Sunday, September 29, 2019

92: தீதீ


92 இலே புரட்டாதியிலே சீனா போயிறங்கியபோது, வானொலி, வீடியோகொட்டகைகள், கோயில்விழாக்கள் தந்த தமிழ்ப்பாடல்கள், ஆங்கிலத்திரைப்படங்கள் தொடங்கமுன்னால் கொட்டகையிலே தன்பாட்டுக்குப் போன பொனியம், பீட்டில்ஸ், அபா குழுக்களின் வரி தெரியாத ஆங்கிலப்பாடல்கள், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மதியம் ஒன்றரைக்குப் போட்ட ஹிந்திப்பாடல்களிலே ஒன்றிரண்டு, போகவருகையிலே கேட்ட சிங்களப்பாடல் சில, அப்போதுதான் தொடங்கின கொழும்பு எப் எம் பக்கத்தறையிலே போட்ட ஒருவனின் உபயத்தாலே சில ஆங்கிலப்பாடல்கள், கேள்விப்பட்ட எல்விஸ் ப்ரீஸ்லி, மைக்கல் ஜக்ஸன், மடோனா பெயர்கள் - இத்தனைதான் இசையும் பாடலுமென்ற கிணறு என்னது.
போன ஒரு மாதத்துள் கையளவல்லது உலகு என்றளவுக்குத் தெளிவு வந்துவிட்டது. சீனாவிலே வெளிநாட்டுமாணவர்களுக்கென்று ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தனியான கட்டிடம். டென்சியாவோபிங்கின் நிறம் முக்கியமற்ற பூனை அனைத்துவண்ண எலிகளையும் பிடிக்கப் பாதி கதவைத் திறந்து மீதி மூடி மறைத்து வைத்திருந்த காலம், வெள்ளியிரவுகளிலே வெளிநாட்டுமாணவர்கட்டிடங்களின் நிலத்தடி அகலமான அறைகளிலே பியரும் பாடல்களும் சீனமங்கைகளும் ஆடல்களும். எந்த நகரிலும் நாலைந்து பல்கலைக்கழகங்களேனும் வெளிநாட்டுமாணவர்களோடிருக்கும். ஒரு கிழமைக்கு ஒரு பல்கலைக்கழகமென்ற சுற்றிலே இரவு எட்டுக்குத் தொடங்குவது பன்னிரண்டு வரைக்கு உச்சமாகி ஒன்றுபோல அடங்கிப்போகும்; சனிகளிலே நடனவிடுதிகளிலே போகிறவர் போயாடினால், உண்டு. பெருமளவிலே ஆபிரிக்கமாணவர்கள்; இந்தியா தவிர்ந்த தென்னாசியமாணவர்கள் அடுத்தபடி; ஓரிரு கிழக்கைரோப்பியமாணவர்களும் தென்னமரிக்கர்களும். யேசுவை ஆங்கிலம் கற்பிப்பதூடாகக் கடத்த வருகின்ற தொண்டர்கள் கலந்துகொள்வதில்லை. குடிக்காமலே அறுதிவரை நர்த்தனநடுச்சென்ரரிலிருந்து அறை நாலுகோனர்மூலைகள்வரை குதியன் குத்திய ஒரேயாள் நானாகத்தானிருப்பேன்.
ஆனால், ஒருமாதத்துள்ளேயே, ஆபிரிக்க பாபாவெம்பா (le voyageur), கரிபியன் பொப்மாலி, சபா இராங்ஸ் (Mr Loverman), சோல்ட் அண்ட் பெப்பர் (Let's Talk About Sex), ஏஸ் ஒப் பேஸ் (Happy Nation & All That She Wants), டொக்ரர் அல்பான் (It's my life), ப்ரையன் அடம்ஸ் (Everything I Do I Do It For You), மைக்கல் போல்டன் (When a Man Loves a Woman) என நடனத்தளத்திலே காதுகளூடாக நுழைந்து காலிலே சூடேற்றினார்கள். பின்னாலே பங்காரா வந்தது. இதற்கப்பால், நேபாளநண்பர்களூடாகக் கிட்டின நாட்டுப்பாடல்கள், ஹிந்திப்பாடல்கள் (குறிப்பாக, கேட்ட கணங்களுக்காக நிலைத்துவிட்ட sadak படப்பாடல்கள்), இசைநாடாக்களாக மலிவுவிலையிலே காப்புரிமையைச் சீனம் அறுத்துவிடக் கேட்ட ஆங்கிலப்பாடல்கள், தொலைக்காட்சியிலே கிட்டின சீனப்பாடல்கள் - தொடரும் இப்பட்டியற்பாடல்கள் வேறுவகை ஆடாத கானங்கள்.
துள்ளலின்போது, அலைந்த ஒரேயோர் அரபுப்பாடல், ஷெப் காலித்தின் தீதீ. நேபாளநண்பர்களுடனான சகவாசத்திலே முதலிலே தீதீ என்பது அக்கா என்பதாக மொழி தெரியாது ஒரு மாதமாவது குழம்பியிருப்பேன். பிறகுதான் பாடல், பிரான்சிலே வாழும் அல்ஜீரியர் காலித்தின் பாடல் என்பதாகத் தெரிந்தது. பின்னாலே, இப்பாடலிசை பல மொழிகளிலே ஆரத்தழுவியோ, உருளைக்கிழங்குப்பிரட்டலாயோ வந்துவிட்டது.... இதிலே தென்னாசியாவின் உருட்டல், பிரட்டல், உழுதலும் கணிசமாகவுண்டு.😉 சஜாத் அலியின் babia அசலுக்கு வஞ்சகம் செய்யாத ஒளிவுமறைவற்ற கண்ணாடியுருண்டை.
அர்த்தம் இன்றைக்கும் என்னவெனத் தெரியாது. ஆனால், இப்பாடலூடாக, பிற்காலத்திலே காலித்தினதும் (aicha, hiyahiya) , இப்போது காலமாகிவிட்ட இரஷீத் தாஹா (Ya Rayah), செப் மாமி, பௌடல் போன்றோரினதும், இன்னும் அல்ஜீரியர்களின், அரபுபேசும் வட ஆபிரிக்கர்களின் பாடல்|இசை வகைகளையும் (rai) தெரிந்துகொள்ளும் ஈடுபாடு உண்டானது. ( இசை வகைகளையேயொழிய எனக்குத் தொலைதூரமான இசையை அல்ல 🤫 ) காலித், பௌடல், காலித் மூவரும் சேர்ந்து பாடின Abdel Kader குறிப்பிடத்தக்க பாடல்; மொழிக்கு அப்பாலான குதிப்புக்கானது . ... தடங்கலில்லாத தாளக்கட்டுக்கு உருளும் தண்டவாளத்தொடரியோட்டம்!
பின்எண்பது -முன் தொண்ணூறுகளின் ஆடையணி காட்சிப்படுத்தலோடு தீதீ


No comments: