Wednesday, November 06, 2013

ஆடுறா ராஜா! போடறா பல்டி!

நாட்டிலே நாலாயிரம் பிரச்சனைகளிருக்க, ஜெயமோகன் என்பவரின் கட்டுரைக்காக தி இந்துவிடம் போனார்களாம். நேரே நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று அக்கூட்டம் எதிர்பார்க்கிறதோ, அதையே எள்ளளவுபிசகுமின்றி செய்துவை(த்)து, "கோலாட்டியை மீறா வித்தைதெரிந்த குரங்குகளென்ற" பாராட்டையும் பிரம்மரிஷிகள் மேல்வாயாலும் கீழ்வளியாலும் பெற்றுக்கொள்வதிலேதான் உங்களுக்கு எத்துணை பூரிப்பு!

கிட்டத்தட்ட வாழைப்பழத்தைத் தூக்கி ஆட்டித் தன் பிழைப்புக்காகக் குதிக்க வைக்கும் குரங்காட்டிகளாகத்தான் அவர்கள் எல்லாப்பிரச்சனைகளிலுமிருக்கின்றார்கள்; சூழ்ந்தாருக்கு வேடிக்கைப்பொருளாகிக் குதிக்கும் மூடக்குரங்குகளாகத்தான் நீங்களிருக்கின்றீர்கள்.

முதலிலே ஏரணமாய்ச் சிந்திக்கவேண்டும். ஒருவர் பிடிக்காத ஒன்றைக் கருத்தாக முன்வைக்கிறாரென்றால், வரலாற்றுத்திரிபேதும் செய்யாவிடத்து அக்கருத்தைக் கருத்தாலே எதிர்க்கவேண்டுமேயொழிய, மூடர்கூட்டமாய்ப் போய், "கட்டுரையை வெளியிடாதே!" என்று கத்துவது முறையில்லை; இப்படியாகக் கத்துவீர்கள் என்று அறிந்தே அவர்கள் செய்கின்றார்கள் என்பது ஒரு புறமிருக்கட்டும். "கருத்தை வெளியிட முறையாக ஓர் ஊடகமில்லை நம்மிடம்" என்கிறீர்களென்றால், ஏனென்று நீங்களே எண்ணிக்கொள்ளுங்கள்; உங்களுக்குள் சண்டைபோட ஊடகங்களைத் தொடங்கி, சண்டை வீரவரிகளுக்கும் மண்டபத்திலே எழுதித்தர அவர்களையே பெரும்பதவிகளிலே பொறுப்பாக இருத்துகின்றவர்கள் இல்லையா, நீங்கள்?

இத்துணை காலமும் எதையுமே உங்களுக்குக் கற்றுத்தந்ததில்லை. ஈழப்பிரச்சனையாகட்டும்; கூடன்குளமாகட்டும்; மொழிப்படுத்தலாகட்டும்..... வாழைப்பழத்தைக் காட்டிக்கொண்டே, அவர்கள் இசைநுணுக்கங்களையும் உலகசினிமாவையும் கிரிக்கெட்டையும் இலக்கியமென்றால் நம்மவரினது என்பதையும் கடைசியாக வந்த அப்பிள் ஆப்ஸையும் காஜெட்டுகளையும் மனிதகுலத்துக்கான நீதியையும் சுட்டுவிரலாலும் சுண்டுவிரலாலும் கொட்டுவதுபோல, நுனிப்புல்லாய்ப் பேசிக்கொண்டு, அறிந்தோர் பாவனை புரிவார்கள். நீங்கள் குரங்குகளாகத் துள்ளுவீர்கள். கண்டுகொண்டே, காணாததுபோல அவர்கள் பாவம் பண்ணு... இல்லையில்லை... பண்ணவேமாட்டார்கள். இஃது உங்களை இன்னும் குதிக்கவைக்குமென்று தெரிந்தே கச்சிதமாகக் கூட்டுக்கலாதி பண்ணுவார்கள். அவர்களின் காணாதிருக்கும் தன்மை இன்னும் உங்களைக் குதிக்கவைக்கும். அவர்கள், உங்களைப் பற்றியே ஓர் அக்ஷ்ரம் பேஷாமல், சுதேசமித்திரன் பாரம்பரியத்திலிருந்தும் உ.வே. சாமிநாதர் விந்துபோட்ட மொழிக்காத்தலிலிருந்தும் தடாலென தமக்குள்ளேயே திருவாய்மொழி பகிர்ந்துகொள்வார்கள்; எத்துணை உசத்தி காண்! எத்துணை புரிந்திருக்கின்றார் நம்முன்னோர் காண்! இஃது இன்னமும் உங்களை எகிரவைக்கும்; பின்னே? ஒருத்தருக்குத் தாம் அலட்சியம் செய்யப்படுகின்றோம் -அதுவும் தாம் சார்ந்த ஒன்றிலே என்பதைப்போன்று சினத்தையும் வெப்பிசாரத்தையும் தரக்கூடியது எதுவுமேயில்லை; இல்லையா? நேரே அவர்களிடம் அவா. வெகுளி, பொச்சாமை, இன்னாச்சொல் எல்லாம் கலந்த குழம்பு சட்டியிலிருந்து சொட்டச் சொட்டப் போய் நின்று சன்னதமாடுவீர்கள்; நீங்களுங்கூட என்னதான் செய்வீர்கள்? எத்துணை காலத்துக்குத்தான் புழு தொடையிலே துளைக்கத்துளைக்க, பரசுராமனைப் படுக்கவைத்திருப்பீர்கள், தேரோட்டிமக்காள், கர்ணர்களே? அவர்கள்தான் இந்நேரத்திலே அறமும் மெய்ஞ்ஞானதரிசனமும் கொண்ட மாமணிகளாச்சே! தர்மமாகவும் பொறுமையாகவும் உங்களின் ஆவேசத்திற்குத் தன்மையாகப் பதில் தருவார்களாம்; கௌடில்யர்களாச்சே! கோபம் தாழ்ந்து, அடுத்த குதிப்புக்குப் புதுமலைவாழைப்பழம் வரும்வரைக்கும் சோளப்பொரியோடும் கிருஷ்ணர்களே தந்த அவலப்...சே! அவற்பொட்டணியோடும் திரும்பிவருவீர்களாம்! அவர்கள் அதையே தம் செய்தியாக்கி விற்பார்களாம். நாய் விற்ற காசென்ன.... குரங்கு குதித்ததாக வந்த பத்திரிகையும் குதிர்க்கும்.

"மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம் விருந்தினர்களே! தாஜ்மஹாலைக் கட்டியது ஷாஜகானாக்கும்; தஞ்சைப்பெரியகோவிலைக் கட்டியது இராஜராஜஷோழனாக்கும்; முகம் தெரியாத கட்டிடக்கலைஞர்களோ சிற்பிகளோ கொத்தனார்களோ கூலிகளோ அல்ல!!"

முள்ளிவாய்க்காலே மூச்சு நின்று போச்சு!
முன்றலிலே இத்துணை மூச்சுப்பிடிப்பு உங்களுக்குள்!
இப்படியான ஏமாளிக்குரங்குகளை ஆட்டாமல் சும்மா விடலாமா தேர்ந்த குரங்காட்டிகள்?

சோ சுக்கிராச்சாரியை இராஜகுருவாய்க்கொண்ட ஆத்தாவையும் மஞ்சட்டுண்டு போத்திய தாத்தாவையும் திராவிடத்தின் பேரிலே கட்டிலே மாற்றிமாற்றியேற்றும் மூத்தகுடியிடம் அதிகம் எதிர்பார்க்கிறேனோ?

இதுக்குத்தானே ஆசைப்பட்டீர்கள் மூத்ததமிழ்க்குரங்குகளே! :-(
எத்துணை காலமும் ஏமாற்றுவார் நும்நாட்டிலே!! :-(

1 comment:

தங்கமணி said...

Jeyamohan and his opponents: A tale of mutual hatred and contempt

http://contrarianworld.blogspot.in/2013/11/jeyamohan-and-his-opponents-tale-of.html