Wednesday, December 13, 2006

புலம்-19






இரவிசங்கரின் "தமிழ்மணம் தேவையா?" இடுகையோடு முழுமையாக ஒத்துப்போகமுடியாதெனினும், நல்ல அலசல். தமிழ்மணம் வருவதற்கு முன்னர் இதே மாதிரியான வாசிப்பிகளை (readers) வைத்துக்கொண்டுதான் ஓடைகளூடாக வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழ்மணம், இப்படியாக எந்தெந்தப் பதிவுகள் புதிதாக வருகின்றன என்று தேடிக்கண்டு வாசிப்பியிலே சேர்த்துக்கொள்ளும் தேடுதல்நேரத்தினையும் செயற்பாடுகளையும் அநாவசியமாகக் குறைத்தது. பதிவுகள் பெருகப்பெருக இதே சூழல் தொடர்ந்து இருக்கவே போகிறது. இந்நிலையிலே சந்தைப்படுத்தலின் உச்சப்பயனைப் பெற, தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும். இது, ஒருங்குபடுத்தப்பட்ட பல்லங்காடி (Mall) இன் தேவை, ஊசி தேடி வீடுவீடாகப் போய், "இருக்கிறதா? இருக்கிறதா?" என விசாரித்து வாங்கவேண்டிய நிலையிலும்விட ஏன் முக்கியப்படுகிறதெனப் பார்த்தாலே விளங்கிவிடும். ஆனால், காலப்போக்கிற்கேற்ப தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளிலே சில பயனற்றதென்பதால் அகற்றப்பட்டும், புதிதாகத் தேவைப்படும் சேவைகள் வசதிப்படுத்தப்படவும் வேண்டி வரும். இரவிசங்கர் தலைப்பிலே தமிழ்மணம் என்பதற்கு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி என்ற அர்த்தத்திலே படியெடுத்தலுக்கு ஸீரோக்ஸ் என்று பயன்படுவதுபோலப் பயன்படுத்தியிருக்கின்றார். அதைவிட, பல பதிவர்கள், ஒருவரின் பதிவிலே வரும் இடுகைகளின் கருத்துக்கும் பின்னூட்டங்களுக்கும் தமிழ்மணமே காரணம் எனக் குழப்பிக்கொள்ளும் அமைப்பிலே, இப்படியான பதிவர்கள் இருக்கும்வரை, தமிழ்மணத்தின் தேவை இருந்துகொண்டேயிருக்குமென்றே தோன்றுகிறது.

தமிழ்மணம் ஆரம்பிக்கப்பட்டபோது இப்போதிருக்கும் வசதிகள் பல இருக்கவில்லை; புளொக்கர் பதிவுகள் இந்தியாவிலே வாசிக்கத் தடையேற்பட்டபோது, அவற்றினைச் சுற்றிச் சென்று அணுகும்வண்ணம் பதிவு முகப்பிலேயே PK இடைமுகத்தினைக் கொடுக்கும் வசதி தமிழ்மணத்திலே இணைக்கப்பட்டது, காலத்தின் தேவை. தமிழ்மணத்தின் இன்றைய வடிவம் கொண்டிராத சில வசதிகளை முன்னைய வடிவம் கொண்டிருந்தது (நேராகவே தமிழ்மணம் தளத்திலிருந்து இடுகைகளுக்கு நட்சத்திரம் குத்துதல் போல); ஆனால், அதனாலான பக்கவிளைவுக்கெடுதல் (வாசிக்காமலே ஆளைப் பார்த்து உடுவைக் குத்துதல்) காரணமாக விலக்கப்பட்டன. பூங்கா தமிழ்மணத்தின் -சரியான போக்கோ என்று தெரியாவிடினுமங்கூட - இன்னொரு முயற்சி; குறிப்பாக இவ்வாரம் சிறப்புச்செவ்வியும் தொடக்கப்பட்டிருக்கிறது. தமிழ்மணத்தின் விவாதக்களம், வாசகர்களின் தேவைக்காக அமைக்கப்படுமென அறியத் தந்திருக்கின்றது. அதனால், தமிழ்மணம் காலத்துக்கேற்றவாறு வழங்கும் சேவைகளை விரிக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றதென நம்புவோம்.

ஒருவர் தான் எழுதும் இடுகையொன்று தமிழ்மணத்துக்குப் பொருந்தாதெனக் கண்டால், தானே அந்த இடுகையைத் தமிழ்மணத்துக்குப் பதிவு பட்டையூடாக அனுப்பாமல் விடலாம். அப்படியல்லாது விதிகளுக்குப் பொருந்துமெனத் தோன்றும் இடுகைகளை அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பிவைக்கலாம். அதனால், தமிழ்மணத்திற்கும் விரும்பாத இடுகைகள் வந்து சேரும் வில்லங்கம் இருக்காது; பதிவரின் பதிவுக்கு அவர் விதிகளுக்குப் பொருந்தியிட்ட இடுகைகளூடாகப் போகும் வாகசர்கள், அவருடைய முன்னைய - ஆனால், தமிழ்மணத்திலே தோன்றாத, விதிக்கு முரண்படுமோ எனத் தோன்றும்- இடுகைகளையும் சென்று காணலாம். தமிழ்மணமும் வேண்டாத பஞ்சாயத்திலே "விடுக்கவோ? கோக்கவோ?" தீர்ப்புச் சொல்லிக்கொண்டு நேரம் செலவு செய்யத் தேவையில்லை. அப்படியேதும் இடுகை இன்னமும் தனக்குப் பொருந்தாதெனத் தோன்றினால், தமிழ்மணம் விலக்கிவிடலாம். தமிழ்மணத்திலே இணைக்காத இடுகைகள் தமிழ்மணத்துக்குச் சட்டச்சிக்கல்களைக் கொண்டு வராதென்ற சூழலிலே, தமிழ்மணமும் எடுத்ததற்கெல்லாம் சட்டச்சிக்கலின் பின்னாலே மறைந்திருந்து மோகனாவைப் பார்க்கும் 'சிக்கல்' சண்முகசுந்தரத்தின் மர்மநிலையிலே இருக்கத்தேவையில்லை. இப்படியாக, பெற்ற ஒவ்வொரு பட்டறிவுடனும் தமிழ்மணம் பொருந்தும் தொழில்நுட்பத்தினைச் சேர்த்து, தன்னைக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சிப்படுத்திக்கொள்ளுமென நம்புகிறேன். இப்படியாக, தமிழ்மணம் என்னவென்ன செய்யவேண்டுமென எல்லோருக்கும் இருப்பதுபோல எனக்கும் விருப்பங்கள் சில உள்ளன. தமிழ்மணத்துக்கே தனிப்பட எழுதிவிட எண்ணம்.

ஆனால், இரவிசங்கர் குறிப்பிட்டதுபோல, நிச்சயமாக, தமிழ்மணம், தேன்கூடு ஆகிய திரட்டிகளின் வசதிகளின் போதாமையினால், அப்போதாமையை நிவர்த்தி செய்யும் புதுத்திரட்டிகள் வரும்; வரத்தொடங்கிவிட்டன. அவை வழங்கும் வசதிகள் முக்கியமாகப் படுகிறவர்கள் அவற்றினைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். பூங்கா போன்ற வலைஞ்சிகளிலே (e-zines) குறைகளைக் காணுகிறவர்களைப் போல வாசகர்கள் முன்னரும் "திண்ணை போன்ற இதழ்கள் குறிப்பிட்ட ஒரு சிலரின் பக்கச்சார்பான படைப்புகளைத்தான் தருகின்றன" என்று குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். இனியும் புதிதாக வரும் வலைஞ்சிகைகளிலும் இதுபோன்ற பழிகள் சுமத்தப்படவே செய்யும். மனித இயல்பின் காரணமாக, இந்நிலை எக்காலத்திலும் எவ்வலைஞ்சிகை, சஞ்சிகையென்றாலுங்கூடத் தவிர்க்கமுடியாதது. திண்ணை, துக்ளக் குறித்து ஒருவருக்கு முன்னமே ஒரு தனிப்பட விரும்பாத காரணமேதும் விழுந்திருப்பின், திண்ணை, துக்ளக்கிலே ஒருவருக்கு விரும்பிய படைப்பு வருவதில்லையென்ற தோற்றமே அது பற்றி அவருக்கு ஏற்படும். அது சரியா தவறா என்று காலம் முழுவதும் தீர்வேதுமின்றி வாதாடிக்கொண்டிருக்கலாம். அதனால், இப்படியான நிலை திரட்டிகளின் வளர்ச்சியைப் பாதிக்குமெனத் தோன்றவில்லை.

விக்கிபீடியா, திறவூற்று என்பன குறித்து 2004 இலே தமிழ்ப்பதிவுகள் சூடுபிடித்த நேரத்திலே வெங்கட்ரமணன் உட்பட இன்னும் பலர் முனைப்புடன் செயற்பட்டுத் தமிழிலே விரிக்க முனைந்தனர். அவர்கள் சிலவற்றினைச் சாதிக்கவும் செய்தனர். ஆனால், சராசரி பயனர் என்ற வகையிலும் பதிவர் என்ற நிலையிலும் பெரும்பான்மையானோர் முடிவுநிலையிலே தங்கள் வசதிகளையே கண்டுகொண்டார்கள். ஆக, லீனெக்ஸ், ஃபயர்பொக்ஸ் போன்றவை நெடுக்க வளர்ந்து பேரோடையிலே கலக்கும்போதுதான், அவர்கள் தமக்குச் சாதகமென இணைந்து கொள்வார்கள். தமிழ்மணத்தின் பயன்பாடும் அவர்களுக்கு வாசிப்பிகளிலிருந்து விலகிவர இவ்வகையிலேயே உதவியது. பாஸ்டன் பாலாஜி சொன்ன 2006 கூட்டுப்பதிவுகளின் ஆண்டு என்பது முழுமையல்ல. 2003 இலே வலைப்பூ என்ற தமிழ்மணத்துக்கு முன்னோடியான (அல்லது கூர்ப்படைய முன்னான தமிழ்மணம் என்றும் ஒரு வகையிலே சொன்னால்) ஆளியக்கு திரட்டியினைப் பார்த்தோமென்றால், துறைசார்கூட்டுப்பதிவுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டனவெனத் தெரியவரும். இங்கே பாலாஜி சொல்லி பொன்ஸ் வழிமொழிந்திருக்கும் கருத்து, கிட்டத்தட்ட செய்திகளிலே ஒரு விமானவிபத்தோ அல்லது ஒரு பாடசாலைச்சூட்டுச்சம்பவமோ நிகழ்ந்தபின்னால், ஓரிரு வாரங்களுக்கு அதேபோன்ற செய்திகளே தொடர்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளிலே ஓட்டமாக வரும் பாங்கிலேயே அமைந்திருப்பதாகத் தெரிகிறது. கூட்டுப்பதிவு என்பது ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தேவை; இல்லாவிட்டால், புளொக்கரிலே அதற்கான வசதி தொடக்கத்திலேயே இருந்திருக்குமென்று சொல்லமுடியாது. திறவூற்று, விக்கிபீடியா, விக்சனரி என்பன -வேண்டுமானால் பாருங்கள் - செயற்படுகிறவர்கள் தன்னார்வத்துக்குத் தீனி போட்டு, சமூகம் குறித்த தங்கள் பங்களிப்பிலே திருப்தியடைய உதவும் அதே நேரத்திலே, பெரும்பான்மையான பதிவர்கள் அவற்றின் வெற்றியிலே பயனர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆக, மிஞ்சி அவர்களது பங்களிப்புகள் இரண்டாகவிருக்கும்; ஒன்று உற்பத்தியிலே இருக்கும் பயனருக்கான குறைகள், நிறைகளைச் சுட்டிக்காட்டும் சோதிப்பார்களாகவிருப்பார்கள்; அடுத்ததாக, தமக்குப் பிடித்திருந்தால், மற்றோருக்கும் அறிமுகப்படுத்துகிறோமென்ற விளம்பரதாரர்களாக, சந்தைப்படுத்திகளாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

'வெட்டி, ஒத்தி, ஒட்டிப்போடுதலுக்கு இனி மதிப்பு இருக்காது; ஆனால், பதிவரின் நேர்மை, எழுத்துத்திறன் போன்றவற்றுக்கே மதிப்பிருக்கும்' என இரவிசங்கர் நினைக்கிறார். நல்ல விழைவுள்ள சிந்தை; ஆனால், நடைமுறை அப்படியாகத் தோன்றவில்லை. பின்னூட்டக்கயமை என்று சொல்லப்படும் எத்தனை பின்னூட்டங்கள் கிடைத்தன என்று காணும் ஆர்வமும் பரபரப்பான பதிவிட்டுக் கவனிக்கப்படவேண்டுமென்ற விழைவும் ஐம்பது இடுகைகளை இட்டவுடனேயே ஆள்மறைக்கும் பின்னூட்ட வாழ்த்துமாலைகளுடன் "வெற்றிகரமான ஐம்பதாம் பதிவு" நோக்கும் திரைநடிகன் உளநிலையை ஒத்திக் கடத்திவந்திருக்கும் மயக்கமும் இருக்கும் இச்சூழலிலே இரவிசங்கரின் விழைவுச்சிந்தை விரைவிலே சாத்தியப்படுமெனத் தெரியவில்லை; ஆனால், நிச்சயமாக, அச்சுப்பத்திரிகைகள் வலைப்பதிவுகளின் முக்கியத்துவதை, தம்மீதான அவற்றின் சூட்டினை உணர்வதற்கு ஏற்பட்ட பாய்ச்சல் தமிழ்ப்பதிவுகளிலே ஒரு பொதுச்சிந்தையாக உருவாகும்போது, இரவிசங்கர் சுட்டும் பாய்ச்சல் ஏற்படும். எனினும், "எனது ஐம்பதாம் பதிவு" என்ற களிப்பும் "நான் போகிறேன்; போகிறேன்; மனமின்றியும் மார்க்கமின்றிப் போகிறேன்; விடை கொடு தமிழ்மணமே; மணமே நீ கலங்காதே; சயனோரா!" என்ற கண்ணீர்மல்கலும் ஒருக்கிக் குழைத்த தமிழ்த்தொலைக்காட்சித்தொடர் உளப்பாங்கு வலைப்பதிவிலே இருக்கும்வரை இதன் சாத்தியம் உடனடிக்கில்லை என்றே சொல்வேன்.

தனித்தனி வாசிப்பிகள் வந்தால், வலைச்சண்டைகள் குறைந்துவிடுமென்பது நடைமுறையில்லை; வலைப்பதிவுகள் வருமுன்னால், யாஹூ குழுமங்கள், அதற்கு முன்னால், மின்னஞ்சற்குழுமங்கள், அதற்கு முன்னால், பயனர்வலைக்குழுமங்கள் என, தேடி இணைந்துகொள்ளும் படிநிலைகள்தான் இருந்தன; ஆனால், அப்போதும் இதே - சொல்லப்போனால், இதைவிட மோசமான - சண்டைகளும் மண்டையுடைப்புகளுமிருந்தன. இந்நிலை திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டையொழிக்க முடியாதென்ற நிலைதான்; தனியார் வாசிப்பிகள், பின்னூட்ட வசதிகளைத் தந்தால், இந்தச்சண்டைக்கும் சந்தோஷத்துக்கும் திறவுகோலையும் சேர்த்துக்கொடுக்கிறதென்றே அர்த்தப்படும்.

பெரும்பாலும், இரவிசங்கர் சொல்லும் - வாசிப்பி, கூட்டுப்பதிவு, தனிப்பட்ட துறைப்பதிவு என்பன உள்ளடக்கிய - எதிர்கால வலைப்பதிவுலகு, ஒரு மீள்-முன்னைக்காலம் (Retro-Pre '04) நளினப்படுத்திய உலகாகவே தோன்றுகிறதேயொழிய, பயனர்நிலைப்பதிவர்களின் தொழில்நுட்பத்திறனும் தேடுமுனைப்பும் உயராத நிலையிலே தமிழ்மணம் இன்னும் நெடுங்காலத்துக்குத் தேவைதான் என்றே உறுதியாகச் சொல்லமுடியும். இங்கே தமிழ்மணம் என்பதை அதுபோன்ற திரட்டிகளின் தேவை என்ற வகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். (தனிப்பட்ட, இரவிசங்கரினது அவரது நண்பர்களினது கணிச்சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் குறித்த விக்சனெறியும் கடந்த பத்தாண்டுகளாக எத்தனை கணிச்சொல்லாக்கம் குறித்த முயற்சிகள் ஏற்பட்டிருந்தன என்பதைப் பார்க்கும்போது, சோர்வினை ஏற்படுத்தினாலும், அதிலே அவர்கள் காட்டும் ஆய்திறனும் ஒருமித்த முடிவுக்கு வரும் வழிமுறையும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது)

இச்சூழலிலே வலைத்திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்றே தோன்றுகிறது. இடுகையின் தலைப்பினை "தமிழ்மணம் தேவைப்படுமேதான்" என்றுதான் வைத்திருக்கிறேன்; "தமிழ்மணம் தேவைதான்" என்றல்ல.

'06 டிசம்பர், 13 புதன் 11:37 கிநிநே.


18 comments:

SnackDragon said...

ஆகா சவுக்கியமா? இருக்கீயளா? அட ப்ளாக் எல்லாம் எழுதுறீங்க ;)
புளக்கு புளக்கி புளகாங்கிதமடைவது பத்தியெல்லாம் மெதுவா பின்னால எழுதுறன்.

நற்கீரன் said...

நல்ல அலசல்.

பாரம்பரிய ஊடகங்களுக்கு இணையம் ஒரு மாற்று ஊடகமாக தமிழ் சூழலில் நுழைய கணினி இணைய பயன்பாடு ஒரு critical mass தாண்ட வேண்டும். அதுக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்ல முடியாது. 2010 கிட்டத்தட்ட 20 மில்லியன் தமிழர்கள் இணையத்தில் இருப்பார்களா? தற்போதைய எனது estimation 3-5 மில்லியன்.

தமிழர்கள் என்று ஒட்டு மொத்தமாக எடுக்காமல், மத்திய அல்லது மேல் வர்க்க ஆவல்களாகவே இணையம் இருக்கின்றது, தொடர்ந்து பல காலம் இருக்கும். ஒரு வர்க்க பகுப்பாய்வு செய்தால் இணையத்தில் இருப்பவர்களை cream layer வருவார்கள் என்று நினைக்கின்றேன். கீற்று உட்பட.

அப்படியே த.வி. நோக்கிய உங்கள் பார்வையையும் விமர்சனத்தையும் முன்வைத்தாலும் நன்று.

Boston Bala said...

தனியனாக இருக்கும் பதிவர், குழாமில் சேருவதன் மூலம் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். கூட்டுப்பதிவுகளின் வெற்றிக்கு முக்கிய காரணியாக பங்களிப்பாளர்களின் புரிந்துணர்வு கொண்ட நட்பையும் ஈகோ எழும்பாத சூழலையும் கருதலாம். பெரும்பாலான குழுப்பதிவுகள் தோன்றிய ஜரூரில் மவுசை இழப்பதற்கு முக்கிய காரணம், சொந்த வலைப்பதிவை கவனிக்கலாமே என்று நினைக்கும் வலைப்பதிவரின் எண்ணவோட்டம். அலுப்புத்தட்டல், கருத்துமோதல் என்று பல காரணங்களை முன்வைக்கலாம். Desipundit போன்ற பரிமளிக்கும் குழுக்களே பிரிந்து செல்லலாம் என்று முடிவெடுத்த கடந்த ஆண்டில் தமிழ்மணம் என்பதை (கொஞ்சம் கிகா சைஸ்) கூட்டு வலைப்பதிவாகக் கருதினால், தங்கள் பதிவை மேலும் புரிந்து கொள்ள இயலுகிறது.

-/பெயரிலி. said...

கார்த்திக், புளொக்குறோம். உழக்குறோம்.

நற்கீரன், இணையம் ஒரு வசதிபடைத்த மத்தியதட்டுத்தமிழரின் வடிகாலென்பதை ஒத்துக்கொள்கிறேன். அஃது அச்சுப்பதிப்புலகின் தாக்கத்தை முழுத்தமிழ்க்குமுகாயத்திலே ஏற்படுத்த முடியாதுதான். ஆனால், அதன் தாக்கம் ஓரளவுக்கேனும் தமிழின் மத்தியதட்டின் சஞ்சிகைகள், பத்திரிகைகளிலே கீறலாகவேனும் தெரிகிறதென்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அவ்வகையிலே அதற்கு வெற்றிதான். ஆனால், ஒரு கால் தமிழிணையத்திலும் மறுகாலும் மனதும் பழகிய தமிழ்நிலத்திலுமாக இருக்கும் எம் உளப்பாங்கு பெருமளவிலே தமிழ்மணம் போன்ற மையப்படுத்தப்பட்ட சந்திலே வந்து இணைந்து பயன்பெறுவதிலேதான் இன்னமும் இருக்கிறது.

த.வி.?? விளங்கவில்லை.

பாலாஜி: கூட்டுப்பதிவு குறித்த உங்கள் கருத்தினை ஒத்துக்கொள்கிறேன்; அதனால், கூட்டுப்பதிவு என்பது ஓரளவுக்கு ஒத்த கருத்துள்ளவர்கள் தாமாகவே தம் தனிப்பதிவுகளைக் கூட்டிக்கொள்வதாகவே இருப்பதிலே வெற்றியிருக்கும். அரியானா ஹஸ்டிங்கடன் போன்றோரின் பதிவுகளைப் போன்று தனியாள் பலத்திலே மீதியாட்கள் கூடிப்போகும் பதிவுகளை விட்டுவிடுவோம். ஆனால், தேசிபண்டிட்டுக்கும் தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றுக்குமிடையே பெரிய வித்தியாசமிருக்கின்றன. தமிழ்மணம், தமிழ்ப்பதிவுகள், தேன்கூடு என்பன கூட்டுப்பதிவுகளாகக் கருதப்படமுடியாதவை; இவற்றிலேயே பதிவுகள் ஏதும் எழுதப்படுவதோ, ஏற்றப்படுவதோ இல்லை; இவை ஆக, Star Trek Portal மாதிரியான இடங்காவித்தளங்கள்மட்டுமே. ஐந்து இளைஞர்கள் சேர்ந்து பாகம்போட்டு, தாமே சமைத்து வழங்கும் ஓர் உணவகம் வைப்பதற்கும், தேவையான உணவுகளை வேறிடத்திலே சிறிது நேரம் காவி வந்து ஓரிடத்திலே வைத்து வருகிறவர்களுக்கு வழங்குவதற்கும் வித்தியாசமிருக்கிறது.

Jayaprakash Sampath said...

1. ரவிசங்கருக்கு நன்றி :-)

2. நல்ல அலசல்.

தமிழ்மணமுகப்பு பக்க அங்கீகாரத்துக்காகத்தான் வகை தொகை இல்லாமல் இடுகைகளும் மறுமொழிகளும் வந்து விழுகின்றன என்றாலும், அப்படியவது எழுத வேண்டிய தேவை இருக்கும் போது, தமிழ்மணத்தின் இருப்பும் தேவையாகிறது. மூணு நாலு வருடமாக 'எல்லாவற்றையும்' பார்த்தாகிவிட்டது என்று ரிடயர்மெண்ட் மனப்பான்மை ஆரம்பகால வலைப்பதிவாளர்களுக்கு வந்துவிட்டாலும், தமிழ் வலைப்பதிவுகள் இன்னமும் எவல்யூஷன் நிலையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அதாவது, இன்றைக்கு வலையுலகில் உலவிக்கொண்டிருக்கும் இளைஞர்களில் 95 விழுக்காட்டினர், தமிழில் எழுதுவதை பள்ளிக் கூடங்களிலேயே தொலைத்துவிட்டு, மேற்படிப்பு வேலை என்று சௌகரியமாக ஓரிடத்தில் உட்கார்ந்து, குமுதம் விகடன் தளங்கள் போரடித்தபின்னர் எதேச்சையாக ஏதோ ஒரு வலைப்பதிவில் தடுக்கி விழுந்து, தட்டுத் தடுமாறி பதிவு ஒன்றை ஆரம்பிப்பவர்கள் தான். உதாரணமாக, கில்லி இணையத்தளத்தில் தமிழில் எழுதுவது எப்படி என்று முகப்பில் நிரந்தரமாக ஒரு சுட்டி வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மாதமும், மிக அதிகமாக 'அடி' வாங்குவது அந்தச் சுட்டிதான். தேடித் தேடிக் கண்டுபிடித்து, இப்படித் துவங்குபவர்களின் கல்வி, வாசிப்புப் பரிச்சயம், அனுபவம் ஆகியவற்றை ஊகித்து, எந்த டிராக்கில் செல்வார்கள் என்பது அப்படி ஒன்றும் ஊகிக்க முடியாத விஷயம் இல்லை. ஆனால், இதை வலைப்பதிவுகளின் தரம் வீழ்ந்துவிட்டது, தமிழ்மணம் தரம் குறைந்துவிட்டது என்று சொல்வதில் ( நீங்கள் அப்படிக் கருதுவதாகச் சொல்லவில்லை) அர்த்தமில்லை. தமிழ்மண முகப்புப் பக்க மோகம், மறுமொழி எண்ணிக்கை போன்றவற்றில் ஆர்வம் குறைந்த பின்னர், இடுகைகளின் எண்ணிக்கை குறைகிறது அல்லது வேலைவாய்ப்புச் செய்தி போன்ற சேவைப்பதிவுகள் பிறக்கின்றன. இது இயற்கைதான். வரவேற்கப்படவேண்டிய விஷயமும் கூட. அதுவுமில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பிரம்மாஸ்திரம், ' நான் போகிறேன் '.

தமிழ்மணத்தின் தேவை, பதிவுகளின் தரம் பற்றியெல்லாம் பேச்சு எழுவதற்குக் காரணம், தமிழில் எழுதப்படுவது எல்லாம் தரமாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு கருத்து நிலவுவதே. இது அபத்தம். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பலரும், 'நான் தமிழ்மணம் படிக்கறதே இல்லை', எல்லாம் சுத்த வேஸ்ட்டு, இப்பல்லாம் எழுதறதே இல்லை... கம்ப்ளீட்டா ஸ்டாப் பண்ணிட்டேன்' என்று விளக்கம் கொடுப்பதின் பின் அரசியலை, பிரித்துப் போட்டு பாகம் குறிக்கச் சமயம் இல்லை.

Thangamani said...

நல்ல புரிதலை நோக்கிய நகர்வு. நீண்ட நாளைக்குப் பிறகு பதிவில் உங்களது தோற்றம் மகிழ்வளிக்கிறது.

இத்துடன் இன்னும் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

பல தளங்களில் விரிந்த கருத்துலகினை தங்களது அரசியல் குறுக்கீடின்றி தர விழைவது என்பது உண்மையில் மிக மிகக் கடினமான வேலை. தமிழக ஊடகங்களை (பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம்) எடுத்துகொண்டால் அவற்றின் வழியே வெளித்தெரியும் தமிழ்சமூகம் என்பது பொய்யானதே. அவைகள் தங்கள் உருவாக்கவிரும்பும் உலகினையே காட்சிப்படுத்துகின்றன. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'இதைத்தான்' வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். இப்படியான கருத்துருவாக்கம் என்பது தமிழ் உலகில் மட்டுமல்ல; சகல இடங்களிலும் நடப்பதுதான். தமிழ் ஊடகங்களில் சாதியின் உண்மையான முகம் இல்லை; சாதி என்பது அநாகரீகமானது என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது; உண்மையில் அது அநாகரீகமானதல்ல; சாதி ஒரு குற்றச்செயல். ஆனால் பல தளங்கள், பல தரப்பினரது குரலை ஒடுக்கி ஒரு பொதுக்குரல் என்ற கருத்தை உருவக்குவதிலே ஒவ்வொரு உலகும் தனித்தனியே முயல்கிறது. இது ஒரு ஓயாத போர். தமிழ் இணையம் பரவலானபோது, ஊடகங்களில் தொடர்ச்சியாக, அதே சினிமா, அதே தமிழ்வாழ்க்கை, அதே தமிழ் அடையாளம் என்ற வார்ப்பை இங்கும் நிகழ்த்திவிட, அதனால் மாற்றுக்கருத்துகள் இங்கும் இடமற்றுபோக பலவகையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன; எடுக்கப்படுகின்றன. சாதியைப்பற்றிய உரையாடல் அதிர்ச்சி தரும் அநாகரிகமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அசோகமித்திரனின் சாதீய ஓலம் யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. இதைப் பற்றி இங்கு விரிவாக சொல்ல முடியாதாகையால், சொல்லவருவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டும் இதைச்சொல்லிச் செல்லுகிறேன். இப்படி தமிழிணையத்தையும், தமிழ் ஊடகங்களின் வாலாக மாற்றும் வேளையில் தான், வலைப்பதிவு (blog) என்ற கருத்துலக உடைப்பு (இங்கும்) வருகிறது. வலைப்பதிவின் தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டால் அது பல கேள்விகளுக்கு விடையளிக்கும். வலைப்பதிவு (Blog) என்பதை பொதுக் கருத்துலகால் ஒடுக்கப்பட்ட, இடம் மறுக்கப்பட்ட மாற்றுக்குரல்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டதன் விளைவு என்றே நான் புரிந்துகொள்கிறேன். மாற்றுக்கருத்துக்களுக்கு எதிரான முயற்சிகள் எல்லா ஊடகங்களிலும் நடப்பது போல இங்கும் நடக்கும். இங்கு மாற்றுக்கருத்துகளை ஒதுக்குவதன் மூலம், கவனிப்பின்றிச் செய்வதன் மூலம் பொதுத்தளத்தில் இருந்து அவற்றை அகற்ற முடியும். இதற்குத் திரட்டிகளை கைப்பற்றுவதும், புதிய திரட்டிகளை உருவாக்கி தங்களது அரசியலுக்கு உவப்பான பதிவுகளை அனுமதிக்கும், உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் செய்வதும் மிகவும் அவசியம். இதனால் மாற்றுக்கருத்துகளை வாசிக்கும், எதிர்கொள்ளும், உருவாக்கும் சூழலை முற்றாகக் கைக்குள் கொண்டுவரமுடியும். இதே காரணத்தினாலேயே மாற்றுக்கருத்துக்கள் உள்ளிட்ட கருத்தம்பலத்தை பேணுவதும் மற்றொரு சாரருக்கு அவசியமாகிறது. இந்த நிலையில் திரட்டிகள் தேவையா? எத்தகைய திரட்டிகள் தமக்கு வேண்டும்? போன்றவைகள் மிகவும் முக்கியமான கேள்விகள். இந்தக்கேள்விகள் யாராருக்கு தோன்றுகின்றன என்று பார்ப்போம். அவர்களை மூன்று பிரிவினராக பிரிக்கலாம்.

1. பலத் தரப்பட்ட கருத்துக்களையும் சார்பின்றி பொதுத்தளத்தில் தர முயலும் தரப்பினர்
2. மாற்றுக்கருத்துகளை ஒதுக்கவும், இடம் மறுக்கவும், பொதுக்குரலாக ஒன்றை உருவாக்கவும் முனையும் தரப்பினர்
3. சாதாரண வாசகர்

இதில் சாதரண வாசகர் தனக்குப் பிடித்தமான துறை, கருத்து சார்ந்த பதிவுகளை மட்டும் படிக்க தொழில் நுட்பம் ஏராளமான வசதிகளை வழங்குகிறது. அதனால் உண்மையில் அவருக்கு எழும் கேள்விகளுக்கு என்பது நடைமுறையில் தீர்வு எளிது. ஆனால் வாசகர் கருத்துக்களால் பாதிக்கப்பட்டு மாற்றுக்கருத்துக்களுக்கான (சரியான) இடத்தை காப்பற்ற அல்லது ஒழிக்க மற்ற இரண்டு தரப்பினர்களுள் ஒருவராகவோ, ஆதரவாளாராகவோ மாறும்போது எழும் கேள்விகள் (திரட்டிகள் தேவையா? எத்தகைய திரட்டிகள் தமக்கு வேண்டும்? )முற்றிலும் வேறானவை. எப்படி இருப்பினும் இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை.

-/பெயரிலி. said...

பிரகாஷ், தரம் என்பதைத் தரப்படுத்த ஒரு தரம் ஒருத்தரிடமுமில்லை என்பதை ஒத்துக்கொண்டு நாட்கள் பல கடந்துவிட்டன ;-) நான் சொல்வது மற்றைய பக்கத்திலிருந்து; தமிழ்மணம் போன்றவற்றின் தேவை "எவர்க்கு எதெதுவோ அவர்க்கு அதது" என்று பிரிப்பதினை வசதிப்படுத்திக் கொடுப்பதாகவே இருக்கவேண்டுமென்பதே. அப்படியான ஓரிடத்திலே அமைந்த பல்லங்காடிச்சுகத்தினைப் பலரும் தேட்தனாலேதான், தமிழ்மணம் போன்றவற்றுக்கு நீண்ட ஆயுள் இருக்கும் நிலைதான் நடைமுறையிலே உள்ளதெனச் சொல்கிறேன்

செல்வநாயகி said...

பெயரிலி,

நல்ல அலசல். ஒரேயடியாய்ப் பல காலம் காணாமல் போகாமல் அவ்வப்போது இப்படித் தலையைக் காட்டிக்கொண்டிருங்கள்:))

Anonymous said...

"நான் போகிறேன்; போகிறேன்; மனமின்றியும் மார்க்கமின்றிப் போகிறேன்; விடை கொடு தமிழ்மணமே; மணமே நீ கலங்காதே; சயனோரா!"
>>>>
அப்பப்போ *எதையாவது* எழுதி கொஞ்சம் சிரிப்பூட்டுங்க அலைஞரே.

மலைநாடான் said...

அண்ணாச்சி!
வாங்க
வெட்டைக்கி வந்திட்டீகளா? வேணுமின்னு வந்தீகளா? மறுவா என்ன, எழுதிறதுக்கு இன்னும் கனமா கிடக்கு உங்கட்டை. எடுத்து விடுவீகளா? :)

நற்கீரன் said...

த.வி. := தமிழ் விக்கிபீடியா !!

-/பெயரிலி. said...

தங்கமணி, மிகவும் கவனமாகப் பின்னலை அவிழ்த்து வகைப்படுத்தியிருக்கிறீர்கள். தெளிவு படுகிறது.

செல்வநாயகி, குதிரையேறுசுந்தரர் (அட இன்னும் உயிரோடு இருக்கிறீர்களா?), மலைநாடான் பொழுது கிடைத்தால் விளையாட்டு, இல்லை வெளியிருப்பு; இதுதான் என் பாடு. அவ்வளவுதான் வசதிப்படுகிறது.

நற்கீரன், நான் த.வி. என்றெழுத இதென்ன சம்பந்தமில்லாமல் அரசியல் விளையாட்டிலே இழுக்கிறீர்களேயென எண்ணிக்கொண்டேன். தமிழ் விக்கிபீடியா பற்றி வரலாற்றளவிலே இணையத்திலே கண்டதைக் குறிப்பாக எழுத மட்டுமே என்னால் முடியும். அதைப் பற்றி அதற்கப்பால் எக்கருத்தும் சொல்ல என் கணித்தொழில்நுட்பவறிவு வறுமைப்பட்டது. எழுதத் துணியமாட்டேன் :-(

வசந்தன்(Vasanthan) said...

நீண்டநாட்களின்பின் பெயரிலியையும் தங்கமணியையும் பார்த்தது மகிழ்ச்சி.

Mookku Sundar said...

