Saturday, November 16, 2024

நிலத்திலும் புலத்திலும் பரந்தொரு தமிழ்க்கும்பலிருக்கின்றது

 

 


தமிழர்களிடையே, தாம் சார்ந்திருக்கும் அமைப்புகட்குமப்பால், வெளியாரால் ஒடுக்கப்பட்ட தாமே நியாயமற்ற வகையிலே தம் சக சமூக உட்பிரிவினர்மேலே காழ்ப்பும் வன்முமும் காட்டுகின்றவர்களும் சக இனத்தவர், பன்னாட்டு மனிதர்மீது தமக்கிழைக்கப்படும் அநீதி என்பதைத் தாமே இழைக்கின்றவர்களும் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவுமாய் நிச்சயமாகவிருக்கின்றார்கள்.  இதை நாம் மறுத்துப் பாயின் கீழோ படங்கின் கீழோ வாழுமிடத்துக்கேற்ப மறைத்துவிட்டுப்போக முடியாது; நம்மிருப்பு நாட்டிலே வலிமையான அரசியற்குரலோடு நிலைக்க, நம்மை நாமே காலத்துக்குக் காலம் நம் கொள்கை, சொல், செயல், செல்வழியிட்டு வெளிப்படையாகவே விமர்சித்துத் திருத்தாவிட்டால் ராஜா பட்டாடையோடுதான் பரிவாரஞ்சூழ பவனி வருகிறார் என்று மட்டுமே சொல்லி அடுத்தவரையோ ஏன் நம்மவரையோகூட நம்ப வைக்க முடியாது.


ஆனால், பிறந்த நிலத்திலும் பிறழ்ந்த புலத்திலும் எல்லோருக்குமாகவும் – தமிழர், இலங்கையர், தென்னாசியர், உலகத்தார், அண்டவெளியுயிரிகள் அனைத்துக்குமாய்- எல்லாவிடயங்களிலும் அறிந்தார் தாமெனக் கருதிக் குரல்தரவல்லோராய்க் கூனிஇறால், நெத்தலி, ஒடியல் மசாலா அரைத்துப்போட்டு வைத்த கூழ்த்தமிழ்க்கும்பலொன்று சாய்மனைக்கதிரையிலும் கணணித்தறியிலும் வேலைவெட்டியில்லாமலும் பொழுதுபோக்காகவும் என்னைப்போலவே பரந்திருக்கின்றது என்பதை நாம் மறக்கக்கூடாது.


இக்கும்பல் தமிழ் என்று சொல்லெடுத்துத் தொடங்கினாலே, இனவாதம் என்று சன்னதக்கூத்தாடத் தொடங்கிவிடும். இக்கூத்து தமிழ்பேசும்மக்களென்பதாலே ஒடுக்கப்படவில்லையென்றும் அத்தனைக்கும் காரணம் தமிழ் அரசியல்வாதிகளும் இயக்கங்களுமே என்பதாகவும் தொடங்குவதிலே தொடங்கும். தமிழர்மீதான திட்டமிட்ட ஓடுக்குமுறைகளைக்கூட -வேலைவாய்ப்பு, ஒற்றைமொழித்திணிப்பு, குடியேற்றம்,  தரப்படுத்துதல் உட்பட- நியாயப்படுத்துமளவுக்கு இக்கும்பலின் உளநிலையும் நடைமுறையறிதலும் சீர்குலைந்துகெட்டுக்கிடக்கின்றன.


அதேநேரத்திலே, பேரினவாதிகளின் அத்தனை அரசியற்சித்துகளையும் வரலாற்றின் பதிவு வேறாகக்காட்டியபோதும், தன் காந்தாரிக்கண்சுற்றுத்துணியோடு இருப்பதாகவேயறியாது, தன்னையும் பேரின அரசியலின் குருதிக்கறையரசியலோடு இணக்கங்காட்டிக்கொள்ளவும் அவ்வரசியலை நியாயப்படுத்தவும் கண்காட்டி நிற்பது இக்கதம்பக்கும்பல். 


ஜேவிபியின் குருதியரசியலை எண்பதுகளிலே சக இனங்களுக்கெதிராகவும் ட்ரொஸ்கிச அமைப்புகளுக்கெதிராகவும் கண்டவர்களுக்கும் திருகோணமலையிலே தொடர்ச்சியாக ஒரு முதலாளிவைத்தியரின் வாசலிலே தோழமையோடு காத்திருக்கும் பிரதிப்பொலிஸ் அத்தியட்சரின் ஜீப்பினைப் பார்த்திருந்தவர்களுக்கும் ஜேவிபியின் கி(ள்)ளையின்  மூஞ்சி இன்னமும் இடதுசாரி மார்க்ஸிசமூஞ்சியென்று படாது; சொந்தமாக தனக்கென உழைப்பேதுமில்லாமல், குறுமுதலாளித்தந்தையின் சொத்திலே அரசியலும் வாழ்வும் நடத்துகின்றவர்களைத் தேர்தலிலே என்பிபி மார்க்ஸிய அமைப்பின் உறுப்பினராக ஏற்றுக்கொள்வது இக்கூழ்க்கும்பலுக்குச் சிக்கல் தருவதில்லையோ அல்லது அதை அறிந்து கொள்ள ஆர்வமும் தேடலும் நேரமும் தேவையுமில்லையோ தெரியாது. ஆனால், அடுத்தவர் காலணிமிதிப்பது சாணியென்று வாதாடமுன்னால், தம் கால்களையும் இக்கும்பலின் கோவிந்தர்கள் குனிந்து பார்க்கவேண்டும்.


எண்பதுகளிலே பிறந்தவர்களுக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசியலைக் கண்டவர்களுக்கும் வரலாறினைச் சமூகவலையிலே மீன்பிடித்துப் பழகுவதிலே வந்த சிக்கலாகக்கூட இருக்கலாம். ஆனால், தமிழ்த்தேசியமென்பதே சீமான், சிவசேனை, கறை என்பதாகவும் சாதியம், வலதுசாரிநிலையென்பதாகவும் இனவெறி என்பதாகவுமே வெறும் நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசுகின்றவர்கள், தங்கள் அரசியலை - பிரதேசவாதத்தினைத் தூண்டுதல், தமது  அரசியலுக்கு மாற்றான எதனையும் இழிவுபடுத்துதல், தமது கூட்டாளிகளின், கூட்டுச்சமூகங்களின் ஒடுக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் பேசமறுத்தல், நியாயப்படுத்தல்- மீள மீளக் குறுங்குழுக்களாகக் கூடிப் பேசுவதாலே மட்டும் நியாயப்படுத்தப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். 


தமிழ்த்தேசியமென்றபோது, அதிதீவிர உணர்வின்பாற்பட்டதும் ஆதாரமற்ற கர்ணபரம்பரைக்கதைகளினதும் உட்குடி மேலாதிக்க ஆணவக்குரல்களினதும் தொகுப்பான தமிழ்த்தேசியக்குழுக்களைமட்டுமே முன்னிட்டுத்தொடங்குவது இக்கூழ்க்கும்பலின் குழப்படி வாதம்; நிச்சயமாகத் தமிழ்த்தேசியத்திலும் அனைத்து வகைப்பட்டாரும்போல இப்படியான குறும்பார்வைக்கோளாற்றுநோயாளிகளுண்டு; இது மார்க்சியம், நாம் இலங்கையர் கோஷம் போடும் அனைத்துக் கும்பலிலுமிருக்கும்   அதிதீவிர உணர்வின்பாற்பட்டதும் ஆதாரமற்ற கர்ணபரம்பரைக்கதைகளினதும் உட்குடி மேலாதிக்க ஆணவக்குரல்களினதும் தொகுப்பான குழுக்களின் பார்வைக்கோளாறுக்கார்களை ஒத்த கும்பலே; இதற்காக, குறிப்பிட்ட குறும்பார்வைத்தமிழ்த்தேசியரைக் குற்றஞ் சுமக்கவிடாமல், நல்லது கெட்டது பிரிக்காமல் எல்லா முட்டைகளையும் ஒரே பெட்டியிலே போடுஞ் செயல் அயோக்கியத்தனமானது. தம் கடந்த கால, நிகழ்காலச்செயற்பாடுகளை இக்கதம்பக்கும்பலின் ஒவ்வொருத்தரும் மீளாய்வு செய்துபார்த்தால், அவர்களின் குறுநிலமன்னர், மஹாராணி மனநிலையும் செயல்நிலையும் வெளியாக வெகுநேரமெடாது.  


இடைப்பட்ட பெரும்பாலான தமிழர் ஒரு பக்கம் பேசுவதாலே தாம் மறுசாராரின் சாணியடிப்புக்கும் செம்புள்ளிகரும்புள்ளிக்கும் ஆளாகிவிடுவோமோ என மௌனித்துப்பம்மிக்கொண்டிருக்கின்றார்கள்; காஸா மக்களுக்குக் கவிதைக்காகிதமும் கனேடிய ஊர்வலமும் நடத்தும் இதே கும்பலுக்கு இலங்கையிலேயிருக்கும் சிறுபான்மையொடுக்குமுறையென்றால் மட்டும் மேலே எழுதியிருக்கும் அத்தனையும் ஞாபகத்திலே வந்து செயற்படுத்தவோ பதுங்கவோ செய்துவிடும். தாமோ குடும்பமோ மேற்கிலே குந்தியிருந்துகொண்டே மேற்கின் ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பக்கம் பக்கமாக வாசித்ததைக் கூழாக்கி வார்க்கும் கனவுக்கோவண, கவனங்கிருசட்டைக்குதம்பலான இக்கும்பலிடம் அதிகம் எதிர்பார்ப்பதற்கில்லை;  மஹிந்தவின் வருகையை, சிறிசேனாவின் நூறுநாள் ஆட்சியை வரவேற்ற இக்கதம்பக்கும்பலின் மொத்த, சில்லறைவியாபார அரசியலால் அனைத்துக் கோரச்சிந்தை மாற்று ஒடுக்குமுறைகளையுங்கூட என் எதிரிக்கு எதிரி எனக்கு நண்பனென நியாயப்படுத்திக் கொண்டிருக்கவும் அதன் "தான்" இனைச் சொகுசுப்படுத்தவும்மட்டுமே முடியும். எதிர்ப்பு அரசியலுக்கும் அலைக்கும் தனக்கென்றொரு சித்தாந்தமில்லை; சொல்விளையட்டுக்கப்பால் சனத்துக்குநல்லதோ கெட்டதோ போம்பாதையிலே கிடக்கும் துரும்புகூட எடுத்துப்போடும் செயற்பாடில்லை.


இக்கும்பலிலே, மாகாணசபைக்குள்ளே குந்தியிருந்துகொண்டு இந்திய மஹேந்திரா, மாருதி வண்டிகளிலே தமிழ்த்தேசிய இராணுவத்துக்கு வலுக்கட்டாயமாகப் பிள்ளைபிடித்தவர்களும் போன புலிகளுக்கு இருந்த காலத்திலே இனியற்ற விசுவாசம் வழிய நிறைந்திருந்து பின்னால் அவர்களினை  அடித்தெழுதி விற்றே பிழைக்கும் எழுத்துவிதானைகளும் அடிமட்டமான வரட்டு மார்க்சிய கொப்பி நோட்சை அரைநூற்றாண்டாய் அழுக்கேற வைத்துக்கொண்டு மண்டையோட்டுமலை சமைத்த பொல்பொட்டையும் திபெத்திய ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்துக்கின். ற செங்கமாரிகளும் அரைவேக்காட்டு அபத்தமாய் பரபரப்புப்பத்திரி"க்"கை சஞ்சிகை நடத்தும் நவீன இலட்சுமிகாந்தன்களும் கிழக்கான் -வடக்கான்-மேற்கான் என ஆள்பிரிக்கச் சுக்கான் பிடிக்கின்ற பிரதேசவாதிகளும் அடக்கம்.  எப்போதும் வெல்கிற பக்கத்தோடு தோளர்களாக ஒட்டியுரசிக்கொள்வதாலே, வாழ்த்துச்செய்தி அறிவிப்பதிலே, போட்டிருக்கும் சட்டைவண்ணம், ஒட்டியிருக்கும் ஸ்ரிக்கர் சின்னம் ஒற்றுமை சுட்டித் தம்மை வெற்றிப்பக்கமாகக் காட்டிக்கொள்ளும் உத்திமிகுந்த புத்தி இவர்களது.   


நண்பரொருவர் கேட்ட கேள்வி இது: "இந்த ஜனாதிபதித்தேர்தலிலே அநுரவுக்குப் பெரும்பான்மை வாக்களித்துப் பதவிக்குக் கொண்டுவந்த மக்கட்பகுதி, போன தேர்தல்களிலே யாருக்கு வாக்களித்தார்கள்? சந்திரிகாவுக்கும் மஹிந்தவுக்கும் சிறிசேனவுக்கும் கொட்டபாயவுக்கும் பெரும்பான்மை வாக்களித்தவர்கள் இவர்களேயானால், அடுத்த இரண்டாண்டுகளிலே என்ன செய்வார்?" நாட்டுக்கேயான பொதுவான பொருளாதாரச்சிக்கல், ஊழல்சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இவற்றுக்கப்பால், சிறுபான்மைக்குழுமங்கள் மட்டுமே எதிர்நோக்கவேண்டிய பிரச்சனைகள் உள்ளன. வடகிழக்கின் குடியேற்றம், அரசின் இராணுவம் கைப்பற்றிய இடங்களை முழுமையாகவே மீளக்கையளித்தல், இனப்பரம்பலின் விகிதாசாரத்தினை மேலும் திட்டமிட்டு மாற்றாது தளம்பாதிருக்க வைத்திருத்தல், விசாரணையின்றி அரசியற்சிறைப்பட்டிருப்பவரை விடுவித்தல், அரசியலால் இறந்தவர்களை நினைவுகூருமுரிமை என்பன குறித்த புதிய அரசின் நிலைப்பாடும் திட்டங்களும் எவை? என்டிபியின் வெற்றியைச் சமத்துவசமுதாயம் மலர்ந்ததாகக் காட்டுகின்றபோது, இக்கேள்விகட்கான பதில்களும் தேவைப்படுகின்றன.  


விடுதலைப்புலிகளும் ஜேவிபியும் எண்பதுகளிலே செய்தவற்றிலே விடுதலைப்புலிகளிலே காரமான விமர்சனம் வைக்கும் தமிழ் இட துசாரிகள் (தமிழ்த்தேசியத்தினையும் இட துசாரி ‘மக்கள்’ அரசிய லையுஞ் சேர்த்தே அதேநேரத்திலே ஆயுதப்போராட்டத்திலேயிருந்த அமைப்புகள் உட்பட), ஜேவிபி மீதோ அல்லது அதன் தொப்புட்கொடிபிறந்த என்பிபி மீதோ அதே காரமான விமர்சனத்தை வைக்கத் தவறுவது எதேச்சையோ அறியாமையோவல்ல என்றே படுகின்றது; நேர்மைத்திறன் கெட்ட திட்டமிட்ட தேர்வும் விலக்கலுமே! வெறும் “ஶ்ரீலங்கராய் ஒன்றுபடுவோம்!” என்று நெற்றியிலே ஒட்டிப்போடுகின்றபோது, இவ்விமர்சனத்தை வைத்துவிட்டு வந்திருக்கவேண்டுமெனக் கோரவேண்டியதாயிருக்கின்றது. பொல்பொட்டுக்கும் பினேச்சேயுக்கும் வேறுபாடில்லையென்பதை நாம் உணராதவரை நம் அரசியல் அறம் பிழைத்துக்கொண்டேயிருக்கும். காடாத்திலே சாம்பலள்ள எரிந்தணைந்த சிதையை இடஞ்சுற்றி வந்தாலென்ன? வலஞ்சுற்றிவந்தாலென்ன? பிடி சாம்பல்!


நூறுநாள் சிறிசேனவைத் தூக்கிப்பிடியென்றவர்கள் சிறிசேன நூறுநாட்களிலே இருந்ததையும் என்புச்சதை பிய்த்தெடுத்தபோது, ஒப்புக்கேனும் மன்னியுங்கள் எனத் தாம் கேட்ட மக்களிடம் சொல்லவில்லை. இதேபோல அநுர-அருண் ஆதரவு ஜக்கிகளையும் பார்வையாளராகவிருந்து பார்க்கத்தானே போகிறோம் எனவே படுகின்றது.


வடகிழக்கிலே தமிழ்த்தேசியம் தோற்றுவிட்டதாகவே நக்கல் செய்யும் பழைய புலிகள், வாய்ப்பேச்சு இடதுசாரிகள், உதிரிப்புலியெதிர்ப்புகட்சிகள் ஆகிய சாம்பார்க்கூட்டுடன் ஒத்துக்கொள்ளவேண்டிய விடயமொன்று: தமிழ்த்தேசியம் என்ற பெயரிலே ஓரு வண்டியை ஒரே நேரத்திலே எட்டுத்திசையிலே இழுக்க அரக்கப்பறந்த மோட்டுத்தனமான மூர்க்கச் சண்டிமாடுகள் அகற்றப்படவேண்டியவையே! ஆர் கொம்பு அதிகூரென்று காண அகத்தைப் பலவீனமாக்கி நம் இருப்பையும் பிடிப்பையும் அடுத்தார் கைகளிலே கண்ணாடிக்குண்டு விளையாட விட்டவை அவை. ஆனால், அதுவே தமிழ்த்தேசியமென்பதன் தேவையில்லை என்பதாகிவிடாது; வடகிழக்கிலே தமிழ்த்தேசியத்தினை ஒரு வகையிலே மையமாக முன்வைத்த கட்சிகளுக்கு மொத்தமாக விழுந்த வாக்குகளையும் அதற்கு மாற்றாக  விழுந்த வாக்குகளையும் ஒத்துப்பார்க்கவேண்டும்.    நாம் நிர்ப்பந்தப்பட்டிருகையிலே எம் மாலுமிக்குழுவின் ஓர்மமும் ஒற்றுமையும் போம்வழிக்குப் பொருந்துநிலையிலில்லை என்பதற்காகமட்டும் பயணத்தைத் தவிர்க்கமுடியாது; கப்பலுக்குச் சேர்ந்தியங்கக்கூடிய புதுமாலுமிகளும் குற்றங்களைந்த புதுவினைத்திறனும் திட்டமும் கொள்ளவேண்டியதுதான் அடுத்த நிலை. 


நம் தமிழ்பேசும் மக்கள் (தமிழர் எனச் சுட்டவில்லை) நலம் சீமான், சிவசேனை, அருணியம், மண்முளைக்கா பா-ரஞ்சித்தியம், செந்திவேலியம், மார்க்ஸ்தனியுரிமையிசம் போன்ற தம்மை மையப்படுத்திய நிறைந்த வலது, இடறு சாய்வுகளற்ற, சக சமூகங்களின் சுயநிர்ணய சகவாழ்வினையும் ஏற்றுக்கொள்ளும்  இடதுசாரியத்தமிழ்த்தேசியத்தாலேமட்டுமே காக்கப்படக்கூடும். இப்படியான நடைமுறைக்கான அறம்வழுகாத்தத்துவத்தையும் அதன் வழி சென்று செய்துமுடிப்பதற்கான தந்திரோபாயத்தையும் தமிழ்த்தேசியமெனாமல், தவிட்டுபுண்ணாக்கென்று எழுத்துச்சட்டாம்பிள்ளைகள், தத்துவப்பூச்சிகள் சொல்லிவிட்டுப்போனாலும் போகட்டும்; குடைமார்க்கா மார்மார்க்கா என்பதற்கப்பால், குடையை வடையென்றாலென்ன? மடையென்றாலென்ன? பக்கத்திலே போகிறவரைக் குத்தாமல், நாம் மழையிலே நனையாமல் போகிற இடத்துக்குக் கொண்டுபோய்ச்சேர்த்தால், அதுவே தேவையும் முடிப்பும். செத்த விலங்கிலே சொற்பிரேதப்பரிசோதனை செய்கிற மெத்தப்படிச்ச வைத்தியர்கள் பிரேத இலக்கியம் வடித்துக்கொண்டிருக்கட்டும்.


அதற்கு என்னைப் போலப் புலம்பெயர்ந்தவர்கள் இதுபோல நாளுக்கோர் எட்டுப்பந்தி எழுதாமலும் பேசாமலும் பரபரப்புக்காக, தாயகம், தாளிப்பியம், தமிழியம் வகை அபத்த ஃபொக்ஸ் செய்திகளைக் குறுந்தொகையாகவோ நெடுநல்வாடையாகவோ தயாரித்துவழங்காமலிருந்தாலுமே போதுமானது. சத்தம் போடாமல் விரிகைவிட்டத்துக்கெட்டிச் சுற்றும் வட்டத்துள்ளே செய்ய உருப்படியாகச் செய்ய எத்தனையோ தேவைகளுள்ளன.


இங்கு ஒட்டாமல் இன்னொன்றையும் சொல்லவேண்டும். தமிழர்களிலே அவர்கள் சாரும் அரசியல் எதுவாயிருந்தாலுங்கூட, இருக்கும் இன்னொரு நோய் படிச்சவையெண்டால் நல்லவை வல்லவை; இத்தேர்தலிலே அது துருத்திக்கொண்டு திரும்ப நின்றது; சட்டத்தரணிகளே சமூகத்துக்கான குரல் என்பதிலே எப்போதுமே நின்ற சமூகம் இப்போது இன்னும் வலையை அகல விரித்திருக்கின்றது.  யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திலே ‘தங்கச்சிக்கு நாய் கடிச்சிடுச்சுப்பா’ அறிவுஜீவிப்பேராசிரியக்கும்பலின் இணைய வால்களுக்கும்  மற்றப்பக்கம் புலிகளின் காலத்திலே கோலோச்சிய தமிழ்ப்பேராசிரியக்கும்பலின் இணைய வால்களுக்கும் அதிக வேறுபாடில்லை. ஆனால், இரு குழுவும் ‘என்னவிருந்தாலுங்கூட, அவை படிச்சவையில்லையோ?” எனப் பட்டதாரிகளோடு தம்மைக் குஞ்சங்களாக அடையாளப்படுத்துவதிலே புளகங்காகிதம் அடைந்து கொள்ளும். இத்தேர்தலிலுங்கூட வைத்தியருக்கும் வைத்தியகலாநிதிக்கும் தமிழிலே வேறுபாடு தெரியாத மொழியறிவு ‘மிக்காரும்’ தங்க ஊசிகளைக் குத்திக்கொண்டு திரிகின்றவர்களுக்கும் படித்தவரே தேர்ந்தெடுக்கப்பாடாரென பல்கலைக்கழகப் பட்டயங்களுடன் தூக்கி நிறுத்தும் திசைகாட்டிகளைக் கைபிடித்துக்கொண்டு நடப்போருக்கும் ஏதும்  வேறுபாடில்லை; பட்டம்பெற்றவர்மட்டுமே நல்லவர், வல்லவர் என்பதுபோன்ற அதீதமாயையும் ஆணவத்தனமும் தவிர.  ஜனநாயகம் எவரையும் பிரதிநிதியாகச் செல்லவும் செயற்படவும் முன்னிற்க வாய்ப்பளிக்கின்றது; ஆக, படித்தவர்மட்டுமே பிரதிநிதியாகலாம் என்பதுபோலப் பெயருக்குக்கீழே தொழிலையும் படிப்பையும் போட்டால், என்ன நியாயம்? என்ன மக்களுக்காகச் செய்தீர்களெனப் போடுவதுதான் நியாயம். இதற்குள்ளே நாம் மக்களுக்காகப் பேசுகிறோம் செய்கிறோமென்பதுபோல இக்கும்பல்களின் கூத்தாட்டம். இவர்களையெல்லாம் மிகவும் இலகுவாகவே ஏதோவொரு குறும்வாதத்துள்ளே நாம் அடக்கிவிடலாம். என்ன செய்வது! இதையுங் கடந்துபோகவேண்டியதாயிருக்கின்றது. 


11/16/2024


No comments: