Friday, January 09, 2009

பதியம் படரும்

தமிழீழவிடுதலைப்புலிகள் கைக்கொண்டிருந்த நிலவெல்லை ஒடுங்கியவுடன், புலிகளின் ஆதரவாளர்கள் சோர்ந்து போயிருக்கின்றார்கள் அல்லது தம்மைத்தாமே உற்சாகப்படுத்திக்கொள்கிறார்கள். புலியெதிர்ப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்கள். மூன்றாவது குழுமமான ஈழத்தவரை வைத்துப் பிழைக்கும் கும்பலுக்கு இது பற்றிக் கவலையில்லை; தன் பை நிரம்பினாற் சரி.

புலிகளின் கண்மூடித்தனமான விமர்சனமற்ற ஆதரவாளர்கள், புலிகளை விமர்சிக்கின்றார்கள் என்பதற்காகவே பேசுகின்றவர்களை உண்மைக்குப் புறம்பாக இழிவுபடுத்தும் கதைகளைப் பரப்புகின்றவர்களும் புலிகள் நலிவடைந்ததற்குக் காரணமாகியிருக்கின்றார்கள். புலிகளின் தேவையை விமர்சனமிருக்கும்போதுங்கூட, பெரும்பாலும் அவர்களின் தேவை, உறுதியான நோக்கு இவற்றினைக் கருத்திலே கொண்டு பொதுவிலே ஆதரிக்கும் மிதமான பலரினை வெளிப்படையாக ஆதரவினைத் தரமுடியாது மௌனித்திருக்கச் செய்ய இவர்களும் காரணமாகிவிடுகின்றார்கள்.

புலியெதிர்ப்பாளர்களிலே புலிகளை அதன் அத்துமீறிய செயற்பாடுகளுக்காக எதிர்க்கின்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், புலியை எதிர்க்கின்றோம் என்ற போக்கிலே ஸ்ரீலங்கா அரசினை நியாயப்படுத்தும் கும்பலும் தங்களின் கடந்த காலத்தவறுகளுக்கும் புலிகளையே கேள்வி கேட்கும் கும்பலும் எரிச்சல் மூட்டுகின்றன. தாங்கள் இழைத்த அநீதிகளையும் வரலாற்றுத்தவறுகளையுங்கூடப் புலிகளிலே போட்டுக்கொண்டு அனுதாபம் தேடும் இக்கும்பல்களின் திரை கிழிக்கப்படவேண்டும். சொந்த மக்களின் அழிவும் இடர்கொண்ட ஏதிலி வாழ்வும் கண்ணிலே படாமல், புலியின் ஒழிவிலே மட்டும் மகிழ்ச்சி கொள்ளும் இவர்கள் பதிலுக்கு வைத்திருக்கும் திட்டங்கள் நான்கு முழம் பூக்கவிதைகள், முடிந்துபோன காலத்தினை வைத்துப் பிழைப்பு நடத்தும் கதைகள், எட்டடி கீறிட்ட இடங்களை நிரப்பும் நீளக்கட்டுரைகள், கேள்வியும் நானே பதிலும் நானே என்ற நிலையிலே நடத்தும் தமிழ்த்தேசத்தளங்கள். சரி; இன்று புலிகள் முடிந்து விட்டார்கள்; இப்போது நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? முன் வைக்கும் செயற்றிட்டங்கள் எவை? உங்கள் சொந்த இயக்கங்களின் குற்றங்களையும் ஸ்ரீலங்கா அரசினதும் இந்திய அரசினதும் குற்றங்களைக்கூட புலிகளிலே சுமத்திய நீங்கள் இன்று வார்த்தைக்கு வார்த்தை முன்வைக்கும் மக்களுக்காக - தலித், உழைக்கும், பெண், ________ நிரப்புக - மக்களுக்காக வைக்கும் செயற்றிட்டங்கள்தான் என்ன? புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து திரும்பிப்போய் உங்கள் ஸ்ரீலங்கா அரசின்கீழே நின்று எவருக்காகக் குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொள்கின்றீர்களோ அவர்கள் அனைவரினையும் கூட்டி நின்று போராடத் தயார் நிலையிலேதானே இருக்கின்றீர்கள்? நிற்கின்றீர்கள்? இனியும் புலியைக் காட்டிப் பிழைக்கமுடியாதென்ற நிலையிலே, பதிவு கிழிய எழுதித்தள்ளுவதற்கப்பால், உங்கள் அடுத்த செயற்பாடு என்ன என்று அறியத்தாருங்கள். புலிகள் தொடங்கிய காரணமொன்றாலேயே நிகழும் போரில் இறக்கும் குழந்தைகளுக்காக அழுகின்ற உங்களுக்கு கொத்துக்குண்டுகளாலே இறக்கும் குழந்தைகளுக்காக நீங்கள் வாழும் நாட்டிலே எதிர்ப்புக்குரல் எழுப்பமுடியாது போவது ஏன்? புலிகள் பெண்களை ஒடுக்கி இயக்கங்களிலே வைத்திருக்கின்றார்கள் என்று கதறும் பெண்ணியவாதிகளுக்கு எதற்காக அதே பெண்கள் இறந்து ஆடையவிழ்க்கப்பட்டுப் படம் பிடிக்கப்படும்போது பேசமுடியாது போகிறது? இப்படியாக அரசபடைகளின் அம்மணத்தினைப் பொத்தி மறைப்பதிலே உங்களுக்கும் மாலினி பார்த்தசாரதிக்கும் என்ன வேறுபாடிருக்கின்றது என்பதையேனும் சொல்லலாமே?