//பல தளங்களில் விரிந்த கருத்துலகினை தங்களது அரசியல் குறுக்கீடின்றி தர விழைவது என்பது உண்மையில் மிக மிகக் கடினமான வேலை. தமிழக ஊடகங்களை (பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம்) எடுத்துகொண்டால் அவற்றின் வழியே வெளித்தெரியும் தமிழ்சமூகம் என்பது பொய்யானதே. அவைகள் தங்கள் உருவாக்கவிரும்பும் உலகினையே காட்சிப்படுத்துகின்றன. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'இதைத்தான்' வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். இப்படியான கருத்துருவாக்கம் என்பது தமிழ் உலகில் மட்டுமல்ல; சகல இடங்களிலும் நடப்பதுதான். தமிழ் ஊடகங்களில் சாதியின் உண்மையான முகம் இல்லை; சாதி என்பது அநாகரீகமானது என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது; உண்மையில் அது அநாகரீகமானதல்ல; சாதி ஒரு குற்றச்செயல். ஆனால் பல தளங்கள், பல தரப்பினரது குரலை ஒடுக்கி ஒரு பொதுக்குரல் என்ற கருத்தை உருவக்குவதிலே ஒவ்வொரு உலகும் தனித்தனியே முயல்கிறது. இது ஒரு ஓயாத போர். தமிழ் இணையம் பரவலானபோது, ஊடகங்களில் தொடர்ச்சியாக, அதே சினிமா, அதே தமிழ்வாழ்க்கை, அதே தமிழ் அடையாளம் என்ற வார்ப்பை இங்கும் நிகழ்த்திவிட, அதனால் மாற்றுக்கருத்துகள் இங்கும் இடமற்றுபோக பலவகையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன; எடுக்கப்படுகின்றன. சாதியைப்பற்றிய உரையாடல் அதிர்ச்சி தரும் அநாகரிகமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அசோகமித்திரனின் சாதீய ஓலம் யாருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை. இதைப் பற்றி இங்கு விரிவாக சொல்ல முடியாதாகையால், சொல்லவருவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டும் இதைச்சொல்லிச் செல்லுகிறேன் //

தங்கமணி, மேற்சொன்னது தெளிவாக புரிந்த பின்னும் ஏதும் செய்ய முடியாத நிலையில் அனைவரும் உருப்படியான வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள் - நான் உள்பட. முதலில் சாதி குற்றம் என்கிற அறிதலும், அதை சித்தாந்த ரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பதையும் நம்மாட்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்க்கிறேன் பேர்வழி என்று அவனவன் தத்தமது மலர்நீட்டத்திற்கு தகுந்தாற்போல் திருவிளையாடல்களை ஆரம்பிக்க, இதுவும் கிட்டத்தட்ட ஒரு தொடர் நாடக நரகமாகவே ஆகிவிட்டது. சாதி என்கிற குற்றத்தை எதிர்ப்பது என்பதைவிட தனிமனித மாச்சரியங்கள் அதிகமாகி வி(வ)காரம் திசை திரும்பி விட்டது. திமுக என்ற கட்சி திகவிலி இருந்து கிளைவிட்ட அன்றே திக ஆரம்பித்ததன் நோக்கம் தடம் மாறி விட்டதைப் போலத்தான் இதுவும்.

இன்னும் என்னவெல்லாம் கேட்க/ பார்க்க வாய்த்திருக்கிறதோ, அத்தனையும் ஆகத்தான் வேண்டும்- வெறுமையாக தலை குனிந்து கொண்டு.

உங்களை வெகுநாள் கழித்து கணதில் மகிழ்ச்சி.

பெயரிலி ஐயா...ந்ல்ல அலசல். ஆனால் இருக்கின்ற சூழ்நிலையிலே இந்த அலசல் கூட வேறு விதமாக பார்க்கப்பட வாய்ப்புண்டு. நீங்கள் கூட "திரட்டிகள் தேவைப்படுமேதான்" என்று தலைப்பிட்டிருக்கலாம். ;-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Technology can help in making better and efficient aggregators and ease access to blogs.One can use technology to create an aggregator that aggregates blogs of some from many. But how about the quality and diversity in content. I think today the major issue is that of quality,diversity and trustworthiness of Tamil blogs. I am not convinced by Thangamani's arguments.If the mainstream offers one type of sterotyped thinking, and if the not so mainstream offers another type of streotyped thinking what a big difference that makes. The quality of debate in Tamil blogs has come down. Hate speech has grown and this has its own negative impacts.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

As I have not read the collective blogs in Tamil I refrain from commenting on them.But collective blogs by experts and interested
bloggers in some areas/topics
(e.g.law and society,science,technology) are necessary in Tamil.

பொன்ஸ்~~Poorna said...

// பொன்ஸ் வழிமொழிந்திருக்கும் கருத்து, கிட்டத்தட்ட செய்திகளிலே ஒரு விமானவிபத்தோ அல்லது ஒரு பாடசாலைச்சூட்டுச்சம்பவமோ நிகழ்ந்தபின்னால், ஓரிரு வாரங்களுக்கு அதேபோன்ற செய்திகளே தொடர்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளிலே ஓட்டமாக வரும் பாங்கிலேயே அமைந்திருப்பதாகத் தெரிகிறது. //
ஆகா.. அதைவிட, -/பெயரிலி மீண்டும் வந்து இத்தனை பெரிய நல்லதொரு அலசலைத் தர அந்தப் பதிவும் ஒரு காரணமா அமைஞ்சிருக்கேன்னு ஒரே சந்தோசம் :)))))

(தமிழ்மணத்தை ஒத்த) வலைதிரட்டிகள் தேவைப்படும்.. அதில் சந்தேகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நான் பகிர்ந்து கொண்ட கருத்துகளை தொடர்ந்து இங்கு விவாதம் நடப்பதை கண்டு மகிழ்கிறேன். உங்கள் மாற்று அல்லது மேம்படுத்தப்பட்ட ஆய்வும் நன்று. நன்றி.

நாங்கள் இயங்கி வரும் தமிழ் குழுமங்கள் குறித்த உங்கள் நம்பிக்கையும் எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.