Tuesday, November 22, 2011

ஆறு புலி ஆட்டம்

பண்டைத்தமிழர்களின் காதைகளை இலக்கியமூடு பார்ப்போமானால், அவர்கள் எத்துணை விளையாட்டுகளிலே ஈடுபாடுகொண்டிருந்தார்களென்பது தெளிவாகும். காலத்தோடு தமிழர் எவராட்சிக்குட்பட்டிருந்தாலுங்கூட, இந்தவிளையாட்டுகளுக்குக் குறைவிருக்கவில்லையென்றே சொல்லலாம் – விளையாட்டுகள் வேறாகிப் போனாலுங்கூட. ஆடு புலி ஆட்டம் என்பது தமிழர்களால் தமிழகக்கிராமப்புறங்களிலே விளையாடப்படும் பாரம்பரியவிளையாட்டாகச் சொல்லப்படுகின்றது. இதன் ஆரம்பகாலம் எதுவென்று தெரியவில்லை. ஆனால், விளையாடத்தொடங்கினால், சளைக்காமல், சுவைகுன்றாமல் விளையாடிக்கொண்டேபோகலாமென்று தமிழக நண்பரொருவர் கூறினார்.

இதன் வழியிலே ஈடான ஒரு விளையாட்டு ஈழத்தமிழருக்கில்லையே என்ற ஆதங்கம் எனக்கு நெடுங்காலமிருந்து வந்தது; ஆனால், உலகெங்கும் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புகுநாட்டுநல்லாட்டவிதிகளையெல்லாம் உள்வாங்கித் தம் பண்டைய ஆட்டப்பண்போடு சேர்த்துருவாக்கிய ஆறுபுலியாட்டம் என்ற விளையாட்டு இக்கவலையைப் போக்கிவிட்டது.

‘ஆறு புலி ஆட்டம்’ மிகவும் எளிமையான விளையாட்டு; ஆடுபுலியாட்டம்போல, இருவரேதான் விளையாடவேண்டுமென்பதில்லை; இவ்விளையாட்டின் சிறப்பே ஒரே நேரத்திலே எத்தனை பேர்களும் விளையாடமென்பதாகும். இதனாலேயே இணையவிளையாட்டுகளிலே தமிழர்களாலே அதிகம் விளையாடப்படுவதாகக் காணப்படுகிறது.. விதிகளென்று எதுவுமேயில்லை என்பதோ விதிகளை எந்நேரத்திலும் மாற்றலாமென்பதுவோ இவ்விளையாட்டின் ஈர்ப்புக்கொரு காரணமென்றாலும் மிகையாகாது.

ஆனால், விளையாட்டு என்று விளக்கவேண்டி வந்ததாலே, ஓரிரு விதிகளைப் பார்க்கலாம். ஈழத்தமிழரின் பண்பாட்டிலிருந்து புலி என்ற விலங்கு வன்னெதிரியின் விலங்குத்தன்மையின் அடையாளமாகச் சேர்க்கப்படுகின்றது; மிகுதிப்படிக்கு, மேற்கிலே சொல்லப்படும் ‘Six Degrees of Separation” என்ற நம்பிக்கை – “உலகிலுள்ள எந்த ஓர் ஆளையும் இன்னோர் ஆளுடன் இடையே இவருக்குத் தெரிந்த அவருக்குத் தெரிந்த உவருக்குத் தெரிந்த….. என்ற வகையிலே ஆறாட்களிடையேயான தொடர்பூடாக இணைத்துவிடலாம்”- அடிப்படையிலே இவ்வாட்டம் ஆடப்படுகின்றது. ஆனால், இங்கே ஆட்களுக்குப் பதிலாக, நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

ஆக, நீங்கள் இருவர் விளையாடிக்கொண்டிருக்கின்றீர்களென்று வைத்துக்கொள்ளுங்கள்; “ஸ்பெயினிலே பழமைவாதக்கட்சியினர் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர்”; இதுதான் விளையாட்டின் குறியான முடிவு. இப்போது நீங்களும் உங்கள் போட்டியாளரும் செய்யவேண்டியதெல்லாம், “பட்டாம்பூச்சி செட்டையடிப்பதும் பூகம்பம் உருவாகுவதும்”போன்ற தொடர்விளைவான –அதிகபட்சம் ஆறு தொடர்புகளூடாக- இதற்கு விடுதலைப்புலிகளின் அராஜகம் காரணமாகியிருக்கின்றதென்று காட்டுவதே; நீங்கள் ஐந்து தொடர்புகளூடாகக் காட்டுகின்றபோது, உங்கள் போட்டியாளர் மூன்று தொடர்புகளூடாக விடுதலைப்புலிகளின் அராஜகமே ஸ்பெயினிலே பழமைவாதக்கட்சியினர் ஆட்சிக்கு வரக் காரணமென்று காட்டிவிட்டால் (“விடுதலைப்புலிகள் வலதுசாரிகள்-->விடுதலைப்புலிகளை அழித்த ஸ்ரீலங்காவினை ஸ்பெயினின் இடதுசாரி ஆட்சியாளர் ஐநா மனிதவுரிமைமன்றிலே ஆதரித்தார்-->அதனாலே அவர் தோன்றார்”), உங்கள் போட்டியாளர் வென்றவராகின்றார்; இடையிலே புகும் மூன்றாவது ஆட்டக்காரர், சுருக்கமாக, (“விடுதலைப்புலியினர் வலதுசாரியினர்=ஸ்பெயின் பழமைவாதக்கட்சியினர் வலதுசாரியினர்-->ஸ்பெயின் பழமைவாதக்கட்சியினர் வென்றனர்”) என்று நேரடித்தொடர்பாகவே காட்டிவிட்டால், அவரே ஆறுபுலியாட்ட வெற்றியாளர்.

இதைவிளையாடப் பெரும் பட்டறிவெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை; நீங்கள் தமிழிலே வந்த ஆடுபுலி ஆட்டம் திரைப்படத்தினையும் ஆங்கிலத்திலே வந்த “Six degrees of separation” திரைப்படத்தினையும் பார்த்திருந்தாலே போதுமானது. Six degrees of separation விளையாட்டினை அறிந்திருந்தீர்களெனில், அஃது உங்களை வெற்றியின் திக்கிலே மிகவும் வேகமாகக் குறுக்குவழியிலே கொண்டு செல்லும் தந்திரங்களைக் கற்றுத்தரும். ஆறு புலி ஆட்டத்தினைத் தேர்ந்தவராக விளையாடவெல்லாம் நீங்கள் பெரிய மாற்றுக்கருத்து இலக்கியவாதியாகவோ தத்துவவாதியாகவோவெல்லாம் மானுடநேயராகவோவெல்லாம் இருக்கவேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு வேண்டியதெல்லாம், விளையாடும் எதிராளி உங்களைக் கொல்ல வரும் புலி என்ற கற்பிதமும் உங்கள் ஐந்தாம் வகுப்புத்தமிழ்க்கட்டுரையிலே “புற்கள்” என்பது பற்றி எழுதியபோது, ‘புலிகள்’ என்பதைப் பற்றி எழுதியபின்னால், கடைசிவரியாக, “இப்படியான புலிகள் பசித்தபோது புற்களைப் புசித்தும் பசியாறவில்லை” என்று எழுதிய வல்லமையுமே.

இப்போது, இவ்விளையாட்டு, ஈழத்தமிழர், புலம்பெயர்தமிழர் இவர்களிலிருந்து தமிழகத்தமிழர், இந்தியர், ஸ்ரீலங்கர் எல்லோருக்குமே பிடித்த விளையாட்டாகப் பரவிக்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கத்து; பரபரப்பான பத்திரிகைகள், தாளிகைகள், தொலைக்காட்சியூடகங்களெல்லாம் விற்பனையை அதிகரிப்பதற்காக இவ்விளையாட்டினை உள்வாங்கிக்கொண்டுவருவதும் கண்கூடு; உதாரணத்துக்கு, இங்கே தினமலர் விளையாடியிருப்பதைக் காணலாம்; “புலிகள்-சீக்கிய பயங்கரவாதிகள் மூலம் சதிதிட்டம் லஷ்கர் இ ‌தொய்பா ஒப்பந்தம்-போலீஸ் உஷார்

சுவராசியமான விளையாட்டாகத் தோன்றவில்லையா? நீங்களும் பொழுதுபோகாவிட்டாலென்ன, பொழுதுபோதாவிட்டாற்கூட, இணையத்திலோ, புத்தகவெளியீடுவிமர்சக்கூட்டங்களிலோ இவ்விளையாட்டினை உங்கள் நண்பர்களுடனோ எதிரிகளுடனோ விளையாடலாமே! இதன்மூலம், நீங்கள் இலக்கியவாதியாகவோ, மானுடத்தின் நேசனாகவோகூட ஆக வாய்ப்பிருக்கின்றதென்பது கூடுதலான வரவு.

2 comments:

எஸ் சக்திவேல் said...

தினமலர் சொன்மதையெல்லாம் மினக்கெட்டு... சரி விட்டுத் தள்ளுங்கோ...

-/பெயரிலி. said...

நான் சொன்னது தினமலருக்கில்லை; பொதுவாகவே எல்லா மாற்றுக்கருத்துமாணிக்கங்களுக்குமே ;-) தினமலர் ஓர் உதாரணம்மட்டுமே. இப்போது ஆறு பா(ப)கை தூரம், பேஸ்புக் புண்ணியத்திலே 4.75 பாகை தூரமாகிவிட்டதென்பது இவ்வாரச்செய்தி