ஈழம் தொடர்பாக தமிழ்நாட்டிலிருக்கும் பெரும்பான்மையான பதிவர்களைப் பற்றி எனக்குப் பெரிய நல்ல கருத்து ஏதுமில்லை. இங்கே ஈழத்தவருக்கு என்ன நடக்கின்றது என்பது பற்றியே அக்கறையில்லாமல் உளக்கிலேசமேதுமேயில்லாமல், புனைகதைக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தேவையில்லை என்ற பாங்கிலே எழுதும், அதனை ஆதரிக்கும் மாக்களைப் பற்றி நான் பேசவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா போன்று தமது கணக்கு எண்ணிச் செயற்படும் அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசவில்லை. தனது கைச்சாணை மற்றவர்களின் உயரங்களை அளக்கப்பயன்படுத்தும் வெத்து வேட்டுகளைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், ஈழத்தமிழர், ஈழத்தமிழர் என்றே பதிவிலே ஒப்பாரி வைக்கும் இவர்களிலே பெரும்பான்மையோருக்கு எதற்காக, சென்னையிலே ஈழத்தமிழர்களைப் பற்றி இழிவாகவே எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களின் தொழிலகங்கள், பத்திரிகை நிறுவனங்கள், வீடுகளுக்கு முன்னாலே அவர்களின் சுயம் பரந்துபடத் தெரியவைக்கும்வரை தொடர்ச்சியாக கவன ஈர்ப்புச்செயற்பாடுகளிலே ஈடுபட முடிவதில்லை? சென்னையிலே நிகழும் புத்தகக்கண்காட்சியிலே கவன ஈர்ப்புச்செயற்பாடுகளிலே ஈடுபடமுடிவதில்லை? கருணாநிதி போன்ற தம் கட்சித்தலைவர்களிடமே தமது மாற்றுக்கருத்தினைச் சொல்லமுடிவதில்லை? நாளை எந்திரன் படம் வெளிவந்தால், பதிவுகளிலிருந்து வன்னியின் ஈழத்தவர் நிலை மறைந்துபோவார்கள். சாருநிவேதிதாவும் ஜெயமோகனும் அம்பைக்கான கனடாவின் மேட்டுக்குடி இயல் விருதுமே ஆக்கிரமித்திருக்கும் கவன ஈர்ப்புப்பதிவுகளிலே இதுதான் சாத்தியமாகும். இன்னும் பத்துப்பதினைந்து ஆண்டுகளிலே தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த இந்தியதேசியர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் ஈழத்தின் போராட்டத்தினை ஆராய்ந்து முனைவர்/கலாநிதிப்பட்டம் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாங்குவதையும் குமுதம் ரிப்போட்டரிலே ஈழத்தமிழர் வரலாற்றை வாசித்து அறிந்து கொள்ளும் நாம் கண்டுகொண்டு போவோம். ஈழக்கவிதைகளையும் ஈரக்கதைகளையும் படைப்பின் நயப்புக்காகவே நவிற்சி செய்ததை, கலை கலைக்காவே என்பதாகக் கடந்து வந்திருக்கும் எமக்கு இது, கல்வி மேட்டுக்குடிக்காகவே என்பதும் தவிர்க்கமுடியாததேயாகும்.

தனிப்பட்ட அளவிலே ஈழத்தவர்களின் விடுதலை எல்லையை அறிந்தளவிலே இன்று வந்திருக்கும் நிலையை என்றோ எதிர்பார்த்திருந்தேன். தனியொரு சுயதேசிய இயக்கமாக இதுவரை விடுதலைப்புலிகள் இத்தனை எதிர்ப்புகளிடையிலே நின்றுபிடித்ததே பெரியது. பிரித்தானிய சாம்ராஜ்யம் சப்பித் துப்பிய சக்கையைக் கெஞ்சிப் படிக்கத்திலே பெற்றுக் கொண்டதைச் சுதந்திரம், சுயராஜ்யம் என்று மந்திரமாக ஓதிக்கொண்டிருக்கும் பேர்வழிகளுக்கு இது புரிதல் கடினமே. சிறுவர்களைப் படையிலே சேர்த்தல் என்பன சம்பந்தமாக முழுக்க முழுக்க விமர்சனம் முன்னைப் போல எனக்கு இல்லை. மேற்கின் பார்வையிலே வைக்கப்படும் மனித உரிமைகள், சில சந்தர்ப்பங்களிலே மேற்குலகின் நெறிக்கோவையை, நடைமுறைநிலைகளையும் பயன்படுத்தும் சூழல்களையும் கண்டுகொள்ளாது திணிப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பலவற்றிலே எனக்கும் காட்டமாக விமர்சனமிருக்கின்றது - அவர்களின் ஒடுக்கும் முறைகள், தனிப்பட்ட ஒருவரை மனித நிலைக்கும் மேலாக நிறுத்திச் செயற்படும் செய்கை உட்பட.

ஆனால், விடுதலைப்புலிகள் தோற்றுப்போனதாகக் கருதப்படும் இந்நேரத்திலே விடுதலைபுலிகள் என்னிடத்திலே மரியாதையிலே உயர்ந்திருக்கின்றனர் - குறைந்தபட்சம் அவர்கள் இவர்கள் இல்லை.

இனி வரும் காலத்திலே இணையத்திலே அரசியல் மற்றோருடன் பேசுவதிலே பயனில்லை என்றே நினைக்கிறேன். இணையத்துக்கு அப்பாலே, பாதிக்கப்பட்டிருக்கும் அழுந்தியிருக்கும் ஈழத்தவருக்குச் செய்ய வேண்டிய மேலதிகக்கடமை கொஞ்சமேனும் கடப்பாடுணர்வும் குற்ற உணர்வுமுள்ள ஈழத்தவர்களுக்கும் அவர்களின் மெய்யான ஆர்வலருக்குமிருக்கும்.
======================================================================
என் பின்னூட்டங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன; இனி வரும் பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. ஸ்ரீரங்கன் தனிப்பட்ட அஞ்சல்களிலே முடிந்தால், இதுபற்றிப் பேசுவோம். இங்கே தொடர்ந்து பேசுதல்கூட, சிலருக்கு எங்களைக் குத்துக்கரணமிடும் வட்டத்துக்கண்காட்சிப்பொருட்களாகவே நிறுத்துமெனத் தோன்றுகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன் கருத்து:
//சொந்த மக்களின் அழிவும் இடர்கொண்ட ஏதிலி வாழ்வும் கண்ணிலே படாமல், புலியின் ஒழிவிலே மட்டும் மகிழ்ச்சி கொள்ளும் இவர்கள் பதிலுக்கு வைத்திருக்கும் திட்டங்கள் நான்கு முழம் பூக்கவிதைகள், முடிந்துபோன காலத்தினை வைத்துப் பிழைப்பு நடத்தும் கதைகள், எட்டடி கீறிட்ட இடங்களை நிரப்பும் நீளக்கட்டுரைகள், கேள்வியும் நானே பதிலும் நானே என்ற நிலையிலே நடத்தும் தமிழ்த்தேசத்தளங்கள். சரி; இன்று புலிகள் முடிந்து விட்டார்கள்; இப்போது நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? முன் வைக்கும் செயற்றிட்டங்கள் எவை? உங்கள் சொந்த இயக்கங்களின் குற்றங்களையும் ஸ்ரீலங்கா அரசினதும் இந்திய அரசினதும் குற்றங்களைக்கூட புலிகளிலே சுமத்திய நீங்கள் இன்று வார்த்தைக்கு வார்த்தை முன்வைக்கும் மக்களுக்காக - தலித், உழைக்கும், பெண், ________ நிரப்புக - மக்களுக்காக வைக்கும் செயற்றிட்டங்கள்தான் என்ன? புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து திரும்பிப்போய் உங்கள் ஸ்ரீலங்கா அரசின்கீழே நின்று எவருக்காகக் குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொள்கின்றீர்களோ அவர்கள் அனைவரினையும் கூட்டி நின்று போராடத் தயார் நிலையிலேதானே இருக்கின்றீர்கள்? நிற்கின்றீர்கள்? இனியும் புலியைக் காட்டிப் பிழைக்கமுடியாதென்ற நிலையிலே, பதிவு கிழிய எழுதித்தள்ளுவதற்கப்பால், உங்கள் அடுத்த செயற்பாடு என்ன என்று அறியத்தாருங்கள். புலிகள் தொடங்கிய காரணமொன்றாலேயே நிகழும் போரில் இறக்கும் குழந்தைகளுக்காக அழுகின்ற உங்களுக்கு கொத்துக்குண்டுகளாலே இறக்கும் குழந்தைகளுக்காக நீங்கள் வாழும் நாட்டிலே எதிர்ப்புக்குரல் எழுப்பமுடியாது போவது ஏன்?//


//எதிர்பார்த்திருந்தேன். தனியொரு சுயதேசிய இயக்கமாக இதுவரை விடுதலைப்புலிகள் இத்தனை எதிர்ப்புகளிடையிலே நின்றுபிடித்ததே பெரியது. பிரித்தானிய சாம்ராஜ்யம் சப்பித் துப்பிய சக்கையைக் கெஞ்சிப் படிக்கத்திலே பெற்றுக் கொண்டதைச் சுதந்திரம், சுயராஜ்யம் என்று மந்திரமாக ஓதிக்கொண்டிருக்கும் பேர்வழிகளுக்கு இது புரிதல் கடினமே. சிறுவர்களைப் படையிலே சேர்த்தல் என்பன சம்பந்தமாக முழுக்க முழுக்க விமர்சனம் முன்னைப் போல எனக்கு இல்லை. மேற்கின் பார்வையிலே வைக்கப்படும் மனித உரிமைகள், சில சந்தர்ப்பங்களிலே மேற்குலகின் நெறிக்கோவையை, நடைமுறைநிலைகளையும் பயன்படுத்தும் சூழல்களையும் கண்டுகொள்ளாது திணிப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் பலவற்றிலே எனக்கும் காட்டமாக விமர்சனமிருக்கின்றது - அவர்களின் ஒடுக்கும் முறைகள், தனிப்பட்ட ஒருவரை மனித நிலைக்கும் மேலாக நிறுத்திச் செயற்படும் செய்கை உட்பட.

ஆனால், விடுதலைப்புலிகள் தோற்றுப்போனதாகக் கருதப்படும் இந்நேரத்திலே விடுதலைபுலிகள் என்னிடத்திலே மரியாதையிலே உயர்ந்திருக்கின்றனர் - குறைந்தபட்சம் அவர்கள் இவர்கள் இல்லை.//


இரமணிதரன்,வணக்கம்!

இப்போது, உங்கள் மனதைத் திறந்து ஏதோ எழுதியுள்ளீர்கள்.ஆனால், அவ்வளவும் தப்பானதுதென்பதை என்னால் புட்டுவைக்கமுடியும்;(இது,எச்சரிக்கை அல்ல-நட்பார்ந்த குரல்-புரிக!)

