Thursday, June 15, 2017

வெம்மையின் நிறம் சிவப்பு


மூதூரின் இரு பாடசாலைச்சிறுமிகளின்மீதான பாலியல்வன்முறை, The Daily Mirror இன் யாழ்ப்பாணசமூகத்தின் மீதான சாதியக்குற்றச்சாட்டு, வடமாகாண நீர்ப்பங்கீடும் பிரிப்பிலே கடுப்பும். விக்கினேஸ்வரன்  - ஐங்கரநேசன் சொக்கட்டானாட்டம் என்பவற்றிலே, மையமான குற்றச்சாட்டுகளிலும்விட அவற்றினை வைத்து பல சாராரும் நடத்தும் அவரவர் தேர்ந்த அரசியல் (அரு)வெறுப்பினை ஏற்படுத்தி நாம் சார்ந்த சமூகம் தொடர்பான அவநம்பிக்கையைப் பெருக்குகின்றது.

அண்மையிலே The Daily Mirror யாழ்ப்பாண வைத்தியசாலையிலே இரத்தம் சேமிப்பிலே அதிகமில்லாததற்கு யாழ்ப்பாணத்திலே நிலவும் சாதியமே காரணமென்றும், உயர்சாதியினர் என்று தம்மை அழைத்துக்கொள்கின்றவர்கள் தமது இரத்தம் மற்றவர்களுக்குக் கொடையாகக் கிட்ட விரும்பவில்லை என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சத்தியமூர்த்தி சொன்னதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. கூடவே, இரத்தம் அனுராதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தேவைப்பட்டவர்களுக்கு உதவியாகக் கிட்டுகின்றது என்றும் சொல்லப்பட்டது.

இச்செய்தி The Daily Mirror இலே வந்தவுடன் எதுவித ஆய்வுமின்றி, உடனடியாகத் தங்கள் சொந்தக்கருத்தினையும் சேர்த்துக்கொண்டு, “"இப்ப எல்லாம் யாரு சாதி பாக்குறாங்க..." தலித்துகளுக்கு இரத்த தானம் செய்ய ஆதிக்க சாதியினர் தயாரில்லையாம். இது யாழ்ப்பாணத்தில்.... மூன்று தசாப்த யுத்தத்தில் இரத்தக் குளியலுக்கு உள்ளான ஊரா இப்படி கேட்கிறது...” என்ற குரலோடு எழுதியவர்கள், இத்தனைக்கும் தொடர்ச்சியாக 90 இலிருந்து பத்திரிகைத்துறையிலே இருக்கின்றதாகச் சொல்லிக்கொள்கின்றவர்கள். பத்திரிகையாளர்கள் என்றளவிலேனும் இவர்கள் கொஞ்சமேனும் செய்தியினைச் சரி பிழை பார்த்து ஆய்ந்து வெளியிட்டிருக்கவேண்டாமா?

இக்குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு, யாழ்ப்பாண சைவவேளாளமேலாதிக்கத்தின் சாதியவெறியைப் பற்றி மட்டுமே விடாது பேசுகின்றவர்கள்,

1.    பழைய ஆயுதம் தாங்கிய தமிழ் விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தற்சமயம் ஶ்ரீலங்கா அரசின் தார்மீகத்திலே நம்பிக்கை வைத்திருப்பவர்கள்

2.    பாலஸ்தீனமும் காஷ்மீரமும் அடுத்தார் தளைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும்-ஆனால், ஈழம் என்பது தனக்குத் தானே ஒரு சமூகம் தேர்ந்துகொண்ட தளை என்று ஓராடியாக நிற்பவர்கள்


3.    இலங்கையின் மற்றைய பிரதேசங்களிலும் சமூகங்களிலும் சாதியமோ மதப்பிணக்குகளோ இல்லையென்று கவனமாகப் பாசாங்கு பண்ணுகின்றவர்கள்

4.    உலகளாவிய மக்கள் புரட்சியைக் கொணர உழைக்கும்போது, ஈழம் என்ற கருத்தாக்கமே சாதியமென்றும் அமெரிக்க, உயூத சதியென்றும் வலைப்பக்கங்களினை நிரப்புகின்றவர்கள்


5.    பரபரப்புக்கும் சமூகவலைத்தளங்களிலே புரட்சியாளர்களாக உலாவவும் வசதியான கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக்கொள்ளக்கூடிய போராட்டங்களை நிகழ்த்தும் புனைகதை|பத்தி எழுத்தாளர்கள், உலகமகாநடிகர்கள்

இச்செய்தியின் தொடர்ச்சியாக, The Daily Mirror இன் ஆசிரியருக்கு வைத்தியர் சத்தியமூர்த்தியின் மறுப்புக்கடிதம் இணையத்திலே வெளிவந்து பகிரப்பட்டது; தான் அப்படியாகச் சொல்லவில்லையென்றும் யாழ்ப்பாண வைத்தியசாலையிலே போதியளவு இரத்தம் உண்டென்றும் கூறியிருந்ந்தார். கூடவே, தன்னோடு தொடர்பு கொண்ட The Daily Mirror இன் செய்தியாளரே தன்னிடம் “சாதிப்பிரச்சனை காரணமாக, இரத்தத்தட்டுப்பாடு இருக்கின்றதா?” என்று கேட்டதாகவும் தான் அதை அப்போதே மறுத்துச் சொன்னதாகவும் சொல்லியிருந்ந்தார். வேறு சிலர் சத்தியமூர்த்தியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு இச்செய்தியின்பின்னாலே நிகழ்ந்ததின் திட்டமிட்ட பொய்க்கட்டமைத்தல் மீதான மறுதலிப்பு விளக்கத்தைப் பெற்று இணையத்திலே போட்டார்கள்; ஏன், The Daily Mirror கூட மன்னிப்பினை உடனடியாகக் கோராமல், வெறுமனை செய்தி தவறு என்று (போட்டாலும், விழுந்தும் தாடியிலே மண்ணொட்டவில்லை என்றபோல, “இரத்தக்கொடை தடைப்படுமளவுக்குச் சாதியம் இல்லை” என்ற வரிகளோடு) ஒரு குறிப்பு வெளியிட்டிருந்தது. குறித்த பத்திரிகைக்கும் அதைச் சேர்ந்த வாசகர்களுக்கும் அது வெளிவரும் பிரதேசத்துக்குமான பேரின அரசியலுண்டு. ஶ்ரீலங்காவின் இராணுவவீர்ர்களின் இரத்தம் அவர்களின் கொடையினாலே தமிழ்மக்களிடமும் ஓடுகின்றது என்று இப்படியான பத்திரிகைகளே செய்தி வெளியிட்டு வெகுகாலமில்லை. அதன் அடுத்த கட்டச்செயற்பாடாக, யாழ்ப்பாணத்திலேகூட (சாதிவெறியினாலே) இரத்தம் கொடுக்கப்படவில்லை என்பதைக் கட்டமைக்கும் தேவை அவர்களுக்குண்டு என்பதை அறியப் பெரிய ஆய்வு தேவையில்லை. பொறுப்பு வைத்தியரைச் செவ்வி கண்ட The Daily Mirror இன் செய்தியாளரோ தானேதானா அக்கேள்வியினைக் கேட்டார் என்பதைக்கூடச் சொல்லாமல், தான் கண்ட செவ்வியினை The Daily Mirror இன் சீர்படுத்து உதவியாசிரியர்கள் தவறாக மாற்றிப் பிரசுரித்துவிட்டார்கள் என்கிறார். பத்திரிகையோ மன்னிப்பினைக் கேட்காமலே, பழைய செய்தியினைக் கழற்றிவிட்டு, ஆனால், இன்னமும் சாதிப்பிரச்சனை இருந்தாலும் இரத்தச்சேமிப்புக்குப் பங்கமில்லை என்றவாறு வைத்தியரின் மறுப்புக்கருத்தினைச் சட்டை செய்யாமல், செய்தி வெளியிடுகின்றது.  

இந்நிலையிலே, நெறியான பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள், உலகமகாபுரட்சி மார்க்ஸியர்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? குறைந்தளவு தங்கள் அவரச் அவசரக்குறிப்புகளுக்கு மன்னிப்பினைக் கேட்டுக்கொண்டு, செய்தி வெளியிட்ட பத்திரிகையின் அரசியலைக் கடிந்திருக்கவேண்டும் இவர்களிலே ஒருவர்கூட அதைச் செய்யவில்லை. அப்படியான தங்களின் தவறான செயற்பாடுக்குத் தார்மீகப்பொறுப்பெடுக்கும் நேர்மைத்திறனின் சொட்டுகூட இவர்கள் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மாற்றாக, இவர்கள் செய்வதென்ன? தொடர்ச்சியாக, யாழ்ப்பாணத்திலே சாதியம் இருக்கின்றதை நிறுவுவதினையே இப்பொய்யான செய்தி சுட்டுவதாகச் சொல்லிக்கொண்டு மேலே யாழ்ப்பாணத்தினைச் சாடுவதிலேயே மாற்றுக்கருத்தும் நெற்றிக்கண்ணாகவும் நிற்கின்றார்கள்; சிலர், இன்னமும் மேற்படி போய்,,சத்தியமூர்த்தி அப்படி ஒரு சாதி உள்ளிட்ட இரத்தம் வழங்குவதிலே தடையேற்படும் பிரச்சனை இல்லை என்று தன் மறுப்புக்கடிதத்திலே சொன்னதைப் புறம் தள்ள, மீண்டும் முதலிலே பொய்யான செய்தியைச் சொன்ன The Daily Mirror இன் “இன்னமும் சாதிப்பிரச்சனை இருந்தாலும் இரத்தச்சேமிப்புக்குப் பங்கமில்லை” என்ற இரண்டாம் செய்தியினை வைத்தே வைத்தியரின் நேர்மையினைக் கேள்வி கேட்டுக்கொண்டும் யாழ்ப்பாணத்தின் சாதியத்தினைப் பிடித்துக்கொண்டும் நிற்கின்றன.

இச்செய்தியின் பின்னணியிலேயான இந்நிகழ்விலே, இங்குப் பிரச்சனை யாழ்ப்பாணத்திலே சாதியம் இருக்கின்றதா இல்லையா என்பதல்ல, ஆனால், பத்திரிகைத்துறைக்கு இருக்கவேண்டிய வழுவா நேர்மையினதும் துறைசார்நெறியினதும் மீதான கேள்வியும் அவை சறுகியவிடத்து அவைமீதான கண்டனத்தின்மீதாக மெய்யை மீட்டலுமாகவிருக்கவேண்டும். இஃது எவ்வகையிலும் யாழ்ப்பாணத்திலே சாதியமே இல்லை என்பதை மறுப்பதாகக் கருதப்படக்கூடாது. சாதியமென்பது, அடித்தலுக்கு ஒளிந்து 2009 வரை தலையை வெளித்தெரியாவாறு வேரோடிமட்டும் காட்டிக்கொண்டிருந்தாலுங்கூட, 2009 இன் பின்னாலே வெளிப்படையாகக் கோரமுகத்தை யாழ்ப்பாணத்திலும் காட்டுகின்றது; காவி வந்து புலம்பெயர்பூமியிலும் காட்டுகின்றது; அதே சாதியம், கிழக்கிலும்  நிலவுகின்றது; மலையகத்திலும் நிலவுகின்றது; சிங்களபௌத்தவர்களிடமும் நிலத்திலே கீழே வேர்விட்டு நிற்கின்றது; தமிழ்க்கிறீஸ்தவர்களிடமும் சமயத்துக்கு அப்பாலும் கடந்து காவப்பட்டுக்கிடக்கின்றது. இருப்பினும்கூட, தனியே யாழ்ப்பாண சைவ வேளாளவெறியினை மட்டுமே தேர்ந்தெடுத்துச் சாடுவது வழமைபோல, உங்களின் அரசியல்|பிரதேச|சமூக வசதிக்கானால், அதைத் தொடர்வது உங்களின் விருப்பம். ஆனால், இவ்விடத்திலே முதன்மையானது, குறிப்பிட்ட பத்திரிகையின் மெய்மை பற்றிய கேள்வியும் கண்டனமும்; அடுத்தது, யாழ்ப்பாணத்தின் சாதியம் எத்துணை கொடிதாகவிருப்பதாகக் கொண்டாலுங்கூட, இரத்தம் பகிர்ந்தளிக்கமாட்டாதவளவுக்குக் கேடு கெட்டதாகவிருக்க ஆதாரமில்லை என்பதுமேயாகும். யாழ்ப்பாணத்தின் சாதியத்தினைக் கேள்வி கேட்கவும் அதைச் சாடவும் வேறொரு சந்தர்ப்பத்தினைக் கொள்ளலாம்; இவ்விடத்திலே முதலாம் குற்றவாளியும் ஒரே குற்றவாளியும் குறிப்பிட்ட பத்திரிகை; ஆதாரமற்ற இச்செய்தியினைச் சாட்டிக்கொண்டு, யாழ்ப்பாணச்சாதியத்தினைத் தாம் சார்ந்த அரசியல்களின்பொருட்டு சாட ஒரு சந்தர்ப்பத்தினைத் தேடுகின்றவர்கள் தாமே இரண்டாம் குற்றவாளிகள் வரிசையிலே வந்து நிற்பார்கள். நேர்மைத்திறனற்ற, சொந்த அரசியலுக்காக, பொய்யைக்கூட ஆதாரமாகக் கொள்ளும் நீங்களெல்லாம் வாராவாரம் பத்தி எழுத்துக்கட்டுரைக்கும் பத்திரிகையாளர்களாகவும் குறிப்பிட்ட சமுதாயத்திலேமட்டும் சாதிமறுப்பாளர்களாகவும் தேவைப்பட்ட புள்ளிகளிலேமட்டும் மார்க்ஸியக்கட்டுடைப்புப்புரட்சியாளரும் இருந்து என்ன பயன்?

பொய்யை ஆதாரமாக்கி, நேர்மையான போராட்டங்களை நடத்தி நியாயமான இலக்குகளை எட்டமுடியாது; கூகைகளோடும் சாத்தான்களோடும் கூட நடந்தும் கோட்டையைப் பிடித்து ஏதும் பயனில்லை. 

இவர்கள் எல்லோரையும்விட, இப்படியாக ஒன்று சறுக்கியது என்றே காட்டிக்கொள்ளாமல், விக்கினேஸ்வரன் - ஐங்கரநேசன் என்று தாயம் விளையாடிக்கொண்டிருப்பவர்களுக்குப் பார்வையாளர்களாகவிருக்கின்றவர்கள் பரிசுத்த யோக்கியவான்களென்று கருதுவோமாக!

No comments: