Wednesday, January 07, 2015

அணித்தொகை

இரண்டு அணிகளும் ஒன்றேதான் ஒன்றில்லை என்பதல்ல தமிழ்ப்பேசும் மக்களுக்கு இருக்கவேண்டிய வாதம்; இரண்டு அணிகளுக்கிடையேயான போட்டியினை எவ்விதம் தமிழ்ப்பேசும் மக்கள் பயன்படுத்தி, தமக்கான முன் நிபந்தனைகளை இடலாம் என்பதும் அதனை எப்படியாகச் செயற்படுத்தலாம் என்பதுமே விவாதக்கப்படவேண்டியவை.

ஆனால், தெரிந்த பேய்க்கு வாக்களியுங்கள்/ தெரியாத பிசாசுக்கு வாக்களியுங்கள் என்று வாதாடுகின்றவர்கள் எல்லோரும் இப்படியாக, இவ்வணிகளோடு இருந்து வாதாடி, தமிழ்ப்பேசும் மக்களின் கருத்துகளை அவ்வணிகளும் செவிமடுத்து, மேலும் சிங்களமக்களிடமும் இச்சந்தர்ப்பத்திலே சொல்லவைக்கவேண்டும் ("சொல்லவைத்திருக்கவேண்டும்" என்பதுதான் சரி).

ஆனால், அப்படியாகச் செய்யாமல், "பழம்பேய் நல்லாக இனி நடக்கும்" / "புதுப்பிசாசு நல்லாக நடக்கும்" என்று ஆதாரமேயின்றி, "அடுத்ததுக்கு இது பெரிதாகக் கெடுக்காது" என்ற வகையிலே வாக்கிடச் சொல்வதுதான் பிரச்சனை.

தெரியாமலேதான் கேட்கிறேன்; இப்படியாக நம்பிப்போடு என்று சொல்லும் ஆட்களின் /தமிழ்ப்பேசும் மக்களின் கருத்துகள் எதுவேனும் சிங்களக்குமுகாயத்திடம் இந்நேரத்திலே எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றதா?

 பௌத்தசிங்களமக்களுக்கும் மற்றைய சிறுபான்மையினருக்கும் இருக்கும் பிரச்சனைகள் அனைத்துமே பொதுவானவையும் ஒன்றானவையுமே என்ற அடிப்படையிலே நாம் ஆரம்பிப்பதே பொய்யானதும் நம்மையும் பிறரையும் நாம் ஏமாற்றுவதுமாகும்.

சிங்களக்குமுகாயத்துக்கு, தமிழ்ப்பேசும்மக்களிடையே இருக்கும் சிங்களமக்களுக்கு இல்லாத மேலதிக வாழ்நிலைச்சிக்கல்கள், சிங்களக்குமுகாயத்தினாலே,அஃது அமைத்திருக்கும் இராணுவத்தாலே, சங்கத்தாலே ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் இத்தேர்தலிலே தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றதா?

அவ்வாறு இல்லாத நிலையிலே வெறுமனே வாக்குவங்கிகளாக மட்டுமே தமிழ்மக்கள் -மூக்குச்சாத்திரம் சனிமாற்றத்தினை நம்பி- பயன்படுத்தப்படுவதாலே தேர்தல் முடிய என்னத்தினைப் பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தினை "இரு அணிகளும் வேறு|வேறல்ல" என்ற வாதம் தரப்போகின்றது?

இரு அணிகளிலிருந்தும் என்றில்லை, வேறெந்த அணியென்றாலும் சரி, வாக்களிப்பது என்பது "எமது நிலைகளையும் புரிந்துகொள்ளுங்கள்; இவைதாம் எம்முன்நிபந்தனைகள்; எமக்கான சேர்ந்து செயலாற்றும் செயற்றிட்டங்கள்" என்று அவ்வணியிடம் தெளிவுபடுத்தியபின்னாலே, அவர்களும் அவற்றைப் பற்றி வெளிப்படையாகச் சிங்களமேடைகளிலும் வெளிப்படுத்திய பின்னாலே, வரவேண்டியது; வெறுமனே, "இரு அணிகளும் வேறு | வேறல்ல" என்பதாலே அல்ல.

(இதனை வெளிநாட்டிலிருந்து அவதானிக்கும் பார்வையாளனாகவே கூறுகின்றேனேயொழிய, "இதுதான் உங்களுக்கான தீர்ப்பு" என்று அத்தீவிலே வாழ்கின்றவர்களுக்குக் "கட்டளை" இடுகின்ற. "அறிவுரை" கூறுகின்ற ஆளாக அல்ல; அவர்களுக்கானதைத் தீர்மானித்துக் கொள்ளவேண்டியவர்கள் அவர்களே!)

 
======================================================================
 இலங்கையின் அதிபர் குறித்த தேர்தலிலே இலங்கையிலிருக்கும் கட்சிகளும் தலைவர்களும் மக்களும் என்ன செய்யவேண்டும் என்று பக்கம் பக்கமாக, சிற்றாட்கூட்டம் கூட்டமாக, முகப்புத்தக முற்றம் முற்றமாக ஆலோசனைக்குறிப்புகளும் கட்டளைத்தீர்மானங்களும் எழுதிக்கொண்டிருக்கும் வட அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்ரேலிய சீமான்களையும் சீமாட்டிகளையும் யாரென்று பார்த்தால், இலங்கையிலே தமிழர் (இவ்விடத்தே தமிழ்ப்பேசும் மக்கள் என்று குறிப்பிடவில்லையென்று காண்க) கொல்லப்படுகின்றார்களே, பாதிக்கப்படுகின்றார்களே என்று வட அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, தமிழக நகர்களிலே பதாகைகளுடன் ஊர்வலம் போனவர்களை ஏளனம் செய்தும் கண்டித்தும், இலங்கை மக்கள் குறித்து இலங்கை மக்களே தீர்மானிக்கவிடுங்கள்" என்று பக்கம் பக்கமாக, சிற்றாட்கூட்டம் கூட்டமாக, முகப்புத்தக முற்றம் முற்றமாக ஆத்திரக்குறிப்புகளும் கண்டனத்தீர்மானங்களும் எழுதிக்கொண்டிருந்த வட அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்ரேலிய சீமான்களும் சீமாட்டிகளுமாக இருக்க நாம் காண்பது, நமக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை.

எந்த இயக்கத்தில், ஏழுபேர் அமைப்பில் இருந்தாலும் 'நாமே அழகுராணிகள், சுல்தான்கள், இளவரசர்கள்' என்ற உளப்பாங்கிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து அறிக்கைவிட்ட சீமைத்தனம் எக்கரைச்சீமையானாலும் மாறுமா என்ன?

எங்கடை தங்கச்சி தொங்கட்டான் மட்டுமேதான் துலைஞ்சுபோச்சு! கண்டியளோ?

No comments: