Sunday, September 29, 2019

சத்தியமே இலட்சியமாய்




பழந்தமிழ்நடிகர்களிலே இருவர் அவர்கள் நடித்த காலத்தின் வரையறுக்கப்பட்ட அழகுக்கும் நளினத்துக்கும் மீறுதலானவர்களெனப் படும். ரஞ்சன்; ரவிச்சந்திரன். நடிப்புக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். இருக்கட்டும்; ஆனால், ரஞ்சன்தான் தமிழின் முதலாவது "ஸ்ரைல் நடிகர்" என்பேன். திருகோணமலையின் பழைய ராஜி தியேட்டரிலே ஓரிரு ஆட்களேயிருக்க நீலமலைத்திருடன் பார்த்தது, நிச்சயமாக அஞ்சலிதேவிக்காக அல்ல (அடுத்தவீட்டுப்பெண் பிற்காலத்திலே பார்க்கும்வரைக்கும் அஞ்சலிதேவியைக் கண்டாலே ஒவ்வாமை. மனுசி நினைச்ச நேரத்திலை நாலு கல்யாணம் கட்டின ஜெமினியை நினைச்சு அழத்தொடங்கும் மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தைப் பின்னிரவொன்றிலே கிருஷ்ணா தியேட்டரிலே பார்த்திருந்த நேரத்திலே இராகுகாலம். உதே பிரச்சனை சௌகார் ஜானகியோடும் தெரியாமல், இருகோடுகள், அன்னை பார்த்த குற்றத்திலே கிடந்தது, பிறகு பாமாவிஜயம், எதிர்நீச்சலிலே கொஞ்சம் தெளிஞ்சு, தில்லுமுல்லுவுடன் சமாதானம் ஆனோம்). ஜோதி தியேட்டரிலே சந்திரலேகா பார்த்ததும் ராஜகுமாரிக்கும் எம் கே ராதாவுக்கும் முரசுநடனத்துக்குமல்ல..... ரஞ்சனுக்காகவுமல்ல :-) பார்க்க வேறு தமிழ்ப்படங்கள் மீதித் திரையரங்குகளிலே ஓடவில்லை; ஆனால், இவற்றைப் பார்த்தபோது, ரஞ்சன் பிடித்துக்கொண்டார் படம் முடியும்வரை இருக்கவைப்பதற்கேனும்.

ரஞ்சனின் நாய், குதிரையைப் பற்றி, எம் ஜி ஆருடனான அவரின் வாட்சண்டைப்போட்டி பற்றியெல்லாம் அப்பப்போது எவனாச்சும் அளந்துவிட்டுக்கொண்டேயிருப்பான் - ஹமில்டனுக்கும் பேர் இற்கும் நடந்த வாழ்வா சாவா போட்டிபோல.... இன்றைக்குவரைக்கும் நாடுவிட்டு வந்து செத்துப்போன ரி ஆர் ராமச்சந்திரன், மஹ்மூத் போல, அமெரிக்காவிலே வந்து செத்த ரஞ்சன் நாயையும் குதிரையையும் எம்ஜி ஆருக்குக் கொடுத்துப்போட்டுத்தான் மூட்டையைக் கட்டினாரா என்ற உண்மை தெரிந்தே ஆகவேண்டுமென்ற பேரவா தீரவில்லை.

வின்சன்ட் ப்ரைசின் சாயலையொத்தவர் ரஞ்சன். அடிப்படையிலே வில்லத்தனமான முகம்; பெருத்துப்பரவின மூக்கு கடைசியிலே ஒரு கிளிச்சொண்டு வளைவிலே அகன்று குழிவாடிக்கோட்டு மீசையோடும் பெருமோவாயின் மேலாத் தொங்க, உதடுகள் அதைத்திருக்கும். கண்களிலே வஞ்சகமும் கொடுநகையும் மின்னி மின்னிப்போகும் ஒடுங்கிய முகம் அவரது.

அவரின் இப்பாடல் அக்காலத்திலே குதிரையோடு நாயகன் 'தன் தத்துவம்' சொல்லியோடும் வகையைச் சார்ந்தது. (எம் ஜி ஆரின் 'அச்சமென்பது மடமையடா' (மன்னாதிமன்னன்), எஸ் எஸ் ஆரின் முக்குலத்தோர் புகழ், 'வீரர்கள் வாழும் திராவிடர்நாட்டை" (சிவகங்கைச்சீமை), அசோகனின் 'அழிவதுபோற்றோன்றும்' (வீரத்திருமகன் - ஓரளவுக்கு) போன்றவை இதே 'இராஜபாட்டிலையே' தாளத்துக்குக் குதித்தோடிய புரவிகள் :-) ஜெமினி தேன் நிலவிலே வைஜந்திமாலாவுடன் பாட்டுப்பாடவே என்றோடின குதிரைகளல்லன இவை )

அக்காலத்திலே இப்பாடல் தனித்துத் தெரிந்த ஒன்று - அதன் நடிகரைப் போலவே!

No comments: