Saturday, April 27, 2013

அஞ்ஞானி யாமாக வேண்டா

2011 இலே இதே சங்கரகாரவின் உரையைத் தமிழ்த்தேசியத்தின் பேரிலே ராஜபக்ஷவைக் குறிவைத்துப் பேஸ்புக்கிலே நாம் போட்டுக்கொண்டிருந்தோம்.

2013 இலே இதையே ஞானி சங்கரன் தேர்ந்து தன் இந்தியத்தேசியக்கோவணமாகக் கட்டிக்கொள்கின்றபோது, கொதித்துப்போகின்றோம்.

ஞானி சங்கரன், மாலன் நாராயணன், நரசிம்மன் ராம், ஜெயமோகன் - இவர்கள் எப்போதுமே  தமிழ்த்தேசியத்தினை/திராவிடக்குழுமங்களை "அறிவார்ந்த மட்டம்" தட்டுவார்கள். இக்குழுமங்கள் இந்திய/இலங்கைப்பெரும்பான்மையிலே அதிகாரமையங்களிலே இருக்கும் கறைகளைச் சுட்டிக்காட்டும்போது, அதனைக் கவனிக்காதவர்கள்போலவேயிருந்துவிட்டு, சங்கரக்காரவினை எதிர்ப்பதுபோன்ற சந்தர்ப்பங்களிலே அறிவார்ந்த வாதங்களைமுன்வைப்பதாகவும் மாற்றான கருத்து, உணர்வின்மயப்பட்டு, அறிவின்றி வெறுத்தனமாக இயங்கும் குழுவென்று ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தவும் முயற்சிசெய்வார்கள். இவ்வகையிலே சுப்பிரமணியசுவாமி, சோ ராமசாமி ஆகியோர் மேல்: வெளிப்படையாகவே போக்கிரிகள் என்றுவிடுவார்கள். 
இலங்கைச்சிங்களசினிமா தமிழ்ச்சினிமாவிலும்விட சிறப்பானது என்பது தொடக்கம் இலங்கைக்கெதிரான தடைவேண்டாம் என்பதுவரை ஞானியின் குரல் முதற்றடவையாகக் காண்பவர்களுக்கு நிதானமாகவே தெரியும். ஆனால், அந்த நிதானமான சொற்போர்வையை விலத்திவிட்டுப் பார்த்தால், கீழே தெரிவது தமிழ்த்தேசியத்தினையும் திராவிடத்தினையும் கழிவென்றும் வெறியென்றும் ஒதுக்கத்துடிக்கும் பதற்றமே! ஆனால், இவருக்கும் இவர்போன்றவர்களுக்கும்பின்னாலே இருப்பது, வெளிப்படையாக எதையும்பேசாது, இவர்களுக்கு "விருப்பு"வாக்குகளை அளித்துவிட்டுப்போகும் கூட்டமொன்று. இவர்கள் பேசுவதும் அவர்களின் ஒழுக்கக்கோர்வையைத் தாலாட்டமட்டுமே!

அதற்குமேலே, சங்கரகாரவை எதிர்ப்பதென்பது, சங்கரகாரவை எதிர்ப்பதல்ல என்பது ஞானிக்குத் தெரியாததல்ல - சங்கரகாரவும் முரளிதரனும் அடையாளப்படுத்தும் சிறிலங்கா அரசினையே என்பதை அறீயாதவரல்ல அவர்.

மறுபக்கம், தமிழ்த்தேசியம் பேசுவோருக்கு வேண்டியது, ஞானி போன்றவர்களை அவர்களின் பாணியிலேயே நிதானமாகத் தோலுரிக்கும் பொறுமை; வெறுமனே ஞானியைத் திட்டுவதாலே, ஞானி போன்றவர்கள் அதைக்கூடத் தம் வாதத்தினை உறுதிப்படுத்தப்பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதையோ அப்படியான பொறுமையின்மையைத் தூண்டுதலையே தம்மெழுத்தின்மூலம் ஞானிபோன்றவர்களும் அவர்மூலம் தம்கருத்தினை வெளிப்படுத்தும் அவரின் வாசகர்களும் விரும்புகின்றார்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டு செயற்படவேண்டும். வெறுமனே ஞானியை மட்டம் தட்டுவதால் எதுவும் ஆகாது, இரகுவம்ச இராமனாக இருபத்துநான்குமணிநேரம் அவகாசம் இராவணர்களுக்குத் தந்து, தன் மேன்மையையும் பொறுமையையும் அவர் காட்டமட்டுமே உதவும். நமக்கு வேண்டியது அதுவல்ல, மாறாக, அவர் மறைந்திருந்து செய்யும் வாலிவதங்களைப் பொறுமையாகவும் நிதானமாகவும் அவர் பாணீயிலேயே அம்பலப்படுத்துவதாகும்.

No comments: