கடந்த வாரம்
கனடாவிலே இலங்கைப்பெண் தர்ஷிக்கா கணவர் சசிகரனின் வதை தாளாது பிரிந்து வாழ்ந்தவர்,
அவரைச் சந்திக்கக்கூடாதென்று சட்டரீதியாக ஆணைப்படுத்தப்பட்ட நிலையிலும் வீதியிலே வைத்து
அவர் கணவராலே வெட்டிக் கொலைசெய்யப்பட்டிருக்கின்றார். ஒரு கொலை பல்லடுக்கான தளங்களிலேயும்
பார்கோணங்களிலும் கேள்விகளை எழுப்புவது எதிர்ப்பார்க்கவேண்டியதும் எதிர்காலத்திலே இத்தகா
அவலம் நிகழாதிருப்பதற்கான மாறுதலுக்காகத் தேவையானதுமாகும்.
கேள்விக்கான
காலமும் இடமும் பொருந்தாதிருக்கலாம். ஆனாலும், பல பதிவுகளிலே தர்ஷிகா குறித்தும் சுவிட்சலாந்து
தமிழ்மதபோதகர் குறித்தும் கடந்த சில நாட்கள் வாசித்தபோது எழுந்த கேள்விகளை ஆங்காங்கு
எழுமிடங்களிலே கேட்பின் தவறாக எண்ணப்படலாம் என்பதாலே கேட்கவில்லை. இங்குப் புரிந்துகொள்ளப்படலாம்
என்ற நம்பிக்கையோடு....
'இப்படியான அவநிகழ்வு நம் சமூகத்துக்குமட்டுமேயானதா?
இக்கொடுமையைத் தமிழ்ச்சமூகம் என்பதன் கோளாறாகவே ஆணியறைவது எதற்காக? ஒரு சமூகமாகமட்டுமே
இக்கோணற்றனத்தினை எப்படியாக நீக்கமுடியும் என நம்புகின்றோம்? இந்நிகழ்வுமட்டுமல்ல,
தொடர்ச்சியாக இன, மொழிசார் சமூகம் கடந்து பால், சாதி, மதம் தொடர்பாக நிகழும் ஒடுக்குதலையுங்கூட,
எளிதிலே திடமற்ற வடிவும் பண்புகளும் தொடர்ந்து கால இடத்துக்கேற்ப மாறும் பாயித்தன்மைவாய்ந்த
ஒரு சமூகத்துக்கானதாகக் காட்டி, ஒட்டுமொத்தமாகப் பழியினைச் சமூகத்திலேயே போட்டுவிட்டுப்போவதோடு
எப்படியாக முடித்துவிடுகின்றோம்? தனிப்பட்ட பொதுவிலான எவ்வவலம் குறித்தும் தனிப்பட்ட
ஒவ்வொருவரின் உள்வாங்கலும் அதன்பின்னான மாறுதலும் எதிர்வினையும் எத்துணை முதன்மையானது
என்பதை வசதியாக மறந்துவிடுகின்றோமா?'
இக்கேள்விகளை
முன்வைக்கும்போது, நிகழ்ந்தவற்றையிட்டுக் கோபமும் ஆற்றாமையும்
பொதுவுணர்வுக்குழம்பாகப் பரவிக்கிடக்கையிலே, கேட்கின்றவரை நோக்கி
எழக்கூடிய சிக்கலை அறிவேன். உச்சநிலையிலே கேட்கின்றவர், இக்கொலையினை ஆதரிக்கின்றவராகவும் இடைநிலையில் அவர் இப்பிரச்சனை அவர்
சார்ந்த சமூகத்திலேயே இல்லையென்று சொல்பவராகவும் தாழ்புள்ளியிலே இக்கொடுநிலைமீதான எம் சினத்தைக் காட்டக்
கிட்டிய கொடும்பாவியாகவும் கொண்டு குத்துச்சண்டைத்தலையணையாகக் குத்தப்படும் நிலைமைதான் உள்ளது.
ஆயினும், நான்
கேட்பது, இம்முந்நிலைகட்குமானவனாக
வேண்டியல்ல என்று
ஒரு சிலரேனும் புரிவார்களென்ற நம்பிக்கையுண்டு.
அனைத்துக்கும் எழுபதுகளின்
புதுக்கவிஞர்கள்போல,
"ஏ புழுத்துப்போன சமூகமே!' என்று தன்னை (விதி)விலக்கிவைத்துக்கொண்டு, தொடர்ச்சியாகச்
சமூக அக்கறையைத் தமக்கான விளம்பரத்தட்டியாகக் கொண்டு நிகழ்ந்ததுக்கான காரணத்தை இலக்குச் சுட்டிக் குறித்து சுடமுடியாத 'சமூக'த்தினையே கேட்கிறேன்.
"கொடூர ஆண்களே!',
'பிற்போக்குத்தமிழர்களே!'
என்று திட்டித்தீர்த்துவிட்டு, பெண்ணுக்குத் தாலிகட்டுதல்- பிழைபடு மதபோதகர்- கொல்லப்பட்ட
தர்ஷிகா என்று தம்மைத் தவிர்த்து
சூழ்ந்திருக்கும் மீதியானவர்களே
குற்றத்துக்குரியவர்களென்பதாக
அவசர அவரசமாக அடுத்த விளம்பரத்தட்டிக்கு நகர்கின்றபோது, இது குறித்து நம்மீது
நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய நமக்கான தனிப்பட்ட மாறுதல்களைப் பேசமறுக்கின்றோம்.
தனியான
மனிதனாக என்னைப் பற்றி நான் எண்ணிக்கொண்டிருப்பதற்கும் என் இழிநிலையிலே நான்
எப்படியாகச் செயற்படக்கூடும் என்று உணர்தலுக்கும் நிறைய வேறுபாடுண்டு; அதை அறிய நேரிடும்
பொழுது கொடூரமானது; காலத்துக்குமான வதை அங்குண்டு. அந்நிலையிலே இது மொத்தமாகச் சமூகத்தின்
குறையென்று என்னைமட்டும் விலக்கி
வைத்துவிட்டு, தமிழ்ச்சமூகமே தர்ஷிக்காவை கொல்ல ஊக்குவித்திருக்கின்றதென்பதுபோலத் தொடர்ச்சியாக
எழுதிக்கொண்டிருப்பதுங்கூட எமது
தனிப்பட்ட தேர்ந்தெடுத்த
அரசியலேதாம்! ஆபிரிக்க சமூகத்திலும் அமெரிக்கசமூகத்திலேயும் இதே கொடூரமிருக்கின்றது. நிகழும் பொழுதுக்குக் கடற்கரையிலே குந்திக்
கூட்டத்திலே வருந்திக் கதைபேசிவிட்டு, பேச்சின் சுவை குன்ற எழுந்து பின்புறம் தட்டி
மணலோடு துன்பநிகழ்வையும் ஒட்டுமொத்த சமூகமாக உதிர்த்து விழுத்திவிட்டுப்போகின்றோமா
என்று வருந்துகின்றவர்களின் ஆதங்கம் புரிகின்றது; ஆனால், இங்கு, இதேநிலைதாம் எச்சமூகத்தைச் சார்ந்தவனானாலுங்கூட, தனிப்பட
என்ன மாற்றத்தை நான் ஒரு நிகழ்வின் பாற்பட்டு ஏற்படுத்தலாமென்று எண்ணவேண்டியதையும் மறந்துவிடுகின்றேனா என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டுமெனக் கருதுகிறேன்.
பல சமயங்களிலே நான் இழைந்தும் இழைக்கப்பட்டும் கூடியிருக்கும்
சமூகத்திலும்விட, தனிமனிதனாக, எப்போது எவ்வகையிலே வெளிப்படுவார்களோ
எனத் தெரியா நிலையிலே எனக்குள்ளே ஒளிந்திருக்கும் எண்ணற்றவர்களுக்கு இப்போதெல்லாம் பெரிதும் அஞ்சுகிறேன். அவ்வறிதலே தன்னளவிலே ஒரு நற்சிந்தனைதான். L எவ்விதமான
அவநிகழ்வு குறித்தும் அது மீண்டும் நிகழாதிருக்கச் செய்வதிலே என் சமூகமும் அதற்கப்பாலும்
பெருங்கோளங்களும் மாறவேண்டுமெனில், தனிப்பட அந்நிகழ்வின் காரண காரியங்கள் குறித்து
என்மீதான என்னாலான மாற்றமென்னவென்பதே முதன்மையானதும் சாத்தியபடக்கூடியதுமானதுமாகும்.
என் பேரில்ல,
ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு!
Not in my
name, but the changes within me.
09/14/2019