தமிழர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதாகவிருந்தால் முதலில் நமது தவறுகள் சுயவிமர்சனத்தேடு(கட்சி,அரசியல்,உட்கட்சி வடிவும்,ஜனநாயகம்,வர்க்க-தேசிய நிகழ்வூக்கம்,அதனோடான அந்நியவுறுவு,அது சார்ந்து அரசியற்கொலைகள்-போராட்டச் செல் நெறி-எந்த வர்க்க விடுதலை,இத்யாதி)மக்கள் அரங்குக்குக் கொணர்ந்து நமது போராட்டம் மக்களின் தலைமையோடு கட்டப்பட்டாக இருக்கவேண்டும்.

இதைத் தவிர்ப்பவர்கள் நமது நலனுக்காக எதுவுஞ் செய்வதற்கு முனையவில்லை-புலிகள் இதன் பாத்திரத்தில் இலக்கம்: 1.


இரமணி,இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றைச் சொல்வேன்!

நான் தினமும் மாணவ நிலையில் கற்பவன்.

எனக்கு உலகத்தின் அநுபவத்தைக் குவித்த"அறிதல் மனது"உண்டு.


இதைக் கடந்து உங்களைப் போன்றோர் முன்வைக்கும் இத்தகைய நறுக்குகள் எமக்கு எதையுஞ் செய்வதற்கில்லை இரமணி.முதலில் இயக்க வாதமாக இருக்கும் புலி விசுவாசத்தைக்கடந்து(அதாவது,புலி அடிமட்டப் போரளிகளின் தியாகத்தைச் சொல்வதாகப் புரியவும்)மக்கள் போராட்டம் என்பது முதலில் தீர்வை எப்படி முன் வைக்கும் என்பதைப் புரியவும்.


சும்மா"தீர்வு-தீர்வு"என்று புலிகளின் வால்கள் கேட்கும் நிலையில் உங்களைப்போன்றவர்கள் எழுதுவது சுத்த அபத்தம்.இது,உங்கள் தகமைக்கு அழகானதாகவில்லைப் பெயரிலி!.


தீர்வு இலங்கைப் பாராளுமன்றத்துக்க இல்லை.அது, வெளியியேதாம் இருக்கு.எனவேதாம் புரட்சியின் நடைமுறைசார்ந்த இலக்குகளை முன்வைக்கிறோம்.

இதைவிட்ட மாற்றுத் தேசியம்-விடுதலை ஒன்று உலகத்துள் இல்லை இரமணி,புளெட் உமமகேஸ்வரன் பாணியில்:"இந்தியா உலகுக்கு முற்போக்கு நடாகக் காட்டுவதால்,நமது போராட்டத்தை அது அங்கீகரிக்கும்"என முட்டாள்தனத்தின் கடைக்கோடி நிலைக்கு நீங்கள் கருத்தாட முடியாது.உங்கள் இக் கட்டுரை இதையே பேசுவது போன்றுள்ளது.புலிகளும்,"இந்தியாவின் நலனுக்குத் தாம் எதிராளிகள் அல்ல"என்பதன் தொடர் இதையே உறுதிப்படுத்துவது!முதலில் மக்களின் எதிரிகள், நமது தேசத்தைக் கடந்து அந்நியத் தேசங்களில் தமது வியூகத்தைத் தொடர்ந்து பேணீ, இலங்கையில் நம்மை அழிப்பதை எதனோடு பொருத்துவதென்பதைத் தீர்மானிப்பது வர்க்க அரசியல் என்பதுதாம் உண்மை.இதைக்கடந்து எந்தத் தேசிய விடுதலையும் இல்லை!

"விடுதலை"ப் போராட்டம் என்பது எந்தவொரு தறுதலைக்கும் ஒளிவட்டம் கட்டுவதல்ல.மாறாக, அது மக்களின் தலைமையோடு சூழலுக்கேற்ற கோசத்தோடு தன்தை; தகவமைத்து முற்று முழுதான மக்களின் தியாகத்தோடு-நிலவுகின்ற பொருளாதார-தேசிய அலகுகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்திக் காரிமாற்றுவது.இலங்கையில் எண்பது வீதமான மக்களை(சிங்ள-இஸ்லாமிய-மலையக மக்கள் என்பதாக இது விரிவுறும்) எதிர் நிலைக்குத் தள்ளிவிட்டு,அவர்களின் தயவின்றி நம்மை விடுவிக்கவேண்டுமென எந்தப் பேயனும் கருத்துக்கூறமுடியாது.ஆனால்,புலிகள் இதையே செய்தவர்கள் என்பது கண்கூடு-மறுக்க முடியுமா?

இலங்கை மக்களுக்குத் தீர்வு என்ன என்று நீங்கள் கேட்பது வெறும் தப்பான நோக்கு நிலையானது.தீர்வு என்பதைத் தீர்மானிக்கும் பொருளாதார இலக்கிலிருந்து ஒரு வர்க்கம்தாம் முன்வைக்க முடியும்.அதைவிட்டு,அதை; தீர்மானிப்பது சில எழுத்தாளர்களோ அன்றித் தலைவர்களோ இல்லை!

உங்களை மேலும் கேட்டுக்கொள்வது என்னவெனில்,நாம்-நம்மைச் சுய விமர்சனஞ் செய்ய வேண்டும்"என்பதே.


இன்றைய புலிகளின் அழிவை நாம் இருபதாண்டுகளின் முன்னமே சொல்லிவிட்டோம்.


அப்போது, இலங்கை அரசியலில் இயக்க வரலாற்றுப் பாத்திரத்திலேயே-பதிவுகளிலேயே மிக முக்கியமான புலிகளின் பாத்திரம் குறித்த மார்க்சியப் பார்வைகளை முன்வைத்த அன்றைய தெரிவை உள்வாங்க முனையவும்.இதை, முன்வைத்தவர்களை பின்னாளில் இனங்காண முனைந்தால் அவர்களும் இதே சாக்கடையில் மக்கள் துரோகிகளாக மாறியவர்களே.எனவே,இவர்கள் எல்லோரும் ஏன்-எப்படி இந்நிலையை அடைந்தார்கள் என்பது குறித்தே நமது விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.அதைவிட்டு,உங்களது இந்தக் குரல் மிகவும் மோசமானது நண்ப!


அன்புடன்,
ஸ்ரீரங்கன்

சனி ஜனவரி 10, 10:29:00 முப: அகிநே 2009
-/பெயரிலி. கருத்து:
அன்பின் ஸ்ரீரங்கன்,
கிட்டத்தட்ட உங்களிலும்விட ஓரீராண்டு அகவை எனக்குக் குறைவாகவிருக்கும். உங்களைப்போல இயக்கப்பங்களிப்பு இல்லாதபோதுங்கூட, விடுதலைப்புலிகளுடன் அக்காலகட்டத்திலே கருத்தொன்றி நின்றதில்லை. இன்றும் பல நிலைகளிலே அவர்களுடன் ஒன்ற முடிவதில்லை. மாவீரர்தினங்களைக்கூட, மற்றைய இயக்கங்களிலே சென்று, சென்ற காரணத்துக்காகவே இறந்த போராளிகளையும் உள்ளெடுத்து மரியாதை செய்யாமல் விடும் காரணத்துக்காகவே முழுமையாக ஆதரிப்பதுமில்லை.

ஆனால், உங்களைப்போல வெறித்தனமான இந்திய வெத்துவேட்டுகள் பின்னூட்டங்களிலே இறந்தவர்களைப் பற்றிப் பகடி செய்யும்போது, அதைப் புரியாமலோ, புரிந்தும் வேண்டுமென்றே விட்டுக்கொண்டோ இருக்கும் உளநிலை எனக்கில்லை. செயற்படுத்தமுடியாத கருத்துநிலை மார்க்சியத்தையும் தலித்தியத்தையும் பொத்திப்பொத்தி எங்களை கைப்பிடிக்குள்ளே வைத்து என்னத்தினைச் சாதித்தோம்? எங்களுக்கான ஒரு செல்லப்புரட்சிக்கான நோக்கு இருக்கின்றதென்பதையா? இதற்கும் மக்கள்புரட்சி உளப்பாங்கு முற்றி முடுக்கப்பட்டு, யாருக்கெதிராகப்போராடுவது என்பதைத் தேர்ந்தெடுக்கத் தேடி, "அமெரிக்க காப்பரேட் தமிழ்மணம்" இற்கு எதிராகப் போராட்டம் அவ்வப்போது நடத்திக்காட்டும் சில தமிழ்வலைப்பதிவர்களின்ன் செயற்பாடுகளுக்கும் (அல்லது பேச்சுவெட்டிவிழுத்தலுக்கும்) வேறுபாடு எனக்குத் தெரியவில்லை.

ஈழப்பிரச்சனை வேகுவேகுவென வெகுவாய்ப் பற்றியெரிந்த காலகட்டத்திலிருந்து வந்தவர்கள் கவிதையும் கதையும் கட்டுரையும் எழுதி விழுத்தத்தெரியாமலா குந்திக்கொண்டிருக்கின்றார்கள்? அப்படி எழுதித் தள்ளுவதாலேமட்டும் மக்கள் புரட்சி வெடித்துச் சோளப்பொரி கிடைக்குமென்றால், எழுபத்தேழிலேயே செய்திருப்பார்களே? குறைந்த பட்சம் பாரா, மருதன், குப்புசாமி செல்லாமுத்து மாதிரியான எழுத்துவியாபாரிகளோடு வித்தியாசப்படவேனும், பழைய குழந்தைப்போராளி எழுத்தாளர்களுக்கும் முழப்பூக்கவிதைக்காரர்களுக்கும் உண்மையை நடைமுறை நிலையிலே பார்த்து எழுத முடியாதா? பதிவிலே இன்றைக்கு ஈழத்தமிழருக்காக ஒப்பாரி வைத்து நாளை நமீதா, நயனதாரா இடுப்பு, உடுப்பு பற்றிப் பரபரப்பாகப் பற்றியெரிய பதிவர்களுக்கும் உங்களுக்கேனும் ஏதேனும் வித்தியாசமிருக்கவேண்டாமா?

ஸ்ரீரங்கன், பலரைப் போலவுமே அரசியலிலே உங்களுக்கும் களைப்பிருக்கும்; எனக்கும் களைப்பிருக்கும். ஆனால், குறைந்த பட்சம் ஒப்பாரி வைப்பதேனும் இல்லாமலிருக்க முயற்சிப்போம்.

சனி ஜனவரி 10, 11:21:00 முப: அகிநே 2009
ப.வி.ஸ்ரீரங்கன் கருத்து:
அன்புடைய பெயரிலி,வணக்கம்.தங்கள் மடல் கண்டேன்,நன்றி!எமக்கு முன் இன்றுள்ள சூழலில் எதுகுறித்துப் பேச வேண்டுமோ அது குறித்துப் பேசுவது ஒப்பாரியென்பதன் தொடரில் நான் சிலவற்றை மீளச் சொல்வதாகவிவ்வுரையாடல் தொடருகிறது:


தங்கள் எதிர்வினையை மிகவும் கவனமாகவே அணுகிறேன்.இதுள், உங்கள் மனதிலெழும் உணர்வுகளுக்குச் சொல்வதற்குப்பல என்னிடமிருக்கிறது.எனினும்,அனைத்தையும் இங்கே,முன்வைப்பதற்கில்லை.வெத்து வேட்டினது கேள்வியை குறிவைத்துச் சொன்ன வார்த்தைகளில் எனக்குச் சரியானவொரு கணிப்பு இருக்கிறது.அதைப் பார்ப்பனியத்தின் கடைக்கோடி எந்த அரசியல் முன்வைத்தாலும்-அதுள் அடக்கங்கண்ட உண்மை யதார்த்தமானது.எனவேதாம்,இறந்தவர்கள்"மனிதர்கள்"எனும் பதில் வருகிறது.பின்பு,"தேசத்தின் பெயரால் மனிதம் அழிந்தது உமக்குப் புரியவில்லையா?"என்று வெத்துவேட்டுக் கேட்டபோது"100 வீதஞ் சரி"என்றேன்.அதன் அர்த்தம் பல.எனினும்,மனிதத்தை அழித்ததில் நமது பங்கை ஏற்பது என்பதைச் செய்யவதிலுள்ள கவனம் சிறீலங்கா அரசையும்-அதன் அந்நியக்கூட்டையுஞ் சொல்லித் தப்ப முனைவதைத் தடுக்கும் முதல் கட்டம் ஆரம்பமாகிறது.ஏனெனில், அரசுகள் என்பவை குறித்த நமது மதிப்பீட்டிலிருந்து இவை வருபவை.அதாவது, ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு அரசு எப்பவும் மனிதத்தைத் தொலைத்ததே.அது, சமுதாயத்தில் பெருந்தொகையான மக்கட்பிரிவைத் தொடர்ந்து அடக்குவது-அழிப்பதே அதன் பணி.எனவே,இது குறித்து எதையும் மீளச் சொல்வதைவிட,நமக்கு விடுதலை எனும் பெயரில்-அத்தகைய அரசிடமிருந்து நம்மைக்காப்பதாகச் சொல்லிப் புறப்பட்ட விடுதலை இயக்கங்களின் மனிதவிரோதமே எமக்குமுன் சுயவிமர்சனமாகப் பொறுபேற்கப்படுகிறது.இது, எந்த வகையில்"மாதிரி உளப் பாங்கை"எனக்குச் சுமத்த முடியும்?இன்றைய ஈழப்போராட்டத்துக்குக் கவனமாகப் போராளிகளைத் தயாரித்தனுப்புங் காரிய வாதத்துக்கு நான் பொறுப்பில்லை!எனவே,புனிதத்தின் பெயரால் நான் போராளியின் உயிரை கொலைக் களத்துக்குப் பெருமைப்படுத்தி அனுப்புவதில் உடன்பாடற்றவன்.ஒடுக்குமுறைச் சிங்கள அரசிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போராக விடுதலைப் புலிகளின் போரை எப்போதுமே நான் ஏற்கப் போவதில்லை.


உங்களது எதிர்வினையுள் சொல்லப்படும் நியாயம், நான் முன்வைக்கும் எழுத்துகளுக்கு ஒரேயடியான ஒப்பாரியென்பது எந்தவகையில் மற்றவருக்கு அர்த்தங்கொள் உணர்வைச் செய்வதென்பதில் நான் எந்தப் புள்ளியையுங் கவனிப்பது இல்லை.நான் கவிதையெனப் புனையும்-ஒட்டும்-கட்டும்-செருகும் உணர்வுக்கு அடிப்படை"ஒரு தமிழன் இருக்கும்வரை தமிழீழப் போர் தொடரும்-விழ விழ எழுவோம்"எனுந் தமிழ்த் தேசியத் தறிகெட்ட உளவியலே காரணமாக இருக்கிறது!

இஃது ஒப்பாரி,அன்றி ஓவியத்தகு காவியம் எனுமெவ் பொருத்தப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட எனது உள்ளத்தின் வதையிலிருந்து எழுதப்படுவது.பெரும்பாலும் எனது குழந்தைகள்மீது அழியும் பாலகர்களைக் காண்பதிலிருந்து தொடருமிந்த உணர்வு யுத்தத்தால் அழிக்கப்படும்-களப்பலியாக்கப்படும் சிறார்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் பற்றியே அழுவது.இதை ஒவ்வொருகட்டத்திலும் சொல்லப்படும் உணர்வுகளிலிலிருந்து-உணர்வு நறுக்குகளிலிருந்து ஒரு"தெரிவை"ச் செய்துகொள்ள முடியும்.

இப்போர் நிறுத்தப்பட்டாகவேண்டும்.புலிகள் தொடர்ந்து தேசத்தைப் பாதுகாப்பதெனும் நோக்கில் பாலகர்களை வீழ்தத்தோதான அரசியல் இலக்கை எங்ஙனம் அடைந்தார்களென்பதன் புள்ளியில் எழுதப்படும் நீள்கட்டுரைகளுக்கு நடுவினில் என்னால் எழுதப்படும் "கவிதைகள்"மனித வதையிலிருந்து விடுவிப்புக்கான தெரிவாக உதிர்பவை.இதுவொருவகையில் களைப்புத்தாம்.ஆனால்,தவறானமுறையில்-தவறான தெரிவில் வீழ்த்தப்படும் எந்தவுடலுக்கும் தேசத்தின் பெயரால்"மாவீரர் மாலை"அணிவித்து மேலும் களப்பலி தொடர்வதற்கு நான் உடன்பாடுடையவன் இல்லை!

யுத்தம் நிறுத்தப்படவேண்டமென்று எப்போதிருந்தேர் குரல் கொடுப்பதிலிருந்து எழுதும் நோக்குடைய நான் எந்தப் புரட்சியும் பேசவில்லை.அதைத் தனி நபர்கள் எப்பவுஞ் செய்துவிடமுடியாது.ஆனால்,புரட்சியினது தேவையில்,அதைச் சார்ந்து சமூகமுரண்பாடுகள்- இயக்கம் எங்ஙனம் இன்றைய பிரச்சனையில் செயலூக்கத்தையுந்தித்தள்ளலாம் என்பது குறித்து எழுதமுடியும்.போராட்டத்தைத் தெரிவாக்கிய அமைப்புத் தன் போராட்ட-யுத்தத்தந்திரோபாயத்தில் வகுத்த செல்நெறியே இவ்வளவு தோல்விக்கும் காரணமென்பதையே ஒப்பாரி நிலையிலிருந்து ஓலமாகச் சொல்கிறேன்.இதைக்கூட முன்வைக்க முடியாத பொதுப்புத்திப்பேசாமௌனம் எனக்கானதல்ல.அதைவிட நான் செத்தே போகலாம்.

இங்கே,போராளிகள் குறித்து நான் கேவலமாக எதையுஞ் சொல்லவில்லை.தோல்வியடையும் போரைத் தொடர்ந்து நடாத்திப் போராளிகளைக் கொல்வதைத் தவிர்க்கும் அரசியலை, தமிழ்பேசும் மக்கள்தம் விடுதலையை முன்னெடுக்கும் அமைப்புச் செய்தாகவேண்டும்.ஒன்று சரணடைதல்-இல்லை யுத்த நிறுத்தத்தைக் கோரி மக்களைப் போராட(ஆர்ப்பாட்ட ஊர்வலம்) வைப்பது.இலங்கையில் மக்கள் இதை ஏன் செய்ய முடியாதிருக்கிறார்கள்?.இந்தக் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்.மிக இலகுவாக-இலங்கை இராணுவத்தினதும்,அரசினதும் ஒடுக்கு முறைக்குப்பயந்து மக்கள் ஒடுங்கிவிட்டார்களெனவுரைக்கமுடியாது.அப்படியான நிலைக்குள் மக்கள் வந்ததன் உணர்வு நிலைக்கு எதுவுடந்தையானதென்பதும் அடுத்த கேள்வியாகும்-அங்ஙனமுரைக்குங்கால்!

இனி,வெத்து வேட்டுச் சொல்வதிலுள்ளவொரு கருத்து உண்மையானது.அதை நிர்கதியானவொரு சமூகத்திலிருந்து வாழ்வைத் தகவமைக்க முனையும் எவரும் ஏற்றாகவேண்டும்.இதுதாம் சுயவிமர்சனத்துக்கான முன் நிபந்தனை.எமது தவறான போராட்டப்பாதை இன்று தமிழீழத் தேசத்தின் பெயரால் மனிதத்தை அழித்ததென்று எமைப்பார்த்து மூன்றாம் நபர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு, அதைத் தொடர்ந்த சுய விமர்சனம் அவசியமாகும்.இதை எந்தப் புனிதத்துக்கும் மறைக்க முனையுந்தருணமே சுயவிமர்சனத்தைத்தடுத்து"ஏன்-எதற்கு-எப்படி"என்பதை மேலுந்தொடரவிடாது தடுக்கிறது.நாம் வந்தடைந்த இன்றைய நிலை பெரும் இழப்புகளோடு இலங்கைச் சமுதாயத்தில் நூற்றாண்டு பின்நோக்கியதாகும்.

ஒரு நிலையில் எனது நிலைப்பாடு இன்றைய போராட்டத் தெரிவில் அவசியமானதென்றே நான் உணருகிறேன்.கவனிக்கவும்:நாம் அல்ல!

அன்போடு,
ஸ்ரீரங்கன்

சனி ஜனவரி 10, 04:04:00 பிப: அகிநே 2009
-/பெயரிலி. கருத்து:
அன்பின் ஸ்ரீரங்கன்,
சுயவிமர்சனம் எல்லோருக்குமேதான் வேண்டும் -நான் நீங்கள் உட்பட. மறுக்கவில்லை. ஆனால், இருக்கும் கறைகளினையெல்லாம் விடுதலைப்புலிகளிலேயே போட்டுவிட்டு முழுக்க முழுக்க நகரும் மாற்றுக்கருத்தாளர்கள், புலிகளை முற்றாகவே விமர்சனமின்றிக் கொண்டாடும் புலி ஆதரவாளர்களுக்கு மேலாக எனக்கு வெறுப்பேற்படுத்துகின்றனர். எத்தனை முரண்பாடுகள் உங்களோடும் ரயாகரனோடும் நடைமுறையை முற்றாகவே கவனிக்க மறுத்துவிடும் அரசியற்பார்வை பற்றியிருப்பினுங்கூட, அவ்வெறுப்பு எனக்கு உங்களிலே ஏற்பட்டதில்லை. உங்கள் கருத்துகள் எங்கிருந்து வருகின்றன என்ற புரிதல் எனக்கிருக்கின்றதென நினைக்கிறேன். ஆனால்,

1. தேசம்.நெற்றின் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் அப்படியானவையல்ல. தமிழ்மக்களின் துயரிலும்விட, புலிகளின் தோல்வி என்பதே இவர்களை ராஜபக்க்ஷவினைக் கண்மூடித்தனமாக ஆதரிக்க வைக்கின்றது. காஸாவின் துயருக்கும் ஹமாஸின் தோல்விக்கும் அழத் தெரியும் இவர்களின் கருத்துக்கும் ராஜபக்ஷ இந்து ராமுக்குக் கொடுத்த தொலைபேசிச்செவ்விக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை. சொந்தச்சகோதரர்கள் துன்பத்திலே மாள்தல் கண்டு கொள்ளமுடியாதவர்கள் ஹமாஸின் தோல்விக்கும் காஸா துயருக்கும் வரிந்து கட்டுரை வடித்து என்ன பயன்?

2. பெண்களுக்காக, பெண்கள் புலிகளிலே படும் துயர் பற்றிப் பேசி நிற்கும் நிர்மலா ராஜசிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் & புலம்பெயர்ந்த பெயராத பெண்கள் சந்திப்புப்பிரபலங்கள் எங்கே? கனடாவின் புலம்பெயர்ந்த அறிவுசீவிப்பிரபலங்களுங்கும் அவர்களின் தமிழ்நாட்டுப்புலம்பெயர்வால்களும் வழங்கும் இயல் விருது அள்ளிக் கொடுக்கப்பட்ட அம்பை எங்கேனும் ஈழப்பெண்களின் துயர் பற்றிப் பேசியதைக் கேள்விப்பட்டதுண்டா?

3. இயல் தொடக்கம் எண்ணற்ற விருதினை வழங்கி, வழங்குகின்றோமென்று இந்தியாமுதற்கொண்டு எல்லாவிடங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பும் முத்துலிங்கம் என்றவர் என்றாவது வேண்டாம், இன்றாவது எழுதியிருக்கின்றாரா?

4. ஒரு நாளும் ஈழத்தமிழர் துயர்பற்றிப் பேசியே கேட்டறியா, பா. ராகவனும் மருதனும் செல்லமுத்து குப்புசாமியும் ஈழத்தமிழரின் கையறுதுயர்படுநிலையிலே அது பற்றி ஒரு வரி பேசாது, வரலாற்று நூலெழுதப் பார்த்திருக்கும் கையறு நிலை எமது. ஈழத்தவர் பற்றி நஞ்சினை இணையத்திலே நாமெல்லாம் அறியக்கக்கிய பி. கே. சிவக்குமார் தமிழினிக்கப் பதிக்க, ஜெயமோகன் ஈழத்தமிழரின் இலக்கியம் பற்றி, முத்துலிங்கம், தளையசிங்கம், சேரன் உள்ளடங்கப் பதித்து, வரலாற்றுத்தடத்திலே இலக்கியம் படைக்கமுடியாத ஈழத்தமிழர்களைப் பற்றி நூல் வெளிவருகின்றது. "கண்காட்சித்திடலிலே விற்கமுடியாத பயத்திலே நாம் பதிப்பகக்கட்டிடத்திலே விற்கிறோம் வந்து வாங்குங்கள்" என்றளவிலே புரட்சி மிடுக்கினைக் கொண்ட இவர்களின் கட்டிடத்துக்குச் சுண்டுவிரலைச் சுட்டியாவது திட்டமுடியாத தமிழ்ப்பதிவர்கள் "பிரபாகரனைப் பிடிக்கமுடியாது", "கருணாநிதி, மன்மோகன்சிங், நாராயணன், சிவ்ஷங்கர்மேனன் திட்டுவோம் வாருங்கள்" என்று கத்தும்போது, இவர்களின் கள்ளத்தனம் சில வெள்ளிக்காசு விளம்பரப்பதிப்புகளுக்காக நாளைய யுவக்ருஷ்ணாக்களின் காலடிவரிசையிலே போகப்போகின்றதென்று தெளிவாகின்றது. இவர்களை நம்பியா போராட்டம்? பதிவுகளிலே சூடான இடுகைகள் கொண்டுவர எத்தனையோ வழிகளிருக்கிறன என்பதாக மட்டுமே தோன்றுகின்றது.

5. தலித்தியம் என்ற மணற்கும்பிக்குள்ளே சுடச்சுட தலையை நுழைத்துக்கிடக்கும் சுகன், ஷோபாசக்தி பற்றி எதையும் சொல்லவில்லை. குழந்தைப்போராளிகளைக் கண்டிருக்கின்றேன்; சாதியத்தாலே ஒடுக்கப்பட்டவர்களையும் கண்டிருக்கின்றேன்; அவர்கள் கதையை அவர்கள் சொல்லவே கேட்டிருக்கிறேன்; அவ்வளவுதான் சொல்லமுடியும்.

தமிழிலே எழுத்து, கவிதை, கதை என்று புனையும் பேர்வழிகள் வெறுப்பினை ஊட்டுகின்றார்கள். அடுத்தவர் துயர் எமது பிழைப்புக்கானதென்றாகிவிட்ட நிலையிலே, எழுத்து என்பதே வெறுப்பினை ஊட்டத்தொடங்கி சில ஆண்டுகள். வேதனை தீர எழுதுங்கள்; ஆனால், இவர்களுக்குக் கண்காட்சிக்கு வைக்காதீர்கள். தமிழ்மணத்திலிருந்து என் பதிவினை நான் விலக்கிக்கொண்டதற்கும் இதே காரணமே. சோரம் போன எம் சொற்கள் எமக்கே சுமையாகின்றன.

நாம் நடைமுறைக்கு எதையுமே செய்ய முடியாதபோது, சொற்கள்மட்டுமே செத்துப்போகின்றவர்களைக் காத்துநிற்கப்போவதில்லை. தமிழகத்திலே பதிக்கப்படும் தமிழ்ப்புத்தகங்கள் இரண்டினை வாங்குவதைவிட, மழைக்குள்ளே மரத்திலே ஏணையிலே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு அனுப்புங்கள். இரண்டு நாளைக்காவது உதவும்.

ஞாயிறு ஜனவரி 11, 03:44:00 பிப: அகிநே 2009