Sunday, March 12, 2006

அள்ளல் - 3இடையீடு

சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை.

எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்கப் பலவுண்டு,
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறி வைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலு, கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.

எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல; ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று.
(எழுத்து ஆகஸ்டு 62)


முகமூடி

பூச்சிக்கும் வரிப்புலிக்கும்
நச்சுக்கும் வழலைக்கும்
அகம்விட்டுப் புறமுற்றும்
நிரமாற்றம் விளைவித்து
முகமூடி களைந்தணிந்து
களைந்தணிந்து சலித்தோய்ந்து
மனைத்தலைவன் முகமூடி
எடுத்தணிந்து மனையேகி,
குறைபொழுதை நடித்தோட்டி
உடையுடனே முகமூடி
களைந்துவிட்டு வெறுமுகமாய்ப்
படுக்கையில் இருந்தபடி,
பெட்டியிலும் பரணையிலும்
தொட்டியிலும் ஒதுக்கியதைச்
சரிபார்த்துப் பிரித்தொட்டிச்
சுயஉருவை உருவாக்கும்
முயற்சியிலே தடுமாறி
வழிதேடி விழித்திருக்க:
மனைவி படுத்ததை
மேனி உணர்த்தவும்
என்னைச் சிதைக்கும்
பொழுதொரு கூத்தைச்
சொல்லியழ நான்திரும்ப
முந்தியவள் குறைபடிக்கக்
காதலூறும் கணவனின்
பாகமேற்று மயங்கினேன்,
தூக்கத்தில்; இப்படியே
ஆளுமை தேய்ந்துவிடும்
காண்கின்ற வான்நிற
மாய்
(எழுத்து ஜூன் 66)


நிழல்

கம்பி என்று காலிரண்டும்
எம்பி வீழ்ந்ததும், இளித்தது
கம்பி யதன்நிழல்
(எழுத்து அக். 66)


இரு தொழில்

குண்டு விதைத்தேன்
முளைக்க வில்லை

குண்டு விதையல்ல
விதைத்ததும் முளைப்பதற்கு
குண்டு விதையானால்
விதைத்ததும் முளைத்துவிடும்.

துப்பாக்கி நட்டேன்
தளிர்க்கவில்லை.

துப்பாக்கி கொம்பல்ல
நட்டதும் தளிர்ப்பதற்கு
துப்பாக்கி கொம்பானால்
நட்டதும் தளிர்த்துவிடும்.
(எழுத்து மார்ச் 67)


இலக்கியம்

இலக்கியம் என்றால் என்ன என்றேன்;
புலவர் ஒருவர், இதுகூடத் தெரியாதா
இலக்கு கூட்டல் இயந்தான் என்றார்.
(நடை ஏப். 69)


தீர்வு

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல், தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.
(கசடதபற மே 71)

-சி. மணி (1936)


இதுவரை
நூற்றுப்பதினாறு கவிதைகளின் தொகுப்பு
க்ரியா வெளியீடு
அக்டோபர், 1996
192 பக்கங்கள்
படியுரிமை: எஸ். பழனிசாமி

ஆசிரியர் அறிமுகக்குறிப்பு [1996 இல் எழுதப்பட்டது]

சி. மணி (எ) வே. மாலி (எ) எஸ். பழனிசாமி
(1936-)

தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும். கவிதைக்காக குமரன் ஆசான் நினைவுப்பரிசும் நிர்வாகம், தொழில்நுட்பத் துறைகளில் மொழிபெயர்ப்புக்காக் (இருமுறை) தமிழ்ப்பல்கலைக்கழகப்பரிசும் பெற்றிருக்கும் சி. மணி, கடந்த பத்து ஆண்டுகளாக அகராதியியலில் ஈடுபட்டிருக்கின்றார். தமிழ்வினைச்சொல் அகராதி ஒன்றை அமெரிக்கத்தமிழ் அறிஞர் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மனுடன் இணைந்து உருவாக்கிக்கொண்டிருக்கின்றார். க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு இவருக்கு உண்டு.

பிற எழுத்துகள்: யாப்பும் கவிதையும், செல்வம் என்ற பெயரில்; அலசல் என்ற தலைப்பில் அபத்தநாடகம், ஓலூலூ என்கிற பெயரில் (நடை, ஜனவரி, 1970); தாண்டவநாயகம் என்ற தலைப்பில் நெடுங்கதை, ப. சாமி என்கிற பெயரில் (கணையாழி, மார்ச், ஏப்ரல், 1969).

4 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

அள்ளல்-2 இல் 86 ஆம் பக்கக் கவிதையை ஏன் போடவில்லை என்று யோசித்தேன். இப்போது புரிகிறது உங்கள் "தீர்க்க தரிசனம்". எப்போதாவது வருங்காலத்துக்காவது உதவுமா என்று பார்ப்போம்.

அள்ளல் - 3 இல் பிடித்த இன்னும் இரண்டு பிடிகள்:

1. சிக்கல்

பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டு விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்.


2. மீட்சிப் பிரச்சினை

எனது அசலுருவம்
எதுவென்று தெரியவில்லை
என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

உட்புறத் தாக்கங்களிலும்
வெளிப்புறத் தாக்கங்களிலும்
உடன்பாடானவை உண்டு;
எதிர்மறையானவையும் உண்டு;
ஆனால் இரண்டும் தற்காலிகமானவை.

எனக்கு உதவிசெய்யக் கூடிய
உடன்பாட்டுத் தாக்குதல்கள்
சக்தியற்றுத் தேய,
எதிர்மறைத் தாக்குதல்கள்
மீட்சி எல்லைக்குள் அழுத்தம்
உள்ளபோதே,
தற்காலிகம் என்று சொல்லக்
கூடாத அளவு என்உருவத்தை
மாற்றி விடுகின்றன.

இந்த நிலையில் பந்துகூட
மீண்டுவிடும்

-/பெயரிலி. said...

தீர்க்கதரிசனம் குறித்து 'உடன்படுகின்றேன்' ;-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சி மணியின் ஒரு கவிதை :

வெட்ட வெளிதான் இது அறை அல்ல
என துள்ளியது மனம் ஒரு கணம்

மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்

எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை

(நினைவிலிருந்து எழுதுகிறேன்...)

இன்னொரு கவிதை கையைக் காலாக்கென்றான் என முடியுமே... அதுவும், அதுகுறித்து பிரமிளின் விமர்சனமும் பிடித்தமானது எனக்கு :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு மிகப் பிடித்த கவிஞர்களுள் ஒருவர் சி மணி...

இப்பதிவைப் பார்க்கையில் மகிழ்ச்சியாயிருக்கிறது :)