Friday, January 30, 2015

அன்னாருக்கு வாக்கிடுவதால் தமிழர் தாயகத்தின் தலைவிதி மாறுகிறதுஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஞாபகம்; ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் – தமிழகப் பெருங்கட்சி ஒன்றின் ஆதரவாளர்- “சுப்பர் சிங்கர்” பாடற்போட்டியிலே ஈழத்தமிழ்வழி வந்த மேற்குநாடொன்றின் பாடகரை ஆதரிக்கும்படி கேட்டிருந்தார். “எதற்காக ஆதரிக்கவேண்டும்?” என்று கேட்டபோது, “எத்தனையோ இன்னல்கள் பட்ட ஈழத்தமிழினத்திலிருந்து வந்த நம் சகோதரியை நாம் ஆதரிக்க வேண்டியது அவசியமில்லையா?” என்று எழுதினார்; “எப்படியாக இப்படியொரு கேள்வியை – புலம்பெயர் ஈழத்தமிழனாக இருந்துகொண்டே கேட்கலாம்!” என்ற வியப்பும் ஏமாற்றமுங்கூட அவருக்கு இருந்திருக்கலாம். “இது சிறந்த பாடகரைத் தேர்வதற்கான போட்டியேயன்றி, அதிக இன்னற்பட்டவர் யாரென்பதற்கல்லவே! இங்குச் சிறப்பான குரல்வளமும் பாடற்றிறமையும் கொண்டவர் யார் என்பதைத் தேர்வதற்குதானே! அதனாலே, எத்துணை சிறப்பாக வளமான குரலிலே பாடுகின்றார் என்பதை வைத்தே சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்” என்று எழுதினேன். (அதே நண்பர், சென்ற ஆண்டு, நாம் தமிழர் கட்சிக்கும் அவர் கட்சிக்கும் ஏற்பட்ட பிரச்சனையிலே அவர் கட்சித்தலைவர், தளபதியைக் காக்க ஈழத்தமிழரை வாங்கோ வாங்கென்று வாங்கி, மாற்றுக்கருத்துகளைச் சொன்னவர்களைத் தன் ஃபேஸ்புக் பக்கமே வராவண்ணம் தடை செய்தார் என்பது உதிரிச்செய்தி ;-) )

நான் சுப்பர் சிங்கர் அல்லது வேறெந்த தையல் இயந்திரப் பாடல், ஆடல் நிகழ்ச்சியையும் தொலைக்காட்சியிலே பார்ப்பதில்லை - தமிழிலும் சரி; ஆங்கிலத்திலும் சரி. ஈடுபாடில்லை; ஆங்கிலத்திலே குறிப்பாக, நடுவர்களின் நாடகத்தன்மையாலே; தமிழிலே நடுவர்களின் ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஆசீர்வதிக்கும் மேட்டிமைத்தனத்தாலும் நடத்துகின்றவர்களின் மொல்லி உச்சறிப்பாலும் பாடகர்களின் ‘ஜீ!” சாமி கும்பிடும் அசிங்கத்தாலும்.

ஆனால், அவ்வப்போது, ஃபேஸ்புக்கிலே மிதந்துவரும் “இளைத்தோரை வெற்றி பெற வையுங்கள்” என்ற சுப்பர் சிங்கர் பாடல் விழியத்துண்டங்கள் உயூரியூப்பிலே பார்க்கவைக்கும். Britain Got Talent இலே வந்த ஸூசன் போயிலின் நிகழ்வின்  நாடக ஈடாக Super Singer ((தமிழ்நிகழ்ச்சிதான்) இலே கொண்டு வரப்பட்ட அழகேசன், அருணா ஶ்ரீனிவாசன் போன்ற நடுவர்களை எட்டத்திலிருந்தே பார்க்கவும் முடியாத தன் மகன் கௌதமின் குரலால் மேடையிலே நின்று கும்பிடப் பாக்யதைப்பட்ட “உள்ளத்தின் நல்ல உள்ள” அப்பா, கண்ணே தெரியாமலே பாடும் சிறுவன் செந்தில்நாதன், முஸ்லீம் சிறுவன் ஆஜித், ஈழத்தின் துன்பத்தை ஆடிக்காட்டும், பாடிக்காடும் ஈழவழித்தலைமுறை, முற்றிலும் வேறான பின்புலத்திலிருந்து வந்து வெற்றி எல்லைக்கு வந்து சேரும் திவாகர், “நான் ஈழத்தமிழ்ப்பின்புலத்திலிருந்து வருகின்றவள்” என்றபடி வாக்கினைத் தேடும் கனடிய ஜெஸிக்கா, பறை பாடலைப் பாடி அழும் சிறுமி அனுஷா.   

சுப்பர் சிங்கர் நிகழ்விலே பாடகர்களைத் தேர்வதிலும் நடுவர்களை அழைப்பதிலும் தமிழினை நிகழ்ச்சித்தொகுப்பாளர் உச்சரிப்பதிலும் இருக்கும் அரசியலையும் வர்த்தகத்தையும் மறுக்கமுடியாது. நிகழ்ச்சித்தொகுப்பாளரின் செயற்கையான தமிழுச்சரிப்புக் கொலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சுட்டாமற் சிரித்து, பாடகரின் சிறப்பான தமிழுச்சரிப்பினைப் பாராட்டும் நடுவர்கள் ஒரு கூத்து. பத்து நகர்ப்புறப்பாடகர்களுக்கு ஒரு (நிலம், சாதி, மதம் மாற்றான) புறத்துப்பாடகரைக் கொண்டுவந்து அவரை ஒரு கட்டம்வரையிலும் பார்க்கின்றவர்களின் நிலம், சாதி, மதம் சார்ந்த அரசியலுக்காக மட்டுமே வாக்களிக்கத் தூண்டுவதாலே நிகழ்ச்சிக்கு விளம்பரத்துக்கு அப்பால் என்ன விளையப்போகின்றது? அந்தப் பத்து வளமான வாழ்புலமிருக்கக்கூடிய நகர்ப்புற வலக்கையை நெஞ்சிலே தொட்டு ஆயிரம் கும்பிடுபோடும் “ஜீ” பாடகர்களுக்கும் அதிலே பாடக்கூடியவர் என்ற திறமையின் அடிப்படையிலே ஏதும் வாக்குக் கிட்டுவதில்லை; புறமிருந்து வரும் “இளைத்தார்” எனக் காட்டப்படும் பாடகருக்கும் பாடக்கூடியவர் என்ற அளவிலே ஏதும் வாக்குக் கிட்டுவதில்லை. நிலம், சாதி, மதம் என்ற அரசியல் அடிப்படையிலே நடக்கும் தேர்தலின் பரப்புரையாகவே முடிந்துவிடுகின்றது. 


ஈழத்தமிழ்வழி வந்தவர் என்பதாலேமட்டும் சிறந்த பாடகர் என்று வாக்கிடுவதாலே தமிழர் தாயகத்தின் தலைவிதி மாறிவிடும் என்பதாகக் காட்டப்படுகின்றது. “பறை என் முப்பாட்டன் வாழ்க்கை” என்று மேடையிலே அழுதுபாடும் குழந்தையின் அழுகையிலேயே நடுவர்கள் சாதியக்கட்டுமானத்தை உடைத்துவிடுகின்றனர் என்பதாகவும். இதற்கு எதற்காக, "சிறந்தபாடகர் யார்?"இவ்விடத்திலே, இது ஞாபகத்துக்கு வருகின்றது; ‘மூன்றாம் பிறை’ படத்தில் நடித்ததற்காக, கமலஹாசனுக்குச் சிறந்தநடிகர் விருதை இந்திய அரசு அவ்வாண்டு (1983) வழங்கியது. “கமலஹாசனைவிடச் சிறப்பாக அப்படத்திலே நடித்த ஶ்ரீதேவிக்குச் ‘சிறந்த விருது’ கிட்டாமல், கமலஹாசனுக்கு எப்படியாகக் கிடைக்கலாம்?” என்று தமிழ்ச்சஞ்சிகை ஒன்றிலிருந்து கமலஹாசனிடம் செவ்வியின்போது கேள்வி எழுப்பப்பட்டது; “நான் தேர்ந்தெடுக்கப்பட்டது, ‘சிறந்தநடிகர்’ என்ற வகைப்பாட்டின்கீழேயொழிய, ‘சிறந்தநடிகை’ என்பதன்கீழே அல்லவே? ஶ்ரீதேவியைவிடச் சிறப்பாக இன்னொரு நடிகை சிறப்பாக நடித்திருந்ததாலே, ‘சிறந்தநடிகை’ அவருக்குப் போயிருக்கின்றது. அதற்காக, என்னைவிடச் சிறப்பாக நடித்ததாலே, ‘சிறந்தநடிகர்’’ விருதையா அவருக்குக் கொடுக்கமுடியும்?” புன்னகைமன்னன் தெனாலி கமலஹாசனுடன் பல விடயங்களிலே என்னாலே ஒத்துப்போகமுடிவதில்லை; ஆனால், இது ஒத்துப்போன ஓரிடம்; இந்தப் “புலம்/பின்புலம்” என்பதற்காகமட்டுமே சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுங்கள் என்று வாக்குவேட்டை நடத்தமுடியுமா, என்ன?


விளம்பரமும் வர்த்தகமும்மட்டும் எயார்டெல்லிலே எகிறிப்போகின்றன என்பதே நிச்சயமான ஒன்று.

No comments: