Wednesday, May 02, 2018

மேதினக்கொண்டாட்டங்கள்

சீனா போயிறங்கியபோது, தைப்பொங்கலும் மேதினமுமே என் கொண்டாட்டங்கள் என்பதாக ஓர் எடுப்பொன்றைக் கேட்பாருக்குச் சொல்ல வைத்திருந்தேன் - குறிப்பாக, விஜயதசமிக்குத் தலைகீழாக நிற்கும் நேப்பாளிகளிடம். அமெரிக்கா வந்தபின்னால், தைப்பொங்கல், தமிழ்நன்றிநவிலல்தினமாகப் போய்விட்டது. மேதினத்தினைப் பற்றி அறிந்தார் யாருமில்லை; புரட்டாதி ஆறுக்குக் கடத்தப்பட தொழிலாளர் தினமும் மலிவுவிலைக்குக் கடைகள் சாமான்கள் விற்க, நத்தார்போல இன்னொரு நாளாய்த்தான் போனது. இத்தனைக்கும், நவீனகாலத்துமேதினம் தொடங்கியது, அமெரிக்காவின் சிக்காக்கோ ஹெமார்க்கர்ட் நிகழ்வினை நினைவுகூரும் நாளாக வைத்தென்பது உபகதை.

அமெரிக்கத்தொழிலாளர்களின் சரிதம், அவர்களின் போராட்ட வரலாறு இவற்றினை ஓரளவு அறிந்து கொள்ள பீற் ஸீகர், உவூடி குத்ரி, அல்மனாக் பாடகர்கள் இவர்களின் அமெரிக்கத்தொழிலாளர் போராட்டங்கள் குறித்த நாட்டுப்பாடல்கள், ஹொவார்ட் ஸின்னின் "A People's History of the United States" என்பனவே போதுமானவை. இரண்டாம் உலப்போர் முடியும் காலம் வரைக்கும் மிகவும் காத்திரமான தொழிலாளர் போராட்டம் அவர்களினது. பின்னால், ஜோஸப் மக்கார்த்தியின் "அமெரிக்கமற்ற செயற்பாட்டு" ச் சூனியக்காரர்களைக் கழுவேற்று அரசவிசாரணைகள் தேய்த்து, தொழிற்சங்கங்களின் தலைவர் ஹொவ்காவின் காணாமற்போதலும் கொலையோடும் போராட்டப்பண்பு செத்து, வெறும் தேர்தலுக்கான வாக்குவங்கியாக முடிந்தது அவவரலாறு. பின்னாலும் அமெரிக்கக்கொம்யூனிஸக்கட்சி, அதன் தலைவர் ஹஸ் ஹோல் சாகும்வரை சின்னச்சத்தத்தோடு இயங்கிக்கொண்டிருந்தது. இப்போதும் பெயரளவிலே இருக்கின்றது.

இப்படியான சூழ்நிலையிலே அமெரிக்காவிலிருந்து கொண்டு, இன்றைய மேதினக்கூட்டங்களையும் பேஸ்புக் அறிக்கைகளையும் பார்க்கும்போது, மேதினம் என்பது வெறுங்குறியீடாக மட்டும் தேய்ந்ததுபோலவும் சடங்குபோலவுமே தெரிகின்றது.

மேதினத்தைக் கொண்டாடுகின்றவர்களிலே பலர், தொழிலாளர், விவசாயிகள் என்பவர்கள் அவர்களின் பெற்றோர் காலத்திலே நிற்காமல் மக்கள் காலத்துக்கு வந்துவிட்டார்கள் என்பதைக் கவனத்திலே எடுத்ததாகத் தெரியவில்லை. அரிவாளும் சம்மட்டியும் எத்துணை இன்னும் விவசாயி, தொழிலாளி அடையாளங்களாகவிருக்கின்றன என்றுகூட ஆய முயன்றோமா என்பதுகூடவில்லை.

இயந்திரங்கள் கைத்தொழிலாளர்களைப் பெயர்த்திருக்கின்றன. நிபுணத்துவம் கொண்ட புதுத்தொழிலாளிகள் (கணிஞர் போன்றோர்) பெருகியிருக்கின்றார்கள். அகிலமயமாக்கப்படுதலிலே ஒரு நாட்டின் தொழிலாளியும் விவசாயியும் மற்றைய நாட்டுத்தொழிலாளியுடனும் விவசாயியுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டிக்கு விடப்பட்ட்ட பந்தயக்குதிரையாகவும் நாய்ச்சண்டையாகவும் போட்டியிடுகின்றார்கள். ஒருவரின் தொழில்சார்ந்த வர்க்க அடையாளத்தைமட்டுமே கொண்டு அவரை எளிமைபடுத்தி நிர்ணயிக்கமுடியாத அளவிலே அவரின் மற்றைய பால், நிறம், பிரதேசம், மொழி, மதம் சார்ந்த பண்புகள் சிக்கலாக்கி மேலோங்கி நிற்கின்றன. தத்துவரீதியிலும் அதை அதை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுரீதியிலுங்கூட மாற்றமேதும் குறிப்பிடத்தக்க தூரத்துக்கு இவர்களுள்ளே நிகழ்ந்ததா என்று தெரியவில்லை.

இவற்றின் பாதிப்பு எதுவுமே மேதினத்தைக் கொண்டாடுகின்றவர்களின் கோஷங்களிலும் குரல்களிலும் மாற்றங்களை அரைநூற்றாண்டாக ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தாம் சார்ந்த கூடாரங்களைத் தூசுதட்டிக் கட்டி நிமிர்த்தி நாள் முடிய, தட்டி கழற்றி மடித்துவைப்பதாக மட்டுமே ஆண்டுப்போராட்டச்சுழற்சியை முடிக்கின்றார்கள்.

தனிப்பட மேதினத்தினை ஒரு குறியீட்டுக்கப்பாலே ஒரு தாக்கம் நிறைந்ததாகக் காணமுடியாத அளவுக்கு இரு நிகழ்வுகள் அபத்தமாகத் தெரிந்தன. ஒன்று தம் சொந்த மக்கள்மீதும் தொழிலாள|விவசாய நலன்களைக் காக்கும் சட்டங்கள்மீதும் தாக்குதலையும் ஒடுக்கலையும் செய்த கட்சிகளும் ஆட்சியாளர்களுங்கூட மேதின வாழ்த்தினைக் கூறிப் பதாகைகள் தாங்கிய மேடைகளிலே அயராது பேசினார்கள். அடுத்தது, தொடர்ச்சியாக, அமெரிக்காவின் ஆசிரியர்கள் அவர்களின் சங்கங்களூடாக அவர்களுக்கான இருபதாண்டுகளாகத் தொடப்பட்டாத சம்பளவுயர்வுக்கான போராட்டத்தைக் கடந்த ஒரு மாதமாக நடத்துகின்றார்கள், அமெரிக்க மாநில அரசுகள் தொழிற்சங்கங்களை ஒடுக்குதல் குறித்த "Right to Work" சட்டங்களைக் கடந்த நான்காண்டுகளாகத் திணித்தோ திணித்துக்கொண்டிருக்கவோ முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவற்றினைப் பற்றி அகிலம் தழுவிய -அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீட்டுக்கழிப்பறையிலே தண்ணீர் வராததுக்கும் திட்டும் - நம் மேதினக்கொண்டாட்டக்காரர்கள் பேசுவதில்லை; ஆதரவுக்குரல் எழுப்புவதில்லை; சொல்லப்போனால், கவனிப்பதேயில்லை. இந்நிலையிலே உலகத்தொழிலாளர்தினம் என்பது வெறும் சுயத்தைத் திருப்தி செய்யும் அடையாளமாக மட்டுமே முடிகின்றதாகத் தோன்றுகின்றது.

No comments: