காந்தி மாஸ்ரரும் ஆனந்தமும் உப்புவெளியின் தபோவனமும் கோயிற்றிருவிழாக்காலங்களிலே அவரின் புத்தகக்கடைவிரிப்பும் '70. & '80 களின் முற்பகுதியிலே திருகோணமலையின் ஒரு மாறாக்காட்சி.
எச்சைவச்செத்தவீட்டுக்கும் தேவாரம், திருச்சுண்ணம் நிகழ்த்த ஒரு சேமக்கலத்தோடு, பண்டிதர் வடிவேல், இராமலிங்கம் மாஸ்ரரோடு காந்தி ஐயா நிற்பார். வடிவேல் மாஸ்ரரும் இராமலிங்கம் மாஸ்ரரும் 72, 73 இலே எனக்கு ஆசிரியர்கள். காந்தி ஐயா எனக்கு ஆசிரியரில்லை. ஆனால், அவரின் மனைவியார் கந்தையா மிஸ் தந்த தமிழ் மொழியடியும் கவளமும் எம்மிலே இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் எழுத்துப்பிழையின்றி தமிழையும் சமயநம்பிக்கையற்றுப்போனாலுங்கூட, இன்றும் வரி தவறாது நவபக்திமான்கள் சறுகும்போதும், தேவார திருவாசகங்களைப் பிறழாது பேசவும் வைத்துக்கொண்டிருக்கின்றன.
காந்தி ஐயா, கந்தையா மிஸ், அவர்களின் மகன் முருகன், வளர்ப்புமக்கள் சாரதா வீதியிலே இருக்கும்போது, அடிக்கடி பாடசாலை நிகழ்ச்சி விடயமாகவோ அல்லது வேறேதோ விடயமாகவோ போகவேண்டி வரும். வீட்டுவாசலிலே தயங்கித் தட்டும்போது, நூல்களைப் பரப்பி வைத்துக்கொண்டிருப்பவர் பார்த்துவிட்டு, "ஆனந்தம்" என்பார்; திரும்பி உள்ளே பார்த்து, "அம்மா!" என்பார் (சென்ற ஆண்டு இலண்டனிலே பத்மநாப ஐயரின் அறையிலே அண்மையிலே நூல்கள் பரவிக் கிடக்கப் பார்த்தபோது, அதற்கு நான்கு நாட்களின்முன்னாலே பார்த்துவிட்டு வந்த காந்தி மாஸ்ரர் பரப்பிவைத்திருக்கும் நூல்கள்தாம் ஞாபகம் வந்தன). அவருடைய "ஆனந்தம்!" கூறலைவைத்து ஊருக்குள்ளே உலாவிவந்த பகிடிகள் பாடசாலைக்காலத்திலே எமக்குள் ஒரு பகுதி. (வீடெரிந்து போய்விட்டதென்று ஓடிவந்த ஒருவர் சொல்ல, காந்தி மாஸ்ரர், வழக்கம்போல, "ஆனந்தம்!" என்றார் என்பதாகவெல்லாம் ஆளுக்காள் கதையைக் கட்டிக்கொண்டிருப்பார்கள்).
காந்தி மாஸ்ரர், இராமலிங்கம் மாஸ்ரர், திருகோணமலையின் சைவாலயங்களைப் பற்றித் தொகுத்து ஒரு நூலைத் தந்த பண்டிதர் வடிவேல், காந்தி மாஸ்ரரின் மைத்துனரான புலவர் சிவசேகரம், சிவன்கோவிலின் தர்மகர்த்தாவாகவிருந்த கணேசலிங்கம் இவர்களெல்லாம் ஏதோ வகையிலே திருகோணமலையினை சைவம் என்ற அடையாளத்தினூடாக, தமிழ்ப்பகுதியாக அரசியல் பேசாதே அடையாளப்படுத்தியவர்கள். (காந்தி மாஸ்ரரைப் பற்றி காந்தியத்தின் அடிப்படையிலான அமைப்பு தொடங்கும்போது, சந்தித்ததை டேவிட் ஐயா ஒரு செவ்வியிலே (சயந்தன் எடுத்த எழுநா செவ்வி?) கூறியிருந்தார்).
காந்தி ஐயாவினையும் கந்தையா மிஸ்ஸையும் 1996 இலே ஊருக்குப்போன நேரத்திலே அதேநேரத்திலே திரும்பியிருந்த, -கந்தையா மிஸ்ஸிடம் என்னோடு படித்த- இரு நண்பர்களோடு சென்று முத்துக்குமாரசாமி கோவிலுக்கு முன்னாலே தேர்முட்டியருகேயிருக்கும் வீட்டிலே சந்தித்து ஆசிரியருக்கு நன்றி பகிர வாய்த்தது. ஓர் ஆசிரியருக்கு அப்பாலுமான கருணையோடு எப்போதுமே எம்மைக் கவனித்துக்கொண்டவர் கந்தையா மிஸ்.
இவ்வாண்டு திருகோணமலைக்குச் சென்றபோது, திரும்புவதற்கு இரு நாட்களுக்கு முன்னால், ஆவணி ஐந்தாம் திகதி காலை முத்துக்குமாரசாமி கோவிலுக்குப் போனபோது, முன்னாலே இருக்கும் அவரின் வீட்டுக்கும் போனேன். மார்புப்புற்றுநோயிலே கந்தையா மிஸ் மறைத்த பின்னாலே மகன் முருகனோடு தனியே இருப்பவரை வயது நொடித்திருப்பதைக் காணமுடிந்தது. முற்றாக ஆளடையாளம் கண்டுகொள்ளமுடியாதவராக இருந்தார். என்னை ஞாபகப்படுத்தியபோதும் ஞாபகமிருக்கவில்லை. ஆனால், சற்றே பேசியபின்னாலே போகப்புறப்படுகையிலே, வந்தவர்களைச் சும்மா செல்லவிடக்கூடாதென்று சொல்லி, அங்குமிங்கும் தேடி, "இராமகிருஷ்ணவிஜயம்" ஓர் இதழை அளித்தார்; மிகவும் நெகிழ்ச்சியான தருணமிது. அதை வாசிக்கப்போவதில்லை என்றபோதுங்கூட இங்கே கொண்டு வந்தேன். ஒரு சஞ்சிகையை வாசிப்பதினாலேமட்டுமா பலன் கிட்டப்போகிறது? அதை தருகின்றவரின் அன்பினை அதனைத் தொடுதலாலேகூட திரும்பத் திரும்பத் திறக்காமலே வாசித்துக்கொண்டிருக்கமுடியாதா, என்ன?
சில நாட்களின் முன்னாலே, உடல்நலக்குறைவாலேயிருந்ததாக பேஸ்புக்கிலே செய்தியிருந்தது; இன்று மறைந்திருக்கின்றார். இவரோடு திருகோணமலையின் ஒரு நீட்சி முடிவுக்கு வந்திருக்கின்றது; ஞாபகக்கயிறுகள் நீண்டு தொடர்கின்றன.
"ஆனந்தம்" என்று சொல்ல முடியாத நிலையிலேயிருக்கின்றேன்.