Thursday, September 03, 2015

பாமினிப்பா(ர்)வை

காசு கண்: பாமினி என்றொரு எழுத்துருவை பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட பால் பொடி , இடி ஆப்பம் அளவுக்கு அவர்கள் அடையாளமாக உள்ளது என்றால் மிகை இல்லை. 1995 முதலே அவர்கள் எங்களைக் கொடுமைப்படுத்துவதில் பாமினிக்கு முக்கிய இடம் உண்டு. அடங்காப்பிடரி. எந்த எழுத்துரு மாற்றிக்கும் முழுமையாக இணங்காது . கண்டாலே எனக்கு ரத்த அழுத்தம் கூடும். இன்று தமிழ் உலகம் unicode க்கு நகர்ந்துவிட்டது. அவர்கள் பாமினியை விட்டு நகர்வார்களா? நான் தமிழ் இன சர்வாதிகாரியானால் முதல் நடவடிக்கை பாமினி ஒழிப்புதான். அதற்குப் பின்தான் தனி நாடு.

புளிபக்ஷி: மறுபடியும் பார்ப்பனச் சூழ்ச்சியா? உங்களை விரட்டியடிக்கத்தானே நாங்கள் தமிழ் இனம் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்கிறோம்? பாமினியின் பெயரில் பார்ப்பான் நுழைவதை பார் புகழும் தமிழன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்!


இயாப்பு, எழுத்துப்பிழை இவையேதுமே கண்டுகொள்ளாமல், கோழிக்கிறுக்கலாய்ப் பிரபல எய்தாழிகள் சலவைக்குறிப்புக்கடதாசியிலே எய்திக்கடாசியதையெல்லாம் அப்படியே அள்ளிப்போட்டு, அவித்தது ஆறமுன்னரே கண்காட்சிக்கு -எய்தியது பிரபலமில்லாவிட்டால் போட்டாள் செலவிலேயே விளம்பரம்போட்டு, "விற்கப்படாததை நீயே வாங்கி என்னவாச்சும் செய்து கொள்" என்று அந்தாளிடமேயே திரும்பவும் வைத்திருந்த இடக்கூலியும் சேர்த்து அடாவிலையிலே விற்றுக்கட்டி மினிவான் கொண்டக்டர் ஏற்றி இறக்குவதைப்போல- வைப்பதைவிடவா பாமினியிலே தமிழடிப்பது மோசமாக இருக்கப்போகிறது?

இன்னமும் "அவைகள்" என்று அ(ஃ)து என்பதற்குப் பன்மை இடுகின்றவர்களும் 'விருவிருப்பு', 'சுருசுருப்பு' என்று ங்கொய்யால தமிழ் எழுதுகின்றவர்களும் 'கொண்டு வர வேண்டி இருக்கும்' என்று கோடாலிமுறிப்புவிறகுத்தமிழ் விதைக்கின்றவர்களும் "பின்னாலேப் போனான்" என்று ஒட்டுண்ணித்தமிழ் வளர்க்கின்றவர்களும் கேள்வியின்றி அங்கீகரிக்கப்பட்டு, அவ்வழுக்கள் திருத்தப்படாமலே அச்சேற விடுகின்ற பதிப்பாளர்கள், பாமினிப்பாவையிலே துகிலுரிவது நியாயமில்லை. தமிழக அரசுத்தமிழிலே இன்னும் முருங்கைமரவேதாளங்களாய், தலைகீழாய்த் தூங்கும் தாப்பு, தாம்புக்கயிற்று எழுத்துருக்களுக்கு இப்படி ஓர் இடியப்பச்சிக்கல் இவர்களிடமிருந்து ஏன் வருவதில்லை?

ஒரே நாளிலே "தகுதரமே முழுக்க வேண்டாம்; சென்னை கி(கா)ங்மேக்கர்களின் தாப்ஸ்/தாம்ஸ் இனையும் டவுட் இன்றி ஏற்றுக்கொள்ளவும்" என்று அரசனை தமிழ்நெட் 99 மேடையிலே ஏற்றி அழுத்தித் தலைகீழாகக் கொட்டினபின்னால், "பாமினி-->தப்பு/தாமு என்று மாற்றி அனுப்பு" என்று பாமினியின் பாண்டவர்களிடம் கேட்கும்போது, இந்த உரோமம் சிலிர்க்கும் உரோஷம் தப்பு/தாமுவிலேயும் வந்திருக்கவேண்டும்; வரவில்லை. ஆங்கே அரசியலிலும் வியாபாரத்திலும் புட்டுக்கொள்ளும். எழுதியவர் கேட்டாரே என்று நட்புக்காக நாமே தகுதரமாற்றியிலே ஆற்றி பாமினியிலே அனுப்பிக்கொண்டிருந்தபோதும் "நன்றி" என்று ஒரு வார்த்தை மாற்றியனுப்பியவர்களிடம் வெளிப்படையாகக் எதிரொலிக்கச் செய்யவில்லை.

அதுதான் கிடக்கட்டும்; எழுதுவதுதான் எழுத்தாளன் முதல், கடன் & ஈடுபாடு; அதைச் சீர்படுத்தி, எழுத்துக்கோ(ர்)த்து, அச்சேற்றுவது பெற்றுக்கொள்ளும் பதிப்பாளர் கடனில்லையா? இதிலே எழுதுகின்றவரே இந்த எழுத்துருவிலேதான் எழுதவேண்டுமென்று அடம்பிடித்தால், பதிப்பாளர் தன் பங்குக்குச் செய்வதுதான் என்ன? கண்காட்சியிலே கல்லாப்பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு, வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் பேஸ்புக் செல்ஃபிகளுக்கு 'போஸ்' கொடுப்பதுமட்டுமேதானா?

மிகவும் ஆத்திரம் மிஞ்சுவது புலம்பெயர்ந்த சில "எல்லோருக்கும் நல்லோம் நாம்" குஞ்சுகளிலே! இதெல்லாம் ஒரு பிழைப்பு! சொந்தக்காசிலேதானே புத்தகம் விடுகிறீர்கள்; இதற்குப்பின்னும் எதுக்கப்பர்களே நெடுஞ்சாண்கிடையாக உடலின் எட்டவயவங்களும் நிலம்படக் கிடந்து பாததூசி கேட்கும் வெட்கமின்மை? அந்தக்காலத்து ஆனந்தவிகடன் காலத்திலிருந்தே, பண்ணைக்கடற்கரையிலே எறியவளைவாக ஒண்ணுக்கடிச்சாலும், மெரீனாபீச்சிலே ப்ரொஜெக்ஸனில் பிஸ்ஸினேன் என்று எழுதித்தான் அவர்கள் கதை அவாளுக்கும் விளங்கவேண்டுமேயென்று அவதானமாகக் கதை அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்! இப்படி அசந்த சந்திலே பாமினியின் முந்தானையை கௌரவசபையிலே கண்ணனே புடிச்சி இயுத்துவுடுவாரு! இதெல்லாம் இப்ப முக்கியமா என்ன? ஜெண்டில்மேன் இயமமோளமோ புளிநகைகொள்ளை பூணூல் அண்டர் த ப்ரொபஸர்சிப்போ ஒரு ரவுண்டு ஈயூரோப்போ கனடாவோ வர்றதுக்கு டிக்கெட்டைக்கூடப் போடுங்கப்பா! வந்து நீங்களெல்லாம் எழுதுறது சரியில்லை என்று மோதிரக்குட்டு வைத்துவிட்டுப்போகவேண்டாமா? மோதிரம் மோதிரமேதான்! மூத்திரம் மூத்திரமேதான்.... கோமியமா இல்லாதபட்சத்தே! "ஈழக்கூத்தா(ட்)டினாலும் தாண்டவக்கோனே, ஆரியகூட்டுவேணுமடா தாண்டவக்கோனே!"

எனக்கு பாமினியிலே அடிக்கத்தெரியாது; முரசு அஞ்சலிலே தொடங்கி, தகுதரம், ஒருங்(கு)குறி என்றுதான் மாறிக்கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக, ஓர் அடிப்படையிலான குறியீடேயிருக்கவேண்டுமென்பதிலே மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நம் கொல்லைக்குள்ளேயே எத்தனையோ எழுத்துருப்பத்திரிகைகள், சஞ்சிகைகளென ஓடிக்கொண்டிருக்கையிலே, மொத்தமாக, யூனிகோட் அமைப்பார்களிடத்திலே எம் தேவைகளை வலியுறுத்தமுடியாதவர்களான நாமெல்லாம் தொடர்ச்சியாக, பாமினி அடிக்கின்ற புலம்பெயர்தமிழர்களிடம் அட்டைக்கத்தியாலே வெண்ணெய் வெட்டி, இட்லியும் சாம்பாரும் இல்லாமல், பாற்சொதியும் இடியாப்பமும் சாப்பிட்டுக்கொண்டேயிருந்தால் எப்படியென்று வீரம்  காட்டிக்கொண்டிருப்பது வியப்புக்குரியதல்ல. சுஜ்மா மேம்சாப் நிச்சயமாக ஐநாவிலே இண்டி குண்டி தேய்க்க டாலர் அயிம்பத்து அஞ்சு மில்லியனிலே பேல்பூரி படைக்கத்தான்போறாங்க. அதுக்கு இவுங்க வரி வட்டி கிஸ்தி எல்லாம் மாமனா மச்சானா மஞ்சள் அரைச்சுக்கொட்டிக்கொண்டேதான் இருக்கப்போறாங்கோ! அப்பப்ப, ஆசைக்கு பாமினியோட எலிவால் கோபுரகலசப்பின்னலைப் பிடித்துக் கோகுலத்திலே இழுத்துக்கொண்டிருந்தா மட்டும் உம் மாயமெல்லாம் நாமறியோமா, என்ன?

நமக்குப் புரவலரும் வேண்டாம்; புழுதி வீசுகின்றவர்களும் வேண்டாம். இந்த மயிருக்குத்தான் பதித்தால், தமிழ்நாடு தவிர்த்தவிடத்திலேயே பதிப்பதென்றிருப்பதும் இன்னும் & இனியும் கணணி என்றே எழுதிக்கொண்டிருப்பதும் இருக்கப்போவதும். There should always be a Primitive Last man or monkey to Shun, Stand and Stunt.

நிற்க; தனிநாடு கேட்பதென்பது என்ன வல்லிக்கேணி தம்ப்ராம்ஸ் கிளப் மந்த்லி மீட்டிங்கா என்ன? ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லிவிடப்போகிறேன்.

(இம்மடல் அவர்களால் அவாளுக்கு அடைப்பக்காரமடிப்பாக எழுதப்.......பட்டது)


பிகு1:

சில பிரபல தமிழ் எழுத்தாளர்களின் தளத்தினை இவ்விடுகையை இடும்போது பார்த்தபோது:

ஜெயமோகன்:
 http://www.jeyamohan.in/77745


வெண்முகில்நகரம் செம்பதிப்புக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது கெட்டி அட்டை பதிப்பு. ஓவியங்கள் இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் தளத்துக்குச் சென்று பதிவுசெய்துகொள்ளலாம்

'இது கெட்டி அட்டை பதிப்பு. ஓவியங்கள் இல்லை' ??

இதிலே குறைந்தது மூன்று குற்றங்கள்; ஓர் அச்சுக்கோப்பாளர் எப்படியாகத் திருத்திப்போடவேண்டும் என்பதை யாரும் தமிழ் தெரிந்தவர்கள் எழுதவேண்டும். "இது கெட்டியட்டைப்பதிப்பு. ஓவியம் இல்லை" என்றிருக்கக்கூடாதோ?

சாருநிவேதிதா
http://charuonline.com/blog/?p=3053

எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர்.  ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக் கொண்டிருந்தார்.  இது உங்களிடம் இல்லையா என்று கேட்டேன்.  சிரித்து விட்டு இருபதாவது தடவையாக இதை வாங்குகிறேன் என்றார்.  எழுத்தாளர்களின் விபரீத குணாதிசயங்களில் இது ஒன்றோ என எனக்கு சம்சயம்.  அப்படி இல்லை.  அவருக்குக் கடும் கோபம் வரும் போதெல்லாம் அகராதியை எடுத்துக் கிழித்துப் போட்டு விடுவாராம்.

"ஒரு புத்தகத் திருவிழாவில் ஒரு பிரபலமான அகராதியை.."  அதாவது ஒரேயொரு புத்தகத்தை வைத்திருக்கும் புத்தகத்திருவிழாவிலே ... இல்லையில்லை!... புத்தகத் திருவிழாவிலே  (விற்கும்) ஒரு பிரபலமான அகராதியை வாங்கிக்      கொண்டிருந்தார்.  அதாகப்பட்டது, அப்புத்தகத்திருவிழாவே, பிரபல அகராதியைமட்டும் விற்கவைக்கப்பட்டிருந்தது. இதை, 'புத்தகத்திருவிழாவொன்றிலே பிரபலமான அகராதியொன்றை வாங்கிக்கொண்டிருந்தார்.' என்று எழுதியிருக்கக்கூடாதோ? இல்லை; ஒருயொரு புத்தகமென்றதாலே, தனித்துவமான அகராதியென்றே எழுதியிருக்கலாம்; மீதி வரிகளிலே போகவே வேண்டாம். எனக்கு நேரமில்லை.

எஸ். (இ)ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/?p=4381
(பேரிலேயே ''இ'ராதாய், 'ரா'வாய்த் தொடங்கும் அண்ணன்)

அன்னை வயல்
விகடன் எம்.டி. திரு. பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.பாலசந்தர் என இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு என்னைத் தாளாத மனத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
இருவருடன் நெருங்கிப்பழகியவன் நான். என் மீதான அவர்களின் அன்பும் அக்கறையும் தீராத நன்றிக் கடனுக்குரியது.

'அன்னை வயல்' என்ன பெயரெழுத்துகள் இரண்டு ஓடிப்பிடித்துவிளையாடும் இடமா, என்ன? 'அன்னைவயல்' என்று எழுதுமேன். 'இரண்டு நிகரற்ற ஆளுமைகளின் மறைவு'? தமிழிலே எண்ணுக்கும் எழுத்துக்கும் போட்டிவைத்து நிகர் உரசிப்பார்த்த முதலாமாள் நம்மாளில்லையென்றபோதுங்கூட, 'நிகரற்ற இரு ஆளுமைகள்' என்றோ 'நிகரற்ற ஆளுமைகள் இருவரின்' என்றோ வழுத்தேய எழுதியிருக்கலாமே எனத் தோன்றுகிறது. 'என் மீதான', 'நன்றிக் கடனுக்குரியது' ஆகிய சொற்களெல்லாம் முதற்பல்லுவிழுந்த பையனுடைய முரசுபோல ஓரோட்டையுடன் தெரியவேண்டுமா என்ன?

பிகு 2:
இவர்கள் பாமினியையும் பார்ப்பானையும் பகிடியென்று முடிச்சுப்போட்டால்,  உவர்கள் அவர்களையும் அவாளையும் பகிடியென்று முடிச்சவிழ்ப்பதாகத்தானே முடியும்? :-)