கரைவு 11நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.
மாலன், த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த
Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம்.
சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே
தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டதும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டதும் செய்திகளாக இணையத்திலும் அலைகின்றன. சன் தொலைக்காட்சியிலே இருக்கும்வரையிலும் கருணாநிதி கொடுக்கும் செவ்வியின்போதும் உடனிருந்து கருத்தினைத் தெரிவித்தவர் மாலன். கருணாநிதியின் மகள் கனிமொழி வாரிசு அரசியலுக்கு வரப்போகின்றார் என்றறிந்தபோது, தமிழ் இலக்கியம் (?) அவரை இழந்துவிடுமா என்று பதிவு போட்டவரும் மாலன். ஆனால், இப்போதோ உரோமாபுரிபாண்டியனைச் சுற்றி சேதுடைத்து வெள்ளமோடுகையிலே ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே ஸ்ரீனிவாஸ ராகவன் எழுதிய கதை...அதாவது கட்டுரையைத் தமிழாக்கப்புல்லாங்குழல் வாசித்திருக்கின்றார். தன்மாநில வெள்ளத்துக்குச் சேதுகட்டாமல் உதிர்ந்த ஈழப்புட்டுத் தின்று தூங்கியிருக்கட்டுமென்று விட்டுவிடலாமேதான். ஆனாலும், "இந்தியா எனது நாடு! என் நாட்டினைப் பற்றி எவராவது.." என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பின்னூட்ட நீரோட்டங்கள் எம்மூளைக்கலங்களிலிருந்து இன்னமும் ஆவியுயிர்ப்படைந்திடவில்லை என்பதாலே உசுப்பி எழுப்பவேண்டிய கடப்பாடுடைத்தோம்.
அதைவிடவும் இன்னொன்றுண்டு; விடுதலைப்புலிகளைவிடவும் மாற்றுத்தலைமைகளைக் கொண்ட ஈழத்தமிழர்களின் நலன்/நிலை குறித்த செய்திகளை, சொல்லப்போனால், இந்து ராம், மாலன் போன்றோர் ஆர்வமுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா நலன் தொடர்பான கடந்த சில நாட்களின் செய்திகளைத் தேடினேன்; அகப்பட்டவற்றிலே சில இவை:
Asahi:
Asia: Sri Lankan government suspected of kidnapping 1,000 peopleBBC:
Lanka abuse probe 'set to fail'WSWS:
Sri Lankan government imposes new taxes to fund warAsia Times:
Mgr Ranjith meets Tamil Tigers, urges them to join peace processReuters:
Dozens die, disappear in Sri Lanka, UN must act: groupஅவரின் 125 ஆண்டுக்காலப்பாரம்பரியத்திலே வெளிவந்த புத்தக அறிமுகம் Frontline:
Shocking disclosures["இதற்கு மட்டும் இந்துவினை நம்புவீர்களா?" என்று திருப்பிக் கேட்பார் என்பது மட்டும் நிச்சயமென்பதனை சுதேசமித்திரன் தொடங்கிய ஆண்டினைக் குறித்து (
இலங்கையைச் சேர்ந்த) 'மட்ராஸ் ம்யூசிங்' முத்தையா இந்துவிலே எழுதிய கட்டுரையின் போது அவர் திருப்பிக்கேட்டிருந்தாலே தெரிவித்தது. நம்புவோம். நம்பக்கூடியவிதத்திலே ஆதாரமாக வேறெங்கும் சரி பார்க்கும்வகையிலே நூலாகவோ தரவாகவோ எம் கைவசமிருக்குமென்றால், நிச்சயமாக நம்புவோம். நவரத்தின ராஜாராமை இந்து வெளிக்காட்டியபோது, ஏற்கனவே வெளிக்காட்டியவர்களின் கட்டுரைகளை, விவாதங்களை நேரடியாகவே வாசித்திருந்தவர்களென்பதாலே நம்பினோம். அதுபோலவே, இங்கும் நம்புவோம். வேறு ஆதாரங்கள் இருக்கும்போதும், இந்துவையும் புரொண்ட்லைனையும் நாங்கள் ஆதாரம் இவ்விடங்களிலே காட்டுவது, அவை சொல்வதிலே எவ்விதத்தவறும் இருக்கமுடியாதென்று சொல்லும் மாலன் போன்றவர்களோடு வாதாடுவதிலிருந்து சிரமங்களைக் குறைக்கும் என்பதற்காகமட்டுமே]
இத்தகு இலங்கைச்செய்திகள் பற்றியும் அவர் பேசியதாகத் தெரியவில்லை. புலிவாலைப் பிடித்துத் தொங்குவேன் என்றிருக்கின்றார். சில வேளை, சில நாட்களின்முன்னால்,
கொழும்பிலே "பத்திரிகையாளர்கூட்டத்திலே" ஸ்ரீலங்கா அரசின் கோலோச்சலை விதந்தோதிய இந்து இராம் அவர்களை ஈழத்தமிழர்களும்
அவர்களது ஆதரவாளர்களும் மேலோன் என்று நினைத்துக்கொள்ளவேண்டுமென்ற நன்நோக்குடன், "
அப்பனாவது உமியைக் கொடுத்தான்;
மகன் அதையும் பறித்தான்" கதை நிகழ்த்திக்காட்டும் உன்னத தியாகநோக்கு உள்ளே மறைந்திருக்கின்றதோ என்றும் அறியேன் நான்.
ஆக, தமிழகத்தின், இந்தியாவின் சேதுசமுத்திரக்கொந்தளிப்பு, இப்படியான ஈழ-ஸ்ரீலங்காவின் நலன்கள் குறித்த செய்திகள்கூட, இவருக்கு இந்நேரத்திலே முக்கியமில்லை. ஆனால், ஆங்கிலம் வாசிக்கத்தெரியாத, ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாசித்துப் புரிந்துக்கொள்ளவேண்டி, த ரைம்ஸ் ஒப் இந்தியா அரைவேக்காட்டுக்கட்டுரையைத் தமிழிலே பெயர்ப்பது முக்கியமாகின்றது என்றால், இதனை என்னவென்று சொல்வது? அதுவும் ஒரு பண்பட்ட பத்திரிகையாளர் என்ற மேலாடையை முழுக்கவே களையும் நடனம் ஆடிவிட்டு, நிர்வாணமாகவே நின்று ஓர் ஆரம்பநிலைப்பதின்மப்பருவப்பதிவர்போல பின்னூட்ட வார்ப்புருக்குஞ்சம் கட்டிப் பதிவு போடும் இவரின் இக்குறித்த இடுகையினை இவரது இந்து நண்பர் ராமே நாகரீகமானதென்று ஏற்றுக்கொள்வாரோ தெரியாது. இணையத்திலேகூட, அவரது ஈழம் தொடர்பான பதிவுகளை
மதித்து வாசிக்கும் வகையினர் மூவர்; ஒரு பெரிய பத்திரிகையாளர் என்றளவிலே அவரை, என்ன எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் வாசகர்கள், ஈழ/புலி எதிர்ப்பிலே அவரின் பதிவிலே அச்சொற்களைக் கண்டாலே அவற்றையொட்டிப் பதிவு போடுகின்றவர்கள், அவரை எதிர்கொள்வோர் பலரைப் போலல்லாது அனுபவமும் நிதானமும் கருத்துமுள்ள ஒருவர் என்றளவிலே வாசிப்பவர்கள். இவ்வகையினரிலே இந்த மூன்றாம் வகையினர் அவரின் அண்மைக்காலப்பதிவுகளுடன் அவரின் ஈழத்தமிழர்கள் தொடர்பான 'உரு'வினைத் தெட்டத்தெளிவாகக் கண்டு ஒதுங்கிக்கொண்டிருக்கக்கூடும். மிஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச அவர் குறித்த நற்கருத்துங்கூட, மேலே நான் சொன்ன அவர் இவ்விடுகை போட எடுத்துக்கொண்ட அவகாலம், நோக்கம் கண்டதுடன் அடிபட்டுப் போயிருக்குமென்றளவிலே அவரின் இவ்விடுகைக்கு நன்றி.
வலரி ப்ளேம் குறித்த கேள்விகளின் உக்கிரம் தாங்காமல், சிஎன்என் நேரடி ஒலிபரப்பின்போது, நுண்ணொலிவாங்கியைச் சட்டையிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு, கோரமுகத்துடன் வெளியேறிய பொப் நோவாக் இவ்விடத்திலே ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை. [
போலி அல்லக்கைத்திராவிடத்தமிழர்.எதிர். போலி ஆகாக்கை திராவிடத்தமிழர், சுகுணா திவாகர்.எதிர். வளர்மதி, தமிழச்சி.எதிர்.தமிழ்பித்தன் என்று கவனம் சிதறிய வலைச்சூழலிலே இவரின் இவ்விடுகை வந்திருப்பது அவகாலமென்று சொல்லமுடியுமா என்பதிலே எனக்குச் சந்தேகமுண்டு].
சுருக்கமாக, த ரைம்ஸ் ஒப் இந்தியா கட்டுரையைப் பார்ப்போம்; அதிலே இருக்கும் கதையை வேறொரு சமயமாயிருப்பின், பிய்த்துப்பிடுங்கி நார்நாராக்கியிருப்பேன். இணைப்புகள் தேடவோ, கோவையாக எழுதவோ கணணி, இணைய, நேரவசதி மிகவும் கொஞ்சமே என்பதாலே இச்சந்தர்ப்பத்திலே முடியாதிருக்கின்றது.
தமிழகத்திலிருக்கும் வாசகர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலேயிருக்கும் வாசகர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலிருந்து இந்திய அரசியலை, தென்னாசிய அரசியலை (
ஏன் அமெரிக்க அரசியலும் அடக்கம் :-)) காணும் எவருக்குமே இந்த வாரிசுக்கடத்தல் என்பது தெளிவாகவிருக்கும்; இஃது அரசியலிலேமட்டுமல்ல, திரைப்படத்துறை, எழுத்துத்துறை, வர்த்தகம், -அட பத்திரிகைத்துறையைக்கூடப் பாருங்கள் (
இந்து, ஆனந்தவிகடன், கல்கி எல்லாம் வாரிசு இல்லாமலா கடத்தியிருக்கின்றார்கள்?)- எல்லாவிடத்திலும் பரவியிருக்கின்றது. சொல்லப்போனால்,
மாலன் அவர்களே இந்த வாரிசுவிளையாட்டினைப் பற்றி அகில இந்திய அரசியலினை மையப்படுத்தி எழுதியிருக்கின்றார்.
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜகஜீவன் ராமின் மகள் மீரா, முன்னாள் துணைப்பிரதமர் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி, முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஷரத் பவாரின் மகள் சுப்ரியா, ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், பாரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா,ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அவரது சகோதரியும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான விஜயராஜே சிந்தியாவின் மகனுமான துஷ்யந் சிங், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகன் சந்தீப், மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த், மு·தி முகமது சயீத்தின் மகள் மெஹ்பூபா, மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மறைந்த முன்னாள் அமைச்சர் சுனில்தத்தின் மகள் பிரியா, மறைந்த முன்னாள் அமைச்சர் பகுகுணாவின் மகன் விஜய் பகுகுணா,பா.ம.க.நிறுவனர்டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, திமுகவின் நிறுவனர்களில் ஒருவரான ஈவிகே சம்பத்தின் மகன் இளங்கோவன் என நாடாளுமன்றம் ஏற்கனவே ஏகப்பட்ட வாரிசுகளால் நிறைந்து கிடக்கிறது.
எனவே கனிமொழி நாடாளுமன்றத்திற்குள் நுழைவது பெரும் சலசலப்புக்களை ஏற்படுத்திவிடாது."
- மாலனின் கட்டுரையிலிருந்து
இப்படியாக, நிலை எல்லோருக்கும் புரிந்திருக்க, ஸ்ரீனிவாஸ ராகவன் இதை திராவிட அரசியலுக்கே உரித்தான வாரிசுப்பண்பு என்று காட்டி, அதையும் இன்னும் சேதுவையும் மேடுடுத்தி வீதி சமைத்துக் கொண்டுபோய் வன்னிக்காட்டிலே பிரபாகரனுக்கும் பிள்ளைக்கும் (
அட, அவர் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்!) பொருத்துவது கொஞ்சம் தெளிவான இந்திய வாசகர்களுக்கே கிச்சுக்கிச்சுமூட்டிவிடும். ஆனால், நமது மாலன் அவர்களுக்கு கிச்சுக்கிச்சுமூட்டவில்லை.
பொறுக்கி, இராம் பூனையென்றால், அவரின் மகள் பூனைக்குட்டியாகத்தான் இருக்கவேண்டுமா என்று, மாலன், என்னிடம்
26 வயது வித்யா இராம் பற்றிச் சொன்ன அதே தோரணையிலே எழுதியிருக்கின்றார்.
பிரபாகரனின் 22 வயது மகனின் கடவுச்சீட்டு ஸ்ரீலங்கா கடவுச்சீட்டாகத்தான் இருக்கவேண்டுமா என்று கிண்டலாகச் செய்தி வெளியிட்ட இந்துவிடம் கேட்காத கேள்வியைக் கேட்டுவிட்டதாகவே கொள்வோம். ஆனால், பிரபாகரன் விமானப்படைக்கல்வி அயர்லாந்திலே தன் மகனுக்குக் கற்பித்து மீண்டும் வரவழைத்துக்கொண்டது, குடும்பத்தொழிலான "பயங்கரவாதத்திலே" ஈடுபட என்று ஸ்ரீனிவாஸ ராகவன் எழுதி, மாலன் தமிழிலே ஆங்கிலம் தெரியாத நாட்டிலே குடியேறிய ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும்போது,
சுப்பிரமணிய அய்யரிடம் வாங்கிக்கொண்ட இந்துவினை கஸ்தூரி ஐயங்கார் குடும்பம் தொடர்ந்து பாகம் பிரித்து வருவதும் குடும்பத்தொழிலாக மேற்கொள்வதும் பாகம் சரிவரப்பிரியாதபோது, அலுவலகத்துக்கு வரமாட்டேன் வீட்டிலிருந்தே வேலை செய்வேன் என்று அடம்பிடிப்பதையுங்கூட நான் தனியாள் தாக்குதலில்லையென்றும்
குடும்பத்தொழில் சார்ந்து வரும் தொடர்பாகக் காட்டலாமென்றும் இங்கே சொல்கிறேன்.
பிரபாகரன் கொல்லப்பட்டதாக,
இந்திய அமேதிப்படை ஈழத்திலிருந்த நேரத்திலும்,
சுனாமி நேரத்திலும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சூசை கொல்லப்பட்டார் என்றும் இரு தடவைகள் (2004, 2007)
சூசை வெள்ளிக்காசுக்காக காட்டிக்கொடுப்பாரென்றும் சூசை வெளிநாடு போய்விட்டாரென்றும் சந்தர்ப்பங்களுக்கேற்பச் செய்திகள் தந்ததும் இவ்வூடகங்களே.
பதுமன் கொல்லப்பட்டதும் இப்படியே சொல்லப்பட்டது. சொல்லப்போனால், சோதனை செய்விபத்தொன்றிலே சூசை காயமுற்றதும் அவரது மகன் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தபோது, புலிகள் சார்பான செய்தித்தளங்கள் கொஞ்சமேனும் அதைக் கசியவைத்ததைப் பார்க்கும்போது, அவற்றின் கருத்துச்சுதந்திரம் அவற்றினைக் குற்றம் சாட்டுகின்றவர்களிலும்விட மேலென்று தள்ளிநின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றக்கூடும். அண்மையிலே குமரன் பத்மநாபன், அகப்பட்டாரா இல்லையா என்றதிலே இலங்கை, இந்தியசெய்தித்தாபனங்கள் மட்டுமல்ல, உலகச்செய்தித்தாபனங்களே குழம்பிவிட்டன. அதனால், அவர்களைக் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், பி. ராமன், (
அவருடைய விழைவாசையினாலோ என்னவோ), குமரன் பத்மநாபனை
அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறை தாய்லாந்து அரசிடமிருந்து அல் ஹைடா தொடர்புகளுக்காகப் பிடித்துப்போயிருக்கலாமென்று திருவாய் மொழி பாடியிருக்கின்றார். இவர், கேர்ணல். ஹரிஹரன் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வெளியே சொல்லமுடியாத அறிக்கைகளை வைத்து, அல் ஹைடா-புலிகள் வாலை ஆட்டி, பலரைக் கிச்சுக்கிச்சு மூட்டவும் சிலரை கிருதியிலே ஆழ்த்தவும் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அதைவிடச் சிரிப்பானது, இந்தியப்பு(ல்)லன் ஆய்வு இணையத்தளம் (
மற் ட்ரட்ஜின் ஸிலட்ஜே பரவாயில்லை :-)) politicsparty.com இன் நகைச்சுவையெல்லாம் நம்பி கேரளா.கொம்
Thai police received 20-mln-dollar bribe to free LTTE's Padmanathan: Web site என்று செய்தி வெளியிடும் கூத்து.
இவர்களுக்கெல்லாம் ஸ்ரீனிவாச ராகவனுக்கும் ஆதாரமான சிங்கப்பூரிலே அமைந்த International Centre for Political Violence and Terrorism Research இன் ஆராய்ச்சியே காரணமென்றால், அதுவும் கிச்சுகிச்சுமூட்டும் சங்கதியே. இவ்வாராய்ச்சிநிலையத்தின் தலை(வர்) ரோஹான் குணரட்னவைப் பற்றி, மாலன் போன்ற பத்திரிகையாளர்களே இணையத்திலே தேடி அறிந்துகொள்வதும் அவருடைய ஈழத்தமிழர், விடுதலைப்புலிகள் குறித்த புத்தகங்கள் குறித்த பார்வைகளையும் பார்த்துக்கொள்வது நல்லது. வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால், கண்டி அடிப்படைக்கற்கை நிலையத்திலிருந்து அவரின் சொந்தக்கதையும் தெரியுமென்ற விலாசம் சொல்லித் தொடங்கி வலை இணைப்பு இணைப்பாக ஆளைப் பிய்த்து உதறியிருப்பேன். இப்போது வசதிப்படவில்லை. [
இத்தனைக்கும் குணரட்ணவின் ஆய்வுநிறுவனம் கீழேயே, A Center of the S. Rajaratnam School of International Studies என்று போட்டுக்கொள்வது முரண்நகை. சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த இராஜரட்ணம் யாழ்ப்பாணத்திலே பிறந்தவர் :-(]. ரோஹான், அவுஸ்ரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்கு, 2001 செப்ரெம்பர் 11 இன் பின்னால்,
விடுதலைப்புலிகள்தான் உலகவர்த்தமையத்தினைத் தாக்கியிருக்கலாம் என்று கொடுத்த வல்லுநர் செவ்வி புகழ் வாய்ந்தது :-) இணையத்திலே sangam.org, tamilnation.org இவற்றிலே தேடினால் ரோஹான் குணரட்ன பற்றி, ஈழத்தமிழ்ச்சார்புள்ளவர்களின் கட்டுரைகளைக் காணலாம்.
சச்சி ஸ்ரீகாந்தா,
பிரையன் செனவிரட்னா, தங்கவேலு (
இவரின் கருத்துகளைக் கொஞ்சம் நிதானமாகத்தான் சரிபிழை பார்த்து ஆயவேண்டும்) ஆகியோரின் கட்டுரைகள்.
இதிலே சுவராஸ்யமான விடயமென்னவென்றால், International Centre for Political Violence and Terrorism Research இலே தேடியபோது, மேற்கண்ட செய்தியை இன்னமும் நான் காணவில்லை. சரியாகத் தேடவில்லையோ தெரியாது. ஆனால், சென்ற வாரத்து அறிக்கை ஸ்ரீலங்கா [
Weekly Report - Sri lanka 10 – 16 September 2007]என்று ஒரு பகுதியிருக்கின்றது. அதிலே அவ்வாரப்புலனாய்வுச்செய்திகளைத் தயாரிக்க உதவியாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆறு ஆதாரங்களிலே, மூன்று, இந்துவின் முரளீதர ரெட்டிக்காரு சுட்ட கோதுமை ரொட்டி, இரண்டு, இலங்கையின் சண்டே ரைம்ஸ் செய்திகள், ஒன்று தேசியபாதுகாப்புக்கான ஊடகமையத்தின் செய்தி. இப்படியான ஆய்வறிக்கைக்கெல்லாம், ஓர் ஆய்வு மையம் ஒரு கேடு! (
இணைய வசதியிருக்கையிலே இதைவிடச் சிறப்பாக, வலை அகழ்வாராய்ச்சி செய்து உன்னத ஆய்வறிக்கை நான் "I Can't Believe It's Not Butter" இலே சுட்டுத்தள்ளுவேனே!) இதிலே, முரளீதர ரெட்டிக்காருவுக்கு ரொட்டிக்கான மாவு யார் கொடுத்தார்கள் (
சுடுவதற்கு அண்ணா சாலையிலே அடுப்பமைத்துக் கொடுத்தவரைத்தான் எமக்குத் தெரியுமே!! :-)) என்பதைக் கொஞ்சம் பார்த்தால், திரும்ப கொழும்பிலே பாதுகாப்பு அமைச்சரக, இராணுவ முகாம் வாசல்களிலே போய்நிற்போம். ஐயோ!
இப்படியான வடை ஊசிப்போகமுன்னால் அள்ளி ஸ்ரீனிவாஸ ராகவன், ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் கருத்தினையும் தூவி, வடைக்கறி,
Power struggle surfaces in LTTE over successor செய்கிறார். அதை மாலன் தமிழ்ப்படுத்தி, அப்பாவி
வேர்னாகுலத்தவ
ர் எமக்கு தந்துகொண்டிருக்கும் அதேவேளையிலே, இன்னோர் நரியைப் பரியாக்கும் அதிசயமும் திருக்கொழும்புப்பெருந்துறையிலே நிகழ்கிறது. ஸ்ரீனிவாஸ ராகவனின் கட்டுரையை ஸ்ரீலங்காவின பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமே அப்படியே,
Times of India see a rift in the LTTE Hierarchy என்று செய்தியாகப் போட்டு, வேலிக்கு ஓணானும் ஓணானுக்கு வேலியுமென்ற சுற்றினை முழுதாக்குகின்றது. இந்நகைச்சுவையிலே பெருஞ்சுவை என்னவென்றால், ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இத்தளம் உள்ளடக்கிய இந்த the times of india செய்தியிலே "
The Sri Lankan defence ministry wrote on its website last month that eight LTTE tax collectors were executed by its leadership at Vattakachchi in Killinochchi. Pottu Amman, the LTTE intelligence chief and the second-most powerful man after Prabhakaran, had charged the officials with misappropriation of money" என்ற சுயம் சுட்டுஞ்செய்தி அடக்கம். ஆனால், செய்தி முடிந்தபின்னால், கீழே நீலத்திலே, ஓர் அருமையான கருத்து,
The Ministry of Defence bears no responsibility for the ideas and opinion expressed by the numerous contributors to the “Opinion Page” of this web site.பாதுகாப்பு அமைச்சுக்கு நாம் என்ன குறைவோ என்று ஸ்ரீலங்கா இராணுவ(வலை)த்தளமும்
Prabhakaran in Hot Water Over Son – Times of India அள்ளி அணைத்திருக்கின்றது. அதுவும் நேரடியாக இல்லை; இலங்கையின் சிங்களவலதுசாரித்தனம் கக்கும் The Island, Times of India இலே வந்ததை எடுத்துப்போட, அதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் நன்றி சொல்லி தன் வலைத்தளத்தில் எடுத்துபோட்டிருக்கின்றது. 'இதென்ன குலம் ஒன்று கோத்திரம் வேறென்று ஒன்றுக்குள் ஒன்று மணம் செய்து உறவு பாராட்டும் உத்திபோல?' என்று ஆச்சரியம் தோன்றவில்லை; 'இவர்களின் நகைச்சுவை உணர்ச்சிக்கும் மற்றவர்களை முட்டாள்களாகக் கருதும் திமிருக்கும் எல்லைகளில்லையா?' என்றுதான் தோன்றுகிறது? :-(
ஆக, சாரமாக, ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தரும் செய்திகளை வைத்து, இந்து, கொழும்புச்செய்தித்தாபனங்கள், ஸ்ரீலங்கா அரசுசாரூடகமையங்கள் தரும் செய்திகளை வைத்து ரோஹானின் மையம் வாரக்குறிப்பு வெளியிட, அதையும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சினையும் ஆதாரமாகவைத்து த ரைம்ஸ் ஒப் இந்தியாவுக்காக ஸ்ரீனிவாஸ ராகவன் நாட்குறிப்பு வரைய, அதைத் திரும்பவும் சொந்தப்படுத்துக்கொள்கிறது ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு என்பதாகத்தான் இருப்பை வைத்து, circular reference விளையாட்டு எனக்குத் தோன்றுகின்றது. இதிலே பக்கவாட்டுவிளைவு மாலனின் மொழிபெயர்ப்பு. ஊரை எரிக்கிற அனுமானின் வாலைப் பிடித்து அதிலே எமக்கு நாட்டுநடப்பு வெளிச்சம் காட்டுகிறார். என்னத்தைச் சொல்ல!!
இப்படியான செய்திகளை வாசித்துத் தமிழ்படுத்தும் மாலனுக்கு, வலைப்பதிவிலே மாலன் என்ற பதிவர் சில நாட்களின் முன்னாலே எழுதிய
சந்தை தின்னும் ஊடகங்கள் என்ற அருமையான இடுகையைப் பரிந்துரைக்கின்றேன். மிகவும் தெளிவாக, இப்படியான உப்புக் கைக்கொண்டு வாசிக்கவேண்டிய புலனாய்வுச்செய்திகளை நம்புவதிலே (தமிழாக்கி, தமிழ்நாடு சேது மீறி அலையடைத்துப் பெருகும் வேளையென்றும் பாராது பதிவிலே இடுவதெல்லாம் பிறகு வருவது) இருக்கும் சிக்கல்களையும் ஆபத்துகளையும் சொல்லும் கட்டுரை.
மாலன் எதிர்பார்த்தபடியே அவரின் உயிரெழுத்து வார்ப்புருவின்பின்னால், சில ஈழத்தமிழ்க்குஞ்சுகளோ, அல்லது அவை என்று போலி செய்கின்றனவோ எழுதி அவருக்குக் 'கோரம்' சேர்த்திருக்கின்றன. இதைத்தானே எதிர்பார்த்தார், பாலகுமரன் நண்பர்? :-) [நிற்க, மாலனுக்கு ஈழத்தின் யாழ்ப்பாணப்பேச்சுவழக்கு மிகவும் இடறுவதாகவும் அவரவர் அவரவர் நடையிலே பயில்வதே அழகாயிருக்குமென்றும் யாரேனும் சொல்லக்கூடாதா? :-(
எனக்கும் அறுபடை ஆறுமுகன் தொடக்கம், வீரபாண்டி ஆறுமுகம் ஊடாக, தீப்பொறி ஆறுமுகம் வரைக்கும் தெரியும். ஆனால், அவர்களைப் போல எல்லாம் சீரியஸா பேச முயற்சி செய்கிறேனா? :-)]
ஆனால், இலங்கையிலிருந்து மாயா போன்று
"ஈழத்தமிழர்களும் தந்தை பெரியாரும்" போன்ற அப்பாவித்தனமான பதிவுகளை இடுகின்ற பெரும்பாலான (
நானும் ஓரளவுக்கு அடக்கம்) ஈழத்தமிழர்களை காலப்போக்கிலே, இணையவசதிகள் பெற்றபின்னரோ, புலம்பெயர்ந்தபின்னரோ,
"தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு இந்தியா நேரடியாக பேசாது என்ற இந்து "ரா"மின் கூற்று உண்மையா?" என்பது போன்ற கட்டுரைகளை எழுதத்தள்ளுவதிலே, மாலன், ராம், சோ, சுப்பிரமணியசுவாமி, இவர்களின் அலைவரிசைகளிலே தமிழ்ச்சேவை நிகழ்த்தும் சிலரே காரணமாகின்றனர் என்பதை இவர்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகின்றார்களோ? :-(
பின்னூட்டங்களைச் சந்தர்ப்பம் கிட்டும்போதுமட்டுமே, அனுமதிக்கமுடியும். எனக்கேதும் பதில் சொல்லத் தேவையிருப்பினுங்கூட, உடனடியாக சில வாரங்களுக்குச் சொல்ல முடியாதிருக்கும்.
- உயிர்முடிந்து மெய் தொடங்க எம் ஆயுத எழுத்தே முதல் :)
எம் வார்ப்புருபஃறுளி வெள்ளத்தும் அஃகான எஃகென்றிரு(போம்)