Warning: This is purely a self-serving narcissist post
நிலைத்த அணுக்களிடையேயான பிணைப்பிலும்விட, மூலக்கூறுகளிடையேயான நிலையற்ற ஐதரசன் பிணைப்பே நீருக்கான தனித்தன்மையைத் தருகின்றது; வாழ்க்கையிலும் அடிப்படையாக வாழச் சில கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் கொள்கின்ற போதிலும் சின்னத்தனமான சந்தோஷங்களே அன்றன்றைக்கு நாளை நகர்த்த உதவுகின்றது; இனிதானதாக உணந்துகொண்ட காலகட்டத்தின் எச்சங்களைப் பிடித்துக்கொண்டிருந்தல் சின்னச்சந்தோஷங்களின் ஒரு வகை; இன்னொரு வகை அடுத்தவருக்குக் குரூரமானது; அறிந்த ஒருவருக்கு இடர்வரும்போது, நாம் வருந்துகிறோம்; அதேநேரத்திலே அவ்விடர் நமக்கில்லையே என்ற ஒப்பீட்டளவின் திருப்தி தருவதும் ஒரு சின்னச்சந்தோஷம்.
கடந்த வாரத்திலே இப்படியான சின்னச்சந்தோஷங்கள் இரண்டினை இழக்க - ஒன்றைத் தற்காலிகமாக, அடுத்ததை ஓரளவுக்கு நிரந்திரமாக- வேண்டியதாயிற்று. வாசிக்கின்றவர்கள் சிரிக்கக்கூடும்; ஆனால், என்னைப்போல, எழுபதுகளின் இறுதியிலே பத்தாம் வகுப்பினைமுடித்துக்கொண்டு, எண்பதுகளின் ஆரம்பத்திலே பல்கலைக்கழகங்களுக்குப் போனவர்களுக்குத்தான் தெரியும் தலைமயிரின் அருமை. (இதை பதினொராண்டுகட்குமுன்னாலே சிகைசிரைப்பிலே குறித்திருந்தேன்). ஐதீக சாம்ஸன்போல, எம் பலமே கொத்துமுடியினிலே தக்கித்திருப்பதாக... தொடர்ந்து கடந்த இருபத்தெட்டாண்டுகளாக என் வாழ்க்கை பல்கலைக்கழகங்களிலேயே தங்கிவிட்டது; நண்பர்கள் சொல்வதுபோல, நான் இன்னும் முதிர்ச்சியடையாமல், காலத்திலே எண்ணங்களும் சிந்தனையும் உறைந்திருப்பவனாகவே இருக்கின்றேனோ தெரியவில்லை. ஆனால், "குருவி தலையிலே வைக்கப்பட்ட பனங்காய்முடியை"க் கொண்டிருப்பது, அற்ப மகிழ்ச்சியாகவே தொடர்கின்றது. அற்ப மகிழ்ச்சியை நினைவூட்டும்விதமாக, பல்கலைக்கழகத்துறைத்தலைவர், மாணவர்களிடம் பகிடிக்கு, "டொக்டர் கந்தையாவுக்குத் தலைமயிர்வெட்டும் நிதி திரட்டுகிறேன்; ஒரு டொலர் போடுங்கள்" என்று கேட்பதிலிருந்து, பக்கத்துவீட்டு தென்னாபிரிக்க நண்பர், 'எங்கள் புல்லுவெட்டி பயன்படுத்தாமலேதான் வீட்டுக்குள்ளே கிடக்கின்றது; கொண்டு வந்து உங்களிடம் தரவோ?" என்று மனைவியிடம் கேட்பது ஊடாக, வெட்டியபின்னால், நடைபாதையிலே கடக்கும் -கண்ட ஆனால், என்னிடம் கற்காத- மாணவர்கள், சக பேராசிரியர்கள், "ஹா! கடைசியிலே முடி சிரைத்திருக்கிறீர்கள்; கடவுளுக்குத் தோத்திரம் " என்று நக்கலடிக்கும் வரைக்கும் நிகழ்வுகள் தொடரும். போனவாரம், மூன்று மாதங்களுக்குப் பின்னாலே குறைக்கவேண்டியதாயிற்ரு; இன்னும் இரண்டு மாதங்களுக்கு நெடுங்கால நண்பனை(!) இழந்த பிரிவுத்துயர் வாட்டப்போகிறது. மீண்டு(ம்) தொடங்கு(ம்) மிடுக்கு!!
அடுத்தது, என் கண்பார்வையிலே எனக்கு என்றைக்குமே ஒரு நம்பிக்கை. போனகிழமைவரை அதிலெதும் பங்கமில்லை. கண்ணாடி என்பது, அழகுக்காக அணியும் ஒரு சங்கதி என்பதாகமட்டுமே எண்ணம்; அவ்வப்போது, படங்களுக்கு பக்கத்திலே நிற்பவன்/ள் கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொண்டு நிற்பதுமட்டுமே அதிகம். மிகுதிப்படி, சின்னத்தலையிடி, காய்ச்சலுக்கு -தானே மாறட்டுமென்று- மருந்துக்குளிகைகளை இயன்றளவு தவிர்ப்பதுபோல, வலுச்சேர்க்காத சாதாரணக்குளிர்க்கண்ணாடிகளையும் இயன்றளவு தவிர்த்து கொள்வேன்; நடுவெயிற்பாலைவனப்புழுதியிலே, வண்டியோடுகையிலே தெறிக்கும் வெயிலிலே தவிர மிகுதிப்படி, அவசியமற்றதென்பதென் வாதம். சில கிழமைகட்குமுன்னால், மகனுக்குக் கண்பார்வைக்காகக் கண்ணாடி எடுத்தாகவேண்டிய அவசியம் வந்தது; மனைவி ஏற்கனவே ஆண்டுக்கணக்கிலே கண்ணாடி அணிபவள்; மகனைப் பார்த்து, உங்கள் அம்மா பரம்பரையின் மரபணு உன்னைக் கெடுத்தது என்று ஒரு கிழமை நக்கலடித்துக்கொண்டிருந்தேன். "கண்ணுக்கான காப்புறுதிதான் இருக்கிறதே, இந்த தொலைக்காட்சி மருந்து விளம்பரங்களின்பின்னாலே, பயன்படுத்துவதாலே வரும் வினைகள் இவையென்றோ, படவிழியவுறைகளின் வெளியே எடுத்த ஆண்டு, ஓடும் நிமிடங்கள் போன்ற விபரங்கள் தெளிவின்றிக்கிடப்பதாலே, ஆண்டு முடியமுன்னால், காட்டித் தொலைக்கலாமே!" என்று வீட்டிலே வாக்கெடுப்பிலே தீர்வானபடியாலே காட்டித்தொலைத்தேன். நேற்றையிலிருந்து, இப்படியாக, வயிற்றுப்போக்கு வரலாம்; 1937 ஆம் ஆண்டு என்றெழுதப்படும் குட்டியெழுத்துகளைக் கண்டுபிடிக்கமட்டும் கண்மேலே கவசம் மாட்டவேண்டியதாகிறது. இப்போது, கண்ணாடியைத் தவிர்ப்பதற்காகவே, 'வயிற்றுப்போக்கு வருமா', '1937 ஆ? 1987 ஆ?' என்ற மிக அவசியமான புள்ளிவிபரங்களைத் தவிர்ப்பதாகவிருக்கின்றேன். ஆனாலும், அடுத்தவர் கண்ணோடு ஒப்பிட்டு, என் கண் இன்னும் 20/20 என இயங்குகின்றதென்று பெற்ற குரூரசந்தோஷக்குமிழ் வெடித்துச்சிதறிப்போனதுபோனதுதான். சென்றதினி மீளாது!
காலம் ஓடும் பின்னங்காலை இடறக் கௌவிப் பிடிக்கத் தொடர்கின்றது.....
5 comments:
www.blog.beingmohandoss.com/2007/05/blog-post_28.html
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் என் தலைமுடியும்
அநாமதேயங்கள் அப்போதே இவ்விடுகையை வாசித்திருக்கின்றன ;-)
இதையும் பாருங்கள்;
http://www.ssakthivel.com/2011/05/blog-post.html
Welcome to the club !
இடைக்காட்டிலே கண்பார்வைக்கோளாற்றுகாரர்களைத் தெரியும்; ஆனால், வழுக்கை ஒரு விடயமாக இப்போதுதான் தெரிகின்றது. 1992 இலே முல்கம்பொலயிலே காணும்போது, சீரும் சீப்புமான முடியழகராகத்தானே இருந்தீர்கள்? அவுஸ்ரேலியாவின் தண்ணீரோ? ;-))
எல்லாம் கண்ணூறுதான் என்று நினைத்து ஒரு அல்ப சந்தோசம் அடைவேனாக.
Post a Comment