not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Wednesday, February 15, 2006
பழசு - 1
Lame Excuse என்ற நொண்டிச்சாக்கு
ஆபாசமாக எழுதி அழிந்து கிட்டத்தட்ட நாலைந்து நாட்கள் ஆகிவிட்டதால், திரும்பவும் எழுதவென இழுக்க ஆடை வந்தது... அடச்சீ... இருக்க ஆசை வந்தது. ஆனால், காமம் சிரசடித்ததால், எழுத்து வரவில்லை. அதற்காக, ஆபாசமாக எழுதாவிட்டால், என் பெயர் என்னாவது, எவராச்சும் எனக்குரிய அந்த ஆபாசபீடத்தை இழுத்தெடுத்துக் குந்திவிட்டாலும் என்ற பயம் மேவியதால், ஆபாச_பழசுகளிலே இரண்டை இழுத்துப்போர்த்து.... அதாவது போட்டு பீடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். ஆபாசம் போதாவிட்டால், அறியத் தரவும். ஆனி ஞமலிகளின் அலைச்சலும் உளைச்சலும் பற்றி ஆபாசமாக எழுதியதை மீள இடுகிறேன்.
எனது ஆசிரியர் ஒருவர் கூறுவார், "ஞமலிகளிலே இருக்கும் சிறப்பான இயல்பைக் கவனித்திருப்பீர்களோ தெரியாது. அவற்றின் உடல்களிலே எங்கேயும் கல்லால் அடியுங்கள். உடனே காலைத்தான் தூக்கி ஊளையிட்டுக் கொண்டோடும். வாலை எப்படி நிமிர்த்தமுடியாதோ அதுபோலவே கெண்டக்காற்றசையின் அடிக்கடிக்கு அலைந்து கல்லால் அடிக்கடி அடிவாங்க, காலைத் தூக்கி ஊளையிட்டோடி, கொஞ்சம் நேரம் பதுங்குவதையும் தவிர்க்க முடியாத பாவப்பட்ட சென்மம்."
--------
குரங்குப்பொம்மைக்கொலு
நவராத்திரி முடிய
குரங்குப்பொம்மைகளின்
குழுக்கொலு.
புதிதாகச் சேர்ந்தவை
இரு மந்தி.
தீயதைக் கேளாதே
தீயதைக் காணாதே
தீயதைப் பேசாதே;
சட்டம் சொன்னது
- பெருந்தீட்டு.
தீயதைத் தொடாதே
தீயதை முகராதே;
மருத்துவம் சொன்னது
- பெருந்தீங்கு.
மந்திக்கொன்றாய் தன் புலனடக்கல்.
"குறியின்றிக் குதிக்கப்பிறந்தவையா
குந்திக்கொலுவிருக்கப் பிறந்தவையா
கொப்புக்குரங்குகள்?"
