Sunday, January 22, 2017

யாருக்காக அழுதான்?

2009 இலே சல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்துகின்றவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று நம்மிலே இலங்கைத்தமிழர் சிலர் கருதுகின்றார்கள். வேறு சிலர், "எல்லாம் இழந்துபோயிருக்கும் போராளிகளுக்கு உதவாமல், சல்லிக்கட்டுக்கேன் குரல் கொடுக்கின்றீர்கள் தமிழ்த்தேசியவெறியர்களே?" என்கின்றார்கள். இன்னும் சில பரந்த இலங்கையராகத் தம்மைக் காண்பவர்கள், தனியார்மருத்துவக்கல்லூரி ஏற்படுவதைக் கண்டு குரல் கொடுக்காது இதற்காகக் குரல் கொடுப்பதேன் என்று பேசுகின்றார்கள். நான்காவது, "வாசலிலே வாடிய காளையைக் கண்டபோதெல்லாம் கண்ணீர் கொண்டேன்" குழுவினர்.

இம்நான்கு குழுக்களிலே, நான்காம் குழுவைப் பற்றி சொல்வதிலும்விட, விரலைவிட்டு எண்ணித் தொகையைச் சொல்வது சுலபம். ஆமாம்; பாணில்லாவிட்டால், கேக்கைத் தின்னலாமேதான்.

இரண்டாவது குழுமத்தினரைப் பற்றிச் சொல்லப் பெரிதாக ஏதுமில்லை. 2009 இற்கு முன்னாலிருந்த மிருகவேட்டைக்காரர் தடாலென்று நூற்றெண்பது பாகை திரும்பி, வியாசபஹவானாகி நொய்யவைத்த போராளிகளுக்காகவே புண்யபாரதம் படைப்பதும், தமிழ்த்தேசியமென்பதும் ஏறேறுவதென்பதும் வெறும் சாதியமே என்றும், கவட்டிடுக்கிலே சொறிவந்ததுக்குக் காரணமும் தமிழ்த்தேசியமே என்றும் தேய்க்கும் குறியானவர்களின் கடிக்கும் படைக்கும் மருந்தேது? மூன்று மொழிகளிலே நூல்களைப் பெயர்த்து, நான்கு வருகைதரு இலக்கிய அரசியல்வாதிகளை வருவேற்று, தொலைதூரமுடுக்கல்களிலே இலக்கியக்குழந்தைப்போராளிகளை வைத்து உங்கள் கனவு அரசியல் வைக்கோற்போர்களை நிகழ்த்துங்கள் என்றும் நொருங்கிய சாம்ராஜ்யங்களையோ உடைந்துபோன ஹம்டி டம்டி சிற்றரசுகளையோ களவுபோன ஆய்களையோ சூக்களையோ மீட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், உங்களுக்குச் சம்பந்தமேயில்லாமலிருக்கக்கூடிய "வலதுசாரி யாழ்ப்பாணசாதிச்சைவத்தை"த் திட்ட எதையாவது நீங்கள் செய்து கொண்டிருக்கவேண்டியதுதான். மகிழ்ச்சி! வாழ்த்து!

மூன்றாம் குழு, தொடர்ச்சியாக பாட்டாளிகள், விவசாயிகளின் உரிமைமீட்டலுக்கான பொதுவுடமைத்தேவனின் வருகைக்காக செந்திருநூல்கள் காலத்தாலே பழுப்பேறவும் திறக்காமலே உள்ளங்கை தாங்கி பட்டத்திருக்கை வைத்துக் காத்திருப்பவர்கள். அவர்கள் கோரிக்கைகள் நியாயமானவை - சிறுபான்மைச்சுயநிர்ணய உரிமை பற்றிப் பேச்சுரிமையில்லை என்பதாலே! பெரும்பான்மைப்பாட்டாளிச்சகோதரயாக்களின் அனைத்துப்பிரச்சனைகளும் அவர்களுக்குத் தெரியும்; ஆனால், இச்சிறுபான்மைச்சகோதரர்களின் எந்தப்பிரச்சனையாவது அந்தப்பக்கம் தெரியுமா என்று எமக்குத் தெரிகின்றதோ இல்லையோ இவர்களுக்காவது தெரிந்திருக்குமென்று நம்புகின்றேன். வரி, வாற்புலிகள் காட்டிலோ நாட்டிலோ நடமாடாது மென்வலு உற்பத்தி மட்டுமே அபமிருதமாக நிகழ்வதாலே, சிறுபான்மையினருக்குப் பிரச்சனையேதுமில்லை - தனியார் மருத்துவக்கல்லூரிப்பிரச்சனை தவிர்த்து. இது இன்னும் கனவுகள் மலர்ந்திடும் காலம். இன்பக்கவிதைகள் புனைந்திடும் நேரம். சல்லிக்கட்டிலே மொழி, பண்பாட்டு அரசியலறுத்து நபும்சகமாகப் பன்னாட்டுப்பேரமைப்பின் ஊடுருவலாகக் காட்டினால் மட்டும் எதிர்ப்பானது தணியக்கூடும்.
முதலாவது வகை ஈழத்தமிழர்கள் நெருங்கிய நண்பர்களும் அடங்கியவர்கள். அவர்களிடமிருந்து வருவது எதிர்ப்பல்ல, ஆனால், கடந்த காலத்தின் பாதிப்பாலே விளைந்த சோர்வும் நம்பிக்கையின்மையுமே என்றே எண்ணுகிறேன்.

"2009 இலே சல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்துகின்றவர்கள் எங்கே போயிருந்தார்கள்" என்று கேட்கும்போது, முழுமையான தமிழகத்தையும் தவறாக ஒற்றைச்சரத்திலே போட்டுக்கட்டியதாகத்தான் தோன்றுகின்றது.
இலங்கையிலே மாட்டுச்சவாரி அங்குமிங்கும் நிகழ்ந்து கொண்டிருந்ததாக வாசித்திருக்கின்றேன்; இவ்வாண்டும் ஓரிடத்திலே நடத்தப்பட்டதாக வாசித்தேன். அறிந்தவரையிலே சல்லிக்கட்டுக்கும் இலங்கைக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டின் இசைக்கருவி பறைக்கும் இலங்கையின் இசைக்கருவி பறைக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு இரண்டையும் குழப்பாமலிருக்கவேண்டியதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்; சல்லிக்கட்டு இலங்கையிலே நடத்தப்படுவதில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பெருநிலப்பரப்பிலே எல்லாராமில்லாதபோதும்,குறிப்பிடத்தக்கோராலே நிகழ்த்தப்படும் விளையாட்டுத்தான். ஆனால், இப்போது, சல்லிக்கட்டிலே அங்கே குரலெழுப்புகின்றவர்களிலே |பெரும்பான்மையானோர்| (முழுப்பேருமில்லைத்தான்) இலங்கையிலே நிகழ்ந்தவற்றிலே குரலெழுப்பியிருக்கின்றார்கள்; தம்மை எரியூட்டி மாய்த்தவர்களும் அங்கே இருந்திருக்கின்றார்கள். பொதுப்படையாக நாம் அவர்களைக் குற்றம் சொல்லிவிடமுடியாது. 

நீரணைக்கு அப்புறம் 2009 வாகரையிலும் வன்னியிலும் நிகழ்ந்தபோது கிஞ்சித்தும் கவலைப்படாது, Rabbit-Proof Fence இனைப் பார்த்து, 1930 களிலே பெற்றோரின் கைவசமின்றி வெள்ளைப்பண்பாட்டுக்குள்ளே திணிக்கப்பட்டு வதையுண்ட அவுஸ்ரேலிய பழங்குடிக்குழந்தைகள் இரண்டுக்காகச் சென்னையிலே அழுத அதே குழுத்தான் எல்லாம் முடிந்தபின்னால், அத்தனையையும் பழரசப்படுத்தி நூல்களாக எழுதிப்போடப் பதித்துப்போட்டும் வாசித்து உருகி போன வாரம்வரைக்கும் புத்தகக்கண்காட்சிக்குப் போய் மீண்டு வந்து இன்று கருத்துச் சொல்கின்றது என்பதை யார் மறக்கினும் சிலர் மறக்கோம். ஆனால், இவர்களைமட்டுமே வைத்துக்கொண்டு முழுத்தமிழகத்தையும் காண்பது முற்றிலும் தவறு. மேலே சொன்ன தமிழ்ப்படை அரிக்க அரிக்கச் சொறியும் இரண்டாம் குழுவுக்கும் இக்குழுவுக்கும் பெரிய வேறுபாடில்லை. ஆகவே, தமிழகத்தைப் பார்க்கையிலே அப்துல் ரவூப் முதல் முத்துக்குமார், செங்கொடி இவர்களிலிருந்துதான் சோர்வுறுக்கின்ற இலங்கைத்தமிழர் தொடங்கவேண்டுமேயொழிய சோகத்தைப் பிழிந்து இலக்கியரசமாக ஸ்ரோவிலே உறுஞ்சும் இந்த ஆன்மதரிசனர்களிலிருந்தல்ல.

இரண்டாவதும் மிக முக்கியமானதுமான விடயமானது, தமிழகத்திலிருந்து இலங்கையிலே நிகழ்ந்தவற்றுக்குக் குரலெழுப்பினார்களோ இல்லையோ, இதுபோன்ற அழுத்தம் சிறுபான்மைச்சமூகங்கள்மீது நிதி+அதிகாரபலமுள்ள பன்னாட்டு அமைப்புகள் தங்கள் வாழ்நெறியை அந்நாடுகளிலேயிருக்கும் ஆட்சியாளர் கூட்டோடு திணிக்கும் செயலாகத்தான் நாம் பார்க்கவேண்டும். இவ்விடத்திலே அச்சிறுபான்மையினரது -உள்முரண்பாடுகள் எவையிருப்பினுங்கூட- பண்பாடு, வழக்குமுறை என்பவற்றை எண்ணியும் பார்க்காது, கருத்தினைக் கேட்காது ஒற்றைத்திசையழுத்தமாக ஏற்றப்படுவது. அவ்வகையிலேதான் அமேசன் இந்தியர்-சுற்றுப்புறச்சூழல், இன்யூட் குடிகள்-திமிங்கலவேட்டை தொடர்பான சிக்கல்களைக் காணவேண்டும். அவ்வழியிலே, தமிழகத்தின் சல்லிக்கட்டினை வேண்டுமென்ற போராட்டம் தார்மீகவழியிலே உலகம் பரந்த இலங்கைத்தமிழராலே ஆதரிக்கப்படவேண்டியது என்று கருதுகின்றேன்.

No comments: