Sunday, May 21, 2017

அரசியல் அலட்டல்

சும்மா இருக்கிறவங்களை பேஸ்புக் புலியாயாச்சும் பம்மாத்துக்கேனும் பிராண்டிக்காட்ட ஆக்காமல் விடாமலிருக்கமாட்டாங்கள் போலையிருக்கே! வரவர, இவங் கடை எழுத்துகளாலை பிரபாகரனும் புலியளும் செய்ததெல்லாமே சரியெண்டு விமர்சனமின்றி நம்பச்செய்தாலும் செய்துபோடுவாங்களோ எண்டு பயமாய்க் கிடக்கு.

சிறீ சபாரத்தினம், ராஜன் கூல் போன்ற போன, வாழும் சிறுதெய்வவழிபாடும் சிவரமணி, ராஜனி திரணகம போன்ற கண்ணகி குளிர்ச்சிகளும் பிரபாகர தெய்யோவின் எல்லைச்சாமி வழிபாட்டுக்கு எந்தளவு குறைந்ததென்று சொல்ல வருகின்றார்களோ தெரியவில்லை.

இந்துயா நடமாடும் நடராஜன் கால் முயலகனாய் இறக்கிவிட்ட சிவசேனா சச்சிதானந்தமும் இரட்சண்யசேனை ராஜன் கூலும் பொதுபலசேனவும் ஒரே கூழே! இதைக் கண்டுகொள்ளவும் தேர்ந்த அரசியல் கண்ணை மறைக்கிறது. நூஃமானை வெளியேற்றிய புலிகளைச் சரியாக இனம் கண்டு கண்டிக்கும் சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் நூஃமானின் புது முஸ்லீம் தேசிய அரசியலைச் சுட்டிக்காட்டுவதோ ஹிஸ்புல்லா, ரிஷாட் பதூர்தீன் ஓட்டமாவடி, மன்னார் தமிழ்க்குடியிருப்புகளை அமுக்கிக்கொள்வதை எதிர்ப்பதோ இனவாதத்தமிழ்த்தேசியமாகிறது; அதையும் மிஞ்சினால், பிரதேசவாதமாகிறது. இதையெல்லாம் முள்ளிவாய்க்காலிலே கொன்றதுக்கு வாசுதேவவுக்கு நன்றி சொன்ன யோக்கியரும் மஹிந்தவின் ஆலோசகர் பிள்ளையானுக்குப் மதியுரை பேராசிரியர்களாகவிருந்த அவரைவிடப் பரிசுத்தயோக்கியமான தம்பதியினரும் பேசுகின்றார்களாம். (இதுவரக்கும் பிள்ளையான் - கருணா பிணக்கிலே கொல்லப்பட்ட குமாரசாமி மாஸ்ரரின் மகன் நந்தகோபன் (ரகு) இன் கொலைக்கு யார் காரணம் என்று ஒரு கணக்கைத் தர இவர்களாலே முடியவில்லை). வாசுதேவவின் சகலை என்று வடக்கின் கொழும்பு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு அடிக்கின்றவர்களுக்கு நேரே வாசுதேவவின் காலிலே விழுந்து நன்றி சொல்ல மறப்பதில்லை.

அரசியலுக்கு அப்பால் வானதேவருக்கு இணையானவராக ஶ்ரீசபாரத்தினத்தினத்தைக் கொள்ளட்டாம் என்று இயக்கப்பழைய போட்டோகளையே எப்போதும் உப்போடு கொச்சிக்காய், வெங்காயம்போட்டுக் கிண்டிப்போடும் ப்ரின் நாத்தாரின் ஒரு போஸ்ற். நல்லது நளினி, அம்பிகா, ராதாவையே தேவதைகளாகக் கொண்டிருந்த வயதினர் நாம். இல்லையென்றா சொல்லப்போகிறோம்? ஆனால், புலிகள் டெலோவைத் தட்டமுன்னால், டெலோவின் தாசை மச்சான் கள்ளியங்காட்டுப்பொபிக்காகத் தட்டப் பச்சைவிளக்குக்காட்டியதும் தட்டினதுக்குக் கேள்வியைக் கந்தமடத்திலே கேட்ட சனத்திலே சுடச் சுட்டிக் காட்டினதும் எவ்வகையிலே அமரருள் உய்க்கும்? திருகோணமலையிலே இந்திய இராணுவத்தோடு கூடி காய்கறி விற்ற ஜயவீரா தம்பதியைப் போட்டுத்தள்ளியதுமான டெலோவிலேயிருந்து சிங்களமக்களைப் போட்டுத்தள்ளிய புலிகள் என்று வரும்போது, சுயவிமர்சனமும் வரவேண்டாமா?
ஓர் உபவேந்தர் பதவிக்குப் புலியெதிர்ப்பு முதல் டக்ளஸ் ஆதரவு, டக்ளஸ் எதிர்ப்பு-வரதர் ஆதரவு ("எண்பதிலே கொல்லப்பட்ட மூன்று முக்கியமானவர்கள், அமிர்தலிங்கம் ("அஹிம்சாவாதியின் பிள்ளைகள் அமைப்புக்காண காண்டீபன்,பகீரதன் ஆயுதம் வாங்கவில்லையா?") , ||பத்மநாபா||, ராஜீவ்"
- ஹூல் சாகேப், கலம்பு டெலிக்ராப்) அத்தனையும் தேவைப்படுகிறது ஒரு கூலுக்கு. அவருடைய யாழ் பல்கலைக்கழகத்திலே யார் என்ன சாதி பற்றிய கட்டுரைகள்கூட அவருடைய முப்பாட்டானின் முதற்பேரன் மாவிட்டபுரம் கந்தசாமிகோவில் மணியகாரர் என்ற கட்டியத்தோடுதான் எப்போதும் தொடங்குவது அவரின் சாதிமான் சாமானைக் காட்டாமல் வேறெதைக் காட்ட? அவர் காவியம்படைக்கும் சுகு கும்பல், இந்திய இராணுவம் வந்திருந்தபோது என்ன செய்தார்கள் என்பது பற்றி எங்கேனும் நேர்மையாகப் பேசியதுண்டா?
இன்னொரு மொழிபெயர்-மொழிநல்லிணக்க இலக்கியத்தோழர் கடைசியாகப் பேஸ்புக்கி லே கண்டபோது, சிறிசேனா மாத்தையாவுக்கு நல்லாட்சி, நல்லிலணக்கம் இவை செய்ய நூறு நாள் தந்தீர்களென்றால் என்று நல்லிலக்கணம் பயிற்றுவித்து மும்முரமாக அந்நியநாட்டிலே அசல் குடி-மகனாகவர்களிடங்கூடக் கேட்டுப் போனபின்னால், ஆயிரத்திருநூறுநாள் முடிந்து நேற்றைக்குத்தான் திரும்ப வந்திருக்கின்றார், சிவரமணி கொலை செய்யப்பட்டார் என்ற தலைப்பைப் பகிர. ஆனால், அவரும் அவரின் ஶ்ரீலங்கா தேசியத்தோழர்களும் பேஸ்புக்கிலே போராடிக் கொண்டுவந்த நூறுநாள் நல்லாட்சியிலே நன்னெய் என்ன விலை தேங்காய்நெய் என்ன விலை என்பது பற்றிக்கூடப் பேச அவருக்கும் நேரமில்லை.

சிவரமணி உளவழுத்தத்திலே தற்கொலை செய்துகொண்டதற்குப் புலிகள் கொலை செய்தார்கள் என்று நீட்டினால், டெலோ கம்பன் தூக்குப்போட்டுக்கொண்டதுக்கு ஆரப் பிடிப்பது?

கற்ற மேற்றட்டான படியால் சிவரமணி, ராஜனி என்று ஆளரவம் காட்டி ஆண்டாண்டுக்கு அடையாளம் தெரியாதவர்களும் ஆயுதம் தரியாதவர்களுமானவர்கள் கொத்தாய்க் கொல்லப்பட்டது பேசப்படாமலிருக்க, கவனம் சிதறடிக்கத் திவசம் கொண்டாடும் கூட்டத்துக்கு கோணேஸ்வரி, கிருஷாந்தி ஒன்றும் ஞாபகத்துக்கு வராதது எதேச்சையா? இஷ்டப்பட்ட இச்சையா? ராஜனியைத் தட்டினது புலிகள் என்ற குற்றத்தைச் சொல்லும் அத்தனை இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் விளக்குக்கம்பம் தொட்டு வெலிக்கந்தைக்காட்டினுள்ளே பலவந்தப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதுவரையிலுமான அத்தனை பெண்கள் பற்றியும் அவற்றை நிகழ்த்தியவர்கள் பற்றியும் பேசாமல் பிரதேசவாதமும் சென்னையிலே ஸ்ரீலங்கா தேசியகீதமும் பாடினால் இதைப் பிழைப்புவாதமென்றும் ஒத்தோட்டமென்றும் சொல்லாமல் என்ன சொல்வது? ராஜனி திரணகமவின் உயிர் போலில்லாது இப்பெண்களின் உயிரென்ன ஆமி மூச்சு அடித்த காத்துக்கு உதிர்ந்துவிழுந்த மயிரின்றி வேறென்ன? பிறகுமேன் பாசாங்கு?

தாம் சார்ந்திருக்கும்போது தெரியாததெல்லாம் சாரம் அவிழ்ந்தபின்னாலேதான் பத்தி எழுத்துக்கும் ஹரஹரன் முன்கதாவுக்குமாகச் சிலருக்குத் தெரிகிறது; வேறு சிலருக்கு அடுத்தவன் நகவிடுக்குகளுக்குள்ளே இருக்கும் துளியழுக்குத் தெரிந்தாலும் சொந்தக்கையின் கறையே தெரிவதில்லை.

விடுதலை பேரிலே அடுத்தார் கைகளிலே தவறேதும் தம்மிலின்றித் தலையை விட்ட எல்லோருமே தம் தலையை எடுத்தோரைக் குற்றம் சாட்டச் சிலம்பு தூக்கும் நீதி கொண்டோர். மீதிப்பேர் காட்டுவது வெறும் பம்மாத்து; அடுத்த புத்தக வெளியீட்டுக்கோ நாடகவிழாவுக்கோ திமுக லைக்குக்கோ திரைப்படநடிப்புக்கோ உற்றதுணையாக்கும் ஒற்றை வழிமட்டுமேதான்!

தகவல்களைச் சேகரித்துத் தரவாக்காமல், தரவுகளை உற்பத்தி செய்கின்றவர்கள் எப்பக்கமிருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றார்கள்.
எந்த இயக்கத்துக்கும் போகாமல் இழப்பின்றிப் பேச என்ன அருகதையிருக்கின்றதென்று கேட்டால், எந்த இயக்கத்துக்கும் போய் இழக்கவைக்காததாலே பேச அருகதையிருக்கென்று இப்போதே சொல்லிவிடுகிறேன்.
இதற்கும்போய், "நல்லிணக்க(ண)மாய் நாடு சுத்தமாகத்தான் கழிந்து போய்க்கொண்டு இருக்கிறது; வெளிநாட்டிலேயிருக்கின்றவன்தான் மாசு நல்லெண்ணக்கிணத்திலே கலக்கிறான்" என்று தமிழிலே நீள எழுதி, ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பாசத்தோழர்களையோ தோழிகளையோ கொண்டு மொழிபெயர்த்துப்போட்டுவிடாதே, அன்பே! அதற்கும், வெளிநாட்டிலிருந்துதான் உன் ஆசும் மாசு மறுவுமற்ற அழகிகளை நேசிக்கும் பெருந்தோழர்கள் லைக்கைப் போட்டு வைப்பார்கள் என்னருமை ராட்ஷசியே!

No comments: