Wednesday, May 02, 2018

லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்


எம் எஸ் இராஜேஸ்வரி


சண்முக வித்தியாலயம்

கிழக்கின் மற்றைய பகுதிகளிலே நிகழ்ந்தது, திருகோணமலையின் மையத்துக்கும் வந்து சேர்ந்திருக்கின்றது;
இது போன்ற சிக்கல்கள் கிழக்கிலே அதிகம். இதனாலேதான் கிழக்கிலே தமிழ்-முஸ்லீம் பிரச்சனை மிகவும் சிக்கலானதென்று சொல்கிறேன். இப்பாடசாலை என்வீட்டிலிருந்து வாசலைத் திறந்தால், வலப்புறமாக இரண்டு நிமிட நடையிலே இருப்பது. மகளிர்பாடசாலை; ஆனால், என் முதலாம் வகுப்பை ஆரம்பித்ததே இங்குதான். அந்நேரத்திலே சண்முக வித்தியாலமாகவிருந்தபோது, ஆரம்பப்பாடசாலைகளிலே ஆண்மாணவர்கள் கற்றார்கள்; திருகோணமலை இந்துக்கல்லூரியிலே உயர்தரத்திலே பெண்மாணவர்கள் கற்றார்கள். சண்முக வித்தியாலமாகவிருந்தது, சண்முக இந்துக்கல்லூரி ஆகியிருப்பது கடந்த இருபதாண்டுகளிலே.
அண்மையிலே மூன்று முஸ்லீம் பெண்ணாசிரியர்கள் முகத்தை மூடின ஆடை அணிந்து கற்பிப்பதிலிருந்து தொடங்கியிருக்கின்றது பிரச்சனை (அவர்களும் முஸ்லீம் அமைச்சர்கள் காரணமாகத் திட்டமிட்டே முஸ்லீம் பாடசாலைகள் அல்லாதவிடங்களிலே முஸ்லீம் ஆசிரியர்களை அதிகரிக்கும் நோக்குடனே கொணரப்பட்டவர்கள்). இவ்வாடை அணிதலைச் செய்யவேண்டாமென்று ஆசிரியைகள் சொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், தனிப்பட்ட இப்பாடசாலையின் ஆரம்பம் சைவம் சார்ந்த தனிப்பட்ட ஒருவர் ஆரம்பித்த பாடசாலையாகவிருந்தபோதுங்கூட, ஓர் அரச பாடசாலையிலே இதனை எப்படியாக அதிபரோ மற்றவர்களோ சட்டத்துக்கு மாற்றாக ஓர் ஆசிரியரின் உடையினை இப்படியாகத்தான் இருக்கவேண்டுமென்று செய்யமுடியுமென்று தெரியவில்லை. அதே நேரத்திலே திருகோணமலையின் முஸ்லீம் பாடசாலைகளிலே இருக்கும் வழமை எதுவெனவும் காணப்படவேண்டும் (அஃது எனக்குத் தெரியாது). தமிழ்ப்பெண்மாணவர்களும் பெண்ணாசிரியர்களும் பொட்டு வைத்துப்போகும் பாடசாலைகளிலே -அவை அரசபாடசாலைகளாக இருக்கும்போது- முட்டாக்கைப் போட்டு வரமுடியாதென்று சொல்லமுடியுமா தெரியவில்லை. பெண் ஆசிரியர்களுக்கு இதுதானெனச் சீருடை வழமையிருப்பதாக நானறியேன்.
ஆனால், அடுத்த கட்டமாக, இந்த ஆசிரியர்களின் கணவர்கள் பாடசாலைக்கு வந்து பயமுறுத்தலைச் செய்துவிட்டுப்போயிருப்பதன் பின்னாலே, இப்பகிஸ்கரிப்பு எழுந்திருக்கின்றது. அரசியற்பலமிருக்கின்ற வகையிலே கிழக்கிலே இதுமாதிரியான பயமுறுத்தல்கள், தொழில்வழங்குதல் முதல் வீதியமைத்தல்வரை நிகழ்வதைக் காணமுடியும்.
முப்பதாண்டுகளுக்கு முன்னே திருகோணமலை புனித மரியாள் கல்லூரியிலே பொட்டு வைத்தே போகவிடமாட்டார்கள். அந்நேரங்களிலே அதைப் பெரிதுபடுத்தாமல் ஒரு சிறுகுறையாகச் சொல்லிவிட்டுப் பொட்டைக் கழற்றிவிட்டுப்போனவர்களையே அறிவேன். மத அடையாளம் சார்ந்த சண்டைகள் மொழி|பூமி சார்ந்த பிரச்சனைக்காலத்திலே பெரிதாக்கப்பட்டதில்லை குறைந்தளவு, சைவம் ( இப்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்து அல்ல) - கிறீஸ்தவம் (கத்தோலிக்கர் இடையே பொட்டுவைக்கும் வழமையிருந்தபோதுங்கூட) உள்ளிட்ட தமிழர்களிடையே சமயம் (அதாவது, "மதம்") சார்ந்த பிரச்சனைகள் பாடசாலைகளிலே இருந்ததில்லை.
"கோயிலுக்குக் கொட்டுவதைச் சாப்பாடில்லாத சனத்துக்குக் குடுங்கோடா!" என்று எண்பதிலே எனக்கு ஏசின பழைய மார்க்ஸிய இயக்கம் சார்ந்த நண்பரொருவர் - இவரைப் போன்றோரைப் பார்த்தே சமயம் சார்ந்த கேள்விகள் எனக்குள்ளே எழுந்ததெனலாம் - திருகோணமலை இந்துக்கல்லூரிக்குள்ளே பிள்ளையார் கோவில் இருக்கவேண்டியதன் அவசியத்தை - தொடர்ச்சியாக அதனைத் தமிழர்களின் பாடசாலையாகப் பேணவேண்டிய காரணத்துக்காக- ஈராண்டுகளுக்கு முன்னால், எனக்குச் சொன்னபோது, எத்துணை மதமானது மொழி சார்ந்த எம் அடையாளத்தைப் பெயர்த்து மதம் சார்ந்த அடையாளங்களை நம்புகின்றோமோ இல்லையோ நடைமுறைக்கேனும் இருப்புக்காகக் கொணர்ந்து நிறுத்தியிருக்கின்றதென்று புரிந்தது. குறிப்பாக, பெரும்பான்மைப் பௌத்தம் சார்ந்த சிங்கள அடையாளத்துக்கெதிராக, இந்தியாவின் "இந்து" சார்ந்த அடையாளமும் மத்தியகிழக்கின் "முஸ்லீம்" சார்ந்த அடையாளம் தமக்குள்ளேயே முரண்பட்டிருக்கும் நிலையும் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்பேன். கிழக்கின் தமிழர்களிடையே இஃது இருத்தலுக்கான எதிர்வினைகள் மோசமில்லாத, பாதுகாப்பான நடைமுறைவழி கண்டறிதலாகவே இது பார்க்கப்படுகின்றதாகவே என் புரிதல் - அதனோடு எத்துணை நான் உடன்படுகின்றேன் என்பது வேறுவிடயம்.
கிழக்கிலே தமிழ்த்தலைமைகளின் மட்கிப்போன செயலற்றதும் பலமற்றதுமான சவத்தன்மைக்கு முற்றிலும் எதிரான உத்வேகமான முஸ்லீம் அரசியல்வாதிகளின் தம் சமூகம் சார்ந்த செயற்பாடு -அத்துமீறிய நிலம், தொழில், வர்த்தகம் சார்ந்த செல்வாக்கு, அடாவடித்தனம் உட்பட- தமிழர்களிலே (குறிப்பாக, இளந்தலைமுறையிலே) கணிசமான பகுதியினை இந்துத்துவா இறக்குமதி சிவசேனையின் "இந்து" அடையாளத்தையும் இன்னும் அப்பாலே போய், பௌத்தம் சார்ந்த இனவாதிகளின் முஸ்லீம்களின்மீதான தவறான செயற்பாடுகளையும் ஆதரிக்கும் நிலையையும் ஏற்பதிலே நிறுத்தப்போகின்றது - ஏற்கனவே நிறுத்தியிருக்காவிட்டால். (ஆனால், திருகோணமலை நகரின் வர்த்தகத்தைத் தமிழர்கள் (பிறமாவட்ட)முஸ்லீம்களுக்கு இழந்ததற்கு அவற்றை விட்டுக்கொடுத்த தமிழர்களையும் குறைசொல்லவேண்டுமென்றே கருதுகின்றேன். தனியே கடந்த இனப்பிரச்சனைக்காலத்திலே தமிழர்கள் முடங்கிப்போய்விட்டதைமட்டுமே சொல்லிவிட்டுப்போகமுடியாதென்பது என் கருத்து)
இப்படியான சூழ்நிலையிலே கிழக்கின் தமிழர்-முஸ்லீம் இடையேயான நிலைப்பாட்டினைக் கிழக்குத்தமிழர்களும் முஸ்லீம்களும் மற்றும் தொலைதூர அலசுனர்களும் ஆய்வாளர்களும் அணுகுதல் மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டும் என்பதையே முன்னரும் சில இடங்களிலே சுட்டிக்காட்டியிருந்தேன். பூனைகள் பிரிப்பதிலே இடையிலே புகக்கூடிய குரங்குநீதிமானையிட்டுக் கவனமாகவிருக்கவேண்டும். அதே நேரத்திலே, தனியே யாழ்ப்பாணத்திலும் மீதி வடமாகாணத்திலிருந்தும் முஸ்லீம்களை அடாவடித்தனமாக வெளியேற்றியதையும் காத்தான்குடிப்பள்ளிவாசலிலே தொழுகையின்போது நிகழ்ந்த கொலைகளையும் வைத்துக்கொண்டு அதன் குற்றவுணர்விலே மட்டும் தமிழர்கள் கிழக்கின் தமிழர்-முஸ்லீம் பிரச்சனையை இன்றைய கட்டத்திலே அணுகுதல், மிகவும் எதிர்மறையான விளைவினையே ஏற்படுத்துமெனத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்; குறிப்பாக, வீரமுனை, சத்துருகொண்டான் போன்ற இடங்களிலே தமிழர்கள்மீது முஸ்லீம் ஊர்காவற்படையின் ஆதரவோடு நிகழ்ந்த கொலைகளையும் ஹிஸ்புல்லா போன்றோர் தாம் தமிழர்களின் காணிகளை முஸ்லீம் தேவைகட்கு எடுத்துக்கொடுத்ததை விழியத்திலே சொல்வதையும் நாம் தனிப்பட்ட செயல்களாக நிராகரித்துப் புறங்கையாலே ஒதுக்கிப்போவது கிழக்கின் தமிழர்-முஸ்லீம் பிரச்சனையிலே ஒரு பக்க நிலைப்பாட்டினை எடுத்துக்கொள்வதாகவே கிழக்கிலே தமிழர்கள் மத்தியிலே கருதப்படும் வாய்ப்பினைக் கொணரப்போகின்றது.
இதைக் கரிசனையோடு சுட்டுமிடத்திலே, "முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தினை"க் கொண்டதாக எண்ணும்போது, ஒன்றில், மீண்டும் ஆரம்பத்திலிருந்து கிழக்கிலேயிருக்கும் முஸ்லீம்-தமிழர்- சிங்களவர் குறித்த பிரச்சனைகளை வெறுமனே புட்டு-தேங்காய்ப்பூ-சீனி என்ற இனிப்பான எடுகோள்களைமட்டும் வைத்துக்கொண்டு அணுகாதீர்கள் என்று விக்கிரமாதித்தனின் வேதாளமாகச் சொல்ல முடியும்...... அல்லது,, "அலசும் அரசர்கள் பட்டாடைகளோடேயே பவனி வருகின்றார்கள்" என்று கூறிவிட்டு, நம் நாளாந்தத்தொழில் அழுத்தும் நேரக்கெடுவை முன்னிட்டுச் செயல் நோக்கியோ இளையராஜாவின் இசைக்கச்சேரியை நோக்கியோ நகரமுடியும்.
தொலைதூரத்திலிருந்து எழுதும்போது, பார்வையிலே தூசு தடுக்கும் காட்சிகளைக் காணமுடியாதிருக்கலாம். அதற்காக மன்னிக்கவேண்டும். இரண்டு பக்கத்தாருக்கும் எரிச்சலையூட்டினால், நான் சொல்ல வந்தது புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது என்று உணர்ந்துகொள்வேன்.
தொடர்பான சுட்டிகள்
0:03 / 4:23

சத்தி -1

இப்ப மார்க்ஸ், தலித், தமிழ், சமயம், பெட்டை, சட்டை, குட்டை, மட்டை, கொட்டை என்றில்லாமல் இதுதான் எல்லாத்திசைகளிலும் புரட்சி பஷன்!  
பட்ட பனைமரத்தைத் தறிக்கவேண்டுமா வேண்டாமா என்ற வாதம் வந்தால், எனக்கும் ஒரு கருத்துண்டு என்று பாய்ந்து பட்டபனைமரத்தை அப்படியே குத்த நிற்கவைத்துப்போட்டு, எங்களின் வேலிச்சண்டைப்பக்கத்துவளவுக்காரரின் வீட்டுத்தென்னைமரத்தாலேதான் பனைமரத்திலே பிரச்சனை என்பதாகி, தென்னைமரத்தை வெட்டு, பனைமரம் துளிர்க்குமென்ற அறிவுபூர்வமான கருத்தினை தாளக்கட்டுப்பின்பாட்டுக்காரருடன் முன்வைப்பது. அதிகம் பேர் தாளம் தட்டினால், அத்தாளலயநாட்டியமானது ஜனநாயகம் எனப்படும். ஆகவே, தென்னையின் மண்டையிலே போட்டுவிட்டுப் போய்விட, பனை துளிர்க்கும்.
"மார்க்ஸ் என்ன சொன்னார்? லெனின் என்ன சொன்னார்? துக்ளக்குக்கு ஓட்டுப்போடாதீர்கள்!" என்ற 'துக்ளக்' சோவின் நக்கலை மெய்யாக்கிவிடுவோம் என்ற மகாநோக்குடன் தத்துவசிகாமணிகள், வெள்ளைவேட்டியிலும் செஞ்சட்டையிலும் மஞ்சட்சீவரத்துடனும் காவிகாற்சட்டையிலும் கறுப்புமுகமூடியிலும் நாயாய்ப் பேயாய் எல்லாப்பிறவியும் எடுத்துளைந்து சொல்லேரும் வரிச்சம்மட்டியும் கொண்டு அலைகின்றார்கள்!
~~~~~
கலந்து கட்டியோ கட்டாமலோ எழுதுவதோடு எழுத்தாளனின் பணி முடிந்துவிடுகின்றது; கட்டியை வெடிக்கவைப்பது அவர்தம் கடமையில்லை நாம் வாழும் யுகத்திலே! அவர் போட்டதிலே சொல் எடுப்பதும் வரி கோர்ப்பதும் தொடுப்புக்காரர் ௸ ஶ்ரீமான் உங்கள் கடமை! கீறிட்ட இடங்களை நிரப்பத் தமிழ்ப்பாடத்திலும் ஒன்று-பல, பல-ஒன்று, பல-பல தொடுப்புகளைக் கணித பாடத்திலும் எதுக்காக உங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என்கிறீர்கள்? தொழிற்கல்வி கற்பதற்கா? வாழ்வை ஆற்றுவழிப்படுத்துவதுக்கா? இல்லையே! இப்படியான, மொட்டாக்குக்கும் பூணூலுக்கும் முடிச்சுப்போட இடம் வைத்துவிட்டு, "நியாயம் கோருகிறோம் நாங்கள்! கேரிக்கொண்டே கருத்தைக் கோருங்கோடா நீங்களே!" என்று போகின்ற நிலையிலே, பயன்படுத்தத்தானே?
வருங்காலத்திலே நாம் வந்த நாட்டிலே தேநீர்க்கடையிலே கிட்டுவதுபோல, சொற்களை மட்டும் உங்கள் கணணிக்கு பேராசான்களும் ஜக்கிசான்களும் அறிவுசீவிகளும் ஆறாதசீவுளிகளும் அமுசடக்கமாய் அனுப்பிவிடுவார்கள். நீங்கள்தாம் சொந்தமாக உங்களுக்குத் தேவையான அளவிலே விதத்திலே உங்களுக்கிருக்கக்கூடிய, இருக்கும் சீனிவியாதிக்கேற்ப, நாவின் சுவைக்கேற்ப, தேநீர்க்கட்டுரை, கதை, கவிதையை அளவாகவெடுத்துக் கலக்கோ கலக்கென்று சமைத்துக்கொள்ளவேணும்; அதையும் வச்சு சமூகத்தின் விழிப்புக்கும் விடு-தலைக்குமாய்க் கொன்னிக் கொன்னி விவா-திக்க வேணும் 
~~~~~~~
இத்தனைக்குள்ளும் நாலுநாட்களுக்கு முன்னால், ஒரே நாளிலே இரண்டு பேஸ்புக் பகிர்வுகள்; ஒன்று நித்திரையால் எழும்ப மூஞ்சியிலே; இன்னொன்று நித்திரைக்குப் போகமுன்னால், மூஞ்சிலை; முதலாவது சூடான மாட்டுமூத்திரத்தின் மஹாகுணாம்சயங்களை வீச்சமாய் அடித்து வேலைநாளைக் கெடுத்தது; மற்றது இன்னும் சூடான ஒட்டகமூத்திரத்தின் உன்னதகாவியங்களை வீச்சமாய் அடித்து நித்திரையைக் கெடுத்தது. விலங்குதான் வேறென்றாலுங்கூட, இந்த காலத்தை வென்ற மதவிஞ்ஞானிகள் பேசாமல், என்னை மொராஜ்ஜி கோலாவுக்கே வாக்கைப் போடவைக்க மும்முரமாக நிற்பதாகத் தெரிகின்றது.

