Saturday, April 22, 2017

தெர்மோகொல் - தர்மக்கோல்


“ஓடும் வைகைக்கு மண்ணணை கட்டப்போய் மதுரைச்சொக்கருக்கு அடி!
காயும் வைகைக்கு மேலாடை கட்டப்போய் ஜெயக்குமரருக்கு மீம்!” என்பதுபோலச் சமூகவலையிலே கடந்த இருநாட்களாகக் கருத்துகள்,

நீதியாக அரசியலறிவியல் செய்யாதவனும் அநீதியாக அறிவியலரசியல் செய்கின்றவளும் ஆளுக்காள் குறைந்தாரில்லை.

அகண்டு கிடக்கும் நாட்டிலுள்ள ஆறு குளமெல்லாம் வெட்டி ஒட்டி ஓட்டி நீர்ப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று கனவு காணச் சொல்கின்றவர்களை அறிவுத்தந்தையராகவும், “அதற்கு ஆயிரம் ரூபா என் கணக்கிலே தருகின்றேன்”  என்பவர்களை வீரதீரநாயகராகவும் அண்ணாந்து பார்க்கின்றவர்கள், சிறுபரப்பில் குளிர்தடம் கொண்டு நீர் மூடி ஆவியாதலைத் தவிர்க்கலாம் என்று கருத்தளவிலே சொல்கின்றவர்களைக் கோமாளிகளாகப் பார்த்து நக்கல் செய்கின்றார்கள்.

மூவிடுக்கு (Three-Gorge), நர்மதா போன்ற பேரணைத்திட்டங்களைச் சூழற்பாதுகாப்பு, கட்டாயக்குழும இடப்பெயர்வு, தனியாள் உளவியற்றாக்கம் போன்ற காரணங்களாலே இப்பக்கத்திலே எதிர்ப்பவர்களே  பொருளாதார நோக்கிலே நதியிணைப்புத்திட்டங்கள் சாதிக்கமுடியுமென்றும் வேண்டுமென்றும் பேசுகின்றார்கள். ஆனால், நதியிணைப்புக்கான கட்டுமானமென்பது தொழில்நுட்ப, பொருளாதாரக்கோணங்களிலே சாத்தியமானதா, நீரியல், சூழல்நலன் பார்வைகளிலே பொருத்தமானதா என்பதை ஆய மறுக்கின்றார்கள். நதிகள் ஓடும் திசை, நிலவமைப்பு, செயற்படுத்துவல்லமை இவற்றின் அடிப்படையிலே ஆறுகளின் இணைப்பானது இந்தியா போன்ற நாடுகளுக்குச் சாத்தியமானதல்ல; சிறப்பான விளைவுகளைத் தருவனவுமல்ல. இணைந்த பேராறும் அது கடந்து ஓடும் ஒவ்வொரு மாநிலத்தின் அந்நேர அரசியலுக்கு உள்ளாகி இப்போதிருக்கும் அதே நிலையைத்தான் கொண்டிருக்கும். அரசியல் மாறாமல், பரிவுடனான புரிந்துணர்வு மாநிலங்களுக்கிடையிலே ஏற்படாதவரையிலே, ஆற்றிணைப்பு நீர்வளத்தினைப் பயனர் தேவைக்கேற்பப் பகிருமென்று கனவு காண்பதில் அர்த்தமில்லை.

 ஆனால், தமிழக அமைச்சரின் காகிதக்கப்பல் செய்து கடலிலே விடுதல் போலத் தோன்றும் குளிர்படுக்கைத்தெப்பவிளையாட்டு அவர் செய்த வகையிலே ஒரு பிரமாண்டமான கோமாளித்தனமாகத் தோன்றலாம். ஆனால், கருத்தளவிலே , வைகைஅணையின் நீர்பரப்பினைப் பொறுத்துப் பார்க்கையிலே, சற்றே மாறுபாடான பொருத்தமான நீர்மூடு நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கான பொருளாதாரம் வசப்பட்டிருந்தால், சாத்தியமானதே.

2015 இலே கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் ஏரியிலிருந்துவெம்மையாலே அதீதமாக நீர் ஆவியாகாமல் தடுக்கநீர்மேற்பரப்பிலே 95 மில்லியன்நீர் நிரப்பிய நான்கு அங்குல விட்டமுள்ள நெகிழிப்பந்துகளைப் பரப்பினார்கள். செலவு 35 மில்லியன் டொலர்கள் என்று சொல்லப்படுகின்றது. கோளவடிவின் காரணமாக அடுத்தடுத்திருக்கும் பந்துகளினூடாக நீருள் காற்றூடு புகவும் அகலவும் இடைவெளியுமிருந்தது; இது காற்று நீரோடு கலக்கவும் நீருயிரிகள் சுவாசிக்கவும் வழி|ளி செய்ய வாய்ப்பினையும் தரக்கூடியது.

லொஸ் ஏஞ்சல்ஸ் ஏரியின் கொள்ளளவு 3.3 பில்லியன் கலன்கள்; வைகை அணையின் கொள்ளளவு 6.143 மில்லியன் கனவடி (45.95 பில்லியன் கலன்கள்). மேற்பரப்பு தமிழக அமைச்சரின் நீர்ப்பாய்விரிப்போ கையது கொண்டு மெய்யது பொத்தின கதையாக, ஐந்து சதவீத நீர்ப்பரப்பினைக்கூட மூடியதோ தெரியவில்லை. மேலும், நுண்டுளையற்ற செவ்வகப்பாய்களால் முழுக்கவே மூடியிருந்தால், தண்ணீரிலேயே மீனழவும் வைக்காமல், மீனழுக வைத்திருக்கும். தமிழகம் போன்ற ஒரு மாநிலத்துக்கு அத்துணை செலவிலே நீர்மூடு நுட்பம் அவசியமா என்பது வேறான கேள்வி. கப்பல்கள் மோதிக் கடல்நீரிலே ஒழுகின எரிபொருளை வாளிகளாலே அள்ளிபோட்டுக் கடலைச் சுத்திகரிக்கலாம் என்று தொழிற்பட விட்ட பொன்னார்தேசத்திலே, இப்படியான குறைச்செயல் அமைச்சரை விமர்சிக்கலாம் என்றே வைத்துக்கொள்ளலாம்; ஆனால், அதனையொத்த தொழில்நுட்பத்துக்கு வாய்ப்பேயில்லை என்பதுபோல, நக்கல் செய்வது எறிதலின் பின்னால், தம்மீதே திரும்பும் அறிதலின் குறையான எறிவளையின்றி வேறில்லை – குறிப்பாக,தேசிய நதியிணைப்புக்கனவுகளை அடிக்கடி இரைமீட்டும்வேளையிலே.

1 comment:

Avargal Unmaigal said...

இறுதியில் சொன்னவரிகள் மிக சரி