ப்பகுதியிலே ஒரு கோடைகாலத்திலே நிகழும் உறவுகளைப் பற்றிய படம்; மார்னி (கேற் இடொலன்மெயர்) என்ற பெண்ணைச் சுற்றிக் கதைக்கொடி படர்கிறது. சற்றே போதையேறிய நிலையிலே பச்சைகுத்துகின்றவரிடம் வந்து "பச்சை ஒன்று குத்திக்கொள்ளவா? விடவா?" என்று தொடங்குவதிலேயே தன்னைக் குறித்தும் தன் தேவை எதிர்பார்ப்பைக் குறிக்கும் திட்டமான முடிவுகளுக்கு வரமுடியாத, இலக்கின்றிச் தற்காலிகத்தொழில்களிலே மாறிக்கொண்டிருக்கும் ஓர் இருபத்திநான்குவயதுப்பெண்; நாளும் இரவு ஒன்றுகூடல்களும் சந்திப்புகளும் என்று பல்கலைகழக எச்சம் தெரிய வாழும் அவளின் நண்பர்கள் - ஒரு காதலிணை, சில உதிரி நண்பர்கள், மார்னிக்கு ஓர் ஈர்ப்பு இருக்கும், ஆனால், தற்போதுதான் தன் பெண்நண்பருடன் உறவில் விரிசல் கண்டிருக்கும் அலெக்ஸ் (கிறிஸ்டியன் இரட்டர்). தான் எவரையும் கவரும் தன்மை கொண்டவளில்லை எனும் சொந்தக் கருத்தோடு இருக்கும் மார்னி, இரேச்சலிடம் அலெக்ஸ் பற்றிய தன் ஈர்ப்பினைச் சிந்திவிட, அது இரேச்சலின் இணையூடாக. அலெக்ஸின் சகோதரிக்கும் அலெக்ஸுக்கும் வந்து சேருகின்றது. அலெக்ஸ், "உன்னிலே எனக்குக் காதல் இல்லை; ஆனால், எம்மைப் பற்றிப் பின்னர் பேசுவோம்" என்ற குழப்பம் தருவதும் அவமானத்தினையும் கழிவிரக்கத்தினையும் ஏற்படுத்துவதுமான தொலைபேசி உரையாடலை மார்னியிடம் நிகழ்த்துகிறான். மார்னி பதிலுக்கு, அலெக்ஸின் சகோதரியிடம் முதல்நாள் சற்றே போதையிலே அலெக்ஸ் மீதான தனது ஈர்ப்பினைப் பற்றிய கருத்தை, "அப்படியாகத் நான் சொல்லவில்லை, நீ தவறாகப் புரிந்து கொண்டாய்" என்பதாகச் சமாளிப்பதன்மூலம் தன் கௌரவத்தினைக் காப்பாற்ற முயற்சிக்கின்றாள். மறுநாள், இரவுக்கேளிக்கை ஒன்றுகூடலிலே இன்னொரு நண்பன் முத்தமிட்டுவிட்டு, "நீ பொருத்தமில்லை" என்று மறைமுகமாகச் சுட்டி விலகிச் செல்லும் அவமானப்படுத்தலைத் தொடர்ந்து, இவள் சற்றே பொறாமையுடன் பார்க்கும் காதலிணையின் காதலன்கூட, இவளை இரேச்சலுக்குத் தெரியாமல் முத்தமிடுகிறான்.
புதியவேலையிலே - வரவேற்பாளர் + செயலாளர் - சேர்கின்றாள்; அவளைப் போன்ற அதே வேலையிலே அங்கே ஏற்கனவே இருப்பவன், மிகவும் சமூக ஊடாட்டம் இல்லாதவனும் கோணங்கித்தனமான செய்கைகள் புரிகிறவனாகத் தோன்றுகிற மிட்செல் (அன்ரூ புஜல்ஸ்கி). எரிச்சல் மூளுமளவுக்கு - ஆனால், முரண்நகையாக ஓரளவுக்கு அவளுக்குத் தன்னைப் பற்றிய நம்பிக்கையைத் தருமளவுக்கு - அவளைக் கேள்விகள்மூலமும் தன் வளைந்து குழையும் நடத்தைகள்மூலமும் தொந்தரவு செய்கிறான்; அவள் எரிச்சல் மூண்டு வெளியே தெரிகையிலே, "மன்னிக்கவேண்டும்; நான் அப்படியாகக் கேட்டிருக்கக்கூடாது; உன் சுதந்திரத்திலும் சொந்த விடயங்களிலும் நான் கேள்வி கேட்டது தவறு" எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறான். இதனிடையே அலெக்ஸ், மார்னியுடன் ஈர்ப்பு நிறைந்தவனாகக் காட்டிக்கொள்கிறான். தனது உறவினரான பேராசிரியரிடம் பரிந்துரை செய்து மார்னிக்கு அவரிடம் தற்காலிகமாக ஆய்வுதவுனர் வேலை கிடைக்கும்படி செய்கிறான். அவள் வேலைக்குச் சேரும் அன்று, அலெக்ஸ் தனது முன்னாள் காதலியைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்து உடைந்துபோகிறாள். தொடர்ந்து வளைந்து குழைந்து தொல்லை தரும் மிட்செலின் மேலோட்டமான கோணங்கித்தனத்தின்கீழே இருக்கும் பொறாமை, போதாமை இவற்றோடு சகித்துக்கொண்டு பழகவேண்டியுமிருக்கிறது. அலெக்ஸினையும் அவன் இணையினையும் இரேச்சலையும் அவள் இணையினையும் கடையிலே சந்திக்கிறாள்; இரவுகூடல்களுக்கு இனி வரமுடியாதென்பதைக் குறிப்பால் உணர்ந்துகிறாள். அலெக்ஸும் இரேச்சலின் துணையும் சங்கடப்படுகின்றனர். சில நாட்களின்பின் அலெக்ஸ் மீண்டும் இவளிடம் வருகிறான். புல்வெளியிலே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, "இதோ பார் அலெக்ஸ் நல்ல மதியம்; நல்ல காலநிலை; நல்ல உணவு; இதையேன் குழப்பிக்கொள்ளவேண்டும்" என்கிறாள். இதைக்கூட அவள் ஏனோ என எதேச்சையாத்தான் தீர்மானமின்றிச் சொல்கிறதுபோலத் தோன்றினாலுங்கூட, படத்திலேயே இதுதான் அவள் ஏதோ தீர்க்கமாகச் சொன்ன முடிவாகத் தோன்றுகிறது.

இதன்படி பார்த்தால், படத்திலே கதையென ஏதுமில்லை. படம் எடுத்த விதம்கூட, ஒளிப்பதிவும் இயக்கமும் ஒரு தீர்க்கமின்றி கதையைத் தேடி அலைவதுபோலத்தான் இருக்கின்றது (படம் எடுக்க, தரமான திரைப்படக்கருவிகள் பயன்படாததும் காரணமாகவிருக்கலாம்). மிகவும் மெதுவாக, மார்னியைச் சுற்றி, ஒரு நிகழ்நிலைவிவரணப்படம் எடுத்ததுபோல (ஒருவிதத்திலே பரபரப்பான தனிப்பட்ட உறவுகளிலே மூக்கை நுழைக்கும்
cheaters போலவும் இன்னொரு விதத்திலே ஒரு சமூகத்திலே இளம்பெண்ணின் வாழ்க்கையைச் சுட்டும்
Shadya போலவும்), அவளின் வாழ்க்கையிலே ஊடுருவாததுபோல ஊருவிச் செல்கிறது. படம் முழுக்க நடிகர்களிலே தொழில்முறைநடிப்பும் பயிற்சியுமில்லாத தன்மை தெளிவாகத் தெரிகின்றது; அதுதான் இப்படத்துக்கே இயல்புத்தன்மையைத் தருகின்றது. கல்லூரி, பல்கலைக்கழகவாழ்க்கையினை ஹொலிவுட், கோலிவுட் நளினப்படுத்து ஒப்பனைகளும் உருப்படுத்தலும் இல்லாமல் பார்த்த படங்களிலே இதுவொன்று. (அலைகள் ஓய்வதில்லை, பன்னீர்புஷ்பங்கள் காலத்திலிருந்து இன்றுவரை கோலிவுட் படங்களும் Fast Times at Ridgemont High, The Breakfast Club போன்ற ஹொலிவுட் படங்களும்சரி பாடசாலை ஈர்ப்புகளைச் சரியாகக் காட்டியதில்லை. பல்கலைக்கழகம் கலந்த, கடந்த நட்பு சம்பந்தமான படங்களை மீள்சந்திப்புகளைச் சொல்லும் Peter's Friends, The Big Chill போன்றவையும் விட்டுப்போனகாலத்தினை நிரப்பி, முன்னர்-பின்னர் என ஏழு வித்தியாசங்கள் சுட்டும் படங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியாக, சிறிய காலகட்டத்திலே, கதையினை நம்பாமல், பாத்திரங்களின் இயல்புத்தன்மை வெளிப்பாட்டினை நம்பி வந்த படங்கள் எண்ணிக்கையிலே குறைவென்றே தோன்றுகிறன. இதில் நடித்த நடிகர்கள் வேறு படங்களிலே வேறு பாத்திரங்களிலே தொழில்முறையிலே வெற்றி பெறமுடியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவரவர் பாத்திரங்களுக்கு, குறிப்பாக, மார்னி, மிட்சல் பாத்திரங்களுக்கு, மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றார்கள். சொல்லப்போனால், இப்படத்துக்கு, அது முழுமையின்றி, குறைகள் நிறைந்திருப்பதைப் போன்ற உணர்வு பார்க்கும்போதெல்லாம் தோன்றுவதே, அதனை இயல்பானதாகக் காட்டி வெற்றியடையச் செய்கின்றதெனத் தோன்றுகிறது.
தடுமாறும் மிட்சலாக நடித்த இயக்குனர் புஜல்ஸ்கி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் படத்துறையிலிருந்து பட்டம் பெற்ற காலகட்டத்தைத் தொடர்ந்து இயக்கிய இப்படம், கேம்பிரிட்ஜின் பின்புலத்தையும் பல்கலைக்கழகவாழ்க்கையின் பகைப்புலத்தையும் கொண்டிருப்பது, இயல்பே. மார்னியாக நடித்த கேற், சாயலிலே ஒப்பனையில்லாத நமது அந்தக்கால ஈர்ப்பு, Phoebe Cates இனை ஞாபகப்படுத்தியதும் படம் பிடித்துக்கொண்டதற்கு மறைமுகமான காரணமோ தெரியவில்லை. :-)
பொறியியல்பயிலுனர் வேலையிலே தொங்கிக்கொண்டிருந்த கட்டத்துக்குப் பின் பல்கலைக்கழகம் திறந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னால், அந்தப்பிரிவுக்கு, தொடர்ந்தும் இணைந்திருந்த நண்பர்களைக் காணச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட பெண் மணம் செய்து சொந்த ஊருக்கு மாறிப் போய்விட்டிருந்தார் என்றார்கள். சொந்த நகமே எதேச்சையாகக் கீறிவிட்டதுபோல, சில மணிநேரங்களுக்கு மெல்லிய எரிச்சலும் வரியும் கிழிந்து கலந்த உணர்விருந்தது. ஆனால், இடையேயான நான்காண்டு காலத்திலே, அவரின் ஞாபகம் ஒரு முறையேனும் தோன்றியிருந்ததா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டும்; ஈர்ப்பு, மழைக்காலக்குட்டையின் தவளைப்பேத்தைகள் போல, இலையிலிருந்து தரை, தரையிருந்து நீர்நிலை என உளமிழுத்த இழுப்புக்கும் சந்தர்ப்பத்திற்குமேற்ப எகிறிக்கொண்டிருந்ததைமட்டும் நிச்சயமாகச் சொல்வேன். பல்கலைக்கழகவாழ்க்கையின் எச்சம் காய்ந்தலர்ந்து காற்றான சில ஆண்டுகளின்பின்னால், மார்னி என்ன உணர்ந்திருக்கக்கூடும் என எனக்கு ஓரளவுக்கு உணரக்கூடியதாகவிருக்கின்றது. சாரமாக, பதின்மப்பருவத்துக்கும் வாழ்க்கைத்தேர்வினை, தொழில், இணையளவிலே குறிப்படுத்தாதவரைக்குமான ஊசலாட்டக்காலமே அது. இந்த ஊஞ்சலிலே அவரவர் உந்தலுக்கேற்ப ஆடிக் குதித்தே எல்லோரும் அடுத்த கட்டத்துக்கு வருகிறோமோ?

மொழி: ஆங்கிலம்
நாடு: ஐக்கிய அமெரிக்க நாடுகள்
ஓடுநேரம்: 89 நிமிடங்கள்
இயக்கம்: அன்ரூ புஜல்ஸ்கி (Andrew Bujalski)
நடிகர்கள்: கேற் இடொலன்மெயர், கிறிஸ்டியன் இரட்டர், அன்ரூ புஜல்ஸ்கி'06, ஜனவரி 17 புதன் 12:15 கிநிநே.