சரி விடுவோம்! இதென்ன பெரிய மன்னன் சொலமனுக்குப் பிள்ளை பிரிக்க வந்த பெரும் பிரச்சனையா என்ன? "பாலையரபு ஒட்டகமா, அகண்ட்பாரதமாடா திருகோணமலையிலே முட்டுகின்றது பிரச்சனை?" என்று தோழர் கலை மார்க்ஸிடம் கேட்டால், அத்தனைக்கும் காரணம் தமிழ்த்தேசியமென்று தெளிவான காரணத்தை மாசேதுங் காண்டத்தைக் கிளியெடுக்க வாசிச்சுச் சொல்லிவிட்டுப்போகிறார். மாட்டுக்கும் ஒட்டகத்துக்கும் மாசேதுமில்லை நம்காலத்து மாசேதுங்கிருக்கும்வரை! செவ்வணக்கம் தோழர்களே! மே ஒன்றிலாவது எம் மாறாக்கோஷக்கிளிக்குப் புதுச்சொற்கள் கொஞ்சம் சொல்லிக் கொடுப்போமாக!
ஒட்டகமும் மாடும் கட்டிப்பிடிச்சு ஒரே இலக்கிலை காதல் பண்ணுவதைக் கண்டவர் விண்டார்! ஆனால், ஆர் கண்டார்? சரி வேண்டாம்! வழக்கம்போல, கிளியை விட்டுவிடுவோம்! கிளையை முறி! அடி ஒரு பிடி அம்பு லோஞ்சரிலை வச்சு!
"வாருங்கள் பாபிகளே! கேளுங்கள். மார்க்ஸும் அம்பேத்காரும் சொன்னதாவது, திருகோணம........"

மேதினக்கொண்டாட்டங்கள்

சீனா போயிறங்கியபோது, தைப்பொங்கலும் மேதினமுமே என் கொண்டாட்டங்கள் என்பதாக ஓர் எடுப்பொன்றைக் கேட்பாருக்குச் சொல்ல வைத்திருந்தேன் - குறிப்பாக, விஜயதசமிக்குத் தலைகீழாக நிற்கும் நேப்பாளிகளிடம். அமெரிக்கா வந்தபின்னால், தைப்பொங்கல், தமிழ்நன்றிநவிலல்தினமாகப் போய்விட்டது. மேதினத்தினைப் பற்றி அறிந்தார் யாருமில்லை; புரட்டாதி ஆறுக்குக் கடத்தப்பட தொழிலாளர் தினமும் மலிவுவிலைக்குக் கடைகள் சாமான்கள் விற்க, நத்தார்போல இன்னொரு நாளாய்த்தான் போனது. இத்தனைக்கும், நவீனகாலத்துமேதினம் தொடங்கியது, அமெரிக்காவின் சிக்காக்கோ ஹெமார்க்கர்ட் நிகழ்வினை நினைவுகூரும் நாளாக வைத்தென்பது உபகதை.

அமெரிக்கத்தொழிலாளர்களின் சரிதம், அவர்களின் போராட்ட வரலாறு இவற்றினை ஓரளவு அறிந்து கொள்ள பீற் ஸீகர், உவூடி குத்ரி, அல்மனாக் பாடகர்கள் இவர்களின் அமெரிக்கத்தொழிலாளர் போராட்டங்கள் குறித்த நாட்டுப்பாடல்கள், ஹொவார்ட் ஸின்னின் "A People's History of the United States" என்பனவே போதுமானவை. இரண்டாம் உலப்போர் முடியும் காலம் வரைக்கும் மிகவும் காத்திரமான தொழிலாளர் போராட்டம் அவர்களினது. பின்னால், ஜோஸப் மக்கார்த்தியின் "அமெரிக்கமற்ற செயற்பாட்டு" ச் சூனியக்காரர்களைக் கழுவேற்று அரசவிசாரணைகள் தேய்த்து, தொழிற்சங்கங்களின் தலைவர் ஹொவ்காவின் காணாமற்போதலும் கொலையோடும் போராட்டப்பண்பு செத்து, வெறும் தேர்தலுக்கான வாக்குவங்கியாக முடிந்தது அவவரலாறு. பின்னாலும் அமெரிக்கக்கொம்யூனிஸக்கட்சி, அதன் தலைவர் ஹஸ் ஹோல் சாகும்வரை சின்னச்சத்தத்தோடு இயங்கிக்கொண்டிருந்தது. இப்போதும் பெயரளவிலே இருக்கின்றது.

இப்படியான சூழ்நிலையிலே அமெரிக்காவிலிருந்து கொண்டு, இன்றைய மேதினக்கூட்டங்களையும் பேஸ்புக் அறிக்கைகளையும் பார்க்கும்போது, மேதினம் என்பது வெறுங்குறியீடாக மட்டும் தேய்ந்ததுபோலவும் சடங்குபோலவுமே தெரிகின்றது.

மேதினத்தைக் கொண்டாடுகின்றவர்களிலே பலர், தொழிலாளர், விவசாயிகள் என்பவர்கள் அவர்களின் பெற்றோர் காலத்திலே நிற்காமல் மக்கள் காலத்துக்கு வந்துவிட்டார்கள் என்பதைக் கவனத்திலே எடுத்ததாகத் தெரியவில்லை. அரிவாளும் சம்மட்டியும் எத்துணை இன்னும் விவசாயி, தொழிலாளி அடையாளங்களாகவிருக்கின்றன என்றுகூட ஆய முயன்றோமா என்பதுகூடவில்லை.

இயந்திரங்கள் கைத்தொழிலாளர்களைப் பெயர்த்திருக்கின்றன. நிபுணத்துவம் கொண்ட புதுத்தொழிலாளிகள் (கணிஞர் போன்றோர்) பெருகியிருக்கின்றார்கள். அகிலமயமாக்கப்படுதலிலே ஒரு நாட்டின் தொழிலாளியும் விவசாயியும் மற்றைய நாட்டுத்தொழிலாளியுடனும் விவசாயியுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டிக்கு விடப்பட்ட்ட பந்தயக்குதிரையாகவும் நாய்ச்சண்டையாகவும் போட்டியிடுகின்றார்கள். ஒருவரின் தொழில்சார்ந்த வர்க்க அடையாளத்தைமட்டுமே கொண்டு அவரை எளிமைபடுத்தி நிர்ணயிக்கமுடியாத அளவிலே அவரின் மற்றைய பால், நிறம், பிரதேசம், மொழி, மதம் சார்ந்த பண்புகள் சிக்கலாக்கி மேலோங்கி நிற்கின்றன. தத்துவரீதியிலும் அதை அதை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டுரீதியிலுங்கூட மாற்றமேதும் குறிப்பிடத்தக்க தூரத்துக்கு இவர்களுள்ளே நிகழ்ந்ததா என்று தெரியவில்லை.

இவற்றின் பாதிப்பு எதுவுமே மேதினத்தைக் கொண்டாடுகின்றவர்களின் கோஷங்களிலும் குரல்களிலும் மாற்றங்களை அரைநூற்றாண்டாக ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தாம் சார்ந்த கூடாரங்களைத் தூசுதட்டிக் கட்டி நிமிர்த்தி நாள் முடிய, தட்டி கழற்றி மடித்துவைப்பதாக மட்டுமே ஆண்டுப்போராட்டச்சுழற்சியை முடிக்கின்றார்கள்.

தனிப்பட மேதினத்தினை ஒரு குறியீட்டுக்கப்பாலே ஒரு தாக்கம் நிறைந்ததாகக் காணமுடியாத அளவுக்கு இரு நிகழ்வுகள் அபத்தமாகத் தெரிந்தன. ஒன்று தம் சொந்த மக்கள்மீதும் தொழிலாள|விவசாய நலன்களைக் காக்கும் சட்டங்கள்மீதும் தாக்குதலையும் ஒடுக்கலையும் செய்த கட்சிகளும் ஆட்சியாளர்களுங்கூட மேதின வாழ்த்தினைக் கூறிப் பதாகைகள் தாங்கிய மேடைகளிலே அயராது பேசினார்கள். அடுத்தது, தொடர்ச்சியாக, அமெரிக்காவின் ஆசிரியர்கள் அவர்களின் சங்கங்களூடாக அவர்களுக்கான இருபதாண்டுகளாகத் தொடப்பட்டாத சம்பளவுயர்வுக்கான போராட்டத்தைக் கடந்த ஒரு மாதமாக நடத்துகின்றார்கள், அமெரிக்க மாநில அரசுகள் தொழிற்சங்கங்களை ஒடுக்குதல் குறித்த "Right to Work" சட்டங்களைக் கடந்த நான்காண்டுகளாகத் திணித்தோ திணித்துக்கொண்டிருக்கவோ முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவற்றினைப் பற்றி அகிலம் தழுவிய -அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீட்டுக்கழிப்பறையிலே தண்ணீர் வராததுக்கும் திட்டும் - நம் மேதினக்கொண்டாட்டக்காரர்கள் பேசுவதில்லை; ஆதரவுக்குரல் எழுப்புவதில்லை; சொல்லப்போனால், கவனிப்பதேயில்லை. இந்நிலையிலே உலகத்தொழிலாளர்தினம் என்பது வெறும் சுயத்தைத் திருப்தி செய்யும் அடையாளமாக மட்டுமே முடிகின்றதாகத் தோன்றுகின்றது.