Wednesday, March 08, 2006

அள்ளல் - 1


ஐயோ

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும்போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்

உலக மகா யுத்தம்

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை
அணில் துரத்த காக்கை பறந்தது
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில்
அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

இந்த நகரத்தை எரிப்பது

இந்த நகரத்தை எரிப்பது
மிகச் சுலபம்
ஒரு தீப்பெட்டி போதும்
தீப்பெட்டி விலை மிக மலிவு
ரொட்டியின் விலையைவிட மிகமிக
ஒரு லிட்டர் கிரஸினும் வேண்டும்
அதுவும் கிடைக்கும்
அரசின் சீரிய வினியோகிப்பில்
ஓசைகள் குறைந்த நள்ளிரவில்
எங்கேனும் துவங்கலாம்
துணிவுள்ளவன் விழித்திருந்து
அனுமான் எரித்தான் லங்கையை
வாலில் தீ வைத்தபோது
வானைத் தொட்ட தீ தணிந்தது
எழுந்தது புது லங்கை
அழிந்தானா ராவணன்
போராடினான் நாட்கணக்கில்
மடிந்தான் குருதி வெள்ளத்தில்
இன்றும்
அனுமான்கள் உண்டு வாலின்றி
ராவணர்களும் உண்டு
தீயுண்டு நகரங்கள் உண்டு
தனியொருவன் எரித்தால் வன்முறை
அரசாங்கம் எரித்தால் போர்முறை

-ஆத்மாநாம் (1951-1984)


ஆத்மாநாம் படைப்புகள்
பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்
காலச்சுவடு பதிப்பகம்
முதற்பதிப்பு; 2002 டிசெம்பர்
294 பக்கங்கள்

10 comments:

Thangamani said...

கவிதைகளுக்கு நன்றி!
'உலக மகா யுத்தம்' எனக்குப்பிடித்தது.

Anonymous said...

>>>>அணில் பறந்தது
காக்கை ஓடியது
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை
<<<<

யுத்தம் என்பதை போராட்டமாகவோ, விடுதலை போராகவோ கொண்டோமானால், ஒரு விடுதலைவீரனை இதை விட கேவலமாக ஏச முடியாது!

-/ கையில் வெள்ளைக்கொடி? :)

.:டைனோ:.

SnackDragon said...

பெயரிலி, நல்ல கவிதைகள்.

-/பெயரிலி. said...

தங்கமணி, எல்லாப்புகழும் படைத்தவனுக்கும் பரிமாறியவர்களுக்குமேயாகட்டும்.

.:டைனோ:.
என்ன செய்வது? ஆத்மாநாமும் மரபுவாதகம்யூனிட்டிசத்திலே நம்பிக்கை கொண்ட வரதராசன், நல்லகண்ணு டைப் தமிழ்நாட்டு காம்ரேட்டா இருந்தாரோ என்னவோ? ;-) ஆனா, அம்மா தாலி அண்டா குண்டா அடவுவெச்சு போராட்டம் நடத்தப் பேசின எத்தனையோ பசங்க 180 டிகிரியல திரும்பி ஏஸி ஓட்டலிலே பஜ்ஜி ஸாப்டுகிட்டு ரெரரிஸம் ஜெயிஸம் பத்தி வன்மையா கண்டிச்சு அனலிசிஸ் அறிக்கை விடுற நேரத்துல ஆத்மாநாம் தனி ஆத்மாவா பட்டதை பட்டதா எழுதிருயிருக்காரு.

/கையில் வெள்ளைக்கொடி?/
சூப்பர் டச்சுங்க. நான் கொடுமைக்காரசித்தி (டெலிசீரியல் சித்தியில்லே); நீங்க மூத்தா பொண்ணு. பயந்துகிட்டே பேசுவீங்களாம் ;-)

Anonymous said...

>>>>நான் கொடுமைக்காரசித்தி...

அய்யய்யே! தப்பா புரிஞ்சிகிட்டீங்க... அல்லது நான் குழப்பிட்டேன். இரண்டாவதுதான் சரின்னு தோணுது.

அன்னைக்கு போராட்டம், புரட்சின்னு பேசுன -/சே, இன்னைக்கு கையில வெள்ளை கொடி தூக்குற -/ர .

பரிணாம பயணமா? வாழ்க்கைப்பாடமா? அப்படின்னு யோசிச்சேன்.

.:டைனோ:.

-/பெயரிலி. said...

/அன்னைக்கு போராட்டம், புரட்சின்னு பேசுன -/சே, இன்னைக்கு கையில வெள்ளை கொடி தூக்குற -/ர. /
இது முன்னையதவிட மெகாசூப்பர் டச்சு .:டைனோ:.
கீதைலைன்லே யோசிக்ற ஆளுங்க நானு; ஈலோகத்லே அதர்மம் தழைக்கும்போது உய்விக்க அவதாரம் எடுக்காம இருக்கமுடியுமா? ஒரு தடவைக்கு மச்சமுன்னா அடுத்த தடவைக்கு கூர்மம். போராட்ட வடிவமா முக்கியம்? பாபாத்மாக்கள் உய்த்தேற்றுத்தல் அல்லவா? ;-)

மு. சுந்தரமூர்த்தி said...

நன்றி நவிலல்

இந்தச் செருப்பைப் போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
*இத்துடனாவது விட்டதற்கு!


-- ஆத்மாநாம்

*என்னை

இளங்கோ-டிசே said...

எல்லோரும் அவரவர்க்கு பிடித்த கவிதைகளைப் போடுவதால், நானும் எனக்குப் பிடித்த கவிஞர்(களின்) கவிதையொன்றை போட்டுவிடுகின்றேன்.

அவரவர் தர்க்கம்

எந்த ஒரு பழமும்
தனக்குப் போதுமான இனிப்பைக்
கொண்டிருக்கவில்லை
எனக்கான பழரசத்தில்
சர்க்கரை சேர்க்கிறேன்

எந்தவொரு சொல்லும்
தனக்கான எல்லைக்குள் நின்று
ஒரு பொருளையுணர்த்துவதில்லை
எனக்கான சொல்லசைவுகளில்
உருவகங்களைச் செய்கிறேன்

எந்தவொரு மனிதவுடம்பும்
தனக்கான வெளியை மட்டும்
எடுத்துக்கொள்வதில்லை
எனவே நான் எனக்கான
போரைச் செய்கிறேன்
உள்ள அளவை அதிகரிக்க
*
-ரமேஷ்-பிரேம் (சக்கரவாளக்கோட்டம்)

வசந்தன்(Vasanthan) said...

//அனுமான் எரித்தான் லங்கையை
வாலில் தீ வைத்தபோது
வானைத் தொட்ட தீ தணிந்தது
எழுந்தது புது லங்கை
அழிந்தானா ராவணன்
போராடினான் நாட்கணக்கில்
மடிந்தான் குருதி வெள்ளத்தில்
இன்றும்
அனுமான்கள் உண்டு வாலின்றி
ராவணர்களும் உண்டு
தீயுண்டு நகரங்கள் உண்டு
தனியொருவன் எரித்தால் வன்முறை
அரசாங்கம் எரித்தால் போர்முறை//


நல்ல பொருத்தமான வரிகள்.

-/பெயரிலி. said...

கருத்துகள், கவிதைகள் அனைத்துக்கும் நன்றி