- கேட்கமுன் காண்க,
எங்கும் ஐம்பொறியும் ஒன்றாய் அடக்கிய ஆறறிமாக்கள்
27 Oct., '01
====
தீக்கங்கு
உராய்வு; காலங்காலமாக பார்த்தும் முகர்ந்தும் இருந்தபின், காற்றுக்கும் அவை மேல் வேடிக்கையின் சுதி மீறித் தட்ட, மோகமோ கோபமோ......மேனி முட்டித் தேய்த்து, பின் தவறோவென சட்டென விலகிக்கொண்டன இரட்டைத்தண்டுகள். முற்றென முற்றியவையல்ல; மாறாய், முனை பச்சைப்பால் சொட்டும் பீலிச்சொண்டு கொள் பாலகத்தண்டுகளுமல்ல; காலத்தட்பவெட்பத்தே புறமேனி சுவறிக் காயவும், தாபவெம்மையால் பால் பாசியாய்ப் படர்ந்து பசையாய் ஒட்டியும் ஓடியும் கிடக்கும் உள்ளத்தவை; தழுவித்தேய்த்தலின் இறுக்கத்தூடும்கூட கேலிக்காற்றூடி, சிலதாய் பிய்த்துப் போனது வற்றிய காலப்பட்டை.. கணம்முன் கட்டி ஒட்டியவை -முத்தம் ஒரு குற்றம்- களங்கம் ஒவ்வாதென விலகி, மோகமுனை முறித்து எதிர்ப்புறம் சடை சரிந்தாட, கொட்டியது பித்தச்சுவாசம். பிய்த்துப்போன பட்டையிலே தூங்கிக்கிடந்தது -காமமோ குரோதமோ- சிகை சிலுப்பி, சிலிர்த்துத் துள்ளி காற்றின் சங்காத்தத்திலே ஊதிக்கொண்ட விடுதலைக்குழலிலே, சூல்கொண்டு ஓர் ஒளிர்வெப்பத்துளியாய் சொட்டிமுகிழ்த்தது குழந்தை....... படைத்தோன் விந்தும் பக்குவப்படுத்திய சூலும் யாரென்று அறியாமல் தன் அடையாளம் கேட்டு வானும் மண்ணும் செவி வீங்கிப் பொத்த வீரிட்டு அலறியது தீக்குழவி. மரத்தண்டுகளுக்கு, சடத்தின் இருப்பு சடைத்துப்பூத்த சொந்த முகங்களிலே, பரியென மூசும் குஞ்சுத்தீயின் மூச்சுச்சக்தி, தமதிருந்தும் வேறாய்த் தெரிந்தது. காட்டுக்காற்றுக்கு, "ஏகி ஏவினேன்; பின் காவினேன்" என்று மட்டும்தான் அடித்தொண்டையிலே கரகரக்கமுடிந்தது. தீத்துளிர், தன்னைத் தனக்கு அறிமுகம் சொல்லென்று திகுதிகுத்து அலற, கதைசொல்லும் கார்த்திகைபெண்ணாய், ஆசுவாசப்படுத்த தூக்கித் தளரத்தவழத் நடத்தியது காற்றுத்தூறல்.
தன்னைக் குனிந்தும் வளைந்தும் குதித்தும் அறியப் பார்த்தது குஞ்சுத்தீ. தரையிற் தலைமுட்டும் முதற்கணம்; குதிர்ந்து, குதியைக் குப்புறப்போட்டுக் குலுக்கும் பின்னொருபோது. 'நீள்தங்கத்தொளிப்புறமும் நீலவங்கத்துவெப்பகமும் இடைப்படுவிருட்டுளையும் நிலையில்வடிவும்' - இத்தனையும்தான் இருப்பிலே நெருப்பு-நானோ!! வேள்விக்குறியாய் நாண் வளைத்து வில்லிருந்து இடம்விட்டு வெளிப்போயின இடம்விடாமலே வினாச்சரங்கள். தன் முகிழ்ப்பின் முதலும் இருப்பின் சிறப்பும் எதிர்ப்படும் எதிலும் எதுவென்று, நா வளர்த்து வினாவிடாய் வேண்டிநின்றது.... "எங்கே எனக்கான தண்ணீர்??" "இரு விருட்ஷங்கள்தம் காலகாலத்து கனவுமோகத்தினை ஆற்ற, நான் இடையூடி, கூடிக் களிக்க விட்ட கணத்தே, கூர்பதித்து குதியுதைத்து உடைந்து வந்தவன் நீ" என்று தாழ்பிசிர்க்குரல் தழல் செவியில் நீவிப் பதித்தோதி பேச்சின் திசை பிரித்துத் திருப்பியது காற்று. [தீக்கு, தன் பால் பற்றியும் அக்கணம் கேள்வி பிறந்து உள்ளூரக் குடைந்தது.... "நான்- அவளா, அவனா, பாலிலியா, ஈரிலிங்கியா???" அது பருகப் பற்றிக்கொண்டவை யெல்லாம் அதன் தகிப்பினைத் தாளாது வெடித்தும் உட்சுருண்டும் கருகி உரு மாளவும், தன்சூட்டினைத் தன்னுள்ளே தானுணரமுடியாத் தீக்குள்ளே பாலுணர்வு உந்தித் துடிக்காததை எண்ணி ஒரு குறை இருந்தது... . . பால்கூட, ஏதோவொன்றை இ·தென் வகுப்பு எனச் சார, கூட ஓர் அடையாளம்தான்] "பெருமரங்கள் தம் கிளர்த்த உளைவு இளக்கி, இழக்கப் பிதுக்கித்தள்ளவோ இங்கு நான்?" - கேள்விகள் மட்டுமே கொண்டலைந்த தீ, காற்றின் பதில் கனியமுன்னரே, மோகத்தே தன்னைப் பெற்றாராய்ச் சுட்டப்பட்டவையைப் பற்றிக்கொண்டு உள்ளும் புறமும் ஊடுருவித் தேடியது தன் முற்கால முடக்கத்திருப்பிடம்; கணமோகத்துமுத்தத்துக்காய், தீமுத்தொன்று வழியச் சொட்டியதற்காய்க் கரியாய்ப் போயின காதல்வயப்பட்ட கனிமரங்கள். கரியுள்ளும் மினுங்கு சிறு துகள் துகளாய்க் கனன்று நெளிந்து தேடியது தன் ஆதியை, அங்கம் அகன்று அழிநெஞ்சம் பருத்துப்போன கங்கு. 'மரங்களுள் மறைந்திருக்கவில்லை என் மூலம்; இன்னும் என் பிறப்பின் ஒழுக்கிலே பின்புறமாய் வழுகிப்போயும், என் வேரைப் பற்ற முடியவில்லை'; அலறி, அங்குமிங்கும் காற்றினை நோக்கிக் கை அகல, கௌவத் தாவியது. கலக்கத்துடன், காற்று இப்போது தீயிடமிருந்து தானோடத் தவித்தது; தீயின் பிறத்தலுக்கு மட்டும் மருத்துவிச்சி என்றெண்ணிய பெருமிதத்தின் மினுங்குதல் பொடிபட்டு மடிய, கனலின் கனல்தலுக்குத் தானே காரியவான் என்று குற்றத்திலே தனக்குத் தானே கூவி, கிறுகலுடனும் சுழல்தலுடனும் சாடிக் கடிந்து கொண்டது. "நீ அவையுள்ளிருந்தாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நீ பிறந்த கணம் அவை இரண்டும் தம்முள் ஆரத்தழுவிக்கொண்டதை அறிவேன்; அந்தக்கணத்திலே சொட்டிய உன்னை, சூடு தணிக்கப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு வந்தேன்".......
விடைத்த வினாக்குள் அல்லலுற்ற அனல், தன் போக்கறியாது கண்டதையும் பற்றித் தேடி தனக்கொரு கண் திறக்கத்தாவியது. . . . . மர அணிலைப் பற்றிக்கொண்டது; மண்புழுவை, மாவண்ணத்துப்பூச்சியை, இறந்த வரள்குற்றியை, இயங்குகறையான்புற்றை, ஈரப்பச்சைப்புல்லை... . . . எரிகின்ற உயிர்களின் தவிப்பின் இறுதிவெடிப்பிலும் முறுகிக் கருகும் உடல்களின் பேதமுற்ற கனிமச்சேர்மங்களின் நிறங்களின் தகிப்பிலும் கணத்துக்கொன்றென தனக்கோர் ஒலியையும் உருவையும் -பற்றியபோதெல்லாம்- பெற்றுப்பெற்றுத் தேடியது தன் மூலம். சாதிபேதமோ, சரீரபேதமோ, திசைபேதமோ காணாமல், கண்டதையும் விழுங்கித் தான் வளர்ந்து, காற்கிளை சென்றகால் ஆலெனப் படர்ந்து ஆடுகளம் நகர்த்தியது அக்கினி. . . .. எரிக்கின்ற கணத்திலும் ஒலியும் ஒளியும் வகைப்படத் தோன்றியபோதும், சார்ந்ததினைச் சார்ந்து எரியும் சடத்தின் இறப்புக்கு, தன்னூடே சரீரமும் சாரீரமும் கொடுத்தலின்றி, தனதென்று எதையும் தனியப் பிரித்துப் பிரதிபலிக்கமுடியவில்லை. 'உராய்வுக்கு முன்னர் எனக்கோர் உருக் கிடந்ததா? இல்லையேல், என்னை இட்ட விந்து எது? இத்தனைநாள், சத்தமின்றி என் தொப்புட்கொடியிணைய நானொடுங்கிக் கிடந்த சூலெது? "
இனியும் அது சுட்டுவிரலுயரக் குட்டிக்கங்கில்லை; அவியனற்கைகளும் கனல்கனகக்கிளைகளும் ஆடுசெஞ்சடையும் விரித்து, தாண்டவமாடும் அழிவுகாலத்து ஆண்டவன். குழந்தைகளையும் குடியிருப்புகளையும் முகர்ந்து பார்த்து மூச்சிறைத்துக் கொப்பளித்தது தன் ஆற்றாமையின் ஆவேசம். எல்லாமே ஏதோவோர் அடையாளத்தைத் தமக்கெனக் காவிக்கொண்டு திரிந்தன. . .. . . இன்னாரின் ஆண்குழவி . . . இத்தனை அகவை . . . . இத்தனை உயரம் . . . .. இன்னாரின் இல்லம் . . .. இந்தக்கிராமத்தின் -இந்தமூலையில் -இந்தத்தெருவின் -இத்தனையாம் இலக்கத்திலே -இந்த மூலப்பொருட்களினாலே -இத்தனையாம் நாள் -இத்தனை பேரால் சமைக்கப்பட்ட. . .. இன்ன தேவைக்காக... .. அல்லது இந்தச்செயலின் விளைவாக.. .. . . இவை பற்றி எல்லாவற்றையும் திடமாக வரையறுத்துச் சொல்லமுடிகின்றது.. . .. தீயிற்கு, தன்னைப் பற்றி, 'தான்' என்று உணர்வு எழுந்த கணம்கூட இந்த வேளையிலே மறந்துபோய்விட்டது..... திகைப்பும் ஏக்கமும் மாறிமாறிப் படர்த்திய படலச்சுமை நெடிதென ஓங்கி, தன் பெருவிரலாற் தாழ அழுத்தியது அடக்காத்தீத்தலை.
உயிரினங்கள், தன் சமநிலை சரிந்த எல்லைகொள்ளாக் காட்டுத்தீ கறை படிந்து களங்கம் செய்து விட்டதென்று திட்டித்தீர்த்ததொரு பொழுதிலே, அதனுள் களங்கத்தினைப் பரிசோதிக்கப் பெண்ணை இறக்கிய பரிசுத்தக்களமென்று ஹோமத்தீ வரையறுக்கப்பட்டது பற்றி ஒரு ஞாபகம் மீட்டுண்டது. . .. .. அது பூர்வீகப்பிறப்பிலா, அல்லது தனக்கென்றிருப்பது ஒரே பிறப்பா, அல்லது அந்தக் கற்புமனைவியைப் புசிக்காமல் இன்பப்புனலெனத் தழுவிய களங்கமறு தீ, ஆணா, பெண்ணா, தானில்லா தன்னொரு மூதாதையா அல்லது தான் ஆதியும் அந்தமும் இல்லாது அங்குமிங்கும் அலைந்தும் அடங்கியும் ஒடுங்கியும் ஆர்ப்பரித்தும் இருக்கின்றதொன்றா, அல்லது சமகாலத்திலே அடைந்த பரப்பொன்றில் பலவாய்ப் பிளவுண்டு பதுங்கிப் பூத்திருந்து, ஒன்றையன்று காண்கின்ற நேரத்திலே ஒட்டி ஒன்றாகிப் போய் உயரம் கூட்டுவதொன்றா, அதுபோலவே உடல் அங்காய் இங்காய் அங்கமங்கமாய்க் கழன்று பிரிந்து வளர்வதொன்றா... . . . . இல்லை, ஒளியோர் ஓட்டிலும் உயிரொரு வீட்டிலும் சுவாசச்சூடு இன்னொரு கூட்டிலும் என்று பிரிந்து தளர்ந்துகிடந்து காலமும் களமும் கனிந்து கூடிவருகையிலே ஒடுக்கம் உடைத்து ஒன்றாகி, காத்த வீட்டையும் கூட்டையும்கூட வீறுகொண்டு உருச்சட்டமமைக்கு எலும்புக்கூடும் மிஞ்சாமல் எரித்துப்போகும் இரக்கமில்லாத இறப்புச்சக்தியா?? இத்தனை துயர்கொடுப்பதாலேயே, தன் ஆதியும் அடையாளமும் அறியப்படாமலே போகும் சாபம் காற்றோடும் கனிமத்துள்ளடங்கிய உயிரோட்டோடும் கூடத் தொடர்கின்றதா?.. .. .. . . .. ..
தீக்குட் குழப்பம் மிஞ்சி ஆவேசம் வற்றத்தொடங்கியது; அதன்மூச்சின் நச்சே அதன் அடியினைத் திருகி அணைக்கப்போகின்றதாக உணர்வு தோன்றியது; தன்மீதான கழிவிரக்கத்தினை மிஞ்சி, தான் அழித்தவற்றின் மீதிகளையும் அதிலே இன்னும் தான் விட்டு வந்து கிளைவிடத் துடிக்கும் கிள்ளைத்துளிர்த்தீமுளைகளினையும் திரும்பிப்பார்த்தது. 'அவற்றுள்ளேயும் தான் இருக்கின்றேனா' என்றொரு புதிய கேள்வி. இருந்தால், அவற்றில் ஒவ்வொன்றும் என்னோடு அலையும் கேள்விகளைத் தமக்குள்ளும் உள்வாங்கிக்கொண்டு விடை தேடி அலையுமா, -அலையுங்கால்,- அவற்றில் ஒன்றுக்கேனும் அந்த வினாக்களுள் ஒன்றுக்கேனும் ஒரு பகுதி விடை எங்கேனும் ஒரு சுரண்டுதலிலே உதிரமுடியுமா? அந்த விடை உதிர்வு, அடுத்து வரும் அக்கினிக்குஞ்சுகளுக்கு அதே கேள்வியினை எழுப்பி அல்லலுறுத்தாது விட்டுவைக்க வழியாகுமா?.. . . தனக்கான ஒவ்வொரு தன் கணைக்கும் பதில் கிடைக்காமல், இன்னொரு கேள்வியே துணையெனச் சினைப்பதாகத் தெரிந்தது. தீக்குள்ளே இல்லாதுபோகும்வரை, இறைச்சியைத் தின்று இனம்பெருக்கும் கொழுத்தபுழுக்கள்நெளிந்தன. ஆரம்பத்திலேயே தன் இருப்பின்மீது கேள்வி எழுப்பாது இருந்திருந்தால், இத்துணை ஆத்மவல்லல் தனக்கும், அனர்த்தனம் அடவிக்கும் அதைச் சுற்றிய அகிலத்துக்கும் ஏற்பட்டிருக்காது என்று தீயிற்குத் தோன்றியது. தனது முகமற்ற தன்மைக்கு, தனக்கொரு முகம்கொள்ள இலாயக்கற்ற கையாலாகாத்தன்மைக்கு செல்திசைகாண் கோலிழந்த கபோதியின் ஆற்றாமையுடன் படர்ந்த இடத்தெலாம் பாழ்படுத்தல் பண்ணியிருக்க வேண்டுமா என்று முறுகிக்கொண்டு தன்னை முறித்துப் போட்டுக்கொண்டே நகர்ந்தது நெருப்பு. முகமின்மையின் முகமிலாக்கழிவிரக்கமும் எரிபாவச்சுமையின் தற்பழிப்பும் தன்னைச் சுட்டுச் சுட்டெரிக்க, சுடர் மங்கி கிளை குறுகி, சடை உரோமம் உதிர்ந்து நகர்வழியெல்லாம் கரிநாராய்ச் சொட்டச் சொட்ட, சக்தி அகமும்புறமும் வற்றி நொண்டிய நெருப்பினைத் துயருடன் பார்த்தது காற்று. . . . .
. . .. காலகாலமாக, காற்று காணும் அதே மனம் கனக்கும் கதை மணக்கும் கணம்... . . . தீயின் பிறப்பினைத் தூண்டி, தாங்கி வளர்த்து, வினாக்களுக்கு முகம் கொடுக்கமுடியாமல், அதன் ஆவேசத்தோடு இழுவுண்டோடி, அதன் தளர்விலே, ஓடுடைத்துக் காவிய கைகளாலேயே, உடல் நீவி, உயிர் ஒடுக்கத்துக்குத் தயார் செய்யும் துயர்மிகும் வேளை காற்றுக்கு . .. .. அடுத்து வரும் குழவித்தீக்காவது, அதன் கேள்விகளிலே ஒன்றுக்குப் பதில் சொல்லத் தான் கூடுமா என்று அதற்கு இந்த முறையும் தெரியவில்லை; தெளியவில்லை. ஒடுக்கத்தை உடைக்கவும் ஒடுக்கி அடக்கவும் மட்டும் கூடிய பண்போடு இடைக்காலத்து இருப்பிலே பங்கு கொள்ளும் சமாந்திரக்களன்/காலன் காற்று. ஆனால், பிறக்கும் தீக்குஞ்சு ஏதுக்கும் தன் இருப்பிலே எதைச் சாதிக்கமுடியும் என்பது பற்றி கேள்வி இருப்பதில்லை என்பதால், காற்றிடமிருக்கும் பதில்களில் ஒன்றைத் தருவதற்கான கேள்வியன்றேனும் தீக்குஞ்சுகளிடமிருந்து எழுவதில்லை. காற்றுக்கோ, தான் கண்ட ஒவ்வொரு தீக்குஞ்சிலும், மடிந்த மறைந்த முன்னைய தீக்குஞ்சொன்று ஒளிந்திருக்கின்றதா என்று சொல்லமுடிகின்றதில்லை... . .... அந்நியத்தீயிலேயென்ன, சொந்தக்காற்றுகளிலே மட்டும் இதே கேள்விக்கு திட்டமான விடையேதும் சொல்லக்கூடுமோ அதற்கு?
இப்போது தீ, தான் கருக்கி சடத்தின் உருவிலக்கணம் தகர்த்து எரிவின் மீதியாய்ச் சமப்படுத்திய அடிப்படைக் கனிமக்கரியுள்ளே, சாம்பலுள்ளே புகுந்து இன்னும் ஒவ்வோர் அடியடியாக நகர்ந்து நகர்ந்து தேடியது கணங்களே மிஞ்சிய அந்திமப்பொழுதிலும் தன்னைத் தானே அங்கீகரித்துக்கொள்வதற்காக/ன அடையாளம். காற்றின் கேவலிலே, தொண்டைக்கனைப்பிலே, அடிக்கடி மேலெழுந்து தான் தேடும் பதில் ஏதும் கடந்து மேற்திசையிற் போகின்றதா என்ற தொக்கலுடன் சுடர்ந்து தணிந்து மீளவும் நெருப்புநுரை கரிநிழல் கீழூடி. . .. .. .. நகரவும் முடியாது போய் இடுங்கி அ·து ஒடுங்கியது எப்போது எங்கென்று காற்றுக்கும் சொல்லமுடியவில்லை. சூழலின் தகர்வும் சாம்பல்நிலச்சூடும் நெருப்பின் நேற்றைய இருப்பினைக் காற்றுக்குச் சொன்னது. காற்று அடிக்கடி அங்குமிங்கும் சாம்பலை அள்ளிக் கலைத்துக் கிளப்பி, தளரத் தளரத் தூக்கி வளர்த்துத் துள்ளவிட்ட அனலின் அடியேதும் தெரிகின்றதா என்று தளராமற் தேடி ஒருபொழுதுக்கப்பாலே தொய்வுற்றுத் தேடலின் ஆர்வத்தைத் தொலைத்தது. எதிரொலிவினாக்களையே விடைகளாகப் பெற்றெரிந்த தீ அவிந்தே போனது.
காற்று, தலைகீழாய் மரம் தொங்கும் பழவௌவாலை எண்ணிக்கொண்டது. "எந்தவொரு இருள் வௌவாலும் தன் வகை பற்றிய வினாக்களுடன் மடிவதுண்டா என்பதுவா அல்லது வௌவால்களுக்குத் தம் வகைப்படுத்தல் பற்றி கேள்விகள் இருப்பதுண்டா இருக்கத்தேவையுண்டா இருப்பதினாலே இருப்புக்கேதும் பயனுண்டா என்பதுவா நியாயமான வினா என்று வினாவும் வேளையிலேயே, இயல்பாய் எல்லா வினாக்களும் இருப்பின் பயன்பாடு பற்றியும் தேவைகள் பற்றியும் மட்டுமே வேரோடி முளைக்கின்றவையா என்ற வினாவும் எழுகின்றது." இறுதியிலே தனக்குள் இரு சூத்திரங்கள் போட்டுக்கொண்டு, தான் தன் நாளாந்தச் செயலிலே மேலே நகர முனைந்தது.
[ இருப்பு = காற்று = இருப்பு
பிறப்பு <- நெருப்பு -> இறப்பு ]
காலம் நகர்ந்தது; மழையும் மண்ணும் பனித்துப் புணர, அடவி தளிர்த்தது; போன தடவை போலின்றி வேறொரு கோணலும்மாணலுமான கோலம் கொண்டன காட்டின் உருவமும் நாட்டுக்குடியிருப்பின் தோற்றமும். ஆனாலும், அவற்றுக்கு ஆதிப்பெயர்களிலேயே உயிரினங்கள் அடையாளம் கொடுத்துக்கொண்டன.
உள்ளொடுங்கிய நெருப்பு, காலத்தினையும் சேதத்தினையும் வைத்து கதைகளிலே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது, போன கிழட்டுத்தீக்கும் வரப்போகும் தீக்குஞ்சுக்கும் தெரியவோ கேள்விகளுக்குப் பதில் தரவோ உதவவில்லை. சடங்களின் அளவுக்கு, சக்திகள் தன்னடையாளம் வரித்துக் கொள்ள முடியாமற்போனதிலே, காற்றின் ஒரு பகுதிக்குக் கவலையிருந்தது; இன்னொரு பகுதிக்கோ களிப்பு குமிழிட்டது.
ஆனாலும், 'நானென்பது இதுவென உணர்ந்து வாழ்வது தானா தீயா' என்ற மேலதிகக்கேள்வி தன்னைக் குடைந்துகொண்டிருந்ததை, காற்றுக்குத் தவிர்க்கமுடியவில்லை.
சில வினாக்கள் -விடலைப்பருவத்தே குறி விறைத்தல், முலை சுனைத்தலென- இயல்பாய் எழுகின்றவை; அசுரக்காற்றும் அகட்டிப் புகமுடியா இருட்டு நுண்டுளைகளும் இயற்கையமைப்பில் உண்டு.
'00, பெப்ரவரி 06, செவ்வாய் 03:29 மநிநே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment